Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Tuesday, November 20, 2018

வாசிப்பு என்னும் மிருகம்

 சமீப நாட்களில் வாசிப்புக்கு ஒரு நாளில் ஒரு மணி நேரமாவது ஒதுக்குகிறேன். இவ்வாறாக நேரம் ஒதுக்குவதற்கே மிகவும் சிரமமாக இருக்கின்றது. இதனாலேயே ரயிலில் பயணம் செய்யும்போதும் தீவிரமாக வாசிக்கிறேன். ரயிலுக்குள் நுழையும் கடல் காற்றை ரசிக்காமல் புத்தகத்துக்குள்ளே விழுந்திருக்கின்றேன். ஒரு பக்க யன்னலால் நுழையும் கடற்காற்று என்னை மயக்க தீவிர முயற்சி செய்து தோற்றுவிட்டு அடுத்தப்பக்க யன்னல் மூலம் தோல்வியுடன் வெளியேறுகிறது. இதற்குமுன்னர் நான் ஒருபோதும் நேரம் ஒதுக்கி புத்தகங்களை வாசித்ததில்லை. வாசிக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் வந்தால் மட்டுமே வாசிப்பேன். இப்போதெல்லாம் வாசிப்பு ஒரு குரங்கு போல என்னுடன் தொற்றிக்கொண்டிருக்கிறது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாசிக்கும்படி என்னை அது ஏவுகிறது. என் சொல்பேச்சை அது கேட்பதில்லை. அது பேச்சை தட்டுவது கடினமாக இருக்கிறது. இரவு படுக்கைக்கு செல்ல முன்னர் வாசிக்காமல் படுத்தால் அந்த நாளில் ஏதோ குறையிருப்பதாக மனதுக்கு படுகிறது. ஆனாலும் சில நேரங்களில் எனது வாசிப்பு ரசனை எனக்கே பயத்தை ஏற்படுத்துகிறது. எனக்கு எல்லோருக்கும் பொதுவாக பிடித்த புத்தகங்களை வாசிக்கவேண்டும் என்று தோன்றாது. எப்போதோ கேள்விப்படட  பழைய கிளாசிக் புத்தகங்களை வாசிக்க வேண்டும் போல திடீரென்று தோன்றும். பழைய ஆங்கிலபடங்களின் மூலமான புத்தகங்களை கண்ணில் படும்போது வாங்குவேன். காரணமேயில்லாமல் அந்த புத்தகங்களுக்குள் மூழ்கிவிடுவேன். ஆனால் அந்த படங்களை பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் இருப்பதே இல்லை. எல்லோரும் சிலாகிக்கும் "பொன்னியின் செல்வன்" நாவலை வாசிக்க ஒருபோதும் தோன்றியதில்லை. நான் எதை வாசிக்க வேண்டும் என்பதை அந்த குரங்குதான் தீர்மானிக்கிறதோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.

அலுவலத்தில் வேலை செய்யும் நண்பன் ஒருவன் விலை கூடிய ஆங்கில காமிக்ஸ்க்களை வாங்கிக்குவிப்பான். எங்களுக்குள் புத்தகங்களை பரிமாற்றம் செய்வோம். அவன் வாங்கும் புத்தகங்களில் பாதிக்கு மேல் அவன் வாசித்ததில்லை என்பது ஆச்சர்யம் தரும் விஷயமாக இருந்தது.  அநேக தருணங்களில் டாலடிக்கும் அவனுடைய புத்தம்புதிய புத்தகங்களை நானே முதலில் வாசிப்பேன். அவனே இது ஒருவகை மனோவியாதி என்றான். அதாவது வாங்கி குவித்துவிட்டு அதனை வாசிக்காமல் அடுக்கி அழகு பார்ப்பது. நல்லவேளையாக எனக்கு இந்த வியாதி இப்போதில்லை. ஆனாலும் நான் வாசிக்கும் வீதத்தை விட வாங்கும்வீதம் அநியாயத்திற்கு அதிகம்தான். காணும் இடங்களிலெல்லாம் புத்தகங்களாக வாங்கிக்குவிக்கிறேன். ஆனால் உடனடியாக வாசிப்பதில்லை. அவற்றை வாசிக்க ஏதோ ஒரு உந்துதல் தேவைப்படுகிறது.  இப்படித்தான் ஒரு புத்தகவிழாவில் ஷெர்லாக் ஹோம்ஸ் இன் சிறுகதை தொகுப்பை ஆசைக்கு வேண்டினேன். ஆனால் அது எனது புத்தக அலுமாரியில் இரண்டு வருட ஆழ்ந்த தூக்கம் போட்டது.  ஒருநாள் ஷெர்லாக் ஹோம்ஸ் இன் கதைகளை அடிப்படையாக கொண்ட "துப்பறிவாளன்" படம் வருவதாக அறிந்தேன். அந்த தீப்பொறி எப்போதோ வாங்கிய புத்தகத்தை  வாசிக்க தூண்டியது. புத்தகத்தை வாசித்து முடித்த நான் அந்த படத்தை பார்க்கமுடியாமல் போனது இங்கு முக்கியமில்லை. இவ்வாறே "The Martian" என்ற புத்தகத்தை அதை தழுவிய படம் பார்க்க விருப்பத்தில் வாசித்து முடித்தேன். புத்தகம் வாசித்தவர்களுக்கு அந்த படம் பிடிக்காது என்று ஒரு நண்பன்  கூறினான். ஆகவே அந்த படத்தை பார்க்கவில்லை. இந்த புத்தகத்தை ஒவ்வொரு காலைப்பொழுதிலும் ரயிலில் வேலைக்கு போகும்போது வாசித்தேன். இப்புத்தகத்தின் கதை செவ்வாய் கிரகத்தில் நடப்பதாக இருந்ததால் ரயில் கூட செவ்வாய் கிரகம் போல மாயையை உண்டுபண்ணியது. இப்படித்தான் நான் வாங்கும் புத்தகங்கள் என்னுடைய வாசிப்புக்காக தவம் கிடக்கின்றன. எப்போதோ ஒரு நாள்தான் அவற்றுக்கு வரம் கிடைக்கின்றது.  அந்த நாள்தான் எப்போது என்று தெரிவதில்லை.



நான் காலைப்பொழுது வாசிக்கும் புத்தகத்தை இரவில் தொடர்வதில்லை. இரவுக்கு வேறு ஏதாவது புத்தகம் வாசிக்கிறேன். இப்படித்தான் "Bram Stoker"இன் டிராகுலா புத்தகத்தை காலைப்பொழுதின் இருபது நிமிட புகையிரத சவாரியில் மட்டுமே மூன்று மாதங்களாக வாசித்து முடித்தேன். இரவில் ஏதாவது ஒரு நகைச்சுவை நிறைந்த காமிக்ஸ் ஏதாவது வாசிப்பேன். நாய்கள்  ஊளையிடும் நடு ராத்திரியில், டிராகுலா புத்தகத்தை வாசிப்பதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பது வேறு விஷயம். ஆனாலும் எனது மனவோட்டத்துக்கு ஏற்றவாறு புத்தகங்களை அந்த குரங்கு தேர்வு செய்கிறது போலும்.


இப்போதெல்லாம் புத்தக விழாக்கள் கணிசமாக நடக்கின்றன. ஏதோ பொய்யான பரபரப்புடன் எல்லா வேலையையும் தூக்கி போட்டுவிட்டு அந்த நிகழ்வுகளுக்கு போகிறேன். சித்தம் பேதலித்தவன் போல புத்தகங்களை பார்வையிடுகிறேன். புத்தகங்கள் நிறைய வாங்குகின்றேன். அவை வீட்டினுள் ஆங்கங்கே புத்தகங்கள் சிதறி கிடக்கின்றன. இயலுமானவரை தேவையற்ற புத்தகங்களை நண்பர்களுக்கு பரிசளிக்க முயற்சிக்கிறேன். ஆனால் என்னை போன்ற வியாதியஸ்தர்களை காணுவது அரிதாகவே இருக்கிறது. வீட்டில் குவிந்து கிடைக்கும் புத்தகங்களை அடுக்கி வைப்பதற்கே திண்டாடுகின்றேன்.  எது தேவை எது தேவையற்றது என்று வேறுபடுத்தவே முடிவதில்லை. அடுக்கும்போதே புத்தகங்களை நோட்டம் போடுவதற்கே பாதி நாள் போய் விடுகிறது. ஒவ்வொரு புத்தகத்தை அடுக்குவதற்காக தூக்கும்போதும் அப்புத்தகம் சம்பந்தமான நினைவுகள் வந்து அலைக்கழிக்கின்றன. இப்படியே நேரம் போய் விடுகிறது. கொட்டிக்கிடக்கும் புத்தகங்களை அடுக்குவதற்கே இன்னொரு அறையை கட்டுவோமோ என்று யோசிக்கிறேன் ஆனாலும் வீட்டு சொந்தக்காரன் என்ன சொல்லுவானோ என்ற நினைப்பு அதனை அணைத்து விடுகிறது.












Saturday, July 9, 2016

ஐஸ்பெர்க் காமிக்ஸ் இலங்கையில் ஒரு தமிழ் காமிக்ஸ் -- பாகம் 2






சில வருடங்களுக்கு முன்னராக ஐஸ்பெர்க் காமிக்ஸ் பற்றிய முதலாவது பதிவினை எழுதினேன். ஏனோ தெரியவில்லை, அதன் தொடர்ச்சியை எழுதுவதற்கு மனம் வரவில்லை. எழுத யோசித்தாலும் எதை எழுதுவது என்று தெரியவில்லை. சமீபத்தில் நண்பர் பிரதீப் ஞாபகப்படுத்தினார். சரி பழைய ஞாபகத்தை திரட்டி எழுதுவோம் என்று முடிவெடுத்தேன். என்னுடைய ஞாபக சக்திக்கு ஏற்றவாறு கீழ்கண்ட பதிவை அமைத்துள்ளேன்.



ஐஸ்பெர்க் காமிக்ஸின் முதலாவது பிரதி பெரிய சைசில் 85ரூபாவில் வந்தது. அண்ணாவே இலங்கையிலுள்ள புத்தக கடைகளுக்கு போன் செய்து புத்தகங்களை அனுப்பி வைத்தான். நான் எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லாத ஆள் மாதிரி "தேமே" என்றிருந்தேன். இரண்டு மூன்று வாரங்கள் கழித்து புத்தக விற்பனை குறித்து விசாரித்தால் வந்த சேதி நல்லதாக இருக்கவில்லை. ஒரு சில புத்தகங்களே விற்றதாக சொன்னார்கள். ஓரிண்டு இடங்களில் விற்பனை பரவாயில்லை ரகம். அதுவும் காமிக்ஸ் பற்றிய ஆர்வமிருந்த விற்பனையாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எடுத்து சொல்லி விற்றிருந்தார்கள். நான்கைந்து கடிதங்கள் வந்தன. ஒவ்வொன்றும் இரண்டு மூன்று பக்கத்துக்கு இருந்தன. தீவிர காமிக்ஸ் ரசிகர்கள் ஐஸ்பெர்க் காமிக்சை வரவேற்றனர். அவர்களது கடிதங்களே அடுத்த புத்தகத்துக்கான முயற்சிக்கான டோனிக்காக அமைந்தது. ஆனாலும் எப்படி புத்தகங்களை மார்கெட் செய்வதோ என்று தெரியாமல் தடுமாறினோம். காமிக்ஸ் வாசிக்கும் குறிப்பிட்ட வட்ட வாசகர்களுக்கு எவ்வாறு விளம்பரப்படுத்தலாம் என்றும் தெரியவில்லை.


அப்போதுதான் இன்டர்நெட் என்கிற சமாச்சாரம் ப்ரௌசிங் சென்டர்கள் மூலமாக எங்கள் பிரதேசங்களை ஆக்கிரமித்திருந்த சமயம். அண்ணாவும் ஒரு IT ஆசாமி என்பதால் ஐஸ்பெர்க் காமிக்ஸுக்காக ஒரு வெப்சைட் உருவாக்கிடுவதாக முடிவெடுத்தான். நானும் அப்போதுதான் வெப் ப்ரோக்ராம்மிங் பற்றி படித்திருந்தேன். ஆகவே ஒரு நல்ல நாளில் ஐஸ்பெர்க் காமிக்ஸ் வெப்சைட் உதயமானது. வெப்சைட்டை உருவாக்கி ஒரு "டிஸ்கஸன் போரம்" வைத்தோம். அதில் ஐஸ்பெர்க் காமிக்ஸ் சம்பந்தமான அறிவிப்புகளை செய்தோம். இந்த வெப்சைட் மூலமாகத்தான் கடல் கடந்த இந்திய காமிக்ஸ் நண்பர்களின் தொடர்பு ஏற்பட்டது. எங்களது "டிஸ்கஸன் போரம்" காமிக்ஸ் நண்பர்கள் கூடி பழைய அனுபவங்களை விவாதிக்கும் திண்ணையாக தொழிற்பட்டது. இலங்கை நண்பர்களின் வருகையை விட இந்திய காமிக்ஸ் ஆர்வலர்களின் வருகை அதிகம் என்பதுதான் உண்மை. அக்காலத்தில் இன்டர்நெட் என்பது இலங்கையின் எல்லா பகுதிக்கும் சரியாக பரவவில்லை என்பது காரணமாக இருந்திருக்கலாம்.


ஐஸ்பெர்க் காமிக்ஸ் வெப்சைட் மூலமாக இந்திய காமிக்ஸ் ரசிகர்களான ரகு மற்றும் விஸ்வா ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சில காமிக்ஸ் பிரதிகளை இந்தியாவுக்கு அனுப்பினோம். 2007ஆம் ஆண்டளவில் ரகு என்கிற ராகுலன் என்ற அந்த நண்பர் தாங்களும் புதிதாக காமிக்ஸ் வெளியிட இருப்பதாக சந்தோஷ செய்தியை அறிவித்தார். அவரும் சில காமிக்ஸ் நண்பர்களும் இணைந்து "ஸ்டார் காமிக்சை" தொடங்கியிருந்தார்கள்.


முதல் இதழை எங்களுக்கு அனுப்பினார்கள். அதன் தரம் ஆங்கில பதிப்புகளின் தரத்தில் அட்டகாசமாக இருந்ததை கண்டு வியந்தேன். "பனி மலைக்கோட்டை" என்ற கேப்டன் பிரின்ஸ் தோன்றும் சாகசத்தை முதன்முறையாக வாசித்து ரசித்தேன். முதன்முறையாக ஹார்ட் பைண்டிங்கில் ஒரு தமிழ் காமிக்ஸை கண்டேன். ஏதோ ஒரு காரணத்தினால் "ஸ்டார் காமிக்ஸ்" பின்னர் வெளிவரவில்லை. ஆனாலும் என்னை பொறுத்தவரை அந்த இதழ் தமிழ் காமிக்ஸ் உலகில் ஏற்படுத்திய தாக்கம் முக்கியமானது என்றே தோன்றுகின்றது.

விஸ்வா அப்போதே எங்கள் காமிக்ஸ் பற்றிய விமர்சனங்களை வழங்கி அதீத ஆதரவு தந்தார். அவரது ப்ளாக்போஸ்டுகள்தான் ஐஸ்பெர்க் காமிக்ஸ் இருந்ததற்காக ஆதாரங்களாக உள்ளன. இப்போது இந்த போஸ்டுக்கான படங்களை அங்கிருந்தே உருவியுள்ளேன். இவ்வாறான ப்ளாக்போஸ்ட்கள் மற்றும் நீளமான கடிதங்கள் அடுத்தடுத்த புத்தகங்களை வெளியிட உந்துதல் அளித்தன என்பது நிச்சயம்.

முதலாவது இதழின் பின்னராக இரண்டாம் இதழுக்கான வேலைகளை அண்ணா தொடங்கினான். முதலிரண்டு புத்தகங்களுக்காக ஏற்கனவே ரோயல்டி கட்டணங்கள் கட்டி விட்டதால் இரண்டாம் புத்தகத்தை உடனடியாக வெளியிட வேண்டிய கட்டாயம். முதல் இதழைப்போலவே இரண்டாம் இதழுக்கும் ஆங்கில பதிப்பு எங்களிடம் இருந்ததால் மொழிபெயர்ப்பு எளிதாக இருந்தது. ஆனால் இம்முறை நானும் மொழிபெயர்ப்பில் உதவினேன். இப்போது அந்த புத்தகத்தை பார்க்கும்போது பல இடங்களில் சொதப்பியிருப்பதை உணரமுடிகின்றது. முதல் புத்தகம் பெரிய சைசில் ஜரூராக 85ரூபா விலையில் வந்தது. விற்பனை மந்தத்திற்கு விலையின் உச்சம் காரணமாக இருக்கலாம் என்று அண்ணா கருதினான். அதனால் இரண்டாம் புத்தகம் 50ரூபா விலையில் வழமையான சின்ன சைஸுக்கு மாற்றப்பட்டது. இம்முறையும் அண்ணாவே விற்பனையாளர்களுக்கு அனுப்பிவைத்தான்.

இலங்கை முழுவதுக்குமாக XIIIஇன் உரிமை வாங்கப்பட்டிருந்தாலும் அதனை ஐஸ்பெர்க் காமிக்ஸ் அதனை சரியாக பயன்படுத்தியிருக்கவில்லை. குறிப்பாக சிங்களம் இலங்கையில் எழுபது சதவீத மக்களின் மொழி, ஆகவே அதில் வெளியிடும் யோசனையை அண்ணா சொன்னான். எங்களுக்கு சிங்களம் சுத்தமாக தெரியாது. ஆகவே ஒரு சிங்களம் படிப்பிக்கிற ஒரு மாஸ்டரின் உதவிகொண்டு மொழிபெயர்ப்பதாக ஏற்பாடு. சில நாட்களில் ஆர்வமாக தமிழை சிங்களத்தில் மொழிபெயர்த்து தந்துவிட்டார். ஆனால் அவர் என்னத்தை எழுதியிறுக்கிறாரோ... அது சிங்கள காமிக்ஸ் ரசிகர்களிடம் எடுபடுமா என்று தலையை பிய்த்துக்கொண்டோம். எனது சிங்கள நண்பர்களிலே காமிக்ஸ் வாசிக்கும் நண்பனிடம் சிங்கள மொழிபெயர்ப்பு ப்ரூப் காமிக்ஸை கொடுத்து வாசிக்குமாறு சொன்னேன். இரண்டு நாளைக்கு பிறகு வந்த அவன் இந்த மொழிபெயர்ப்பு சரிவராது. சிங்கள காமிக்ஸ் பேச்சுவழக்கில் எழுதுவார்கள். ஆனால் இது எழுத்து வழக்கில் போர்மலா இருக்கு. இது எடுபடும் என்று தோணலை என்று கை விரித்தான். சரியான மொழிபெயர்ப்பாளர் இல்லாததால் சிங்கள காமிக்ஸ் ஐடியா கைவிடப்பட்டது.

இன்சைடர்ஸ் விளம்பரம்
அது அவ்வாறு போய்கொண்டிருக்க தமிழ் காமிக்ஸின் அடுத்த இதழுக்கு என்ன செய்வது என்ற யோசனை தலையிலேறியது. XIIIக்கு பிறகு யார் என்ற கேள்வி எனக்கு எப்பவுமே இருந்தது. அண்ணாவோ தோர்கல், அல்டேப்ரன் என்ற வேற்றுகிரகக்கதை, இன்சைடர்ஸ் என்ற பெண் உளவாளியின் சாகசம் என்ற பெரிய லிஸ்ட் ஒன்று வைத்திருந்தான். ஆனால் அந்நியமான கதைகளை தொடுவதில் பல சிக்கல்கள் இருந்தன. அவர்கள் அனுப்பிய சாம்பிள்கள் பிரெஞ்சு மொழியிலிருந்தன. படம் பார்த்து கதையின் தரத்தை மதிப்பிடுவது சிரமம் என்றே புரிந்தது. உதாரணமாக பவுண்சரின் முதலாம் பாகமும் அவர்கள் அனுப்பிய சாம்பிள்களில் இருந்தன. ஆனால் அக்கதையின் படங்கள் கவர்ந்தாலும் சிக்கலான கதையின் போக்கு பிடிபடவில்லை. ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான "கேப்டன் டைகர்" என்று அறியப்படும் ப்ளுபெரியை அறிமுகப்படுத்துவது என்று தீர்மானித்தோம். ஆனால் இதுவரை தமிழில் வராத கதைகளை கதைகளை தேடினோம். அப்போது இளமைக்கால டைகர் கதைகளை முத்து  காமிக்ஸ் வெளியிட்டிருக்கவில்லை. ஆகவே அக்கதைகளை தெரிவுசெய்தோம்.
வாஸ்கோ கதையின் விளம்பரம்

ஒரு நல்ல நாளில் Dargaud நிறுவனத்திலிருந்து சாம்பிள் புத்தகம் வந்திறங்கியது. அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பு சாம்பிள்கள் இல்லையென கையை விரித்துவிட்டனர். அப்போதுதான் தொடங்கியது சங்கடம். விசாரித்து பார்த்தபோது பிரெஞ்சு மொழிபெயர்ப்பு கொழும்பில் செலவு கூடின விஷயம் என்ற உண்மை தெரிந்தது. வழமையாக ஓரிரண்டு பக்கங்கள் மட்டுமே மொழிபெயர்க்கும் அவர்கள் இருபத்தைந்து முப்பது பக்கங்கள் மொழிபெயர்ப்பதற்கு யானை விலை குதிரை விலை சொன்னார்கள். அப்போதுதான் அண்ணாவின் சாப்ட்வேர் மூளை வேலைசெய்தது. "கூகிள் டிரான்ஸ்லேடர்" மூலமாக மொழிபெயர்க்கலாம் என்றான். கதையில் பக்கபக்கமாக வரும் வசனங்களில் முதலில் ஒரு நண்பரின் உதவிகொண்டு டைப் செய்து எடுத்தோம். பின்னர் அதனை "கூகிள் டிரான்ஸ்லேடர்"ல் மொழிபெயர்த்தேடுத்தோம். "கூகிள் டிரான்ஸ்லேடர்" தனது ஆரம்ப காலங்களில் ஓரளவுக்குத்தான் மொழிபெயர்க்கும். ஆகவே ஆங்கிலத்தில் டிரான்ஸ்லேட் ஆன சமாச்சாரம் கொஞ்சம் விளங்கியது. குறிப்பாக ப்ளுபெரி லோங் சாம் என்ற தப்பியோடிய அடிமையுடன் கதைக்கும் வசனங்கள் பிரெஞ்சு கிராமீய வட்டார வழக்கு மொழியில் இருந்ததால் "கூகிள் டிரான்ஸ்லேடர்" அநியாயத்துக்கு திணறியது. அந்த பக்கோடா வசனங்களுடன், படங்களையும் பார்த்து, கதையோட்டத்திற்கு ஏற்றவாறு வசனங்களை தீர்மானித்தோம். அதனை மொழிபெயர்ப்பது வினோதமான சவாலாகவிருந்தது.

இது இப்படி போய்கொண்டிருக்க அண்ணா செய்த ஒரு காரியம் எனக்கே வியப்பளித்தது. இனிமேல் இப்படி பிரெஞ்சு மொழிபெயர்ப்புக்கு திணறுவதை காட்டிலும் பிரெஞ்சு படித்துவிடலாம் என்று அண்ணா முடிவு செய்தான். ஆனால் இரண்டு மூன்று கிளாஸ் போய்விட்டு முழிபிதுக்கியவாறு வீடு திரும்பினான். "என்னடா சோதனை இது. பிரெஞ்சில் கதிரை மேசைக்கெல்லாம் ஆண்பால் பெண்பால் பாக்கிறாணுக" என்று அலுத்துக்கொண்டான். காமிக்ஸ் மேல் அவனுக்கிருந்த பற்று அவனை பிரெஞ்சு க்ளாஸுக்கு கொண்டு போய் விட்டது. அவனும் சலிக்காமல் சில க்ளாஸுக்கு போனான். அவனை மாதிரி ஒரு காமிக்ஸ் வெறியனை கண்டதில்லை.
ப்ளுபெரியின் பெயர் வந்த காரணம்

இரண்டாம் இதழைபோலவே ப்ளுபெரியின் சாகசமும் அம்பது ரூபாயில் விற்பனைக்கு அனுப்பப்பட்டது. விற்பனையின் பின்னராக சில கடிதங்கள் வந்தன. ஆனால் விற்பனை அவ்வளவு முன்னேற்றமில்லை. வெறும் இருபது லட்சம் தமிழர்கள் வாழும் நாட்டில் காமிக்ஸ் என்ற ஊடகம் சென்றடைய வேறு லெவலில் முயற்சி செய்ய வேண்டும் என்பது புரிந்தது. 2007ஆம் ஆண்டு காலப்பகுதியில்தான், நிழல் உள்நாட்டுப்போர் நிஜமாக உருமாற தொடங்கியிருந்தது. போரின் தாக்கம் காரணமாக நாட்டின் ஏனைய பகுதிகளுக்கான தொடர்பு பாதிக்கப்பட்டது. கிளிநொச்சிக்கும் 50 புத்தகங்கள் அனுப்பினோம். அதன்பிறகு அதைப்பற்றி கேட்கத்தோன்றவில்லை. பணம் வராததற்கு வெவ்வேறு நியாயமான காரணங்கள் இருந்தன. அப்போதுதான் நாட்டில் சமாதான பேச்சுகள் முடிந்து போர் உத்தியாகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு வளைக்குள் பதுங்கிய எலிகளாணோம். கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. எங்கள் வாழ்க்கைமுறையே மாறிப்போனது. காமிக்ஸ் வெளியிடும் யோசனையே வரவில்லை. ஏதோ சின்ன வயசு ஆசைக்கு மூன்று புத்தகமே அதிகமோ என்று தோன்றியது. இப்போதுகூட ஏதாவது ஒரு ஆங்கில காமிக்ஸை வாசிக்கும்போது தமிழில் வெளியிடுவோமா என்று ஆசை வருவது உண்மைதான். அதற்கு காலம் பதில் சொல்லலாம்.



படங்கள் பின்வரும் நண்பர்களின் தளங்களிருந்து சுடப்பட்டன. நன்றி...
http://tamilcomicsulagam.blogspot.com/
http://www.comicology.in/



http://www.comicology.in/2007/08/star-1-captain-prince-april.html
http://tamilcomicsulagam.blogspot.com/2008/09/iceberg-comics-srilankan-tamil-1st.html
http://tamilcomicsulagam.blogspot.com/2008/09/iceberg-comics-2nd-issue-xiii.html
http://tamilcomicsulagam.blogspot.in/2008/09/icerberg-comics-3rd-issue-blueberry.html?m=1





Friday, January 9, 2015

ஒரு அடையாள அட்டை படலம்!

மாலை அஞ்சு மணிக்கு வரச்சொன்னவள். இப்போது மணி நாலரை. நூறாம் நம்பர் பஸ். ரோட்டில் கொஞ்சம் டிராபிக் இருந்தது. இன்னும் நாலு பஸ் ஹோல்டை தாண்டினால் வெள்ளவத்தை வந்து விடும். ஒரே படபடப்பாக இருந்தது. ஆனால் அது ஒரு சந்தோசப்படபடப்பு. முதன்முறை அல்லவா, கொஞ்சம் அப்படித்தான் இருக்கும் என்று மனதை சமாதானப்படுத்திக்கொண்டேன். மனம் வேறு எங்கோ சஞ்சரிக்கிறது. நான் கொழும்புக்கு புதுசு. இறங்க வேண்டிய ஹோல்டை விட்டுவிடபோகிறேனோ என்ற எண்ணம் வந்தது. வெள்ளவத்தை "மார்க்கெட்" ஹோல்ட்டுக்கு வரசொல்லியிருந்தாள். வேறு ஏதாவது ஹோல்டில் மாறி இறங்கினாலும் யாரிடமாவது விசாரித்து போய் சரியான இடத்துக்கு போய் சேர்வதற்கு சிங்களம் தெரியாது. அடுத்தது தெகிவளை நகரசபை ஹோல்ட். பிறகு வெள்ளவத்தை ஆர்மி செக்பொய்ன்ட் வரும். சிலநேரம் மறித்து "ஐ.சி" கேட்பான்கள். அப்போதுதான் மனதிற்குள் மின்னலடித்தது. பேர்சை தொட்டுப்பார்த்துக்கொண்டேன். பேர்சை காணவில்லை. அவள் "வா சந்திப்போம்" என்று அழைத்ததால் ஏதோ அவசரத்தில் பேர்சையும் எடுக்காமல் வந்து விட்டதை எண்ணியபோது நெஞ்சில் பகீரென்றது. செக்பொய்ண்டில் செக் பண்ணும்போது "ஐ.சி", போலீஸ் ரிப்போர்ட் இல்லாவிட்டால் முடிந்தது கதை. சந்தேக கேசில் கம்பி எண்ண வேண்டியதுதான். எல்லா பஸ்சையும் செக் பண்ணமாட்டார்கள். ஏதாவது ஒரு பஸ்சை ராண்டமாக நிறுத்தி செக் பண்ணுவார்கள். இந்த பஸ்சை நிறுத்தினால் என் கதை அம்போதான். "ஐ.சி" இல்லாவிட்டால் முதல் குற்றம், சிங்களம் பேசி சமாளிக்க முடியாவிட்டால் இரண்டாம் குற்றம். இவை எல்லாவற்றையும்விட திரு.. திருவென்று.. முழித்தால் மூன்றாம் குற்றம். எனக்கு எதிராக உடனடியாக சுமத்துவதற்கு ஏதுவாக மூன்று குற்றங்கள் இப்போது இருக்கின்றன. உடனடியாக ஜெயில்தான். யாருக்காவது தகவல் சொல்லி மீட்டுச்செல்ல ஒரு கிழமையாகும். ஆனாலும் அதிஷ்டம் இருந்தால் தப்பலாம். இப்போதுதான் முதல்முறையா ஒரு பொண்ணு "கபேக்கு வா..  உன்னோடு எதிர்காலம் பற்றி முக்கியமாக கதைக்கணும்" என்று சொல்லியிருக்கா. லவ் சரியாகும் போல இருக்கும் நேரத்தில் இப்படி முட்டாள்தனமாக "ஐ.சியை" விட்டுவிட்டு வந்திருக்கிறேனே என்று என்னை நானே சபித்துக்கொண்டேன். தலையை சுற்றியது. பஸ்ஸிலிருந்து இறங்கி மீண்டும் வீட்டுக்கே போனால் அந்த "ரிஸ்க்" இருக்காது. ஆனால் என் லவ் முளையிலேயே கருகி விடும்.

***********************************

அது ஒரு காலம். காசைவிட உயிர் மதிப்பு மிகுந்த காலம். நீங்கள் இந்த திருநாட்டின் உருப்படியான பிரஜைகள் என்று நிரூபிக்கும் முதல் ஆதாரம் நீங்கள் வைத்திருக்கும் "ஐ.சி" எனப்படும் "ஐடேன்டிடி கார்ட்". தமிழில் சொல்வதானால் அடையாள அட்டை. "ஐ.சி" எனப்படும் அந்த வஸ்து குறிப்பிட்ட நபரின் பெயர், முகவரி, மற்றும் சோகமாக போஸ் கொடுக்கும் மூஞ்சியையுடைய போட்டோ போன்ற விபரங்கள் அடங்கிய அட்டை. இந்த அட்டை இல்லாதவர்கள் பதினாறு வயதுக்கு குறைவானவர்களாக இருக்கலாம் அல்லது இந்நாட்டின் பிரஜைகளாக இல்லாதிருக்கலாம், இவை எதுவும் இல்லாவிட்டால் நீங்கள் சந்தேக நபராகவும் இருக்கலாம். கொழும்பில் இருக்கும் நபர்களுக்கு "ஐ.சி" என்பது உடலின் இன்னொரு அங்கம் போன்றது. அது இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவது நீங்களாகவே ஆறடிக்கு ஆறடி அறை வாடகைக்கு எடுத்துக்கொண்டு போய் பாணும், பருப்பும் மட்டுமே சாப்பிட்டு மிச்ச காலத்தை கழிப்பது போன்றது. வீட்டிலிருந்து கிளம்பும்போது அம்மா "பத்திரமா பார்த்து போடா" என்று சொல்லுவதற்கு பதிலாக "ஐ.சியை கொண்டு போடா" என்றுதான் சொல்லுவா. "ஐ.சி"யை தொலைப்பது போன்று வரும் கனவுதான் அக்காலத்தின் படுமோசமான கனவு.

கொழும்பு என்பது ஒரு கனவு தேசம். ரோடு நிறைய கடைகள். எதுவும் கிடைக்கும். ஏ.ல். எக்ஸாமில் சொதப்பினாலும் ஏதாவது படிக்கலாம். எந்த கொம்பனும் வெளிநாட்டுக்கு  போவதற்கு விசா எடுக்க இங்குதான் வந்தாகணும். ஆனாலும் கொழும்பு கெடுபிடிகள் நிறைந்த தேசம். ஆங்காங்கே செக்பாயிண்டுகள் இருக்கும். அடிக்கடி வீதிகள் மூடப்பட்டு வழவழப்பான கார்கள் அணிவகுத்து செல்லும். சரியான காரணம் இல்லாமல் கண்ட இடங்களில் உலாத்தினால், ஒருமுறை மாமியார் வீட்டுக்கு போய் வரவேண்டும். இவ்வாறான சூழ்நிலை காரணமாக, சும்மா காரணமில்லாமல் ஊர் சுற்ற யோசிப்போம். ஆகவே கொழும்பு ஒரு சொர்க்கமா? நரகமா? என்று பட்டிமன்றமே நடத்தலாம். இப்படியான ஒரு நகரத்தில் "ஐ.சி"யை தொலைத்தால் என்ன நடக்கும் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை. நானும் ஒருமுறை தொலைத்திருக்கிறேன்.

நான் "ஐ.சி"யை தொலைத்த தினம் நன்றாக ஞாபகம் இருக்கிறது. அன்று காலை எழும்பும்போதே மணி எட்டு. மேகங்களால் மூடப்பட்ட மந்தமான காலை. அன்று காலை வழமைக்கு மாறாக, வழமையான குயில்கள் கத்தும் ஓசைக்கு பதிலாக அண்டங்காக்கைகள் கரைந்ததாக ஞாபகம். இன்று ஏதோ விபரீதமாக நடக்கபோகிறது என்று என் மனம் சொன்னது. ஆனால் என்னவென்றுதான் தெரியவில்லை. அவசரமாக ஷேவ் செய்துகொண்டு ஓடிப்போய் பஸ்ஸில் ஏறினேன். கூட்டம் அதிகமில்லை. பஸ்ஸிலிருந்து இறங்கும்போது கொஞ்சம் கூட்டமாக இருந்ததாக ஞாபகம். இறங்கினேன். தாகமாக இருந்தது. கொஞ்ச தூரத்தில் ஒருத்தன் இளநீர் விற்றுக்கொண்டிருந்தான். ஒரு இளநீர் குடித்தேன். பத்து ரூபா என்றான். பேர்சை எடுக்க துழாவினேன். ம்ஹூம்.. அது இல்லை.. கடைசியாக பஸ்ஸுக்கு காசு எடுத்து கொடுத்ததாக ஞாபகம். எங்கு தேடியும் இருக்கவில்லை.. அவ்வளவுதான்.. கதை முடிந்துவிட்டது.. பேர்சை எவனோ பிக்பொக்கட் எடுத்துவிட்டான். அதில் முப்பது ரூபாய்தான் இருந்தது. அது இப்போது முக்கியமில்லை. என்னுடைய "ஐ.சி" அதில்தான் இருந்தது. தலை சுற்றியது. இளநீர்க்காரன் கையில் நல்ல கூரான அரிவாள் இருந்தது. அவன் வெட்டிய இளநீருக்கு காசு கொடுக்கணும். அதுவேறு பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியது. அவனுக்கு தமிழ் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பேர்ஸ் தொலைந்து போனதை இளநீர்க்காரனுக்கு சைகை விளக்கம் கொடுக்க முயற்சித்தேன். அவனும் கத்தியை ஆட்டிக்கொண்டு ஏதோ புரியாத சிங்களத்தில் கேட்டான். கடைசியாக எனது கையிலிருந்த புதிய "நோக்கியா 3310" போனை கொடுத்து "நாளைக்கு காசை தாரேன், அதுவரை போனை வச்சிருங்க" என்றேன்.  "என்ன தம்பி உங்களுக்கு பேச்சு வருமா? நீங்க ஊமைன்னு நெனைச்சேன்.. பத்து ரூபாக்கு போயி போனை தாறீங்க.. நாளைக்கு காசை தாங்க" என்றான். அவனும் தமிழன்தான். நான் வேறு முட்டாள்தனமா சைகை செய்து.. சை.. "ஐ.சி" வேறு தொலைந்து போய்.. அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. ஏதாவது ஒரு செக் பொய்ண்டில் மாட்டினால் கதை கந்தல். வீட்டுக்கு போன் செய்வதற்கு போனில் காசு இல்லை.

இந்த சம்பவம் நடைபெற்ற நேரம் காலை பத்தரை மணி. இடம் கல்கிசை மார்கெட் அருகில். திருவென்று திருவென்று முழித்து கொண்டிருக்கிறேன். அப்போது பார்த்து யாரோ முதுகில் தட்டினார்கள். இதய துடிப்பு சடாரென்று அதிகரிக்க திரும்பினேன். அது கண்ணன். நண்பன்..

"டேய் என்னடா ரோட்டில முழுசிக்கொண்டு நிக்கிற.. சைட் அடிக்க வந்தியா" என்று சிரித்தான்.

"ஐ.சி தொலைஞ்சு போச்சுடா. யாரோ பஸ்சில பிக்பொக்கட் அடிச்சு போட்டாங்கள்" என்று அழாக்குறையாக சொன்னேன்.

"இதுக்கு போய் அழுகிற.. வாடா போலிஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுப்போம்"

"இல்லடா பயமா இருக்கு.. அங்க போனா என்னை பிடிச்சு ஜெயிலில போடுவாங்கள்"

"சும்மா வாடா.. கம்ப்ளைன்ட் கொடுக்கத்தானே போறோம். அது இல்லாம புது ஐ.சிக்கு அப்ளை பண்ண ஏலாது"

அதுநாள் வரை கல்கிசை போலிஸ் ஸ்டேஷன் எங்கேயிருக்கிறது என்று தெரிந்திருக்காத என்னை கண்ணன் அழைத்துச்சென்றான். போலிஸ் ஸ்டேஷன் நான் நினைத்ததை போலல்லாது விநோதமாக அமைதியாக இருந்தது. ஆனாலும் எனது காலில் நடுக்கம் குறையவில்லை. போலிஸ் கம்ப்ளைன்ட் கொடுப்பதற்காக வரிசையில் காத்திருந்தோம். அப்போது பார்த்து கண்ணன் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியை கேட்டான்

"டேய்! எல்லா இடமும் சரியா தேடி பார்த்திட்டியா? முதுகில இருக்கிற BAGஇல தேடி பார்த்திட்டியோ" என்று சும்மா சாதாரணமாகத்தான் கேட்டான்.

ஒரு துளி நம்பிக்கையுடன் BAGஇல் தேடினேன். முதலில் கிடைக்கவில்லை. எல்லா இடமும் தேடினேன். A/L டியூசன் கார்டை வைக்கும் வழமையான இடத்தில் "ஐ.சி" வெளிப்பட்டது. எனது கண்ணை என்னாலேயே நம்பமுடியவில்லை. இதற்கு முதல் நாள்தான் "ஐ.சியை" போட்டோகொப்பி எடுத்துவிட்டு எனது பேர்சில் வைப்பதற்கு பதிலாக BAGஇல் வைத்தது ஞாபகத்துக்கு வந்தது. கண்ணனின் முகத்தை பார்த்து சிரிக்க முயன்றேன். அவன் என்னை கொன்றுவிடுவது போல பார்த்தான். "வாடா போவோம்" என்று மெதுவாக காதில் சொல்லி விட்டு விருக்கென்று வெளியேறி விட்டான். ஐ.சி கிடைத்த சந்தோசத்தில் வெளியே வந்தேன்.

கண்ணன் வேகமாக நடந்து போய் கொண்டிருந்தான்.

************************************************************!!!


இந்த கதையெல்லாம் நடந்தது, கிட்டத்தட்ட பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்னரான காலப்பகுதியில். ஆனால் இன்று ஐ.சி என்ற வஸ்துவின் மரியாதை கிட்டத்தட்ட பூஜ்யம். நேற்று காலை ஒரு இலங்கையின் குடிமகனுக்குரிய கடமையை ஆற்றவேண்டிய ஒரே காரணத்துக்காக ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிக்க வாக்களிப்பு நிலையத்துக்கு சென்றேன். அங்கிருந்த அதிகாரியிடம் வாக்களிப்பு அட்டையை ஸ்டைலாக கொடுத்தேன். "உங்கட அடையாளத்தை நிரூபிக்க ஐ.சி இருக்கா" என்றார். எனது வாழ்வில் மறுபடியும் ஐ.சி முக்கியத்துவம் பெறக்கூடிய தருணம். இருக்குமோ.... இல்லையோ... என்ற சந்தேகத்துடன் பேர்சை துழாவினேன். பேர்சின் ஒரு ரகசிய உள் பொக்கட்டில் காமாசோமாவேன்று ஐ.சி பரிதாபமாக எட்டிப்பார்த்தது.

Wednesday, January 15, 2014

155 ஏறுங்கய்யா! ஏறுங்கம்மா!

155இன் மானசீக தோற்றம்
நீங்கள் எப்போதாவது 155 பஸ்ஸில் சாவகாசமாக பயணித்திருக்கிறீர்களா? நீங்கள் கொழும்புக்கு ஒருமுறை வந்திருந்தாலே போதும், 155 என்பது ஒரு பஸ்சின் இலக்கம் என்பது தெரிந்திருக்கும். ஆனாலும் ஏனைய பஸ் எண்களைகாட்டிலும், கூடிய பிரசித்தமானது. பலர் அந்த பஸ்ஸில் போவதையே தவிர்க்க எண்ணுவார்கள். ஆனாலும் அந்த பஸ் கொழும்பில் பிரபலம். ஏனென்றால் அது அவ்வளவு ஸ்லோவா போகும். ஒவ்வொரு பஸ் நிறுத்தத்திலும் ஐந்து நிமிஷம் நிக்கும். கண்டக்டர் பயல் "பம்பலபிடிய, கம்பஸ், அஸ்வாட்டுவா, மட்டக்குளிய" என்று காது கிழிய கத்துவான். சில பேர் பஸ்ஸை எடுக்கமுன், இறங்கி டீ குடிச்சிட்டும் வந்திடுவான்கள். நான் கொழும்புக்கு வந்த தொடக்க காலங்களில் அப்பா "ஐடேன்ட்டி கார்டை மறக்காம எடுத்திட்டு போ" என்ற அட்வைசுடன் "டேய் நீ நடந்து போனாலும் போ.. தப்பித்தவறிக்கூட 155 பஸ்ஸில் ஏறிடாத.. ஸ்கூல் முடிஞ்ச பிறகுதான் போய் சேருவே" என்று எச்சரிக்கை விடுப்பார். ஆனாலும் சில நாட்களில் தவறுதலாக ஏறி நத்தை மேல் பயணம் செய்ததை போன்ற சுகானுபவத்தை பெற்றேன். A/L படிக்கும்போது, வர்ணம் சேர் physics வகுப்பின்போது பாடம் தவிர்ந்த கதைகள் அவ்வளவா கதைக்கமாட்டார். அந்த மனுசனே ஒருமுறை "155தான் குடுக்கிற காசுக்கு worthஆன பஸ். கொஞ்ச காசுக்கே கனநேரம் உங்களை வைத்துக்கொண்டு கொழும்பை சுற்றி காட்டுவார்கள்" என்றார்.

எனது கொழும்பு பாடசாலை காலங்களில், யாழ்பாணத்தில இருந்து ஒரு நண்பன் எங்களது கொழும்பு பாடசாலையில் சேர்ந்தான். அவன் எல்லா வேலையையும் கொஞ்சம் ஸ்லோவாக செய்வான். அவனுடைய யாழ்ப்பாண பாடசாலையில் அவனுடைய பட்டப்பெயர் "ஆமை". ஆனால் அந்த பெயர் கொழும்பு சூழலுக்கு அவ்வளவு ஏற்றதாக இருக்கவில்லை. எல்லோரும் கூடிப்பேசி அவனுக்கு வைத்த பெயர் "நூற்றிஅம்பதைந்து". சில பரீட்சைகளில், அவன் நேரம் முடிந்தபின்னரும் எழுதிக்கொண்டிருப்பான். "ஏய் நூற்றிஅம்பதைந்து! நேரம் முடிஞ்சிட்டுது. பேப்பரை தா!" என்று வகுப்பாசிரியரே கேலி செய்யும் அளவுக்கு பிரபலமான பட்டப்பெயராக விளங்கியது. கொழும்பில் இருக்கும் ஒவ்வொரு நண்பர் கூட்டத்திலும் ஒரு "நூற்றிஅம்பதைந்து" நிச்சயம் இருப்பான். அவரவர் கதைக்கும் மொழிகேற்றவாறு 155 "வண் டபுள் பைவ்" ஆகவோ "எக்க சீய பணஸ் பகாய்" ஆகவோ இருக்கலாம்.

இஸ்ஷரா யண்ண மள்ளி!
ஆனாலும் 155 போகக்கூடிய பாதையில் வேலைக்கு போகிறவர்கள், சற்றும் மனம் தளராமல் ஒவ்வொரு நாளும் நூற்றுஅம்பதைந்தில் பயணிப்பதை கண்டிருக்கிறேன். பஸ் நிறுத்தத்தில் எனது பஸ்ஸுக்காக காத்திருக்கும்போது நூற்றுஅம்பதைத்தில் பயணம் செய்பவர்களை கூர்ந்து அவதானிப்பேன். அவர்கள் முகத்தில் துறவிகளின் முகத்தில் காணப்படுவது போன்ற ஒருவித சாந்தமும் அமைதியும் இருக்கும். ஏனைய பஸ்களில் பயணிகள் எப்போது தங்களது இடம் வரும் என்று பொறுமையிழந்து நகத்தை கடித்துக்கொண்டிருக்கும்போது, நூற்றிஅம்பதைந்தில் போகும் பயணிகளால் மட்டும் எப்படி இப்படி முடிகிறது என்று எண்ணிவியப்பேன். எங்களது நண்பர் கூட்டத்தில் யாராவது ஒருவர் தப்பிதவறி அதில் ஏறினால் அவனை கலாய்த்து தள்ளுவோம். நூற்றிஅம்பதைந்தில் போவதை ஒரு அவமானமாகவே கருதினேன். கொழும்புக்கு வந்த பத்து வருடங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் பயணித்திருந்தேன். அவ்வாறு பஸ்ஸில் போகும்போது வேறு நண்பர்கள் பார்த்துவிடுவார்களோ என்ற பயம் மனம் முழுக்க வியாபித்திருக்கும்.

ஆனாலும் நூற்றிஅம்பதைந்தினை தங்களுக்கு ஆதாயமாக பாவித்தவர்களும் உண்டு. A/L நேரத்தில சிவா வெள்ளவத்தையில் டியுஷன் கிளாஸ் முடிந்ததும், நூற்றிஅம்பத்தைந்தில ஸ்டைலா ஓடிப்போய் ஏறுவான். "ஏண்டா நீ வெள்ளவத்தையில் இருந்து கொண்டு ஏண்டா மட்டகுளிக்கு ஒவ்வோரு நாளும் போறே?" என்று கேட்டுவைத்தேன். "நான் சுவேதாவை லவ் பண்றன்டா. மட்டக்குளி பஸ்ஸில ஏறினா அவளை பார்க்கலாம்" என்றான்.
"என்னடா அதுக்கு போய் அந்த மானங்கெட்ட பஸ்ல ஏறத்தான் வேணுமா" என்றேன். "இவன் யாருடா புரியாத ஆளா இருக்கான். அவள் மட்டக்குளியவில் இருந்து வாறது எனக்கு எவ்வளவு அதிஷ்டம் தெரியுமா.. இந்த ஒரு பஸ்ஸில் ஏறினால் குறைஞ்சது 2 மணித்தியாலமாவது சைட் அடிக்கலாம். வேற எந்த பஸ்ல இப்படி ஒரு சௌகரியம் கிடைக்குமா. நீயும் மட்டக்குளி ஷ்யாமாவை சைட் அடி.. நூற்றிஅம்பதைந்து ஒரு சொர்க்கம் என்றது தெரியும்" என்றான். இப்படி ஒரு பட்டாளம் 155இலே காதல் வளர்த்து இன்பம் கண்டது.

நூற்றுஅம்பதைந்து எனது வாழ்க்கை என்னும் பயணத்தில் மறுபடியும் குறுக்கிடும் என்று நான் கனவில்கூட நினைத்துப்பார்க்கவில்லை. நானும் கடந்த நான்கைந்து வருடங்களாக மத்தியானச்சாப்பாடு கட்டிக்கொண்டு "அம்மா! நான் போயிட்டு வாரேன்" என்று சொல்லிக்கொண்டு என்னுடைய ஆபீஸுக்கு போய் வந்தேன். எனது ஆபீஸ் 100 பஸ் ரூட்டில் இருந்ததால் நூற்றிஅம்பதைந்தினை பற்றி எண்ணிப்பார்க்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஒருநாள், பக்கத்தில் இருக்கிற பயல் ஆபீஸ் புது இடத்துக்கு மாறப்போகுது என்றான். மனதில் கொஞ்சம் ஆர்வம் மேலிட்டது. ஐந்து பேர் சேர்ந்து Google Mapஇல் புது இடத்தை ஆராய்ந்தோம். அந்த இடத்துக்கு போவதற்கு தேவையான பஸ் ரூட் பற்றிய ஆலோசனை தொடங்கியது. ஒருத்தன் "ட்ரெய்னில் பெட்டாவுக்கு போய் 120 பஸ் எடு" என்றான். இன்னொருத்தன் "ட்ரெய்னில் மருதானைக்கு போய் பதினைஞ்சு நிமிஷம் நடந்தா இடம் வரும்" என்றான். ஒருத்தனுக்கும் நேரடியாக போகவல்ல சரியான பஸ் ரூட் தெரியவில்லை. அப்போது உள்ளே எங்கட Technical Lead (Tech. Lead) பற்றி ஞாபகம் வந்தது. மனுஷனுக்கு கொழும்பு பத்தி அக்குவேறு ஆணிவேறா தெரியும். அவரிடம் ஒரு கேள்வி கேட்டு அவருக்கு பதில் தெரியாவிட்டால் அந்த கேள்வியை அடுத்ததா ஆண்டவனிடம்தான் கேக்கணும் என்பான் நீலன். ஆகவே அவரிடம் பஸ் ரூட் பற்றி விசாரித்தேன். "நீ தெஹிவளையிலிருந்து இருக்கிற.. ஆகவே நீ நூற்றிஅம்பதைந்துதான் எடுத்து புது இடத்துக்கு போகணும்" என்றார். கொஞ்சம் தலையை சுற்றியது. யாரோ என்னை பார்த்து தொடர்ந்து சிரிப்பது போன்றதொரு வினோத உணர்வு ஏற்பட்டது.

இது ஏதோ ஆண்டவனின் புது சோதனை என்று நினைத்துக்கொண்டேன். நூற்றிஅம்பதைந்தில் ஏறவே கூடாது என்று மனதில் சபதம் மேற்கொண்டேன். புதிய இடத்தில் ஆபீஸ் ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளில் ட்ரெய்னில் நாற்பது நிமிட பயணத்தின் பின்னர் ஒரு மேம்பாலம் ஏறி கடந்து Google Mapஇன் உதவியுடன் காலை வெயிலில் வியர்வை வழிய பதினைந்து நிமிட நடையில் ஆபீஸ் போய் சேர்ந்தேன். இப்படியே பத்து நாள் போய்வந்தேன்.  காலையில் ஒவ்வொரு நாளும் முட்டை சாப்பிட வேண்டியிருந்தது. அந்த பத்து நாட்களிலேயே எனது எடை 5 கிலோவால் குறைந்தது. போதாக்குறைக்கு ஆபீஸ்ஸுக்கு லேட்டா போய் yellow card வாங்கினேன்.
இது சாம்பிள்தான் 155 கிடையாது :)

இப்படியே நாட்கள் எனது வைராக்கியத்துடன் கழிந்தன. ஒருநாள் வெளியே சென்றிருந்த சமயம். எனக்கு தெரிஞ்ச அங்கிள் ஒருவர் என்னை பார்த்து அடையாளம் கண்டுபிடிக்க கொஞ்சம் சிரமப்பட்டார். "என்ன அங்கிள்! நீங்களும் மறதி பேராசிரியர் வேலைக்கு சேர்ந்திட்டீங்களா" என்றேன். "இல்லைடா, நீ கொஞ்சம் கறுத்து ஒல்லியா போயிருக்கியா.. அதான் கண்டுபிடிக்க கொஞ்சம் நேரமாச்சுது.. என்ன ஆபீஸ்ல வேலை கூடவா" என்றார். "நான் கறுத்து போயிருக்கேன்" என்ற செய்தி என்னவோ செய்தது. இதற்கு மேலும் கறுக்க முடியாது என்று இதுநாள்வரை நினைத்திருந்த எனக்கு பெரிய அடிதான். எல்லாம் வெயிலில் தினமும் நடக்கும் 15 நிமிஷ நடைதான் காரணம் என்று மனதில் கருவிக்கொண்டேன். "என்ன செய்றது.. ஆபீஸ்சை வேற இடத்துக்கு மாத்திட்டாங்க. அந்த ஸ்லோ பஸ் நூற்றி அம்பதைந்தில மட்டும்தான் போகமுடியும். ஆனா ட்ரெய்னில போய் 15 நிமிஷம் வெயிலில நடக்கணும்" என்று எனது சோகக்கதையை சொன்னேன். "அந்த இடத்திலயா புது ஆபீஸ் இருக்குது. உனக்கு 155 மட்டும்தான் சரிவரும். என்ன செய்றது அந்த பஸ்காரன் பின்னுக்கு பார்த்துத்தானே ஓட்டுறான்.. ஆனா வேற வழியில்லையே" என்றார். இப்படி பலபேர் எனது மாறிவருகிற நிறத்தை பற்றி வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சொன்னார்கள். "மச்சான்! இப்படியே போனால் நீ புதுசா ஐடென்டி கார்ட் எடுக்கணும். வர வர உன்ட முகம் மாறி வருதுடா" என்று வயிற்றில் புளியை கரைத்தான் நீலன். ஆபீஸ்ஸில் பெண்கள் யாராவது சிரித்தாலும் என்னை பார்த்து சிரிப்பது போன்ற பிரமை ஏற்பட்டது. இதைப்பற்றி இரண்டு நாள் நித்திரையில்லாமல் யோசித்ததில் எனது மானத்தை விடவும் எனது தோலின் நிறத்தை பேணுவது அவசியம் என்று தோன்றியது.

இப்பொழுதெல்லாம் சரியாக காலை எட்டரை மணிக்கு நூற்றி அம்பதைந்தில் ஏறுகிறேன். எனது நடையில் இருக்கும் பரபரப்பு இப்போது இல்லை. முகத்தில் ஒரு மகானுக்குரிய அமைதி இருக்கிறது. பஸ்ஸில் ஏறி ஒரு மூலையில் இடம் தேடுகிறேன். இடம் கிடைக்காவிட்டாலும் எந்தவித ஏமாற்றமும் இல்லை. கண்டக்டர் இரண்டு ரூபா மிச்சம் தராவிட்டாலும் திருப்பி கேட்கமாட்டேன். கிடைக்கும் சீட்டில் அமைதியாக இருந்து பெரிய பெரிய புத்தகங்களாக கொண்டு போய் படிக்கிறேன். என்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனிப்பதில்லை. பஸ் எப்போது போய் சேருமோ என்ற படபடப்பு இல்லை. எப்போது கொண்டு விடுகிறானோ. அப்போது இறங்கிக்கொள்கிறேன். எவ்வளவு லேட்டானாலும் என் முகத்தில் அதே புன்முறுவல்தான். நீங்கள் ஏதாவது ஒரு நூற்றிஅம்பதைந்து பஸ்ஸில் என்னை காணமுடியும். அப்போது ஒரு மூலையில் ஒரு புத்தகத்தை திறந்து வைத்துக்கொண்டு இருப்பேன். வந்தீர்கள் என்றால் ஒரு மணித்தியாலத்துக்கு குறையாமல் ஆறுதலாக கதைக்க வாய்ப்பு கிடைக்கும் என்பது உறுதி.




155 பஸ்ஸில் ஏறி அவஸ்தை படும் ஆன்மாக்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்


**நான் இந்த பதிவை எழுதுவதற்கான ஐடியாவை 155ல் பயணிக்கும்போதே யோசித்தேன். உங்களுக்கும் சிந்தனை வறட்சி ஏற்பட்டால் 155க்கு வாங்கோ, சேர்ந்து யோசிக்கலாம்.

Friday, June 7, 2013

ஆல்பியின் கல்யாணம்

அல்பிரடோவை எனக்கு இருபது நாளாகத்தான் தெரியும். நான் புதிதாக வேலைக்கு சேர்ந்த கம்பனியில் அவன் System admin. அதாவது எங்களுக்கு வரும் network சம்பந்தமான பிரச்சனைகளை தீர்த்து வைப்பதுதான் அவனது தலையாய கடமை. அவனை மெக்ஸிகோக்காரன் என்றுதான் எங்களுக்கு தெரியும். ஐம்பது வயதானாலும் முப்பத்தைந்து வயது ஆண்மகன் போன்ற ஒரு மிடுக்கான தோற்றம் இருக்கும். Officeக்கு smartஆக வருபவர்களில் இவனும் ஒருவன். அவனை "ஆல்பி" என்று செல்லப்பெயர் வைத்து
கூப்பிட்டால் சந்தோசப்படுவான். ஆகவே நாங்களும் அப்படியே கூப்பிடுவோம். எவ்வளவு கஷ்டமான பிரச்சனை என்றாலும் நிதானமாக செயல்படுவான். ஒவ்வொரு நாளும், அவன் வேலை முடிந்தது வெளியேறும்போது நேரத்தை பார்த்தால் சரியாக மணி ஆறு என்று
காட்டும். ஆனாலும் ஆறு மணிக்கு.பத்து நிமிடங்களுக்கு முன்னதாக யார் என்ன வேலை கொடுத்தாலும் ஒன்றும் சொல்லாமல் பொறுப்பேற்பான். ஆனால் மாலை ஆறு மணியானால் வைத்ததை வைத்துவிட்டு டாண் என்று வெளியேறி விடுவான். இப்படித்தான் ஒரு முறை IT manager ஏதோ
ஒரு முக்கியமான விஷயத்தை கொடுத்துவிட்டு Washroom போய் வருகிற gapஇல் ஆல்பிரடோ ஆறு மணிக்கு escape ஆகி விட்டான். IT Manager தாம் தூம் என்று குதிக்க அடுத்த நாள் நாங்கள் எல்லோரும் அந்நிகழ்வை பற்றி chat செய்து விவாதித்தோம். மதிய உணவு இடைவேளையின்போது தாராம் சிங் IT Manager முதல் நாள் கோபத்தில் கத்தியது போன்று நடித்துகாட்டினான். அல்பிரடோ அதை கண்டு கொள்ளவில்லை. தாராம் சிங் அல்பிரடோவுடன் எப்போதும் எதாவது ஒரு விசயத்துக்காக கொளுவிக்கொண்டிருப்பான். இவர்கள் இரண்டு பேர்களிடையே எப்போதும் எதாவது ஒரு சப்பை விசயத்துக்காக விவாதம் நடக்கும். "இந்த மெக்ஸிகோக்காரர்கள் எல்லாம் இப்படித்தான்.. இங்கிதம் தெரியாத பயல்கள்" என்று தாராம் சிங் ஸ்டைலான ஆங்கிலத்தில் முடிவுரை வழங்குவான். இதனை தமிழில் சொல்லும்போது ஒரு மாதிரியா இருந்தாலும் தாராம் சிங்கின் ஆங்கில உச்சரிப்பு அதன் அர்த்தத்தின் காரத்தை குறைத்து விடும்.

அலுவலகத்தில் மதிய உணவு இடைவேளையின் பின்னர் கொஞ்ச நேரம் Table tennis விளையாடுவோம். IT Manager ஏதாவது ஒரு மீட்டிங்க்கு போய் விட்டால் இன்னும் ஒரு மணி நேரம் கூடுதலாக விளையாடுவோம். தாராம் சிங் எப்போதும் அல்பிரடோவுடன் மோதுவான். தாராம் சிங்க்கு எனது வயதுதான் இருக்கும். சும்மா வளைந்து வளைந்து விளையாடுவான். ஆல்பி மூச்சிரைக்க கஷ்டப்பட்டு ஓடியாடி விளையாடுவான். தாராம் சிங் வென்று விட்டால் வெற்றியில் ஐந்து நிமிடமாவது கொக்கரிப்பான். அதனை தடுக்கும் ஒரே நோக்கத்திற்காகவே அல்பிரடோ உயிரை கொடுத்து விளையாடுவான். ஆனாலும் அவன் ஒரு முறையும் வென்றதாக சரித்திரம் இல்லை. இரண்டு மூன்று மேட்ச் தோற்ற பின்னர்தான் அப்பிராணியான என்னுடன் விளையாட வருவான் அல்பிரடோ. என்னுடன் விளையாடி வெற்றி பெற்று மனதை தேற்றிக்கொள்வான்.
வேலை நேரத்துக்கு முடியும் நாட்களில் என்னை காரில் ஏற்றி சென்று ரயில் நிலையத்தில் விட்டு விடுவான். அவனால் எனது கட்டாய அரை மணி நேர நடைபயிற்சியிலிருந்து தப்பித்துக்கொள்வேன். அவ்வாறான நாட்களில் அவனுடன் உரையாட வாய்ப்பு கிடைக்கும். "நீங்க எப்ப மெக்ஸிகோவிலிருந்து வந்தீங்க" என்று ஆரம்பித்தேன். "என்னுடைய சொந்த நாடு பொலிவியா.. இந்த அவுஸ்திரேலியர்களுக்கு பொலிவியா என்றோதொரு நாடு உலக Mapஇல் இருப்பதே தெரியவில்லை.. ஆகவே பக்கத்தில் இருந்த மெக்ஸிகோவை எனது நாடு என்றேன். எல்லோருக்கும் விளங்குது" என்றான். இப்படி கதைத்துக்கொண்டே காரில் போகும்போது பின்னால் வந்த கறுப்பு கார் எங்கள் காருக்கு அண்மையாக overtake செய்து கொண்டு போனது. பத்து சென்டிமீட்டர் தூரம்தான் இருந்திருக்கும். "இப்படியே போ உனக்கு நரகம்தான் கிடைக்கும்" என்று கூவினான் ஆல்பி. அதோடு சேர்த்து, இரண்டு மூன்று ஸ்பானிஷ் கெட்ட வார்த்தை சொன்னான். நல்லவேளை எனக்கு ஸ்பானிஷ் தெரியாது. இங்கு மொழிபெயர்க்க வேண்டியதில்லை. அவனது முகம் கோபத்தில் சிவந்திருந்தது.

"இந்த பயல்களுக்கு ஒரு பாடம் கற்பிக்காமல் விடப்போவதில்லை" என்றான். அந்த கறுப்பு காரின் பின்னால் விரட்டி கொண்டு போனான். வேகம் என்றால் பயங்கர வேகம். எனக்கு குடல் தொண்டையில் தட்டுபடுவது போல உணர்ந்தேன். நான் இறங்க வேண்டிய ரயில் நிலையம் தாண்டி கார் சீறிக்கொண்டு போவதை பார்த்து முழித்துக்கொண்டிருந்தேன். என்னுடைய இடம் வந்து விட்டது. என்பதை சொல்லுவமோ என்று யோசித்து அவனது சிவப்பேறிய முகத்தை பார்த்ததுமே ஒரு வார்த்தை வரவில்லை. பத்து நிமிஷ வெறி பிடித்த ஓட்டத்தின் பின்னர் அந்த கறுப்பு காரை நெருங்கினோம். கண்ணாடியை திறந்து நடுவிரலை உயர்த்தியவாறு அந்த காரை overtake செய்தான். அதன்பின்னர்தான் அவனது தலைக்கேறிய இரத்தம் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற பாகங்களுக்கு சென்றடைய முகத்தில் கடுமை தன்மை
குறைந்தது. "எப்படி துரத்தி பிடிச்சேன்.. பார்த்தாயா" என்றான். நான் திரு திருவென்று முழிப்பதை அப்போதுதான் கவனித்திருந்தான்.

"அடடா.. ரயில் station தாண்டிடுச்சே" என்றான். அப்போதுதான் அவனது கோபத்தினால் எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை அவதானித்திருந்தான். திடீரென்று சிரித்துக்கொண்டே "நான் எப்பவுமே இப்படித்தான், என்னை ஒருவரும் கார் ஓடுவதில் மிஞ்சி விட முடியாது." என்றான். "இல்லை பரவாயில்லை என்னை அடுத்த ரயில் நிலையத்தில் இறக்கி விட்டால் பரவாயில்லை" என்றேன் எச்சிலை விழுங்கிக்கொண்டே. "எனக்கு கொஞ்சம் கூட கோபம் வரும். அவுஸ்திரேலியாவுக்கு வரும்முன்னர் பொலிவியா இராணுவத்தில் இரண்டு வருஷம் இருந்திருக்கேன். அப்போதெல்லாம் எடுத்ததேற்கெல்லாம் கோபம் வரும். இப்ப எவ்வளவோ better" என்றான். ஒருவாறாக அடுத்த ரயில் நிலையத்தில் இறக்கி விட்டபின்னர்தான் எனக்கு நிம்மதி வந்தது. அவனுக்கு நன்றி சொல்லியபோது எனக்கே நான் சொன்னது காதில் எதுவும் விழவில்லை.

இப்படியே சில நாட்கள் கடந்தது. ஒரு நாள் மத்தியானம் சாப்பிட சூரிய வெளிச்சத்தில் அமர்ந்திருந்தோம். வசந்த காலம் அப்போதுதான் தொடங்கியிருந்தது. இவ்வளவு காலம் இருந்த கடுமையான குளிரினால் வெளியே செல்வதை தவிர்த்தோம். வசந்த காலத்தொடக்கத்தில் இதமான சூரிய ஒளியில் உணவருந்தினோம். தாராம் சிங் அன்று  காலைதான் IT Managerஉடன் கடுமையாக ஒரு deadline சம்பந்தமாக சண்டை போட்டுக்கொண்டிருந்தான். அதனால் Lunch Timeஇல் கூட சிரத்தையாக வேலை செய்வது போல பாவனை செய்து கொண்டிருந்தான். ஆகவே அவன் எங்களுடன் உணவருந்த வரவில்லை. சைனாக்காரன் "சான் லீ" அன்று லீவு. ஆகவே அன்று நானும் ஆல்பியும் மாத்திரமே அன்றைய Lunch இல் ஆஜர். தாராம் சிங்கின் அறுவை காரணமாக வாயை திறக்காத ஆல்பி அன்று மட்டும் கொஞ்சம் சகஜமாக கதைத்தான்.

"இராணுவத்திலிருந்து விலகிய பின்னர் பொலிவியாவுக்கு திரும்பி போயிருக்கிறீங்களா"

"ம்ம்.. அதுக்கு பன்னிரெண்டு வருசமாச்சு.. ட்ரெயினில் போய் இறங்கினப்போ ஊரே என்னை பார்க்க வந்திச்சு"

"அண்ணை ஊருக்குள்ள செல்வாக்கான ஆசாமி போலும்" என்று சிரித்தேன்.

"இல்லை. எனக்கே ஆச்சர்யமாத்தான் இருந்திச்சு.. அண்ணாதான் சொன்னான்.. எனக்கு அம்மா கல்யாண ஏற்பாடு செஞ்சிருந்தா என்று"

"மகிழ்ச்சியான விசயம்தானே.. உனக்கு அதிர்ஷ்டம்தான் போ" என்றேன். அவனின் முகத்தில் சலனமில்லை. எனது முகத்தை உற்று நோக்கினான்.

"பன்னிரெண்டு வருஷம் கழிச்சு எல்லோரையும் பார்க்க போறேன். யாரோ ஒரு பொண்ணை காட்டுறாங்க. இதுவரை பார்க்காத ஒரு புதுபெண்ணு. அடுத்த நாள் என்னோட மனைவி. என்னால் எச்சிலை கூட விழுங்கமுடியவில்லை"

"கொஞ்சம் அதிர்ச்சியான விசயம்தான். பிறகு என்ன நடந்திச்சு" என்றேன் ஆர்வமாக.

"அப்பா இல்லாத எங்களை அம்மாதான் கஷ்டப்பட்டு வளர்த்தா.. அப்போது அது ஞாபகத்துக்கு வரலை.. அன்றைக்கு அவளை கடுஞ்சொற்களால் திட்டினேன். அண்ணா பிடித்திராவிட்டால் அவளை அடிச்சிருப்பேன். அம்மா எனக்கு செஞ்ச காரியத்துக்கு இன்னும் அவளை

மன்னிக்கவில்லை" என்றான். அவன் கண்களில் முட்டிய கண்ணீரால் கண்கள் வசந்த கால சூரிய ஒளியில் ஒளிர்ந்தது. "எல்லோரும் என்னிடம் கதைத்தார்கள். அண்ணா என்னை சமாதானப்படுத்தினான்.. என்னோட நிலைமையை வனேஸ்ஸாவுக்கு தனியாக சந்தித்து விளக்க முயற்சித்தேன். இந்த கல்யாணத்தை மிகவும் எதிர்பார்த்திருந்ததாக வனேஸ்ஸா சொன்னா. மற்றவங்க மனசை புண்படுத்த என்னால முடியலை"

"வனேஸ்ஸா சொன்னவுடனே ஹீரோ ஒத்துக்கொண்டிருக்காரு போல" என்றேன் சிரித்தவாறு.

"இல்லை. இது இப்ப சாதாரண விசயமா இருந்தாலும் அப்போது என்னை வாட்டியேடுத்தது. அதை பற்றி நினைத்தாலே இப்போது கூட நெஞ்சில் இடது பக்கத்துக்கு கீழே ஒரு வலி வரும்" நெஞ்சை மெதுவாக அழுத்தினான். இப்போதுகூட வலி வந்திருக்க வேண்டும்.

நான் கேள்விகள் கேட்பதை நிறுத்திவிட்டு மௌனமாக அவனை பார்த்துக்கொண்டிருந்தேன்.

"ஏய் நண்பா! என்ர சோகக்கதையை கேட்டு அழுதிறாத! தொடக்கத்தில் கஷ்டமாக இருந்தாலும் இப்ப உலகத்திலே மகிழ்ச்சியான couple நாங்கதான். விஸ்கி அடிச்சது மாதிரி மூஞ்சியை வச்சிருக்காத. வா ஒரு Drive போய் வருவோம். Dessert வாங்கித்தாறேன். செலவு என்னோடது" என்றான்.

Thursday, November 15, 2012

Yarl Geek Challenge: Final போட்டிகள்


இப்போட்டிகள் சம்பந்தமான முந்தைய இடுகைகள்

Yarl Geek Challenge: 1ம் நாள் போட்டிகள்

Yarl Geek Challenge: 2ம் நாள் போட்டிகள்

Yarl Geek Challenge: 3ம் நாள் போட்டிகள்
போட்டியாளர்கள், நடுவர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள்
கருமையான மேகங்கள் சூழ்ந்திருந்ததால் ஐந்தரை மணிக்கே நன்றாக இருட்டி விட்டிருந்தது. சுவாரசியமான மூன்றாம் நாள் ஒருவாறாக முடிவுக்கு வந்திருந்தது. எனினும் மூன்றாம் நாள் முடிவுகள் கொஞ்சம் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. இரண்டு அணிகள் மட்டுமே வெளியேற்றப்படும் என்று எதிர்பார்த்திருந்த பார்வையாளர்களுக்கு மூன்று அணிகள் வெளியேற்றப்பட்டமை கொஞ்சம் எதிர்பாராத முடிவாக இருந்தது. ஆனாலும் மறுநாள் finalஉடன் oppourtunity round நடைபெற இருப்பதால் அதற்கான ஆயத்தங்களை செய்ய வேண்டியிருந்ததால் அன்றைய முடிவுகளை பற்றி வெளியேறிய அணிகள் நிதானமாக யோசித்து கவலைப்பட சந்தர்ப்பம் கிடைக்காமல் போனது நன்மைக்கே. Algorithm round மற்றைய Roundகளில் இருந்தும் பெரிதும் மாறுப்பட்டிருந்தது. போட்டிகளிலே ஒரு புதுவித வேகம் இருந்தது.. போட்டியாளர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் காரம் அதிகமாகவே இருந்தது.. போட்டியாளர்களும் சளைக்காமல் பதிலளித்தனர்.. எப்போதுமே ஒருவித பதற்றம் போட்டி இடம்பெற்ற மேடையிலிருந்தது. நாங்களும் அன்றைய நாள் ஒருவித நிம்மதியுடன் வீடுகளுக்கு போனோம். அன்று காலைதான் Yarl Geek Challenge t-shirtகள் தனுஷனின் முயற்சிகளுக்கு பின்னர் கிடைத்திருந்தன. ஆகவே சந்தோசமாக நாளை புது t-shirtஉடன் போகலாம் என்ற சந்தோசம் எல்லாருடைய முகத்திலும் இருந்தது. நல்லவேளையாக புது t-shirt கிடைத்திருந்தது. ஏனென்றால் யாழ்பாணத்தில் அந்நேரத்தில் பெய்த தொடர்மழையால் நாங்கள் தோய்த்த உடுப்புகள் வெயிலில் காய்வதும், மறுபடி நனைவதுமாக இருந்தன. ஆகவே அடுத்த நாளைக்கு போட தோய்த்த உடுப்புகள் இல்லாமல் கஷ்டப்பட்ட எங்களுக்கு நிவாரணமாக t-shirt வந்து சேர்ந்தது.
Yarl Geek challenge T-Shirt அணிந்திருக்கும் model ஒருவர் :)

கடைசி நாளன்று பதினோரு மணிக்கு Oppourtunity round தொடங்குவதாக இருந்தது. ஒன்றரை மணிக்கு Product Strategy round. இந்த roundகளில் எல்லா அணியினரும் தங்களது projectஇன் எதிர்காலத்திட்டம் பற்றியும் அதற்காக ஏற்படும் செலவுகளை சமாளித்து அடுத்த கட்டத்துக்கு எவ்வாறு கொண்டுசெல்லவிருக்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். சுருக்கமாக சொன்னால் செய்த productஐ எப்படி கூவி கூவி விற்கப்போகிறார்கள் என்பதை எல்லோரும் நம்பும்விதமாக சொல்லவேண்டும். போட்டியாளர்கள் எவ்வாறு விளம்பரங்களை நுழைப்பதன்மூலம் பணத்தினை பெற்றுக்கொள்ளலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தார்கள். Projectஇன் தொடக்கத்தில் முதலாவது clientஐ பிடிப்பதற்கு முன்னதான காலங்களில் எவ்வாறு செலவுகளை சமாளிக்கபோகிறார்கள் என்ற கேள்விதான் மில்லியன் டொலர் கேள்வியாக இருந்தது. முழுக்க முழுக்க technical விசயங்களை மட்டுமே யோசித்து மண்டையை உடைத்துக்கொண்டிருந்த மாணவர்கள் business side பற்றி முதன்முறையாக கவலைப்படத்தொடங்கினார்கள். எல்லோரும் பெரியளவில் tension இல்லாமல் இருக்கிற business ideaக்களையும் presentationக்குள் பொறுத்த முயற்சித்தார்கள்.
நடுவர்கள் குழாம்

ரமேஸ் அண்ணா நடுவர்களுக்கு இந்த roundகளில் போட்டியாளர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் விசயங்களை பற்றி விளக்கினார். பதினோரு மணிக்கு opportunity round ஆரம்பமானது. இதில் முன்னைய நாட்களில் போட்டிகளிருந்து வெளியேறிய ஐந்து அணிகள் கலந்து கொண்டன. IFish அணியினர் மீன்பிடி சாமாசத்துடன் இணைந்து இதனை develop செய்யவிருப்பதாக கூறினார்கள். productஇன் business modelஐ canvas modelஇல் போட்டுக்காட்டி அசத்தினார்கள். ஆனாலும் இந்த projectஇன் அடுத்த கட்டம் என்ன என்பதை சரியாக விளக்கவில்லை. Smart Friends அணியினர் Ceylon Electricity boardஇற்கு prototype ஒன்றை develop பண்ணிக்காட்டி funding எடுக்கப்போகிறோம் என்றார்கள். ஆனாலும் இவர்களின் திட்டங்களில் உள்ள சாத்தியத்தன்மை பற்றி judgesஇற்கு இருந்த சந்தேகங்களை களைய தவறினர். Crazy Coders அணியினர் தங்களது projectஐ தொடங்குவதற்காக ஏற்படும் செலவுகளை பட்டியலிட்டு அதன் சாத்தியத்தினை தெளிவுபடுத்தினர். இவர்களது patient management systemஇனை தொடக்கத்தில் ஒரு வைத்தியசாலையுடன் இணைப்பதாகவும் பின்னர் ஒவ்வொரு வைத்தியசாலையாக இத்திட்டத்தில் இணைக்கவிருப்பதாக கூறினார்கள். Yarl Eagles அணியினர் Tourist Guide applicationஇல் ஹோட்டல், resthouse போன்றவற்றின் விளம்பரங்களை இணைக்கமுடியும் என்றார்கள். அதிகம் பணம் தரும் companyகளின் பெயர்கள் பாவனையாளர்களுக்கு காட்டப்படும் search resultsஇல் முன்னணி வகிக்கும் என்றார்கள். ஆனாலும், பணத்தை வாங்கிக்கொண்டு பாவனையாளர்களுக்கு தவறான தகவல்கள் போகலாம் என்ற கேள்விகளை judges கேட்டு மடக்கினர். Phoenix அணியினர் ஒரு research projectஐ ஒரு commercial product ஆக எவ்வாறு மாற்றலாம் என்று தெளிவுபடுத்தினர்.

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு Final roundஆன  Product strategy round தொடங்குவதாக இருந்தது. இதில் Zeros, Arimaa, Cybers போன்ற அணிகள் போட்டிக்கான  கடைசி நேர ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தன. Oppourtunity roundஇல் மற்ற அணிகளுக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஏற்றவாறு தங்களது presentationகளை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். எல்லோருக்கும் இந்த கடைசி முயற்சியில் எப்படியாவது ஜெயிக்கவேண்டும் என்ற எண்ணம் கண்களில் தெரிந்தது. Cybers அணியினர் அவர்களது system மூலமாக response ஆக அனுப்பப்படும் SMSஇல் விளம்பரங்களை இணைப்பதன்மூலம் காசு பார்க்கலாம் என்றார்கள். அரசாங்க அதிகாரிகளுக்கு இவர்களுடைய system தொடர்பான presentationஐ செய்து அவர்களை இந்த projectக்கு தேவையான நிதியை தயார் செய்யவிருப்பதாக கூறினார்கள். Arimaa அணியினர் தங்களது project சமூக நலனுக்காக செய்யப்பட்டாலும் project sustainabilityக்காக beneficiariesகளிடமிருந்து ஒரு சிறுதொகையை அறவிடலாம் என்றார்கள். எதிர்காலத்தில் அவர்களது systemஇனை சமூக நிறுவனங்களுக்கு ஏற்றவாறு customize செய்து விற்கலாம் என்றார்கள். கேள்வி-பதில் நேரம் வழமைபோலவே அணல் பறந்தது. அவர்களது பதில்கள் தெளிவாகவும் judges எதிர்பார்த்ததை போலவே இருந்ததாகவும் பட்டது. Zeros அணியினர் ஆடுபுலி ஆட்டத்தினை download செய்வதற்காக ஒரு சிறிய தொகையை பாவனையாளர்களிடம் அறவிடலாம் என்றார்கள். அதுமட்டுமல்லாது விளம்பரங்களை காட்டுவதன் மூலம் பணத்தினை பெற்றுகொள்ளவிருப்பதாக சொன்னார்கள். ஆனால் Offline modeஇல் எவ்வாறு விளம்பரங்களை mobile phoneக்கு அனுப்பிட முடியும் போன்ற கேள்விகளால் judges துளைத்தார்கள்.

போட்டியாளர்களின் presentationகள் முடிவடைந்தபின்னர் judges வழமைபோல மேடையைவிட்டு விலகி தனியிடத்தில் தங்களது அவதானிப்புகளை விவாதிக்கச்சென்றார்கள்.  போட்டிகளின் முடிவுகளை எதிர்பார்த்துக்கொண்டு போட்டியாளர்கள் ஒருவித பதற்றத்தில் அமைதியாக இருந்தனர். அவர்களின் இதயத்துடிப்புகளின் சத்தம் அவர்களின் மெல்லிய உரையாடல்களையும் தாண்டி ஒலித்தது. ஆண்டவனே! இப்படியே ஒரு மணித்தியாலத்தை எவ்வாறு கழிக்கப்போகிறோமோ என்று பயந்தேன். அதுக்கும் சயந்தன் சூப்பரான ஐடியா வைத்திருந்தார். அப்போதுதான் இப்போட்டி ஏற்பாட்டாளர்களை பேட்டியேடுத்து கலாய்க்கும் நிகழ்வை நடத்த சர்வேஸ் அண்ணா முன்னுக்கு வந்தார். அவர் முதலில் சயந்தனை அழைத்தார். பேட்டியின்போது சயந்தன் தனது வேலையை பற்றிக்கூறும்போது "ஏதாவது ஒரு புது project எடுக்கும் விசயமாக பெயர் கூட கேள்விப்படாத புதுநாட்டுக்கு பரிசோதனை எலி கணக்கா என்னை அனுப்பிடுவாங்க" என்று பெருமையாக கூறினார். சர்வேஸ் அண்ணா சயந்தனிடம் ஏதாவது கேள்விகள் கேட்கலாம் என்று கூறியிருந்தாலும் ஒருவரும் வாயை திறக்கவில்லை. அடுத்ததாக என்னை கூப்பிட்டார்கள். "நானும் சயந்தன் வேலை செய்யும் companyயில்தான் நாலு வருசமா குப்பை கொட்டுறேன்" என்று ஆரம்பித்தேன். "குப்பை கொட்டுறது என்றால் என்ன" என்றார் சர்வேஸ் அண்ணா. "நான் பொதுவாக உருப்படாத தெளிவில்லாத Codeதான் எழுதுவேன். அதாவது குப்பை code. அதை வினைசொல்லாக மாற்றினால் குப்பை codeறது என்று வரும்" என்றேன். அப்போது கூட்டத்தில் யாரோ "குப்பையை கிளறுறது என்றால் என்ன" என்றார்கள். "அதைத்தான் code review என்று மரியாதையாக சொல்லலாம்" என்று சொன்னபோது சிலர் சிரித்தார்கள். அதன்பின்னர் விஜயராதா தனது company பற்றியும் open source பற்றியும் ரொம்பவே சீரியசாக விளக்கமளித்தார். இப்படியே போய்கொண்டிருந்த நிகழ்வில் சர்வேஸ் அண்ணா "கடந்த இரண்டு மூன்று நாளாகவே Yarl IT Hubஇன் twitterஇல் அதிரி புதிரியாக tweetகள் வருவதை அவதானித்திருப்பீர்கள். அதனை செய்து கொண்டிருப்பவர்தான் துஷி" என்று துஷிக்கு அதிரடி அறிமுகம் வழங்கினார்.
அரிமா அணியினர் முடிவுக்காக காத்திருப்பு

ஒருவாறாக judges முக்கியமான முடிவுகளுடன் மேடையை நோக்கி நடைபோட்டனர். Final roundஇற்காக போட்டியிட்ட மூன்று அணிகளும் வைத்த கண் வாங்காமல் judgesஐ பார்த்துக்கொண்டிருந்தனர். போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டவேளையில் Cybers அணி இரண்டாம் இடத்தை பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. Arimaa அணியும், Zeros அணியும் பதற்றத்துடன் பார்த்துக்கொண்டிருக்க, Arimaa அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர்கள் முதல்பரிசாக 50000ரூபாவை பெற்றுக்கொண்டனர். Cybers அணியினர் 25000ரூபாவை பெற்றனர். Oppourtunity roundஇல் Crazy Coders அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது. நான்கு நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற போட்டிகள் இனிதே நிறைவேறின. நாங்கள் கொழும்புக்கு திரும்புவதற்கு இன்னும் ஒன்றரை மணித்தியாலங்களே இருந்ததால் வேக வேகமாக போட்டி நடந்த Hallஐ பழையபடிக்கு மாற்றினோம். போட்டியாளர்களுடன் கதைத்து பிரியாவிடை பெற்றோம். பஸ்ஸில் ஏறி இருந்தபோது எல்லோருடைய முகத்திலும் மகிழ்ச்சி கலந்த புன்னகை இருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. கீழே தரப்பட்ட படமே இதற்கு சான்று பகரும்.
மீண்டும் கொழும்பு நோக்கி போரடிக்கிற வேலைக்கு திரும்புகிறோம்

இந்த போட்டிகள் நடந்த நான்கு நாட்களும் வேறோரு உலகத்தில் சஞ்சரிப்பது போன்ற  உணர்வே இருந்தது. போட்டியாளர்கள் Software Engineering தொடர்பான பல்வேறு விடயங்கள் பற்றிய அறிவினை அனுபவத்தோடு பெற்றிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. அதுமட்டுமல்லாது எங்களுக்கும் Software companyகளில் computer screenஐ வெறித்துப்பார்த்துகொண்டு வேலை செய்யும் அனுபவங்களிலிருந்து Yarl Geek Challenge புதிதான அனுபவ பாடத்தை கற்றுத்தந்தது. அடுத்து வரும் வருடங்களில் எவ்வாறு இந்த போட்டியின் அமைப்பை மேலும் மேம்படுத்தலாம் என்று இப்போதே திட்டமிட தொடங்கிவிட்டார்கள். அடுத்தமுறை இப்போட்டிகளை நடத்த மிகப்பெரிய இடத்தை தேர்வு செய்யவேண்டுமென்பது உறுதி.

முற்றும்..

Sunday, November 11, 2012

Yarl Geek Challenge: 3ம் நாள் போட்டிகள்

இப்போட்டிகள் சம்பந்தமான முந்தைய இடுகைகள்

Yarl Geek Challenge: 1ம் நாள் போட்டிகள்

Yarl Geek Challenge: 2ம் நாள் போட்டிகள்



சயந்தனிடம் சுட்ட படம்
Yarl Geek Challengeஇன் இரண்டாம் நாள் முடிந்திருந்தது. இதுவரை நடைபெற்ற இரண்டு Roundகளும் நிறைய சந்தோசங்களையும் சிலருக்கும் ஏமாற்றத்தினை கொடுத்திருந்தாலும் இரண்டாம் நாள் முடிவில், போட்டியாளர்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அடுத்த நாளுக்குரிய ஆயத்தங்களை செய்வதிலேயே குறியாக இருந்தனர். அடுத்த நாள் Algorithm Round என்ற செய்தி எல்லோருக்கும் ஒருவித மிரட்சியை கொடுத்தது. எல்லா அணியினரும் தங்களது Mentorகளை சுற்றி வளைத்து முற்றுகையிட்டு அடுத்த Roundக்கு தேர்வு செய்ய வேண்டிய Algorithm பற்றி ஆராய்ந்தனர். Algorithm Round என்பது Mentorகளுக்கும் மூளைக்கு வேலை கொடுத்தது. நாள் முழுக்க வேலை செய்த சோர்வுடன் வீட்டுக்கு போனோம். அடுத்த நாள் போட்டியின் போது யாராவது ஒரு Mentorஐ முன்னுக்கு பலியாடாக அனுப்பி ஏதாவது Algorithm எழுத வைக்கலாமா என்று ஜாலியாக விவாதித்தோம். அநேகர் அன்றைய நாள் முழுக்க கேள்விகளால் துளைத்துகொண்டிருந்த விஜயராதாவின் பெயரை முன்மொழிந்தார்கள். "ராதா! எதற்கும் நாளைக்கு Algorithm எழுத தயாரா வாங்க" என்று சொல்லிவைத்தேன். அதற்கு ராதா, "துஸிதான் பலியாடாக போக சரியான ஆள். பாருங்க! ஆடு மாதிரியே தாடியும் வச்சிருக்காரு" என்று கூறி மறுத்தார்.

அன்று இரவு நாங்கள் தங்கியிருந்த வீட்டில் நடந்த சம்பாஷணையில் அன்றைய தினத்தில் நடந்த சம்பவங்கள், எதிர்பார்த்து நடைபெற்ற விஷயங்கள், நடைபெறாத விஷயங்கள் பற்றி அலசப்பட்டது. அடுத்த நாள் எப்படி இருக்குமோ என்று யோசித்துக்கொண்டே நித்திரைக்கு போனேன். போட்டியாளர்கள் இதுவரை நான் அறிந்திராத languageஇல் Algorithm எழுதுவது போன்று பயங்கர கனவு வந்தது.

அடுத்த நாள் எட்டு மணிக்கு அரியாலையில் நாங்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து புறப்பட்டு Mentorகளை பழைய parkஇலிருந்து ஏற்றிக்கொண்டு கொக்குவில் இந்து கல்லூரிக்கு பயணப்பட்டோம்.  போகும் வழியில் கதைத்தபோதுதான் விஜயராதா இரவு இரண்டு மணிவரை தூங்காது பலியாடு Segmentக்காக சிரத்தையுடன் ஆயத்தப்படுத்தியதாக தெரியவந்து எல்லோரும் சிரித்தோம். அன்று கொஞ்சம் கூடுதலாகவே தாமதம். ஒன்பது மணியளவில் போட்டி நடக்கும் இடத்துக்கு போய் சேர்ந்தோம். அதுவரை போட்டியாளர்கள் Mentorகளின் வருகைக்காக வழிமேல் விழிவைத்து காத்திருந்தனர். போட்டியாளர்கள் இந்த roundஇல் தங்களது projectஇல் உள்ள ஒரு முக்கியமான Business logicஇற்கு Algorithm எழுதி present செய்யவேண்டும். ஆகவே போட்டியாளர்கள் இரண்டு மணித்தியாலத்துக்குள் algorithm எழுதியாக வேண்டும் என்பதால் துரித கதியில் செயற்பட்டு தயாராகி கொண்டிருந்தனர்.

அன்றைய Round பற்றிய அறிமுகத்தை விஜயராதா judgesகளுக்கு விளக்கினார். ஒரு மணிக்கு அண்மையாக அணிகள் தங்களது presentationஐ ஆரம்பித்தன. ஏற்கனவே இரண்டு அணிகள் முந்தைய நாளில் வெளியேற்றப்பட்டிருந்ததால் ஆறு அணிகளுக்கு எட்டு நிமிடங்கள் வீதம் present செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. ஏழு நிமிடங்கள் கேள்வி பதிலுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. போட்டியாளர்கள் presentation செய்வதை காட்டிலும் கேள்வி-பதிலுக்கு நிறையவே பயந்தார்கள். ஒவ்வொரு முறை கேள்வி-பதில் முடிந்த பின்னரும் சொர்க்கத்துக்கு போக டிக்கெட் கிடைத்தது போல ஆழ்ந்த நிம்மதியுடன் தங்களது இடத்துக்கு திரும்புவதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

Round-03: Algorithm Round

Team: phoenix

இந்த Roundஇல் போட்டியாளர்களின் Algorithmகள் correctness, performance, clearness போன்ற அளவுகோல்கள் மூலமாக சோதிக்கப்பட்டன. அனேக அணியினரின் algorithmகள் correctnessஇல் தேறினாலும் சரியாக present பண்ணுவதில் தடுமாறினார்கள். ஆனாலும் சில அணிகள் தெளிவாக present செய்து புள்ளிகளை அள்ளின. Arimaa அணியினர் காட்டிய algorithm மொத்தமே 10 வரிகளே இருந்தாலும், தெளிவான விளக்கம் மூலமாக கவர்ந்தார்கள். Algorithmஇன் performanceஇனை பற்றி குறிப்பிட big (o) notation பற்றி குறிப்பிட்ட ஒரே அணி இவர்களுடையதுதான். கேள்வி நேரத்தின்போது, இதிலும் judges ஏதாவது பிழை கண்டுபிடிக்க முயல, கடுமையான விவாதம் மூலம் defend செய்தார்கள். எனினும் இறுதியாக சில பிழைகளை ஒத்துக்கொண்டார்கள். சிலவற்றுக்கு சரியாக விளக்கமளித்தனர். இவர்களது கேள்வி-பதில் நேரம் முடிந்த பின்னர் மேடை, போர் ஓய்ந்த போர்க்களம் போல காட்சியளித்தது.

Smart friends அணியினர் mathematical calculation சம்பந்தமான தெளிவான Algorithmஇனை கையிலேடுத்திருந்தாலும் அவர்கள் present பண்ணிய sequence கொஞ்சம் குழப்பத்தினை கொடுத்தது. Presentation உருப்படியாக இருந்தாலும், கேள்வி நேரத்தில் வந்த சரமாரியான கேள்விக்கணைகளை இவர்கள் சரியாக defend பண்ணவில்லை போலிருந்தது. Crazy coders ஒரு எளிதான Algorithm மூலமாக தெளிவாக present செய்தனர். எனினும் இவர்கள் தெரிவு செய்த algorithm இந்த roundக்கு பொருத்தமானதா? என்ற கேள்வியை judges எழுப்பினர் . இதனால் கேள்வி நேரத்தின்போது முழுக்கேள்விகளும் அதனை சார்ந்தே இருந்தது இவர்களுக்கு பாதகமாக இருந்தது.

Team Arimaa with expert panel
Phoenix அணியினர் present செய்த algorithm அவ்வளவாக தெளிவாக இருக்கவில்லை போலப்பட்டது. இவர்களது algorithm சில implementation detailகளுடன் உடன் கலக்கப்பட்டிருந்தது சில விசயங்களில் தெளிவற்ற தன்மை இருந்தது. Zeros அணியினர் ஆடுபுலி ஆட்டத்தில் computer எவ்வாறு ஆட்டத்தின்போது அடுத்த moveஐ செய்யும் என்பதை விளக்கினார்கள். முழு presentationஆக பார்க்கும்போது ஒருவித தெளிவு இருந்தாலும், சில இடங்கள் இன்னும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கலாம் என்றே எனக்கு தோன்றியது. இவர்கள் ஒரு சிறிய பகுதியை எடுத்து இன்னும் தெளிவாக காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். ஆனால் என்னைகேட்டால் இவ்வாறான போட்டிகளுக்கு நிறைய algorithmஇனை காட்டி குழப்பினால் specificக்கான கேள்விகளிலிருந்து தப்பிவிடலாம் என்பேன் :).

Cybers ஒரு எளிமையான algorithmஇனை தெளிவாக present செய்தனர். ஆனாலும் எழுதப்பட்ட algorithmஇல் இருந்த சின்ன சின்ன விசயங்களை கவனித்திருந்ததால் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என்று தோன்றியது. ஆனாலும் கேள்வி நேரத்தின்போதும் தெளிவாக பதிலளித்ததால் தப்பித்துகொண்டார்கள்.

எல்லா அணிகளும் தங்களது presentationஇனை முடித்திருந்தன. judges மேடையிலிருந்து வெளியேறி தனியான இடத்தில் அணல் பறக்க விவாதித்தனர். சர்வேஸ் அண்ணா "விவாதம் கடுமையாக இருக்கிறதே. இன்று இரண்டு elimination இருக்கும் போல இருக்கே" என்றார். judgesஇன் விவாதம் முடிய நாற்பது நிமிடங்களுக்கு மேலானது. அதைமுடித்து judges
மந்திராலோசனை
திரும்பும்போது எல்லா போட்டியாளர்களும் இஷ்ட தெய்வத்தினை வேண்டிக்கொண்டனர். வந்ததும் வராததுமாக இன்று மூன்று அணிகளை வெளியேற்ற இருப்பதாக சொல்லி கிலியை ஏற்படுத்தினார்கள். முதலில் ஏதோ TVஇல் வரும் reality showக்களில் வருவது போல ஜோக்கடிக்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் சிரித்துக்கொண்டே உண்மைதான் பேசினார்கள் என்று பின்னர்தான் தெரிந்தது.

அன்றைய போட்டிகளில் Phoenix, Crazy coders, Smart friends ஆகிய அணியினர் வெளியேற்றப்பட்டதாக அறிவித்தனர். Cybers, Arimaa, Zeros ஆகிய அணிகள் கடைசி சுற்றுக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது. வெளியேற்றப்பட்ட அணிகளை சேர்ந்த போட்டியாளர்கள் இதனை எளிதான விடயமாக எடுத்ததை பொதுவாக அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

தொடரும்.. (Final: Strategy round)

Friday, November 9, 2012

Yarl Geek Challenge: 2ம் நாள் போட்டிகள்


இவங்கதான் Mentors..
முதலாம் நாள் நிகழ்வுகள் நினைத்ததைவிட ஒருபடி மேலே போனதை போன்ற சந்தோசம் எல்லோருடைய முகத்திலும் இருந்தது. Smart Friends கடைப்பிடித்த புதுமையான requirements interview நாடகம் போன்ற presentation வழிமுறை எல்லோரையும் கவர்ந்திருந்தது. . எல்லா அணிகளும் Powerpoint presentationகளை பயன்படுத்தியபோது  Arimaa அணியினர் Prezi என்ற Tool மூலமாக செய்த presentation அவர்களது வேகமான styleக்கு நன்றாக பொருந்தியிருந்தது. Zeros அணியினர் simulate செய்த ஆடு புலி ஆட்டம் அந்த விளையாட்டை பற்றி அறிந்திராதவர்களிடையேயும் ஆர்வத்தை உண்டாக்கியது. இப்படி ஒவ்வொரு அணியும் ஏதாவது ஒருவகையில் புதுமை செய்து பார்வையாளர்களை கவர்ந்திருந்தன. அன்றிரவு நடந்த சம்பாஷணையில் சயந்தனும், பாலா அண்ணனும் தாங்கள் ரசித்த விசயங்களை சொன்னபோது இன்னும் பல சின்ன சின்ன விஷயங்கள் ஒவ்வொரு அணியின் Presentationஇலும் இருப்பதை அறிந்தேன். முன்னைய இரவு ஒருவரும் பஸ்ஸில் நன்றாக நித்திரை கொள்ளவில்லை ஆகவே அடித்துபோட்டது போல நல்லா நித்திரை கொண்டோம். இரவு பயங்கர இடியுடன் மழை பெய்ததாக காலையில் News கேட்டபோதுதான் தெரிந்தது.

அதிகாலை(?) 7 மணிக்கே எழும்பி குளித்துவிட்டு பழைய Park அருகாமையில் தங்கியிருந்த Mentors மற்றும் முக்கிய பிரமுகர்களை அழைத்துக்கொண்டு அவசர அவசரமாக கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு விரைந்தோம். ஆனாலும் இருபது நிமிஷம் தாமதம். போட்டியாளர்கள் தங்களது அணிக்கான Mentorஐ தேடிக்கொண்டிருந்தார்கள். இரண்டாம் நாளான 27ஆம் திகதி Software Design. இது மாணவர்களுக்கு கொஞ்சம் அந்நியமான சுற்று என்றே எனக்குப்பட்டது. 13ஆம் திகதி நடந்த Project Proposal Roundஇன் போது நாங்கள் எல்லோரும் ஒவ்வொரு Round பற்றிய அறிமுகத்தை வழங்கினோம். அந்நிகழ்வில் நான்தான் Design Round பற்றிய அறிமுகத்தை வழங்கினேன். அப்போது "Software Design என்றால் என்ன" என்ற கேள்வியை கேட்க மாணவர்களிடையே அமைதி. கிடைத்த ஒரு சில
பதில்களும் வேறு ஏதோ ஒன்றை பற்றியதாக இருந்தது. முதலில் ஆடிப்போன நான் எளிதாக புரியும்வண்ணம் Software Designஐ வீடு கட்டும் போது போடும் planஉடன் ஒப்பிட்டேன். "வீடு கட்டும்போது சரியாக Plan போடாமல் கட்டினால் வீட்டு பொம்பளைகள் ஏதாவது குறை கண்டு பிடிப்பார்கள். வீட்டை கழுவினால் தண்ணீர் வெளியே தட்ட முடியவில்லை என்பார்கள். ஆகவே வீடு கட்டுவதற்கு முன்னராகவே Plan போட்டுவிட்டு எல்லோரிடமும் காட்டிய பின்னர் கட்டினால் அப்படி ஒரு பிரச்சனை வராது. அதுபோலவே Software Applicationஐ செய்வதற்கு முன்னராகவே செய்யும் visual planதான் Software design" என்றேன். நானும் பல்கலைகழக காலங்களில் Software Design பற்றி அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. புரிய முயற்சிக்கவில்லை. ஆகவே இந்த Roundஐ எப்படி போட்டியாளர்கள் எடுத்துக்கொள்வார்களோ என்ற எண்ணம் எங்களுக்கு இல்லாமலில்லை. முதலாவது Roundஇல் செய்தது போலவே,
போட்டியாளர்களின் ஆயத்தங்களை கண்காணிக்க பாலா அண்ணன், விஜயராதா, மதுரா, நிரூபரன் அடங்கிய அதிரடிப்படை கிளம்பியது. இவர்கள் ஒவ்வொரு அணிகள் செய்த ஆயத்தங்களை தீவிரமாக ஆராய்ந்து அவர்களின் நிறை குறைகள் பற்றி அவர்களிடமே கூறினர் . ஆராய்ச்சியின் முடிவாக அவர்கள் சொன்ன பின்னூட்டங்களின் மூலமாக சில அணிகள் தங்களது Designஐ திறம்படுத்தின.

மதியம் பன்னிரெண்டரை மணி, அரக்க பறக்க சாப்பிட்டுவிட்டு Judgeக்கு Design Round பற்றிய அறிமுகத்தை சொன்னோம். அப்போது நான் குறிப்பிட்ட "Unorthodox Diagram" பற்றி Judges நிறைய விசாரித்தனர். வழமையான Software Design standardsஇனை பாவிக்காமல் புதுமையாக வடிவமைக்கப்பட்ட ஏதாவதொரு innovative Diagram என்றேன். அதன்பிறகு Judges நிகழ்வு நடக்கும் இடத்துக்கு வர போட்டியாளர்களின் இதயம் துடித்த சத்தம் Judgesஇன் காலடி ஓசையையும் மீறி கேட்டது.


Round-02 Design Round


Panel.. Expert panel..
ஒவ்வொரு அணிக்கும் எட்டு நிமிடங்கள் presentationஇற்கு வழங்கப்பட்டன. ஏழு நிமிடங்கள் பார்வையாளர்களின் கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டன. ஒவ்வொரு அணியும் வெவ்வேறான Projectஐ செய்ததால் வித்தியாசமான Design Diagramகளை காணக்கூடியதாக இருந்தது. Project Architecture Diagram, UseCase Diagram, Component Diagram, Activity diagram என்று பல்வேறான Diagramகள் மூலமாக போட்டியாளர்கள் தங்களது project designஐ விளங்கப்படுத்தினர். சில அணியினர் Poster paper போன்றவற்றில்கூட Diagramஇனை வரைந்திருந்தனர். அனேக அணிகள் தங்களது projectக்கு பொருத்தமான Design diagramகளை தெரிந்திருந்தனர். ஆனாலும் சில Projectஇன் complex nature காரணமாக design diagramகளை தெரிவு செய்வதில் சில அணிகள் தடுமாறியிருந்தன. என்றாலும் குறைவான நேரத்திலேயே தயார்செய்து அழகாக present செய்தார்கள். இந்த அணிகளிடம் கேள்விகளை கேட்பதற்காகவே Expert panel என்று பெயரிடப்பட்ட உத்தியோகபூர்வமான கேள்விகளை கேட்கும் அதிகாரம் படைத்த அணி உருவாக்கபட்டிருந்தது. அந்த அணியில் மதுரா, யாழினி அக்கா போன்றோர் இருந்தனர். அந்த அணியை தலைமை தாங்கியது விஜயராதா. ஒவ்வொரு அணி Present பண்ணும்போதும் உன்னிப்பாக அவதானித்து பின்னர் கேள்விகள் கேட்பதுமாக பதுங்கியிருந்து பாயும் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டனர். Present பண்ணும்போது அசராத அணிகளும் கேள்வி நேரத்தின்போது பெரிய நெருக்கடியை சந்தித்தன. ஆனாலும் சில அணியினர் சுதாரித்துக்கொண்டு பதிலளிக்க ஆரம்பிக்க ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.


 சில அணிகளின் Presentationகள் புதுமையாக இருந்தது. சில அணிகள் போதுமான Design diagramகள் இருந்த போதிலும் அவற்றை சரியாக விளக்கத்தவறின. அன்றைய presentationகளின் சுருக்கம் பின்வருமாறு.

Team: Phoenix

Project : கண் பார்வையற்றோருக்கான VirtualEye
இவர்களுடைய project research வகையை சார்ந்தது ஆகவே Designஐ prepare செய்வதற்கு நிறைய யோசிக்க வேண்டும். நவீன Technologies பற்றி தேடுதல் நடத்த வேண்டும். இதை இவர்கள் கிட்டத்தட்ட சரியாக செய்திருந்தார்கள். ஆனாலும் பாவிக்கும் Tenhnologiesஇல் சில இடங்களில் சறுக்கியிருந்தார்கள். கேள்வி நேரம் இவர்களது திறமையை மேலும் சோதித்தது. ஆனாலும் குறிப்பிட்ட சில கேள்விகளை சரியாக பதிலளித்தார்கள்.

Team: yarl Eagles

Project : Tourist Guide Web portal
இவர்களது Project nature காரணமாக இந்த Roundக்கு எதாவது புதிதாக யோசித்தால்தான் எடுபடும் என்ற சூழ்நிலை. Web Applicationகளுக்கு பொருத்தமான diagramகளை இவ்வணியினர் பயன்படுத்தி present செய்தாலும் அதில் அவ்வளவு புதுமை இருக்கவில்லை. என்றாலும் ஓரளவு முழுமையாக presentation எனலாம்.

Team: Young Bloomers

Project : IFish
இவர்களது projectஇனுடைய Scope அதிகமாக இருப்பதாக நடுவர்கள் முதலாவது Roundஇல் கூறியிருந்தார்கள். ஆகவே இந்த Roundஇன் தொடக்கத்தில் தங்களது குறைக்கபட்ட புதிய Scopeஇனை விளங்கப்படுத்தியவாறு தொடங்கினார்கள். இவர்கள் பொருத்தமான Architecture, Activity diagramகளை தெரிவு செய்திருந்தாலும், present பண்ணும்போது ஒருவித தடுமாற்றம் இருப்பதை உணர முடிந்தது. பின்னர் விசாரித்தபோது இவர்களுக்கு துரதிஷ்டவசமாக ஏற்பட்ட ஒரு நிகழ்வின் காரணமாக சரியாக ஆயத்தபடுத்த முடியாமல் போனதாக அறிந்தோம். இந்த Roundஇல் இவர்கள் வெளியேறினாலும் இவர்களுடைய Project concept எல்லோருக்கும் பிடித்திருந்ததை ஒருவரும் மறுக்க முடியாது.

Team: Cybers

Project : Social Mobic
இந்த roundஇற்கு ஏற்ற scope இருக்கிற project என்பதால் என்ன மாதிரியான Design diagramகளை தெரிவு செய்யவேண்டும் என்பதில் இவர்களுக்கு குழப்பம் இருக்க வாய்ப்பில்லை. Project architecture diagram, Activity diagram என்று கலந்து முழுமையான presentationஐ வழங்கினர். எனினும் Diagramகள் இன்னும் புதுமையாக தெளிவாக உருவாக்கியிருக்கலாம் என்று எனக்குப்பட்டது.


Team: Zeros 

Project : ஆடு புலி ஆட்டம் Modile Game
இவர்களது project ஒரு போனுக்குள்ளே மட்டும் வாழும் Software பற்றியது. ஆகவே மற்ற அணிகள் போன்று ஜரூராக வகைவகையாக Design diagramகளை போட முடியாது. ஆகவே இவர்களுக்கு இந்த Roundஇல் மிக வித்தியாசமான approach அவசியப்பட்டது. அதனை அவர்கள் சரியாக செய்ய முயற்சித்தாலும் அவ்வளவு impressive ஆக இருக்கவில்லை என்றே எனக்குப்பட்டது. ஆனாலும் presentation தெளிவாக இருந்தது.

Team: Arimaa

Project : AID, Portal for Benefactors and beneficiaries
இவர்களது web portal projectஇற்கு ஏற்றவாறு Architecture diagram, Component diagram, Mock UI flow என்று கலந்து தங்களது project designஇனை சிறப்பாக present செய்தனர். பயன்படுத்தபோகும் Technologiesஇல் PHP, Symfony, Ajax போன்ற Technologiesகளை அடுக்கினாலும், இவற்றை பாவிப்பதால் ஏற்படும் நன்மைகளை சரியாக convey செய்யத்தவறியது சின்ன நெருடலாக இருந்தது. என்னைகேட்டால் Symfony போன்ற Frameworkஇல் உள்ள librariesஐ பாவிப்பதன் மூலம் Development நேரத்தினை குறைக்கலாம் என்பேன்.


Design in the Poster paper, by smart friends

Team: Smart Friends

Project : Automated Electricity Meter reading system.
இவர்களது project, Hardware component பாதி Software component பாதி இணைந்த கலவை. ஆகவே Electronic Hardware சம்பந்தமான componentகளை poster paperஇல் வரைந்து புதுமையாக present பண்ணினார்கள். ஏனைய Software componentsகள் வழமை போல presentationஇல் வந்தது. முதல் Roundஇல் செய்ததை போலவே நான்கு உறுப்பினர்களும் சேர்ந்து present செய்தது Team effortஐ காட்டுவதாக இருந்தது. Radio wave, GSM Modem, Http API, PHP ஆகிய Technologyகளை தெரிவு செய்திருந்தாலும் கேள்வி நேரத்தின் போது அதனை சரியாக defend பண்ணாதது ஒரு குறையாகவே இருந்தது..

Team: Crazy Coders

Project : Automated HealthCare patient details storage system.
Software Designஇன் முக்கிய அங்கம் Usecase diagram ஆகும். அதனை இவர்கள் சரியாக பயன்படுத்தி ஒரு patient இந்த systemஇனை Card மூலமாக பாவிக்கும்போது வரக்கூடிய அத்தனை scenarioக்களையும் பட்டியலிட்டனர். அத்துடன் இவர்கள் தெரிவு செய்த Technologyகள் இவர்களுடைய projectஇற்கு சரியாக பொருந்தியிருந்தததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.




எல்லா அணிகளும் present செய்து முடித்தபின்னர் Judges
அரங்கிலிருந்து வெளியேறி Final results பற்றிய விவாதத்தில் ஆழ்ந்தனர். இம்மாதிரியான விவாதங்கள் அரை மணித்தியாலங்களுக்கு மேலாக போகும். போதாக்குறைக்கு அன்றைய தினம் சில அணிகளை வெளியேற்ற இருப்பதாக Judges கூறிச்சென்றனர்.

ஒரு "பலியாடு" தயாராகிறது..
ஆகவே அவர்கள் நல்லா நேரம் எடுக்கப்போவது உறுதி. அந்நேரத்தினை உருப்படியாக கழிப்பதற்கு சயந்தன் ஒரு யோசனை வைத்திருந்தார். அந்த இடைவேளை நேரத்தில் mentorகள் மூலமாக போட்டிகளின்போது present செய்யப்பட்ட ஏதாவதொரு Designக்கு பதிலீடாக வேறொரு Design diagramஇனை White boardஇல் வரைய வேண்டும். இதன்மூலம் ஒரு குறிப்பிட்ட Projectற்கு பல்வேறான Design ideaக்கள் இருக்க முடியும் என்று போட்டியாளர்களுக்கு விளங்கபடுத்துவதே அந்த நிகழ்வின் நோக்கம். இதற்காக தெரிவு செய்யப்பட்டது நானும் துஷியும். நானும் அவரும் முன்னதாகவே கதைத்து ஒரு வித்தியாசமான Designஐ பிடித்தோம். அந்த ideaவை துஷி விளங்கபடுத்துவதாக முடிவு செய்தோம். ஆனால் எனக்கென்றொரு உருப்படியான design அகப்படவில்லை. ஆகவே "நீங்க மட்டுமே present பண்ணிடுங்க துஷி! அதுதான் சூப்பரா வரும்" என்றேன். போதாக்குறைக்கு "White boardஐ பாவிச்சு சொன்னீங்க என்றால் நல்லா எடுபடும். உங்களுக்கு மேவி இழுத்தா வாற Hairstyle சூப்பரா இருக்கும்" தைரியம் கூறி ஆளை முன்னுக்கு அனுப்பி வைத்தேன்.

துஷி அழகாக Automated meter readerஇற்குரிய பதிலீட்டு designஐ விளங்கபடுத்தினார். மாணவர்களுக்கு இவரிடமிருந்து கேள்வி கேட்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இவ்வளவு நேரமும் கேள்விகளுக்கு பதில் சொல்லி களைத்துபோயிருந்த மாணவர்கள் கிடைத்த சந்தர்பத்தில் துஷியை கேள்விகளால் துளைத்தனர். அவற்றுக்கு துஷி பொறுமையாக சிரித்த முகத்துடன் பதிலளித்தார். இந்நிகழ்வை பற்றி எங்களுக்குள் கதைக்கும் போது "பலியாடு" என்று CodeWord வைத்துக்கொண்டோம். ஏனென்றால் தீடீரென்று எங்களில் தெரிவுசெய்யப்படும் ஒருவர் முன்னுக்கு வந்து present பண்ணவேண்டும்.. கேள்விக்கணைகளை முறியடிக்க வேண்டும்.. அடுத்த நாள் போட்டியின்போது  யாரை அனுப்பலாம் என்று ஒரு சின்ன விவாதமே எங்களுக்குள் நடந்தது.

இந்நேரத்தில் Judges தங்களது முடிவுகளை அறிவிப்பதற்காக போட்டி நடக்குமிடத்துக்கு திரும்பினர். ஒவ்வொரு அணிக்குமான நிறை குறைகளை விரிவாக அலசினர். போட்டியாளர்கள் மட்டுமன்றி Mentorகளும் பதற்றத்துடன் பார்த்துகொண்டிருக்க முடிவு வெளிவந்தது. கடைசியாக Young Bloomers மற்றும் Yarl Eagles ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் மிகக்குறைவான புள்ளி வித்தியாசத்தினாலேயே இவ்வணிகள் வெளியேற்றப்பட்டதை Judges குறிப்பிடத்தவறவில்லை, எனக்கு இவ்வணிகளின் project ideaக்கள் மிகவும் பிடித்திருந்தன. ஆனாலும் அன்றைய தினத்தில் அவர்களுக்கு அதிஷ்டம் இருக்கவில்லை போலும். Crazy Coders அணியின் தெளிவான presentation மூலமாக அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கபட்டது.


தொடரும் (Algo Round)

Monday, September 24, 2012

கடைசி இருபது நாட்கள்...!

"58, 59, 60 அப்பாடா ஒருவழியாக அறுபது நாட்களை இந்த நாசமா போற தேசத்தில் கடத்தியாயிற்று" என்று எனக்கு நானே சந்தோசப்பட்டேன். இலங்கைக்கு திரும்ப இன்னும் இருபது நாட்களே இருந்தன. ஆனால் இப்போது துருவா இல்லை. அவனை இலங்கைக்கு அனுப்பி விட்டார்கள். கார் ஓடத்தெரிந்த புண்ணியவான் அவனும் இப்போது இல்லை. நானும் ஜோவும் மட்டுமே மிஞ்சியிருந்தோம். இப்போது Trainஇல்தான் Officeக்கு போக வேண்டிய துரதிஷ்டநிலை. இது பற்றாது என்று Officeஇலிருந்து அண்மையாக இருக்கும் Railway station சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திலிருந்தது. ஆகவே ஒவ்வொரு நாளும் நடைராசாதான். அதுவும் ஜோவுடன் நடக்க வேண்டும்.

ஜோ ஒரு வினோதப்பிறவி. தான் ஒருவன்தான் உலகத்திலே பிழைகளுக்கு அப்பாற்பட்ட ஆத்மா என்ற எண்ணங்கொண்டவன். அவனது தொலைந்து போன மூன்று Socksகளை குப்பைகூடையில் எறிந்தது நான்தான் என்று மனதார நம்புபவன்.  ஆகவே நாங்கள் எலியும் பூனையும் போல சண்டையிடுவதை நிறுத்த அந்த ஆண்டவனே நேரே வந்து கெஞ்சினாலும் முடியாத சமாச்சாரம். 3 கிலோமீட்டர் தூரம் சண்டை பிடித்துக்கொண்டு நடந்தால் தூரம் அதிகம் போல தெரியும் என்றான் ஜோ. ஆகவே எங்கள் இருவருக்கும் பொதுவான எதிரிகளை பற்றி கதைத்து நேரத்தினை கழிப்பதாக முடிவு செய்தோம். எங்களுக்கு கட்டளையிடும் அதிகாரம் படைத்த வெள்ளைக்காரன் டானியலை பற்றி கதைத்தால் ஜோவுக்கு உற்சாகம் பொத்துகொண்டு வரும். இங்க்லிஷில் தெரிந்த "உதவாக்கரை", "உருப்படாத பயல்" போன்ற வார்த்தைகளுக்கு சமனான ஆங்கில வார்த்தைகளால் அவன் வேலையில் செய்யும் பித்தலாட்டங்களை பற்றி கதைத்து மகிழ்ந்தோம். நீண்டதூரம் நடக்கும் போது உடல் சூடேறுவதால், ஆஸ்திரேலியா Winter ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. .

அந்நேரம் Carbon Tax எனப்படும் சமாச்சாரம் அவுஸ்திரேலியா மீடியாக்களில் கடல் வழியான குடியேற்றம் பற்றிய செய்திகளையும் முந்திக்கொண்டது. ஒவ்வொரு Companyயும் தாமாக வெளியேற்றும் CO2 அளவுக்கேற்றவாறு வரி கட்டவேண்டுமேன்பதுதான் இந்த Carbon Tax வரிவிதிப்பு. ஆகவே இதன்மூலம் கம்பனிகள் சூழலுக்கு வெளியேற்றும் CO2 அளவை குறைக்க முயற்சிக்க வேண்டும் அல்லது கடுமையான வரியை அரசாங்கத்துக்கு கட்டவேண்டும். இந்த வரிப்பணத்தை வைத்து அரசாங்கம் சூழழில் அதிகரிக்கும் CO2வின் அளவை குறைக்கும் செயற்திட்டங்களுக்கு பயன்படுத்த இருப்பதாக செய்திகள் வந்தன. எங்கள் அலுவலகத்திலும் இதுபற்றிய கடுமையான விவாதங்கள் நடந்தன.

சில்வெஸ்டர் கொஞ்சம் சீரியசான ஆசாமி. நாலு பேரை இழுத்து வைத்துக்கொண்டு ஒரு கையில் ஆவி பறக்கும் Coffee Mugக்குடன் Carbon Tax பற்றிய சீரியஸாக ஆராய்ச்சி நடத்திக்கொண்டிருந்தான். இனி பொருட்களின் விலைகள் வானத்தை எட்டும் என்பது அவனது விவாதமாக இருந்தது. இந்நேரத்திலே சிகரெட் Breakஇற்காக வெளியே சென்று வந்த கமேரன் அவ்வழியாக வந்தான். அவனது மூச்சுகாற்றில் இருந்த சிகரெட் வாசனை அங்கிருந்த எல்லோரையும் தாக்கியது. சில்வெஸ்டர் உடனடியாக "உதாரணமாக கமேரன் போன்ற நபர்களுக்கும் Carbon Tax கட்டாயமாக்கப்படவேண்டும். சிகரெட் மூலமாக CO2இனை வெளியேற்றும் இந்த படுபாவிகளும் கூடுதலாக Carbon Tax கட்ட வேண்டும்" என்று சாதாரணமாக சொல்ல எல்லோரும் கொல்லென்று சிரித்தனர். அது போதாது என்று அது பற்றிய email ஒன்றையும் எல்லோருக்கும் தட்டி விட்டான்.

ஒவ்வொரு நாளும், மதிய உணவு முடிந்த பின்னரும் Table Tennis விளையாடுவோம். எங்கள் அலுவலகத்தில் மொத்தமாக நூறு பேர் வேலை செய்தாலும், பத்து பேர் மாத்திரமே இருக்கிற IT Departmentகாரனுகள்தான் மட்டும்தான் விளையாட்டில் இறங்குவோம். சைனாக்காரன் "சான் லீ"தான் எங்களுக்கு குரு. பத்தரை மணிக்கு வேலைக்கு வந்தாலும் Lunch Time ஒரு மணிக்கு Racketஉம் கையுமாக ஆஜராகி விடுவான். எனக்கு சுமாராகவே விளையாட வருவதால் லேசில் என்னை சேர்க்கமாட்டான்கள். மெக்ஸிகோக்காரன் ஆல்பி மட்டும்தான் என்னோடு போட்டிக்கு வருவான். என்னோடு விளையாடினால் மட்டும்தான் அவனுக்கு வெற்றி பெற வாய்ப்பிருப்பதால் இப்படி ஒரு கருணை. Doubles விளையாட ஆள் பற்றாது என்றால் மட்டுமே என்னை கூப்பிடுவான்கள். "சிங்"கும், ஈரானியன் அப்துல்லும் ஒருவித வெறியுடனே விளையாடுவார்கள். Lunch Time முடிந்தபின்னரும் நேரம் போவது தெரியாமல் Table Tennis விளையாடுவான்கள். Office மூடும்வரை மாலை நேரத்தில் வியர்க்க விறுவிறுக்க விளையாடாவிட்டால் அந்த நாளே வேஸ்ட் என்று "சான் லீ" அடிக்கடி கூறுவான்.

ஆஸ்திரேலியாவில் என்னுடன் பல்கலைகழகத்தில் படித்த நண்பர்கள் பலர் வேலை செய்து கொண்டிருந்தனர். அந்த பெரிய தேசத்தில் அவர்களது ஒரே contact, email மட்டும்தான். அடுத்த சனிக்கிழமை சந்திக்க முடியுமா என்று கேட்டு ஒரு email அனுப்பினேன். "அடிசக்கை! நீயெல்லாம் Sydneyக்கு வந்திட்டியா.. இனிமே மழை பொய்ச்சுடும்" என்பது போன்ற கனிவான வரவேற்புகள். "எப்படி இருக்கு Sydney" என்று ஸ்மித் கேட்டான். "இதுவரைக்கும் சும்மா பரவாயில்லையில்லடா மச்சான்! கொஞ்சம் விரிவா சொல்லனும்னா நான் Sydney பயணம் பற்றி எழுதின Blogஐ வாசிச்சு பார்.. என்று சைக்கிள் Gapல ஈயடிக்க ஆளில்லாத என்னுடைய Blogஐ market பண்ணினேன். emailஇல் பிளான் பண்ணின மாதிரி ஒரு சனிக்கிழமை நண்பன் மோர்கன் தங்கியிருந்த வீட்டுக்கு போனேன்.

எனது நண்பர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது ஆளுக்கொரு இங்கிலீஷ் பெயர் வச்சுக்கூப்பிடுவார்கள். ஆகவே **கன் என்ற பெயர் மோர்கன் என்று மாற்றம் பெற்றது. மோர்கனின் வீட்டு சாமான்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இரைந்து கிடந்தன. "என்னடா மச்சான்! campus hostel மாதிரியே ரொம்ப cleanஆ இருக்கு" என்று சிரித்தேன். இதனால் கடுப்படைந்த மோர்கன்  "டேய் இதைப்பத்தி உன்னோட இழவு Blogல ஒரு வார்த்தை எழுதினா Friendship Cut" என்று எச்சரிக்கை விடுத்தான். பேச்சை மாற்ற "வேலை எங்கடா மச்சான்" என்று கேட்டு வைத்தேன். "ஒரு மணித்தியாலம் Trainஇல போகணும்டா. ஆனா இந்த ஏரியாவில முழுக்க தமிழ் சாப்பாட்டுக்கடை நிறைய இருக்குது. அதனால இங்கேயே குடியேறிட்டன். சமைச்சு கஷ்டப்படதேவையில்ல பாரு.." என்றான்.


நாங்களிருவரும் மிஞ்ஜன் என்கிற இன்னொரு நண்பனுடன் இணைந்து ஒரு Lunchஇற்கு போவதாக பிளான். மணி ஒன்றானது. இன்னும் மிஞ்சனை காணவில்லை. எல்லாத்தையும் நேரத்துக்கு செய்து பழகிய மோர்கன் பொறுமையிழந்து மூன்றாம் தடவையாக போன் செய்தான். "டேய்! எங்கடா இருக்கிறே.. மணி இரண்டாக போகுது. நான் காலையிலே சாப்பிடலைடா" என்று அழாக்குறையாக சொன்னான். "கொஞ்சம் இருடா இன்னும் இரண்டு நிமிஷம்தான்" என்று மிஞ்ஜன் கெஞ்சினான். மோர்கன் கொஞ்சம் வெள்ளைக்காரன் மாதிரித்தான். எல்லாமே நேரத்துக்கு நடக்கணும். கடவுள் உலக Mapஐ சரியாக பார்க்காமல் செய்த தவறினால் இலங்கையில் பிறந்தவன். Jaffna St.Johnsஇலே படித்தவன். ஆகவே அப்போதே இங்கிலீஷ் நல்லா கதைப்பான். ஆனால் என்னதான் நல்லா இங்கிலீஷ் கதைச்சாலும் அதனை பிகர்களை மடிக்க பாவிக்காத நேர்மையாளன். "இவன் இப்ப Sydneyஇல் வாங்கும் சம்பளத்தை நீ retire பண்ணும் காலத்தில கூட வாங்க மாட்டே" என்று சாம்சன் எப்போதுமே என்னிடம் சொல்லுவான். ஆனாலும் அவனது sydney Apartment எங்களது Campus Hostelலை விட கொஞ்சமே மேம்பட்ட நிலையிலிருந்தது.

மிஞ்சன் ஒருமாதிரியா இரண்டு மணிக்கு வந்து சேர்ந்தான். "எப்படிடா இருக்கே.. அப்ப பார்த்த மாதிரியே இருக்கே.... Unbelievable" என்றான் மிஞ்ஜன். மோர்கன் வீட்டிலிருந்து 45 நிமிஷம் வேகமான கார் பயண தொலைவிலிருக்கும் ஜாக் & ராஷ் வீட்டுக்கு போனோம். எங்களுக்காக இருவரும் சமையல் செய்திருந்தார்கள். Bachelor சமையல் என்றாலும் நான்கு கறிவகைகளும் மூன்று பொரியலுமாக விருந்து களைகட்டியது. விருந்து முடிந்தபின்னர் பின்னேரம் எங்கே போவது என்ற விவாதம் தொடங்கியது.

படம் போரடிக்கும் என்றார்கள். கிரிக்கெட் விளையாட முடியாத அளவுக்கு நிறைய சாப்பிட்டு விட்டோம். ஜாக் "வாங்கடா எல்லோரும் Bush Walk போவோம்" என்றான். சொல்லும்போதே அவன் கண்கள் ஒருவித பரவசநிலையிலிருந்தன. "அது என்னடா BushWalk.. அப்படி என்றால் என்னடா மச்சான்" என்று கேட்டேன். அவுஸ்திரேலியா ஒரு புதர்க்காடுகளை கொண்ட வறண்ட தேசம்.. அவுஸ்திரேலியன்களின் முதல் முக்கிய பொழுதுபோக்கே அந்த புதர்களினூடாக நீண்ட தூரம் ஜாலியாக நடைபோடுவதுதான். அதுதாண்டா மச்சான் BushWalk என்றான் ஜாக். ஜாக் இலங்கையில் Campusஇல் படிக்கும்போது அவனுக்கு படிப்பது மட்டுமே அவனது ஒரே ஒரு பொழுதுபோக்காக இருந்தது. Campusஇல் சொல்லிக்கொடுக்கும் படிப்பு பற்றாது என்று CIMA, BCS போன்ற இதர Courseகளில் சேர்ந்து படித்து இந்த பிறவிப்பயனை அடைந்தவன். ஆனால் இப்போது Bushwalk என்றதொரு அந்நியமான பொழுதுபோக்கு அவனது TopTenஇல் முதலிடத்தில் இருந்தது.


Manly Beachக்கு பக்கத்தில் இருக்கும் Walkwayஇல் போவதாக இருந்தோம். ஜாக்தான் காரை ஓட்டினான். ஒருவித வெறியுடனே வேகமாக போய் சேர வேண்டும் என்று ஓட்டினான். போய் சேர்ந்ததும் எல்லோரும் beach மணலில் நடந்து பழங்கதை பேசினோம். மோர்கன் கையில் camera இருந்தது. சூரியன் மறையும் மாலைக்காட்சியை எப்படியாவது அழகாக எடுக்க வேண்டுமென்றான். ராஷ் மற்றவர்களை கலாய்ப்பதில் வல்லவன். மோர்கன் சொல்லும் ஒவ்வொரு வசனத்துக்கும் ஏதாவது சொல்லுவான். "மச்சான் நீ மோர்கனை பத்தி Blog எழுதுடா.. நான் உனக்கு நல்லா நாலு points எடுத்துத்தாறேன்" என்றான். Walkway சில இடங்களில் அழகாக இருந்தது. படிகள் சில இடங்களில் கட்டப்பட்டிருந்தன. பல இடங்கள் பாறைகளும் . உயரமான பாறை மேல் ஏறி கடலின் அழகை ரசித்தோம்.

மோர்கன் பரந்த மேகங்களை  Cameraவுக்குள் அடக்க முயற்சித்தான். ஒரு இடத்தில் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட பதுங்கியிருந்து துப்பாக்கி சுடும் தளத்தை (Gun Pit) பார்க்கக்கூடியதாக இருந்தது. வேகமாக நடந்ததால் குளிர் தெரியவில்லை. சூரியன் மறைய பத்து நிமிடங்களே இருந்ததால் வந்த பாதையிலே காரை நோக்கி நடந்தோம். "மச்சான் இங்க பாருங்கடா கார் parking ticket எடுக்க மறந்து விட்டோம். அநேகமாக Fine போட்டிருப்பானுங்க" என்றான் ஜாக். உண்மைதான் காரின் முன்புறத்தில் 100 டொலர் Fine Receipt வைக்கப்பட்டிருந்தது. "எல்லோரும் மறந்து தொலைச்சீங்க.. ஆளுக்கு 33 டொலர் கட்டுங்க" என்று சொல்லியவாறே மோர்கன் காரை எடுத்தான். இப்படித்தான் முக்கிய இடங்களில் parking டிக்கெட் எடுக்காமல் park பண்ணினால் fine அடித்து விடுவான்கள்.

இலங்கைக்கு திரும்பிச்செல்லும் நாளும் ஒருவாறாக வந்து விட்டது. இந்த நாள் எப்போது வரும் என்று இருந்த எதிர்பார்ப்பு இப்போது இல்லை. மனம் வெறுமையாக இருந்தது. கிட்டத்தட்ட இருபது மணித்தியால பிரயாணம் முடிந்த பின்னர் நள்ளிரவு ஒரு மணிக்கு வீட்டினை வந்தடைந்தேன். மெதுவாக நடந்து எனது ரூமுக்கு போனேன். காமிக்ஸ்கள் மேசையில் கொட்டிக்கிடந்தன. மூன்று மாதங்களின் பின்னர் காமிக்சை கண்டேன். கையில் அகப்பட்ட ஒரு காமிக்சை எடுத்துக்கொண்டு படுக்கையில் விழுந்தேன். அதன் தலைப்பு "நரகத்தின் நடுவில்"..