Sunday, May 5, 2019

வெறுங்கால் சுட்டிப்பையன் ஜென் - Barefoot GEN Comics


போர் என்பது வெறுப்பான விஷயம். அது துயரம் மிகுந்தது. போர் நடக்கும் நாடுகளில் வசிக்கும் மக்கள் வாழ்க்கையே இருள் மிகுந்து விடுகிறது. உயிர் மேல் இருக்கும் ஆசை, மற்றைய ஆசைகளை தின்று விடுகிறது. போரில் ஈடுபடுவர்கள் ஒருநாள் சாகிறார்கள், ஆனால் நடுவில் இருக்கும் சாதாரண மக்கள்தான் நித்தமும் செத்து பிழைக்கிறார்கள்.  எங்கள் நாட்டின் முப்பது வருட யுத்தத்தின் பெரும்பகுதி எனது சிறு பிராயத்தை ஆக்கிரமித்திருந்தது. யுத்தம் இல்லாத நாடு எப்படியிருக்கும் என்பதே எங்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.  ஒரு வருடம் தொடர்ச்சியாக பள்ளிக்கூடம் போகாமல்கூட  இருந்திருக்கிறேன். வீட்டில் நித்தமும் விளையாடிக்கொண்டிருந்தேன். சிறுவயதுகளில் எதையும் விளையாட்டாகவே பார்த்ததால் போரின் உண்மையான தார்பரியம் சரியாக விளங்கவில்லை. மிராஜ் பிளேன் வரும்போது கதிரைக்கு அடியில் ஒளித்து பாராட்டு பெற்றேன். "சண்டை தொடங்கிட்டுது" என்றாலும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. சண்டை  நடந்தால் பள்ளிக்கூடம் போகாமல் வீட்டில் இருக்கலாம் என்ற ஒரு இனம்புரியாத சந்தோசம் மட்டுமே இருக்கும். ஆனால் வளர்ந்த பிற்பாடு கொழும்பில் இருக்கும்போது ஆமி செக் பண்ண வாரான் என்றாலே காலில் நடுக்கமெடுத்தது வேறு கதை. ஐந்து வயதுகளில்  போர் விமானங்கள் தாழ்வாக பறந்தபோது பங்கர்களில் ஒளிவதையே ஒரு விளையாட்டாக  எடுத்துக்கொண்டேன். பின்னாட்களில் விமான குண்டுவீச்சில் தெரிந்தவர்கள் பலியானபோதுதான் உண்மை நிலை விளங்கியது.  சிறுவர்களுக்கு எல்லாமே விளையாட்டாகவே வாழ்க்கை நகர்கிறது. போர் அவர்களின் வாழ்க்கையை பாதித்தாலும் விளையாட்டு மனநிலையை எதுவும் செய்யாது போலும். ஆனால் அவர்களை நேரடியாக பாதிக்கப்படும்போது விஷயமே தலைகீழாகிவிடுகிறது.

1945ஆம் ஆண்டு ஜப்பானின் ஹீரோஷிமா நகரில் அணுகுண்டு வீசப்படுகிறது. உலக வரலாற்றின் துன்பம் மிகுந்த நிகழ்வு சர்வசாதாரணமாக அமெரிக்காவினால் நிகழ்த்தப்படுகிறது. அதில் கெய்ஜி எனும் ஆறு வயது நிரம்பிய சிறுவன் தனது தந்தை மற்றும் அக்கா, தம்பியை பலியாவதை கண்முன்னே காண்கிறான். சிறுவனான அவனால் அவர்களை காப்பாற்ற முடியாமல் போனாலும், 8 மாத கர்ப்பிணியான தாயுடன் தப்பி பிழைக்கிறான் கெய்ஜி. இந்த அணுகுண்டுஅந்நகரில் வாழ்ந்த மக்கள் எல்லோரின் வாழ்க்கையையும் மாற்றி போட்டுவிடுகிறது. சிறுவனான கெய்ஜியின் மனதில் ஆறாத்துயரை அது ஏற்படுத்துகிறது. கெய்ஜி வளர்ந்து பின்னாட்களில் ஜப்பானின் பிரபல மங்கா காமிக்ஸ் கார்ட்டூனிஸ்ட் ஆக உருவாகிறார். தனது மனதில் பதிந்த துயரத்தை காமிக்ஸ் என்ற மீடியத்தை வடிகாலாக பாவித்து  "Ore wa Mita" என்ற பெயரில் காமிக்ஸாக மாற்றுகிறார். அது "I SAW IT" என்று ஆங்கில மொழியில் மொழிமாற்றம் பெறுகிறது. 1972இல் வெளியான அந்த கதையில் இருந்த சோகம், மகிழ்ச்சி, துயரம் எல்லோரையும் கட்டிப்போட்டது. அவர் அதனை தன்னுடைய சுயசரிதம் போன்று நடந்த உண்மையை அப்படியே விவரித்திருந்தார். இத்தொடர் 48 பக்கங்கள் மட்டுமேயான குறுந்தொடர் மட்டுமேயாகும். இந்த தொடருக்கு கிடைத்த அற்புதமான வரவேற்பை தொடர்ந்து "Hadashi no Gen" என்ற பெயரில் இந்த 48 பக்க சிறுகதையினில் ஒருசில கற்பனைகளை கலந்து கிட்டத்தட்ட 2000 பக்கங்களுக்கு மேற்பட்ட   நெடுந்தொடராக மாற்றுகிறார். 1973ஆம் ஆண்டு தொடங்கி பன்னிரண்டு வருடங்கள் தொடர்ந்த இந்த தொடர் இன்றுவரை ஜப்பானியர்கள் மனங்களில் அழியாத இடத்தை பிடித்திருக்கின்றது. யுத்தத்தில் ஊறிப்போன ஒரு தலைமுறைக்கே ஒருவித வினோத ஆறுதலை அது கொடுத்தது.

யுத்தத்தில் இடம்பெறும் கோரங்களை தெளிவாக விளக்கும் இந்த கதைத்தொடர் இன்றுவரை சிறந்த போருக்கு எதிரான பிரச்சார கதை என்று புகழப்படுகிறது. ஒபாமாவின் ஆட்சியின் போது அணுகுண்டு தொடர்பான அவரின் சிலமுடிவுகளை பார்த்து மனம் நொந்து போன கெய்ஜி அணுகுண்டுகளின் விளைவுகளை விளக்கும் தனது புத்தகங்களின் பிரதிகளை அனுப்ப முயற்சித்தாகவும் சொல்லப்படுகிறது.


இக்கதையில் போர் என்ற மாயவலையில் சிக்கியிருந்த  ஜப்பானிய இராணுவம் பொதுமக்களுக்கு இழைத்த கொடுமையை பற்றியும் கெய்ஜி நாகசாவா தெளிவாக விவரிக்கிறார். அவரின் இவ்வாறான பாராபட்சமற்ற  கதைசொல்லல் முயற்சி மேலும் நம்பகத்தன்மையை கூட்டுகிறது. இக்கதையில் மனிதர்கள் யாரையும் நிரந்தர வில்லன்களாக சித்தரிக்கவில்லை. போரும் அதன்மூலமாக மனிதர்களுக்கு தோன்றும் சுயநலமுமே உண்மையான வில்லன்களாக சித்தரித்திருக்கிறார். ஒரு போர் எப்படி மனித மனங்களை மாற்றி விடுகிறது என்பது பல காட்சிகளில் உணர்த்தப்படுகிறது. அதுமட்டுமன்றி ஜப்பானிய மக்களின் பல நல்ல குணங்களை பற்றியும் அறியக்கிடைக்கிறது.


பாகம் 1: அணுகுண்டு வீச்சுக்கு முன்னரான வாழ்க்கை

கெய்ஜி தன்னை போன்றே உருவாக்கிய கற்பனை கதாப்பாத்திரத்தின் பெயர்தான் "ஜென்". அவனுக்கு ஒரு அக்காவும், இரண்டு அண்ணன்களும் ஒரு குட்டித்தம்பியும் இருக்கின்றனர். போர் காரணமாக ஜப்பானியர்களின் பிரதான உணவான அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் அநேக நேரங்களில் சிறுபிள்ளைகள் பசியில் வாடுகின்றனர். ஒரு காட்சியில்  ஜென் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் சமைக்கப்படாத அரிசியை திருடி அப்படியே மென்று உண்ணுகிறான். அதுவே அவனுக்கு அமிர்தம் போலிருக்கிறது. உணவின் அருமையை இந்த ஒற்றை காட்சி அருமையாக உணர்த்துகிறது. ஜென்னின் தந்தை போருக்கு எதிரான மனப்பான்மையை கொண்டவர். பொது இடங்களில் போரினால்  ஏற்படும் தீமைகளை நேரடியாக தெரிவிப்பதில் எந்தவித தயக்கமும் காட்டாதவர். இதன்மூலமாக போர் என்ற தீவிர மூளை சலவை செய்யப்பட்ட மற்றைய குடித்தனக்காரர்களுடன் எளிதாக சண்டை வளர்க்கிறார். அதனால் கோபமடையும் பக்கத்து வீட்டுக்காரர்கள், அவரது கோதுமை பயிர்களை நாசம் செய்கின்றனர். இந்த நிலையில் வேறு எந்த உணவும் இல்லாத நிலையில் நூற்றுக்கணக்கான வெட்டுக்கிளிகளை பிடித்து வறுத்து உண்கின்றனர். பசியாறிய சிறுவர்கள் மகிழ்ச்சி கொள்கிறார்கள். இப்படியான பல்வேறான காட்சிகளில் அந்த குடும்பத்தின் கஷ்ட ஜீவனம் உணர்த்தப்படுகிறது. ஆனாலும் இடையிடையே வரும் சிறுவர்களின் குறும்புத்தனங்கள் சோகத்தை குறைக்கின்றன.


ஜென்னின் இரண்டு அண்ணன்களும் இராணுவ சம்பந்தமான பயிற்சிகளுக்கு அனுப்பப்படுகின்றனர். அங்கு அவர்களுக்கு கிடைக்கும் அனுபவங்கள் எளிதில் மனதை கரைய வைக்கின்றன. அதில் மூத்த அண்ணனான கோஜி கட்டாயமாக சேர்க்கப்பட்ட போர் விமானி ஒருவரை சந்திக்கிறான். அந்த விமானி ஒரு பல்கலைக்கழக மாணவனாக இருக்கும்போதே கட்டாயமாக தற்கொலை விமானப்படையில் சேர்க்கப்படுகிறான்.  அவன் தனது அம்மா மற்றும் காதலியை நினைத்து பித்து பீடித்தவனாக அலைகிறான். இவ்வாறான மனிதர்கள் போரின் கடுமையான போக்கை வாசிப்பவர்களுக்கு தெளிவாக்குகிறார்கள்.

இது மட்டுமன்றி வேறுபல நெகிழ்வான தருணங்களும் இக்கதையில் இருக்கின்றன.
ஒரு முன்னாள் காலை இழந்த இராணுவ வீரனொருவன் ஜன்னல் கண்ணாடிக்கடை வைத்திருக்கிறான். பெரிதாக வியாபாரம் இல்லாமல் எடுத்த கடனை கட்ட வழியில்லாமல் தவிக்கிறான். இதனை சிறுவன் ஜென் தற்செயலாக அவதானிக்கிறான். அவருக்கு எப்படியாவது உதவவேண்டும் என்று எண்ணும் அவன், ஒரு வீதியில் இருக்கும் எல்லா வீட்டு யன்னல் கண்ணாடிகளை கற்களை வீசி உடைத்து விட்டு ஓடுகிறான். அடுத்த நாள் எல்லா வீட்டுகாரர்களும் ஜன்னல் கண்ணாடி கடைக்கு முற்பணம் தந்து புது ஜன்னல் வாங்குவதற்கு வரிசையில் நிற்கின்றனர். இதனை பயன்படுத்தி அந்த கண்ணாடிக்கடைக்காரன் எளிதாக தனது கடனை கட்டி விடுகிறான். ஜென் செய்த உதவியால்தான் தனது வியாபாரம் கூடியது என்பதை அறிந்த அந்த முன்னாள் சிப்பாய் அவனுக்கு ஒரு கப்பல் பொம்மையை பரிசளிக்கிறான்.

இப்படியாக செல்லும் முதல் பாகத்தின் இறுதியில் அமெரிக்கர்கள் ஹிரோஷிமா நகர்மீது அணுகுண்டை வீசுகின்றனர். அதன்போது ஏற்பட்ட கடுமையான வெம்மை பலரை எரித்து கொல்கிறது. கட்டடங்கள் நொறுங்குகின்றன. உண்மையில் நடந்ததை போன்றே, ஜென்னும் அம்மாவும் தப்பிக்க வீட்டின் இடிபாடுகளுக்குள் சிக்கிய அப்பாவும், தம்பியும், அக்காவும் அணுகுண்டு உருவாக்கிய தீயினால் எரிந்து மடிகின்றனர். ஒரு சில நிமிடங்களின் பின்னர் மக்களின் வாழ்க்கையே அடியோடு மாறிபோய்விடுகிறது.


பாகம் 2: அணுகுண்டு வீச்சுக்கு பின்னரான அகோர வாழ்க்கை

அணுகுண்டுக்கு பின்னரான நாட்களில் ஜென்னும் அம்மாவும் பல சவால்களை . கட்டட இடிபாடுகளிலேயே அவர்களில் நாட்கள் கழிகின்றன. அவர்களை சுற்றி இறந்தவர்களின் பிணங்கள் அங்கங்கே விழுந்து கிடக்கின்றன. அணுகுண்டு அதிர்ச்சி காரணமாக கர்ப்பவதியான ஜென்னின் தாய் ஒரு பெண் குழந்தையை பெற்றுக்கொள்கிறாள். 2-3 நாட்களாக பட்டினியில் இருக்கும் தாய்க்கு பால் சுரக்கவில்லை. அந்த குழந்தை பாலுக்கு அழும்போது மனது வலிக்கிறது. தான் உணவு உட்கொண்டால் மட்டுமே பச்சைக்குழந்தைக்கான பால் சுரக்கும் என்பதை அறிந்த தாய் ஜென்னிடம் அரிசி வாங்கி வருமாறு கூறுகிறாள். ஆங்காங்கே எரிந்து போன பிணங்களால் மட்டுமே சூழப்பட்ட ஹீரோஷிமா நகரில் அரிசி தேடி அலைகிறான் ஜென். அவன் காணும் இடங்களிலெல்லாம் கருகிய உடல்கள் உயிரோடோ உயிரற்றோ இருக்கின்றன. இப்படியாக தேடி களைத்துப்போன ஜென் ஒரு கட்டத்தில் வழியிலேயே உறங்கி விடுகிறான். அவனை காணும் இராணுவத்தினர் அவனை ஒரு உயிரற்ற சடலமாக கருதி ஏனைய பிணங்களுடன் எரியூட்டுகின்றனர். திடுக்கிட்டு விழித்தெழும் ஜென்னை பார்த்து இராணுவத்தினர் உதவி செய்கின்றனர்.

இப்படியாக அரிசி தேடி செல்லும் ஜென், மேற்கொள்ளும் பயணத்தினால் அணுகுண்டின் அழிவுகள் கண்முன்னே காட்டப்படுகின்றன. பல அவலங்கள் மனதை ஏதோ செய்கின்றன. கிட்டத்தட்ட 150 பக்கங்களுக்கு மேலாக சித்தரிக்கப்படும் அவலங்களை வாசிப்பதற்கு ஒரு வன்மையான இதயம் தேவைப்படுகிறது. இவையெல்லாம் உண்மையான நிகழ்வுகள் என்பதை நினைவுகூரும் போது மனம் வலிக்கிறது.


எனக்கு ஜப்பானின் மங்கா பாணியிலான சித்திரங்கள் பரிச்சயமில்லை. ஆகவே இப்புத்தகங்களை வாங்கவே பலதடவை யோசித்தேன். என்னை பொறுத்தவரை கார்ட்டூன் பாணியிலான சித்திரங்கள் கதையில் இருக்கும் கொடூரங்களை குறைக்க உதவியிருக்கிறது. நகைச்சுவைக்கான காட்சிகளில் சிறுவர்களின் முகபாவங்கள் சிறப்பாக இருக்கின்றன. எனினும் கெய்ஜியின் சித்திரங்கள் அணுகுண்டின் பின்னரான சேதங்களை  ஆவணப்படுத்தப்படுத்த போதுமானதாக இருந்ததாகவே எண்ணுகிறேன்.

பின்குறிப்பு :

இந்த நெடுந்தொடருக்கு முன்னராக வந்த 48 பக்கங்களிலான "I SAW IT" அந்த  சிறுகதை லயன் காமிக்ஸில் "நரகத்தை பார்த்தேன்" என்ற பெயரில் 1995/96 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தொடராக வெளியானது.  முதல் பாகம் மாடஸ்தியின் "திகில் நகரம் டோக்யோ" என்ற புத்தகத்தில் நான்கு பக்கங்கள் கொண்ட தொடராக தொடங்கியது. சிறுவயதுகளில் வாசித்த அந்த தொடர் அப்போதே விருப்பத்துக்குரிய தொடராக இருந்தது. உணவு பஞ்சத்தினால் அவதியுறும் கெய்ஜியின் குடும்பம்  வெட்டுக்கிளிகளை வறுத்துச்சாப்பிடும் காட்சி இப்பொழுதும் மனதில் இருக்கிறது. இத்தொடரின் அநேக பாகங்களை வாசித்திருந்தாலும், முழுமையான நெடுந்தொடரை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக பத்து பாகங்கள் கொண்ட இத்தொடரின் முதலிரு பாகங்களை வாங்கி வாசித்தேன்.

Tuesday, November 20, 2018

வாசிப்பு என்னும் மிருகம்

 சமீப நாட்களில் வாசிப்புக்கு ஒரு நாளில் ஒரு மணி நேரமாவது ஒதுக்குகிறேன். இவ்வாறாக நேரம் ஒதுக்குவதற்கே மிகவும் சிரமமாக இருக்கின்றது. இதனாலேயே ரயிலில் பயணம் செய்யும்போதும் தீவிரமாக வாசிக்கிறேன். ரயிலுக்குள் நுழையும் கடல் காற்றை ரசிக்காமல் புத்தகத்துக்குள்ளே விழுந்திருக்கின்றேன். ஒரு பக்க யன்னலால் நுழையும் கடற்காற்று என்னை மயக்க தீவிர முயற்சி செய்து தோற்றுவிட்டு அடுத்தப்பக்க யன்னல் மூலம் தோல்வியுடன் வெளியேறுகிறது. இதற்குமுன்னர் நான் ஒருபோதும் நேரம் ஒதுக்கி புத்தகங்களை வாசித்ததில்லை. வாசிக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் வந்தால் மட்டுமே வாசிப்பேன். இப்போதெல்லாம் வாசிப்பு ஒரு குரங்கு போல என்னுடன் தொற்றிக்கொண்டிருக்கிறது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாசிக்கும்படி என்னை அது ஏவுகிறது. என் சொல்பேச்சை அது கேட்பதில்லை. அது பேச்சை தட்டுவது கடினமாக இருக்கிறது. இரவு படுக்கைக்கு செல்ல முன்னர் வாசிக்காமல் படுத்தால் அந்த நாளில் ஏதோ குறையிருப்பதாக மனதுக்கு படுகிறது. ஆனாலும் சில நேரங்களில் எனது வாசிப்பு ரசனை எனக்கே பயத்தை ஏற்படுத்துகிறது. எனக்கு எல்லோருக்கும் பொதுவாக பிடித்த புத்தகங்களை வாசிக்கவேண்டும் என்று தோன்றாது. எப்போதோ கேள்விப்படட  பழைய கிளாசிக் புத்தகங்களை வாசிக்க வேண்டும் போல திடீரென்று தோன்றும். பழைய ஆங்கிலபடங்களின் மூலமான புத்தகங்களை கண்ணில் படும்போது வாங்குவேன். காரணமேயில்லாமல் அந்த புத்தகங்களுக்குள் மூழ்கிவிடுவேன். ஆனால் அந்த படங்களை பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் இருப்பதே இல்லை. எல்லோரும் சிலாகிக்கும் "பொன்னியின் செல்வன்" நாவலை வாசிக்க ஒருபோதும் தோன்றியதில்லை. நான் எதை வாசிக்க வேண்டும் என்பதை அந்த குரங்குதான் தீர்மானிக்கிறதோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.

அலுவலத்தில் வேலை செய்யும் நண்பன் ஒருவன் விலை கூடிய ஆங்கில காமிக்ஸ்க்களை வாங்கிக்குவிப்பான். எங்களுக்குள் புத்தகங்களை பரிமாற்றம் செய்வோம். அவன் வாங்கும் புத்தகங்களில் பாதிக்கு மேல் அவன் வாசித்ததில்லை என்பது ஆச்சர்யம் தரும் விஷயமாக இருந்தது.  அநேக தருணங்களில் டாலடிக்கும் அவனுடைய புத்தம்புதிய புத்தகங்களை நானே முதலில் வாசிப்பேன். அவனே இது ஒருவகை மனோவியாதி என்றான். அதாவது வாங்கி குவித்துவிட்டு அதனை வாசிக்காமல் அடுக்கி அழகு பார்ப்பது. நல்லவேளையாக எனக்கு இந்த வியாதி இப்போதில்லை. ஆனாலும் நான் வாசிக்கும் வீதத்தை விட வாங்கும்வீதம் அநியாயத்திற்கு அதிகம்தான். காணும் இடங்களிலெல்லாம் புத்தகங்களாக வாங்கிக்குவிக்கிறேன். ஆனால் உடனடியாக வாசிப்பதில்லை. அவற்றை வாசிக்க ஏதோ ஒரு உந்துதல் தேவைப்படுகிறது.  இப்படித்தான் ஒரு புத்தகவிழாவில் ஷெர்லாக் ஹோம்ஸ் இன் சிறுகதை தொகுப்பை ஆசைக்கு வேண்டினேன். ஆனால் அது எனது புத்தக அலுமாரியில் இரண்டு வருட ஆழ்ந்த தூக்கம் போட்டது.  ஒருநாள் ஷெர்லாக் ஹோம்ஸ் இன் கதைகளை அடிப்படையாக கொண்ட "துப்பறிவாளன்" படம் வருவதாக அறிந்தேன். அந்த தீப்பொறி எப்போதோ வாங்கிய புத்தகத்தை  வாசிக்க தூண்டியது. புத்தகத்தை வாசித்து முடித்த நான் அந்த படத்தை பார்க்கமுடியாமல் போனது இங்கு முக்கியமில்லை. இவ்வாறே "The Martian" என்ற புத்தகத்தை அதை தழுவிய படம் பார்க்க விருப்பத்தில் வாசித்து முடித்தேன். புத்தகம் வாசித்தவர்களுக்கு அந்த படம் பிடிக்காது என்று ஒரு நண்பன்  கூறினான். ஆகவே அந்த படத்தை பார்க்கவில்லை. இந்த புத்தகத்தை ஒவ்வொரு காலைப்பொழுதிலும் ரயிலில் வேலைக்கு போகும்போது வாசித்தேன். இப்புத்தகத்தின் கதை செவ்வாய் கிரகத்தில் நடப்பதாக இருந்ததால் ரயில் கூட செவ்வாய் கிரகம் போல மாயையை உண்டுபண்ணியது. இப்படித்தான் நான் வாங்கும் புத்தகங்கள் என்னுடைய வாசிப்புக்காக தவம் கிடக்கின்றன. எப்போதோ ஒரு நாள்தான் அவற்றுக்கு வரம் கிடைக்கின்றது.  அந்த நாள்தான் எப்போது என்று தெரிவதில்லை.நான் காலைப்பொழுது வாசிக்கும் புத்தகத்தை இரவில் தொடர்வதில்லை. இரவுக்கு வேறு ஏதாவது புத்தகம் வாசிக்கிறேன். இப்படித்தான் "Bram Stoker"இன் டிராகுலா புத்தகத்தை காலைப்பொழுதின் இருபது நிமிட புகையிரத சவாரியில் மட்டுமே மூன்று மாதங்களாக வாசித்து முடித்தேன். இரவில் ஏதாவது ஒரு நகைச்சுவை நிறைந்த காமிக்ஸ் ஏதாவது வாசிப்பேன். நாய்கள்  ஊளையிடும் நடு ராத்திரியில், டிராகுலா புத்தகத்தை வாசிப்பதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பது வேறு விஷயம். ஆனாலும் எனது மனவோட்டத்துக்கு ஏற்றவாறு புத்தகங்களை அந்த குரங்கு தேர்வு செய்கிறது போலும்.


இப்போதெல்லாம் புத்தக விழாக்கள் கணிசமாக நடக்கின்றன. ஏதோ பொய்யான பரபரப்புடன் எல்லா வேலையையும் தூக்கி போட்டுவிட்டு அந்த நிகழ்வுகளுக்கு போகிறேன். சித்தம் பேதலித்தவன் போல புத்தகங்களை பார்வையிடுகிறேன். புத்தகங்கள் நிறைய வாங்குகின்றேன். அவை வீட்டினுள் ஆங்கங்கே புத்தகங்கள் சிதறி கிடக்கின்றன. இயலுமானவரை தேவையற்ற புத்தகங்களை நண்பர்களுக்கு பரிசளிக்க முயற்சிக்கிறேன். ஆனால் என்னை போன்ற வியாதியஸ்தர்களை காணுவது அரிதாகவே இருக்கிறது. வீட்டில் குவிந்து கிடைக்கும் புத்தகங்களை அடுக்கி வைப்பதற்கே திண்டாடுகின்றேன்.  எது தேவை எது தேவையற்றது என்று வேறுபடுத்தவே முடிவதில்லை. அடுக்கும்போதே புத்தகங்களை நோட்டம் போடுவதற்கே பாதி நாள் போய் விடுகிறது. ஒவ்வொரு புத்தகத்தை அடுக்குவதற்காக தூக்கும்போதும் அப்புத்தகம் சம்பந்தமான நினைவுகள் வந்து அலைக்கழிக்கின்றன. இப்படியே நேரம் போய் விடுகிறது. கொட்டிக்கிடக்கும் புத்தகங்களை அடுக்குவதற்கே இன்னொரு அறையை கட்டுவோமோ என்று யோசிக்கிறேன் ஆனாலும் வீட்டு சொந்தக்காரன் என்ன சொல்லுவானோ என்ற நினைப்பு அதனை அணைத்து விடுகிறது.
Monday, May 28, 2018

ராபீயின் பூனை ஒரு வாயாடி பூனை -- காமிக்ஸ்


எங்கள் வீட்டில், சில வருடங்களுக்கு முன்னர் செல்லப்பிராணியாக ஒரு பூனை பதவிவகித்தது. சும்மா தெருவில் சுற்றி திரிந்த அந்த பூனை அக்காவின் மகள் போட்ட சிக்கன் துண்டுகளினால் கவரப்பட்டு எங்கள் வீட்டின் முற்றத்தில் குடிபுகுந்தது. பசி வந்தால் நிமிசத்துக்கு நூறு முறை மியாவ்.. மியாவ்.. கத்தும். அதற்கு பெயர் வைக்கப்படாமலே இரண்டு மாதங்கள் கடந்தன . எப்போதுமே அம்மாவின் காலை சுற்றி வரும். அம்மாதான் எப்போதுமே சாப்பாடு வைப்பா. நாங்கள் சும்மா அதோடு விளையாடுவதோடு சரி. ஆனாலும் எப்போதுமே கத்தி கூப்பாடு போடும் அந்த பூனையை பார்த்தாலே அம்மாவுக்கு எரிச்சல் வரும். சரியான "சொடுகு"  பூனை என்று எப்போதுமே சொல்லுவா. "சொடுகு"  என்பது கொஞ்சம் அமங்கலமாக தோன்றியதால் "சுடோகு" என்று மாற்றி விட்டேன். இதுக்கு ஜப்பான் காரனுக மாதிரி சின்ன கண்ணிருக்கு அதான் இப்படி பேரு என்று ஒரு போலி காரணத்தை உருவாக்கினேன். "சுடோகு" எங்களது பின் கதவு வாசலில் இரண்டு மணித்தியாலங்களுக்கு ஒருமுறை வந்து "மியாவ்" கச்சேரி வைக்கும். சாப்பாடு கொடுக்கும்வரை அந்த இம்சை இசை தொடரும். அதுக்கு மீன் வைக்கவேண்டும். ஆனால் எங்கள் வீட்டில் மாதத்திற்கு சில நாட்களுக்கே மச்சம் சமைப்போம். மரக்கறி நாட்களில் பாலும் சோறும் சாப்பிடும். கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு மீர்.. ரர்.. வ்.. என்று அதிருப்தியுடன் என்னை பார்த்து முறைத்துவிட்டு மதில் மேல் சோகமாக படுத்திருக்கும். அதற்கு பேச தெரிந்திருந்தால் இன்றைக்கு ஏன் மச்சம் சமைக்கவில்லை என்று அதட்டி கேட்டிருக்கலாம். ஏன் வெள்ளிகிழமைகளில் மட்டும் கட்டாயம் மரக்கறி சாப்பிட்டுகிறீர்களோ என்று அலுத்துகொண்டிருக்கலாம். சுடோகு ஒருமுறை மூன்று குட்டிகளை ஈன்றது. அம்மா நிறைய பால்விட்டு சோறு வைத்தா.  அப்பா மச்சம் சமைக்காத நாட்களிலும் கொஞ்சமாக நெத்தலி மீனை சுடோகுவுக்காக வாங்கி வந்தார். குட்டிகளை சில நாட்களுக்கு சுடோகு கண்ணில் காட்டவில்லை. அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு ஓடி விடும். சில நாட்கள் கழித்து தனது குட்டிகளுடன் எங்கள் வீட்டுக்கு விசிட் அடித்தது. எங்கள் வீட்டுக்கு யாராவது விருந்தினர்கள் வந்தால், சுடோகுவும் தனது குட்டிகளுடன் வந்து வாசலில் படுத்திருக்கும். நானும் எனது குடும்பத்துடன் வந்து விட்டேன் பார் என்பது போல பெருமையாக பார்க்கும். சுடோகு சில வேளைகளில் குரல் மாற்றி அதே மியாவ்வை வித்தியாசமாக ராகம் பாடும்போது எனக்கு ஏதோ சொல்ல வருகிறது என்பதை புரிந்துகொள்வேன். ஆனால் ஒன்றுமே புரியாது. ஒரு கடுமையான மழை நாளில் சுடோகு காணாமல் போனது. அதற்கு முதல் நாளில்கூட எனது காலை சுரண்டி ஏதோ சொல்ல முயன்றது. ஹீம்.. அதற்கு பேசும் சக்தி இருந்தால் நல்லா இருந்திருக்கும்.

இப்படி எனக்கு தோன்றியதை போல கடல் கடந்து பல மைல்களுக்கு அப்பால் உள்ள பிரான்ஸ் தேசத்தின் காமிக்ஸ் ஓவியரான "ஜோன் ஸ்பார்"(joann sfar)க்கும் தோன்றியிருக்கும் போல. அவர் உருவாக்கிய "ராப்பீஸ் கற்" கதையில் ஒரு பூனைக்கு பேச்சு வருவது போல கதையை அமைத்திருப்பார்.
Joann Sfar இக்கதையை உருவாக்க காரணமான தனது பூனையுடன்
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் ஒரு கட்டுரை ஒன்றிலே இந்த காமிக்ஸை பற்றி சிலாகித்து எழுதியிருந்தார். வழமை போலவே மாசக்கணக்கில் இந்த கதையை பற்றி கூகிள் செய்தேன். எல்லோரும் கோரசாக நல்லாருக்கு என்றார்கள். படங்கள் நான் அஞ்சாம் வகுப்பில் வரைந்த கார்ட்டூன் ஓவியங்கள் போல சொதப்பலாக இருந்தன. இரண்டு, மூன்று வாரங்களாக ஒவ்வொரு நாளும் விடாது கூகிள் செய்ததில் பைத்தியம் பிடித்தது போலாகியது. இதை நிறுத்துவதற்கு ஒரே ஒரு வழி மட்டுமே அந்நேரத்தில் புலப்பட்டது. ஒன்லைனில் ஆர்டர் செய்தேன். புத்தகம் வந்திறங்கிய பின்னர் பெரிய ஏமாற்றம் ஏதும் இருக்கவில்லை. தரமான அச்சு. கலர் நிறைந்த பக்கங்களாக இருந்தன.


இந்த கதை "ராபீ" எனப்படும் யூத மத தத்துவங்களை போதிக்கும் ஆசிரியரின் வீட்டில் வாழும் பூனையை பற்றியது. கதை 1930ம் ஆண்டுப்பகுதியில் அல்ஜீரியா நாட்டில் நடப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு ராபீ எனப்படுபவர்கள் "Torah" என்கிற மத நூல்களை கற்று பாண்டித்தியம் பெற்றிருப்பர். இப்படிப்பட்ட ஒரு பழமைவாதியான ராபீயின் வீட்டில் வாழும் பூனை ஒரு பேசும் கிளியை விழுங்கி ஏப்பமிடுகிறது. அதன் மூலமாக அதற்கு பேசும் திறனை பெற்றுக்கொள்கிறது
ஆனால் அது வாயை திறந்தாலே பொய்தான் பேசுகிறது. முதலாவது பொய்யாக தான் அந்த கிளியை விழுங்கவில்லை என்று சாதிக்கிறது.
"ராபீ"யுடன் வீண்தர்க்கங்களில் ஈடுபடுகிறது. ராபீயின் பழமைவாத கருத்துக்களை கிண்டல் செய்கிறது. ராபீ "ஒரு தூய யூதனாகிய அந்த பூனையை பொய் பேசக்கூடாது" என்று வாதிடுகிறார். தான் ஒரு யூதன் இல்லை எனவே அந்த கட்டாயம் தனக்கில்லை என வாதிடுகிறது.
தொடர்ச்சியான விவாதங்ககளின் மூலம் தானும் யூத மத நூல்களை கற்று தானும் யூதனாகலாமா என்று கேட்கிறது. அதனுடன் விவாதம் செய்வதில் "ராபீ" தடுமாறுகிறார். இந்த பூனையுடன் தனது மகள் பேசினால் அவளும் பொய் பேசுதல் போன்ற கெட்ட பழக்கங்களை பழகுவாளோ என்று கவலைகொள்ளும் ராபீ பூனையை மகளுடன் பேச தடைவிதிக்கிறார். இங்கு அந்த பூனை ராபீயின் மகளாகிய ஸ்லுபியாவை தனது ரகசிய காதலியாகவே கருதுகிறது. அவளை தன்னுடைய மனதின் இளவரசியாகவே எண்ணி வருகிறது. தானும் ஒரு யூதனாகி அவளை திருமணம் செய்வது பற்றியெல்லாம் விவாதிக்கிறது. இதனை ஸ்லுபியா எளிதாகவே எடுத்துக்கொள்கிறாள். இப்படி போகும் கதை பேசும் சக்தி கொண்ட கிழச்சிங்கம் வேறு வருகிறது. அதுவும் பூனையும் பேசிக்கொள்ளும் காட்சிகளில் நகைச்சுவை இழையோடுகிறது. இதற்கிடையில் ஸ்லுபியாவுக்கு இன்னொரு இளைய ராபீயுடன் காதல் வருகிறது. அவளும் மண முடித்து பட்டணத்துக்கு சென்றுவிட ராபீயும் பூனையும் கவலையடைகிறார்கள் (எஸ்ரா). இருவரும் ஸ்லுபியாவை காண பட்டணம் செல்லுகிறார்கள். அங்கு அவர்களுக்கு ஏற்படும் வினோத அனுபவங்கள் அவர்களுக்கு வாழ்க்கையை புரிய வைக்கிறது


இங்கு நகைச்சுவை தெறிக்கும் வினோத கதையே புதுமையாக இருக்கிறது. கதாசிரியர் பூனைகளில் இயல்பை கதையில் அழகாக கொண்டு வந்திருக்கிறார். பூனைகள் எப்போதும் வளர்ப்பவர்களை தங்களது அடிமைகள் என்று எண்ணும் இயல்புள்ளன. இதனை கதை முழுவதும் காணலாம். பூனையின் இயல்பிலேயே கதை பயணிக்கிறது என்பதை கதையை படித்துமுடித்தபின்னர் உணரமுடிகிறது. இப்புத்தகத்தில் ஓவியங்கள் கன்னா பின்னாவென்று இருப்பது போல தோன்றினாலும். இப்படியான வினோதமான கதையமைப்புக்கு வேறு எதுவும் பொருந்தியிராது என்றே தோன்றுகிறது. மின்சாரமில்லா 1930களில் நடக்கும் கதை அநேக நேரங்களில் விளக்கு வெளிச்சத்திலேயே நடக்கிறது. அதனை அடர்த்தியான வண்ணக்கலவைகள் மூலம் அழகாக காட்டியிருக்கிறார்கள்.
வசனங்கள் 30% கதையை சொன்னால் 70% கதையை ஓவியங்களும் அதன் அடர் வண்ணங்களுமே பொறுப்பெற்கின்றன. ஆனாலும் சில இடங்களில் வசனங்களில் நீளம் அதிகம். கதையின் தன்மை அதற்கு காரணமாக இருக்கலாம்.

வித்தியாசமான காமிக்ஸ்களை வாசிக்க விரும்புவோருக்கு ஏற்றது. வாசிப்பவர்களின் மனநிலைக்கேட்ப வினோதமான அனுபவங்களை தரவல்லது என்றே எண்ணுகின்றேன். இப்புத்தகத்தை வாங்கிய நாட்களில் நேரமின்மை காரணமாக நள்ளிரவு நேரங்களிலேயே இப்புத்தகத்தை வாசித்தேன். அதனாலோ என்னவோ கதையின் இருளோடு என்னை ஒன்றி கொள்ள முடிந்திருந்தது.

Saturday, September 24, 2016

Maus காமிக்ஸ்- வரலாற்றின் மேல் காய்ந்துபோன இரத்தத்துளிகள்

 சில மாதங்களுக்கு முன்னராக நண்பர் விஸ்வா பேஸ்புக்கில், உலகத்தில் தலைசிறந்த காமிக்ஸ் ஒன்றை வாசித்துக்கொண்டிருப்பதாக பதிவிட்டார். அதன்பெயரை குறிப்பிடாது, அதனை எங்களை ஊகிக்குமாறு கூறினார். நான் எனக்கு தெரிந்த சில காமிக்ஸ்களை வரிசைப்படுத்தினேன். இன்னும் சிலரும் ஊகிக்க முயன்று தோற்றனர். விஸ்வா எனக்கு அந்த புத்தகத்தின்
அட்டைப்படத்தை எனக்கு chatஇல் அனுப்பினார். அது "Maus" என்னும் ஒரு காமிக்ஸ். Maus என்பது ஜேர்மன் மொழியில் "எலி" என்று பொருள்படும்.  இது ஒரு தலைசிறந்த காமிக்சாக கருதப்படுவது என்பது ஆச்சர்யம் தந்தது. கூகிள் செய்தபோது வந்த படங்களும் ஏமாற்றம் தந்தன. செய்திதாள்களில் வரும் அரசியல் கார்ட்டூன்  போன்ற படங்களே இருந்தன. நுணுக்கமான படங்கள் வரையப்பட்டிருக்கும் ஐரோப்பிய காமிக்ஸ் வாசித்து வளர்ந்த எனக்கு தலைசுற்றலை தந்தன. விஸ்வாவுக்கும் எனக்கும் ரசனை விசயத்தில் கொஞ்சமாக ஒத்துப்போகும். மேலும் விக்கிபீடியாவில் "Maus" உருவான கதை சுவாரஸ்யம் தந்தது. ஆகவே அந்த காமிக்சை ஆன்லைனில் வாங்கினேன். புத்தகம் கைக்கு கிடைத்த போது, பெரிய ஏமாற்றம் எதுவுமில்லை. தரமான பதிப்பு. ஆனாலும் இந்த புத்தகத்தை வாசித்து முடிப்பேன் என்ற நம்பிக்கை அப்போது இருக்கவில்லை.

இரண்டாம் உலக யுத்தத்தின்போது போலந்திலுள்ள யூதர்களும் கிட்லரின் இன அழிப்பிலிருந்து தப்பவில்லை. யூதர்கள் வசித்த இடங்களிருந்து விரட்டப்பட்டு அகதி முகாம்களில் தங்கவைக்கப்படுகின்றனர். பலர் "காஸ் சேம்பர்ஸ்" எனப்படும் மனித அழிப்பு சாதனத்துக்குள் கொண்டுசெல்லப்பட்டு ஒரே நேரத்தில் கொல்லப்பட்டனர். அதன்போது சில யூதர்கள் போர் முடியும் தருவாயில் உயிர் பிழைக்கிறார்கள். அதில் தப்பிய ஒரு யூதர்தான் இக்கதையை எழுதிய ஆர்ட் ஸ்பிகேல்மனின் தந்தையாகிய "விலாடேக் ஸ்பிகேல்மன்". தனது தந்தையின் சொந்த கதையை கேட்டு அதனை ஒரு காமிக்சாக மாற்றியுள்ளார். ஆனால் வழமையான கிராபிக் நாவல்களில் வரும் சோகம் வழிந்தோடும் உண்மைக்கதை கிடையாது. வெறும் உண்மைக்கதை அவ்வளவுதான். படங்களில் மனிதர்கள் இல்லை. மனிதர்களுக்கு பதிலாக மிருகங்களே வரையப்பட்டிருக்கும். யூதர்கள் எலிகளாக வரையப்பட்டிருப்பர். அதுபோலவே ஜேர்மானியர்கள் பூனைகளாகவும் அமெரிக்கர்கள் நாய்களாகவும் வரையப்பட்டிருப்பர். படங்கள் கார்ட்டூன் பாணியிலிருக்கும். இரண்டாம் உலக யுத்தக்கதைகளில் தானும் ஒரு பாத்திரமாக ஜரூராக நுழையும் கிட்லரும் இதில் இல்லை. ஆர்ட் ஸ்பிகேல்மனின் தந்தையாகிய விலாடேக் ஸ்பிகேல்மன் சந்தித்த பாத்திரங்கள் மட்டுமே கதையிலிருக்கும். இரத்தம் சொட்ட சொட்ட வரும் வன்முறை சண்டைகாட்சிகளே இல்லை. ஆனால் விலாடேக் ஸ்பிகேல்மன் எதை எவ்வாறு சொன்னாரோ அதை அப்படியே பதிந்திருக்கிறார் கதாசிரியர் ஆர்ட்.


இந்த கதை இருவேறு காலங்களில் நகரும். ஒன்று 1970களில் தந்தையின் கதையை கேட்டறிய "ஆர்ட் ஸ்பிகேல்மன்" தந்தையின் வீட்டுக்கு பலமுறை விசிட் அடிக்கும்போது நடைபெறும் சம்பவங்கள். மற்றையது இரண்டாம் உலக யுத்தத்தின்போது நடைபெறும் வேதனை மிகுந்த காலப்பகுதி. இருவேறு காலப்பகுதிகளிலும் வெவ்வேறான சுவாரஸ்யங்களுடன் கதை பின்னப்பட்டுள்ளது. "ஆர்ட் ஸ்பிகேல்மனுக்கும்" அவரது தந்தைக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் நேர்மையாகவும் சுவாரஸ்யமாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அந்த உரையாடல்களில் போரினால் மனஉளைச்சலுக்கு உள்ளான ஒரு நபரின் மன உணர்வுகளும் முதுமையின் இயலாமையும் பளிச்சிடும். ஒரு காட்சியின்போது "விலாடேக்" ஒரு கறுப்பினத்தவரை இனத்துவேஷ வார்த்தைகளால் வர்ணிப்பார். அப்போது ஆர்ட் "நீங்கள் இவர்கள் மீது காட்டும் இனத்துவேஷம் எங்களுக்கும் ஜேர்மானியருக்கும் வித்தியாசம் இல்லாமல் செய்கிறது" என்று சாடுவார். அப்போதும் அவரது தந்தை சளைக்காமல் "நீ எப்படி யூதர்களையும் கறுப்பர்களையும் ஒப்பிடுவாய்" என்று சொல்லி கோபிக்கிறார். இதிலும் தனது தந்தை ஒரு இனத்துவேஷம் மிக்கவர் என்பதை மறைக்காமல் கதை சொல்லலில் நேர்மையை கடைப்பிடிக்கிறார் ஆர்ட். விலாடேக் முதுமையின்போது காட்டும் பிடிவாதம் காரணமாக ஆர்ட்டுக்கு வரும் தர்மசங்கடங்கள் வசிப்போருக்கு புன்னகையை வரவைக்கின்றன. விலாடேக்கின் மாத்திரைகளை எண்ணும் பழக்கம், உணவுப்பொருட்களை வீணாக்காது தனது மகனுக்காக எடுத்துவைக்கும் பழக்கம் போன்றவற்றை நானே பல வயதானவர்கள் செய்வதை கண்டிருக்கிறேன்.
அதனை காமிக்ஸ்வடிவில் காணும்போது அதில் வருகின்ற உரையாடல்கள் நெகிழ்ச்சியை தருகின்றன.

இக்கதையை தந்தையிடமிருந்து கேட்டறிந்து எழுத ஆரம்பித்தபோது ஆர்ட்டின் அம்மாவாகிய "அஞ்சா" உயிரோடில்லை. அதற்கு முன்னராக சில வருடங்களுக்கு முன்னாலேயே தற்கொலை செய்துவிட்டிருப்பார். ஆகவே "ஆர்ட் ஸ்பிகேல்மனுக்கு" ஜேர்மானிய கொலைமுகாம்களில் நடந்த இனஅழிப்பை பற்றி தனது தாயிடம் கேட்டறிய வாய்ப்பில்லாமல் போனது.
ஆனால் "அஞ்சா" டயரி எழுதும் பழக்கமுள்ளவர். ஆனாலும்  "அஞ்சாவின்" தற்கொலையின் பின்னரான காலப்பகுதியில் இருந்த மனஉளைச்சலில் தானே அவற்றை எரித்துவிட்டதாக தந்தை கூறும்போது  ஆர்ட் மனவருத்தம் கொள்கிறார். தனது தாயின் அனுபவங்களை பெற்றுக்கொள்ள ஏதுவாக இருந்த கடைசி சந்தர்ப்பமான டயரி எரிந்து போனதை எண்ணி மனம் வருந்துகின்றார். மீண்டும் மீண்டும் தந்தையின் வீட்டில் டயரியை தேடும்போது ஒரு படைப்பாளனின் வருத்தம் வாசிப்போரையும் தொற்றிக்கொள்கின்றது.

வதைமுகாமில் இருக்கும்போது விலாடேக் உணவுபொருட்களை பண்டமாற்று செய்து உயிர்பிழைக்கும் காட்சிகள் அவரின் புத்திசாலித்தனத்தை பறைசாற்றுகின்றன. கடைசி வரையிலும் உயிரை தக்கவைக்க விரும்பும் அவரின் மனதைரியம் நிறைய பாடங்களை எங்களுக்கு சொல்கின்றது. இப்படி உயிர்பிழைப்பதற்காக வித்தியாசமான தொழில்களை செய்து தப்பிக்கும் காட்சிகள் அபாரம்.

இத்தனைக்கும் இந்த சீரியசான கதையை நகர்த்துவது பொம்மை வடிவிலுள்ள எலிகளும், பூனைகளும், பன்றிகளும்தான். இந்த கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள் எப்படி உணர்ச்சி மிகுந்த காட்சிகளில் முகத்தை வைத்திருக்கும் என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். கதையை வாசிக்கத்தொடங்கி ஐந்தாறு பக்கங்கள் முடிந்த பின்னர். எலிகள், பூனைகளாவும் உங்கள் கண்களுக்கு யூதர்களாகவும், ஜேர்மானியர்களாகவும் தெரிவார்கள். என்னதான் ஒரு எலியை வரைந்திருந்தாலும் அதன் முகபாவம், வயது வேறுபாடு, பால் வேறுபாடு என்பனவற்றை சரியாக வேறுபடுத்தி விளங்குமாறு வரைந்திருப்பார் ஆர்ட்.

இந்த புத்தகம் ஒரு த்ரில்லர் இல்லை. ஆக்சன் இல்லை. ஹீரோ வில்லன் இல்லை. கடைசியில் வில்லனை எப்படி ஹீரோ அழிக்கபோகிறாரோ என்ற பதைபதைப்பு இல்லை. ஆகவே நான் இந்த புத்தகத்தை வாசிப்பதில் அவசரம் காட்டவில்லை. ஒவ்வொரு நாளும் நான்கைந்து பக்கங்களாக இரண்டு மாதங்கள் வாசித்தேன். ஒரு கிழமை வாசிக்கவிடின் கதை மறந்து போகுமோ என்று ஒருபோதும் வருந்தியதில்லை. ஆனால் இந்த புத்தகம் வாசித்து முடித்தபின்னர் ஒரு நல்ல மனஅமைதி கிட்டியது. சில புத்தகங்களை வாசிக்கும்போது  முடிந்துவிட்டதே என்று வருந்துவோம். அந்த கவலையும் எனக்கு வரவில்லை. ஊடகத்துறையில் முதன்மையான புலிட்சர் விருது வென்ற ஒரே காமிக்ஸும் இதுதான்.

Saturday, July 9, 2016

ஐஸ்பெர்க் காமிக்ஸ் இலங்கையில் ஒரு தமிழ் காமிக்ஸ் -- பாகம் 2


சில வருடங்களுக்கு முன்னராக ஐஸ்பெர்க் காமிக்ஸ் பற்றிய முதலாவது பதிவினை எழுதினேன். ஏனோ தெரியவில்லை, அதன் தொடர்ச்சியை எழுதுவதற்கு மனம் வரவில்லை. எழுத யோசித்தாலும் எதை எழுதுவது என்று தெரியவில்லை. சமீபத்தில் நண்பர் பிரதீப் ஞாபகப்படுத்தினார். சரி பழைய ஞாபகத்தை திரட்டி எழுதுவோம் என்று முடிவெடுத்தேன். என்னுடைய ஞாபக சக்திக்கு ஏற்றவாறு கீழ்கண்ட பதிவை அமைத்துள்ளேன்.ஐஸ்பெர்க் காமிக்ஸின் முதலாவது பிரதி பெரிய சைசில் 85ரூபாவில் வந்தது. அண்ணாவே இலங்கையிலுள்ள புத்தக கடைகளுக்கு போன் செய்து புத்தகங்களை அனுப்பி வைத்தான். நான் எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லாத ஆள் மாதிரி "தேமே" என்றிருந்தேன். இரண்டு மூன்று வாரங்கள் கழித்து புத்தக விற்பனை குறித்து விசாரித்தால் வந்த சேதி நல்லதாக இருக்கவில்லை. ஒரு சில புத்தகங்களே விற்றதாக சொன்னார்கள். ஓரிண்டு இடங்களில் விற்பனை பரவாயில்லை ரகம். அதுவும் காமிக்ஸ் பற்றிய ஆர்வமிருந்த விற்பனையாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எடுத்து சொல்லி விற்றிருந்தார்கள். நான்கைந்து கடிதங்கள் வந்தன. ஒவ்வொன்றும் இரண்டு மூன்று பக்கத்துக்கு இருந்தன. தீவிர காமிக்ஸ் ரசிகர்கள் ஐஸ்பெர்க் காமிக்சை வரவேற்றனர். அவர்களது கடிதங்களே அடுத்த புத்தகத்துக்கான முயற்சிக்கான டோனிக்காக அமைந்தது. ஆனாலும் எப்படி புத்தகங்களை மார்கெட் செய்வதோ என்று தெரியாமல் தடுமாறினோம். காமிக்ஸ் வாசிக்கும் குறிப்பிட்ட வட்ட வாசகர்களுக்கு எவ்வாறு விளம்பரப்படுத்தலாம் என்றும் தெரியவில்லை.


அப்போதுதான் இன்டர்நெட் என்கிற சமாச்சாரம் ப்ரௌசிங் சென்டர்கள் மூலமாக எங்கள் பிரதேசங்களை ஆக்கிரமித்திருந்த சமயம். அண்ணாவும் ஒரு IT ஆசாமி என்பதால் ஐஸ்பெர்க் காமிக்ஸுக்காக ஒரு வெப்சைட் உருவாக்கிடுவதாக முடிவெடுத்தான். நானும் அப்போதுதான் வெப் ப்ரோக்ராம்மிங் பற்றி படித்திருந்தேன். ஆகவே ஒரு நல்ல நாளில் ஐஸ்பெர்க் காமிக்ஸ் வெப்சைட் உதயமானது. வெப்சைட்டை உருவாக்கி ஒரு "டிஸ்கஸன் போரம்" வைத்தோம். அதில் ஐஸ்பெர்க் காமிக்ஸ் சம்பந்தமான அறிவிப்புகளை செய்தோம். இந்த வெப்சைட் மூலமாகத்தான் கடல் கடந்த இந்திய காமிக்ஸ் நண்பர்களின் தொடர்பு ஏற்பட்டது. எங்களது "டிஸ்கஸன் போரம்" காமிக்ஸ் நண்பர்கள் கூடி பழைய அனுபவங்களை விவாதிக்கும் திண்ணையாக தொழிற்பட்டது. இலங்கை நண்பர்களின் வருகையை விட இந்திய காமிக்ஸ் ஆர்வலர்களின் வருகை அதிகம் என்பதுதான் உண்மை. அக்காலத்தில் இன்டர்நெட் என்பது இலங்கையின் எல்லா பகுதிக்கும் சரியாக பரவவில்லை என்பது காரணமாக இருந்திருக்கலாம்.


ஐஸ்பெர்க் காமிக்ஸ் வெப்சைட் மூலமாக இந்திய காமிக்ஸ் ரசிகர்களான ரகு மற்றும் விஸ்வா ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சில காமிக்ஸ் பிரதிகளை இந்தியாவுக்கு அனுப்பினோம். 2007ஆம் ஆண்டளவில் ரகு என்கிற ராகுலன் என்ற அந்த நண்பர் தாங்களும் புதிதாக காமிக்ஸ் வெளியிட இருப்பதாக சந்தோஷ செய்தியை அறிவித்தார். அவரும் சில காமிக்ஸ் நண்பர்களும் இணைந்து "ஸ்டார் காமிக்சை" தொடங்கியிருந்தார்கள்.


முதல் இதழை எங்களுக்கு அனுப்பினார்கள். அதன் தரம் ஆங்கில பதிப்புகளின் தரத்தில் அட்டகாசமாக இருந்ததை கண்டு வியந்தேன். "பனி மலைக்கோட்டை" என்ற கேப்டன் பிரின்ஸ் தோன்றும் சாகசத்தை முதன்முறையாக வாசித்து ரசித்தேன். முதன்முறையாக ஹார்ட் பைண்டிங்கில் ஒரு தமிழ் காமிக்ஸை கண்டேன். ஏதோ ஒரு காரணத்தினால் "ஸ்டார் காமிக்ஸ்" பின்னர் வெளிவரவில்லை. ஆனாலும் என்னை பொறுத்தவரை அந்த இதழ் தமிழ் காமிக்ஸ் உலகில் ஏற்படுத்திய தாக்கம் முக்கியமானது என்றே தோன்றுகின்றது.

விஸ்வா அப்போதே எங்கள் காமிக்ஸ் பற்றிய விமர்சனங்களை வழங்கி அதீத ஆதரவு தந்தார். அவரது ப்ளாக்போஸ்டுகள்தான் ஐஸ்பெர்க் காமிக்ஸ் இருந்ததற்காக ஆதாரங்களாக உள்ளன. இப்போது இந்த போஸ்டுக்கான படங்களை அங்கிருந்தே உருவியுள்ளேன். இவ்வாறான ப்ளாக்போஸ்ட்கள் மற்றும் நீளமான கடிதங்கள் அடுத்தடுத்த புத்தகங்களை வெளியிட உந்துதல் அளித்தன என்பது நிச்சயம்.

முதலாவது இதழின் பின்னராக இரண்டாம் இதழுக்கான வேலைகளை அண்ணா தொடங்கினான். முதலிரண்டு புத்தகங்களுக்காக ஏற்கனவே ரோயல்டி கட்டணங்கள் கட்டி விட்டதால் இரண்டாம் புத்தகத்தை உடனடியாக வெளியிட வேண்டிய கட்டாயம். முதல் இதழைப்போலவே இரண்டாம் இதழுக்கும் ஆங்கில பதிப்பு எங்களிடம் இருந்ததால் மொழிபெயர்ப்பு எளிதாக இருந்தது. ஆனால் இம்முறை நானும் மொழிபெயர்ப்பில் உதவினேன். இப்போது அந்த புத்தகத்தை பார்க்கும்போது பல இடங்களில் சொதப்பியிருப்பதை உணரமுடிகின்றது. முதல் புத்தகம் பெரிய சைசில் ஜரூராக 85ரூபா விலையில் வந்தது. விற்பனை மந்தத்திற்கு விலையின் உச்சம் காரணமாக இருக்கலாம் என்று அண்ணா கருதினான். அதனால் இரண்டாம் புத்தகம் 50ரூபா விலையில் வழமையான சின்ன சைஸுக்கு மாற்றப்பட்டது. இம்முறையும் அண்ணாவே விற்பனையாளர்களுக்கு அனுப்பிவைத்தான்.

இலங்கை முழுவதுக்குமாக XIIIஇன் உரிமை வாங்கப்பட்டிருந்தாலும் அதனை ஐஸ்பெர்க் காமிக்ஸ் அதனை சரியாக பயன்படுத்தியிருக்கவில்லை. குறிப்பாக சிங்களம் இலங்கையில் எழுபது சதவீத மக்களின் மொழி, ஆகவே அதில் வெளியிடும் யோசனையை அண்ணா சொன்னான். எங்களுக்கு சிங்களம் சுத்தமாக தெரியாது. ஆகவே ஒரு சிங்களம் படிப்பிக்கிற ஒரு மாஸ்டரின் உதவிகொண்டு மொழிபெயர்ப்பதாக ஏற்பாடு. சில நாட்களில் ஆர்வமாக தமிழை சிங்களத்தில் மொழிபெயர்த்து தந்துவிட்டார். ஆனால் அவர் என்னத்தை எழுதியிறுக்கிறாரோ... அது சிங்கள காமிக்ஸ் ரசிகர்களிடம் எடுபடுமா என்று தலையை பிய்த்துக்கொண்டோம். எனது சிங்கள நண்பர்களிலே காமிக்ஸ் வாசிக்கும் நண்பனிடம் சிங்கள மொழிபெயர்ப்பு ப்ரூப் காமிக்ஸை கொடுத்து வாசிக்குமாறு சொன்னேன். இரண்டு நாளைக்கு பிறகு வந்த அவன் இந்த மொழிபெயர்ப்பு சரிவராது. சிங்கள காமிக்ஸ் பேச்சுவழக்கில் எழுதுவார்கள். ஆனால் இது எழுத்து வழக்கில் போர்மலா இருக்கு. இது எடுபடும் என்று தோணலை என்று கை விரித்தான். சரியான மொழிபெயர்ப்பாளர் இல்லாததால் சிங்கள காமிக்ஸ் ஐடியா கைவிடப்பட்டது.

இன்சைடர்ஸ் விளம்பரம்
அது அவ்வாறு போய்கொண்டிருக்க தமிழ் காமிக்ஸின் அடுத்த இதழுக்கு என்ன செய்வது என்ற யோசனை தலையிலேறியது. XIIIக்கு பிறகு யார் என்ற கேள்வி எனக்கு எப்பவுமே இருந்தது. அண்ணாவோ தோர்கல், அல்டேப்ரன் என்ற வேற்றுகிரகக்கதை, இன்சைடர்ஸ் என்ற பெண் உளவாளியின் சாகசம் என்ற பெரிய லிஸ்ட் ஒன்று வைத்திருந்தான். ஆனால் அந்நியமான கதைகளை தொடுவதில் பல சிக்கல்கள் இருந்தன. அவர்கள் அனுப்பிய சாம்பிள்கள் பிரெஞ்சு மொழியிலிருந்தன. படம் பார்த்து கதையின் தரத்தை மதிப்பிடுவது சிரமம் என்றே புரிந்தது. உதாரணமாக பவுண்சரின் முதலாம் பாகமும் அவர்கள் அனுப்பிய சாம்பிள்களில் இருந்தன. ஆனால் அக்கதையின் படங்கள் கவர்ந்தாலும் சிக்கலான கதையின் போக்கு பிடிபடவில்லை. ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான "கேப்டன் டைகர்" என்று அறியப்படும் ப்ளுபெரியை அறிமுகப்படுத்துவது என்று தீர்மானித்தோம். ஆனால் இதுவரை தமிழில் வராத கதைகளை கதைகளை தேடினோம். அப்போது இளமைக்கால டைகர் கதைகளை முத்து  காமிக்ஸ் வெளியிட்டிருக்கவில்லை. ஆகவே அக்கதைகளை தெரிவுசெய்தோம்.
வாஸ்கோ கதையின் விளம்பரம்

ஒரு நல்ல நாளில் Dargaud நிறுவனத்திலிருந்து சாம்பிள் புத்தகம் வந்திறங்கியது. அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பு சாம்பிள்கள் இல்லையென கையை விரித்துவிட்டனர். அப்போதுதான் தொடங்கியது சங்கடம். விசாரித்து பார்த்தபோது பிரெஞ்சு மொழிபெயர்ப்பு கொழும்பில் செலவு கூடின விஷயம் என்ற உண்மை தெரிந்தது. வழமையாக ஓரிரண்டு பக்கங்கள் மட்டுமே மொழிபெயர்க்கும் அவர்கள் இருபத்தைந்து முப்பது பக்கங்கள் மொழிபெயர்ப்பதற்கு யானை விலை குதிரை விலை சொன்னார்கள். அப்போதுதான் அண்ணாவின் சாப்ட்வேர் மூளை வேலைசெய்தது. "கூகிள் டிரான்ஸ்லேடர்" மூலமாக மொழிபெயர்க்கலாம் என்றான். கதையில் பக்கபக்கமாக வரும் வசனங்களில் முதலில் ஒரு நண்பரின் உதவிகொண்டு டைப் செய்து எடுத்தோம். பின்னர் அதனை "கூகிள் டிரான்ஸ்லேடர்"ல் மொழிபெயர்த்தேடுத்தோம். "கூகிள் டிரான்ஸ்லேடர்" தனது ஆரம்ப காலங்களில் ஓரளவுக்குத்தான் மொழிபெயர்க்கும். ஆகவே ஆங்கிலத்தில் டிரான்ஸ்லேட் ஆன சமாச்சாரம் கொஞ்சம் விளங்கியது. குறிப்பாக ப்ளுபெரி லோங் சாம் என்ற தப்பியோடிய அடிமையுடன் கதைக்கும் வசனங்கள் பிரெஞ்சு கிராமீய வட்டார வழக்கு மொழியில் இருந்ததால் "கூகிள் டிரான்ஸ்லேடர்" அநியாயத்துக்கு திணறியது. அந்த பக்கோடா வசனங்களுடன், படங்களையும் பார்த்து, கதையோட்டத்திற்கு ஏற்றவாறு வசனங்களை தீர்மானித்தோம். அதனை மொழிபெயர்ப்பது வினோதமான சவாலாகவிருந்தது.

இது இப்படி போய்கொண்டிருக்க அண்ணா செய்த ஒரு காரியம் எனக்கே வியப்பளித்தது. இனிமேல் இப்படி பிரெஞ்சு மொழிபெயர்ப்புக்கு திணறுவதை காட்டிலும் பிரெஞ்சு படித்துவிடலாம் என்று அண்ணா முடிவு செய்தான். ஆனால் இரண்டு மூன்று கிளாஸ் போய்விட்டு முழிபிதுக்கியவாறு வீடு திரும்பினான். "என்னடா சோதனை இது. பிரெஞ்சில் கதிரை மேசைக்கெல்லாம் ஆண்பால் பெண்பால் பாக்கிறாணுக" என்று அலுத்துக்கொண்டான். காமிக்ஸ் மேல் அவனுக்கிருந்த பற்று அவனை பிரெஞ்சு க்ளாஸுக்கு கொண்டு போய் விட்டது. அவனும் சலிக்காமல் சில க்ளாஸுக்கு போனான். அவனை மாதிரி ஒரு காமிக்ஸ் வெறியனை கண்டதில்லை.
ப்ளுபெரியின் பெயர் வந்த காரணம்

இரண்டாம் இதழைபோலவே ப்ளுபெரியின் சாகசமும் அம்பது ரூபாயில் விற்பனைக்கு அனுப்பப்பட்டது. விற்பனையின் பின்னராக சில கடிதங்கள் வந்தன. ஆனால் விற்பனை அவ்வளவு முன்னேற்றமில்லை. வெறும் இருபது லட்சம் தமிழர்கள் வாழும் நாட்டில் காமிக்ஸ் என்ற ஊடகம் சென்றடைய வேறு லெவலில் முயற்சி செய்ய வேண்டும் என்பது புரிந்தது. 2007ஆம் ஆண்டு காலப்பகுதியில்தான், நிழல் உள்நாட்டுப்போர் நிஜமாக உருமாற தொடங்கியிருந்தது. போரின் தாக்கம் காரணமாக நாட்டின் ஏனைய பகுதிகளுக்கான தொடர்பு பாதிக்கப்பட்டது. கிளிநொச்சிக்கும் 50 புத்தகங்கள் அனுப்பினோம். அதன்பிறகு அதைப்பற்றி கேட்கத்தோன்றவில்லை. பணம் வராததற்கு வெவ்வேறு நியாயமான காரணங்கள் இருந்தன. அப்போதுதான் நாட்டில் சமாதான பேச்சுகள் முடிந்து போர் உத்தியாகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு வளைக்குள் பதுங்கிய எலிகளாணோம். கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. எங்கள் வாழ்க்கைமுறையே மாறிப்போனது. காமிக்ஸ் வெளியிடும் யோசனையே வரவில்லை. ஏதோ சின்ன வயசு ஆசைக்கு மூன்று புத்தகமே அதிகமோ என்று தோன்றியது. இப்போதுகூட ஏதாவது ஒரு ஆங்கில காமிக்ஸை வாசிக்கும்போது தமிழில் வெளியிடுவோமா என்று ஆசை வருவது உண்மைதான். அதற்கு காலம் பதில் சொல்லலாம்.படங்கள் பின்வரும் நண்பர்களின் தளங்களிருந்து சுடப்பட்டன. நன்றி...
http://tamilcomicsulagam.blogspot.com/
http://www.comicology.in/http://www.comicology.in/2007/08/star-1-captain-prince-april.html
http://tamilcomicsulagam.blogspot.com/2008/09/iceberg-comics-srilankan-tamil-1st.html
http://tamilcomicsulagam.blogspot.com/2008/09/iceberg-comics-2nd-issue-xiii.html
http://tamilcomicsulagam.blogspot.in/2008/09/icerberg-comics-3rd-issue-blueberry.html?m=1

Saturday, May 28, 2016

ஊழிகாலத்தில் ஒரு காமிக்ஸ் வேட்டை


1997ஆம் ஆண்டளவில் நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். காமிக்ஸ் படிப்பற்காகவே பள்ளிக்கூடம் போன காலம். பள்ளிக்கூடத்தில் காமிக்ஸ்களை கைமாற்றிக்கொள்வோம். சமூகக்கல்வி பாடம் நடக்கும்போது மாயாவியின் "தலையில்லா கொலையாளி" பாக்கெட் சைஸ் புத்தகம் எனது சமூககல்வி புத்தகத்துக்கு நடுவே இருக்கும். எங்களிடம் இருக்கும் காமிக்ஸ் புத்தகங்களை கைமாற்றிகொள்வோம். பாடசாலை நேரத்திலேயே வாசித்துவிட்டு கொடுத்துவிட வேண்டும். வீட்டுக்கு கொண்டு செல்ல அனுமதியில்லை. இதற்காகவே நான், சிவா, கிச்சா என்கிற கிருஸ்ணா, அச்சா என்ற அச்சுதன் ஆகியோர் கடைசி வரிசையில் இருப்போம். கணித டீச்சர் முக்கால்வாசி நேரம் ப்ளாக் போர்டை பார்த்தே பாடம் படிப்பிப்பா. நாங்களும் சீரியஸாக கணித புத்தகத்தை பார்ப்பது போல ஒரு பீரியட்டில் 25 பக்கம் காமிக்ஸ் வாசித்துவிடுவோம். இதற்காகவே தவறாமல் ஒவ்வொரு நாளும் பாடசாலைக்கு போவேன். பள்ளிக்கூடம் போக அடம்பிடிக்கிற பயல் திடீரென்று ஒழுங்கா போறானே என்று அம்மாவுக்கு ஒரே ஆச்சர்யம்.

அப்போது சண்டை கடுமையாக நடந்த நேரம். இந்தியாவிலிருந்து அநேக நேரங்களில் படகினில் வரும் ஏனைய பொருட்களுடன் சில புத்தகங்களும் வந்திறங்கும். ஆனால் சில மாதங்களாக கடலில் அடிக்கடி சண்டை நடந்தது. இந்தியாவிலிருந்து ஒரு சாமானும் வரவில்லை. இதனாலேயே எங்கள் பகுதிக்கு காமிக்ஸ் வறட்சி. பருத்திதுறையிலிருக்கும் புத்தககடைக்கு வாரத்துக்கு ஒருமுறை சைக்கிள் மிதித்து தோல்வி கண்டோம். இதற்கு மேல் என்ன செய்வது கடுமையான சிந்தனையிலிருந்தோம். சிவா பள்ளிகூடத்துக்கு அடிக்கடி "கட்" அடிக்க ஆரம்பித்தான். கேட்டால் "பள்ளிகூடத்துக்கு வந்து என்னதான் செய்யிறது" என்பான். ஆண்கள் பாடசாலை வேறு. பள்ளிக்கூடம் போரடிக்க ஆரம்பித்தது.

இப்படியாக போன காலப்பகுதியில், கிச்சா ஒரு நல்ல மழைநாளில் வினோத தகவலுடன் வந்தான். யாழ்ப்பாண டவுணுக்கு அருகிலுள்ள ஒரு பழைய லைப்ரரியை மூடபோகிறார்களாம். அதிலுள்ள புத்தகங்களை எல்லாம் விற்பதாக இருக்கிறார்களாம். என்பதுதான் அந்த தகவல். அதில் பழைய காமிக்ஸ்கள் இருக்குமோ? என்பதுதான் எங்களுக்கான மில்லியன் டொலர் கேள்வி. இந்த தகவலை கிச்சாவுக்கு சொன்னது அவன்ட மாமா. அவருக்கே யாரோ ஒரு கூட்டாளி சொன்னாராம். சும்மா காதுவழியா வந்த செய்திதான். புத்தகங்கள் முடிந்து விட்டனவா என்று தெரியாது. மேலதிக தகவலை கேட்டு உறுதிபடுத்த ஒருவழியும் இல்லை. போதாக்குறைக்கு யாழ்ப்பாண டவுண் எங்கள் ஊரிலிருந்து பதினாறு மைல் தூரம். போறவழி முழுக்க ஆமிகாரன்ட செக்பொயிண்டுகள். இறக்கி ஏத்தி குசலம் விசாரிப்பானுக. டவுணுக்கு போய் வர ஒரு நாள் முழுக்க போகும். போதாக்குறைக்கு அந்த காலத்துல யாரும் அவ்வளவு தூரம் போக மாட்டார்கள். வழியில் எதுவும் நடக்கலாம். ஆகவே எங்கள் காமிக்ஸ் கனவுகளை பெரிய பூட்டுபோட்டு பூட்டி விட்டு வேற வேலையை பார்த்தோம்.

இப்படியாக ரெண்டு நாட்கள் கழிந்தன. அன்று மத்தியானம் ஒருமணி இருக்கும். கடைசிப்பாடம் நடந்துகொண்டிருந்தது. இங்க்லீஷ் வாத்தியார் அரைமயக்க நிலையில் சலிப்புடன் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். நாங்களும் தேமே என்று கேட்டுகொண்டிருந்தோம். அச்சா நல்ல நித்திரையில் தூங்கி வழிந்தான். நானும் கிச்சாவும் அவன் எப்போது கீழே விழுவான் என்று ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று அச்சா விழித்துக்கொண்டான். என் காதில் "டேய் நாளைக்கே டவுணுக்கு போவோம். அந்த லைப்ரரியில் நமக்கு காமிக்ஸ் புத்தகம் கிடைக்கிறதா கனாகண்டேன்" என்றான். அரைநித்திரையில் ஏதோ உளறுகிறான் என்று நினைத்துக்கொண்டேன். "டேய்! நான் வகுப்பறையில் கண்ட கனவெல்லாம் பலிச்சிருக்கு. நிச்சயமா இதுவும் பலிக்கும்" என்றான் உறுதியாக.

பள்ளிக்கூடம் முடிந்தபின்னர் ஆலமரத்துக்கு கீழே திட்டமிடலை ஆரம்பித்தோம். அடுத்த நாளே யாழ்ப்பாணம் போவதாக ஏகமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அச்சா முன்னின்று திட்டங்கள் வகுத்தான். அடுத்த நாள் காலை பள்ளிக்கூடத்துக்கு போவது போல் வெளிக்கிட்டுகொண்டு வந்து அப்படியே  "தட்டி வானில்" டவுணுக்கு போவோம் என்று நான் யோசனை சொன்னேன். பதினாறு மைல் சைக்கிள் மிதிக்க எனக்கு விருப்பமேயில்லை. அச்சா "டேய்.. பள்ளிகூட உடுப்போட வானில ஏறினா யாராவது பார்த்து என்ட அப்பாவிடம் சொல்லிட்டா என்னை பெல்டாலை வெளுத்து போடுவார். சைக்கிள்ள போனா அவ்வளவு சந்தேகம் வராது. பள்ளிக்கூடம் முடியுற நேரத்துக்குள்ளே திரும்பி வந்திட்டா போதும், ஒருத்தருக்கும் சந்தேகம் வராது". உண்மைதான் எங்கள் ஊர் ஒரு வினோதமான ஊர். ஊர் முழுக்க அம்மா, அப்பாவின் சொந்தக்க்காரர்களோ நண்பர்களோ பரவியிருப்பார்கள். இப்படித்தான் இரண்டு மாதத்திற்கு முன்னால, ஒன்றுவிட்ட பெரியப்பா ஒருவர் வீட்டுக்கு வந்திருந்தபோது, "உங்க மகன் பள்ளிக்கூடம் முடிச்ச பிறகு கேள்ஸ் ஸ்கூலுக்கு முன்னால நிற்கிறதை கண்டேன். கொஞ்சம் கண்டிச்சு வையுங்க" என்று அப்பாவிடம் தகவல் சொன்னார். அப்பாவிடம் அடி வாங்காத குறைதான். விசாரணை என்ற பெயரில் துளைத்தெடுத்துவிட்டார். எங்கள் ஊர் முழுக்க உளவாளிகள் பரவிக்கிடந்தனர். ஊரின் வடக்குப்பக்கம் அப்பாவின் சைட் சொந்தக்காரர்கள். தெற்குப்பக்கம் அம்மாவின் சைட் சொந்தக்காரர்கள். அவர்களின் கழுகு கண்களிலிருந்து தப்புவது கஷ்டம்தான். காமிக்ஸ் வாங்க யாழ்ப்பாண டவுணுக்கு போனேன் என்று தெரிந்தால் அம்மா தோலை உரித்துவிடுவாள். நான் தவணை டெஸ்ட்டுகளில் எடுக்கும் மார்க்குகளுக்கும் நான் வாசிக்கும் புத்தகங்களின் எண்ணிக்கைக்கும் ஏதோ தொடர்ப்பிருப்பதாக ஒரு தியரி சொல்லுவாள். அதனால் விஷயம் ரகசியமாக இருக்கவேண்டும்.

அடுத்த நாள், காலை நேரத்துக்கே விழித்துக்கொண்டேன். வழமையாக ஏழரை மணிக்கு பள்ளிக்கூடத்துக்கு போகும் நான் அன்று ஏழே காலுக்கே வெளிக்கிட்டேன். "அண்ணா! என்ன இன்றைக்கு மட்டும் நேரத்துக்கு போறே" என்றாள் தங்கச்சி. உண்மைதான், பதட்டத்தில் நேரத்துக்கே வெளியே வந்துவிட்டேன். தங்கச்சி அம்மாவோட கையாள். நான் படிக்கும் நேரத்தில், காமிக்ஸ் வாசித்தால் அம்மாவிடம் போட்டு கொடுக்கும் உள்நாட்டு உளவாளி. நான் சுதாரித்தவாறே "இன்றைக்கு நான் வகுப்பறை க்ளீன் பண்ற டேர்ன்" என்று சொல்லிவிட்டு சைக்கிளை மிதித்தேன். சிவா, அச்சா, கிச்சா எல்லோரும் சரியாக ஏழரைக்கு பள்ளிக்கூடம் முன்னால் ஆஜர். பெரிய போத்தல்களில் தண்ணீர் அள்ளிக்கொண்டோம். முகத்தில் பெரிய பரபரப்பு காட்டாமல் ஒருவர் போய் இரண்டு நிமிடம் கழித்து மற்றவர் என்று மெதுவாக ஊருக்கு வெளியே சென்றோம். சன்னதி கோவிலுக்கு கிட்டே வைத்து எல்லோரும் இணைந்து கொண்டோம். சன்னதி கோவில் போகும் வரையிலும் ஊர் உளவாளிகள் நிறைந்திருந்தார்கள். ஆகவேதான் இப்படி ஒரு ஏற்பாடு. எனக்கு அப்போதே இளைக்க ஆரம்பித்து விட்டது. கிச்சா போன ஸ்போர்ட்ஸ்மீட்டுக்கு வாங்கி மிஞ்சிய குளுகோஸ் பக்கட்டுகளை பள்ளிகூடத்திலிருந்து லவட்டி கொண்டு வந்திருந்தான். அதை வாயில் கொட்டி தண்ணீரை குடித்தேன்.

அச்சுவேலிக்கருகில் இரண்டாம் நிறுத்தம். கடையில் மாம்பழ டொபி வேண்டினோம். கையில் இருந்த காசுகளை எண்ணிப்பார்த்தோம். மொத்தமாக இருநூற்றி பன்னிரெண்டு ரூபா. சிவா மட்டுமே எண்பத்தைந்து ரூபா போட்டிருந்தான். என்னுடைய பங்கு நாப்பத்திரண்டு ரூபா மட்டும்தான். குறைந்தது இருபது புத்தகமாவது வாங்கிவிடலாம் என்று கணக்கு போட்டோம். மீண்டும் சைக்கிளோட்டத்தை ஆரம்பித்தோம். ஆமி செக்பொய்ண்டுகளில் சைக்கிளை உருட்டினோம். "எங்க போறே" என்று விசாரித்தான் ஒரு ஆமிக்காரன். "டவுண் ஸ்கூலில் எக்சிபிஷன்" என்றேன். ஒருமாதிரியா பார்த்தான். என்ன நினைத்தானோ தெரியவில்லை. "சரி போ" என்றான். என்னுடைய பள்ளிகூட அடையாள அட்டையை பார்த்தால் என்னை போக விட்டிருப்பானோ.. என்னவோ..! அவ்வளவு தூரத்திலிருந்து எக்சிபிஷன் பார்க்கவாறது பல சந்தேகங்களை தோற்றுவிக்கலாம்.. பள்ளிகூட சீருடைக்கு ஒரு மரியாதை இருக்கத்தான் செய்கிறது.அந்த லைப்ரரி கள்ளியங்காட்டுக்கு பக்கத்தில் இருப்பதாக மட்டுமே தகவல். பத்து மணியளவில் டவுணுக்கு போய் சேர்ந்தோம். கள்ளியங்காட்டு சந்தியில் உள்ள தேத்தண்ணி கடைகளில் லைப்ரரியை பற்றி விசாரித்தோம். ஒருவருக்கும் அதைப்பற்றி தெரிந்திருக்கவில்லை. சரியான தகவலில்லாமல் கிளம்பி வந்த முட்டாள்தனத்தை எண்ணி மனம் நொந்தோம். சிவா "என்னால் இனிமே சைக்கிள் ஓட முடியாதுடா. கால் எல்லாம் நோவுது" என்றான். வெயிலின் கொடுமை தாங்கவில்லை. சந்தியில் இருந்த மரத்தின் கீழ் ஓய்வெடுத்தோம். எங்கள் எல்லோரின் தலையும் கவிழ்ந்திருந்தது. கிச்சா மட்டும் கொஞ்சம் யோசனையிலிருந்தான். அரை மணித்தியாலமாக அதிலேயே காத்திருந்தோம். அப்போது கிட்டத்தட்ட எங்கள் வயதில் ஸ்கூல் சீருடையுடன் ஒரு பொடியன் சைக்கிளில் போய் கொண்டிருந்தான். கிச்சா அவன் அவனை சைக்கிள் முன்னால் பாய்ந்து மறித்தான். அவனிடம் விசாரித்ததில் ஏதோ ஒரு சின்ன வீதியின் பெயரை சொன்னான். புதிய உத்வேகத்துடன் சைக்கிள் ஓடினோம். "அங்கே 'பழி வாங்கும் புயல்' புத்தகம் இருந்தா அது எனக்குத்தான்" என்று முன்பதிவு செய்தான் சிவா. அச்சா "முதல்ல அந்த லைப்ரரியில காமிக்ஸ் இருக்கோணும் என்று கடவுளை வேண்டிக்கொள்" என்று முறைத்தான். நான் கொடுத்த நாற்பது சொச்சம் ரூபாவுக்கு என்ன புத்தகம் கிடைக்குமோ தெரியவில்லை என்று யோசித்துக்கொண்டேன்.

ஒருவாறாக லைப்ரரியை வந்தடைந்தோம். சின்ன லைப்ரரிதான். ஒரு வயதான நபர் எங்களை முறைத்துபார்த்தார். பள்ளிக்கூட நேரத்தில் பள்ளிக்கூட சீருடையுடன் வந்ததை அவர் ரசிக்கவில்லை. "என்ன தம்பிகளா. இந்த நேரத்தில நீங்க வரக்கூடாது" என்றார். அவர் பேச்சிலேயே அவர் மென்றுகொண்டிருந்த வெற்றிலையின் காரமிருந்தது. அச்சா கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு "ஐயா! நாங்க பருத்துறை பக்கமிருந்து வாரோம். இந்த லைப்ரரியில புத்தகங்கள் விக்கிறீங்களா. இந்த லைப்ரரியை மூடப்போறதா யாரோ சொன்னாங்க" என்று இழுத்தார். அவர் எங்களை மேலும் கீழுமா பார்த்தார். "என்ன புத்தகங்கள் வேணும். நிறைய புத்தகங்கள் முடிஞ்சு போச்சு. அந்த செல்புல இருக்கிற புத்தங்கள்தான் மிச்சம்" என்று சலிப்புடன் கூறினார். எங்கள் எல்லோரது இதயமும் "தடக்.. தடக்.." என்று அடித்துக்கொண்டது. இரத்தம் சூடாக உடல் முழுக்க பரவியது. கிச்சா கண்ணை மூடி கடவுளை வேண்டிக்கொண்டான். அச்சா மெதுவாக முன்னோக்கி நடை போட்டான். புத்தகங்கள் வரிசையில் அடுக்கப்பட்டிருக்கவில்லை. ஒவ்வொரு புத்தகமாக எடுத்துப்பார்த்து சலித்தோம். "டேய் ஒரு காமிக்ஸ்கூட இல்லடா" என்று அழாக்குறையாக அச்சா கூறினான். எல்லா தெய்வங்களும் ஒன்றுசேர்ந்து எங்களுக்கு எதிராக சதி செய்ததை போல உணர்ந்தோம்.

"என்ன தம்பி ஒரு புத்தகமும் எடுக்கலையா" என்றவாறு அந்த பெரியவர் வந்தார். "எங்களுக்கு காமிக்ஸ் வேணும் ஐயா" என்று தீனமான குரலில் கூறினேன். "அதுவா! அதுவும் கொஞ்சம் இருக்கு. அதை அந்த மூலையில் தனியா போட்டு வச்சிருக்கு" என்றார். அவர் காட்டிய திசையில் மூன்று நான்கு கட்டுகளாக காமிக்ஸ்கள் இருந்தன. ஒரே நேரத்தில் எங்கள் கண்களில் ஒளி வந்தது. ஒரு சிலிர்ப்புடன் புத்தகங்களை பார்வையிட்டோம். கடைசி பத்து வருஷங்களில் வந்த ஒருசில புத்தகங்கள் அழகாக பைண்டிங் செய்யப்பட்டு எங்களை பார்த்து கண்ணை சிமிட்டின. "பழி வாங்கும் புயல்" இருந்தது. நார்மனின் "மரணத்தின் நிழலில்"  புத்தகத்தை நான் எடுத்துக்கொண்டேன். ஆளுக்கு ஏழெட்டு புத்தகங்களுடன் ஐயாவின் முன்னுக்கு நின்றோம். எல்லா புத்தகங்களுக்கும் அதன் தடிப்பை வைத்து ஒரு விலையை நிர்ணயித்தார். மொத்தமாக முன்னூற்றி எழுபது ரூபா வந்தது. எங்களிடம் இருந்த காசுக்கு இதை வாங்க முடியாது. அச்சா தயங்காமல் தனது வாட்ச்சை தூக்கி பெரியவரிடம் கொடுத்தான். பெரியவர் "என்ன தம்பி இதுக்கு போய் நல்ல கசினோ வாட்ச்சை தாறீங்க. இவ்வளவு தூரம் மினக்கெட்டு வந்திருக்கிறீங்க, இவ்வளவு காசு போதும்" என்று சிரித்தார். வாட்ச்சை திரும்பி தந்துவிட்டு கொடுத்த இருநூறு சொச்சம் ரூபாவுக்கே எல்லா புத்தகங்களையும் தந்துவிட்டார். வெளியே வந்தோம். கால்கள் தரையில் படாதது போன்றதொரு சிலிர்ப்பான அனுபவம்.

மணி பன்னிரெண்டரை. பள்ளிக்கூடம் முடிவதற்கு இன்னமும் ஒரு மணித்தியாலமே இருந்தது. வேகமாக சைக்கிள் மிதித்தாலும் போய் சேர்வது கஷ்டம் என்பதை அப்போதுதான் உணர்ந்தோம். சைக்கிளில் சிட்டாக பறந்தோம். "லேட்டாக போனதற்கு காரணமாக பள்ளிக்கூடத்தில் கிரிக்கெட் விளையாடியதாக சொல்லி சமாளிக்கலாம்" என்றான் சிவா. வல்லைவெளி பிரதேசத்தில் நுழையும்போது காற்று சோதனை தந்தது. அதைவிட பெரிய சோதனை காத்திருக்கும்போது அது பெரிதாக தோற்றவில்லை. சன்னதி கோவிலடியில் எல்லோரும் தனித்தனியாக பிரிந்தோம். ஒருவாறாக இரண்டரைக்கு வீட்டுக்கு போய் சேர்ந்தேன். வீட்டுக்குள்ளே நுழையும்போதே அம்மா வாசலில் நின்றாள். "ஐயா எங்க போய்ட்டு வாரீங்க. பள்ளிகூடம்தான் போனீங்களா" என்று முறைத்தாள்.

சன்னதி கோவிலுக்கு போன அம்மாவின் யாரோவொரு சிநேகிதி எங்களை பார்த்து வீட்டில் சொல்லிவைக்க விஷயம் வீட்டுக்கு தெரிந்து விட்டது. அப்பா வீட்டுக்கு வந்தபிறகு பூசை ஆரம்பித்தது. அப்பா அடித்து களைத்த பின்னர்தான் கேட்டார். "அப்படி நாள் முழுக்க எங்கடா போனே" என்றார். உண்மையை சொன்னேன். அதிர்ந்து போனார். "முதல்லேயே சொல்ல வேண்டியதுதானே. சொல்லியிருந்தா நானே வேண்டி தந்திருப்பேனே" என்று சொன்னது இந்த கதைக்கு ஒவ்வாத அன்டி-கிளைமாக்ஸ். அவரும் ஒரு காமிக்ஸ் ரசிகர்தான்.


********************


இது வெறும் கற்பனை கதைதான். காமிக்ஸ் வேட்டையாடி சலிக்கும் நண்பர்களுக்கு சமர்ப்பணம்.

Monday, May 23, 2016

அமெரிக்க காமிக்ஸ்கள் : சில Batman கதைகள்

சமீபகாலமாக அமெரிக்கத்தனமான Batman கதைகளை ஆங்கிலத்தில் வாசிக்க முயற்சிக்கிறேன். இன்டர்நெட்டில் Batman கதைகளை பற்றி பலர் சிலாகிக்கிறார்கள். Batman மீதான அவர்களின் அபிமானம் அளப்பெரியது. அவ்வாறான விமர்சனங்கள் என்னை Batman காமிக்ஸ்களை வாசிக்கத்தூண்டின. எனக்கு "டிம் பேர்டன்" மற்றும் "கிறிஸ்டோபர் நோலன்" உருவாக்கிய Batman படங்கள் மிகவும் பிடிக்கும். எந்தவித அதிசய சக்திகளும் இல்லாத Batman உடல்பலம் மற்றும் தொழில்நுட்ப ஆற்றல் மூலமாக நீதிக்காக போராடுவது சுவாரஸ்யமானது. குறிப்பாக Dark knight திரைப்படத்தில் ஜோக்கருடன் நடைபெறும் சண்டையில் Batman அடிபட்டு மயங்கிவிழும் காட்சி புதுவிதமாக இருந்தது. அதுவே Batman படங்களை எனக்கு தேடிபார்க்க தூண்டியது. ஆனால் காமிக்ஸ் என்பது வினோதமான வஸ்து. அதிலும் அமெரிக்க காமிக்ஸ்கள் வெவ்வேறான காரணங்களுக்காக ரசிக்கப்படுகின்றன. சில நேரங்களில் கன்னாபின்னாவென்று படங்களை கொண்டுள்ள காமிக்ஸ்களும் உலகின் தலைசிறந்த காமிக்ஸ் பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன. கதைசொல்லப்படும் உத்திகள், வித்தியாசமான காட்சியமைப்புகள், படங்கள் மூலம் கதையை கொண்டுசெல்லும் நவீன உத்திகளை கொண்ட காமிக்ஸ்கள் கொண்டாடப்படுகின்றன. இங்கு படங்கள் கதைகள் அநேக நேரத்தில் இரண்டாம் பட்சம்தான். எனக்கு இவற்றை புரிந்து கொள்ள நீண்ட காலமெடுத்தது. நான் இதுவரை காலமும் வாசித்தது ஐரோப்பிய காமிக்ஸ்கள்தான். அவை ஆழமான கதையம்சமும் நேர்த்தியான சித்திர தரமும் கொண்டவை. அமெரிக்க காமிக்ஸ்களை ரசிப்பதற்கு வித்தியாசமான ரசனை நிச்சயம் தேவை. சமீபத்தில் சில அமெரிக்க காமிக்ஸ்களை வாங்கினேன். ஆனால் அவற்றை வாசிக்கும் முன்பதாக மனதை தயார்படுத்தினேன். அப்படி நான் வாசித்த மூன்று Batman காமிக்ஸ்களில் நான் ரசித்த விஷயங்களை பட்டியலிடுகிறேன்.
1. Dark knight returns


55 வயது Batman சில வருட ஓய்வுக்கு பின்னராக மறுபடியும் கொதம் நகரத்தில் உள்ள சமூக விரோதிகளுடன் மீண்டும் போராடுகிறான். அதன்போது இடம்பெறும் நிகழ்வுகள் காரணமாக அவனுக்கு சமூகவிரோதி என்ற பட்டம் கிடைக்கிறது. Batman மீதான மக்களின் செல்வாக்கினால் பொறாமையில் இருக்கும் அமெரிக்க அரசாங்கம் Supermanனிடம் Batmanஐ அழிக்க உதவுமாறு கோரிக்கை விடுக்கிறது. கடைசியாக இருவருக்கும் இடையே தூள் பறக்கும் ஒற்றைக்கு ஒற்றை சண்டை. கடைசியாக எதிர்பாராத சுவாரஸ்யமான ஒரு முடிவு.

வழமைக்கு மாறான வித்தியாசமான கதை. கதாசிரியர் பிராங் மில்லர் கதை சொல்லும் விதத்தில் பல புதுமைகளை முயற்சித்திருப்பார். ஒரு நியூஸ் சனலில் போகும் செய்திகள், பேட்டிகள் மூலமாக கதை சம்பவத்துக்கு சம்பவம் நகரும். நியூஸ் சனல் அந்நேரத்தில் உள்ள மக்களின் மனநிலையை தெளிவாக படம்பிடித்துக்காட்டும். வலிமையான வசனங்கள் இக்கதையின் உயிர்நாடி. வித்தியாசமான காட்சி அமைப்புக்கு உதாரணமாக கதையில் ஒரு கட்டத்தில் காட்சி இருளில் ஆரம்பிக்கும். நான்கு கட்டங்களில் தொடர்ச்சியாக இருள். யாரோ இருவர் கதைத்துக்கொண்டிருப்பார்கள்.
இருள் விலகும்போது வில்லனின் கையாள் ஒருவனை Batman பலமாடி கட்டடத்துக்கு மேலாக பிடித்து தொங்கபோட்டவாறு இருப்பான். வில்லனின் கண்களை Batman பொத்திவைத்திருந்ததால்தான் காட்சியின் தொடக்கத்தில் இருள் வந்தது என்பதை அறியும்போது காட்சி வடிவமைப்பை பாராட்டத்தோன்றுகிறது. இப்படியாக வெவ்வேறான புத்திசாலித்தனமான காட்சி அமைப்புகள் இருக்கின்றன. கதையை வாசிக்கும்போது Batmanஇன் மனநிலையில் வாசிப்பவர்களையும் கொண்டுசெல்கிறார் கதாசிரியர். Batman மனதில் யோசிப்பதை வசனங்கள் வெளிப்படுத்தும்போது நாங்களும் அதே மனநிலையில் பயணிக்கிறோம்.

கடைசியாக Batman உம் Supermanனும் மோதிக்கொள்ளும் காட்சிகளில் வரும் லாஜிக்குகள் சிறப்பாக இருக்கும். பலம் என்ற விசயத்தில் Batman, Supermanக்கு ஈடாகவிட்டாலும் தனது தொழில்நுட்பதிறனால் சாதிப்பதுவும் ஓரளவு யதார்த்தமான சுவாரசியம். ஆனால் இக்கதையின் படங்களை கன்னாபின்னாவென்று பிராங் மில்லர் வரைந்திருப்பார். சில நேரங்களில் நேர்த்தியில்லாத விகாரமான சித்திரங்கள் வாசிப்பை தடைசெய்கின்றன. சில படங்கள் பரவாயில்லை ரகம். இவ்வளவு காலமும் நேர்த்தியான சித்திரத்தரம்கொண்ட ஐரோப்பிய காமிக்ஸ்களை  வாசித்துவிட்டு இப்படியொரு சித்திரதரம் கொண்ட காமிக்ஸை வாசிப்பது வினோதமான அனுபவம்தான். இந்த புத்தகத்தை மூன்று வருடங்களுக்கு முன்னர் வாங்கியிருந்தாலும், சமீபத்தில்தான் வாசிக்க மனம் வந்தது. அதற்கு காரணம் அந்த சித்திரதரம்தான். ஆனால் வாசித்துமுடித்தபின்னர் அந்த புத்தகத்தில் ரசிப்பதற்கு வேறு நிறைய விஷயங்கள் இருப்பதை மறுக்கமுடியாது. ஆனால் நல்ல மனஅமைதி உள்ள மழைநாளில் வாசிப்பதற்கு மட்டுமே இவ்வாறான கதைகளை recommend செய்வேன் :).

சமீபத்தில் Coursera வழங்கும் காமிக்ஸ் தொடர்பான ஒரு Courseஇல் இந்த புத்தகம் ஒரு reference ஆக உள்ளது. காமிக்ஸில் உள்ள புதுமை உத்திகளை
விளங்கப்படுத்த இந்த காமிக்ஸ் உதாரணமாக உள்ளது.
https://www.coursera.org/course/comics


2. Batman: Year one

1980 காலப்பகுதியில் Batman மீதான மோகம் குறைந்து போவதை DC Comics நிறுவனத்தினர் உணர்ந்தனர். அதனை மேம்படுத்தும் முயற்சியாக Batmanக்கு புதிய அவதாரம் கொடுக்க முடிவுசெய்தனர். அதற்கான பணியை Frank Millerரிடம் ஏற்றுக்கொண்டார். "ப்ரூஸ் வேய்ன்" எவ்வாறு Batman ஆக மாறினான் என்பதையும், இளமையான ஜேம்ஸ் கோர்டன் கொதம் போலிஸில் இணைந்த ஆரம்ப நாட்களில் இடம்பெறும் சம்பவங்கள் என்று களைகட்டும் கதை. இது Batman எவ்வாறு உருவானான் என்பது பற்றிய கதை அல்ல. Batmanஇன் ஆரம்ப நாட்களில் அவன் எதிர்கொள்ளும் சவால்கள் செய்யும் தவறுகளை நூதனமாக ஆராயும் கதை. Batman தோன்றும் கட்டங்கள் கதையின் பாதிதான். மற்றைய அரைவாசிக்கதை ஜேம்ஸ் கோர்டனுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும். ஜேம்ஸ் கோர்டன் கொதம் நகரின் போலிஸ் பொறுப்பினை ஏற்றுக்கொண்டவுடன் எதிர்கொள்ளும் சவால்கள், போலிஸ்காரனாக மணவாழ்க்கையில் சந்திக்கும் நெருக்கடிகள், என்று கொஞ்சம் வித்தியாசமான தளத்தில் செல்லும்கதை. இது கூடுதலாக பெரியோர்களை மட்டுமே கவரக்கூடிய கதை. இந்த இரு கதைகளும் ஒரே நேரத்தில் நகர்த்திச்செல்லப்பட்டு ஒரு புள்ளியில் இணைக்கப்படுகின்றன.

இரு கதைகளுக்கும் வெவ்வேறான வர்ண சேர்க்கை வித்தியாசமான எழுத்துருக்களை பாவித்து வித்தியாசம் காட்டியிருப்பார்கள். ஓவியங்கள் David Mazzucchelli. நான் இதுவரை பார்த்திராத ஓவியங்கள். இவரது கோடுகள் மொத்தமானவை. ஆனால் வர்ணங்கள் மூலம் நிழல்ப்படுத்துகின்றார். கதை அநேக நேரங்களில் கொதம் நகரின் இருள் படிந்த மூலைகளிலேயே நகர்கின்றது. மொத்தமான கோடுகள் இருள் படிந்த காட்சிகளை இட்டுநிரப்ப அழகாக பொருந்துகின்றன. வர்ணசேர்க்கையின் போது பயன்படுத்தப்பட்ட நிறங்கள் புதுமையானவை. கதாசிரியர் Frank Miller தனது சகல கதைசொல்லும் திறமைகளை புத்திசாலித்தனமாக கையாண்ட இதழ். ஜேம்ஸ் கோர்டன் வரும் காட்சிகள் என்னை மிகவும் கவர்ந்தன. ஏனென்றால் அவ்வளவு யதார்த்தம். Batman சந்திக்கும் சவால்கள் அழகாக பின்னப்பட்டிருக்கும். இக்கதையில் Catwomanக்கு அறிமுகம் கிடைக்கிறது. வாசகனாக என்னால் குறை கண்டுபிடிக்கவே முடியாத இதழ். குறைந்தளவு வசனங்கள்தான் என்றாலும் வலிமைமிக்க வசனங்கள். இந்த புத்தகத்தில் 96 பக்கங்களே இருந்தன. ஆனால் இதனை வாசித்துமுடிக்க வேண்டுமென்றே நிறைய நாட்களை எடுத்துக்கொண்டேன். இந்த புத்தகம் வாசித்துமுடிந்து விட்டதை எண்ணி பிறகு வருத்தப்பட்டது வேறு கதை.


3. Long Halloween


இளவயது Batmanஇன் தொடக்ககாலத்தில் நடக்கும் கதை. முகம் தெரியாத ஒரு வில்லன் ஒவ்வொரு விடுமுறை நாளிலும் ஒரு கொலை செய்கிறான். அமெரிக்காவின் ஒவ்வொரு விடுமுறை நாளிலும் ஒவ்வொரு கொலை அரங்கேறுகின்றது. கொதம் நகரிலுள்ள பெரிய தாதாவின் எதிரிகள் மற்றும் அவனது நண்பர்கள் தொடர்ச்சியாக கொலை செய்யப்படுகின்றனர். முகம் தெரியாத யாரோ ஒருவன்தான் கொலையாளி. அவனுக்கு Holiday என்று பத்திரிகைகள் பெயர் சூட்டுகின்றன. இக்கொலைகளுக்கான காரணத்தை Batman மற்றும் கமிஷனர் ஜேம்ஸ் கோர்டன் ஆகியோர் துப்பறிகின்றனர். இதே நேரத்தில் Batman கதைகளில் வரும் வழமையான வில்லன்கள் வெவ்வேறான தருணங்களில் Batmanஉடன் மோதுகிறார்கள். இது வழமையான Batman பாணி கதையில்லை. வழமையான கதைகளில் Batman பைத்தியகார வில்லன்களுடன் கண்டமேனிக்கு மோதுவார். ஆனால் இதுவோ வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர்.  இக்கதை வெளியானபோது இந்த வித்தியாசமான பாணி Batman கதை ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. இக்கதையின் கதாசிரியர் "ஜெப் லோப்" Batman கதைகளில் வழமையாக வலம்வரும் வில்லன் கதாப்பாத்திரங்களை புத்திசாலித்தனமாக இக்கதையில் உள்நுழைத்திருப்பார். அந்த வில்லன் கதாப்பத்திரங்களின் வித்தியாசமான குணாதிசயங்களை அழகாக பயன்படுத்தியிருப்பார். குறிப்பாக டூ-பேஸ், பொய்சன் ஐவி போன்ற பாத்திரங்கள் கதையின் போக்கை திசைதிருப்ப உதவுகின்றன. இக்கதையில் Batman தோன்றும் காட்சியமைப்புகள் கொஞ்சம் குறைவுதான். ஆனாலும் ஒரு நல்ல சூப்பர் ஹீரோ த்ரில்லரை வாசித்த திருப்தியை தருகின்றது. கதை முழுக்க தாதாக்கள் வலம்வருகின்றனர். இந்த தாதாக்களின் உலகத்தை Dark knight திரைப்படத்திலும் பயன்படுத்தியிருப்பார்கள்.

என்னை பொறுத்தவரை கதை ஓகே ரகம்தான். ஆனால் சித்திரங்கள் ஆச்சர்யப்படுத்தும் ரகம். சித்திரங்கள் நேர்த்தியானவையோ உயிரோட்டமானவையோ அல்ல. சில நேரங்களில் ஓவியர் தனது பத்து வயது மகனிடம் தூரிகையை கொடுத்து வரையச்சொன்னாரா என்று சந்தேகம் வருகின்றது. ஆனால் அவை வரையப்பட்ட கோணங்கள் அருமையாக இருக்கும். வினோதமான கோணங்களில் ஓவியர் "டிம் சேல்" வரைந்து தள்ளியிருப்பார். ஒவ்வொரு காட்சிக்குமான வண்ணகலவை கதையின் போக்குக்கு ஏற்ப மாறுபடுகிறது. ஒரு கட்டத்தின்பின்னர் ஓவியங்களில் உள்ள நெளிவுகோடுகளை ரசிக்க பழகிகொண்டேன். வாசகர்களின் மனநிலையை கதையின் போக்குடன் ஒன்றச்செய்வதில் வண்ணக்கலவை முக்கிய பங்கு வகிக்கிறது. சித்திரங்களுக்காகவே மீண்டும் ஒருமுறை வாசிக்கவேண்டும்.