Saturday, May 19, 2012

குட்டிப்புலி

"டேய் மாமா! பந்து கிணத்தில விழுந்திட்டுது எடுத்துத்தாடா" என்றான் சுவேதன். அந்த "டேய் மாமா" என்ற விளிப்புக்குரியவன் மாரீசன். சுவேதனை முறைத்துபார்த்துக்கொண்டு கிணற்றினை நோக்கி நடை போட்டான். இந்த குட்டிச்சாத்தான் எப்பவுமே இப்படித்தான் உயிரை எடுப்பான் என்று மனதில் திட்டிக்கொண்டு பந்தை எடுப்பதற்காக வாளியை கிணற்றுக்குள் விட்டு கப்பிக்கயிற்றை இழுத்தான். பந்து வாளியில் அகப்படாமல் விளையாட்டு காட்டியது. அந்த பந்துக்குக்காக காத்திருக்கும் சுவேதனுக்கு இந்த ஆவணியுடன் ஏழு வயதுதான் ஆகிறது. ஆனால் வங்காளம் போகுமளவுக்கு வாய் காட்டுவான். கிணற்றில் விழுந்த பந்தை எடுக்க முயற்சிக்கும் அவனது மாமாவான மாரீசனுக்கு பன்னிரெண்டு வயதுதான் ஆகிறது. மாரீசனின் ஒன்று விட்ட அக்காளின் மகன்தான் சுவேதன். என்னதான் ஐந்து வயதுதான் வித்தியாசம் என்றாலும், எப்போதும் டேய் மாமா என்று உறவு முறை சொல்லி அழகாக கூப்பிடுவான். மாரீசனுக்கு இந்த "டேய் மாமா" என்றாலே காதில் ஈயம் ஊற்றியது போல கடுப்பாவான். இதில் இருக்கும் "டேய்" என்பதை விட "மாமா" என்பதுதான் அவனது இப்போதைய முக்கிய பிரச்சனை. சுவேதன் ஒருநாள் மாரீசனின் பள்ளி நண்பர்களின் முன்பாக மாமா என்று கூப்பிட, மாரீசனுக்கு ஒரு மருமகன் இருக்கும் செய்தி காட்டுத்தீ போல பள்ளிக்கூடமெல்லாம் பரவியது. அதன்பிறகு "தக்காளி" என்றிருந்த அவனுடைய பட்டப்பெயர் "மாமா" என்று நண்பர்கள் மத்தியில் பிரபலமானது. "தக்காளி" என்று அழைக்காத மாணவர்கள் கூட அவனை செல்லமாக "மாமா" என்று அழைத்தனர். ஒரு நாள் பள்ளிகூட நண்பர்களின் இந்த தொல்லை தாங்காமல் தமிழாசிரியரிடம் முறையிட்டார். அவர் "தாய் மாமனின்" சிறப்புகள் பற்றி சொல்லி அவனை சமாதானப்படுத்தினார். போதாக்குறைக்கு டாப்பில் பெயர் கூப்பிடும் போதே "மாமா" என்று மறந்து போய் கூப்பிட்டு அவனது மானத்தினை வாங்கினார். எல்லாம் இந்த சுவேதன் பயலால் வந்த வினை என்று மனதில் கருவிக்கொண்டான். ஒருநாள் கோபத்துடன் வீட்டுக்கு வந்த மாரீசனை சுவேதன் "மாமா வா விளையாடலாம்" என்று ஆசையாக கூப்பிட்டுகொண்டே வந்தான். கோபத்தில் பொறுமிக்கொண்டிருந்த மாரீசன் சுவேதனின் முகத்தில் பளார் என்று ஒரு அறை வைக்க சுவேதன் சோடா பாக்டரியில் அடிக்கும் சைரன் மாதிரி வீல் என்று கதறினான். வீடே அமளிப்பட்டது. சாந்தி அக்காள் ஓடி வந்து சுவேதனை அணைத்து "என்னடா கண்ணா என்ன ஆச்சு" என்றாள். சுவேதன் பதிலே இல்லாமல் இன்னும் சத்தமாக அழ ஆரம்பித்தான். இந்த சத்தம் கேட்டு வந்த தேவன் அத்தான் மாரீசனுக்கு நல்ல பூசை கொடுத்தார். இந்த விபரீத சம்பவத்தின் பின்னர் சுவேதன் நான் சொன்னதை செய்யாவிட்டால் சும்மா அழுது அப்பாவிடம் அடிவாங்கி தருவேன் என்று பிளக் மெயில் செய்ய ஆரம்பித்தான். அதனால் அவன் என்ன வேலை சொன்னாலும் செய்ய  வேண்டியதாகி விட்டது. என்ன செய்வது தேவன் அத்தானின் ஒவ்வொரு அடியும் சீவன் போற மாதிரி வலிக்கும். இதோ இப்போதும் அந்த அடிக்கு பயந்து, கிணற்றில் விழுந்த பந்தை எடுத்துக்கொடுக்க முயன்று கொண்டிருக்கிறான். எப்படி இந்த சுவேதனை பழி வாங்கி தனது கௌரவத்தினை நிலை நாட்டுவது என்று கடுமையான சிந்தனையிலாழ்ந்தான் மாரீசன்.


சித்திரை மாதம் ஒருவாறாக வந்து விட்டது. வடகம் காய வைக்கத்தேவையான கடுமையான வெயிலும் தொடங்கி விட்டது. மூன்று கிழமை பள்ளிக்கூட லீவு. ஒரு நாளில் மாரீசனின் காதில் வந்து விழும் "மாமா" என்ற வார்த்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. கொளுத்தும் வெயிலிலும் வெளியே விளையாடப்போகாமல் வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கிறானே! பயலுக்கு என்ன ஆச்சு என்று அம்மா கவலைப்பட்டாள். சித்திரை என்றாலே முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவும் வந்து விடும். அந்த பதினைந்து நாட்களும் ஊரே செழிப்பாகி விழாக்கோலம் பூண்டு காணப்படும். வெளிநாடுகளில் வாழும் ஊரவர்கள் திருவிழாவுக்கு வருவார்கள். இவ்வளவு சனம் இந்த சின்ன ஊரில் இருக்கிறதா என்று ஆச்சர்யப்படுத்தும் அளவுக்கு கோவிலில் கூட்டம் இருக்கும். இந்த கால  வேளையில் ஊரில் தமிழும் கொஞ்சம் தள்ளாடும். கொழும்புக்காரர்கள் ஐந்து சொல்லுக்கு மூன்று சொல் வீதம் ஆங்கிலத்தினை கலந்து கதைப்பார்கள். ஆனால் வெளிநாட்டிலிருந்து வந்த பெரியவர்கள் சொல்லுக்கு சொல் கவனமாக நூறு வீத தமிழில் கதைப்பார்கள். வெளிநாட்டு சின்னப்பயல்களை பற்றி கேட்கவே வேண்டாம். எது தமிழ் எது இங்க்லீஷ் என்று தெரியாமல் கலந்து கட்டுவார்கள். திருவிழாக்காலங்களில் கோயிலுக்கு போனாலே போதும், எல்லா உறவினர்களையும் அங்கேயே சந்தித்து விடமுடியும். மாரீசனுக்கு கோவில் திருவிழா என்றாலே ஒரே ஒரு விசயம்தான் ஞாபகம் வரும். சின்ன வயதில் "புலிவேட்டை" திருவிழாவின்போது புலியிடம் மாட்டுப்பட்டு வீல் வீல் என்று அழுதது. அன்றிலிருந்து "புலிவேட்டை" திருவிழா என்றாலே சற்று பின்னால் கூட்டத்துக்கு பின்னாலே ஒளிந்து கொண்டுதான் பார்ப்பான். என்னதான் வளர்ந்தாலும் புலிவேட்டையின்மேல் ஒரு பயம் எப்போதுமே உள்ளூர இருக்கும். திருவிழாவின் பதினோராம் நாள், இரவுத்திருவிழவாக புலிவேட்டை நடைபெறும். சாமி வெளிவீதி சுற்றும் போது ஒரு வேடன், ஒரு வேடுவிச்சி, மூன்று புலிகள் சகிதம் ஒரு நாட்டியம் போன்ற நிகழ்வு நடைபெறும். அக்காலத்திலே தமிழ் பெண்கள் சுளகு கொண்டு புலியை விரட்டியதாக கூறப்படும் கர்ணபரம்பரை கதையை ஞாபகப்படுத்தும் நிகழ்வாக இந்த நாட்டியத்தினை நடாத்துவார்கள். வேடன் புலிகளை விரட்டி கொண்டு ஓடும் வேளையிலே மற்றப்புலி வேடுவிச்சியை தாக்க பாயும். பிறகு என்ன வேடுவிச்சி சுளகினால் புலியை வெளுத்து வாங்குவாள்(ன்). இப்படியே மாறி மாறி நாட்டியம் போல செய்வார்கள். இந்நிகழ்வுக்கு நாதஸ்வரமும் மேளமும் துணை புரியும். மேள கச்சேரிக்கு ஏற்றவாறு புலிகளும் நடனமாடும் குத்துக்கரணம் அடிக்கும். இடைஇடையே, வேடிக்கை பார்க்கும் சிறுவர்களை புலிகள் உறுமி  பயமுறுத்தும், தூக்கிக்கொண்டு ஓடும். இதனால் சின்னப்பயல்கள் அப்பாமார்களின் கையிலிருந்து இறங்காமல் குரங்குக்குட்டி மாதிரி கெட்டியாக பிடித்துக்கொள்வான்கள். என்னதான் இரவுத்திருவிழாவாக இருந்தாலும் நள்ளிரவு ஒரு மணிக்கு பிறகுதான் புலிவேட்டை திருவிழாவே ஆரம்பிக்கும். சின்னப்பயல்கள் எல்லாம் தூங்கி வழிந்து கொண்டுதான் திருவிழாவுக்கு வருவார்கள். ஆனால் புலிகள் வந்த பின்னர் எல்லோருமே கொஞ்சம் விழிப்பாகவே இருப்பார்கள்.

"மாரீ மாமா! இந்த முறை நம்ம வீதிக்காரங்கதான் புலி வேட்டைக்கு வேஷம் கட்டுறாங்கடா" என்று காலை செய்தியுடன் ஓடி வந்தான் சாந்தன். "அதுக்கு எனக்கு என்னடா! மவனே இனி என்னை மாமா என்று கூப்பிட்டால் மீனாட்சிக்கு உன்னோட புதுப்பட்டபெயரை சொல்லிடுவேன்" என்றான். "டேய் அது வேணாண்டா.. உன்னை வீரா அண்ணன்தான் கூட்டிடுட்டு வரசொன்னார். நீதான் வேடனின் வில்லு அம்புக்கு பொறுப்பு" என்று சொல்லி விட்டு சைக்கிளை வேகமாக மிதித்தான். வீரா அண்ணன் சொன்னால் தட்ட முடியாது. தை மாசமானால், அந்த தெருவிலுள்ள எல்லா சின்ன பயல்களுக்கு இலவசமாக பட்டம் கட்டித்தர டியுசன் கொடுப்பார். ஆகவே வேறு வழியில்லை போய்த்தானாக வேண்டும். அவனுக்கான பழைய சைக்கிளை எடுத்தான். பின்பக்கம் காற்றில்லை. காந்தன் கடைக்கு போய்த்தான் காற்றடிக்கணும். வீட்டை விட்டு சைக்கிளை உருட்டி கொண்டு போனான். அப்போது சுவேதன் தேவன் அத்தானின் கையை பிடித்துகொண்டு வீட்டுக்குள்ளே வந்து கொண்டிருந்தான். மாரீசன் ஒன்றும் தெரியாதது போல கீழே பார்த்து கொண்டே நடந்தான். "ஓட்டை மாமா ஓட்டை சைக்கிளுடன் போறாருடா" என்று சீண்டினான் சுவேதன். கடுமையான கோபத்தினை அடக்கிக்கொண்டு சைக்கிளுக்கு காற்றடித்துக்கொண்டு வீரா அண்ணன் வீட்டினை அடைந்தான். அவருடைய வீட்டு முற்றத்தில்தான் புலிவேட்டை ஆட்டத்தினை பற்றிய முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. வீரா அண்ணன்தான் வேடன், வேடுவிச்சி வேஷம் சோதி அண்ணா என்று வேஷம் பற்றிய தகவல்கள் கிடைத்தன. எல்லோருமே நல்லா தெரிஞ்ச அண்ணன்மார்தான். அப்போதுதான் அவனுக்கு அந்த விபரீத ஆசை வந்தது. சுவேதன் பயலை பழி வாங்க இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக பட்டது. சுவேதன் முன் வரிசையில் நின்றுதான் புலிவேட்டை பார்ப்பான். வீரா அண்ணனிடம் சொல்லி அவனை தூக்கி விரட்டச்சொல்ல வேண்டும். அத்தோடு பயல் இரண்டு நாளைக்கு நித்திரை வராமல் அலற வைக்கவேண்டும் என்று திட்டம் போட்டான். வீரா அண்ணனிடம் சொன்னான்.
அதை கேட்டு எல்லோரும் கொல்லென்று சிரித்தனர். "டேய் இப்படி எல்லாம் பேரை சொல்லி விரட்ட நான் ஒன்றும் தாதா இல்லடா.. போய் வில் அம்பு செய்கிற வேலையை பார்ரா.. மூணாவது புலி வேஷத்துக்கு ஒரு பயலை தேடிப்பிடிக்கணும்" என்று அங்காலாய்த்து கொண்டார். மாரீசனுக்கு ஏதோ பொறி தட்டியது போல இருந்தது. "அந்த மூணாவது புலி வேஷத்தினை நானே போடுறேண்ணா!" என்று கத்தினான். "சும்மா போடா! சின்னப்பயல் நீயெல்லாம் புலி வேஷம் போட்டு இரண்டு மணித்தியாலம் தொடர்ந்து ஆட்டம் ஆட முடியாது. ஒரு திருவிழாவிலும் இப்படி குட்டிப்புலி மாதிரி ஒரு சின்னப்பயலும். வேடமிட்டதில்லை" என்றார். "என்ன அண்ணா புலி கூட்டத்தில ஒரு குட்டிப்புலியாவது இருக்கும் தானே. சின்ன புள்ளைகளுக்கு குட்டிப்புலி நல்லா பிடிக்கும் அண்ணா" என்று செகண்டுக்கு ஒரு "அண்ணா" போட்டான். எல்லோரும் சேர்ந்து செய்த முப்பது நிமிட விவாதத்தின் பின்னர் அவனுக்கு குட்டிப்புலி வேடம் கொடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.

புலிவேஷம் போட்டு சுவேதனை கதறடிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் புலி வேஷத்துக்கான கடுமையாக பயிற்சிகளை மேற்கொண்டான். நாட்டியத்தில் பங்கேற்பவர்களின் பெயர்கள் ரகசியமாக இருக்கும். மாரீசன் வீட்டில் அதைப்பற்றி மூச்சுக்காட்டவில்லை. கடைசி நாள் வீரா அண்ணன் இரவு பத்து மணிக்கே வரச்சொன்னான். உடம்புக்கு மஞ்சள் பெயிண்ட் அடித்து கருப்புக்கோடு பூசும் வேலை தொடங்கியது. குட்டிஅண்ணன்தான் பெயிண்ட் பூசினான். சும்மா அரை மணித்தியாலம் நின்று கொண்டிருக்க முடியாமல் தூங்கி வழிந்தான். "இவனை எங்கடா பிடிச்சீங்க இவன் புலிவேட்டைக்கு போகாமல் தூங்கி விட போறான்" என்று குட்டி அலற, அங்கு வந்த வீரா அண்ணன் கொடுத்த அறையில் அதிர்ந்து எழுந்து உட்கார்ந்தான் மாரீசன். ஒரு அறையில் அவனது லட்சியம் கண் முன்னே ஓடியது. சுவேதனை ஒரு முறை கடித்து விடலாமா என்று யோசித்தான். "இல்லை வேணாம்! பிறகு தேவன் அத்தான் என்ன மாதிரியான பதிலடி கொடுப்பாரோ என்றே யோசித்து பார்க்க முடியவில்லை சும்மா தூக்கி வந்து மிரட்டி பார்ப்போம்" என்று எண்ணி அந்த எண்ணத்தினை கை விட்டான். ஒரு மணித்தியாலத்தில் அவன் மேல் பெயிண்ட் அடிக்கும் வேலை முடிந்து விட்டது. கண்ணாடியில் பார்த்தால் அழகாக இருந்தது. ஒரு வால் வேறு பொருத்தப்பட்டது. மற்ற இரு புலி வேஷம் போடும் இளைஞர்களும் இவனை போல இரு மடங்கு உயரத்தில் இருந்தனர். "டேய்! குருவோட மானத்தை காப்பற்றுடா! களைச்சு போன சிக்னல் கொடு. சிவா சோடா குடிக்கத்தருவான்" என்று வீரா அண்ணன் சத்தமாக கத்தினான். அவனுக்கு உடலெல்லாம் கரி பூசி வெள்ளை கண்களை சிமிட்டி பார்க்கும்போது படு பயங்கரமாக இருந்தது.

மேள கச்சேரிகள் முடிந்து நள்ளிரவு ஒரு மணிக்கு வசந்த மண்டப பூசையுடன் திருவிழா ஆரம்பமானது. சாமி வெளிவீதி இறங்க மணி இரண்டு மணியானது. ஒளிந்திருந்து கூட்டத்தினை பார்க்க மாரீசனுக்கு கால் நடுங்கியது. கால் நகர முடியாமல் கட்டி வைக்கப்பட்டது போல உணர்ந்தான். உடம்பில் பெயிண்ட் காய்ந்து விட்டது. வீரா அண்ணன் முதுகில் தட்டி "பயப்படாதே அங்கே என்ன வருதோ அதைச்செய். சோதி மெதுவாத்தான் சுளகால அடிப்பான். ஓவரா அவனை அடிக்காதே. பிறகு விளாசிப்போடுவான்". அம்மனை வாகனத்தில் ஏற்றி தெற்கு வீதியை அடைந்தனர். மக்கள் எல்லோரும் எங்கடா புலிவேட்டை இன்னும் தொடங்கலையே என்று கதைத்துக்கொண்டிருந்தபோது வேடன், வேடுவிச்சி புலிகள் சகிதம் வேடதாரிகள் சாமிக்கு முன்னால் ஆட்டத்தினை தொடங்கினர். முதல் வேலையாக புலிகள் சுற்றிருந்த மக்களை விரட்டி அவர்களுக்கான இடத்தினை ஏற்படுத்தினர். பின்னர் வேடன் அம்பு வில்லு சகிதம் புலியை விரட்டினான். மாரீசன் தெறித்து கூட்டத்துக்குள் ஓடினான். அவன் மேலுள்ள பெயிண்ட் தமது வேட்டியில் பட்டுவிடுமோ என்று பயந்து பெரியவர்கள் பயந்தனர். சின்னபொடியன்கள் குட்டிப்புலியின் வாலை பிடித்து சீண்டினர். பதிலுக்கு அவனும் அவர்களை பார்த்து உறுமினான். ஒரு பெரிய புலி ஒரு சின்ன பயலை தூக்கி கொண்டு ஓடியது. மாரீசன் சுவேதனை தேடினான். தூங்குமூஞ்சி பயல் இன்னும் வரவில்லை போலும். அதுவரைக்கும் கொஞ்சம் வேடுவிச்சியை கொஞ்சம் சீண்டுவோம் என்று வேடுவிச்சியின் சுளகை பறிக்க முயற்சிக்க அவளின் இரும்புபிடியிலிருந்து பறிக்க முடியவில்லை. போதாக்குறைக்கு சுளகால் செம அடி வாங்கினான். ஒரு பெரிய புலி இவனை காப்பாற்றும் விதமாக வேடுவிச்சியை பிடித்து இழுக்க மாரீசன் தப்பி ஓடினான். முதுகு சுள்ளென்று வலித்தது. இந்த காட்சிகளை கூட்டத்தினர் இதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர். புதிதாக அறிமுகப்படுத்திய குட்டிப்புலி எல்லோருக்கும் பிடித்துபோய் விட மாரீசனை பார்த்துக்கொண்டே இருந்தார்கள். வீரா என்ற வேடுவன் கொஞ்சம் பெண்கள் பக்கமாக நின்று கொண்டிருந்தான். "அவன்ட ஆளு மீரா அந்த பக்கம்தான் இருக்கிறா அதான் பயல் அந்த இடத்தை விட்டு போறான் இல்ல" என்று சத்தமாக வீராவின் நண்பன் யாரோ கத்தியது அந்த இறைச்சளுக்குள்ளும் தெளிவாக கேட்டது. இப்போது அசடு வழிந்த வீரா அந்த இடத்தை மாற்றினான்.
வேடன் அசந்திருந்த வேடனின் வில்லை ஒரு புலி பிடுங்கி கொண்டு ஓட கிடைத்த இடைவெளியில் மாரீசன் ஒதுக்குபுறமாக போய் சோடாவை உறிஞ்சினான். அப்போது சுவேதனை இழுத்துக்கொண்டு தேவன் அத்தான் புலிவேட்டை நடக்கும் இடத்தினை நெருங்கிகொண்டிருந்தார். "வந்திட்டியாடா மவனே! உனக்கு இருக்குடா கச்சேரி" என்று மனதில் கருவிக்கொண்டு புலிவேட்டை நடக்கும் இடத்துக்கு கூட்டத்தினை லாவகமாக விலக்கிக்கொண்டு போய் வேடனின் காலை பிடித்து இழுக்க அவன் தடுமாறி விழுந்தான். எல்லோரும் குட்டிபுலியின் சாதனையை மெச்சினர். வேடனிடம் அடி வாங்காமல் தப்ப விலகி ஓடி வந்தான். சுவேதன் முன் வரிசையிலிருந்து பார்த்து கை தட்டிக்கொண்டிருந்தான். இதுதான் சந்தர்ப்பம் என்று ஓடிப்போய் அவனை பிடித்து தூக்கிக்கொண்டு ஓடினான். அதிர்ச்சியில் வெலவெலத்துப்போன சுவேதன் அலறியடித்து குளறினான். குட்டிப்புலிதானே பிடிச்சிட்டு போய் இருக்கு என்று ஒருவரும் அதை பெரிதாக எடுக்கவில்லை. பெண்கள் பக்கமாக கொண்டு அவனை தூக்கி போட்டுவிட்டு மாரீசன் அந்த இடத்தை விட்டு ஓடி வந்தான். சுவேதனுக்கு காலில் சின்னக்காயம் வந்து ரத்தம் வந்தது. மாரீசனுக்கு நெஞ்சு பலமாக அடித்தது. இருந்தாலும் ஏதோ சாதித்து விட்டதை போல உற்சாகமாக உணர்ந்தான். மேள சத்தத்திற்கு ஏற்றவாறு நெளிந்து நெளிந்து நடனமாடினான். வேடனை சீண்டி அடியும் வாங்கினான். இப்படி உற்சாகமாக புலிவேட்டை தொடர்ந்தது. எல்லாம் முடிய மணி காலை ஐந்தானது. மாரீசனின் உடம்பிலுள்ள பெயிண்டை அகற்ற ஒரு மணித்தியாலம் போனது. வீரா அண்ணன் சந்தோசமாக "டேய் குட்டிப்புலி பற்றி எல்லோரும் நல்லா சொல்லுறாங்கடா! நீதாண்டா இண்டைக்கு ஹீரோ" என்று பெருமிதப்பட்டார். ஆனால் மாரீசன் சுவேதனை பழி வாங்கியதை எண்ணி உள்ளூர மகிழ்ச்சி கொண்டான்.

மாரீசன் காலை பத்து மணிக்கு முழித்துப்பார்த்தபோது உடலெல்லாம் கடுமையாக வலித்தது. ஆனால் மனதில் சந்தோஷம் இன்னும் குறையவில்லை. சுவேதன் வீட்டு திண்ணையில் இருந்து கொண்டு காக்கைக்கு கல் எறிந்து கொண்டிருந்தான். அவனின் காலில் சின்னக்கட்டு போடப்பட்டிருந்தது. அவனருகில் போய் "எப்படிடா ஆச்சு" என்று அவன் காயத்தை பார்த்து கொண்டு சிரிப்பை மறைத்துகொண்டு ஆர்வமாக கேட்டான். "நாய் துரத்திச்சு.. ஓடும்போது கல்லு கிழிச்சுட்டுது. ஆனா நாய்க்கு நான் கல்லேறிஞ்சு அது ஒரு காலை நொண்டுது" என்று பெருமையாக சொன்னான். மாரீசனுக்கு அந்த நொடியில் இருந்த சந்தோஷம் முழுக்க வடிந்து போனதை போல உணர்ந்தான்.

1 comment:

  1. சூப்பர் விமலாஹரன்,
    சிரித்து சிரித்து வயிறு பிடித்துக் கொண்டது. மனது லேசாகியது.

    பாலாஜி சுந்தர்
    picturesanimated.blogspot.com

    ReplyDelete