Sunday, May 6, 2012

யாழ் பயண கட்டுரை

நானும் தனுஷனும் வெள்ளிக்கிழமை நாலரை மணிக்கே அலுவலகத்தினை விட்டு கிளம்பி வீட்டுக்கு போனோம். தனுஷன் சரியா நேரத்துக்கு நிற்பேன் என்று சத்தியம் செய்து விட்டு வெள்ளவத்தையில் இறங்கினார். ஏழு மணிக்கு யாழ்பாணத்துக்கு பஸ் வெளிக்கிடும் என்றார்கள். இரண்டு நாளைக்கு தேவையான துணிகளை ஒரு பயணப்பைக்குள் திணித்துக்கொண்டு வீட்டை விட்டு கிளம்பினேன். அவசரஅவசரமாக இரவு சாப்பாட்டை வாய்க்குள் திணித்துக்கொண்டிருந்தபோது, போன் பாடல் இசைத்தது. வேற யாரு "மதுயிச" மதுதான் போன் பண்ணி பஸ்ஸுக்கு லேட்டாகிறது என்று சொல்லி கிலியை ஏற்படுத்தினார். "அம்மா! இவ்வளவு சாப்பிட்டதே போதும்.. பஸ் போகப்போகுது" என்று விடைபெற்றேன். சரியாக ஏழு மணிக்கே பஸ் ஏறுமிடத்தில் ஆஜரானேன். மதுவும், பாலா அண்ணனும்தான், சயந்தனும் காத்திருந்தார்கள். மற்றவர்கள் எல்லாம் ஏதோ பிக்னிக்கு போவதைபோல ஜாலியாக உடுத்தியிருந்தார்கள். ஆனால் வழமைபோல நான் மட்டும் சீரியஸா உடுத்தியதை எண்ணி வருந்தினேன். சயந்தனின் முகத்தில் கவலை ரேகைகளுடன், கோப ரேகையும் சேர்ந்திருந்தது. சரியான நேரத்தினை
இதுதாங்க மலாயன் கபே முன்புற தோற்றம்
கடுமையாக கடைப்பிடிக்கும் தனுஷன்(?) வழமை போலவே இன்றும் சொதப்பி விட்டார். அதுசரி, அவரை விட்டுட்டு கிளம்பலாம் என்றாலும் முடியாது. பயபுள்ள எல்லோருடைய டிக்கெட்டையும் வச்சிருந்தார். "இந்த மனுஷனை ஏழேழு ஜென்மத்துக்கும் திருத்த ஏலாது" என்று எங்களது வழமையான டயலாக்கை சொல்லி மனதுக்குள் திட்டிக்கொண்டோம். எங்களது நல்ல காலத்துக்கு பஸ் இன்னமும் வரவில்லை. சயந்தன் போனை எடுத்து கேட்ட போது "இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்து விடுவேன்" என்றார். "அந்தாளு இப்பத்தான் பாத்ரூமிலிருந்து வெளியே வந்திருப்பார். ஆனால் இந்தா வந்து விடுவேன் என்று கதை விடுவார். இனி யாழ்பாணத்துக்கு போன மாதிரித்தான்" என்று **** சொன்னார். எல்லோருக்கும் தெரிந்த மொழிகளிலெல்லாம் கெட்ட  வார்த்தைகளை மனதில் சொல்லி ஆற்றிக்கொண்டிருந்த வேளையில் தனுஷன் வந்து சேர்ந்தார். ஆனால் பஸ் இன்னமும் வருவதாக இல்லை. தனுஷன் லேட்டா வந்ததற்கு ஒரு நம்பும்படியான காரணத்தினை இட்டுகட்டி சொன்னார். எல்லோரும் கேட்டு மனம் வருந்தினர். "பாவம் இந்த மனுஷனை அநியாயமா திட்டி தீர்த்தோமே" என்று மனம் வருந்தினர். பாவம் அவரை பற்றி எனக்கும் சயந்தனுக்கும் மட்டும்தான் தெரியும்.

பஸ் ஒன்றரை மணி நேரத்தின்பின் ஒருவாறாக வந்து ஏறிக்கொண்டோம். நானும் சயந்தனும் பக்கத்து இருக்கைகளில் அமர்ந்தோம். பாலா அண்ணனும், மதுவும் பக்கத்து இருக்கைகளில் அமர்ந்தார்கள். பாவம் தனுஷன் மட்டும் தனியா இருந்தார். சயந்தன் போகும்போதே தனது Presentation slides ஐ Laptopஇல் போட்டு காட்டினார். எல்லாமே அற்புதமான படங்கள் துணை கொண்டு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. . இரவு பயணம் நல்ல நித்திரையுடன் கழிந்தது. யாழ்ப்பாண பஸ் நிறுத்தத்தில் நிற்கும்போதுதான் முழித்தேன். மதுவும் பாலா அண்ணனும் பின் சீட்டில் இருந்த தனுஷனின் குறட்டை சத்தத்தில் தூங்க முடியவில்லை என்று குறைப்பட்டனர்.

A1 தர உணவக சான்றிதழ்
தனுஷன் தனக்கு பக்கத்தில் இருந்தவர்தான் குறட்டை சத்தத்திற்கு காரணம் என்றார். இந்த சண்டையுடன் நடந்தபோது பிள்ளையார் இன்" ஹோட்டல் வந்துவிட்டது. பயணபைகளை அறையில் வைத்து விட்டு காலை உணவுக்காக நடந்தபோது "மலாயன் கபே" வந்தது. "A1 தர உணவு வழங்கப்படும்" என சான்றிதழை கடையின் முன்னுக்கு வைத்திருந்தார்கள். சயந்தன் கொழும்பிலுள்ள அடிமைத்தீவு A1 ஹோட்டலின் ஒரு கிளையாக இருக்கும் என்று சந்தோசப்பட்டுக்கொண்டிருந்தார். மற்றவர்கள் அதை காதில் போட்டுக்கொள்ளாமல் எதைக்கொடுத்தாலும் விழுங்கி ஏப்பம் விட ரெடியாக இருந்தனர். இடியப்பம் சொதி ஆர்டர் கொடுத்துவிட்டு சயந்தனுக்கும் A1 ஹோட்டலுக்குமான உறவினை பற்றி கதை திரும்பியது. "அவரும் A1 ஹோட்டலின் ஒரு டைரக்டர்" என்றேன். எல்லோரும் சிரிப்பானுகள் என்று எதிர்பார்த்தேன். அதையும் மது சீரியசாக "அட! அப்படியா.. சயந்தன் ரொம்ப பெரிய ஆள்தான்" என்றார். அதைக்கேட்டுத்தான் மற்றவர்கள் சிரிக்க ஆரம்பித்தனர். "இவன் எதை சொன்னாலும் நம்பிடுவான்.. இவன் ரொம்ப நல்லவன்டா" என்று தனுஷன் சொல்ல மது புரியாமல் விழித்தார். ஒருவாறாக சாப்பாடு உள்ளே இறங்கியபின்னர்தான் எல்லோருக்கும் கண் சரியாக தெரிந்தது.

குளித்து விட்டு ஹோட்டல் அறையின் முன்னுக்கு இருந்த வாராந்தாவில் பிராக்டிஸ் ஆரம்பமானது. அரைகுறையாக இருந்த எனது slidesஐ முடிக்கும் வேலையில் மும்முரமானேன். மதுதான் நிகழ்ச்சி தொகுப்பாளர். புதுசு புதுசா ஐடியாக்களை போட்டு தனது பகுதிகளை மெருகேற்றினார். அவரது "முயலாமை" கதை எல்லோருக்கும் பிடித்துப்போக அதையும் நிகழ்ச்சியில் சேர்த்தோம். இதற்கிடையில் யாழ்பாணத்திலேயே நிலைகொண்டுள்ள எங்களது பிரதான ஒழுங்கமைப்பாளர் சர்வேஸ்வரன் அண்ணா வந்து சேர்ந்தார். ரூம் எப்படி வசதியா இருந்திச்சா என்று கவலையாக விசாரித்தார். சூப்பர் ரூம் book பண்ணியிருக்கிறீங்க என்ற பின்னர்தான் நிம்மதியானார். அவரது ஐடியாப்படி Appleஇன் "Think Different" வீடியோவை YIT சந்திப்பின் தொடக்கத்தில் போடுவதாக முடிவு செய்யப்பட்டது. "இவர்கள் வித்தியாசமானவர்கள்.. உலக கோட்பாட்டுடன் உடன்பட்டு வாழாதவர்கள்.. சதுர துளைகளில் உருளை ஆணிகள் போன்றவர்கள்" என்று சுத்த தமிழில் எழுதியிருந்தார். மது சின்ன வயசில நல்லா தேவாரம் பாடமாக்கியிருப்பார் போல, அந்த வசனத்தை ஒரே மூச்சில சொல்லி தனது தமிழ் பற்றை வெளிப்படுத்தினார். எல்லோருக்கும் பொறுப்புகள் சரியாக பகிர்ந்தளிக்கப்பட சந்திப்பு ஒத்திகை இனிதே நிறைவேறியது. சந்திப்பு இரண்டரை மணிக்கு ஆரம்பிப்பதாக இருந்தது. மலாயன் கபே எல்லோருக்கும் பிடித்துப்போக அங்கேயே சாப்பிடுவதாக ஒருமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. சாப்பிட்டு விட்டு சந்திப்பு நடப்பதாக இருந்த ஹாலுக்கு நடையை கட்டினோம். வழியை பிழையாக விளங்கிக்கொண்டு செக்கு மாடு சுற்றி வருவதுபோல சுற்றி வந்து ஒருவாறாக  இடத்தை அடைந்தோம். கங்காரு தேசத்திலிருந்து ஜேகே அண்ணர் skype video call மூலமாக இணைவதாக இருந்ததால் skype callஐ டெஸ்ட் செய்தோம். Light வெளிச்சத்துக்கு எதிராக அவர் உட்கார்ந்திருந்ததால் வீடியோவில் அவரது முகம் இருட்டாக இருந்தது. சந்திப்புக்கு வரப்போகிறவர்கள் அதைப்பார்த்து பயந்து விடாமல் இருக்க அதனை வெறும் Audio callஆக மாற்றினோம் :).
மது: தமிழ் எனக்கு தண்ணி பட்ட பாடு
இரண்டரை மணிக்கு எங்களுடன் சேர்த்து இருபது பேர்தான் இருந்தோம். ஆனால் சந்திப்பு தொடங்கி பத்து நிமிடத்துகுள்ளாக அரங்கம் நிறைந்தது. மது பிராக்டிசில் செய்ததை விட பல மடங்கு நன்றாக தொகுத்து வழங்கினார். அவரது கணீர் தமிழ் நிகழ்ச்சிக்கே உயிர் தந்தது. இரு மாணவர்களது Presentationகளுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. அவர்களது ஆங்கில உரைகள் அவர்களுக்கும் Computerஇற்குமான அறிமுகம் பற்றி சுவாரசியமாக போனது. அவர்களது உரையில் இருந்த தெளிவு JK அண்ணர் கொடுத்த mentoring இன் தரத்தினை வெளிக்காட்டியது. பின்னர் சயந்தனின் உரை தமிழில் ஆரம்பமானது. நான் இதுவரையில் "கொலவெறி" தனுஷ் இங்கிலிஷ்ல கதைச்சு பார்த்ததில்லை. அதுபோலவே சயந்தனையும் தமிழில் உரையாற்றி நான் ஒருநாளும் பார்த்ததில்லை. ஆனால் எதிர்பார்ப்பினை விட யாழ் IT Hub உருவான கதையை அழகாகவும் எளிமையான தமிழிலும் விளக்கினார். அவரது Presentation slideகளில் உள்ள படங்கள் அவரது கருத்துக்கு வலுவூட்டின.

இவ்வாறு சென்று கொண்டிருந்த நிகழ்வில் ஒரு அறிவுதிறன் கேள்வி-பதில் போட்டி ஆரம்பமானது. ஒவ்வொரு கேள்வி வாசிக்கப்பட்ட ஓரிரு நிமிடங்களில் மாணவர்களிடமிருந்து பதில்கள் சரமாரியாக வந்தன. அவற்றை சரிபார்த்து பரிசு வழங்கும் வேலையில் பாலா அண்ணனும், தனுஷனும் ஈடுபட்டனர். எனக்கு இவ்வாறான கேள்வி பதில்களே அலர்ஜிதான். எது பிழையான பதிலாக இருக்குமோ அதைத்தான் தெரிவு செய்து விடுவேன். என்ன செய்வது கடவுள் செய்த Manufacturing Defect. பாவம் பிழைத்து போகட்டும். ஆனால் மாணவர்கள் சும்மா பிளந்து கட்டினார்கள். கடைசியாக நான் கலந்து கொண்ட Cloud computing சம்பந்தமான கலந்துரையாடல் ஆரம்பமானது. நான் Cloud computing பற்றிய எளிய அறிமுகத்தினை தமிழ் Presentation மூலமாக வழங்கினேன். Technical சம்பந்தமாக எதுவுமே இல்லாமல் மிக எளிமையான அறிமுகங்களை போட்டு Comics பாணியில் Presentation slides ஐ அமைத்திருந்தேன். எல்லோரும் எதோ விளங்கியது போல தலையாட்டினார்கள். நல்லவேளை ஒருவரும் கேள்வி கேட்கவில்லை. அதன்பின்னர் ஜேகே அண்ணனும், டொக்டர் சார்லசும் எளிமையான தமிழ் மூலம் விளக்கத்தினை கொடுத்தார்கள். ஜேகே Cloud Computing தொடங்கிய வரலாற்றினை சுவைபட கூறினார். இந்த கலந்துரையாடலுக்கு உதயா அண்ணன் அமெரிக்காவிலிருந்து இணைவதாக இருந்தது. அவருடைய நேரம் காலை நான்கு மணிக்கு கலந்துரையாடல் ஆரம்பிப்பதாக இருந்தது. ஆனால் அவரை Onlineஇல் காணப்படவில்லை. அண்ணர் அப்படியே நித்திரைக்கு போய் விட்டாரோ என்று யோசித்தோம் :). ஆனால் பின்னர் விசாரித்தபோதுதான் அமெரிக்காவில் வீசிய புயல் காரணமாக இண்டர்நெட்டும் இல்லாமல் மின்சாரமும் இல்லாமல் வீட்டில் பாதுகாப்பாக பதுங்கியிருந்ததாக சொன்னார்.

இந்த லிங்கை கிளிக் பண்ணி Yarl IT Hub சந்திப்பின் youtube வீடியோக்களை பாருங்கள்.

இந்த Yarl IT Hub சந்திப்பு நடந்தது மார்ச் 3ஆம் திகதி. இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் சயந்தன் அடுத்த சந்திப்பு இந்த மாதம் 17ஆம் திகதி என்றார். நீங்களும் வாங்களேன்.

3 comments:

  1. விமல்,
    உங்களுடைய பயண விவரங்கள் சுவையாக இருந்தது.

    சென்ற மாதம் இலங்கை வந்திருந்த ஒலக காமிக்ஸ் ரசிகர் இந்த மலாயன் கபே பற்றி சொல்லி இருந்தார். அவரையும் இதுபோல ஒரு பயண கட்டுரை எழுத சொல்கிறேன்.

    ReplyDelete
  2. உங்களைப்போல நானுமே பயண உடை குறித்து பல முறை சிந்தித்து கவலை கொண்டது உண்டு. இருந்தாலும் நமக்கு எதுவோ அதுவே சரியாக இருக்கும். What else can we do?

    ReplyDelete
  3. ஹாய் விஷ்வா!
    உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. அதுசரி ஒலக காமிக்ஸ் ரசிகர் இலங்கை வந்தாரா? அவர் காமிக்ஸ் ஆராய்ச்சி செய்ய ஒலகம் சுற்றுகிறாரா? :)

    ReplyDelete