Showing posts with label சாப்ட்வேர் கதைகள். Show all posts
Showing posts with label சாப்ட்வேர் கதைகள். Show all posts

Saturday, July 26, 2014

ஈமெயில் கொலைகள்!!


அத்தியாயம் 1: வேலையில்லா சாப்ட்வேர் கம்பெனி

அஞ்சு நாள் லீவுக்கு பிறகு அலுவலகத்துக்கு போய் சேர்ந்தேன். கடந்த ரெண்டு மாசமா ஒரு ப்ரோஜெக்டும் இருக்கவில்லை. ப்ரோஜெக்ட் இல்லாத சாப்ட்வேர் கம்பெனி கிட்டத்தட்ட மீன் மார்க்கெட் மாதிரி பரபரப்பாக இருக்கும். இரண்டு பேர் facebookஇல் ஒரு பெண்ணின் profile pictureக்கு கமெண்ட் அடித்தார்கள். மூன்று பயல்களும் ஒரு பொண்ணும் சேர்ந்துகொண்டு காணாமல் போன MH370க்கு என்ன நடந்திருக்கும் என்பது பற்றி விவாதித்தார்கள். வழமைபோலவே எந்த முடிவுக்கும் வராமல் கப்பில் இருந்த டீயை ஜாலியாக காலி செய்தார்கள். ஆறு மாதங்களுக்கு முன்னர், ஆணியடித்து வைத்ததை போல ஒரு இடத்திலே இருந்து கடுமையாக ராத்திரி பகல் வேலை செய்துவிட்டு இரண்டு மாசமா வேலை இல்லாமல் இருந்தது ஒரு மாதிரியா இருந்திச்சு. மத்தியான சாப்பாட்டுக்கு இரண்டு மணித்தியாலம் எடுத்தோம். பிற்பகல் வேளைகளில் கண்களில் அரைத்தூக்கத்துடன் வேலை செய்தோம் அல்லது வேலை செய்வதுபோல நடித்தோம். வேலையில்லாத சாப்ட்வேர் கம்பனிகளில் நிலைமை கொஞ்சம் இடக்குமுடக்காத்தான் இருக்கும். ஆனால் இவ்வாறான நிலைமை கொஞ்ச நாளுக்குத்தான் நீடிக்கும் என்ற உண்மை தெரியாமல் சந்தோசத்தில் மிதந்தோம்.

எதுக்கும் ஒரு எல்லை வேண்டுமல்லவா. சந்தோசமும் திகட்ட ஆரம்பித்தது. வேலைக்கு போவதே போரடிக்கும் அனுபவமாக மாற ஆரம்பித்தது. சாப்ட்வேர் கம்பெனியில் A/C இல்லாமலும் இருக்கலாம். ஆனா வேலை இல்லாமல் இருக்கமுடியாது. வேலையே இல்லாமல் ஒரு இடத்தில் இருந்து கம்ப்யூட்டரை வெறித்துபார்ப்பது என்பது கொஞ்சம் நவீனத்துவமான தண்டனையாகவே எங்களுக்கு தெரிய ஆரம்பித்தது. எங்கள் செக்சன்களில் இப்படி வேலையே இல்லாமல் போரடித்துகொண்டிருந்தபோது, மார்க்கெட்டிங் செக்சன் மட்டும் வேலைகளில் மூழ்கியிருந்தது. எங்களுக்கு ப்ராஜெக்ட் இல்லாத சமயங்களில் மார்க்கெட்டிங் ஆசாமிகளுக்கு வேலை தொண்டை வரை இருக்கும். ஆனால் ஒரு ப்ராஜெக்ட் சிக்கினால் மூன்று நாலு மாசங்களுக்கு மார்க்கெட்டிங் ஆசாமிகள் காலாட்டிகொண்டு ரெஸ்ட் எடுக்கலாம்.

நேரம் இப்படி போய் கொண்டிருந்தபோது, ஒரு நாள் மார்க்கெட்டிங் எக்ஸகியூடிவ் சில்வெஸ்டர் சில்வா கதவை திறந்துக்கொண்டு அரக்கப்பறக்க உள்ளே வந்தபோது எங்களின் "வேலையில்லா திண்டாட்டம்" முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. சில்வெஸ்டர் புதுசா ஒரு ப்ராஜெக்ட் கொண்டு வந்திருக்கிறான் என்ற செய்தியை துமிலன் எங்களுக்கு சொன்னான். போதாக்குறைக்கு என்னையும் துமிலனையும் project requirements பற்றி விவாதிக்க அடுத்த நாளே எங்களுக்கு கஸ்டமர் கம்பெனியுடன் மீட்டிங் schedule செய்திருப்பதாக சொன்னார்கள். போரடிக்கும் காலம் முடிவடைய போகிறது என்று சந்தோசப்படுவதா? இல்லை நாளை முதல் வேலை வரப்போகிறது என்று கவலைப்படுவதா என்று தெரியாமல் முழித்தோம்.


அத்தியாயம் 2: புதிரான கஸ்டமர்

அடுத்த நாள் முழுக்கை சேர்ட் அணிந்து சென்ட் அடித்துக்கொண்டு ஆபீஸ் போனோம். சில்வெஸ்டர் எங்களுக்கு ஒரு காரை ஏற்பாடு செய்திருந்தான். எங்கே மீட்டிங் நடக்கும் என்ற விபரம் எங்களுக்கு வழங்கப்படவில்லை. அதை சொல்ல சந்தர்ப்பம் வரவில்லை போலும். கார் கொள்ளுபிட்டி சந்தியில் நிறுத்தப்பட்டது. டிரைவர் "இந்த இடத்தில இறங்குங்க. ஒரு வான் வரும். அதில் ஏறுங்க. என்னை ஒண்ணும் கேக்காதிங்க" என்று இயந்திரத்தனமாக சொல்லிவிட்டு நிதானமாக காரை கிளப்பிக்கொண்டு சென்றான். நாங்கள் அதிர்ந்துபோய் ஆளை ஆள் பார்த்துக்கொண்டோம். துமிலன் வியர்வையை கைக்குட்டையால் ஒற்றிக்கொண்டான்.

"என்னடா இது கஸ்டமர் பற்றின விஷயம் மர்மமா இருக்குதே" என்றான். பதினைந்து நிமிசத்தில் ஒரு வெள்ளை வான் எங்கள் அருகில் வந்து நின்றது. கதவு திறந்தது, அதிலிருந்த ஒருவன், வானின் கறுப்பு கண்ணாடிக்கு வெளியே அரைவாசி மூஞ்சியை வெளியே காட்டியவாறு, "ரெண்டு பேரும் ஐடென்டிட்டி கார்டை எடுங்க" என்றான். சரிபார்த்த பின்னர் "ஏறுங்க சார்" என்றான். அவன் முகத்தில் இருந்த கடுமை கொஞ்சமும் குறைந்ததாக தெரியவில்லை. மந்திரிக்கப்பட்ட ஆடுகள் போல வானுக்குள் ஏறிக்கொண்டோம். நாங்கள் முன்பு எப்போதோ நாங்கள் செய்த ப்ராஜெக்ட்டில் இருந்த "பக்ஸ்" (bugs) மூலமாக பாதிக்கப்பட்ட கஸ்டமர்கள் யாராவது எங்களை கடத்தி சித்ரவதை செய்ய போகிறார்களோ? போன்ற எண்ணங்கள் மனதில் வந்தன. அந்த வான் பஞ்சிகாவத்தை பகுதியில் ஒரு ஒடுக்கமான வீதியில் நிறுத்தப்பட்டது. இன்னொரு வானுக்குள் மாற்றப்பட்டோம். இதிலும் ட்ரைவருக்கு பக்கத்தில் ஒருத்தன் இருந்தான். இல்லை ஒருவர் இருந்தார்.

முகத்தில் சிநேகமான புன்னகை தவழ்ந்தது. "ஏறுங்க தம்பி. இன்னும் கொஞ்ச தூரம்தான்" என்றார். அவர் சொல்லாமலே ஏறியிருப்போம். அப்படியொரு அழகான  சாந்தமான புன்னகை. ஏறி இருந்துமே "சார் நாங்க எங்கதான் போறோம்" என்று தொடங்கினான் துமிலன். அந்த கணத்திலே எங்கள் பின்னால் இருந்த ஒருவன் கறுப்புத்துணியால் எங்கள் கண்களை கட்டினான்.

எனக்கு உடல் முழுக்க கடுமையான வியர்வை. நெஞ்சுக்குள் யாரோ சம்மட்டியால் அடிப்பது போன்று ஏதேதோ செய்தது. "எங்களை விட்டிடுங்க. நாங்கள் எதுவுமே செய்யவில்லை" என்று பதறினோம். "கொஞ்சம் சத்தம் போடாம இருங்க. பத்து நிமிஷம்தான் இடம் வந்திடும். பயப்படாதீங்க. ஒண்ணுமே நடக்காது" என்றார் சாந்தமான புன்னகைக்கு சொந்தக்கார ஆசாமி. இன்றுதான் வாழ்க்கையின் கடைசி நாள் என்று மனசு சொல்லிக்கொண்டே இருந்தது. எத்தனை மணித்தியாலங்கள் கழிந்தனவோ தெரியவில்லை. ஒரு இடத்தில் இறக்கப்பட்டோம். துணி விலக்கப்பட்டபின்னர், கண்களை சூரிய வெளிச்சம் வேட்டையாடியது. துமிலனின் கண்கள் அழுது அழுது சிவந்திருந்தன. "டேய் எங்களை கொல்லப்போறாங்கடா.." என்று ஏங்கி ஏங்கி அழுதான். நாங்கள் வித்தியாசமான முறையில் கட்டப்பட்ட வீட்டினுள் கொண்டுசெல்லப்பட்டோம். அந்த பகலிலும் இருட்டு அந்த வீட்டீனுள் ஒளிந்து கொண்டிருந்தது.

அந்த இடத்தின் அமைப்பு மனதில் புதிய இரசாயனத்தை கசியச்செய்தது. மனதில் வினோதமான அமைதி வந்தது போலிருந்தது. பழைமையான ஓவியங்கள் சுவர்களை மறைத்திருந்தன. மந்தமான வெளிச்சம் அந்த ஓவியங்களிலுள்ள சோக உருவங்களுக்கு உயிர் கொடுத்தது. அந்த விசாலமான அறையின் ஒரு ஓரத்தில் உள்ள சோபாவில் ஒரு உருவம் முதுகை காட்டியவாறு சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. "சாந்தமான புன்னகை" ஆசாமி எங்களை உள்ளே வழிநடத்தினார். அந்த சோபாவை நோக்கி நடந்தோம். நடத்தப்பட்டோம்!!. சோபாவில் உள்ள உருவத்தின் காதில் ஏதோ சொன்னார். அந்த உருவம் எழுந்தது. கை கொடுத்தது. நாற்பது வயது மதிக்கத்தக்க ஆள். வெள்ளை முடி நாற்பது சதவீத முடியை ஆக்ரமித்திருந்தது. அயர்ன் செய்யப்பட்ட வெள்ளை சேர்ட், கறுப்பு ட்ரௌசர் அணிந்திருந்தார். வாயில் உயர்தர சுருட்டு புகைந்தது. எங்களுடன் கை குலுக்கினார். "நான்தான் சண்முகநாதன்.. பிசினஸ்மான்" அறிமுகப்படுத்தினார். அவர் செயல்களில் கண்ணியம் இருந்தாலும் கண்களில் சந்தேகம் ஓடி கொண்டிருந்தது.

"என்னைப்பற்றி தெரியுமா" என்று மர்ம புன்னகை பூத்தார் சண்முகநாதன். துமிலன் "உங்களை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கு.. உங்களை பார்த்தா அந்த சண்டா மாதிரி  இருக்கு" என்று சொல்லிக்கொண்டே நாக்கை கடித்துகொண்டான்.

"ம்.. ம்.. நீ சொல்றது சரிதான்.. ஆனா என்னைப்பற்றி அவ்வளவா தெரியலை போலிருக்கு.. தெரிஞ்சிருந்தா அப்படி என்முன்னால பேசமாட்டே.. நான்தான் கொழும்பு ஏரியாவை பத்து வருசத்துக்கு முன்னால கண்ட்ரோலில் வச்சிருந்த நிழலுலக தாதா "சண்டா". உங்களை மாதிரி பொடிப்பயல்களுக்கு என்னைப்பற்றி தெரிய வாய்ப்பில்லை.. அது ஒரு காலம்.. கொழும்பில் இருந்த சின்ன சின்ன தாதாக்கள் என்னை கேட்காமல் ஒரு முடிவு எடுக்கமாட்டார்கள்.. என்னுடைய நண்பர்கள்தான் ஆட்சிக்கு வரமுடியும். கொழும்பு முழுக்க நான் வச்சதுதான் சட்டம்" என்றார்.

அவர் குரல் கம்மியது. "ம்.. ம்.. நான் செய்த ஒரு பிழையால் எங்கட தலையெழுத்தே மாறிடிச்சு. என்னுடைய ஆட்களில் பலரை பொலிஸ் கொன்றுவிட்டது.. போலீஸ் என்னை வேட்டையாடியது.. ஆனா அவர்களால் என்னை பிடிக்க முடியவில்லை" அவரது முகம் சிவப்பாகியது. அதன்பின்னர் முப்பது செக்கன் மௌனம் நிலவியது. முகத்தில் இருந்த கடுமை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.

"இவன் எதற்காக எங்களை வரவழைத்திருக்கிறானோ" என்று எங்களுக்குள் ஆயிரம் சிந்தனைகள் மனதில் ஓடியது. சண்டா கொஞ்சம் தண்ணீர் குடித்து ஆசுவாசப்படுத்திக்கொண்டார். எங்களை அழைத்துவந்த தாதாவின் "வலதுகரம்" பேசத்தொடங்கினார். "நாங்கள் நாலைஞ்சு வருசமா தொழிலில் இருந்து விலகிட்டோம். கடைசியா போலீஸ் எங்கட ஆட்கள் முப்பது பேரை கொன்றாங்க.. அத்தோடு ஆறு வருஷம் தலைமறைவுக்கு பிறகு இப்போதுதான் தொழிலை திரும்ப தொடங்கினோம். இப்ப முன்னைய மாதிரி தொழிலை நடத்த முடியலை. கூலிக்கு கொலை செய்தல், கட்டபஞ்சாயத்து எல்லாமே ரகசியமா நடத்த வேண்டியிருக்கு.

போதாக்குறைக்கு இந்த கூலிப்படையை மெயின்டைன் பண்ண நிறைய செலவாகுது. யானையை கட்டி தீனி போடற கதையா இருக்குது. முன்னைய மாதிரி இல்லை, எங்கேயாவது ஏதாவது நடந்தா, போலீஸ் நேரா இங்கதான் வருகுது. இப்போதெல்லாம் யாழ்பாணத்திலிருந்து நிறைய ஆர்டர் வருது. அந்த மாதிரி தூர இடத்தில வேலை வந்தா இவனுகளை அங்கே அனுப்பிறதுக்குள்ளேயே போதும் போதும் என்றாகிடுது. இதுக்கெல்லாம் நீங்கதான் எங்களுக்கு உங்கட சாப்ட்வேர் மூலம் தீர்வு தரப்போறீங்க" என்று புதிர் போட்டார் வலது கரம்.

நாங்கள் எக்குத்தப்பாக முழித்துகொண்டிருக்கும்போது, சண்டா பேசத்தொடங்கினார். "கூலிக்கு கொலை செய்வதற்கான ஆர்டர் நவீன முறையில் ஈமெயில், எஸ்எம்எஸ் இல் வரணும். இங்க்லீஷ் படத்தில வாற மாதிரி என்னோட அடியாட்கள் அமெரிக்காவிலிருந்தாலும் கொலை செய்யப்படுபவனின் படத்தை ஈமெயிலில் அனுப்பி கொலை செய்ய வைக்கவேண்டும். என்னோட அடியாட்களை பிடிபட்டாலும் என்னை பற்றி தகவல் குடுக்க அவனுகளுக்கு ஒண்ணுமே தெரியப்போவதில்லை. செஞ்ச கொலைக்கு காசு குடுக்க என்ட கஸ்டமர் யாராவது எங்கிட்ட வந்தாதானே போலிஸ் என்னை தேடிவரும். கஸ்டமர்களை கிரெடிட் கார்டுல காசு குடுக்க சொன்னா சரி. பாங்க்குல காசு குவியும்" என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தார். நிறைய நாள் தீவிரமாக நூற்றுக்கணக்கான சிகரெட் பாக்கெட்டுகளை காலி செய்து நிதானமாக யோசித்து திட்டமிட்டிருப்பது போல இருந்தது. எங்களுக்கோ மண்டை காய்ந்தது. அவர் சொன்னதை ஜீரணிக்க மூளை கொஞ்ச நேரம் எடுத்துக்கொண்டது. துமிலன் முதலில் சுதாரித்துகொண்டான். சற்று செருமிக்கொண்டு பேசத்தொடங்கினான். "இது சூப்பர் ஐடியா.. உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் கொலைக்கான ஆர்டரை யாரும் எங்கள் சிஸ்டம் மூலம் கொடுக்கலாம். அது போலவே தொழில்முறை கொலைகாரர்கள் எங்கள் சிஸ்டத்தில் பார்ட்-டைம் அடியாட்களாக ரெஜிஸ்டர் செய்யலாம். கொலை ஆர்டர் வரும் இடத்துக்கு அருகாமையிலுள்ள கொலைகாரனை தேர்ந்தெடுத்து சிஸ்டம் தகவல் அனுப்பும். சுவிஸ் பாங்க்குடன் "இண்டிகிரேட்" பண்ணிவிட்டால் உங்களை பிடிக்க எந்த போலீசாலும் முடியாது" என்று அளந்தான்.

இப்போது தாதாவுடனான உரையாடல் சுமுகமாக மாறியது. அடுத்த மீட்டிங்கில் சிஸ்டம் பற்றிய டிசைனை நாங்கள் விளக்குவோம் என்றவாறு விடைபெற்றோம். அதே வான், கண்களில் கறுப்புத்துணி ஆனால் இம்முறை இறுக்கம் குறைவாக கட்டப்பட்டிருந்தது. கொள்ளுபிட்டி சந்தியில் இறக்கப்பட்டோம். ஆபீஸுக்குள் நுழைந்தவுடனேயே சில்வெஸ்டர் ஓடி வந்து வரவேற்றான். அவன் முகத்தில் குரூரமான புன்னகை தவழ்ந்தது. பிறகு வேறு சில மேனேஜர்கள் சகிதம் புதிய ப்ரோஜெக்ட் பற்றிய தீவிர மீட்டிங் நடந்தது. இந்த ப்ரொஜெக்ட் செய்வதில் இருக்கும் தாதாக்களுடனான தொடர்பு மூலம் வரக்கூடிய ரிஸ்க்குகளை பற்றி எனது கருத்தை வலியுறுத்தினேன். ஆனாலும் கம்பெனி இருந்த கேவலமான நிலையை கருத்தில் கொண்டு ப்ரோஜெக்ட்டை செய்யுமாறு சில்வெஸ்டர் முதலான மேனேஜர்கள் வற்புறுத்த மீட்டிங் ரூமில் வெக்கை கூடியது. வார்த்தைகளால் சண்டையிட்டோம். ஆனாலும் அடுத்த மாத சம்பளம் வருவதே இந்த ப்ரொஜெக்ட்டில்தான் தங்கியிருக்கிறது என்ற விஷயம் எங்களை இறுதியாக சம்மதிக்க வைத்தது.


அத்தியாயம் 3: கொலைகார சிஸ்டம்

ராத்திரி பகலாக வேலை தொடங்கியது. சண்டா சொன்ன சாப்ட்வேர் சிஸ்டத்தின் வடிவம் விநோதமாக டெர்ரராக இருந்தது. சிஸ்டத்தின் பயனாளர்களுக்கு விதவிதமான சேவைகள் வழங்கப்பட்டன. பயனாளர்கள் தாங்கள் பழிவாங்க விரும்பும் நபரின் பெயர், முகவரி, போட்டோவை சிஸ்டத்தில் அப்லோட் பண்ண வேண்டும். பின்பு எவ்வாறு பழிவாங்க வேண்டும் என்பதை விளக்க வேண்டும். கொலை அல்லது கை, கால் எடுத்தல், வெள்ளைவான் கடத்தல் போன்று வெவ்வேறான தண்டனை விபரணைகளை "கம்போபொக்சில்" தெரிவுசெய்யவேண்டும். ஒவ்வொரு தண்டனைக்கும் தண்டனையின் தீவிரத்துக்கு ஏற்றவாறு கிரெடிட் கார்டில் காசு அறவிடப்படும். இப்படியாக இலங்கையின் ஒரு மூலையில் இருக்கும் மிஸ்டர் சின்னதம்பி என்பவர்  ஏதோவொரு மூலையிலிருக்கும் பெரியதம்பி என்பவரை பழிவாங்க விரும்பினால் சிஸ்டத்துக்கு  பெரியதம்பியின் "கையை" எடுத்துவிடுமாறு சிஸ்டத்துக்கு உத்தரவு போடலாம். கிரெடிட் கார்ட் இந்த சேவைக்காக பத்தாயிரம் ரூபா வசூலிக்கும். பெரியதம்பியின் இருப்பிடத்துக்கு அருகாமையிலுள்ள சண்டாவின் ஆள் "கத்தி" கண்ணாயிரத்துக்கு போட்டோ சகிதம் உத்தரவு ஈமெயிலில் பறக்கும்.

இவ்வாறான கொலைகார சிஸ்டத்தை வடிவமைக்கும்போது எங்களுக்கு ஒவ்வொரு நாளும் தீக்கனவுகள் வந்து தொல்லை கொடுத்தன. கொடுத்த Deadlineஇல் முடிக்க முடியாமல் போனதால் சண்டா எங்கள் கைகளை வெட்டபோவதாக சொல்வது போன்ற கனவு மூன்று நாளைக்கு ஒருமுறை வந்தது.

இப்படியே நாலு மாதங்கள் கடந்தன. ஒருவழியாக எங்கள் சிஸ்டம் ரெடியாகி விட்டது. ஆனாலும் இப்படி ஒரு சிஸ்டம் செய்ததில் பெரிய மகிழ்ச்சி எங்களுக்கு இருக்கவில்லை. துமிலன் "நான் நல்லா தூங்கி நாலு மாசமாகுது. இந்த இழவு சிஸ்டத்தை பார்க்கும்போதே தலையிடி வருது. நாங்கள் இதன் மூலம் காசு சம்பாதிக்கிறமோ இல்லை நிறைய பாவத்தைத்தான் சம்பாதிக்க போகிறோம்" என்று புலம்புவான். சில்வெஸ்டர் உடனே முடிக்குமாறு சத்தம் போடுவான். அவன் மேனேஜர்களின் செல்லப்பிள்ளை. அதனாலேயே இஷ்டத்துக்கு உத்தரவு பிறப்பிப்பான். எங்களை விரட்டுவான். எல்லோருக்கும் அவன் மேல் கொஞ்சம் பயம் இருக்கும். அவன் என்னையும் துமிலனையும் சண்டாவுடனான UAT மீட்டிங்க்குக்கு போகுமாறு உத்தரவு பிறப்பித்தான். சில்வெஸ்டர் போன் மூலமாக சண்டாவுடன் தொடர்பு வைத்திருந்தாலும், அவரை நேரடியாக சந்திக்க தயங்கினான். பலிக்கடாக்களான எங்களை அனுப்பினான். நாங்கள் போவது UAT எனப்படும் User Acceptance Test. UAT என்பது ஒருவகையான அதிரி புதிரி சிஸ்டம் டெஸ்டிங். சாப்ட்வேருக்குரிய கஸ்டமர்கள் சிஸ்டம் எவ்வாறு தொழிற்படுகிறது என்பதை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு டெஸ்ட் பண்ணுவார்கள். ஏதாவது சரியாக வேலை செய்யாவிட்டால் "தாம் தூம்" என்று குதிப்பார்கள். சிஸ்டத்தை திருத்திகொடுக்கும்வரை கொடுக்குப்பிடி பிடிப்பார்கள். சும்மா கஸ்டமர்கள் இப்படி என்றால், துப்பாக்கி, அரிவாள் தூக்கும் சண்டா எப்படி எங்கள் அரைகுறை சிஸ்டத்தின் செயல்பாடுகளில் சகித்து கொள்ளபோகிறார் என்பதே நெஞ்சை பதைக்கும் ஒரு கேள்வியாக இருந்தது. "டேய், அவரின்ட கால்ல கையில விழுந்தாவது சிஸ்டத்தை ஓகே பண்ணனும். நான் வர்ற வழியில பிள்ளையாருக்கு தேங்காய் உடைச்சேன்." என்று பதற வைத்தான் துமிலன். அவன் நெற்றியில் திருநீறு பட்டை தெரிந்தது. நான் வரும்போது பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்து கொண்டு வந்திருக்கணும். குறைஞ்சது அம்மாவோட அறிவுரைப்படி வீட்டை விட்டு வெளியே வரும்போது திருநீறு சாத்திட்டு வந்திருக்கலாம்.

வழமையான கண்கட்டு வித்தையில் சண்டாவின் வீட்டுக்கு போய் சேர்ந்தோம். கண்களில் கட்டு அவிழ்க்கப்பட்டபோது, சண்டா எங்கள் முன்னால் கம்பீரமாக அமர்ந்திருந்தார். அவரது வாயின் ஓரத்தில் தோன்றிய சிக்கனமான புன்னகைக்கு அவரது இரத்தச்சிவப்பான கண்கள் ஒத்துழைக்கவில்லை. "உங்கட வேலையை தொடங்குங்க தம்பி. கவனமா நடந்துக்குங்க. சிஸ்டம் செய்யிற ஒவ்வொரு பிழையும் அநியாயமா உயிரை பறிக்க வாய்ப்பிருக்கு" என்றார் "வலதுகை". நாங்கள் ஒவ்வொரு சிஸ்டம் செயற்பாடுகளை பற்றி தெளிவாக விளங்கப்படுத்தினோம். பிறகு டெஸ்டிங் தொடங்கியது. மட்டக்களப்பில் உள்ள சாம்சன் என்பவரை "வெள்ளைவானில் கடத்தி சித்ரவதை" செய்வதற்காக சிஸ்டம் மூலம் ஆர்டர் கொடுத்தோம். அதன் விளைவை பற்றி அறிவதற்காக, "வலதுகை" ஒரு டிவியை ஓன் செய்து, "சக்தி டிவி" சானலுக்கு மாற்றினார். ஒரு மணித்தியாலத்துக்கு பின்னர், சக்தி டிவி Breaking Newsஇல் "யாழ்ப்பாணத்தில் சபேசன் என்பவர் வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத நபர்களால் சற்று முன்னர் கடத்தப்பட்டார்" என்று செய்தி பறந்தது. எங்கள் முகங்களில் வந்த பீதியை சமாளித்துக்கொண்டு "இன்னும் வேறு சில ஆர்டர்களை செய்து பார்ப்போம்" என்றேன். இந்த முறை புத்தளம் சிவசாமிக்கு செமத்தியாக அடி கொடுத்து பல்லை உடைக்கவேண்டும் என்று  ஆர்டர் கொடுத்துவிட்டு சக்தி டிவியை அரைமணித்தியாலமாக முறைத்துபார்த்துக்கொண்டிருந்தோம். ஒருவாறாக சக்தி டிவி Breaking News வந்தது. எங்கள் இதயம் 150 கிலோமீட்டர் வேகத்தில் ஓடியது. "புத்தளத்தில் சிவசாமி என்பவரின் கைகள் இனந்தெரியாத நபர்களால் வெட்டப்பட்டது" என்று Breaking News அலறியது. சண்டா மேலே பார்த்து தலையில் கை வைத்தார். "வெறும் பல்லை உடைக்கிறதுக்கு பத்தாயிரம்தான் வாங்கறோம். நீங்க குடுத்த காசுக்கு மேலே போய் கையை வெட்ட உத்தரவு கொடுக்கிறீங்க. கையை வெட்ட நாலு லட்சம் வாங்கிறம் தெரியுமா.. எவ்வளவு நட்டம் பாருங்க" என்று முறைத்தார் "வலது கை". எங்களின் இதயம் வெளியே வந்தால் போதும் என்றிருந்தது.

சண்டா நிதானமாக தளர்வான குரலில் "இந்த பிரச்சனைகளை திருத்தி போட்டு வாங்கோ. நாலு நாள் தாரேன். அதுதான் Deadline. உண்மையான Dead.. line" என்றார். முகத்தில் ஒரு சலனமும் இல்லை. கையில் இருந்த தேநீர் கோப்பையை சத்தமாக மேசையில் வைத்தார். அதில்தான் அவரின் கோபம் வெளிப்பட்டது.

ஆபீஸ் வந்து சேர்ந்தபோது இரவு ஏழு மணி. உடனடியாக கண்டு பிடிக்கப்பட்ட bugகளை திருத்த ஆரம்பித்தோம். இரவு பகலாக சிஸ்டத்தை சரி செய்தோம். சில்வெஸ்டர் தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை போல நடந்து கொண்டான். அவன் மூலமாக சண்டாவுடன் பேசி கூடுதலாக நேரம் கேட்க முயற்சித்தேன். ஆனாலும் சில்வெஸ்டர் சண்டாவுடன் பேச மறுத்துவிட்டான். இதனால் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக சிவராத்திரி அனுஷ்டித்தோம். எல்லார் முகத்திலும் வெறுமை இருந்தது. சிரிக்க முடியவில்லை. அழுவதற்கு நேரமிருக்கவில்லை. ஒருவாறு பூசி மெழுகி சிஸ்டத்தை சரி செய்தோம். நான்காம் நாள் காலை, மறுபடியும் கண்ணை கட்டிக்கொண்டே சண்டாவின் வீட்டே விடப்பட்டோம். இந்த முறை சூழல் அவ்வளவு சுமுகமாக இருக்கவில்லை. வழமையாக கொஞ்சமேனும் புன்னகைக்கும் "வலது கை" அன்று கடுமையாக நடந்துகொண்டார். ஆனால் இந்த முறை எங்கள் சிஸ்டம் ஏமாற்றவில்லை. யாழ்ப்பாணத்தில் கொடுத்த கொலை ஆர்டர் யாழ்ப்பாணத்திலேயே நிறைவேற்றப்பட்டது. தர்மராஜூவுக்கு கொடுக்கப்பட்ட வெள்ளை வான் ஆர்டர் மூலம், தர்மராஜ் வெள்ளை வானில் கடத்தப்பட்டு முப்பது லட்சம் பணம் கொடுத்தபின்னர் விடுவிக்கப்பட்டார்.

சண்டாவின் முகத்தில் ஒரு திருப்தி தெரிந்தது. "தாதாயிசம் goes to IT" என்று கூவினார். நான்கு வைன் கிளாசை தானே எடுத்துக்கொண்டு வந்தார். "இது உயர்தர வைன். இது வெற்றிகரமாக முடிந்ததை கொண்டாடுவோம்." என்றார் ஒரு சிறுவனுக்குரிய உற்சாகத்துடன்.

அதற்கு பின்னர் சண்டாவுடன் சகஜமாக கதைத்தோம். எங்கள் குடும்பங்களை பற்றி அக்கறையாக விசாரித்தார். எப்போது கல்யாணம் என்று கண் சிமிட்டினார். கடைசியாக "மனுஷன் பிறந்த நாள்முதல் வன்மம் என்பது அவனை நிழல் போல் தொடர்கிறது. நீங்களும் அதற்கு விதிவிலக்கல்ல. தம்பி! நீங்க யாரையாவது பழி வாங்க விரும்பிறீங்களா. நீங்க எங்களுக்கு செய்த உதவிக்காக ஒரு பழிக்கு பழியை ப்ரீயா செஞ்சு தாறோம். அப்படி யாராவது இருக்கா" என்றார். "நான் எப்போதுமே அன்பை நாடுவேன். பழிக்கு பழி வேணாம் சேர்" என்றான் துமிலன். எனக்கு வேணாம் என்று சொல்ல தோன்றவில்லை. "சும்மா யோசிச்சு பாருங்க.. உங்களுக்கு யார் மேலாவது வன்மம் இருக்கலாம். உங்கள் user accountகளுக்கு ஒருமுறை மட்டும் ப்ரீ. இரண்டு நாளைக்குள் இதை பாவிச்சுடுங்க. பிறகு வருத்தப்படக்கூடாது. யாராகவும் இருக்கலாம். நான் கண்டுகொள்ள மாட்டேன். உங்களுக்கு பிடிக்காதவர்களை கொலைகூட செய்யலாம்" என்று கண் சிமிட்டினார்.

அத்தியாயம் 4: இதுதான் முடிவா

வீட்டுக்கு வந்த சேர்ந்தபோது மணி பத்து. கால் முகம் கழுவிக்கொண்டேன். மனதில் ஒருவித வெறுமை உணர்ச்சி. உடல் சோர்வாக இருந்தது. ஆனால் நித்திரை வரவில்லை. கம்ப்யூட்டரை ஓன் செய்தேன். சண்டாவின் கொலைகார சிஸ்டத்துள் நுழைந்தேன். புதிய ஆர்டரை பதிவு செய்ய கோரினேன். சிஸ்டம் என்ன தண்டனை என்று கேட்டது. நாக்கை அறுக்க வேண்டும் என்றேன். தண்டனை கொடுக்கப்படவேண்டிய ஆளின் பெயரை கேட்டது.

பொறுமையாக ஒவ்வொரு எழுத்தாக என்று டைப் செய்தேன். அது "சில்வெஸ்டர்" என்றிருந்தது.

Saturday, February 22, 2014

Software Companyயில அப்படி என்னதான் கிழிக்கிறாங்க..?

காலை எட்டு மணி பத்து நிமிஷம். சூரிய வெளிச்சம் கண்ணில் பட்ட ஒரே காரணத்துக்காக கண்ணை கஷ்டப்பட்டு திறந்தேன். இன்னும் பத்து நிமிஷம் நித்திரை கொள்ளணும் போல இருந்திச்சு. அப்போதுதான் கொஞ்ச நேரத்துக்கு முதல் ஏதோ sms வந்தது போல சத்தம் கேட்டது ஞாபகத்துக்கு வந்து தொலைத்தது. எடுத்துப்பார்க்கணும் போல ஆர்வமா இருந்துச்சு. அவளா இருக்குமோ என்று நினைத்துக்கொண்டு பார்த்த எனக்கு ஏமாற்றம் என்பதைவிட அதிர்ச்சியா இருந்ததுதான் உண்மை. Project manager பயல்தான் அனுப்பியிருந்தான். "நேற்று ராத்திரி நீ develop பண்ணின moduleலில் நாலு bugs கண்டுபிடிக்கப்பட்டிருக்கு உடனடியாக வந்து fix பண்ணினால் நன்றியுடையவனாக இருப்பேன்" என்றது sms. அந்த செக்கனிலேயே நித்திரை கலைந்தது. "நரிப்பயல் நேரம் கெட்ட நேரத்தில sms அனுப்பி உசிரை எடுக்கிறான்." என்று கறுவிக்கொண்டேன். அடுத்த பக்கம் திரும்பிப்படுத்தேன். ஆனால் ஒரு உண்மையான Software Engineerஆல் இதனை தட்டிக்கழிக்க முடியாது. மண்டைக்குள் என்னவோ செய்தது. நித்திரை முழுவதுமாக போய் மனதில் வைராக்கியம் வந்தது. "என்ட moduleலில வரும் bugஐ வேற எவனாவது fix பண்ண அனுமதிக்கலாமா?" என்று என் மனச்சாட்சி கேட்டது. இல்லை.. இல்லை.. என்று ஆயிரம் குரல்கள் மண்டைக்குள் ஒலித்தன. எல்லா Software Engineerகளின் மனதுக்குள்ளே  இப்படித்தான் ஆயிரம் குரல்கள் மண்டைக்குள் இருக்கும். இந்த குரல்கள்தான் அவனை வழிநடத்தும். பிரஷ்ஷில் கொஞ்சம் பேஸ்ட்டை போட்டு பல்லில் பட்டும் படாமலும் பல்லை தீட்டினேன். ரெண்டு கிழமையா தோய்க்காத ஜீன்சை எடுத்து மாட்டிக்கொண்டு பறந்தேன்.

பஸ்ஸில் ஏறி கண்ணை கொஞ்சமாக மூடி நித்திரையை தொடர்ந்தேன். கனவில் bug fix பண்ண முயற்சிப்பது போல வந்திச்சு. எவ்வளவு முயன்றாலும் முடியவில்லை. யாரோ தோளை தட்டினார்கள். Project managerதான் தட்டுகிறானோ என்று பயந்து கொண்டே திரும்பினேன். கண்டக்டர்தான், பஸ் காசு கேட்க தட்டியிருக்கிறான். காசை கொடுத்தேன். ஏதோ கிண்டலாக என்னை பற்றி பக்கத்திலிருப்போரிடம் சொல்லி சிரித்தான். நல்லவேளை சிங்களத்தில் சொன்னதால ஒண்ணுமே விளங்கவில்லை. Software Engineerஆ இருந்துகொண்டு சூடுசுரனை தேவையா.. மறுபடியும் கொஞ்சம் நித்திரை கொண்டேன். என்ட ஆபீஸ் அருகில் ஒரு பேக்கரி இருக்கும். பஸ்ஸில் போகும்போதே கேக் வாசனை முகத்தில் அடிக்கும். அதனை அடையாளமா வச்சு சரியா முழிச்சிடுவேன். ரெண்டு, மூன்று நாள் பேக்கரிக்காரன் கேக் போடாமல்விட, சரியான பஸ் haltஇல் இறங்காமல் கொஞ்ச தூரம் தள்ளி இறங்கி நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

நான் தூங்கி ஆபீஸ்ஸுக்கு போய் சேர்ந்தபோது மணி பத்து. ஆபீஸ் பாரதப்போரின் பத்தாம் நாள் முடிவில் இருந்த நிலைமைக்கு ஒத்ததாக இருந்தது. மூன்று பேர் மேசையில் நித்திரை தூங்கிகொண்டிருந்தார்கள். இன்னும் ஐந்து பேர் கண்ணில் கருவளையத்துடன் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனை முறைத்துக்கொண்டிருந்தார்கள். Project manager மட்டும் கொஞ்ச நேரத்துக்கு முன்னால்தான் குளித்துவிட்டு பாத்ரூமிலிருந்து வெளியே வந்தவன் மாதிரி freshஆ இருந்தான். என்னை பார்த்ததும் குட் மோர்னிங் சொல்லி
அடக்கடவுளே இன்னொரு "bug"
புன்னகைத்தான். நானும் அவனை பார்த்து கஷ்டப்பட்டு புன்னகையை வரவழைத்துக்கொண்டு குட் மோர்னிங் சொன்னேன். எனக்கு பக்கத்தில் இருக்கும் நீலன் அப்போதுதான் முகம் கழுவிக்கொண்டு பிரஸ் டூத்பேஸ்ட் சகிதம் ஆபீஸ் washroomஇலிருந்து வந்தான். நானும் எனது ஆபீஸ் மேசைக்கு அடியில் பிரஸ், டூத்பேஸ்ட், சின்னதாய் ஒரு சோப் வச்சிருப்பேன். வேலைக்கு சேர்ந்த தொடக்கத்தில் எல்லா பயலுகளும் ஏன்தான் இப்படி பிரஸ் டூத்பேஸ்டை மேசைக்கு அடியில் வைத்திருக்கிறார்கள் என்பது முதலில் புரியவில்லை. இரண்டு நாட்கள் இரவை ஆபீஸ்ஸில் கழிக்க நேர்ந்தபின்னர்தான் அந்த ரகசியம் புரிந்தது. எப்போதாவது வேலையை முடிக்கமுடியாமல் போனால் அன்று சிவராத்திரிதான். மற்ற எல்லாருக்கும் வருசத்தில் ஒரு நாள்தான் சிவராத்திரி. ஆனா Software Engineerகளுக்கு எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருப்பினும் வருசத்துக்கு நாலைஞ்சு தடவையாவது வந்து போகும்.

"எப்படிடா நீலா! நேற்றிரவு வேலை எப்படி போச்சு" என்று பேச்சை அப்பாவித்தனமாய் ஆரம்பித்தேன். "உன்ட moduleஇல் நாலு bug இருந்துச்சு. சரியாவே டெஸ்ட் பண்ண மாட்டியா? போதாக்குறைக்கு code compile பண்ணுதில்லை. அதை ஒரு மாதிரி சமாளிக்கவே அஞ்சு மணித்தியாலம் போச்சு. உன்னாலே எனக்கு நேற்று ராத்திரி முழுக்க அநியாயமா போச்சுடா" என்று முறைத்தான். உன்னால "code compile பண்ணுதில்லை" என்றது எனது முகத்தில் அறைந்தது போல இருந்தது. நெஞ்சு படபடத்தது. நான் நேற்று commit பண்ணின codeதான் compilation failureக்கு காரணமா என்று தீவிரமாக ஆராய்ந்தேன். என்ட computerஇல் சரியா வேலை செய்தது. ஆனால் தீவிர தேடுதல் முயற்சியில் compile ஆகாத codeஐ commit பண்ணிய புண்ணியவான் அர்ஜுன் என்று gitweb கூறியது.

அர்ஜுன்தான் எங்கட TechLead. எங்களைவிட கொஞ்சம் சீனியர். சுமார் ஆறு வருசமா கொம்பனியே கதி என்று பழியா கிடக்கிறான். அதனால நேரடியா "உங்கட பிழைதான்" என்று விஷயத்தை உடைக்க ஏலாது. சுத்தி வளைச்சு எப்படியாவது "நைசா" சொல்லணும். என்ன சொல்றது என்று தெரியாமலே அவனது இடத்தை நோக்கி நடந்தேன். ஆனால் அந்த பயல் இந்த projectஇன் சீரியஸ் நேரத்திலும் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனை பார்த்து பரவசமா புன்னகைத்துக்கொண்டிருந்தான். chatஇல் யாரோவொரு பொண்ணுக்கு smileyகளை ஜாலியாக அனுப்பிக்கொண்டிருந்தான். அர்ஜுன் சரியான மூளைசாலி அவனால்தான் project ஒருமாதிரியா நடை பழக ஆரம்பிச்சிருக்கு. அதனால Project Manager அவனை ராசா மாதிரி நடத்துவான். பத்து வருசமா ஒரு கேர்ள் பிரண்ட் வேணும் எண்டு தேடுதல் வேட்டை நடத்தினான். எல்லாமே பெயிலியர். இப்பத்தான் ரெண்டு மாசத்துக்கு முன்னாலதான் ஒரு பொண்ணு சிக்கியிருக்கு. ரெண்டு மாசமா chatஇல்தான் மவராசன் மிளகாய் அரைக்கிறான். அடிக்கடி தனக்கு தானே சிரித்துகொள்ளுவான். மாடிப்படி ஏறி முடிந்தபின்னரும் அந்தரத்தில் நடப்பது போல நடந்தான். அடிக்கடி சரியாக டெஸ்ட் பண்ணாமல் codeஐ commit பண்ணி எங்கள் உயிரை எடுத்தான். அர்ஜுனின் கவனக்குறைவால் வந்த bugsகளை "Love Bugs" என்று புது categoryயில் Jiraவில் log பண்ணவேணும் என்று எங்களுக்குள் பேசி சிரித்துக்கொள்வோம். இவனது தடாலடி மாற்றங்களை பார்த்த துமிலன், "மச்சான்! அரைகுறை அறிவோட ஒரு Developer டீமில் இருந்தாலும் பரவாயில்லை.. ஆனா லவ்வுல விழுந்த ஒரு developerஐ டீமில வச்சிருந்தா மற்றவங்களுக்கு வாழ்க்கையே நரகமாயிடும்டா" என்று புலம்புவான்.


துமிலன்தான் எங்கள் ஆபீஸின் கருத்து கந்தசாமி. கொஞ்சம் டீசண்டாக சொல்வதானால் Business Analyst. அவன் கருத்துப்படி Software Engineerகள் எல்லோரும் கறைபடாத புண்ணிய ஆத்மாக்கள். மற்றவர்கள் எல்லோரும் வில்லன்கள். எப்போதாவது இரவு நேரத்தில் ஆபிசில் நின்று வேலை செய்யவேண்டி வந்தால், அவன் பிரசங்கம்தான் எங்கள் நித்திரையை போக்கும் நிவாரணி. எக்கச்சக்கமாக உளறுவான். Client யாராவது requirementsஐ மாற்றினால் பயல் சூடாகி விடுவான். "சாகாம சாகிறவன்தான் Software Engineer.. சாவடிக்கிறவன்தான் client.. அவங்கட கைக்கூலிதான் நம்மட Project manager" என்பான். அவன் அடிக்கடி எடுத்துவிடும் புதுமொழிகளை Facebookஇல் ஒரு போஸ்டாக போடலாம். குறைஞ்சது நூறு லைக்காவது விழும். ஆனாலும் அவன் ஆபீஸுக்குள்ளே ஜோக்கராக இருந்தாலும், சார் வெளியே ஒரு மன்மதன். அவனுடைய பாஸ்வோர்ட்களை எளிதாக ஊகித்து விடலாம். அவனது அப்போதைய girlfriendஇன் பெயரையே பாஸ்வோர்டாக வைத்திருப்பான். அதை வெளியே சொல்லிக்கொள்வதில் பயலுக்கு ஒரு பெருமை. ஆனாலும் தயங்காமல் ஆறு மாசத்துக்கு ஒருமுறை பாஸ்வோர்ட் மாற்றுவான். "ஏண்டா இப்பிடி" என்று கேட்டால், "என்னடா செய்றது அடிக்கடி பாஸ்வோர்ட் மறந்து போயிடுது" என்று அசட்டுத்தனமாக புன்னகைப்பான். இவன மாதிரி ஆளுகளாலதான் Software Engineerகளுக்கு மார்கட்டுல ரேட் குறைவு என்று எங்களுக்குள் பேசிக்கொள்வோம்.

ஆனாலும் துமிலன் clientகளை அற்புதமாக கையாளுவான். ஒருமுறை அழகு சாதனபொருட்கள் தயாரிக்கும் கம்பெனி ஒன்றுக்கு ERP system implement செய்யவேண்டிய project எங்களுக்கு கிடைத்தது. ERP System பற்றி சரியாக தெரியாத என்னையும், துமிலனையும் மாலை போட்டு மஞ்சள் தண்ணி தெளிச்சு அனுப்பி விட்டார்கள். அப்போது அவனும் என்னை மாதிரியே ஒரு சாதாரண Software Developerதான். கோட்டு போட்ட இரண்டு பொண்ணுகளோடுதான் முதல் நாள் requirements meeting. மேடம் சாண்ட்ரா முப்பத்தைந்து வயது, எல்லாம் தெரிந்த அனுபவசாலி போல இருந்தாள். அவளோடு இருபது வயது போல இருந்த சில்வியா. அவள் கொம்பனியில் இலவசமாக கொடுத்த மேக்கப் சாதனங்களை பூசிக்கொண்டு பொம்மை மாதிரி சிக்கனமாக புன்னகைத்தாள். இவர்களோடு நானும் ஒரு ஆம்பிளை இருக்கிறேன் என்று சொல்லிக்கொள்ள கண்ணாடி போட்ட கோதுமை நிறத்தில் ஒருவன். தொடங்கியதுமே எக்கச்சக்கமான கேள்விக்கணைகள்.. சமாளிக்க முடியாமல் திணறினேன். சில கேள்விகளுக்கு மௌனம் சாதித்தேன். துமிலன் தனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லாதது போல சும்மா பக்கத்தில் இருந்தான். மீட்டிங் முடிந்தது. போரில் தோல்வியுற்ற தளபதி போல அவமானத்துடன் வெளியே வந்தேன்.


"என்னடா மச்சான்! எல்லா கேள்விக்கும் எப்படி என் ஒருவனால் பதில் சொல்ல முடியும். நீயும் உனக்கு தெரிஞ்ச ஏதாவது சொல்லி சமாளிக்க வேணாமா" என்று எனது மனக்குறையை வெளியிட்டேன். "அதில வந்த குறைச்சலா பேசின மற்ற பொண்ணு அழகா மேக்கப் போட்டுட்டு வந்திச்சு இல்ல.. அதை பார்த்திட்டே இருந்தனா.. ஒண்ணுமே புரியலை" என்றான். எனக்கு வந்திச்சே ஒரு கோபம். அன்றிரவு நடந்த சண்டையின் முடிவில் மீட்டிங்போது எனக்கு சப்போர்ட் பண்ணுவதாக ஒப்புகொண்டான். அடுத்த நாள் முழுக்க மேடம் சாண்ட்ரா கேள்வி கேட்க நான் மேலோட்டமாக ஏதோ சொல்ல அவள் அதற்கு மேல் விளக்கம் கேட்க துமிலன் விரிவாக புளிபோட்டு விளக்கமளித்தான். முன்னுக்கு இருந்த White Boardஇல் கன்னா பின்னாவென்று ஏதேதோ வரைந்தான். கொஞ்சம் UML மாதிரியும் கொஞ்சம் BPMN மாதிரியும் கலந்து வரைந்தான். மேடம் சாண்ட்ரா அதை தனது நோட்புக்கில் குறித்துகொண்டாள். சில்வியா வச்ச கண் வாங்காமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அரசியல்வாதிகள் போல இஷ்டத்துக்கு அதை செய்து தாறோம், இதை செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்தான். அதில் வரைந்த படங்களுக்கும் நாங்கள் develop பண்ண இருக்கும் systemத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிந்தாலும், குறுக்கிடாமல் எனக்கு கேள்விகளுக்கிடையில் கிடைத்த ஓய்வை அனுபவித்தேன்.

"சும்மா கலக்கிட்டேடா மச்சான். எப்படிடா இப்படி" என்று பாராட்டினேன். "பொண்ணுங்களுட்ட பேச ஒரு முறை இருக்கு. காலங்காலமா ஒரு விதிமுறை இருக்கு அதை பின்பற்றினாலே போதும். எனக்கு இதெல்லாம் தண்ணி பட்டபாடு.. நீ ஒரு கேள்வி கேட்டா, ஆடு திருடின கள்ளன் மாதிரி முழிப்ப, நான் அவங்களுக்கு பிடிச்ச மாதிரி ஏதோ கதை கதையா சொல்றன்" என்றான். பின்னாட்களில் ஏதாவது பிரச்சனை வந்தால் துமிலன்தான் மெயில் அனுப்பி clientஐ சம்மதிக்க வைத்தான். எங்கள் கம்பெனியில் Developer, Business Analyst, QA Engineer என்று வேறு வேறாக roles அதுவரை இருக்கவில்லை. அந்த நிகழ்வின் பின்னர் துமிலன் முழுநேர Business Analyst ஆக நியமிக்கப்பட்டான். இதுபோலவே நீலன் நாங்கள் செய்யும் வேலைகளில் தவறு கண்டுபிடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தான். அவனது develop செய்யும் வேலைகள் எங்களது தவறுகளால் பாதிப்படைவதாக project managerஇடம் சாதித்தான். இதனாலேயே அவன் முழுநேர QA Engineerஆக மாற்றம் பெற்றான். எங்கள் codeஇல் வரும் functionality தவறுகளை கண்டுபிடிப்பது அவனுடைய முழுநேர வேலையானது. புதுசா புதுசா வெவ்வேறு கோணங்களில் systemஐ டெஸ்ட் செய்து நிறைய bugs கண்டுபிடிப்பான்.

இப்படித்தான் எங்கள் கம்பெனியும் வளர வளர புதிது புதிதாக roleகள் உருவாகின. Business Analyst, QA Engineer போன்ற வேலைகள் குறிப்பிட்ட சிறப்பியல்புகள் தேவைப்படுவது போன்று Software Developer என்பதற்கும் சில முக்கிய தகுதிகள் இருக்கின்றன. Developer எனப்படுபவன் bug-free softwareஐ உருவாக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறான். ஆனால் அது இம்மையில் முடியாத காரியம். ஆகவே ஒரு bug அவனது moduleஇல் வந்தால் அதனை ஒத்துகொள்ளும் மனபக்குவம்  வேண்டும். Client கேட்கும் கேள்விகளில் தடுமாறினாலும், Clientக்கு தேவையான மாற்றங்களை ஏற்படுத்துவதே அவனது ஒரே குறிக்கோளாக இருக்கக்கூடிய ஒருவனே சிறந்த developer. ஆனால் சில நேரங்களில் அவன் ஒரு பலியாடு போல உணரும் சந்தர்ப்பங்கள் வரலாம். ஆனால் சூடுசுரனை இல்லாதவன்தான் Software Developer.


இந்தக்கதை நான் கண்ணால் கண்டு எழுதியது அல்ல. ஒரு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கம்பனி ஒன்றில் வேலைக்கு சேர்ந்த நாலு Software Engineerகளான நண்பர்களிடம் கேட்ட ஒன்றுக்கு ஒன்று ஒட்டாத அனுபவ கதைகளை கஷ்டபட்டு ஒட்ட முயற்சித்திருக்கிறேன். அவ்வளவுதான்.. நானும் ஒரு Developer என்பதால் கதையின் கடைசியில் ஹீரோ மாதிரி காட்டியிருக்கிறேன் :P. ஜோக்கர் மாதிரி அவன் உங்களுக்கு தோற்றினால் கண்ணை கழுவிவிட்டு மீண்டும் வாசிக்கவும் :).



Friday, June 7, 2013

ஆல்பியின் கல்யாணம்

அல்பிரடோவை எனக்கு இருபது நாளாகத்தான் தெரியும். நான் புதிதாக வேலைக்கு சேர்ந்த கம்பனியில் அவன் System admin. அதாவது எங்களுக்கு வரும் network சம்பந்தமான பிரச்சனைகளை தீர்த்து வைப்பதுதான் அவனது தலையாய கடமை. அவனை மெக்ஸிகோக்காரன் என்றுதான் எங்களுக்கு தெரியும். ஐம்பது வயதானாலும் முப்பத்தைந்து வயது ஆண்மகன் போன்ற ஒரு மிடுக்கான தோற்றம் இருக்கும். Officeக்கு smartஆக வருபவர்களில் இவனும் ஒருவன். அவனை "ஆல்பி" என்று செல்லப்பெயர் வைத்து
கூப்பிட்டால் சந்தோசப்படுவான். ஆகவே நாங்களும் அப்படியே கூப்பிடுவோம். எவ்வளவு கஷ்டமான பிரச்சனை என்றாலும் நிதானமாக செயல்படுவான். ஒவ்வொரு நாளும், அவன் வேலை முடிந்தது வெளியேறும்போது நேரத்தை பார்த்தால் சரியாக மணி ஆறு என்று
காட்டும். ஆனாலும் ஆறு மணிக்கு.பத்து நிமிடங்களுக்கு முன்னதாக யார் என்ன வேலை கொடுத்தாலும் ஒன்றும் சொல்லாமல் பொறுப்பேற்பான். ஆனால் மாலை ஆறு மணியானால் வைத்ததை வைத்துவிட்டு டாண் என்று வெளியேறி விடுவான். இப்படித்தான் ஒரு முறை IT manager ஏதோ
ஒரு முக்கியமான விஷயத்தை கொடுத்துவிட்டு Washroom போய் வருகிற gapஇல் ஆல்பிரடோ ஆறு மணிக்கு escape ஆகி விட்டான். IT Manager தாம் தூம் என்று குதிக்க அடுத்த நாள் நாங்கள் எல்லோரும் அந்நிகழ்வை பற்றி chat செய்து விவாதித்தோம். மதிய உணவு இடைவேளையின்போது தாராம் சிங் IT Manager முதல் நாள் கோபத்தில் கத்தியது போன்று நடித்துகாட்டினான். அல்பிரடோ அதை கண்டு கொள்ளவில்லை. தாராம் சிங் அல்பிரடோவுடன் எப்போதும் எதாவது ஒரு விசயத்துக்காக கொளுவிக்கொண்டிருப்பான். இவர்கள் இரண்டு பேர்களிடையே எப்போதும் எதாவது ஒரு சப்பை விசயத்துக்காக விவாதம் நடக்கும். "இந்த மெக்ஸிகோக்காரர்கள் எல்லாம் இப்படித்தான்.. இங்கிதம் தெரியாத பயல்கள்" என்று தாராம் சிங் ஸ்டைலான ஆங்கிலத்தில் முடிவுரை வழங்குவான். இதனை தமிழில் சொல்லும்போது ஒரு மாதிரியா இருந்தாலும் தாராம் சிங்கின் ஆங்கில உச்சரிப்பு அதன் அர்த்தத்தின் காரத்தை குறைத்து விடும்.

அலுவலகத்தில் மதிய உணவு இடைவேளையின் பின்னர் கொஞ்ச நேரம் Table tennis விளையாடுவோம். IT Manager ஏதாவது ஒரு மீட்டிங்க்கு போய் விட்டால் இன்னும் ஒரு மணி நேரம் கூடுதலாக விளையாடுவோம். தாராம் சிங் எப்போதும் அல்பிரடோவுடன் மோதுவான். தாராம் சிங்க்கு எனது வயதுதான் இருக்கும். சும்மா வளைந்து வளைந்து விளையாடுவான். ஆல்பி மூச்சிரைக்க கஷ்டப்பட்டு ஓடியாடி விளையாடுவான். தாராம் சிங் வென்று விட்டால் வெற்றியில் ஐந்து நிமிடமாவது கொக்கரிப்பான். அதனை தடுக்கும் ஒரே நோக்கத்திற்காகவே அல்பிரடோ உயிரை கொடுத்து விளையாடுவான். ஆனாலும் அவன் ஒரு முறையும் வென்றதாக சரித்திரம் இல்லை. இரண்டு மூன்று மேட்ச் தோற்ற பின்னர்தான் அப்பிராணியான என்னுடன் விளையாட வருவான் அல்பிரடோ. என்னுடன் விளையாடி வெற்றி பெற்று மனதை தேற்றிக்கொள்வான்.
வேலை நேரத்துக்கு முடியும் நாட்களில் என்னை காரில் ஏற்றி சென்று ரயில் நிலையத்தில் விட்டு விடுவான். அவனால் எனது கட்டாய அரை மணி நேர நடைபயிற்சியிலிருந்து தப்பித்துக்கொள்வேன். அவ்வாறான நாட்களில் அவனுடன் உரையாட வாய்ப்பு கிடைக்கும். "நீங்க எப்ப மெக்ஸிகோவிலிருந்து வந்தீங்க" என்று ஆரம்பித்தேன். "என்னுடைய சொந்த நாடு பொலிவியா.. இந்த அவுஸ்திரேலியர்களுக்கு பொலிவியா என்றோதொரு நாடு உலக Mapஇல் இருப்பதே தெரியவில்லை.. ஆகவே பக்கத்தில் இருந்த மெக்ஸிகோவை எனது நாடு என்றேன். எல்லோருக்கும் விளங்குது" என்றான். இப்படி கதைத்துக்கொண்டே காரில் போகும்போது பின்னால் வந்த கறுப்பு கார் எங்கள் காருக்கு அண்மையாக overtake செய்து கொண்டு போனது. பத்து சென்டிமீட்டர் தூரம்தான் இருந்திருக்கும். "இப்படியே போ உனக்கு நரகம்தான் கிடைக்கும்" என்று கூவினான் ஆல்பி. அதோடு சேர்த்து, இரண்டு மூன்று ஸ்பானிஷ் கெட்ட வார்த்தை சொன்னான். நல்லவேளை எனக்கு ஸ்பானிஷ் தெரியாது. இங்கு மொழிபெயர்க்க வேண்டியதில்லை. அவனது முகம் கோபத்தில் சிவந்திருந்தது.

"இந்த பயல்களுக்கு ஒரு பாடம் கற்பிக்காமல் விடப்போவதில்லை" என்றான். அந்த கறுப்பு காரின் பின்னால் விரட்டி கொண்டு போனான். வேகம் என்றால் பயங்கர வேகம். எனக்கு குடல் தொண்டையில் தட்டுபடுவது போல உணர்ந்தேன். நான் இறங்க வேண்டிய ரயில் நிலையம் தாண்டி கார் சீறிக்கொண்டு போவதை பார்த்து முழித்துக்கொண்டிருந்தேன். என்னுடைய இடம் வந்து விட்டது. என்பதை சொல்லுவமோ என்று யோசித்து அவனது சிவப்பேறிய முகத்தை பார்த்ததுமே ஒரு வார்த்தை வரவில்லை. பத்து நிமிஷ வெறி பிடித்த ஓட்டத்தின் பின்னர் அந்த கறுப்பு காரை நெருங்கினோம். கண்ணாடியை திறந்து நடுவிரலை உயர்த்தியவாறு அந்த காரை overtake செய்தான். அதன்பின்னர்தான் அவனது தலைக்கேறிய இரத்தம் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற பாகங்களுக்கு சென்றடைய முகத்தில் கடுமை தன்மை
குறைந்தது. "எப்படி துரத்தி பிடிச்சேன்.. பார்த்தாயா" என்றான். நான் திரு திருவென்று முழிப்பதை அப்போதுதான் கவனித்திருந்தான்.

"அடடா.. ரயில் station தாண்டிடுச்சே" என்றான். அப்போதுதான் அவனது கோபத்தினால் எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை அவதானித்திருந்தான். திடீரென்று சிரித்துக்கொண்டே "நான் எப்பவுமே இப்படித்தான், என்னை ஒருவரும் கார் ஓடுவதில் மிஞ்சி விட முடியாது." என்றான். "இல்லை பரவாயில்லை என்னை அடுத்த ரயில் நிலையத்தில் இறக்கி விட்டால் பரவாயில்லை" என்றேன் எச்சிலை விழுங்கிக்கொண்டே. "எனக்கு கொஞ்சம் கூட கோபம் வரும். அவுஸ்திரேலியாவுக்கு வரும்முன்னர் பொலிவியா இராணுவத்தில் இரண்டு வருஷம் இருந்திருக்கேன். அப்போதெல்லாம் எடுத்ததேற்கெல்லாம் கோபம் வரும். இப்ப எவ்வளவோ better" என்றான். ஒருவாறாக அடுத்த ரயில் நிலையத்தில் இறக்கி விட்டபின்னர்தான் எனக்கு நிம்மதி வந்தது. அவனுக்கு நன்றி சொல்லியபோது எனக்கே நான் சொன்னது காதில் எதுவும் விழவில்லை.

இப்படியே சில நாட்கள் கடந்தது. ஒரு நாள் மத்தியானம் சாப்பிட சூரிய வெளிச்சத்தில் அமர்ந்திருந்தோம். வசந்த காலம் அப்போதுதான் தொடங்கியிருந்தது. இவ்வளவு காலம் இருந்த கடுமையான குளிரினால் வெளியே செல்வதை தவிர்த்தோம். வசந்த காலத்தொடக்கத்தில் இதமான சூரிய ஒளியில் உணவருந்தினோம். தாராம் சிங் அன்று  காலைதான் IT Managerஉடன் கடுமையாக ஒரு deadline சம்பந்தமாக சண்டை போட்டுக்கொண்டிருந்தான். அதனால் Lunch Timeஇல் கூட சிரத்தையாக வேலை செய்வது போல பாவனை செய்து கொண்டிருந்தான். ஆகவே அவன் எங்களுடன் உணவருந்த வரவில்லை. சைனாக்காரன் "சான் லீ" அன்று லீவு. ஆகவே அன்று நானும் ஆல்பியும் மாத்திரமே அன்றைய Lunch இல் ஆஜர். தாராம் சிங்கின் அறுவை காரணமாக வாயை திறக்காத ஆல்பி அன்று மட்டும் கொஞ்சம் சகஜமாக கதைத்தான்.

"இராணுவத்திலிருந்து விலகிய பின்னர் பொலிவியாவுக்கு திரும்பி போயிருக்கிறீங்களா"

"ம்ம்.. அதுக்கு பன்னிரெண்டு வருசமாச்சு.. ட்ரெயினில் போய் இறங்கினப்போ ஊரே என்னை பார்க்க வந்திச்சு"

"அண்ணை ஊருக்குள்ள செல்வாக்கான ஆசாமி போலும்" என்று சிரித்தேன்.

"இல்லை. எனக்கே ஆச்சர்யமாத்தான் இருந்திச்சு.. அண்ணாதான் சொன்னான்.. எனக்கு அம்மா கல்யாண ஏற்பாடு செஞ்சிருந்தா என்று"

"மகிழ்ச்சியான விசயம்தானே.. உனக்கு அதிர்ஷ்டம்தான் போ" என்றேன். அவனின் முகத்தில் சலனமில்லை. எனது முகத்தை உற்று நோக்கினான்.

"பன்னிரெண்டு வருஷம் கழிச்சு எல்லோரையும் பார்க்க போறேன். யாரோ ஒரு பொண்ணை காட்டுறாங்க. இதுவரை பார்க்காத ஒரு புதுபெண்ணு. அடுத்த நாள் என்னோட மனைவி. என்னால் எச்சிலை கூட விழுங்கமுடியவில்லை"

"கொஞ்சம் அதிர்ச்சியான விசயம்தான். பிறகு என்ன நடந்திச்சு" என்றேன் ஆர்வமாக.

"அப்பா இல்லாத எங்களை அம்மாதான் கஷ்டப்பட்டு வளர்த்தா.. அப்போது அது ஞாபகத்துக்கு வரலை.. அன்றைக்கு அவளை கடுஞ்சொற்களால் திட்டினேன். அண்ணா பிடித்திராவிட்டால் அவளை அடிச்சிருப்பேன். அம்மா எனக்கு செஞ்ச காரியத்துக்கு இன்னும் அவளை

மன்னிக்கவில்லை" என்றான். அவன் கண்களில் முட்டிய கண்ணீரால் கண்கள் வசந்த கால சூரிய ஒளியில் ஒளிர்ந்தது. "எல்லோரும் என்னிடம் கதைத்தார்கள். அண்ணா என்னை சமாதானப்படுத்தினான்.. என்னோட நிலைமையை வனேஸ்ஸாவுக்கு தனியாக சந்தித்து விளக்க முயற்சித்தேன். இந்த கல்யாணத்தை மிகவும் எதிர்பார்த்திருந்ததாக வனேஸ்ஸா சொன்னா. மற்றவங்க மனசை புண்படுத்த என்னால முடியலை"

"வனேஸ்ஸா சொன்னவுடனே ஹீரோ ஒத்துக்கொண்டிருக்காரு போல" என்றேன் சிரித்தவாறு.

"இல்லை. இது இப்ப சாதாரண விசயமா இருந்தாலும் அப்போது என்னை வாட்டியேடுத்தது. அதை பற்றி நினைத்தாலே இப்போது கூட நெஞ்சில் இடது பக்கத்துக்கு கீழே ஒரு வலி வரும்" நெஞ்சை மெதுவாக அழுத்தினான். இப்போதுகூட வலி வந்திருக்க வேண்டும்.

நான் கேள்விகள் கேட்பதை நிறுத்திவிட்டு மௌனமாக அவனை பார்த்துக்கொண்டிருந்தேன்.

"ஏய் நண்பா! என்ர சோகக்கதையை கேட்டு அழுதிறாத! தொடக்கத்தில் கஷ்டமாக இருந்தாலும் இப்ப உலகத்திலே மகிழ்ச்சியான couple நாங்கதான். விஸ்கி அடிச்சது மாதிரி மூஞ்சியை வச்சிருக்காத. வா ஒரு Drive போய் வருவோம். Dessert வாங்கித்தாறேன். செலவு என்னோடது" என்றான்.

Monday, September 24, 2012

கடைசி இருபது நாட்கள்...!

"58, 59, 60 அப்பாடா ஒருவழியாக அறுபது நாட்களை இந்த நாசமா போற தேசத்தில் கடத்தியாயிற்று" என்று எனக்கு நானே சந்தோசப்பட்டேன். இலங்கைக்கு திரும்ப இன்னும் இருபது நாட்களே இருந்தன. ஆனால் இப்போது துருவா இல்லை. அவனை இலங்கைக்கு அனுப்பி விட்டார்கள். கார் ஓடத்தெரிந்த புண்ணியவான் அவனும் இப்போது இல்லை. நானும் ஜோவும் மட்டுமே மிஞ்சியிருந்தோம். இப்போது Trainஇல்தான் Officeக்கு போக வேண்டிய துரதிஷ்டநிலை. இது பற்றாது என்று Officeஇலிருந்து அண்மையாக இருக்கும் Railway station சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திலிருந்தது. ஆகவே ஒவ்வொரு நாளும் நடைராசாதான். அதுவும் ஜோவுடன் நடக்க வேண்டும்.

ஜோ ஒரு வினோதப்பிறவி. தான் ஒருவன்தான் உலகத்திலே பிழைகளுக்கு அப்பாற்பட்ட ஆத்மா என்ற எண்ணங்கொண்டவன். அவனது தொலைந்து போன மூன்று Socksகளை குப்பைகூடையில் எறிந்தது நான்தான் என்று மனதார நம்புபவன்.  ஆகவே நாங்கள் எலியும் பூனையும் போல சண்டையிடுவதை நிறுத்த அந்த ஆண்டவனே நேரே வந்து கெஞ்சினாலும் முடியாத சமாச்சாரம். 3 கிலோமீட்டர் தூரம் சண்டை பிடித்துக்கொண்டு நடந்தால் தூரம் அதிகம் போல தெரியும் என்றான் ஜோ. ஆகவே எங்கள் இருவருக்கும் பொதுவான எதிரிகளை பற்றி கதைத்து நேரத்தினை கழிப்பதாக முடிவு செய்தோம். எங்களுக்கு கட்டளையிடும் அதிகாரம் படைத்த வெள்ளைக்காரன் டானியலை பற்றி கதைத்தால் ஜோவுக்கு உற்சாகம் பொத்துகொண்டு வரும். இங்க்லிஷில் தெரிந்த "உதவாக்கரை", "உருப்படாத பயல்" போன்ற வார்த்தைகளுக்கு சமனான ஆங்கில வார்த்தைகளால் அவன் வேலையில் செய்யும் பித்தலாட்டங்களை பற்றி கதைத்து மகிழ்ந்தோம். நீண்டதூரம் நடக்கும் போது உடல் சூடேறுவதால், ஆஸ்திரேலியா Winter ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. .

அந்நேரம் Carbon Tax எனப்படும் சமாச்சாரம் அவுஸ்திரேலியா மீடியாக்களில் கடல் வழியான குடியேற்றம் பற்றிய செய்திகளையும் முந்திக்கொண்டது. ஒவ்வொரு Companyயும் தாமாக வெளியேற்றும் CO2 அளவுக்கேற்றவாறு வரி கட்டவேண்டுமேன்பதுதான் இந்த Carbon Tax வரிவிதிப்பு. ஆகவே இதன்மூலம் கம்பனிகள் சூழலுக்கு வெளியேற்றும் CO2 அளவை குறைக்க முயற்சிக்க வேண்டும் அல்லது கடுமையான வரியை அரசாங்கத்துக்கு கட்டவேண்டும். இந்த வரிப்பணத்தை வைத்து அரசாங்கம் சூழழில் அதிகரிக்கும் CO2வின் அளவை குறைக்கும் செயற்திட்டங்களுக்கு பயன்படுத்த இருப்பதாக செய்திகள் வந்தன. எங்கள் அலுவலகத்திலும் இதுபற்றிய கடுமையான விவாதங்கள் நடந்தன.

சில்வெஸ்டர் கொஞ்சம் சீரியசான ஆசாமி. நாலு பேரை இழுத்து வைத்துக்கொண்டு ஒரு கையில் ஆவி பறக்கும் Coffee Mugக்குடன் Carbon Tax பற்றிய சீரியஸாக ஆராய்ச்சி நடத்திக்கொண்டிருந்தான். இனி பொருட்களின் விலைகள் வானத்தை எட்டும் என்பது அவனது விவாதமாக இருந்தது. இந்நேரத்திலே சிகரெட் Breakஇற்காக வெளியே சென்று வந்த கமேரன் அவ்வழியாக வந்தான். அவனது மூச்சுகாற்றில் இருந்த சிகரெட் வாசனை அங்கிருந்த எல்லோரையும் தாக்கியது. சில்வெஸ்டர் உடனடியாக "உதாரணமாக கமேரன் போன்ற நபர்களுக்கும் Carbon Tax கட்டாயமாக்கப்படவேண்டும். சிகரெட் மூலமாக CO2இனை வெளியேற்றும் இந்த படுபாவிகளும் கூடுதலாக Carbon Tax கட்ட வேண்டும்" என்று சாதாரணமாக சொல்ல எல்லோரும் கொல்லென்று சிரித்தனர். அது போதாது என்று அது பற்றிய email ஒன்றையும் எல்லோருக்கும் தட்டி விட்டான்.

ஒவ்வொரு நாளும், மதிய உணவு முடிந்த பின்னரும் Table Tennis விளையாடுவோம். எங்கள் அலுவலகத்தில் மொத்தமாக நூறு பேர் வேலை செய்தாலும், பத்து பேர் மாத்திரமே இருக்கிற IT Departmentகாரனுகள்தான் மட்டும்தான் விளையாட்டில் இறங்குவோம். சைனாக்காரன் "சான் லீ"தான் எங்களுக்கு குரு. பத்தரை மணிக்கு வேலைக்கு வந்தாலும் Lunch Time ஒரு மணிக்கு Racketஉம் கையுமாக ஆஜராகி விடுவான். எனக்கு சுமாராகவே விளையாட வருவதால் லேசில் என்னை சேர்க்கமாட்டான்கள். மெக்ஸிகோக்காரன் ஆல்பி மட்டும்தான் என்னோடு போட்டிக்கு வருவான். என்னோடு விளையாடினால் மட்டும்தான் அவனுக்கு வெற்றி பெற வாய்ப்பிருப்பதால் இப்படி ஒரு கருணை. Doubles விளையாட ஆள் பற்றாது என்றால் மட்டுமே என்னை கூப்பிடுவான்கள். "சிங்"கும், ஈரானியன் அப்துல்லும் ஒருவித வெறியுடனே விளையாடுவார்கள். Lunch Time முடிந்தபின்னரும் நேரம் போவது தெரியாமல் Table Tennis விளையாடுவான்கள். Office மூடும்வரை மாலை நேரத்தில் வியர்க்க விறுவிறுக்க விளையாடாவிட்டால் அந்த நாளே வேஸ்ட் என்று "சான் லீ" அடிக்கடி கூறுவான்.

ஆஸ்திரேலியாவில் என்னுடன் பல்கலைகழகத்தில் படித்த நண்பர்கள் பலர் வேலை செய்து கொண்டிருந்தனர். அந்த பெரிய தேசத்தில் அவர்களது ஒரே contact, email மட்டும்தான். அடுத்த சனிக்கிழமை சந்திக்க முடியுமா என்று கேட்டு ஒரு email அனுப்பினேன். "அடிசக்கை! நீயெல்லாம் Sydneyக்கு வந்திட்டியா.. இனிமே மழை பொய்ச்சுடும்" என்பது போன்ற கனிவான வரவேற்புகள். "எப்படி இருக்கு Sydney" என்று ஸ்மித் கேட்டான். "இதுவரைக்கும் சும்மா பரவாயில்லையில்லடா மச்சான்! கொஞ்சம் விரிவா சொல்லனும்னா நான் Sydney பயணம் பற்றி எழுதின Blogஐ வாசிச்சு பார்.. என்று சைக்கிள் Gapல ஈயடிக்க ஆளில்லாத என்னுடைய Blogஐ market பண்ணினேன். emailஇல் பிளான் பண்ணின மாதிரி ஒரு சனிக்கிழமை நண்பன் மோர்கன் தங்கியிருந்த வீட்டுக்கு போனேன்.

எனது நண்பர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது ஆளுக்கொரு இங்கிலீஷ் பெயர் வச்சுக்கூப்பிடுவார்கள். ஆகவே **கன் என்ற பெயர் மோர்கன் என்று மாற்றம் பெற்றது. மோர்கனின் வீட்டு சாமான்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இரைந்து கிடந்தன. "என்னடா மச்சான்! campus hostel மாதிரியே ரொம்ப cleanஆ இருக்கு" என்று சிரித்தேன். இதனால் கடுப்படைந்த மோர்கன்  "டேய் இதைப்பத்தி உன்னோட இழவு Blogல ஒரு வார்த்தை எழுதினா Friendship Cut" என்று எச்சரிக்கை விடுத்தான். பேச்சை மாற்ற "வேலை எங்கடா மச்சான்" என்று கேட்டு வைத்தேன். "ஒரு மணித்தியாலம் Trainஇல போகணும்டா. ஆனா இந்த ஏரியாவில முழுக்க தமிழ் சாப்பாட்டுக்கடை நிறைய இருக்குது. அதனால இங்கேயே குடியேறிட்டன். சமைச்சு கஷ்டப்படதேவையில்ல பாரு.." என்றான்.


நாங்களிருவரும் மிஞ்ஜன் என்கிற இன்னொரு நண்பனுடன் இணைந்து ஒரு Lunchஇற்கு போவதாக பிளான். மணி ஒன்றானது. இன்னும் மிஞ்சனை காணவில்லை. எல்லாத்தையும் நேரத்துக்கு செய்து பழகிய மோர்கன் பொறுமையிழந்து மூன்றாம் தடவையாக போன் செய்தான். "டேய்! எங்கடா இருக்கிறே.. மணி இரண்டாக போகுது. நான் காலையிலே சாப்பிடலைடா" என்று அழாக்குறையாக சொன்னான். "கொஞ்சம் இருடா இன்னும் இரண்டு நிமிஷம்தான்" என்று மிஞ்ஜன் கெஞ்சினான். மோர்கன் கொஞ்சம் வெள்ளைக்காரன் மாதிரித்தான். எல்லாமே நேரத்துக்கு நடக்கணும். கடவுள் உலக Mapஐ சரியாக பார்க்காமல் செய்த தவறினால் இலங்கையில் பிறந்தவன். Jaffna St.Johnsஇலே படித்தவன். ஆகவே அப்போதே இங்கிலீஷ் நல்லா கதைப்பான். ஆனால் என்னதான் நல்லா இங்கிலீஷ் கதைச்சாலும் அதனை பிகர்களை மடிக்க பாவிக்காத நேர்மையாளன். "இவன் இப்ப Sydneyஇல் வாங்கும் சம்பளத்தை நீ retire பண்ணும் காலத்தில கூட வாங்க மாட்டே" என்று சாம்சன் எப்போதுமே என்னிடம் சொல்லுவான். ஆனாலும் அவனது sydney Apartment எங்களது Campus Hostelலை விட கொஞ்சமே மேம்பட்ட நிலையிலிருந்தது.

மிஞ்சன் ஒருமாதிரியா இரண்டு மணிக்கு வந்து சேர்ந்தான். "எப்படிடா இருக்கே.. அப்ப பார்த்த மாதிரியே இருக்கே.... Unbelievable" என்றான் மிஞ்ஜன். மோர்கன் வீட்டிலிருந்து 45 நிமிஷம் வேகமான கார் பயண தொலைவிலிருக்கும் ஜாக் & ராஷ் வீட்டுக்கு போனோம். எங்களுக்காக இருவரும் சமையல் செய்திருந்தார்கள். Bachelor சமையல் என்றாலும் நான்கு கறிவகைகளும் மூன்று பொரியலுமாக விருந்து களைகட்டியது. விருந்து முடிந்தபின்னர் பின்னேரம் எங்கே போவது என்ற விவாதம் தொடங்கியது.

படம் போரடிக்கும் என்றார்கள். கிரிக்கெட் விளையாட முடியாத அளவுக்கு நிறைய சாப்பிட்டு விட்டோம். ஜாக் "வாங்கடா எல்லோரும் Bush Walk போவோம்" என்றான். சொல்லும்போதே அவன் கண்கள் ஒருவித பரவசநிலையிலிருந்தன. "அது என்னடா BushWalk.. அப்படி என்றால் என்னடா மச்சான்" என்று கேட்டேன். அவுஸ்திரேலியா ஒரு புதர்க்காடுகளை கொண்ட வறண்ட தேசம்.. அவுஸ்திரேலியன்களின் முதல் முக்கிய பொழுதுபோக்கே அந்த புதர்களினூடாக நீண்ட தூரம் ஜாலியாக நடைபோடுவதுதான். அதுதாண்டா மச்சான் BushWalk என்றான் ஜாக். ஜாக் இலங்கையில் Campusஇல் படிக்கும்போது அவனுக்கு படிப்பது மட்டுமே அவனது ஒரே ஒரு பொழுதுபோக்காக இருந்தது. Campusஇல் சொல்லிக்கொடுக்கும் படிப்பு பற்றாது என்று CIMA, BCS போன்ற இதர Courseகளில் சேர்ந்து படித்து இந்த பிறவிப்பயனை அடைந்தவன். ஆனால் இப்போது Bushwalk என்றதொரு அந்நியமான பொழுதுபோக்கு அவனது TopTenஇல் முதலிடத்தில் இருந்தது.


Manly Beachக்கு பக்கத்தில் இருக்கும் Walkwayஇல் போவதாக இருந்தோம். ஜாக்தான் காரை ஓட்டினான். ஒருவித வெறியுடனே வேகமாக போய் சேர வேண்டும் என்று ஓட்டினான். போய் சேர்ந்ததும் எல்லோரும் beach மணலில் நடந்து பழங்கதை பேசினோம். மோர்கன் கையில் camera இருந்தது. சூரியன் மறையும் மாலைக்காட்சியை எப்படியாவது அழகாக எடுக்க வேண்டுமென்றான். ராஷ் மற்றவர்களை கலாய்ப்பதில் வல்லவன். மோர்கன் சொல்லும் ஒவ்வொரு வசனத்துக்கும் ஏதாவது சொல்லுவான். "மச்சான் நீ மோர்கனை பத்தி Blog எழுதுடா.. நான் உனக்கு நல்லா நாலு points எடுத்துத்தாறேன்" என்றான். Walkway சில இடங்களில் அழகாக இருந்தது. படிகள் சில இடங்களில் கட்டப்பட்டிருந்தன. பல இடங்கள் பாறைகளும் . உயரமான பாறை மேல் ஏறி கடலின் அழகை ரசித்தோம்.

மோர்கன் பரந்த மேகங்களை  Cameraவுக்குள் அடக்க முயற்சித்தான். ஒரு இடத்தில் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட பதுங்கியிருந்து துப்பாக்கி சுடும் தளத்தை (Gun Pit) பார்க்கக்கூடியதாக இருந்தது. வேகமாக நடந்ததால் குளிர் தெரியவில்லை. சூரியன் மறைய பத்து நிமிடங்களே இருந்ததால் வந்த பாதையிலே காரை நோக்கி நடந்தோம். "மச்சான் இங்க பாருங்கடா கார் parking ticket எடுக்க மறந்து விட்டோம். அநேகமாக Fine போட்டிருப்பானுங்க" என்றான் ஜாக். உண்மைதான் காரின் முன்புறத்தில் 100 டொலர் Fine Receipt வைக்கப்பட்டிருந்தது. "எல்லோரும் மறந்து தொலைச்சீங்க.. ஆளுக்கு 33 டொலர் கட்டுங்க" என்று சொல்லியவாறே மோர்கன் காரை எடுத்தான். இப்படித்தான் முக்கிய இடங்களில் parking டிக்கெட் எடுக்காமல் park பண்ணினால் fine அடித்து விடுவான்கள்.

இலங்கைக்கு திரும்பிச்செல்லும் நாளும் ஒருவாறாக வந்து விட்டது. இந்த நாள் எப்போது வரும் என்று இருந்த எதிர்பார்ப்பு இப்போது இல்லை. மனம் வெறுமையாக இருந்தது. கிட்டத்தட்ட இருபது மணித்தியால பிரயாணம் முடிந்த பின்னர் நள்ளிரவு ஒரு மணிக்கு வீட்டினை வந்தடைந்தேன். மெதுவாக நடந்து எனது ரூமுக்கு போனேன். காமிக்ஸ்கள் மேசையில் கொட்டிக்கிடந்தன. மூன்று மாதங்களின் பின்னர் காமிக்சை கண்டேன். கையில் அகப்பட்ட ஒரு காமிக்சை எடுத்துக்கொண்டு படுக்கையில் விழுந்தேன். அதன் தலைப்பு "நரகத்தின் நடுவில்"..

Wednesday, July 25, 2012

இது ஒரு குளிர் காலம்!


உல்லாச பறவைகளாக கதவை திறந்து கொண்டு வெளியே வந்தோம். மறைக்கப்படாத ஒரே இடமான முகத்தில் குளிர் காற்று அடித்தது. வெளியே பெய்த மழையில் கார் சுத்தப்படுத்தப்பட்டிருந்தது. எல்லோரும் கைகளை உரசி சூடேற்றினோம். துருவா வேகமாக ஓடிப்போய் டிரைவர் சீட்டில் இடம் பிடித்து முதல் வேலையாக எஞ்சினை ஸ்டார்ட் செய்து ACயை போட்டான். "கதவை பூட்டுங்கடா.. குளிர் வரப்போகுது" என்றான். அவன் ஒருத்தனுக்குத்தான் கார் ஓட்டத்தெரியும். ஆகவே அவனின் கட்டளையை மதித்தோம். ஜோ எப்போதுமே முன் சீட்டில்தான் இருப்பான். துருவாவின் டிரைவிங்க்கு பின் சீட்டுதான் எனக்கு பாதுகாப்பு. அவன் எப்போவுமே திடீர் என்று வேகமா எடுப்பான், ஸ்பீட்லிமிட் அறிவிப்பினை பார்த்தவுடன் ப்ரேக் போட்டு வேகத்தினை குறைப்பான். அம்பது மீட்டருக்கு ஒருக்கா எது எதற்கோ ப்ரேக் போடுவான். நல்லவேளை சீட் பெல்ட் புண்ணியத்தால் எங்கள் பற்கள் பாதுகாக்கப்பட்டன. இவனுடன் ரெண்டு நாள் காரில் போனாலே மூன்றாம் நாள் காரில் போய் விபத்து ஏற்படுவது போல கனவு வரும். ஆனாலும் இந்த குளிரில் Train ஏறி நீண்ட நேரம் நடுநடுங்கி Apartment போய் சேர்வதை விட கார் அக்சிடென்டில் ஒரு வினாடியில் நரகம் போய் சேரலாம் என்பது நல்ல டீலாகவே இருந்தது. 

"இன்னிக்கு வேலை எப்படிடா மச்சான்" என்று பின்னேரத்துக்குரிய வழமையான கேள்வியை ஜோ தொடங்கினான். அவனுக ரெண்டு பேருக்கும் தமிழ் தெரியாது. ஆகவே வேலை நேரம் மட்டுமில்லாமல் எப்போதுமே இங்கிலிஷ்தான். ஆகவே மச்சான் என்பதை Dude என்றோ Mate என்று நாங்கள் பேசிக்கொண்டதாக நினைத்துகொள்ளுங்கள்:). "சைனாக்காரன் எல்லா வேலையையும் என்ட பக்கம் தள்ளுறாண்டா.. அவன் கதைக்கிற இங்கிலிஷும் புரியல.. அவன் எழுதின codeஉம் புரியல" என்று ஜோ தனது வழமையான பல்லவியை தொடங்கினான். "எனக்கு பரவாயில்லைடா மச்சான்! அந்த வெள்ளைக்காரன் சில்வெஸ்டருடன்தான் நாலு நாளா வேலை.. அவன் தெய்வம்டா.. ஒண்ணுமே கேட்க மாட்டான்.. ஒரு Deadline இல்லை.. முடிச்சிட்டியா என்று ஒரு கேள்வி கேட்க மாட்டான்.. நான் என்ர பாட்டுக்கு ஜாலியா code பண்ணிட்டிருப்பேன்" என்று சத்தமாக சிரித்தான்.

என்னுடைய நிலைமை இவனுகளைவிட கொஞ்சம் மோசம். இவ்வளவு நாளா ஜாலியா வீட்டை அம்மா சமைக்கிற சாப்பாட்டை சாப்பிட்டு ஒன்பதரை மணிக்கு வேலைக்கு போய் கொண்டிருந்த எனக்கு ஆஸ்திரேலியா விண்டர் குளிரில் ஆறு மணிக்கு எழும்பி எனக்கான உணவை நானே தயாரித்து எட்டு மணிக்கே நடுநடுங்கும் குளிரில் வேலைக்கு போக வேண்டிய தூரதிஷ்டத்தினை நொந்து கொண்டேன். வேலைக்கு போனால் காலை ஒன்பது மணிக்கே தூக்கம் வந்து விடும். இலங்கையில் அப்போது நாலரை மணிதானே. இப்படித்தான் ஒருநாள் அரைத்தூக்கத்தில் இமை கண்ணை மூடும்போது Hi Mate! how do u do! என்று என் தூக்கத்துக்கு இடைஞ்சலாக ஒரு குரல். அது கெவின். பாவிப்பயல் நான் தூங்கி வழிவதை பார்த்திருப்பானோ. இந்த கெவின் புதிதாக வந்த பயல். வயதோ முப்பதுகளின் நடுவிலிருக்கும். அவனது computer wallpaperஇல் கிருஷ்ணர் ராதா படமிருக்கும். கேட்டால் தான் ஒரு இந்து என்பான். அவனது இந்திய மனைவியை மணந்த பின்னர் இந்துவாக மாறியதாக கூறினான். எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு வட இந்திய snacksஐ கொரித்துக்கொண்டிருப்பான். புது இடத்தில் வேலை செய்ய திணறிக்கொண்டிருந்த எனக்கு உதவிகள் செய்தான். போன வருடம் இந்தியா போனபோது ஆதவற்றோர் இல்லங்ககளுக்கு சென்று உதவி செய்ததாக சொன்னான். என்னையும் ஒரு ஆதவற்றவனாக கருதி நான் install பண்ண தடுமாறிக்கொண்டிருந்த Applicationஐ எனது Laptopஇல் Setup பண்ண உதவினான். இவன் வியாழக்கிழமை காலை ஏழு மணிக்கு அங்கு வேலைக்கு நேரத்தோடு வரும் எல்லோருக்கும் யோகா சொல்லிக்கொடுத்தான்.

எங்களுக்கு ஒரு அபார்ட்மென்ட் தரப்பட்டிருந்தது. நாங்களே சமைக்க வேண்டும். வீட்டில் அம்மா ஒளித்து வைத்த மிக்சர், பிஸ்கட் திருட மட்டுமே சமையலறைக்கு சென்றிருக்கிறேன். எங்களில் "ஜோ"தான் தைரியசாலி. கண் எரிந்தாலும் இரண்டு வெங்காயத்தை இரண்டு நிமிசத்தில் நறுக்கிவிடுவான். ஆகவே ஜோதான் சமையலை தலைமையேற்று நடத்துவான். எனக்கு காரட், தக்காளி வெட்டுற மிக முக்கிய பொறுப்பு. ஜோ ஏதாவது ஒரு கறியை தத்து பித்து என்று வைத்து விட்டு "சாப்பிடுறா மச்சான்! இன்னிக்கு கறி சூப்பர்" என்பான். நானும் நாக்கில் படாமல் குடிகாரப்பயல்கள் சரக்கடிப்பது போல பட்டென்று விழுங்குவேன். நாக்கில் பட்டால் வாழ்க்கை வெறுத்துவிடும். நாங்கள் செய்யும் மத்தியான உணவு நால்லாயிருக்குமோ இல்லையோ வேலை செய்யும் இடத்தில் எல்லோருடனும் சேர்ந்து சாப்பிடும் போது நடக்கும் சம்பாஷணை நன்றாக போகும். இப்படித்தான் ஒருநாள் எல்லோரும் கூடியிருந்த Lunch Roomஇல் எனது உணவின் முதல் கரண்டியை விழுங்கினேன். தொண்டை சும்மா எரிந்தது. ஆனாலும் உணவின் சுவையினால் நிறுத்தாமல் சாப்பிட்டேன். துருவாவுக்கு காரம் பிடிக்கும் ஆகவே கறிக்குள் மிளகாய் தூளை கண்ட மேனிக்கு கொட்டுவான். எனக்கு கண்ணால் கண்ணீரும் வழிந்தது. ஜோ மூக்கை உறிஞ்சிக்கொண்டு சாப்பிட்டான். இதைப்பார்த்து அல்பிரடோ சிரித்தான்.

அல்பிறேடோ மெக்ஸிகோக்காரன். வயது சுமார் அம்பது இருக்கும். எல்லோரும் அவனை ஆல்பி என்றுதான் கூப்பிடுவார்களாம். எங்களையும் மனுசனுகள் மதித்து நட்பாக கதைப்பவர்களில் அவனும் ஒருவன். அவன் சொல்லும் ஜோக்கை விட அவன்  கொண்டு வரும் உணவுகள் பார்க்க அழகாக இருக்கும். எங்களுக்கும் தரமாட்டானா என்றிருக்கும். "அவ்வளவு உறைப்பாகவா இருக்கு" என்று எங்கள் கறியில் கொஞ்சம் சுவைத்தான். "இதெல்லாம் ஒரு காரமா? நாங்கள் மெக்ஸிகோவில் இதைமாதிரி பத்து மடங்கு காரம் சாப்பிடுவோம்" என்றான். உலகிலேயே நாங்கள்தான் அதிக காரம் சாப்பிடுவோம் என்று இதுநாள்வரை நினைத்திருந்தேன். "பத்து வருசத்துக்கு முன்னாலே மெக்ஸிகோவிலிருந்து என்னை பார்க்க வந்த எனது மாமா நாலு பக்கெட் மெக்ஸிகன் மிளகாய் கொண்டு வந்தார் ஆஸ்திரேலிய Customs பயல்கள் அதை பறித்து விட்டான்கள். ஆனாலும் கோட் pocketஇல் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு மிளகாய் பாக்கெட்டை எனக்கு தந்து ஆச்சர்யப்படுத்தினார்" என்று மிளகாய்க்கும் அவனுக்குமான உறவுக்கு சுர்ரென்ன்று ஒரு உதாரணம் சொன்னான். ஜெய் சிங் சீக்கிய இனத்தவன். அவனுக்கு இந்த கதை கேட்டே நாக்கில் உறைப்பது போன்று உஷ்.. உஷ்.. என்று சப்புகொட்டினான். அவனுக்கு மிளகாய் என்றாலே அலர்ஜியாம். சிறுவயதில் இருந்தே ஆஸ்திரேலியாவில் வாழ்ந்ததால் எப்போதும் உப்புசப்பில்லாத பேர்கர் பன்தான் அவனது தேசிய உணவு.

காலையில் எழுந்து பற்கள் கட.. கட,, என்று அடித்துக்கொண்டிருக்க வேலைக்கு போவது கடினமாக இருந்தாலும் அந்த குளிர் எனக்கு பிடித்திருந்தது. இதுவரை காலமும் சிகரெட் பிடித்திராத எனது வாயிலிருந்தும் புகை வந்தது. என்னதான் குளிராக இருந்தாலும், ஒவ்வொரு நாளும் சிவனே என்று எட்டரை மணிக்கே வேலைக்கு ஆஜராகி விடுவோம். ஆனால் எனக்கு பக்கத்தில் இருக்கும் சைனாக்காரன் பத்து மணிக்கு ஜாலியா வந்திறங்குவான். குட் மோர்னிங் சொன்னாலும் பதிலுக்கு ஏதாவது வாய்க்குள்ளே சொல்லுவான். இதுவரை காலமும் தமிழை அப்படி இங்க்லிஷில் வார்த்தைக்கு வார்த்தை மொழிமாற்றி கதைக்கும் சீவன் நான் ஒருவன்தான் என்று எண்ணியிருந்தேன். ஆனால் இந்த சைனாக்காரன் எழுத்துக்கு எழுத்து சைனிஸ் மொழியை இங்கிலீஷ் வார்த்தைகளாக மாற்றி கதைத்தான். அவன் சொன்ன ஒரு வார்த்தைக்கான அர்த்தத்தை கண்டுபிடிக்க அஞ்சாறு நாட்கள் எடுத்தது. அவனோடு ஒரு Projectஇல் வேலை செய்த போது ஏற்பட்ட அனுபவம் வித்தியாசமாக இருந்தது. அவன் மனதுக்குள் ஒரு Designஐ போடுவான். அதற்கேற்றவாறு எனக்கு Taskக்குகளை எனக்கு வழங்கினான். ஆனால் ஏன் இவ்வாறு செய்கிறோம் என்றோ Design பற்றியோ சொல்ல மாட்டான். அதை பற்றி அவனிடம் கேட்டால் சம்பந்தமில்லாமல் ஏதாவது சொல்லுவான். இதைதான் Software சொல்வளத்தில் Collyer brothers Syndrom என்பார்கள். Collyer brothers பற்றிய கதை பரிதாபமான சுவாரசியமான சகோதரர்களின் வாழ்க்கை. அவர்களை போலவே மனக்கதவை இறுக்கமூடி சரியாக communicate பண்ண மறுக்கும் Developerஐ இந்த பெயரின் மூலம்தான் அழைப்பார்கள்.

இலங்கையில் எனது அலுவலகம் காமா சோமாவேன்று அமைதியாக இருக்கும். யாராவது சத்தமாக கதைத்தாலும் எல்லோர் கண்ணும் அவர்களை கடுமையாக நோக்கும். ஆனால் இந்த அலுவலகத்தில் சத்தத்துக்கு பஞ்சமிருக்காது. வந்த முதல் நாள் எனது இருக்கையில் முன்னால் டக்.. டக்.. என்று ஆணி அடிப்பது போலான சத்தம் கேட்டது. அலுவலக நேரத்தில் யாராது ஆணி அடிக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தால் எனக்கு முன்னால் இருந்த "கமேரன் வைட்" சத்தமாக காலை தட்டியவாறே Headphoneஇல் அதிரடியான பாடலை ரசித்துக்கொண்டு வேலையிலாழ்ந்திருந்தான். பாடலின் Beat அதிகமாக அவனது கால்களினால் ஏற்படுத்தும் ஓசையும் அதிகமானது. திடீரென்று Oh! Come on.. You can't do this to me.. என்று computer screenஐ பார்த்துக்கெஞ்சினான்.
அடப்பாவி இவன் ஆபீஸ் இவன் லவ்வருடன் Skype call கதைக்கிறான் போல என்று அவன்மேல் காண்டானேன். சிலவேளைகளில் S#!T, F^*& போன்ற இன்சொற்களால் அர்ச்சனை செய்தான். இவன் யாருடன்தான் ஒவ்வொரு நாளும் இப்படி கதைக்கிறான் என்று எனக்கு ஆர்வம் மேலிட மெதுவாக அவன் பின்னால் எதேச்சையாக செல்வது போல சென்று பார்த்தேன்.. பாவிப்பயல் Eclipse IDEஇல் PHP Codeஐ பார்த்துக்கொண்டு கதைத்துக்கொண்டிருந்தான். ஒரு Codeஐ எழுதிவிட்டு Test செய்யும்போது பிழைத்தால் Come on Dear என்றான். மீண்டும் ஒருமுறை பிழைத்தால் S#!T அடுத்த முறை பிழைத்தால் F^*& என்று வார்த்தைகளில் காராசாரத்தை கூட்டினான்.

ஒவ்வொரு நாள் தொடங்கும்போதும் மனக்காலன்டரில் இன்னும் எத்தனை நாட்கள் இந்த உப்புசப்பில்லாத் (சிலநேரங்களில் உப்பு அதிகம்) உணவை சாப்பிட வேண்டுமோ என்று கணக்குப்பார்ப்பேன். எனக்கு அவங்கள் தந்திருக்கிறது மூன்று மாச விசா. இதுவரை முப்பது நாட்கள் முடிந்துவிட்டன என்று காலையில் சந்தோசப்பட்டேன். ஆனால் இரவு உணவை விழுங்கும்போது இன்னும் அறுபது நாட்கள் இருப்பதை எண்ணி வருந்தினேன். வேலை நாட்கள் அநியாயத்துக்கு போரடித்தாலும் வார இறுதி நாட்களில் சிட்னியில் ஏதாவது ஒரு தமிழ் நிகழ்வுக்காகவாது போய் வரக்கிடைக்கிறது. JK அண்ணா இரண்டு மாசத்துக்கு முதலே கம்பன் விழாவுக்காக சிட்னி வருவதாக சொல்லி விட்டார். இம்முறை அண்ணரும் சுழலும் சொற்போரில் பங்கேடுப்பதால் இம்முறை சிட்னி கம்பன் விழாவை காண ஆவலாக இருந்தேன். கொழும்பில் கம்பன் விழா நடந்தாலும் ஒரு நாளும் சென்றதில்லை, ஆகவே முதன்முறையாக நான் ஆஜர்.

நிகழ்வு நடந்த இடம் சிட்னி முருகன் கோயில். ஆகவே ஒன்பது மணிக்கு அங்கு சென்று எனது காலணியை கழற்றி கொண்டிருந்தபோது ஒரு பரிச்சயமான குரல்.. வேற யாரு JK அண்ணாதான். குர்தா போட்டு வேட்டி கட்டிக்கொண்டு வந்தார். காலில் இருந்த Sport Shoeதான் பொருத்தமில்லாமல் கொளுவப்பட்டிருப்பது போலிருந்தது. வழமையான புன்னகையுடன் "எப்படியிருக்கே" என்றார். நேரமாகி விட்டதால் அவசர அவசரமாக மண்டபத்துக்கு சென்றோம். போகும்போது வேட்டியை கொஞ்சம் தூக்கியவாறு நடந்தார். நான் விநோதமாக பார்க்க "தம்பி! நான் போட்டிருக்கிறது Nike Shoeடா. Jeans என்றா பரவாயில்லை. இந்த வேட்டி மறைக்குது" என்றார். அண்ணா Nike/Armani Brandகளுக்கு "அழையா" Brand Ambassadorஆக இன்னமும் இருக்கிறார் என்பது தெளிவாக தெரிந்தது. விழாவின் தொடக்கத்தில் பேசிய தமிழகத்தை சேர்ந்த பேச்சாளர்களின் பேச்சுகள் நகைச்சுவை + இலக்கியம் கலந்து செவிக்கு இனிமை சேர்த்தன. அதன்பிறகு நான் மிகவும் எதிர்பார்த்திருந்த சுழலும் சொற்போர் ஆரம்பித்தது. "டேய்! நான் என்ன கதைச்சாலும் நல்லா கையை தட்டுடா" என்று சொல்லிக்கொண்டே மேடையேறினார் அண்ணா. அதில் JK உட்பட மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் பங்கேற்றனர். முதலில் பேசிய சர்மா "தொண்டு" பற்றிய விளக்கத்தினை வலிமையான கம்பராமாயண பாடல்கள் சகிதம்  விளக்கினான். பின்பு பேசிய JK ஒருவித மென்மையான குரலில் ஆரம்பித்தாலும் பின்பு இயல்பாக பேச்சினால் தனது வாதத்தினை வைத்தார். அவரது தலைப்பு "தியாகம்". சமகால நிகழ்வுகளை கம்பரமயணத்துடன் வரிக்கு வரி இணைத்து வலிமையான விவாதங்களை முன்வைத்தார்.
இதுபோதாதென்று மற்றவர்களின் தலைப்புகளுக்கு எதிரான வாதத்தினை ஆணி அடித்ததை போல சொல்லி அமர்ந்தார்.

இவரின் இந்த தாக்குதலால் கோபமடைந்த மற்ற பேச்சாளர்களும் இவரை தாக்க தயங்கவில்லை. இவருக்கு பின்னால் பேசிய பெண் பேச்சாளர் இவருடைய பெயர் குமரன் என்பதால் இவருக்கு இரண்டு மனைவிகள் இருக்கலாம் என்ற விவாதத்துடன் தொடங்க சபையில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. அண்ணா ஒரு கல்யாணத்துக்கு கூட Invitation கூட அனுப்பாமல் இரண்டு ரகசிய கல்யாணம் முடித்துவிட்டாரா என்று நானும் சந்தேகப்பட்டேன். எல்லாம் முடிந்த பின்னர் "அண்ணே உங்களுக்கு ரெண்டு மனைவிகளா" என்று அவரை கேட்க "எனக்கே அவங்க ரெண்டு பேரும் யாருன்னு சத்தியமா தெரியலடா" என்றார்.

Wednesday, May 30, 2012

இவன்தாண்டா Software என்ஜினியரு!

அவனுக்கு தலை கலைந்திருந்தது. மூஞ்சியை மூணு நாள் கழுவாத மாதிரி கண்கள் காய்ந்து போயிருந்தது. Armani டீ-சேர்ட் ஜீன்ஸ் போட்டு அரைவாசி இன் பண்ணியிருந்தான். டீ-சேர்ட் அவனுடைய கடைசி தம்பிக்குத்தான் சரியாக பொருந்தும் போல. அவனுக்கு கொஞ்சம் இறுக்கம்தான். ஜீன்ஸ் இரண்டு மூன்று இடங்களில் கிழிந்திருந்தது. பந்தடிக்கப்போற பயல் போடுற மாதிரி ஒரு அழுக்கு sports ஷு அவனது காலில் மாட்டப்பட்டிருந்தது. அவனுக்கு கிட்டே போனால் மூணு நாளைக்கு முன்னர் செத்த நாய்க்கு கிட்டே போன மாதிரி நாற்றம் வந்தது. இவ்வளவு விபரிப்புக்குமுரிய இந்த பிச்சைக்காரன் அல்லது பிச்சைக்காரன் மாதிரியான இவன் ஒரு A/C போட்ட அறையில் ஜாலியாக நின்றுகொண்டிருந்தான். என்னதான் இந்த பயல் பிச்சைக்காரன் என்று நீங்கள் நினைத்தாலும் இவனுக்கும் பிச்சைக்காரனுக்குமிடையே ஒரு முக்கிய வித்தியாசமிருக்கிறது. பிச்சைக்காரனிடம் லாப் டாப் இருக்காது அப்படியே இருந்தாலும், பிச்சைக்காரன் ஒரு நாளும் லேப் டாப்பில் சட்டு சட்டுனு டைப் பண்ண மாட்டான். Facebookக்கில் ஒரு statusஐ போட்டுட்டு அதுக்கு எவன் Like பண்ணுறான். எவள் ச்சோ கியுட் என்று பதில் comment அடிக்கிறாள் என்று பார்க்கமாட்டான். பார்க்க பிச்சைக்காரன் மாதிரி இருந்தாலும், இந்த மாதிரி ஒருசில வித்தியாசங்களை கொண்ட ஜீவராசிதான் Software Engineer. இவன் ஒரு கூட்டத்திலே போனால் மற்ற எல்லோருமே இவனை ஏதோ வேற்று கிரகவாசியை பார்ப்பதுபோல பார்ப்பார்கள். இவனும் பதிலுக்கு அவர்களை புழுவை பார்ப்பதுபோல அலட்சியபார்வையுடன் நோக்குவான். அந்நேரத்திலும் அவனது காதுகள் Walkmanஇல் சத்தமாக கேட்கும் இங்க்லீஷ் பாட்டை கேட்டுக்கொண்டிருக்கும். தமிழ்ப்பாட்டு என்றால் ரஹ்மான் பாட்டு மட்டும்தான் கேட்பானுங்க.

இவனுக்கு இங்கிலீஷ் தெரியுமோ இல்லையோ! அவன் சொல்லும் கெட்ட வார்த்தை எல்லாமே இங்கிலீஷ் versionதான். S#!%, F^&$ என்று நாலு வார்த்தைக்கு ஒரு முறை சொல்லுவானுகள். எப்ப இந்த மாதிரி இலக்கியத்தனமான வார்த்தைகள் அவனது வாயில் இருந்து வராமல் இருக்கிறதோ அந்நேரம் அவன் தூங்கிக்கொண்டிருப்பான் இல்லை பெரிய Burger bunஐ விழுங்கிக்கொண்டிருப்பான். அவனது கண்களில் எப்போதுமே நான்கு மணித்தியாலத்தூக்கம் தொங்கிக்கொண்டிருக்கும். கண்கள் உள்ளே போய் கொஞ்சம் வயோதிகத்தனம் நிழலாடும். இப்படியான கேவலமான ஜந்துக்களான பல Software Engineerகளுக்கு GirlFriend என்றொரு சமாச்சாரம் இருக்கவே இருக்காது. ஏன் ஒரு பொண்ணு கூட Friendஆ இருக்க மாட்டா. பெண்களை பார்த்தாலே அநியாயத்துக்கு நெளிவான். ஆனா பயலுக்கு ஆம்பளை Friendகளின் எண்ணிக்கையை விட பொண்ணுங்கதான் Facebookகில friendஆ இருக்கும். சூப்பரா கமெண்ட் போட்டு எத்தனை பொண்ணுங்க Like பண்ணுது என்று கண்ணை விரித்து பார்ப்பான். ஆஞ்சு பொண்ணு Like பண்ணினாலே போதும் நம்மாளு Ticket வாங்காமலே உலகத்தினை சுற்ற ஆரம்பிச்சிடுவான். ஆனால் நண்பர்கள் மத்தியில் தான் ஒரு மன்மதன் என்பதான ஒரு மாயையை தோற்றுவிக்க முயற்சி பண்ணி தோற்றுவிடுவான்.

இப்பவெல்லாம் எந்த பொண்ணு freeஆ இருக்குது எது எவன்ட purseஐ காலி பண்ணுது என்று கண்டுபிடிக்க Facebook ஒரு நல்ல வரப்பிரசாதம். அதுக்கின்னே இருக்கிற சமாச்சாரம்தான்  Relationship status update. என்னுடைய lover இவன்தான், இவள்தான் என்று Profile ல் போட்டு காட்டி மற்றவர்களின் வயிற்றேரிச்சலை வாங்கிக்கொள்ளும் feature. 90% சதவீத Software Engineerக்கு ஒரு பொண்ணும் சிக்காது. இவன் போய் 24மணித்தியாலமும் வேலை வேலை என்று திரிவானாம். இவனை போய் யார்தான் லவ் பண்ணுறது என்று ஒருத்தியும் கண்டுக்க மாட்டா. அதை தாண்டியும் ஒருத்தனுக்கு செட் ஆனா என்ன சொல்றது. அவன்ட Purseக்கு கஷ்ட காலம்தான். ஆகவே பெரும்பாலான Software Engineerகள் மற்றவர்களின் Relationship statusஐ பார்த்து வயிறேரிவதிலேயே ஒரு நாளைக்கு 2 மணித்தியாலத்தினை  செலவழிக்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. ஒரு பயல் ஒரு பொண்ணு OK சொல்லிட்டா அம்மா அப்பாவிடம் சொல்றானோ இல்லையோ Facebookகில Relationship status update பண்ணிடுவான். ஆனா சிலவேளைகளில் இப்படி Publicஆ update பண்ண தடைகள் இருக்கலாம்.

1. அவனுடைய அப்பாவோ அம்மாவோ Facebookஇல Friendஆ இருந்தால் கிழிஞ்சுது. "டேய் என்னடா இதெல்லாம்" என்று தொடங்கும் பூசை, தலைகீழாக அபிஷேகத்தில் முடியும்.

2. அவனுடைய பழைய காதலி யாராவது Friendஆ இருந்தா போதும். புது காதலிக்கு பழைய காதலி Friend request அனுப்பி இவன் இப்படித்தான் என்னையும் கழற்றி விட்டான் என்று எச்சரிக்கை Chat அடிப்பாள்



3. பொறாமை பிடித்த நண்பர்கள். ஏதாவது பழைய விசயங்களை Facebookஇல் comment என்ற வடிவில் கிளப்பி விடுவார்கள். "டேய் ராஜூ! நீயும் சராசரியான ஆம்பிளைதான்" என்று வசனத்துடன் காதல் முற்று பெறும் சாத்தியங்கள் மிக அதிகம்.


Software Engineerகள் வீட்டில் இருப்பதைக்காட்டிலும் Officeஇல் அதிக நேரத்தினை செலவழிப்பான். "மகன் ஒரே பிஸிதான்.. இப்ப ஏதோ ஒரு அமெரிக்கன் கம்பெனி Project செய்றான்" என்று பக்கத்து வீட்டு அங்கிளுக்கு அப்பா சொல்லிக்கொண்டிருப்பார். "நேற்றுக்கூட இரவு இரண்டு மணிக்கு வரச்சொல்லி ஆபீசிலிருந்து போன்.. அது அவனால மட்டும்தான் செய்ய முடியுமாம்" என்று பெருமைபடுவார் அப்பா.. ஆனா இதை நம்மாளு கேட்டா நொந்து போடுவான். அவன் வேலைகளில் செய்த பூச்சி பிழைகளை (Bugs) உடனடியாக திருத்தித்தருமாறு Project manager சத்தம் போட தூங்குமூஞ்சியாக
அதிகாலை இரண்டு மணிக்கு போக வேண்டியதாகி விட்டது. அவன் செய்த பிழைகளை அவன்தானே திருத்த வேண்டும். ஆகவே அவனால மட்டும்தானே முடியும். "வீட்டை ஒருநாள் இருக்க மாட்டான். Officeக்கு போய் என்னத்தைதான் கிழிக்கிறானோ தெரியல.. இந்த பாழாப்போன வேலைக்கு போனதிலிருந்து அவன் பாதியா போயிட்டான்" என்று அம்மா அவனுடைய healthஐ பற்றி புலம்புவாள். லீவு நாளில் வீட்டை சும்மா இருந்தா எதாவது வீட்டு வேலையை தந்தாலும் என்ற பயத்திலேயே அவன் Officeஇற்கு போகிறான் என்ற விஷயம் தெரியாமல் அப்பா மகனை தலையில் வைத்துக்கொண்டு ஆடுவார். எந்நேரமும் AC போட்டு மூடி இருக்கும் Officeஇல் இருப்பதால் சூரியன் உதித்து மறையும் சமாச்சாரம் இவனுக்கு தெரிய வாய்ப்பில்லை. சூரியன் எந்த திசையில் உதிக்கும் என்று கேட்டால் 2ஆம் வகுப்பு பிள்ளை கூட சரியாக சொல்லும் ஆனா நாம்மாளு கடுமையா யோசிப்பான். "West இல்லை Northஆ இருக்குமோ! கொஞ்சம் doubtஆ இருக்கு" என்று முறுக்கு புழிவான். வேலையில் அவனுக்கு இருக்கும் அனுபவம் கூட கூட பொது அறிவு Graph கீழ் நோக்கி சரியும்.


எனக்கு பல Software Engineerஆன நண்பர்களை தெரியும். அவர்களுடன் கதைக்கும் போது எப்போதும் சிரிப்பதற்கு தயாராக இருக்கவேண்டும் என்னதான் ஜோக் சுமாராக இருந்தாலும். இல்லையென்றால் கூட்டத்தில சேர்க்கமாட்டானுக. தங்களுக்கு மட்டுமே விளங்கிற ஒரு Logicஇல் கதையை காதில ரத்தம் வாற அளவுக்கு இட்டுக்கட்டி சொல்லுவானுங்க. .ஆகவே உங்களுக்கு பொழுதுபோக்க ஒரு விஷயமும் இல்லை என்றால் Software Engineerஐ வம்புக்கு இழுக்கலாம். நல்லா பொழுது போகும். அதையே Facebookஇல் வம்பு இழுத்தா நல்லா Respond பண்ணுவான். சும்மா செஞ்சு
பாருங்க!

மேலே எனக்கு தெரிஞ்ச உண்மைகளைத்தான் எழுதியிருக்கிறேன். உங்களுக்கு சிரிப்பு வந்தா சும்மா சிரிச்சுட்டு போங்க.. ஆனா இனி நீங்க ஒரு Software Engineerஐ தெருவில் பார்த்தால் சிரித்துவைக்காதீர்கள். நொந்துபோயிடுவான். அவனும் ஒரு பாவப்பட்ட ஜென்மம் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் "Like This" ஐ கிளிக்குங்கோ! இல்லேன்னா பரவாயில்லை Friends ஆகவே இருப்போம் :).