Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Saturday, May 28, 2016

ஊழிகாலத்தில் ஒரு காமிக்ஸ் வேட்டை


1997ஆம் ஆண்டளவில் நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். காமிக்ஸ் படிப்பற்காகவே பள்ளிக்கூடம் போன காலம். பள்ளிக்கூடத்தில் காமிக்ஸ்களை கைமாற்றிக்கொள்வோம். சமூகக்கல்வி பாடம் நடக்கும்போது மாயாவியின் "தலையில்லா கொலையாளி" பாக்கெட் சைஸ் புத்தகம் எனது சமூககல்வி புத்தகத்துக்கு நடுவே இருக்கும். எங்களிடம் இருக்கும் காமிக்ஸ் புத்தகங்களை கைமாற்றிகொள்வோம். பாடசாலை நேரத்திலேயே வாசித்துவிட்டு கொடுத்துவிட வேண்டும். வீட்டுக்கு கொண்டு செல்ல அனுமதியில்லை. இதற்காகவே நான், சிவா, கிச்சா என்கிற கிருஸ்ணா, அச்சா என்ற அச்சுதன் ஆகியோர் கடைசி வரிசையில் இருப்போம். கணித டீச்சர் முக்கால்வாசி நேரம் ப்ளாக் போர்டை பார்த்தே பாடம் படிப்பிப்பா. நாங்களும் சீரியஸாக கணித புத்தகத்தை பார்ப்பது போல ஒரு பீரியட்டில் 25 பக்கம் காமிக்ஸ் வாசித்துவிடுவோம். இதற்காகவே தவறாமல் ஒவ்வொரு நாளும் பாடசாலைக்கு போவேன். பள்ளிக்கூடம் போக அடம்பிடிக்கிற பயல் திடீரென்று ஒழுங்கா போறானே என்று அம்மாவுக்கு ஒரே ஆச்சர்யம்.

அப்போது சண்டை கடுமையாக நடந்த நேரம். இந்தியாவிலிருந்து அநேக நேரங்களில் படகினில் வரும் ஏனைய பொருட்களுடன் சில புத்தகங்களும் வந்திறங்கும். ஆனால் சில மாதங்களாக கடலில் அடிக்கடி சண்டை நடந்தது. இந்தியாவிலிருந்து ஒரு சாமானும் வரவில்லை. இதனாலேயே எங்கள் பகுதிக்கு காமிக்ஸ் வறட்சி. பருத்திதுறையிலிருக்கும் புத்தககடைக்கு வாரத்துக்கு ஒருமுறை சைக்கிள் மிதித்து தோல்வி கண்டோம். இதற்கு மேல் என்ன செய்வது கடுமையான சிந்தனையிலிருந்தோம். சிவா பள்ளிகூடத்துக்கு அடிக்கடி "கட்" அடிக்க ஆரம்பித்தான். கேட்டால் "பள்ளிகூடத்துக்கு வந்து என்னதான் செய்யிறது" என்பான். ஆண்கள் பாடசாலை வேறு. பள்ளிக்கூடம் போரடிக்க ஆரம்பித்தது.

இப்படியாக போன காலப்பகுதியில், கிச்சா ஒரு நல்ல மழைநாளில் வினோத தகவலுடன் வந்தான். யாழ்ப்பாண டவுணுக்கு அருகிலுள்ள ஒரு பழைய லைப்ரரியை மூடபோகிறார்களாம். அதிலுள்ள புத்தகங்களை எல்லாம் விற்பதாக இருக்கிறார்களாம். என்பதுதான் அந்த தகவல். அதில் பழைய காமிக்ஸ்கள் இருக்குமோ? என்பதுதான் எங்களுக்கான மில்லியன் டொலர் கேள்வி. இந்த தகவலை கிச்சாவுக்கு சொன்னது அவன்ட மாமா. அவருக்கே யாரோ ஒரு கூட்டாளி சொன்னாராம். சும்மா காதுவழியா வந்த செய்திதான். புத்தகங்கள் முடிந்து விட்டனவா என்று தெரியாது. மேலதிக தகவலை கேட்டு உறுதிபடுத்த ஒருவழியும் இல்லை. போதாக்குறைக்கு யாழ்ப்பாண டவுண் எங்கள் ஊரிலிருந்து பதினாறு மைல் தூரம். போறவழி முழுக்க ஆமிகாரன்ட செக்பொயிண்டுகள். இறக்கி ஏத்தி குசலம் விசாரிப்பானுக. டவுணுக்கு போய் வர ஒரு நாள் முழுக்க போகும். போதாக்குறைக்கு அந்த காலத்துல யாரும் அவ்வளவு தூரம் போக மாட்டார்கள். வழியில் எதுவும் நடக்கலாம். ஆகவே எங்கள் காமிக்ஸ் கனவுகளை பெரிய பூட்டுபோட்டு பூட்டி விட்டு வேற வேலையை பார்த்தோம்.

இப்படியாக ரெண்டு நாட்கள் கழிந்தன. அன்று மத்தியானம் ஒருமணி இருக்கும். கடைசிப்பாடம் நடந்துகொண்டிருந்தது. இங்க்லீஷ் வாத்தியார் அரைமயக்க நிலையில் சலிப்புடன் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். நாங்களும் தேமே என்று கேட்டுகொண்டிருந்தோம். அச்சா நல்ல நித்திரையில் தூங்கி வழிந்தான். நானும் கிச்சாவும் அவன் எப்போது கீழே விழுவான் என்று ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று அச்சா விழித்துக்கொண்டான். என் காதில் "டேய் நாளைக்கே டவுணுக்கு போவோம். அந்த லைப்ரரியில் நமக்கு காமிக்ஸ் புத்தகம் கிடைக்கிறதா கனாகண்டேன்" என்றான். அரைநித்திரையில் ஏதோ உளறுகிறான் என்று நினைத்துக்கொண்டேன். "டேய்! நான் வகுப்பறையில் கண்ட கனவெல்லாம் பலிச்சிருக்கு. நிச்சயமா இதுவும் பலிக்கும்" என்றான் உறுதியாக.

பள்ளிக்கூடம் முடிந்தபின்னர் ஆலமரத்துக்கு கீழே திட்டமிடலை ஆரம்பித்தோம். அடுத்த நாளே யாழ்ப்பாணம் போவதாக ஏகமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அச்சா முன்னின்று திட்டங்கள் வகுத்தான். அடுத்த நாள் காலை பள்ளிக்கூடத்துக்கு போவது போல் வெளிக்கிட்டுகொண்டு வந்து அப்படியே  "தட்டி வானில்" டவுணுக்கு போவோம் என்று நான் யோசனை சொன்னேன். பதினாறு மைல் சைக்கிள் மிதிக்க எனக்கு விருப்பமேயில்லை. அச்சா "டேய்.. பள்ளிகூட உடுப்போட வானில ஏறினா யாராவது பார்த்து என்ட அப்பாவிடம் சொல்லிட்டா என்னை பெல்டாலை வெளுத்து போடுவார். சைக்கிள்ள போனா அவ்வளவு சந்தேகம் வராது. பள்ளிக்கூடம் முடியுற நேரத்துக்குள்ளே திரும்பி வந்திட்டா போதும், ஒருத்தருக்கும் சந்தேகம் வராது". உண்மைதான் எங்கள் ஊர் ஒரு வினோதமான ஊர். ஊர் முழுக்க அம்மா, அப்பாவின் சொந்தக்க்காரர்களோ நண்பர்களோ பரவியிருப்பார்கள். இப்படித்தான் இரண்டு மாதத்திற்கு முன்னால, ஒன்றுவிட்ட பெரியப்பா ஒருவர் வீட்டுக்கு வந்திருந்தபோது, "உங்க மகன் பள்ளிக்கூடம் முடிச்ச பிறகு கேள்ஸ் ஸ்கூலுக்கு முன்னால நிற்கிறதை கண்டேன். கொஞ்சம் கண்டிச்சு வையுங்க" என்று அப்பாவிடம் தகவல் சொன்னார். அப்பாவிடம் அடி வாங்காத குறைதான். விசாரணை என்ற பெயரில் துளைத்தெடுத்துவிட்டார். எங்கள் ஊர் முழுக்க உளவாளிகள் பரவிக்கிடந்தனர். ஊரின் வடக்குப்பக்கம் அப்பாவின் சைட் சொந்தக்காரர்கள். தெற்குப்பக்கம் அம்மாவின் சைட் சொந்தக்காரர்கள். அவர்களின் கழுகு கண்களிலிருந்து தப்புவது கஷ்டம்தான். காமிக்ஸ் வாங்க யாழ்ப்பாண டவுணுக்கு போனேன் என்று தெரிந்தால் அம்மா தோலை உரித்துவிடுவாள். நான் தவணை டெஸ்ட்டுகளில் எடுக்கும் மார்க்குகளுக்கும் நான் வாசிக்கும் புத்தகங்களின் எண்ணிக்கைக்கும் ஏதோ தொடர்ப்பிருப்பதாக ஒரு தியரி சொல்லுவாள். அதனால் விஷயம் ரகசியமாக இருக்கவேண்டும்.

அடுத்த நாள், காலை நேரத்துக்கே விழித்துக்கொண்டேன். வழமையாக ஏழரை மணிக்கு பள்ளிக்கூடத்துக்கு போகும் நான் அன்று ஏழே காலுக்கே வெளிக்கிட்டேன். "அண்ணா! என்ன இன்றைக்கு மட்டும் நேரத்துக்கு போறே" என்றாள் தங்கச்சி. உண்மைதான், பதட்டத்தில் நேரத்துக்கே வெளியே வந்துவிட்டேன். தங்கச்சி அம்மாவோட கையாள். நான் படிக்கும் நேரத்தில், காமிக்ஸ் வாசித்தால் அம்மாவிடம் போட்டு கொடுக்கும் உள்நாட்டு உளவாளி. நான் சுதாரித்தவாறே "இன்றைக்கு நான் வகுப்பறை க்ளீன் பண்ற டேர்ன்" என்று சொல்லிவிட்டு சைக்கிளை மிதித்தேன். சிவா, அச்சா, கிச்சா எல்லோரும் சரியாக ஏழரைக்கு பள்ளிக்கூடம் முன்னால் ஆஜர். பெரிய போத்தல்களில் தண்ணீர் அள்ளிக்கொண்டோம். முகத்தில் பெரிய பரபரப்பு காட்டாமல் ஒருவர் போய் இரண்டு நிமிடம் கழித்து மற்றவர் என்று மெதுவாக ஊருக்கு வெளியே சென்றோம். சன்னதி கோவிலுக்கு கிட்டே வைத்து எல்லோரும் இணைந்து கொண்டோம். சன்னதி கோவில் போகும் வரையிலும் ஊர் உளவாளிகள் நிறைந்திருந்தார்கள். ஆகவேதான் இப்படி ஒரு ஏற்பாடு. எனக்கு அப்போதே இளைக்க ஆரம்பித்து விட்டது. கிச்சா போன ஸ்போர்ட்ஸ்மீட்டுக்கு வாங்கி மிஞ்சிய குளுகோஸ் பக்கட்டுகளை பள்ளிகூடத்திலிருந்து லவட்டி கொண்டு வந்திருந்தான். அதை வாயில் கொட்டி தண்ணீரை குடித்தேன்.

அச்சுவேலிக்கருகில் இரண்டாம் நிறுத்தம். கடையில் மாம்பழ டொபி வேண்டினோம். கையில் இருந்த காசுகளை எண்ணிப்பார்த்தோம். மொத்தமாக இருநூற்றி பன்னிரெண்டு ரூபா. சிவா மட்டுமே எண்பத்தைந்து ரூபா போட்டிருந்தான். என்னுடைய பங்கு நாப்பத்திரண்டு ரூபா மட்டும்தான். குறைந்தது இருபது புத்தகமாவது வாங்கிவிடலாம் என்று கணக்கு போட்டோம். மீண்டும் சைக்கிளோட்டத்தை ஆரம்பித்தோம். ஆமி செக்பொய்ண்டுகளில் சைக்கிளை உருட்டினோம். "எங்க போறே" என்று விசாரித்தான் ஒரு ஆமிக்காரன். "டவுண் ஸ்கூலில் எக்சிபிஷன்" என்றேன். ஒருமாதிரியா பார்த்தான். என்ன நினைத்தானோ தெரியவில்லை. "சரி போ" என்றான். என்னுடைய பள்ளிகூட அடையாள அட்டையை பார்த்தால் என்னை போக விட்டிருப்பானோ.. என்னவோ..! அவ்வளவு தூரத்திலிருந்து எக்சிபிஷன் பார்க்கவாறது பல சந்தேகங்களை தோற்றுவிக்கலாம்.. பள்ளிகூட சீருடைக்கு ஒரு மரியாதை இருக்கத்தான் செய்கிறது.



அந்த லைப்ரரி கள்ளியங்காட்டுக்கு பக்கத்தில் இருப்பதாக மட்டுமே தகவல். பத்து மணியளவில் டவுணுக்கு போய் சேர்ந்தோம். கள்ளியங்காட்டு சந்தியில் உள்ள தேத்தண்ணி கடைகளில் லைப்ரரியை பற்றி விசாரித்தோம். ஒருவருக்கும் அதைப்பற்றி தெரிந்திருக்கவில்லை. சரியான தகவலில்லாமல் கிளம்பி வந்த முட்டாள்தனத்தை எண்ணி மனம் நொந்தோம். சிவா "என்னால் இனிமே சைக்கிள் ஓட முடியாதுடா. கால் எல்லாம் நோவுது" என்றான். வெயிலின் கொடுமை தாங்கவில்லை. சந்தியில் இருந்த மரத்தின் கீழ் ஓய்வெடுத்தோம். எங்கள் எல்லோரின் தலையும் கவிழ்ந்திருந்தது. கிச்சா மட்டும் கொஞ்சம் யோசனையிலிருந்தான். அரை மணித்தியாலமாக அதிலேயே காத்திருந்தோம். அப்போது கிட்டத்தட்ட எங்கள் வயதில் ஸ்கூல் சீருடையுடன் ஒரு பொடியன் சைக்கிளில் போய் கொண்டிருந்தான். கிச்சா அவன் அவனை சைக்கிள் முன்னால் பாய்ந்து மறித்தான். அவனிடம் விசாரித்ததில் ஏதோ ஒரு சின்ன வீதியின் பெயரை சொன்னான். புதிய உத்வேகத்துடன் சைக்கிள் ஓடினோம். "அங்கே 'பழி வாங்கும் புயல்' புத்தகம் இருந்தா அது எனக்குத்தான்" என்று முன்பதிவு செய்தான் சிவா. அச்சா "முதல்ல அந்த லைப்ரரியில காமிக்ஸ் இருக்கோணும் என்று கடவுளை வேண்டிக்கொள்" என்று முறைத்தான். நான் கொடுத்த நாற்பது சொச்சம் ரூபாவுக்கு என்ன புத்தகம் கிடைக்குமோ தெரியவில்லை என்று யோசித்துக்கொண்டேன்.

ஒருவாறாக லைப்ரரியை வந்தடைந்தோம். சின்ன லைப்ரரிதான். ஒரு வயதான நபர் எங்களை முறைத்துபார்த்தார். பள்ளிக்கூட நேரத்தில் பள்ளிக்கூட சீருடையுடன் வந்ததை அவர் ரசிக்கவில்லை. "என்ன தம்பிகளா. இந்த நேரத்தில நீங்க வரக்கூடாது" என்றார். அவர் பேச்சிலேயே அவர் மென்றுகொண்டிருந்த வெற்றிலையின் காரமிருந்தது. அச்சா கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு "ஐயா! நாங்க பருத்துறை பக்கமிருந்து வாரோம். இந்த லைப்ரரியில புத்தகங்கள் விக்கிறீங்களா. இந்த லைப்ரரியை மூடப்போறதா யாரோ சொன்னாங்க" என்று இழுத்தார். அவர் எங்களை மேலும் கீழுமா பார்த்தார். "என்ன புத்தகங்கள் வேணும். நிறைய புத்தகங்கள் முடிஞ்சு போச்சு. அந்த செல்புல இருக்கிற புத்தங்கள்தான் மிச்சம்" என்று சலிப்புடன் கூறினார். எங்கள் எல்லோரது இதயமும் "தடக்.. தடக்.." என்று அடித்துக்கொண்டது. இரத்தம் சூடாக உடல் முழுக்க பரவியது. கிச்சா கண்ணை மூடி கடவுளை வேண்டிக்கொண்டான். அச்சா மெதுவாக முன்னோக்கி நடை போட்டான். புத்தகங்கள் வரிசையில் அடுக்கப்பட்டிருக்கவில்லை. ஒவ்வொரு புத்தகமாக எடுத்துப்பார்த்து சலித்தோம். "டேய் ஒரு காமிக்ஸ்கூட இல்லடா" என்று அழாக்குறையாக அச்சா கூறினான். எல்லா தெய்வங்களும் ஒன்றுசேர்ந்து எங்களுக்கு எதிராக சதி செய்ததை போல உணர்ந்தோம்.

"என்ன தம்பி ஒரு புத்தகமும் எடுக்கலையா" என்றவாறு அந்த பெரியவர் வந்தார். "எங்களுக்கு காமிக்ஸ் வேணும் ஐயா" என்று தீனமான குரலில் கூறினேன். "அதுவா! அதுவும் கொஞ்சம் இருக்கு. அதை அந்த மூலையில் தனியா போட்டு வச்சிருக்கு" என்றார். அவர் காட்டிய திசையில் மூன்று நான்கு கட்டுகளாக காமிக்ஸ்கள் இருந்தன. ஒரே நேரத்தில் எங்கள் கண்களில் ஒளி வந்தது. ஒரு சிலிர்ப்புடன் புத்தகங்களை பார்வையிட்டோம். கடைசி பத்து வருஷங்களில் வந்த ஒருசில புத்தகங்கள் அழகாக பைண்டிங் செய்யப்பட்டு எங்களை பார்த்து கண்ணை சிமிட்டின. "பழி வாங்கும் புயல்" இருந்தது. நார்மனின் "மரணத்தின் நிழலில்"  புத்தகத்தை நான் எடுத்துக்கொண்டேன். ஆளுக்கு ஏழெட்டு புத்தகங்களுடன் ஐயாவின் முன்னுக்கு நின்றோம். எல்லா புத்தகங்களுக்கும் அதன் தடிப்பை வைத்து ஒரு விலையை நிர்ணயித்தார். மொத்தமாக முன்னூற்றி எழுபது ரூபா வந்தது. எங்களிடம் இருந்த காசுக்கு இதை வாங்க முடியாது. அச்சா தயங்காமல் தனது வாட்ச்சை தூக்கி பெரியவரிடம் கொடுத்தான். பெரியவர் "என்ன தம்பி இதுக்கு போய் நல்ல கசினோ வாட்ச்சை தாறீங்க. இவ்வளவு தூரம் மினக்கெட்டு வந்திருக்கிறீங்க, இவ்வளவு காசு போதும்" என்று சிரித்தார். வாட்ச்சை திரும்பி தந்துவிட்டு கொடுத்த இருநூறு சொச்சம் ரூபாவுக்கே எல்லா புத்தகங்களையும் தந்துவிட்டார். வெளியே வந்தோம். கால்கள் தரையில் படாதது போன்றதொரு சிலிர்ப்பான அனுபவம்.

மணி பன்னிரெண்டரை. பள்ளிக்கூடம் முடிவதற்கு இன்னமும் ஒரு மணித்தியாலமே இருந்தது. வேகமாக சைக்கிள் மிதித்தாலும் போய் சேர்வது கஷ்டம் என்பதை அப்போதுதான் உணர்ந்தோம். சைக்கிளில் சிட்டாக பறந்தோம். "லேட்டாக போனதற்கு காரணமாக பள்ளிக்கூடத்தில் கிரிக்கெட் விளையாடியதாக சொல்லி சமாளிக்கலாம்" என்றான் சிவா. வல்லைவெளி பிரதேசத்தில் நுழையும்போது காற்று சோதனை தந்தது. அதைவிட பெரிய சோதனை காத்திருக்கும்போது அது பெரிதாக தோற்றவில்லை. சன்னதி கோவிலடியில் எல்லோரும் தனித்தனியாக பிரிந்தோம். ஒருவாறாக இரண்டரைக்கு வீட்டுக்கு போய் சேர்ந்தேன். வீட்டுக்குள்ளே நுழையும்போதே அம்மா வாசலில் நின்றாள். "ஐயா எங்க போய்ட்டு வாரீங்க. பள்ளிகூடம்தான் போனீங்களா" என்று முறைத்தாள்.

சன்னதி கோவிலுக்கு போன அம்மாவின் யாரோவொரு சிநேகிதி எங்களை பார்த்து வீட்டில் சொல்லிவைக்க விஷயம் வீட்டுக்கு தெரிந்து விட்டது. அப்பா வீட்டுக்கு வந்தபிறகு பூசை ஆரம்பித்தது. அப்பா அடித்து களைத்த பின்னர்தான் கேட்டார். "அப்படி நாள் முழுக்க எங்கடா போனே" என்றார். உண்மையை சொன்னேன். அதிர்ந்து போனார். "முதல்லேயே சொல்ல வேண்டியதுதானே. சொல்லியிருந்தா நானே வேண்டி தந்திருப்பேனே" என்று சொன்னது இந்த கதைக்கு ஒவ்வாத அன்டி-கிளைமாக்ஸ். அவரும் ஒரு காமிக்ஸ் ரசிகர்தான்.


********************


இது வெறும் கற்பனை கதைதான். காமிக்ஸ் வேட்டையாடி சலிக்கும் நண்பர்களுக்கு சமர்ப்பணம்.

Sunday, April 12, 2015

பிரதீப்!!

பிரதீப்...! இந்த பெயரை கேட்டால் உங்களுக்கு என்ன எண்ணம் மனதில் தோன்றுகிறது. எனக்கு இந்த பெயர் பல ஞாபங்களை கொண்டுவருகிறது. பிரதீப் அக்காலத்தில் கொஞ்சம் டிரென்டியான பெயர். பிரதீப் என்ற பெயரையுடைய நபரை சந்திக்கபோகிறேன் என்றால் அந்த பெயரே ஒருவித எதிர்பார்ப்பை எனக்குள் ஏற்படுத்திவிடும். கொஞ்சம் புத்திசாலியான மாடர்னான ஒரு பயலை சந்திக்கபோகிறோம் என்று நினைத்துகொள்வேன். எனக்கு தெரிந்து பலபேர் அந்த பெயருடன் சுற்றிக்கொண்டிருந்தார்கள். பிரதீப் என்ற பெயருடைய ஒருவன் என்னுடன் ஆறாம் ஆண்டுவரை, கிராம பள்ளிகூடத்தில் படித்துவிட்டு நகர பாடசாலைக்கு மாறினான். அவன் மாறியதால் அவன் எடுத்துவந்த வகுப்பின் "முதலாம் பிள்ளை" என்ற பெருமை எனக்கு தற்காலிகமாக கைமாறியது. பத்தாம் ஆண்டு படிக்கும்போது பிரதீப் என்ற பெயருடையவன் பக்கத்து வீட்டில் குடியேறினான். என்னுடன் அடிக்கடி கிரிக்கெட் விளையாடினான். நன்றாக "லெக் ஸ்பின்" போடுவான். கண்ணில் "போல்" பட்டு கொஞ்ச காலம் கப்பல் கொள்ளைக்காரன் மாதிரி ஒரு கண்ணில் கட்டுடன் திரிந்தான்.

எனக்கு ஐந்து வயதாக இருக்கும்போது, பக்கத்துவீட்டில் இருந்த பிரதீப் அண்ணாவும் வித்தியாசமான பேர்வழி. வீட்டில் அதிகம் இருக்கமாட்டார். அவர் அப்படி எங்கே போகிறார் என்று அந்த வயதில் எனக்கு புரியவில்லை. எப்போதாவது காணும்போது "கண்மணி" கடையில் தோடம்பழ முட்டாசி வாங்கித்தருவார். எங்கள் கிராமத்தில் இருந்த ஒரே ஒரு தியேட்டருக்கு தெருவில் உள்ள பொடியன்களை படத்துக்கு கூட்டிக்கொண்டு போனார். சேர்ட்டின் உள்ளே தோட்டா மாலை போட்டிருப்பார். அதை எங்கே வாங்கினீர்கள் என்று அப்பாவியாக கேட்டுவைத்தேன். கொஞ்சம் மழுப்பலாக சிரித்துக்கொண்டு "திருவிழா காலத்தில் 'கண்மணி' கடையில் இது விக்கும்" என்றார். ஆனாலும் கண்மணி கடையில் தோட்டா விற்றதை இதுவரை கண்டதில்லை. அதை பற்றி மேலும் விசாரிக்க பிரதீப் அண்ணாவை மறுபடியும் காண முடியவில்லை.

கம்பசிலும் "பிரதீப்" என்ற பெயருடைய இன்னொரு நபரையும் சந்தித்தேன். என்னைவிட படிப்பில் திறமைசாலி. இவ்வாறான அனுபவங்கள் காரணமாக, பிரதீப் என்ற பெயருள்ள எவனும் என்னைவிட வல்லவன் என்ற எண்ணம் மனதில் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. இப்படித்தான் எனக்கு சிறுவயதில் பெயர் சம்பந்தப்பட்ட வினோத பழக்கமிருந்தது. எனது வகுப்பில் இருக்கும் மாணவர்களின் திறமை, குணாதிசயம் போன்றவற்றை அவர்களின் பெயர்களுடன் தொடர்பு படுத்தியே சிந்திப்பேன். செழியன் என்பவன் என்னை முந்தி வகுப்பில் முதலாம் பிள்ளையாக வந்தால், செழியன் என்ற பெயருள்ள எல்லா பயல்களும் தீவிர புத்திசாலிகள் என்ற மனதில் விம்பம் உருவாகும். இப்படி சில வினோத கோட்பாடுகள் சிறுவயதிலே மனதில் வைத்திருப்பேன். நாங்கள் இதுவரை சந்திக்காத நபரின் பெயர் அந்த நபருடன் எங்களுக்கான முதல் அறிமுகத்தை தருகிறது. பின்னர் அந்த நபரை சந்திக்கும்போது அநேக நேரங்களில் ஏமாற்றம்தான்  மிஞ்சுகிறது.

வயது ஏற ஏற பெயர் மூலமாக நபரின் உருவ அமைப்பு குணாதிசயங்களை தீர்மானிக்கும் பழக்கம் குறைந்தது விட்டது. சமீப காலத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்வு அவ்வாறான கோட்பாடு பிழை என்பதை உறுதி செய்தது. கம்பசில் கடைசி வருடம் படிக்கும்போது புதிதாக தொடங்கவிருந்த பாடத்துக்கு புதிதாக ஒரு விசிடிங் லெக்சரர் வருவதாக ஏற்பாடாகவிருந்தது. அவர் ஒரு சிங்களவர். சிங்கள பெயர்களை உச்சரிக்கும்போது வரும் 'ஷ', 'ஹ' சத்தங்களுக்கு ஏற்றவாறு குணாதிசய நியமங்களை உருவாக்கிக்கொண்டேன். அந்த லெக்சரரின் பெயர்கூட ஒரு கேட்டு சலித்ததொரு வழமையான சிங்கள பெயர். முதலாவது லெக்சருக்கு வழமைபோல ஐந்து நிமிஷம் லேட்டாக போனோம். ஆளை காணவில்லை. லெக்சர் ஹோலுக்கு வெளியே ஒரு பயல் ஜீன்ஸ் ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து ஸ்டைலாக நின்று கொண்டிருந்தான். மெதுவாக உள்ளே அவன் நடந்து வந்தான். அவன் கதைக்கதொடங்கிய பின்னரே அவர்தான் எங்கள் புதிய லெக்சரர் என்ற உண்மை எங்களுக்கு புரிந்தது. அவருக்கு ஒரு லெக்சரருக்குரிய வழமையான தோற்றமில்லை. ஆனால் வந்த முதல் நாளே இரண்டு அசைன்மென்ட் தந்து கிலியை ஏற்படுத்தினார். அவருடைய லெக்சர்களின்போது அசைன்மென்ட் கொப்பி அடித்தால் அடுத்த லெக்சரில் பெயர்களை வாசித்து அவமானப்படுத்துவார்.

அவர் போலவொரு ஆசாமிக்கும் பெயருக்கும் சம்பந்தமில்லை. அவர் போடுற "ஆர்மனி" டீ-சேர்ட்டுக்கும் அவர் தருகிற கெடுபிடி அசைன்மென்ட்டுக்கும் துளிகூட சம்பந்தமில்லை. இந்த ஆசாமியை சந்தித்தபின்னர் எவரையும் அவர்கள் பெயர்கள் மூலமாக நபரின் உருவ அமைப்பு மூலமாகவோ குணாதிசயங்களை தீர்மானிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது.

போனவாரம்தான் எங்கள் ஆபீஸ்ஸில் "பிரதீப்" என்று ஒரு பயல் சேர்ந்திருக்கான். பயல் எப்படிப்பட்ட ஆளா இருப்பானோ.. பார்ப்போம்..

Saturday, October 4, 2014

பிரம்மாஸ்திரம்!!

 பின்னேரம் நாலு மணி இருக்கும். முன் கேட்டில் மூன்று தரம் டிங்.. டிங்.. என்று சத்தம் கேட்டது. அதுதான் பின்னேர கிரிக்கெட் விளையாட்டுக்கான ரகசிய சமிக்ஞை. முந்தாநாள்தான் ஏழாம் ஆண்டு கடைசி தவணை பரீட்சைகள் முடிந்து ரிப்போர்ட் கார்ட் வந்திருந்தது. ரிப்போர்ட்டில் வந்த மார்க்ஸ் அம்மாவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியம அளவுகளில் இல்லாததால் லீவு நாட்களிலும் அம்மாவின் கெடுபிடிகள் அதிகமாக இருந்தன. அதனால் "பின்னேர விளையாட்டு" கிழமையில் மூன்று நாட்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. அதனால் ஏனைய நாட்களில் "டியூஷன் போகிறேன்" என்று சொல்லிவிட்டுத்தான் விளையாட்டுக்கு போகணும். எல்லாமே தீவிரமாக திட்டமிடப்பட்டிருந்தது. பிரசாத் கேட்டில் மூன்று தரம் மெதுவாக தட்டுவான். நான் அந்த சிக்னலை கேட்டு பாடபுத்தகத்தோடு வெளியே வரவேண்டும். என்னை தவிர வேறு யாராவது சத்தம் கேட்டு போய் பார்த்தால் யாரையும் காணமுடியாது. மூணு வீடு தள்ளி இருக்கிற "டியூசன்" அங்கிள் வீட்டுக்கு போக சைக்கிள் தேவைப்படாது. ஆகவே எனது சைக்கிளை தொட்டால் அம்மாவுக்கு சந்தேகம் வந்துவிடும். இரண்டு கிலோமீட்டர் தள்ளி இருக்கிற உப்பு கராஜ்ஜுக்கு போக பிரசாத்தின் சைக்கிளில்தான் தொற்றிக்கொள்ள போகவேண்டும். பிரசாத்துக்கு என்னைவிட ஒரு வயசு குறைவு. ஆனாலும் அவன் வயது பயல்களுடன் சுற்றுவதைவிட என்னுடன்தான் கூடுதலாக சுற்றுவான். அவன் ஒரு கிரிக்கெட் பைத்தியம். அவனுடன் கிரிக்கெட் விளையாட சம்மதிக்கும் யாரும் அவனுக்கு நண்பராகலாம். அந்தவழியில்தான் நான் அவனுக்கு நண்பன்.

நான் பாடபுத்தகத்தோடு வெளியே வந்தேன். பிரசாத்தின் சைக்கிளில் ஏற சைக்கிள் வேகம் பிடித்தது. வேகமாக சைக்கிள் ஓடினால் இன்னும் கூடுதலான நேரம் கிரிக்கெட் விளையாடலாம் என்பதற்காகவே மூச்சிரைக்க பிரசாத் வெறியுடன் ஓடினான். "நத்தை" நந்துவும், முத்துவும் நேரடியாக உப்பு கராஜ்ஜுக்கே வருவார்கள். நாலே நாலு பேர்தான். ஆனாலும் நாங்க விளையாடுற கிரவுண்டின் அளவுக்கு நாலு பேர் அதிகம்தான். எங்கள் ஊரில் "புட் போல்"தான் பேமஸ். கிரிக்கெட் என்றால் சோம்பேறிகளின் விளையாட்டு என்று ஒரு பொதுவான அபிப்பிராயம் இருந்தது. "அது என்னடா விளையாட்டு.. ஒருத்தன் போல் போட.. அதை ஒருத்தன் அடிக்க.. கிரவுண்டுல இருக்கிற மற்ற பத்து பேரும் கொட்டாவி விடுகிறான்கள்" என்று தாத்தா கடுமையாக விமர்சிப்பார். ஆகவே கிரிக்கெட் விளையாட காசு குடுத்ததுதான் ஆள் பிடிக்கவேணும். யன்னல் கண்ணாடிகளை காப்பாற்றிகொள்வதற்காக உள்ளூர் பெருசுகள் செய்யும் சதி என்று பிரசாத் சொல்லுவான். இதுவரை நாலு வீட்டு யன்னலை உடைத்திருக்கிறான். அடுத்த நாள் காசை தந்து விடுவேன் என்று சொல்லி நழுவி விடுவான். அடுத்த நாள் வேறு இடத்துக்கு விளையாட்டை மாற்றிவிடுவோம். இவ்வளவு எதிர்ப்புக்கும் மத்தியிலும் நாங்கள் நாலு பேரும் கிரிக்கெட் விளையாடுவதற்கு ஒரு காரணம் இருந்தது. நாங்கள் நாலு பேருக்கும் "புட் போல்" ஒத்துவராது. "புட் போலில்" தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். "கோல்" அடிக்க போகும்போது காலை "டாக்கில்" செய்து விழுத்தி விடுவான்கள். பிரசாத் இப்படியான ஒரு சம்பவத்தில் முன் பல்லை இழந்திருந்தான். அந்த பயத்திலேயே கிரிக்கெட்டுக்கு எங்களை இசைவாக்கப்படுத்திக்கொண்டோம்.

உப்பு கராஜ்ஜூக்கு போய் சேர்ந்தபோது முத்துவும், நந்துவும் விக்கெட்டுகளை நாட்டிக்கொண்டிருந்தார்கள். நந்துவின் பட்டப்பெயர் "நத்தை". நாங்கள் அவன் பீல்டிங் செய்யும் பக்கமாக பந்தை அடிப்போம். பௌண்டரி நிச்சயமாக கிடைக்கும். முத்து நல்ல "பாட்ஸ்மன்". பலசாலி. ஆனாலும் உப்பு கராஜ் போன்ற சின்ன மைதானங்களில் அவன் திறமை வீணானது. உப்பு கராஜ் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு பெரிய காலி நிலமாக கனவு மைதானமாக இருந்தது. ஆனால் இப்போது சில வீடுகள் முளைத்து விட்டன. அதனால் மைதானம் சுருங்கி நீள் சதுரமாக மாறியது. இதனால் "ஓப்" சைட்டில் அடித்தால், லல்லு மாமா வீட்டு யன்னல்களுக்கு ஆபத்து வரும். "ஓன்" சைட்டில் அடித்தால் உப்புக்குளத்தில் பந்து விழுந்து விடும். ஆகவே ஸ்ட்ரைட்டாக அடித்தால் மட்டுமே சிக்ஸர் அடிக்க முடியும். இப்படியோரு இண்டர்நஷனல் க்ரௌன்ட். ஆனாலும் கிரிக்கெட் மேலிருந்த வெறி எங்களை அங்கே அழைத்துச்செல்லும்.

முத்து முதலாவதாக "பேட்"டை  தூக்கினான். பிரசாத் ஒருவன்தான் அவனுக்கு தைரியமாக பந்துவீச வருவான். பிரசாத் "பாஸ்ட் போலர்" பௌன்டரி லைனுக்கு  அருகாமையிலிருந்து ஓடி வருவான். "வக்கார் யூனுஸ்"தான் அவனது மானசீக குரு. முதல் பந்தை முன்னுக்கு ஒரு ஸ்டெப் வைத்து "ப்லோக்" செய்தான். "சிவமயம்" போட்டு எழுத ஆரம்பிப்பது போல இப்படித்தான் தொடங்குவான். அடுத்த பந்து தூக்கி அடிக்க சிக்ஸருக்கு பறந்தது. அடுத்தது பௌன்டரி. அடுத்த பந்தை பிரசாத் கொஞ்ச ஸ்லோவாக போட பேட்டை மிஸ் பண்ணி முத்துவின் முழங்காலில் பட்டது. "முத்து.. நீ அவுட்டு.. LBW போடா வெளியே" என்று பிரசாத் கத்தினான். ஆனால் முத்து "இல்லடா பாட்டுல(pad) பந்து பட்டாத்தான் LBW.. நீ டீவியில மேட்ச் பார்த்ததில்லையா" என்று சண்டை பிடித்தான். அவனை அவுட் ஆக்குவது கஷ்டம். அவுட் ஆக்கினாலும் வெளியே போக வைப்பது அதைவிட கஷ்டம்.

அடுத்த ஓவர் என்னிடம் வந்தது. நான் "லெக்" ஸ்பின்னர். எனக்கு ஓடுவது என்றாலே அலர்ஜி. பள்ளி விளையாட்டு போட்டிகளில் ஓடி ஒளிவேன். ஓடினால் கால் உளையும். "ஸ்பின்னராக மாறும்" சரித்திரத்தையே மாற்றும் முடிவை எடுத்தேன். முதல் பந்து அரைபிட்ச்சில் விழுந்து சுழன்று அடிப்பதற்கு வாகாக விழுந்தது.. வெளுத்தான்.. சிக்ஸர்.. "இருடா.. ஆறு போலுக்குமே சிக்ஸர் அடிக்கிறேன்" என்று சூளுரைத்தான். அடுத்த பந்து கொஞ்சம் பரவாயில்லை. கஷ்டப்பட்டுத்தான் அடித்தான்.. நந்து விட்டுவிட பௌண்டரி.. 


எனக்கு அடுத்து என்ன செய்வது தெரியவில்லை. அப்போதுதான் எனது
பிரம்மாஸ்திரம் ஞாபகத்துக்கு வந்தது. அந்த நேரம் "சக்லைன் முஸ்தாக்" பிரபலமாக இருந்தார். ஓப் ஸ்பின்னர் என்று சொன்னாலும் பந்தை அடுத்த பக்கமாகவும் திருப்புவார். அவரைப்போலவே நானும் எனது வழமையான லெக் ஸ்பின்னை கொஞ்சம் மாற்றி ஓப் ஸ்பின் போட்டேன். முத்து எதிர்பார்க்கவில்லை. ஓப் ஸ்டம்ப் பறந்தது. "நீ அலாப்புகிறாயடா.. பந்து கல்லில பட்டு அடுத்த பக்கம் திரும்பிட்டுது." என்று பிட்சில் விழுந்திருந்த சின்ன கல்லுகளை சாவகாசமாக தட்டிவிட்டான். அவனது சேர்ட்டை பிடித்து இழுத்து "நீ அவுட்டு.. போடா வெளியே" என்றேன். அவன் என்னை தள்ளிவிட பிட்சில் போய் விழுந்தேன். காலில் தேய்த்து காயம் ஏற்பட்டது. "இப்ப பாருடா உனக்கு குடுக்கிறேன் பாரு" என்று கர்ஜித்துக்கொண்டே எழுந்தேன். எல்லோரும் சிலை போல அதிர்ந்து போய் எனது பக்கமாக பார்த்துக்கொண்டேயிருந்தார்கள். அவர்கள் என்னை பார்க்காமல் எனக்கு பின்னாலிருந்த யாரையோ பார்த்துகொண்டேயிருந்தார்கள். திரும்பி பார்த்தபோது அவர்களைவிட நான் அதிர்ச்சியானேன். அன்பு மாமா முகம் சிவந்தவாறு முறைத்துகொண்டிருந்தார். "டேய் உனக்கு இப்போது டியூஷன் இருக்கு.. ஆனா நீ இங்க என்ன செய்யுற" என்று கர்ஜித்தார். "அம்மாட்ட பொய் சொல்லிட்டாய்.. என்ன பார்க்கிற.. வீட்டுக்கு வா.. தாரேன் பூசை" என்றார்..

அவருடைய "சூப்பர் கப்" மோட்டார் சைக்கிளில் ஏறினேன். மற்றவர்கள் அசையாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். வீட்டில் அன்பு மாமாவின் பிரம்மாஸ்திரமான பெல்டினால் நல்ல பூசை கிடைத்தது. அதற்கான காரணம் கிரிக்கெட் மட்டுமல்ல. அதைவிட அபாயகரமான காரணம் ஒன்று இருப்பது பிறகுதான் உறைத்தது. "அக்கா.. இவன் ரிப்போர்ட் கார்டுல கணித பாட மார்க்ஸ் மாத்திப்போட்டான்.. இவன் உண்மையா எடுத்தது நாற்பத்தைந்து மார்க்ஸ்.. ஆனா கள்ளப்பயல் அதை அழிச்சு எழுபத்தைந்து என்று மாற்றிப்போட்டான்" என்று போட்டுடைத்தார். அவ்வளவுதான் பூசையில் அம்மா வேறு சேர்ந்து கொண்டாள். அன்றுதான் கிரிக்கெட் விளையாடிய கடைசி நாள். நல்லதொரு ஸ்பின்னரை இந்த நாடு இழந்து விட்டது..

அவர் ஏன் உப்பு கராஜ் போன்ற ஒதுக்குபுறமான இடத்துக்கு திடீரென்று வந்தார்.. ரிப்போர்ட் கார்டில் நான் செய்த திருகுதாளம் எப்படி அவருக்கு தெரிந்தது என்பது போன்ற கேள்விகளுக்கான விடைகள் இரண்டு வருடங்களுக்கு பின்னர்தான் தெளிவானது. உப்பு கராஜுக்கு பக்கத்தில் இருந்த லல்லு மாமாவின் மகளை சைட் அடிக்க அன்பு மாமா வருவாராம். லல்லுவின் மகள்தான் எங்கள் கணித ஆசிரியையான மாலா டீச்சர். இரண்டு வருஷம் கழிச்சு இப்போது மாலா டீச்சர் அன்பு மாமியாகி விட்டா. "உனக்கு இவன் ரிப்போர்ட்டில் மாற்றினது எப்படி தெரியும்" என்று ஒரு வார்த்தையை அம்மா மாமாவை பார்த்து கேட்டிருந்தால் அன்றையதினம் நிலைமை மாறியிருந்திருக்கலாம்..

ஆனால் கேட்கவில்லை..





Saturday, August 16, 2014

அது!

"நீ வந்திட்டியா.. நான் சொன்னதை வாங்கி வந்திருக்கியா" என்று அதட்டலாக கேட்டான் மறுமுனையில் பேசிய ஆசாமி.

"ம்.. ம்.." என்றேன்.

"இந்த விஷயம் ரகசியமாக இருக்கட்டும்டா" அவனது குரல் கொஞ்சம் கெஞ்சலாக மாறியது.

"சரிடா.. அந்த ஆண்டவனுக்கே தெரியாம பாத்துக்கிறேன்" அப்படியே போனை கட் பண்ணினேன். ரகசிய விசயங்களை போனில் நிறைய கதைக்கக்கூடாது.

எனக்கு போனில் வந்த ரகசிய உத்தரவின்படி பொருளை சின்னாவின் கடையில் ஒப்படைக்க வேண்டும். பொருளின் ஒரு பகுதி சின்னாவுக்கு, மற்றது எனக்கு உத்தரவு போட்டவனுக்கு. மந்திரிக்கப்பட்டவன் போல பொருளை நியூஸ் பேப்பரில் சுற்றினேன். ஏதோவொரு டீ-ஷர்ட்டை மாட்டிக்கொண்டு சைக்கிளை மிதித்தேன். அம்மா "கொழும்பிலேயிருந்து வந்ததும் வாராததுமா எங்கடா போறே. அப்பா உன்னை எங்கயோ போகசொன்னாரு... ..." என்று அம்மாவின் அதட்டல் எனது ஒரு காதில் விழுந்து, மறுகாதால் போனது. சைக்கிள் ஒழுங்கைகளின் வளைவுகளில் வேகமாக வளைந்தது. பொருளை பத்திரமாக நெஞ்சோடு அணைத்துக்கொண்டிருந்தேன்.

ஊர் சந்தியின் ஒரு புறத்தில் சின்னாவின் கடை ஜம்மென்றிருந்தது. எப்போதும் மூன்று நாலு பொடிப்பயல்கள் அவன் கடையில் மலேசிய புளியம்பழ டொபி வாங்குவார்கள். அவன் கடையில் எப்போதும் வெளிநாட்டு புளிப்பு டொபி பிரபலம். அவனுடைய அப்பாவின் கடையை அடுத்த தலைமுறையாக நடத்துகிறான். அவன் அப்பா காலத்தில் "சந்திக்கடை" என்று பிரபலம் பெற்றிருந்தது. ஆனால் சின்னாவின் காலத்தில் "டொபிக்கடை" என்று பெயர் மாற்றம் பெற்றது. ஆனாலும் அவனால் எல்லா சின்ன பிள்ளைகளுக்கும் விற்க முடியாது. அவனது கடையில் ஒரு நோட்டு புத்தகம் இருக்கும் அதில் "ப்ளக் லிஸ்ட்" செய்யப்பட்ட சின்ன பிள்ளைகளின் பெயர்கள் இருக்கும். வாங்கவரும் குழந்தைகளின் பெயரை கேட்டு சரிபார்த்த பின்னரே டொபி குடுப்பான். மீறி "ப்ளக் லிஸ்ட்" செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு டொபி விற்றால் கடைக்கு கல்லெறி விழும். அவனது கடைக்கு பக்கத்திலிருந்த "பல்லு புடுங்கிற" டாக்டர் சாமி, சின்னா மூலமாக நல்லா சம்பாதிக்கிறார் என்று ஊருக்குள் பேச்சு அடிபட்டது.

நான் சின்னா கடைக்கு போய் சேர்ந்தபோது கடையில் கொஞ்சம் கூட்டமாகத்தான் இருந்தது. சின்னா கவுன்ட்டரில் சோம்பலாக இருந்தான். என்னை கண்டவுடன் முகம் மலர்ந்து "எப்படா வந்தே? நல்லாயிருக்கியா.. மூஞ்சியில கொஞ்சம் சதை போட்ட மாதிரி இருக்கே" என்று நலம் விசாரித்தான் சின்னா. அவன் கண்கள் எனது கையில் இருந்த பொருளை எடை போட்டன. "என்னது கொழும்பிலேருந்து திராட்சை அல்வா வாங்கி வந்திருக்கிறாயா" என்றான். "ம்.. ம்.." என்றேன். பார்சலை பவ்யமாக கடையின் உள்ளே வைத்துவிட்டு வந்தான். "திருமால் இன்னும் ஐந்து நிமிஷத்தில் வருவான். ஏழு மணியாகுது கடையை பூட்டிட்டு வாரேன். கடற்கரைக்கு போவோம்". இப்போதாவது கதையின் தொடக்கத்தில் வந்த அநாமதேய குரல் ஆசாமி யாரென்று சொல்லியாகணும். திருமால் என்கிற எங்களது நண்பன்தான் எனக்கு ரகசிய உத்தரவு தந்த குரலுக்கு சொந்தக்காரன். நாலு நிமிஷத்திலேயே வந்து விட்டான். ஒல்லியான வெள்ளை ஆசாமி. ஊரின் தேசிய உடையான சாரம் அணிந்திருந்தான். சின்னா கடையை மூடினான். நான் கொண்டுவந்த பார்சல் மேலும் ஒரு ப்ரௌன் பேப்பரில் சுற்றப்பட்டது. யாருக்கும் உள்ளே இருப்பது என்னது என்று சந்தேகம் வராதாம் பிஸ்கட் டின் என்று நினைப்பார்கள் என்று சின்னா சொன்னான். கடற்கரைக்கு சைக்கிளை மிதித்தோம். மாலை மணி ஆறே முக்கால் சூரியன் மறைந்திருந்தாலும் மந்தமான வெளிச்சம் இருந்தது. கடற்கரையில் இருந்த ஒருசிலரும் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள். சுற்றி வர யாருமே இல்லாத இடமாக தேடினோம்.



வழியில் சங்கரன் மாமாவை கண்டோம். "போச்சுடா இந்த மனுஷன் என்னை கண்டா வீட்ட போட்டுக்குடுத்திடுவார்டா.. நான் செத்தேன்" என்று குளற ஆரம்பித்தான் திருமால். உண்மைதான் சங்கரன் மாமா "போட்டுகுடுக்கிறதுல" பிஎச்டி செய்த ஆளு. அவரை கண்டாலே பொடியள் ஓடி ஒளிவான்கள். உதாரணத்துக்கு "உங்கட மகனை மூணாம் தெருவுல ஒரு பெண்ணோட பார்த்தேன்" என்று ஒரு கம்ப்ளைன்டை சம்பந்தப்பட்ட அப்பாவியின் அப்பாவிடம் பதிவு செய்வார். அவர் எங்களை கண்டதுமே எங்களை நோக்கி வந்தார். "என்னடா தம்பிகளா யாரடா நீங்க" என்று டோர்ச் லைட்டை முகத்தில் அடித்தார். சின்னாதான் பேசத்தொடங்கினான். "இல்ல மாமா.. எண்ணெய்க்கடை சதாசிவத்தோட பேரன் கொழும்பிலேயிருந்து வந்திருக்கான்.. அவனோட சும்மா காத்து வாங்க கடற்கரைக்கு கூட்டி வந்தோம்" என்று படபடத்தான். சங்கரன் மாமாவின் சந்தேகம் குறைந்த மாதிரி தெரியவில்லை. "டேய் என்னவோ சொல்றீங்க.. ம்.." என்று எனது முகத்தில் டோர்ச் அடித்தார். என்னுடைய தலைமுடிவெட்டு கொழும்பு ஸ்டைலில் இருந்ததால் சந்தேகம் வரலை போலும், எங்களை விட்டு விட்டார்.

ஒரு ஒதுக்குப்புறமாக இடத்தை கண்டுபிடித்தோம். கடலுக்கு வெகு அருகாமையிலிருந்த ஒரு பெரிய பாறைக்கு பின்னாலுள்ள சின்னப்பாறைதான் அந்த இடம். "இனி எந்த கொம்பனாலும் எங்களை கண்டுபிடிக்க முடியாது" என்று சின்னா வெற்றிச்சிரிப்பு சிரித்தான். திருமால் பார்சலை மணந்து மோப்பம் பிடித்தான். "வெளி வாசமே மூக்கை துளைக்குதடா" என்று பார்சலை கிழித்துபார்க்க ஆரம்பித்தான். அப்போது பார்த்து சின்னா "ஐயோ காலில் ஏதோ கடிக்குதடா.. பாம்புதாண்டா" என்று அலறினான். இருட்டில் எதுவுமே தெரியலை. "கடவுளே எங்களை தடுக்க நினைக்கிறார் போல" என்று அரற்றினான் திருமால். "இங்க நண்டுதான் இருக்கும் பாம்பாக இருக்காது" என்றேன் கொஞ்சம் தைரியமாக. சின்னாவின் காலுக்கிடையில் கைவைத்து பார்த்தபோது ஒரு சின்ன நண்டு சிக்கியது. அதை எடுத்துக்காட்டி சிரித்தேன். சின்னாவுக்கு அப்போதுதான் நிம்மதி.

சின்னா "டேய் வேணாண்டா பார்சலை அப்படியே கடலில் போட்டுவிடு கடவுள் கொடுத்த முதல் எச்சரிக்கை அது" என்றான். "டேய் இதுக்கு போய் பொம்பிளை மாதிரி பயப்படுற. கடவுள் உன்னை திருத்த சின்ன நண்டை அனுப்பினாரா" என்று சிரித்தான். அந்த வார்த்தைகள் சின்னாவுக்கு இரசாயன மாற்றத்தை விளைவித்ததால் அடுத்து கதைக்க இருந்த வசனத்தை இடைநிறுத்தினான். திருமால் இடைநிறுத்தப்பட்டிருந்த பார்சல் கிழிக்கும் வேலையை மறுபடியும் தொடர்ந்தான்.

"தாத்தா இருக்கும்வரைக்கும் இது எப்படியாவது எனக்கு கிடைக்கும்.. அவருக்கு தெரியாம கொஞ்சம் கொஞ்சமா எடுத்து பதுக்கி வச்சிடுவன்.. அவர் மேலே போனபிறகு எனக்கு ஒரே திண்டாட்டம்தான்.. இப்ப இதுக்கு தடை விதிச்சி போட்டாங்கள்.. நீ எப்படித்தான் இதை கொழும்பில வாங்கிறியோ தெரியலை.. ஆனா இப்ப யாழ்ப்பாணத்துல எங்க தேடினாலும் இதை வாங்கவே முடியாது" என்று திருமால் நன்றியுரையை தொடங்கினான். பாதுகாப்புக்காக இரண்டு மூன்று பொலித்தீன் தாள்களால் சுற்றப்பட்டிருந்த தகர டின் வெளியே வந்தது.

"இது என்னடா புது ப்ராண்டா இருக்குது.. அது சரி நமக்கு ப்ராண்டா முக்கியம் உள்ளே இருக்கிற சரக்குத்தான் முக்கியம்"

டின்னை திறந்து ஒரு சொட்டு மூக்குப்பொடியை எடுத்து மூக்கால் உறிஞ்சினார்கள். அடுத்த ஐந்து நிமிசத்துக்கு, அவர்களின் தும்மல் ஒலியை கடலின் அலைகளின் ஓசை விழுங்குவதை பார்த்துக்கொண்டிருந்தேன்.



இதை வாசித்துவிட்டு கொழும்பில் மூக்குப்பொடி இருக்கும் கடையை தெரியுமா எண்டு யாரும் கேட்டிடாதீங்க.. எனக்கு சத்தியமா தெரியாது. இலங்கையில இப்ப "அது"க்கு தடையாம்.

Saturday, July 26, 2014

ஈமெயில் கொலைகள்!!


அத்தியாயம் 1: வேலையில்லா சாப்ட்வேர் கம்பெனி

அஞ்சு நாள் லீவுக்கு பிறகு அலுவலகத்துக்கு போய் சேர்ந்தேன். கடந்த ரெண்டு மாசமா ஒரு ப்ரோஜெக்டும் இருக்கவில்லை. ப்ரோஜெக்ட் இல்லாத சாப்ட்வேர் கம்பெனி கிட்டத்தட்ட மீன் மார்க்கெட் மாதிரி பரபரப்பாக இருக்கும். இரண்டு பேர் facebookஇல் ஒரு பெண்ணின் profile pictureக்கு கமெண்ட் அடித்தார்கள். மூன்று பயல்களும் ஒரு பொண்ணும் சேர்ந்துகொண்டு காணாமல் போன MH370க்கு என்ன நடந்திருக்கும் என்பது பற்றி விவாதித்தார்கள். வழமைபோலவே எந்த முடிவுக்கும் வராமல் கப்பில் இருந்த டீயை ஜாலியாக காலி செய்தார்கள். ஆறு மாதங்களுக்கு முன்னர், ஆணியடித்து வைத்ததை போல ஒரு இடத்திலே இருந்து கடுமையாக ராத்திரி பகல் வேலை செய்துவிட்டு இரண்டு மாசமா வேலை இல்லாமல் இருந்தது ஒரு மாதிரியா இருந்திச்சு. மத்தியான சாப்பாட்டுக்கு இரண்டு மணித்தியாலம் எடுத்தோம். பிற்பகல் வேளைகளில் கண்களில் அரைத்தூக்கத்துடன் வேலை செய்தோம் அல்லது வேலை செய்வதுபோல நடித்தோம். வேலையில்லாத சாப்ட்வேர் கம்பனிகளில் நிலைமை கொஞ்சம் இடக்குமுடக்காத்தான் இருக்கும். ஆனால் இவ்வாறான நிலைமை கொஞ்ச நாளுக்குத்தான் நீடிக்கும் என்ற உண்மை தெரியாமல் சந்தோசத்தில் மிதந்தோம்.

எதுக்கும் ஒரு எல்லை வேண்டுமல்லவா. சந்தோசமும் திகட்ட ஆரம்பித்தது. வேலைக்கு போவதே போரடிக்கும் அனுபவமாக மாற ஆரம்பித்தது. சாப்ட்வேர் கம்பெனியில் A/C இல்லாமலும் இருக்கலாம். ஆனா வேலை இல்லாமல் இருக்கமுடியாது. வேலையே இல்லாமல் ஒரு இடத்தில் இருந்து கம்ப்யூட்டரை வெறித்துபார்ப்பது என்பது கொஞ்சம் நவீனத்துவமான தண்டனையாகவே எங்களுக்கு தெரிய ஆரம்பித்தது. எங்கள் செக்சன்களில் இப்படி வேலையே இல்லாமல் போரடித்துகொண்டிருந்தபோது, மார்க்கெட்டிங் செக்சன் மட்டும் வேலைகளில் மூழ்கியிருந்தது. எங்களுக்கு ப்ராஜெக்ட் இல்லாத சமயங்களில் மார்க்கெட்டிங் ஆசாமிகளுக்கு வேலை தொண்டை வரை இருக்கும். ஆனால் ஒரு ப்ராஜெக்ட் சிக்கினால் மூன்று நாலு மாசங்களுக்கு மார்க்கெட்டிங் ஆசாமிகள் காலாட்டிகொண்டு ரெஸ்ட் எடுக்கலாம்.

நேரம் இப்படி போய் கொண்டிருந்தபோது, ஒரு நாள் மார்க்கெட்டிங் எக்ஸகியூடிவ் சில்வெஸ்டர் சில்வா கதவை திறந்துக்கொண்டு அரக்கப்பறக்க உள்ளே வந்தபோது எங்களின் "வேலையில்லா திண்டாட்டம்" முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. சில்வெஸ்டர் புதுசா ஒரு ப்ராஜெக்ட் கொண்டு வந்திருக்கிறான் என்ற செய்தியை துமிலன் எங்களுக்கு சொன்னான். போதாக்குறைக்கு என்னையும் துமிலனையும் project requirements பற்றி விவாதிக்க அடுத்த நாளே எங்களுக்கு கஸ்டமர் கம்பெனியுடன் மீட்டிங் schedule செய்திருப்பதாக சொன்னார்கள். போரடிக்கும் காலம் முடிவடைய போகிறது என்று சந்தோசப்படுவதா? இல்லை நாளை முதல் வேலை வரப்போகிறது என்று கவலைப்படுவதா என்று தெரியாமல் முழித்தோம்.


அத்தியாயம் 2: புதிரான கஸ்டமர்

அடுத்த நாள் முழுக்கை சேர்ட் அணிந்து சென்ட் அடித்துக்கொண்டு ஆபீஸ் போனோம். சில்வெஸ்டர் எங்களுக்கு ஒரு காரை ஏற்பாடு செய்திருந்தான். எங்கே மீட்டிங் நடக்கும் என்ற விபரம் எங்களுக்கு வழங்கப்படவில்லை. அதை சொல்ல சந்தர்ப்பம் வரவில்லை போலும். கார் கொள்ளுபிட்டி சந்தியில் நிறுத்தப்பட்டது. டிரைவர் "இந்த இடத்தில இறங்குங்க. ஒரு வான் வரும். அதில் ஏறுங்க. என்னை ஒண்ணும் கேக்காதிங்க" என்று இயந்திரத்தனமாக சொல்லிவிட்டு நிதானமாக காரை கிளப்பிக்கொண்டு சென்றான். நாங்கள் அதிர்ந்துபோய் ஆளை ஆள் பார்த்துக்கொண்டோம். துமிலன் வியர்வையை கைக்குட்டையால் ஒற்றிக்கொண்டான்.

"என்னடா இது கஸ்டமர் பற்றின விஷயம் மர்மமா இருக்குதே" என்றான். பதினைந்து நிமிசத்தில் ஒரு வெள்ளை வான் எங்கள் அருகில் வந்து நின்றது. கதவு திறந்தது, அதிலிருந்த ஒருவன், வானின் கறுப்பு கண்ணாடிக்கு வெளியே அரைவாசி மூஞ்சியை வெளியே காட்டியவாறு, "ரெண்டு பேரும் ஐடென்டிட்டி கார்டை எடுங்க" என்றான். சரிபார்த்த பின்னர் "ஏறுங்க சார்" என்றான். அவன் முகத்தில் இருந்த கடுமை கொஞ்சமும் குறைந்ததாக தெரியவில்லை. மந்திரிக்கப்பட்ட ஆடுகள் போல வானுக்குள் ஏறிக்கொண்டோம். நாங்கள் முன்பு எப்போதோ நாங்கள் செய்த ப்ராஜெக்ட்டில் இருந்த "பக்ஸ்" (bugs) மூலமாக பாதிக்கப்பட்ட கஸ்டமர்கள் யாராவது எங்களை கடத்தி சித்ரவதை செய்ய போகிறார்களோ? போன்ற எண்ணங்கள் மனதில் வந்தன. அந்த வான் பஞ்சிகாவத்தை பகுதியில் ஒரு ஒடுக்கமான வீதியில் நிறுத்தப்பட்டது. இன்னொரு வானுக்குள் மாற்றப்பட்டோம். இதிலும் ட்ரைவருக்கு பக்கத்தில் ஒருத்தன் இருந்தான். இல்லை ஒருவர் இருந்தார்.

முகத்தில் சிநேகமான புன்னகை தவழ்ந்தது. "ஏறுங்க தம்பி. இன்னும் கொஞ்ச தூரம்தான்" என்றார். அவர் சொல்லாமலே ஏறியிருப்போம். அப்படியொரு அழகான  சாந்தமான புன்னகை. ஏறி இருந்துமே "சார் நாங்க எங்கதான் போறோம்" என்று தொடங்கினான் துமிலன். அந்த கணத்திலே எங்கள் பின்னால் இருந்த ஒருவன் கறுப்புத்துணியால் எங்கள் கண்களை கட்டினான்.

எனக்கு உடல் முழுக்க கடுமையான வியர்வை. நெஞ்சுக்குள் யாரோ சம்மட்டியால் அடிப்பது போன்று ஏதேதோ செய்தது. "எங்களை விட்டிடுங்க. நாங்கள் எதுவுமே செய்யவில்லை" என்று பதறினோம். "கொஞ்சம் சத்தம் போடாம இருங்க. பத்து நிமிஷம்தான் இடம் வந்திடும். பயப்படாதீங்க. ஒண்ணுமே நடக்காது" என்றார் சாந்தமான புன்னகைக்கு சொந்தக்கார ஆசாமி. இன்றுதான் வாழ்க்கையின் கடைசி நாள் என்று மனசு சொல்லிக்கொண்டே இருந்தது. எத்தனை மணித்தியாலங்கள் கழிந்தனவோ தெரியவில்லை. ஒரு இடத்தில் இறக்கப்பட்டோம். துணி விலக்கப்பட்டபின்னர், கண்களை சூரிய வெளிச்சம் வேட்டையாடியது. துமிலனின் கண்கள் அழுது அழுது சிவந்திருந்தன. "டேய் எங்களை கொல்லப்போறாங்கடா.." என்று ஏங்கி ஏங்கி அழுதான். நாங்கள் வித்தியாசமான முறையில் கட்டப்பட்ட வீட்டினுள் கொண்டுசெல்லப்பட்டோம். அந்த பகலிலும் இருட்டு அந்த வீட்டீனுள் ஒளிந்து கொண்டிருந்தது.

அந்த இடத்தின் அமைப்பு மனதில் புதிய இரசாயனத்தை கசியச்செய்தது. மனதில் வினோதமான அமைதி வந்தது போலிருந்தது. பழைமையான ஓவியங்கள் சுவர்களை மறைத்திருந்தன. மந்தமான வெளிச்சம் அந்த ஓவியங்களிலுள்ள சோக உருவங்களுக்கு உயிர் கொடுத்தது. அந்த விசாலமான அறையின் ஒரு ஓரத்தில் உள்ள சோபாவில் ஒரு உருவம் முதுகை காட்டியவாறு சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. "சாந்தமான புன்னகை" ஆசாமி எங்களை உள்ளே வழிநடத்தினார். அந்த சோபாவை நோக்கி நடந்தோம். நடத்தப்பட்டோம்!!. சோபாவில் உள்ள உருவத்தின் காதில் ஏதோ சொன்னார். அந்த உருவம் எழுந்தது. கை கொடுத்தது. நாற்பது வயது மதிக்கத்தக்க ஆள். வெள்ளை முடி நாற்பது சதவீத முடியை ஆக்ரமித்திருந்தது. அயர்ன் செய்யப்பட்ட வெள்ளை சேர்ட், கறுப்பு ட்ரௌசர் அணிந்திருந்தார். வாயில் உயர்தர சுருட்டு புகைந்தது. எங்களுடன் கை குலுக்கினார். "நான்தான் சண்முகநாதன்.. பிசினஸ்மான்" அறிமுகப்படுத்தினார். அவர் செயல்களில் கண்ணியம் இருந்தாலும் கண்களில் சந்தேகம் ஓடி கொண்டிருந்தது.

"என்னைப்பற்றி தெரியுமா" என்று மர்ம புன்னகை பூத்தார் சண்முகநாதன். துமிலன் "உங்களை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கு.. உங்களை பார்த்தா அந்த சண்டா மாதிரி  இருக்கு" என்று சொல்லிக்கொண்டே நாக்கை கடித்துகொண்டான்.

"ம்.. ம்.. நீ சொல்றது சரிதான்.. ஆனா என்னைப்பற்றி அவ்வளவா தெரியலை போலிருக்கு.. தெரிஞ்சிருந்தா அப்படி என்முன்னால பேசமாட்டே.. நான்தான் கொழும்பு ஏரியாவை பத்து வருசத்துக்கு முன்னால கண்ட்ரோலில் வச்சிருந்த நிழலுலக தாதா "சண்டா". உங்களை மாதிரி பொடிப்பயல்களுக்கு என்னைப்பற்றி தெரிய வாய்ப்பில்லை.. அது ஒரு காலம்.. கொழும்பில் இருந்த சின்ன சின்ன தாதாக்கள் என்னை கேட்காமல் ஒரு முடிவு எடுக்கமாட்டார்கள்.. என்னுடைய நண்பர்கள்தான் ஆட்சிக்கு வரமுடியும். கொழும்பு முழுக்க நான் வச்சதுதான் சட்டம்" என்றார்.

அவர் குரல் கம்மியது. "ம்.. ம்.. நான் செய்த ஒரு பிழையால் எங்கட தலையெழுத்தே மாறிடிச்சு. என்னுடைய ஆட்களில் பலரை பொலிஸ் கொன்றுவிட்டது.. போலீஸ் என்னை வேட்டையாடியது.. ஆனா அவர்களால் என்னை பிடிக்க முடியவில்லை" அவரது முகம் சிவப்பாகியது. அதன்பின்னர் முப்பது செக்கன் மௌனம் நிலவியது. முகத்தில் இருந்த கடுமை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.

"இவன் எதற்காக எங்களை வரவழைத்திருக்கிறானோ" என்று எங்களுக்குள் ஆயிரம் சிந்தனைகள் மனதில் ஓடியது. சண்டா கொஞ்சம் தண்ணீர் குடித்து ஆசுவாசப்படுத்திக்கொண்டார். எங்களை அழைத்துவந்த தாதாவின் "வலதுகரம்" பேசத்தொடங்கினார். "நாங்கள் நாலைஞ்சு வருசமா தொழிலில் இருந்து விலகிட்டோம். கடைசியா போலீஸ் எங்கட ஆட்கள் முப்பது பேரை கொன்றாங்க.. அத்தோடு ஆறு வருஷம் தலைமறைவுக்கு பிறகு இப்போதுதான் தொழிலை திரும்ப தொடங்கினோம். இப்ப முன்னைய மாதிரி தொழிலை நடத்த முடியலை. கூலிக்கு கொலை செய்தல், கட்டபஞ்சாயத்து எல்லாமே ரகசியமா நடத்த வேண்டியிருக்கு.

போதாக்குறைக்கு இந்த கூலிப்படையை மெயின்டைன் பண்ண நிறைய செலவாகுது. யானையை கட்டி தீனி போடற கதையா இருக்குது. முன்னைய மாதிரி இல்லை, எங்கேயாவது ஏதாவது நடந்தா, போலீஸ் நேரா இங்கதான் வருகுது. இப்போதெல்லாம் யாழ்பாணத்திலிருந்து நிறைய ஆர்டர் வருது. அந்த மாதிரி தூர இடத்தில வேலை வந்தா இவனுகளை அங்கே அனுப்பிறதுக்குள்ளேயே போதும் போதும் என்றாகிடுது. இதுக்கெல்லாம் நீங்கதான் எங்களுக்கு உங்கட சாப்ட்வேர் மூலம் தீர்வு தரப்போறீங்க" என்று புதிர் போட்டார் வலது கரம்.

நாங்கள் எக்குத்தப்பாக முழித்துகொண்டிருக்கும்போது, சண்டா பேசத்தொடங்கினார். "கூலிக்கு கொலை செய்வதற்கான ஆர்டர் நவீன முறையில் ஈமெயில், எஸ்எம்எஸ் இல் வரணும். இங்க்லீஷ் படத்தில வாற மாதிரி என்னோட அடியாட்கள் அமெரிக்காவிலிருந்தாலும் கொலை செய்யப்படுபவனின் படத்தை ஈமெயிலில் அனுப்பி கொலை செய்ய வைக்கவேண்டும். என்னோட அடியாட்களை பிடிபட்டாலும் என்னை பற்றி தகவல் குடுக்க அவனுகளுக்கு ஒண்ணுமே தெரியப்போவதில்லை. செஞ்ச கொலைக்கு காசு குடுக்க என்ட கஸ்டமர் யாராவது எங்கிட்ட வந்தாதானே போலிஸ் என்னை தேடிவரும். கஸ்டமர்களை கிரெடிட் கார்டுல காசு குடுக்க சொன்னா சரி. பாங்க்குல காசு குவியும்" என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தார். நிறைய நாள் தீவிரமாக நூற்றுக்கணக்கான சிகரெட் பாக்கெட்டுகளை காலி செய்து நிதானமாக யோசித்து திட்டமிட்டிருப்பது போல இருந்தது. எங்களுக்கோ மண்டை காய்ந்தது. அவர் சொன்னதை ஜீரணிக்க மூளை கொஞ்ச நேரம் எடுத்துக்கொண்டது. துமிலன் முதலில் சுதாரித்துகொண்டான். சற்று செருமிக்கொண்டு பேசத்தொடங்கினான். "இது சூப்பர் ஐடியா.. உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் கொலைக்கான ஆர்டரை யாரும் எங்கள் சிஸ்டம் மூலம் கொடுக்கலாம். அது போலவே தொழில்முறை கொலைகாரர்கள் எங்கள் சிஸ்டத்தில் பார்ட்-டைம் அடியாட்களாக ரெஜிஸ்டர் செய்யலாம். கொலை ஆர்டர் வரும் இடத்துக்கு அருகாமையிலுள்ள கொலைகாரனை தேர்ந்தெடுத்து சிஸ்டம் தகவல் அனுப்பும். சுவிஸ் பாங்க்குடன் "இண்டிகிரேட்" பண்ணிவிட்டால் உங்களை பிடிக்க எந்த போலீசாலும் முடியாது" என்று அளந்தான்.

இப்போது தாதாவுடனான உரையாடல் சுமுகமாக மாறியது. அடுத்த மீட்டிங்கில் சிஸ்டம் பற்றிய டிசைனை நாங்கள் விளக்குவோம் என்றவாறு விடைபெற்றோம். அதே வான், கண்களில் கறுப்புத்துணி ஆனால் இம்முறை இறுக்கம் குறைவாக கட்டப்பட்டிருந்தது. கொள்ளுபிட்டி சந்தியில் இறக்கப்பட்டோம். ஆபீஸுக்குள் நுழைந்தவுடனேயே சில்வெஸ்டர் ஓடி வந்து வரவேற்றான். அவன் முகத்தில் குரூரமான புன்னகை தவழ்ந்தது. பிறகு வேறு சில மேனேஜர்கள் சகிதம் புதிய ப்ரோஜெக்ட் பற்றிய தீவிர மீட்டிங் நடந்தது. இந்த ப்ரொஜெக்ட் செய்வதில் இருக்கும் தாதாக்களுடனான தொடர்பு மூலம் வரக்கூடிய ரிஸ்க்குகளை பற்றி எனது கருத்தை வலியுறுத்தினேன். ஆனாலும் கம்பெனி இருந்த கேவலமான நிலையை கருத்தில் கொண்டு ப்ரோஜெக்ட்டை செய்யுமாறு சில்வெஸ்டர் முதலான மேனேஜர்கள் வற்புறுத்த மீட்டிங் ரூமில் வெக்கை கூடியது. வார்த்தைகளால் சண்டையிட்டோம். ஆனாலும் அடுத்த மாத சம்பளம் வருவதே இந்த ப்ரொஜெக்ட்டில்தான் தங்கியிருக்கிறது என்ற விஷயம் எங்களை இறுதியாக சம்மதிக்க வைத்தது.


அத்தியாயம் 3: கொலைகார சிஸ்டம்

ராத்திரி பகலாக வேலை தொடங்கியது. சண்டா சொன்ன சாப்ட்வேர் சிஸ்டத்தின் வடிவம் விநோதமாக டெர்ரராக இருந்தது. சிஸ்டத்தின் பயனாளர்களுக்கு விதவிதமான சேவைகள் வழங்கப்பட்டன. பயனாளர்கள் தாங்கள் பழிவாங்க விரும்பும் நபரின் பெயர், முகவரி, போட்டோவை சிஸ்டத்தில் அப்லோட் பண்ண வேண்டும். பின்பு எவ்வாறு பழிவாங்க வேண்டும் என்பதை விளக்க வேண்டும். கொலை அல்லது கை, கால் எடுத்தல், வெள்ளைவான் கடத்தல் போன்று வெவ்வேறான தண்டனை விபரணைகளை "கம்போபொக்சில்" தெரிவுசெய்யவேண்டும். ஒவ்வொரு தண்டனைக்கும் தண்டனையின் தீவிரத்துக்கு ஏற்றவாறு கிரெடிட் கார்டில் காசு அறவிடப்படும். இப்படியாக இலங்கையின் ஒரு மூலையில் இருக்கும் மிஸ்டர் சின்னதம்பி என்பவர்  ஏதோவொரு மூலையிலிருக்கும் பெரியதம்பி என்பவரை பழிவாங்க விரும்பினால் சிஸ்டத்துக்கு  பெரியதம்பியின் "கையை" எடுத்துவிடுமாறு சிஸ்டத்துக்கு உத்தரவு போடலாம். கிரெடிட் கார்ட் இந்த சேவைக்காக பத்தாயிரம் ரூபா வசூலிக்கும். பெரியதம்பியின் இருப்பிடத்துக்கு அருகாமையிலுள்ள சண்டாவின் ஆள் "கத்தி" கண்ணாயிரத்துக்கு போட்டோ சகிதம் உத்தரவு ஈமெயிலில் பறக்கும்.

இவ்வாறான கொலைகார சிஸ்டத்தை வடிவமைக்கும்போது எங்களுக்கு ஒவ்வொரு நாளும் தீக்கனவுகள் வந்து தொல்லை கொடுத்தன. கொடுத்த Deadlineஇல் முடிக்க முடியாமல் போனதால் சண்டா எங்கள் கைகளை வெட்டபோவதாக சொல்வது போன்ற கனவு மூன்று நாளைக்கு ஒருமுறை வந்தது.

இப்படியே நாலு மாதங்கள் கடந்தன. ஒருவழியாக எங்கள் சிஸ்டம் ரெடியாகி விட்டது. ஆனாலும் இப்படி ஒரு சிஸ்டம் செய்ததில் பெரிய மகிழ்ச்சி எங்களுக்கு இருக்கவில்லை. துமிலன் "நான் நல்லா தூங்கி நாலு மாசமாகுது. இந்த இழவு சிஸ்டத்தை பார்க்கும்போதே தலையிடி வருது. நாங்கள் இதன் மூலம் காசு சம்பாதிக்கிறமோ இல்லை நிறைய பாவத்தைத்தான் சம்பாதிக்க போகிறோம்" என்று புலம்புவான். சில்வெஸ்டர் உடனே முடிக்குமாறு சத்தம் போடுவான். அவன் மேனேஜர்களின் செல்லப்பிள்ளை. அதனாலேயே இஷ்டத்துக்கு உத்தரவு பிறப்பிப்பான். எங்களை விரட்டுவான். எல்லோருக்கும் அவன் மேல் கொஞ்சம் பயம் இருக்கும். அவன் என்னையும் துமிலனையும் சண்டாவுடனான UAT மீட்டிங்க்குக்கு போகுமாறு உத்தரவு பிறப்பித்தான். சில்வெஸ்டர் போன் மூலமாக சண்டாவுடன் தொடர்பு வைத்திருந்தாலும், அவரை நேரடியாக சந்திக்க தயங்கினான். பலிக்கடாக்களான எங்களை அனுப்பினான். நாங்கள் போவது UAT எனப்படும் User Acceptance Test. UAT என்பது ஒருவகையான அதிரி புதிரி சிஸ்டம் டெஸ்டிங். சாப்ட்வேருக்குரிய கஸ்டமர்கள் சிஸ்டம் எவ்வாறு தொழிற்படுகிறது என்பதை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு டெஸ்ட் பண்ணுவார்கள். ஏதாவது சரியாக வேலை செய்யாவிட்டால் "தாம் தூம்" என்று குதிப்பார்கள். சிஸ்டத்தை திருத்திகொடுக்கும்வரை கொடுக்குப்பிடி பிடிப்பார்கள். சும்மா கஸ்டமர்கள் இப்படி என்றால், துப்பாக்கி, அரிவாள் தூக்கும் சண்டா எப்படி எங்கள் அரைகுறை சிஸ்டத்தின் செயல்பாடுகளில் சகித்து கொள்ளபோகிறார் என்பதே நெஞ்சை பதைக்கும் ஒரு கேள்வியாக இருந்தது. "டேய், அவரின்ட கால்ல கையில விழுந்தாவது சிஸ்டத்தை ஓகே பண்ணனும். நான் வர்ற வழியில பிள்ளையாருக்கு தேங்காய் உடைச்சேன்." என்று பதற வைத்தான் துமிலன். அவன் நெற்றியில் திருநீறு பட்டை தெரிந்தது. நான் வரும்போது பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்து கொண்டு வந்திருக்கணும். குறைஞ்சது அம்மாவோட அறிவுரைப்படி வீட்டை விட்டு வெளியே வரும்போது திருநீறு சாத்திட்டு வந்திருக்கலாம்.

வழமையான கண்கட்டு வித்தையில் சண்டாவின் வீட்டுக்கு போய் சேர்ந்தோம். கண்களில் கட்டு அவிழ்க்கப்பட்டபோது, சண்டா எங்கள் முன்னால் கம்பீரமாக அமர்ந்திருந்தார். அவரது வாயின் ஓரத்தில் தோன்றிய சிக்கனமான புன்னகைக்கு அவரது இரத்தச்சிவப்பான கண்கள் ஒத்துழைக்கவில்லை. "உங்கட வேலையை தொடங்குங்க தம்பி. கவனமா நடந்துக்குங்க. சிஸ்டம் செய்யிற ஒவ்வொரு பிழையும் அநியாயமா உயிரை பறிக்க வாய்ப்பிருக்கு" என்றார் "வலதுகை". நாங்கள் ஒவ்வொரு சிஸ்டம் செயற்பாடுகளை பற்றி தெளிவாக விளங்கப்படுத்தினோம். பிறகு டெஸ்டிங் தொடங்கியது. மட்டக்களப்பில் உள்ள சாம்சன் என்பவரை "வெள்ளைவானில் கடத்தி சித்ரவதை" செய்வதற்காக சிஸ்டம் மூலம் ஆர்டர் கொடுத்தோம். அதன் விளைவை பற்றி அறிவதற்காக, "வலதுகை" ஒரு டிவியை ஓன் செய்து, "சக்தி டிவி" சானலுக்கு மாற்றினார். ஒரு மணித்தியாலத்துக்கு பின்னர், சக்தி டிவி Breaking Newsஇல் "யாழ்ப்பாணத்தில் சபேசன் என்பவர் வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத நபர்களால் சற்று முன்னர் கடத்தப்பட்டார்" என்று செய்தி பறந்தது. எங்கள் முகங்களில் வந்த பீதியை சமாளித்துக்கொண்டு "இன்னும் வேறு சில ஆர்டர்களை செய்து பார்ப்போம்" என்றேன். இந்த முறை புத்தளம் சிவசாமிக்கு செமத்தியாக அடி கொடுத்து பல்லை உடைக்கவேண்டும் என்று  ஆர்டர் கொடுத்துவிட்டு சக்தி டிவியை அரைமணித்தியாலமாக முறைத்துபார்த்துக்கொண்டிருந்தோம். ஒருவாறாக சக்தி டிவி Breaking News வந்தது. எங்கள் இதயம் 150 கிலோமீட்டர் வேகத்தில் ஓடியது. "புத்தளத்தில் சிவசாமி என்பவரின் கைகள் இனந்தெரியாத நபர்களால் வெட்டப்பட்டது" என்று Breaking News அலறியது. சண்டா மேலே பார்த்து தலையில் கை வைத்தார். "வெறும் பல்லை உடைக்கிறதுக்கு பத்தாயிரம்தான் வாங்கறோம். நீங்க குடுத்த காசுக்கு மேலே போய் கையை வெட்ட உத்தரவு கொடுக்கிறீங்க. கையை வெட்ட நாலு லட்சம் வாங்கிறம் தெரியுமா.. எவ்வளவு நட்டம் பாருங்க" என்று முறைத்தார் "வலது கை". எங்களின் இதயம் வெளியே வந்தால் போதும் என்றிருந்தது.

சண்டா நிதானமாக தளர்வான குரலில் "இந்த பிரச்சனைகளை திருத்தி போட்டு வாங்கோ. நாலு நாள் தாரேன். அதுதான் Deadline. உண்மையான Dead.. line" என்றார். முகத்தில் ஒரு சலனமும் இல்லை. கையில் இருந்த தேநீர் கோப்பையை சத்தமாக மேசையில் வைத்தார். அதில்தான் அவரின் கோபம் வெளிப்பட்டது.

ஆபீஸ் வந்து சேர்ந்தபோது இரவு ஏழு மணி. உடனடியாக கண்டு பிடிக்கப்பட்ட bugகளை திருத்த ஆரம்பித்தோம். இரவு பகலாக சிஸ்டத்தை சரி செய்தோம். சில்வெஸ்டர் தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை போல நடந்து கொண்டான். அவன் மூலமாக சண்டாவுடன் பேசி கூடுதலாக நேரம் கேட்க முயற்சித்தேன். ஆனாலும் சில்வெஸ்டர் சண்டாவுடன் பேச மறுத்துவிட்டான். இதனால் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக சிவராத்திரி அனுஷ்டித்தோம். எல்லார் முகத்திலும் வெறுமை இருந்தது. சிரிக்க முடியவில்லை. அழுவதற்கு நேரமிருக்கவில்லை. ஒருவாறு பூசி மெழுகி சிஸ்டத்தை சரி செய்தோம். நான்காம் நாள் காலை, மறுபடியும் கண்ணை கட்டிக்கொண்டே சண்டாவின் வீட்டே விடப்பட்டோம். இந்த முறை சூழல் அவ்வளவு சுமுகமாக இருக்கவில்லை. வழமையாக கொஞ்சமேனும் புன்னகைக்கும் "வலது கை" அன்று கடுமையாக நடந்துகொண்டார். ஆனால் இந்த முறை எங்கள் சிஸ்டம் ஏமாற்றவில்லை. யாழ்ப்பாணத்தில் கொடுத்த கொலை ஆர்டர் யாழ்ப்பாணத்திலேயே நிறைவேற்றப்பட்டது. தர்மராஜூவுக்கு கொடுக்கப்பட்ட வெள்ளை வான் ஆர்டர் மூலம், தர்மராஜ் வெள்ளை வானில் கடத்தப்பட்டு முப்பது லட்சம் பணம் கொடுத்தபின்னர் விடுவிக்கப்பட்டார்.

சண்டாவின் முகத்தில் ஒரு திருப்தி தெரிந்தது. "தாதாயிசம் goes to IT" என்று கூவினார். நான்கு வைன் கிளாசை தானே எடுத்துக்கொண்டு வந்தார். "இது உயர்தர வைன். இது வெற்றிகரமாக முடிந்ததை கொண்டாடுவோம்." என்றார் ஒரு சிறுவனுக்குரிய உற்சாகத்துடன்.

அதற்கு பின்னர் சண்டாவுடன் சகஜமாக கதைத்தோம். எங்கள் குடும்பங்களை பற்றி அக்கறையாக விசாரித்தார். எப்போது கல்யாணம் என்று கண் சிமிட்டினார். கடைசியாக "மனுஷன் பிறந்த நாள்முதல் வன்மம் என்பது அவனை நிழல் போல் தொடர்கிறது. நீங்களும் அதற்கு விதிவிலக்கல்ல. தம்பி! நீங்க யாரையாவது பழி வாங்க விரும்பிறீங்களா. நீங்க எங்களுக்கு செய்த உதவிக்காக ஒரு பழிக்கு பழியை ப்ரீயா செஞ்சு தாறோம். அப்படி யாராவது இருக்கா" என்றார். "நான் எப்போதுமே அன்பை நாடுவேன். பழிக்கு பழி வேணாம் சேர்" என்றான் துமிலன். எனக்கு வேணாம் என்று சொல்ல தோன்றவில்லை. "சும்மா யோசிச்சு பாருங்க.. உங்களுக்கு யார் மேலாவது வன்மம் இருக்கலாம். உங்கள் user accountகளுக்கு ஒருமுறை மட்டும் ப்ரீ. இரண்டு நாளைக்குள் இதை பாவிச்சுடுங்க. பிறகு வருத்தப்படக்கூடாது. யாராகவும் இருக்கலாம். நான் கண்டுகொள்ள மாட்டேன். உங்களுக்கு பிடிக்காதவர்களை கொலைகூட செய்யலாம்" என்று கண் சிமிட்டினார்.

அத்தியாயம் 4: இதுதான் முடிவா

வீட்டுக்கு வந்த சேர்ந்தபோது மணி பத்து. கால் முகம் கழுவிக்கொண்டேன். மனதில் ஒருவித வெறுமை உணர்ச்சி. உடல் சோர்வாக இருந்தது. ஆனால் நித்திரை வரவில்லை. கம்ப்யூட்டரை ஓன் செய்தேன். சண்டாவின் கொலைகார சிஸ்டத்துள் நுழைந்தேன். புதிய ஆர்டரை பதிவு செய்ய கோரினேன். சிஸ்டம் என்ன தண்டனை என்று கேட்டது. நாக்கை அறுக்க வேண்டும் என்றேன். தண்டனை கொடுக்கப்படவேண்டிய ஆளின் பெயரை கேட்டது.

பொறுமையாக ஒவ்வொரு எழுத்தாக என்று டைப் செய்தேன். அது "சில்வெஸ்டர்" என்றிருந்தது.

Saturday, May 18, 2013

வடக்கு வீதி ஒபரேசன்


நான் எனது சொந்த ஊரில் இருந்த காலங்கள் கொஞ்சமே. படிப்பு மற்றும் இடைவிடாத வேலை என்று கொழும்பிலேயே பலகாலம் வாழ்ந்து வருவதால் ஊருக்கு போவது எப்போதாவது நடக்கும் நல்ல காரியம். வருஷம் தவறாமல் அம்மன் கோவில் திருவிழாவுக்கு நான் எப்படியாவது ஊருக்கு போவது வழக்கம். "டேய் நண்பா! நீ இந்த திருவிழாவுக்கும் ஊருக்கு வராம இருந்தால் உன்ர ஊர் citizenship cancelஆயிடும்.. ஊருக்குள்ள ஒருத்தனும் உனக்கு பொண்ணு குடுக்கமாட்டான்" என்று வருஷம் ஒரு முறை திருவிழாவுக்கு பத்து நாளைக்கு முன்னதாக போன் போட்டு மிரட்டுவான் நட்டூ. நட்டூ ஊரில் இளம் சமுதாயத்தில் பிரதிநிதி. எங்கள் நண்பர் குழாத்தின் தலைமை பொறுப்பு அவனுக்கு அப்படி ஒரு பொருத்தம். ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால் முதல் ஆளா அடிஉதை என்று நிற்பான். அம்மா அப்பா அவனுக்கு வைத்த பெயர் நடராஜ். சிறுவயதில் இருந்தே கார் பைக் போன்றவற்றை கழற்றி பூட்டி விளையாடுவது அவனுக்கு ஒரு பொழுதுபோக்கு. ஆகவே நடராஜ் என்ற பெயர் மருவி நட்டூ என்றானது.

திருவிழா என்று வந்துவிட்டால் ஏற்பாடுகளில் முழுமூச்சாக வேலை செய்வான். என்னை சும்மா கூட்டி செல்வார்கள். எனக்கு இந்த வேலைகள் அவ்வளவாக தெரியாவிட்டாலும் அவர்களின் வேலையின்போது நடக்கும் சுவாரசியங்களை வேடிக்கை பார்ப்பதற்காகவே அங்கு செல்வேன். திருவிழா கடைசி கட்டத்தை நெருங்கும்போது, இரண்டு மூன்று நாள் நித்திரையில்லாமல் வேலை செய்யவேண்டியிருக்கும். இப்படித்தான் ஒருநாள் கடுமையாக வேலை நடந்துகொண்டிருந்தது, எனக்கு தூங்கி வழிந்தது. ஒரு மணிக்கு எழுப்பி விடுங்கடா என்று சொல்லிவிட்டு பன்னிரெண்டு மணிக்கு ஓரமாக நித்திரைக்கு போன நான் முழிக்கும்போது சூரிய வெளிச்சம் கண்ணில் அடித்தது. இரவு முழுக்க முழிச்சிருந்த எல்லோரும் என்னை முறைத்து பார்த்து கொண்டிருக்க அப்பாவியாக "ஏண்டா என்னை ஒரு மணிக்கு எழுப்பி விட்டிருக்கலாமே" என்றேன். "எத்தனை தரம்டா உன்னை எழுப்பிறது சும்மா கும்பகர்ணனாட்டம் தூங்கிறியே.. பத்து மணிக்கு வந்தே ரெண்டு துண்டு வெட்டினே.. நித்திரைக்கு போனே.. காலையிலே எழும்பிறே" என்று சத்தம் போட்டான் நட்டூ. அவன் கண்கள் சிவப்பாக இருந்தது. அதற்கு காரணம் தூக்கமின்மையா அல்லது கோபமா என்று ஆராயும் நிலையில் நான் அன்று இல்லை. இப்படி அவன் மூன்று நாளா முழிச்சிருந்து ஒட்டித்தான் போனமுறை திருவிழாவில் இருபது அடி புகைக்குண்டு வேலை முடிந்தது. எல்லோரையும் அன்பாகவோ கோபமாகவோ திட்டி வேலை வாங்கிவிடுவான். ஒருமுறை திருவிழாவுக்கு போகாவிட்டால் அடுத்தமுறை பெரிதாக ஒட்டி உறவாட மாட்டான். "எப்படி இருக்கே.. கொழும்பில இப்ப வெயில் அதிகம் எண்டு ரூபன் சொன்னான்" போன்ற உப்புமா கேள்விகளுடன் நிறுத்திக்கொள்வான். வேலைக்கு கூப்பிட மாட்டான். அவனுடைய நண்பர்களும் அவனையே பின்பற்றி நடப்பார்கள். அவன் இல்லாவிட்டால் எனக்கு வேறு நண்பர்கள் இல்லை என்பது அவனுக்கு நன்றாக தெரிந்திருந்தது.

புகைக்குண்டு
எங்கள் ஊர் திருவிழாவில் புகைக்குண்டு முக்கிய இடம் வகிக்கும். இதனை திருவிழாக்களின் கடைசி நாட்களில் வானில் பறக்க விட்டு மகிழ்ச்சியடைவோம். சிறுவர்கள் இதனை பார்ப்பதற்காகவே இரவு திருவிழாக்களிலும் விழித்திருப்பார்கள். "சூடான காற்று பாரம் குறைந்தது" என்ற எளிதான Physics கோட்பாட்டை பாவித்து hot air baloon போன்ற உருவில் மெல்லிய கடதாசி மூலம் சாதாரணமாக பத்து அடி புகைக்குண்டை செய்வார்கள். கீழ்ப்பக்கத்தில் எரியும் தீப்பந்தம் மூலம் உ.ள்ளிருக்கும் காற்று சூடாக்கபட்டு புகைக்குண்டு மேலெழும். இப்படி பல புகைக்குண்டுகளை வெவ்வேறு வண்ணங்களில் செய்வார்கள். சிறுவயதுகளில் மேலே பறக்கும் புகைக்குண்டுகளை பார்ப்பதற்காகவே கோயிலுக்கு போவேன். அப்போது வானில் பறக்க விடப்படும் புகைக்குண்டை வானில் மேகங்களிடையே மறையும்வரை பார்த்துக்கொண்டிருப்பேன். வடிவம் சரியாக இல்லாவிட்டால் மேலே பறக்காது என்று நட்டூ சொல்லுவான். அவனுக்கு இருக்கும் அனுபவ அறிவு, மெத்த படிச்ச engineer பயல்களுக்கும் இருக்காது. பார்த்த மாத்திரத்திலே இது சரியாக பறக்குமா இல்லையா என்று சொல்லிவிடுவான். இந்த புகைகுண்டுகள் பந்தத்தில் இருக்கும் எண்ணெய் முடியும்வரை எரிந்தபின்னர் கடலிலோ காட்டிலோ விழும். சிறுவயதில் எங்கள் வீட்டில் எப்போதாவது விழுதா என்று எத்தனையோ நாள் கனவு கண்டிருக்கிறேன். ஒருமுறை இந்தியன் ஆமி டைமில, திருவிழாவுக்கு மேலே பறக்க விட்ட புகைகுண்டை பார்த்து "இது ஏதோ உளவு பார்க்கும் நவீன சாதனம்" என்றெண்ணிய ஆமிக்காரன் ஹெலிக்கோப்டர் மூலம் வானில் துரத்தி சுட்ட கதை மூலம் புகைக்குண்டு மற்ற ஊர்களிலும் பிரபலமானது..

இந்த புகைக்குண்டுகள் நெடியகாட்டு பிள்ளையார் கோவில் மடத்தில் மட்டும்தான் ரகசியமாக ஒட்டுவார்கள். வெளி இடத்து ஆட்களை உயிர் நண்பர்கள் ஆனாலும் உள்ளே விட மாட்டார்கள். அங்கு வேலை செய்யும் எல்லோரும் நெடியகாட்டை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டுமென்பது எழுதப்படாத விதியாக எல்லோர் மனதிலும் பதிந்த விஷயம். பரம்பரை ரகசியம் என்பார்கள். ஆனால் திருமால் "இப்ப அதெல்லாம் உலகம் தெரிஞ்ச ரகசியமாயிட்டது. சங்கரானந்தம் மாமா வீட்ட போன முறை திருவிழாவுக்கு விட்ட புகைக்குண்டு தரைஇறங்கிட்டது. பிரிஞ்சு மேஞ்ச மாமா. தெருக்கடை ஒழுங்கை சின்னப்பயலுகளை  வச்சே பரீட்சார்த்த முயற்சியில் புகைக்குண்டு செஞ்சதா ராசு மாமா சொன்னருடா." என்றான். திருமால்தான் எங்கள் ஊரின் உள்ளூர் BBC தமிழோசை. அவனுக்கு தெரியாமல் ஊரில ஒரு விஷயம் பண்ண முடியாது. எவன் எவளை சைட் அடிக்கிறான் போன்ற பொழுது போக்கு செய்திகள் தொடக்கம் எந்த பொண்ணு கல்யாணம் முடிச்சு வெளிநாடுக்கு ஏற்றுமதியாகபோகுது போன்ற துக்கசெய்திவரை cover பண்ணுவான். அவனால் செய்தி பரவியே பல லவ்கள் பிரிந்தன. துளிர்க்க இருந்த லவ்கள் முளையிலே கருகின. "இவனுக்கு பயத்திலேயே சீதாகிட்ட கடைசிவரை என்ர காதலை சொல்லவே இல்லடா" என்று ராசா புலம்புவான். அவனுக்கு இப்ப கல்யாணம் கட்டி ஒரு மகள். பேருகூட சீதா என்று கேள்விப்பட்டேன்.
அம்மன் கோவில்

இம்முறை தீர்த்த திருவிழா அன்று பறக்கவிட 50 அடி புகைக்குண்டு செய்யப்போவதாக நிரஞ்சன் சொன்னான். அதற்காக பத்து நாட்களுக்கு முன்னதாகவே வேலை தொடங்கியது. "நீ வந்தா நல்லா பொழுதுபோகும்டா. அடிக்கடி கோவில் மடத்துப்பக்கம் வந்திட்டு போ. வந்து நாலு துண்டு பேப்பரை ஒட்டினாலே போதும். நீ நாலு கதை பேசினா பொடியள் சந்தோஷப்படுவாங்க" என்று வேண்டுகோள் விடுத்தான். எனது திறமையில் அப்படி ஒரு நம்பிக்கை பயலுக்கு. முதல் நாளே இரவு ஏழு மணிபோல வேலை தொடங்கியது. நட்டூதான் முன்னுக்கு நின்று ஆள் ஆளுக்கு உத்தரவு பிறப்பித்தான். அம்பது அடி என்பதால் கடதாசி தாள்களின் தடிப்பு சற்றே அதிகம். மொத்தமான தாள்களை அளவு பார்த்து வெட்டினோம். கொஞ்சம் பிழைத்தாலும் நட்டூ ரிஜெக்ட் செய்தான். புதுசா வந்த சின்னப்பொடியங்களை தட்டிகொடுத்து ஊக்குவித்தான். இம்மாதிரியான திருவிழா ஏற்பாட்டு வேலைக்கு போனால் திருவிழாவுக்கு போவதை பற்றி நினைத்து பார்க்க முடியாது. ஆனால் நட்டூ தினமும் திருவிழாவுக்கு சாமி வெளிவீதி சுற்றும் நேரத்தில் தவறாமல் திருநீற்று பூச்சுடன் போய் விடுவான். ஆனால் அவன் கோயிலுக்கு போவதை மற்றவர்களுக்கு தெரியாமல் பார்த்துக்கொண்டான். அந்த ஒரு மணி நேரம் தவிர மிச்ச நேரமெல்லாம் மடத்தடியில் புகைக்குண்டு ஒட்டினான். எனக்கு திருவிழா போவதைவிட புகைக்குண்டு ஒட்டுவதை பார்ப்பதிலும் அங்கு நடக்கும் சம்பாஷணைகளை கவனிப்பதில் அதிக ஆர்வமிருப்பதால் நெடியகாட்டு பிள்ளையார் கோவில் மடத்தடியிலே அதிக நேரத்தை செலவழித்தேன். "கொழும்பிலேருந்து திருவிழா பார்க்க வந்திட்டு மடத்தடியிலே நித்தமும் கிடக்கிறியேடா.. வந்து சாமியை நல்லா கும்பிட்டத்தானே கம்பெனிக்காரன் சம்பளத்தை கூட்டுவான்.. இன்னிக்காவது வந்து தொலைடா" என்றாள் அம்மா. சரியென்று நானும் வேட்டியை கஷ்டப்பட்டு கட்டிக்கொண்டு கோயிலுக்கு கிளம்பினேன்.

சூடான காற்று நிரப்பபடுகிறது
அம்மன் கோயில் திருவிழாவில் உற்சவ அம்மன் நகைகள் அலங்கார விளக்குகள் சகிதம் அலங்கரிப்பட்டிருப்பாள். சுற்றி முழங்கும் மேள நாதஸ்வர ஓசை காதை பிளக்கும். மேள சத்தத்தில் இதயமே அதிரும். சில பெண்களுக்கு உரு வந்து ஆடுவார்கள். அங்கு சென்றால் பக்தி இல்லாதோருக்கும் பக்தி வந்து விடும். அப்படி ஒரு உன்னதமான சூழல். எல்லோரும் அம்மனை பார்த்து சேவிப்பார்கள். திருவிழா காலங்களில் உற்சவ அம்மன் கோவில் ஒவ்வொரு நாளும் உள்வீதி மற்றும் வெளிவீதியை சுற்றும். ஒவ்வொரு திருவிழாவும் இரண்டு மூன்று மணித்தியாலம் எடுக்கும். ஆண்கள் மேற்சட்டையின்றி வேட்டி அணியவேண்டும். இரண்டு வயது பாலகர்கள்கூட பட்டுக்கரை வேட்டியுடன் தமது அப்பாமாரின் கழுத்தில் தொங்கிகொண்டிருப்பார்கள். பிள்ளையார் கோவில் மடத்துக்கு போகாத மிச்ச ஆண்களை அம்மன் கோவில் வீதியில் காணலாம். நான் கோவிலுக்கு போகும்போது அம்மன் உள்வீதி சுற்றிக்கொண்டிருந்தது. சாமி வெளிவீதி சுற்றும்போதுதான் நட்டூ வந்தான். என்னை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்தாலும் மறைக்க முயன்றான். செயற்கையாக புன்னகைத்தான். "என்னடா இஞ்சால பக்கம்" என்று இழுத்தான். "இன்னிக்காவது சாமி கும்பிடலாம் என்று வந்தேன். நீ என்னடா சாமி வெளிவீதி சுற்றும்போது மட்டும் தவறாமல் கோவில் பக்கம் வர்ற. ஏதாவது நல்ல சேதியா" என்றேன். இப்போது அவனுக்கு முகத்தில் கவலை படர்ந்தது.  "உன்கிட்ட மறைக்க என்னடா இருக்குது.. மாலாவை பார்க்க இஞ்சதானே வாய்ப்பு கிடைக்குது. அவள் அப்பர் இல்லாத ஒரே இடம் இதுதானே" என்றான். "டேய் திருமால்கிட்ட இதை சொல்லாதே.. அவள் அப்பர்கிட்ட இந்த விஷயம் போனா அவளை கோவிலுக்கும் அனுப்ப மாட்டாரு" என்றான் கெஞ்சலாக.
வடக்கு வீதி

என்னதான் நட்டூ கோவிலுக்கு வந்தாலும் மாலாவை பார்த்து கதைக்க முடியாது. ஆண்கள் ஒருபக்கமாகவும் பெண்கள் மறுபக்கமாகவும் இருப்பார்கள். கிட்ட நெருங்கவே முடியாது. ஆனாலும் சாமி வெளிவீதி சுற்றும்போது இரவு திருவிழாக்களின்போது வடக்கு வீதியின் ஒரு மணித்தியாலம் நிற்கும். இந்த ஒரு இடத்தில்தான் மேள + நாதஸ்வர வித்துவான்கள் சளைக்காமல் தமது திறமையை நிரூபிப்பார்கள். ஆளுக்கு ஒரு நாளைக்கு முப்பதாயிரம் கொடுப்பார்கள் கொடுத்த காசுக்கு வஞ்சகம் செய்யாமல் இஷ்டத்துக்கு வாசித்து தள்ளுவார்கள். அந்த ஒரு மணித்தியாலத்தின் எல்லோரும் வடக்கு வீதியில் அமர்ந்து விடுவார்கள். வீதியின் ஒரு கரையில் ஆண்கள் மற்ற கரையில் பெண்கள். நடுவில் சாமி நிற்கும். சாமிக்கு முன்னால் மேளங்கள் நாதஸ்வரங்கள். எல்லா பயலுகளும் தங்களுக்கு பிடித்த பெண்ணுக்கு நேராக இடம் பிடிப்பார்கள். பேசிக்கொள்வது கண்களால் மட்டுமே. "அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள்" ரக காதல்கள்தான். திருமால் இதை "வடக்கு வீதி ஒபரேஷன்" என்பான். 90களில் போரால் அதிகம் பாதிக்கப்பட்ட எங்கள் ஊரில் ஒபரேசன் என்ற வார்த்தை பயன்பாட்டுக்கு தாக்குதல் என்று அர்த்தம் என்று சின்ன குழந்தைக்கு கூட தெரிந்திருந்தது. நட்டூவுக்கு வடக்கு வீதி ஒபரேசன்தான் இருக்கிற ஒரே வாய்ப்பு.. நட்டூ மாலா இருந்த இடத்துக்கு நேராக இருந்தான். "அவ ஹாப் சாரியில தேவதை மாதிரி இருக்கா.. இல்லையாடா" என்றான் நட்டூ. நான் இதுவரை தேவதையை நேரில் பார்க்காததால் மறுத்துபேசவில்லை. "அவளை சட்டையில எத்தனையோ தடவை பார்த்திருக்கேன்.. அப்ப வராத காதல் ஹாப் சாரியில பார்க்கும்போது வருதுடா" என்று புலம்ப ஆரம்பித்தான். அவனும் அவளும் சின்ன சின்ன சைகைகள் மூலம் ஏதோ பேச்சு வார்த்தை நடத்தினார்கள். நானும் ஏதாவது ஒரு பெண்ணை பார்க்கலாம் என்று கொஞ்சம் கொஞ்சமாக பார்வையை திருப்பினேன். என்னோட கஸின் தங்கச்சி நிலா என்னை கவனமாக பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் ஒரு லேடி ஜேம்ஸ் பொன்ட். வடக்கு வீதியில் நான் யாரை சைட் அடிக்கிறேன் என்று உளவு பார்க்க அம்மாவால் பணிக்கப்பட்ட பெண் உளவாளி. அவளை மீறி சைட் அடிப்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. ஓரிரண்டு பெண்களை ஓரக்கண்ணால் பார்த்தேன். முறைத்தார்கள். கண்வலி வந்ததுதான் மிச்சம். சைட் அடிக்கிறது கஷ்டம் என்று அன்றுதான் உறைத்தது.

வடக்கு வீதி ஒபரேசன் ஒருவாறாக முடிந்தது. நட்டூ பரவச நிலையில் மிதப்பது போல நடந்து வந்தான். சால்வை அவிழ்ந்துகூட தெரியாமல் ஏதோ கனவுலகில் சஞ்சரித்து கொண்டிருந்தான். "டேய் நீ ஏதாவது பெண்ணை பார்த்தியா.. பிடிச்சிருக்கா" என்றான். "அப்படி எதுவும் இல்லடா நான் சாமி கும்பிடத்தான் வந்தேன்.. உன்னை மாதிரி இல்ல" என்றேன். முறைத்தான். "வந்த வேலை முடிஞ்சுது வா புகைக்குண்டு ஒட்ட போவம்" என்றான் உற்சாகமா. "இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படியே பார்த்திட்டிக்கபோறே.. உன்ட அப்பா அம்மாட்ட சொல்லி பொண்ணு கேட்க வேண்டியதுதானே" என்றேன். "நீ சொல்லிட்டு கொழும்புக்கு போயிடுவே.. ஏதாவது பிரச்சனை வந்தா அவளை பார்க்கவே முடியாம போயிடும்னு பயமா இருக்கு.. இப்படி ஒவ்வொரு திருவிழாவிலும் அவள் முகத்தை பார்த்தாலே போதும்டா.. காலம் வந்தா எல்லாம் நல்லா நடக்கும்" என்றான். அவன் முகத்தை பார்த்தேன்.  அவனது முகத்தில் பரவசம் இன்னும் குறையவில்லை. அவன் அடுத்த திருவிழாவுக்காக காத்திருக்கிறான்.


நிறைய உண்மை.. கொஞ்சம் பொய்..

Friday, January 20, 2012

நான் கண்ணாடிக்காரன்!

"இப்போது நான் கரும்பலகையில் எழுதும் சொற்களுக்கு எதிர்க்கருத்து சொல் எழுதுங்கோ பார்க்கலாம்.. ஒரு பிழைக்கு ஒரு அடி பரிசு" என்று அறிவிப்பு செய்துகொண்டே விறுவிறுவென எழுத ஆரம்பித்தார் ஜீவன் சேர். எங்களுக்கு தூக்கி வாரிப்போட்டது. ஜீவன் சேரை எங்களில் சிலருக்கு பிடிக்கும், பலருக்கு அவர் பெயரை சொன்னாலே வியர்த்து விடும். அழகாக புது பஷனில் ஜீன்ஸ் அணிந்திருப்பார். அவர் பேசும்போது முகத்திலே துறுதுறுவென மீசை நர்த்தனமாடும். இரத்தம் பாய்ந்து சிவப்பேறிய அவரது கண்கள் அவர் ஒரு பெரிய கோபக்காரர் என்பதை பறைசாற்றும். ஏதாவது தப்பு செய்தால் முதலில் அடிப்பார் பிறகு விலாவரியாக சிறப்பு விசாரணையை தொடங்குவார். அவர் வருகிறார் என்றாலே ஒரு பயலும் இருக்கிற இடத்தினை விட்டு அசைய மாட்டான்கள். கண்டிப்புக்கு பெயர் போன அவரை, எங்கள் பாடசாலையின் மானத்தினையே காப்பாற்றப்போகும் ஐந்தாம் வகுப்பு ஸ்கொலர்ஷிப் வகுப்பின் வகுப்பாசிரியராக நியமித்திருந்தனர். நான்காம் வகுப்புவரை எந்த பரீட்சை பற்றியும் கவலையில்லாமல் வண்ணத்துபூச்சி போல பறந்து திரிந்த எனக்கு ஐந்தாம் வகுப்பு ஸ்கொலர்ஷிப் பரீட்சை பற்றிய அறிமுகம் புதுசா இருந்துச்சு. ஐந்தாம் வகுப்பில் காலடி எடுத்து வைத்த நாள் முதல் ஆளாளுக்கு எதாவது சொல்லி வயிற்றில் புளியை கரைத்தார்கள். "ஸ்கொலர்ஷிப் டெஸ்ட் முடியும் மட்டும் நீ விளையாட போக கூடாது" என்று அம்மா தற்காலிக தடைசட்டத்தினை அமுலுக்கு கொண்டுவந்தாள். "நீ பாஸ் பண்ணினா.. புது சைக்கிள் வாங்கித்தாறேன்" என்று அப்பா தனது பேரத்தினை ஆரம்பித்தார். "உங்க மகன் ஸ்கொலர்ஷிப் டெஸ்ட்டிலே பாஸ் பண்ணினா அரசாங்கம் படிப்புக்கு உதவித்தொகையா பத்தாயிரம் ரூபா கொடுப்பாங்க" என்று பக்கத்து வீட்டு அங்கிளும் தன்பங்குக்கு எனது விளையாட்டுக்கு வேட்டு வைத்தார். அவர் பயங்கர ஆளு.. நான் கிரிக்கெட் விளையாடாமல் விடுவதால், அவரது வீட்டு யன்னல் கண்ணாடிகளுக்கு ஏற்படவிருந்த சேதத்தினை முன்கூட்டியே தடுத்துவிட்டார். வீட்டுக்கு வருகிற எல்லோரும் எதாவதுசொல்லி உடுக்கை அடித்து உருவேத்திட்டிருந்தாங்க.

முதல் தவணை பரீட்சை முடியும்வரை ஜீவன் சேரிடம் அடிவாங்காமல் சாதனை படைத்தேன். ஆனால் வகுப்பில் இருந்த பல பயல்கள் அவரது பிரம்பின் ருசியை அறிந்திருந்தார்கள். எங்கள் வகுப்பில் புதிதாக சேர்ந்த "குவில்" என்ற மாணவன் ஒரு தவணைக்குள்ளேயே ஐம்பது அடிவாங்கி அரைச்சதமடித்தான். ஜீவன் சேரிடம் அடி வாங்கி யாருடைய கை நல்லா சிவக்குது என்று மாணவர்கள் தங்களுக்குள்ளே போட்டி நடத்தினர். நான் எப்போதும் வகுப்பின் முதல் வரிசையிலேயே இருப்பேன். உடனே இவன் நல்லா படிக்கிற பயல் என்று தப்புக்கணக்கு போட்டிடாதீங்கோ!.. ஏனென்றால் செந்தூரன் முதல் வரிசையில்தான் மட்டும்தான் இருப்பான். அவன் ஒருத்தன்தான் எனக்கு விளங்கிறமாதிரி அழகான பெரிய எழுத்தில் எழுதுவான். நான் அவனை காப்பியடிக்கத்தான் நான் அவன் பக்கத்தில் இருந்தேனா? அதுவும் இல்லை. எனக்கு எந்த வரிசையில் இருந்து கரும்பலகையை பார்த்தாலும் அதில் ஏதோ எழுதுகிறார்கள் என்பது மட்டும்தான் தெரியும் ஆனால் என்ன எழுதுகிறார்கள் என்பது தெரிவதில்லை. ஆகவே பக்கத்தில் இருந்த செந்தூரன் எழுதுவதை காப்பி எடுத்து விடுவேன். ஆனால் இதனை ஏதோ தடைசெய்யப்பட்ட குற்றச்செயலாகவே கருதினேன். செந்தூரன் ஜீவன் சேரிடம் போட்டுக்கொடுத்து விடுவானோ என்ற பயம் எப்போதும் இருக்கும். ஆகவே அவனுடன் பேசும்போது ஒன்றுக்கு இருதடவை யோசித்தே பேசவேண்டும். செந்தூரன் பெரிய திறமைசாலிதான்.. ஆசிரியர்கள் கரும்பலகையில் எழுதி முடிக்கும்போது அவனும் எழுதிவிடுவான். அதுவே எனது காப்பியடிக்கும் வேலையை எளிதாக்கியது. "நீ நல்லா நெத்தலி மீன் சாப்பிடுடா.. கண் நல்லா தெரியும்" என்பான். ஆனால் எனக்கோ மீனை உலக்கை வைத்து அடித்தாலும் உள்ளே இறங்காது.

ஒருநாள் பள்ளிக்கூடத்திலிருந்து வீடு வந்த என்னை வழமைக்கு மாறாக அக்காவும், அண்ணாவும் கவனமாக அவதானிப்பதை கவனித்தேன். "அந்த காலண்டரில இருக்கிறத வாசி பார்க்கலாம்" என்றாள் அக்கா. அந்த காலண்டர் பத்து மீட்டர் தள்ளி சுவரில் மாட்டப்பட்டிருந்தது. அது நேற்றுத்தான் அப்பா புதுசா ஆபிஸ்லேர்ந்து கொண்டு வந்த கலண்டர். என்ன எழுதியிருக்கு என்று யாருக்கு தெரியும். ஏதோ பொய்யை சொல்லி அவளிடம் மாட்டிகொண்டேன். அம்மாவிடம் போய் அக்கா ஏதோ சொன்னாள். இன்னும் போன தவணை பரீட்சை மார்க்ஸ் இன்னும் தரவில்லையே. என் கண் பார்வையை பற்றித்தான் ஏதோ சொல்கிறாளோ. இதையெல்லாம் கண்டுகொள்ளாது, வழமையான தொழிலான டீவி பார்ப்பதில் கவனம் செலுத்தினேன். டீவி கிட்டத்தட்ட ஒன்றரை மீட்டர் தொலைவில் இருப்பதால் பார்ப்பதில் எனக்கு சிக்கல் இருக்காது. கண்ணை கொஞ்சம் சுருக்கி உற்றுப்பார்த்தால் தெரிந்து விடப்போகிறது. அம்மா தேநீர் கோப்பையுடன் வந்து "ஏன் இப்படி உற்றுப்பார்க்கிறாய்" என்று அதட்டினாள். "எப்ப பார்த்தாலும், இப்படி கிட்ட இருந்து டீவி பார்க்காதே என்று உனக்கு எத்தனை தரம்தான் சொல்வது.. கொஞ்சம் பின்னுக்கு கதிரையை போட்டு பாருடா" என்றாள். அப்பா வந்தவுடன் எனது கண்ணை பற்றிய விசாரணைகள் ஆரம்பமாயின. ஜீவன் சேர்தான் அண்ணாவிடமும் அக்காவிடமும் எனது கண்ணின் திறமை பற்றி போட்டு கொடுத்துவிட்டார். பிறகு என்ன.. எனக்கு கண்ணாடி மாட்டுவற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்தேறின.

ஒரு வாரம் கழித்து எனது மூஞ்சியில் கண்ணாடி ஒன்று ஜம்மென்று அமர்ந்திருந்தது. நான் எங்கு போனாலும் எனக்கு முன்னாலே போனது. இப்போது கரும்பலகை தெளிவாக தெரிகிறது. ஜீவன் சேரின் மீசையிலிருக்கும் ஒரு நரைமுடி கூட தெரிகிறது. "குவிலின்" ஊத்தை பல்லுகூட தெளிவா தெரியுது. ஆனால் சுவர்கள் கொஞ்சம் வளைந்து காணப்படுவது போன்ற ஒரு மாயை இருந்தது. எல்லோரும் என்னை ஏதோ வினோத ஜந்துவை பார்ப்பதைப்போல பார்த்தார்கள். அது நியாயம்தான். அதுவரை இந்த சின்ன வயதில் கண்ணாடியோடு ஒரு பயலையும் அவர்கள் கண்டதில்லை. ஆனால் அதன்பின்பு நண்பர்களிடையே நல்ல மரியாதை கிடைத்தது. "கண்ணாடி போட்டவனேல்லாம் நல்லா படிப்பான்" என்று தப்பு கணக்கு போட்டார்கள். என்னிடமே பாடம் சம்பந்தமான சந்தேகம் கேட்க ஆரம்பித்தார்கள். "குருடர்கள் சம்பிராஜ்ஜியத்தில் ஒற்றை கண்ணன்தான் ராஜா" என்ற பழமொழியைபோல கண்ணாடி போட்டிருந்த எனக்கான கவனிப்புகள் உள்ளூர சந்தோசத்தினை கொடுத்தது..

நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக கழிந்த எனது வாழ்க்கையில் ஸ்கொலர்ஷிப் டெஸ்ட்டும் வந்தது. மறக்காமல் கண்ணாடி அணிந்து சென்று பரீட்சை எழுதினேன். பல நாட்களாக கனவில் பரீட்சை எழுதும்போது இருந்த நடுக்கம் நிஜமாக எழுதும்போது இருக்கவில்லை. பரீட்சை முடிந்து வெளியே வந்தபோது உலகமே கிரிக்கெட் விளையாடும் மைதானம் போல தோன்றியது. மாலை நேரம் வரும்வரை பொறுமை காக்க முடியவில்லை. பிரசாத் வீட்டுக்கு போய் ஸ்டம்ப் பேட்டுடன் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் முற்றத்தில் விளையாட்டினை ஆரம்பித்தோம். கிட்டத்தட்ட ஆறு மாச ஓய்வுக்கு பிறகு இன்றுதான் கிரிக்கெட். பிரசாத் பாஸ்ட் போலர், "வக்கார் யூனுசை" போல ரொம்ப தூரம் ஓடி வந்து கொஞ்சம் ஸ்லோவாத்தான் போடுவான். ஆனாலும் என்னை ஒவ்வொரு மாட்சிலும் போல்ட் ஆக்கி விடுவான். அவன் போடுகிற பந்து எப்படி என் பேட்டில் படாமல் தப்பி விடுகிறது என்ற ரகசியம்தான் தெரிவதில்லை இதோ ஓடி வருகிறான். இன்று விடக்கூடாது. ஒரு சிக்ஸராவது அடிக்கணும். இதோ ஓடி வருகிறான்.. பந்தை வீசி விட்டான்.. இதோ.. சிக்ஸர்... அடடா.. இப்ப பந்து சும்மா புட்பால் கணக்கா சூப்பரா தெரியுது.. விளையாடுவதற்கு கண்ணாடி போட்டு வந்த என் யோசனையை மெச்சிக்கொண்டேன்..

Saturday, December 24, 2011

குளிர்கால கதைகள் - பிளாட்ரோ

வீடு முழுக்க இருள் கவிந்திருந்தது. ஆனால் காலை பத்து மணியாகி விட்டது. ஆனால் இருளை விரட்டியடிக்க போதுமான சூரிய ஒளி இன்னும் வரவில்லை. இன்று முழுக்கவே சூரிய ஒளி வராது போகலாம். அவ்வளவு கடுமையான பனிப்பொழிவு. தியோ இழுத்து போர்த்துத்கொண்டு சுகமாக தூங்கினான். உள்ளே வந்த அம்மா அந்த அறையின் மேஜையிலிருந்த விளக்கினை பற்ற வைத்தாள் அறையின் ஐம்பது சதவீத பகுதியை அந்த வெளிச்சம் ஆக்கிரமித்தது. அம்மா "தியோ! தியோ! எழுந்திரு.. எழுந்திருடா.. டாடி உன்னை எழுப்பி கூட்டி வரச்சொன்னருடா" என்றாள். செல்லமாக அவனது முதுகில் தட்டியவாறு எழுப்ப முயன்றாள். சிறிது நேர கெஞ்சலுக்கு பிறகு எழுந்தான் தியோ. தியோவுக்கு இந்த வருட கிறிஸ்துமஸுடன் வயது பன்னிரண்டாகிறது. அம்மா அண்ணாவை எழுப்புவதை கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்த அவனது செல்ல தங்கை சிரில்லா, ஒன்றுமே தெரியாதது போல் திரும்பி படுத்துக்கொண்டாள். "அம்மா! அப்பாக்கிட்ட இவளை கூட்டிட்டு போகச்சொல்லுங்க.. நான் மட்டும் இந்த பனிக்குளிருக்குள் வெளியே போகணுமா!" என்று சீறினான் தியோ. "டேய்! நீதாண்டா ஆம்பிளை.. நீதான் அப்பாவுக்கு உதவியா இருக்கணும். சிரில்லா எனக்கு வீட்டு வேலைகளுக்கு உதவுவாள்.. எழும்பி வாடா அப்பாவுக்கு கோபம் வரப்போறது" என்றாள். அம்மாவுக்கு பின்னால், கண்ணை கசக்கிக்கொண்டே மெதுவாக காலை தரையில் உரசியவாறே முன்னறைக்கு வந்தான் தியோ. அவனது அப்பா ரொபின்சன் அறைக்கு வெப்பம் விநியோகிக்கும் அடுப்புக்கு பக்கத்தில் இருந்து குளிர் காய்ந்து கொண்டிருந்தார். அவரது வாயில் சுங்கான் புகைந்து கொண்டிருந்தது. அதனை நன்கு அனுபவித்தவாறு புகையை பொறுமையாக வெளியேற்றி கொண்டிருந்தார். ஆனால் அவரது சிந்தனை கடுமையாக இருந்தது. இந்த சீசன் கடுமையான பனி. உணவு பொருட்களை தேடிக்கொள்வதில் இருக்கும் கஷ்டம் சொல்லி மாளாது. போதாக்குறைக்கு
செவ்விந்தியர்களின் தாக்குதல் பயம் வேறு. இப்போது வெள்ளை இராணுவத்தினர் அவர்களின் இனத்தவருக்கு செய்யும் அநியாயங்களுக்கு பதிலடியாக எப்போதாவது வெள்ளையரின் தனித்திருக்கும் குடியிருப்புகளில் தாக்குதல் நடத்துவார்கள். ரொபின்சன் மரம் வெட்டும் தொழில் பார்ப்பவர். இதனால் காட்டுக்கு பக்கத்தில் இருந்த மரத்தொழிற்சாலைக்கு பக்கத்திலே தனது வீட்டினை அமைத்திருந்தார். காட்டுக்குள் உள்ள மான், மரை போன்ற மிருகங்களை வேட்டையாடி உணவினை பெற்றுக்கொள்ள முடிந்தது. கோடைக்காலப்பகுதிகளில் பக்கத்தில் உள்ள ஒரு சில கிராமங்களுக்கு சென்று வர முடிந்தது. கடுமையான பனி காலங்களில் வேலைக்கு கூட வெளியில் செல்ல முடியாது. ஆனால் வீட்டின் வெப்பநிலையை பேண விறகுகள் இல்லாவிட்டால் குளிரில்தான் வாடவேண்டும். அதற்காகத்தான் இப்போது வெளியே செல்லவேண்டியுள்ளது.

தியோவும், ரொபின்சனும் இரண்டு கிலோமீட்டருக்கு போய் விறகு சேகரித்து முடிக்கும்போது பனி கடுமையானது. சூரிய வெளிச்சம் குறைய தொடங்கி விட்டது. வீட்டினை நோக்கி முடிந்தளவு வேகமாக நடந்தனர். இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. வாயை திறந்தாலே குளிர் உடம்புக்குள் போய் விடும். வீட்டில் இருக்கும்போதே தந்தை இருக்கும்பக்கமே தலைகாட்டமாட்டான். ஆகவே அவருடன் பேசிக்கொள்ள அவனுக்கு எதுவும் இருக்கப்போவதில்லை. வீட்டினை நெருங்கும்போது கறுப்பாக உடையணிந்த ஒரு உருவம் முன்னே செல்வதைக்கண்டனர். இவ்வளவு நேரமாக அந்த உருவம் கண்ணில் படவேயில்லை. அது ஒரு மனிதன்தான். முதுகில் ஒரு மூட்டையை சுமந்தவாறு மிக மெதுவாக நடந்து சென்றான். கடந்த இரு மாதங்களாக தியோ ஒரு வேற்று மனிதரையும் கண்டதேயில்லை. இன்னும் கொஞ்ச நேரத்தில் விழுந்து விடுவான் போலிருந்தது. ரொபின்சன் மிக வேகமாக போய் அவனை முன்னால் போய் நின்றார். சைகையால் நட்புடன் வந்திருப்பதாக உணர்த்தினார். கண்களை தவிர மற்ற பாகங்கள் முரட்டு துணியால் மூடப்பட்டிருந்தது. அவர் எதாவது சொன்னாலும் சத்தம் வெளியே வருமா.. என்று சந்தேகமாக இருந்தது. அவரது கழுத்தில் மேரி மாதாவின் உருவம் உள்ள சங்கிலி தொங்கியது. உடலில் எந்த சக்தியும் இருக்கவில்லை. எனவே அவரை மெதுவாக பிடித்து கொண்டு வீடு நோக்கி பயணப்பட்டார்கள். கதவை திறந்த அம்மா, ஆச்சர்யமாக அந்த அந்நியனை நோக்கினாள். அவரது கம்பளியால் முழுவதுமாக மூடிய கருமையான உருவத்தினை பார்த்து பயந்துபோன சிரில்லா அம்மாவுக்கு பின்னால் பதுங்கினாள். அவரை ரொபின்சன் கதிரையில் இருக்க வைத்துவிட்டு பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த அடுப்பில் மேலும் விறகினை இட்டார். அந்த மனிதனுக்கு ஐம்பது வயதிருக்கலாம். அவரது கால்கள் விறைத்து மரக்கட்டை போலிருந்தது. அவருக்கு சூடான சூப் பரிமாறப்பட்டது. அதை ஒருவித ஆர்வத்துடன் வேகமாக அருந்தினார். தொண்டையை செருமிக்கொண்டார். எச்சில் கூட உறைந்து தொண்டையை அடைத்திருக்குமோ என்று சந்தேகம் வருமளவுக்கு கஷ்டப்பட்டார். "நன்றி நண்பரே".. ஒருவாறாக ஓரிரு வார்த்தைகள் வெளியே வந்தன. "நீங்க இப்ப ஓய்வெடுங்க.. பிறகு பேசிக்கலாம்" என்று அவரை உட்காரவைத்துவிட்டு உள்ளே சென்றார் ரொபின்சன். சிரில்லா சமையலறை கதவுக்கு பின்னால் பதுங்கி பார்த்து விழித்துக்கொண்டிருந்தாள்.

மாலைப்பொழுது, ஆனால் சூரியன் மறைக்கப்பட்டு, இருள் வியாபித்திருந்தது. வீட்டுக்கு வந்திருந்த அந்நியரான மனிதனின் பெயர் "பிளாட்ரோ" என்று அறிந்து கொண்டனர். தியோ தன்னிடம் இருந்த மரத்தாலான பொம்மைகளை அவருக்கு கொண்டு வந்து காட்டினான். "பிளாட்ரோ" புன்னகையுடன் அவற்றை பார்த்தவண்ணமிருந்தார். அவன் அவரிடம் எறிந்த மரப்பந்தை அவனிடமே திருப்ப எறிந்தார். இப்படியே கொஞ்ச நேரம் ஒன்றும் பேசாமல் இருவரும் ஒரு புரிந்துணர்வில் விளையாடிகொண்டிருந்தனர். ஒளித்துகொண்டிருந்த சிரில்லா இப்போது கொஞ்சம் கொஞ்சமாக கிட்டே வந்து விட்டாள். "தியோ நானும் வரேண்டா" என்று மழலை மொழியில் ஆரம்பித்தாள். "ம்.. ம்... நாங்க இருவரும் பந்தை மாறி மாறி எறிவோம்.. நீ இந்த பந்தை பறிக்கவேணும்" என்று அவளுக்கு கொஞ்சம் மேலாக பிளட்ரோவிடம் எறிந்தான். அவரும் சிரில்லாவிடம் அகப்படாமல் அவனிடம் பந்தை லாவகமாக எறிந்தார். இப்படியே கொஞ்ச நேரம் சென்றது. சிரில்லாவின் முகம் சிவந்து கொண்டே போனது. விட்டால் கொஞ்ச நேரத்தில் அழுது விடுவாள் போலிருந்தது. இதனை அவதானித்த பிளாட்ரோ அவளை நோக்கி எறிந்தார். "எனக்கு வெற்றி வெற்றி.. ன.. னா.. ணா" என்று வெற்றிக்கூச்சல் போட்டாள் சிரில்லா. தியோ பிளாட்ரோவை நோக்கி முறைத்துப்பார்த்தான். அவரும் ஏதோ தவறுதலாக அவளிடம் பந்தை எறிந்து விட்டது போல தலையில் கைவைத்து கொண்டு கவலைப்படுவது போல் நடித்தார். அப்போது முன்னறைக்குள் நுழைந்த ரொபின்சன் "பிளாட்ரோ"வின் முகத்தினை பார்த்தார். களைப்பு அடங்கி, முகம் பிரகாசமாக இருந்தது. "நீங்க இந்த கடும் பனியிலே எதுக்கு மேற்கு பக்கம் போறீங்க.. எல்மிரா டவுனுக்கா போயிடிருந்தீங்க" என்று சம்பாஷணையை ஆரம்பித்தார் ரொபின்சன். அவர் புன்னகை கலந்த நன்றியுணர்வுடன் ரொபின்சனை பார்த்தவாறு பேச்சை ஆரம்பித்தார். "ஆமா! என்ன செய்யிறது.. கட்டாயம் போய் ஆகவேண்டிய சூழ்நிலை.. எனக்கு சவுத் கில்லில மரம் வெட்டுற வேலை.. எனக்கு ஒரு மகனும், சிரில்லா வயசில சின்ன பொண்ணு இருக்காங்க.. அவங்க எல்லோரும் எல்மிரா டவுணில் இருக்கிறாங்க.. ஒரு வருஷத்தில் கிறிஸ்மஸ் நேரத்திலேதான் விடுமுறை கிடைக்குது.. குளிர் காலத்தில என் சின்ன பெண்ணுக்கு இழுப்பு நோய் வரும்.. இந்த முறை கடுமையா வந்திட்டதா தகவல் சொல்லி அனுப்பினாங்க.. அதான் பனியை பத்தி யோசிக்காம கிளம்பிட்டேன்". முகத்தில் ஒருவித யோசனையுடன் கூடிய சோகம் இருந்தது. "கவலைப்படாதீங்க! பனி இன்னும் இரண்டு நாளில் குறைஞ்சுடும் போல இருக்குது. இரண்டு நாள் இங்க தங்கி இருந்துட்டு போங்க.. இன்னும் அஞ்சு மைல் போனால் ஹோர்ஸ்ஹெடில் குதிரை வாடகைக்கு எடுக்கலாம். பனியும் குறைஞ்சுடும்" என்று ஆறுதல் கூறினார். "அதுசரிதான், ரொபின்சன்! ஆனா அந்த சின்ன பெண்ணு தாக்குபிடிப்பாளா என்றுதான் தெரியவில்லை" என்று கதிரையில் சாய்ந்தவாறு கர்த்தரை எண்ணி நெஞ்சில் சிலுவையிட்டார். ரொபின்சன் அவரை உற்று பார்த்தார். இப்போது அவரது உடலை சுற்றி மூடியிருந்த முரட்டு கம்பளி உடை இல்லை. ஆள் அநியாயத்துக்கு மெலிந்திருந்தார். கால்கள் தடி போல இளைத்திருந்த்தது. கண்களில் பத்து நாட்கள் தூங்காதது போல் கடுமையான அயர்ச்சி இருந்தது. இவ்வளவு தூரம் எப்படித்தான் நடந்து வந்தாரோ என்று எண்ண வேண்டியிருந்தது.

இவ்வாறாக இரண்டு நாட்கள் நகர்ந்தன. "பிளாட்ரோ"வின் உடல்நிலையில் அவ்வளவான முன்னேற்றமிருக்கவில்லை. கிறிஸ்மஸ்க்கு இன்னும் ஏழு நாட்களே இருந்தன. ரொபின்சனுக்கு அவரைப்பற்றிய கவலை அதிகரித்தது. மனிதர் இளைத்து தொண்ணுறு வயது முதியவர் போல காணப்பட்டார். ஆனால் எப்போதும் சிரித்துகொண்டே சிரில்லா, தியோவுடன் விளையாடிகொண்டிருந்தார். இரவு வேளைகளில் தனியாக இருக்கும்போது கண்ணீர விட்டு அழுவதை ரொபின்சன் பார்த்திருக்கிறார். இக்கட்டான சூல்நிலையிலிருக்கும் மகளை கடைசியாக கூட காண முடியாமல் போய் விடுமோ என்று அழுதிருக்கலாம். தனது துயரை மீண்டும் ஒருமுறைகூட வெளிக்காட்டாமல் இருந்தார்.

அன்றுடன் அவர் வந்து நான்கு நாட்களாகி இருந்தது. காலையிலேயே பனி குறைந்து காணப்பட்டது. இன்றைக்கே கிறிஸ்மஸுக்கு தேவையான இறைச்சிக்கான வேட்டையை இன்றே நடத்தவேண்டும் என்ற முடிவுடன் காலை எழுந்து வந்த ரொபின்சனிடம், ஒருவித பரவசத்துடன் குழந்தை போல ஓடி வந்தார் "பிளாட்ரோ". "நான் இப்போதே கிளம்புகிறேன் ரொபின்சன். பனி குறைந்து விட்டது. நான் இப்போதே புறப்பட்டால் கிறிஸ்மஸுக்கு வீட்டை அடைந்து விடலாம்". அவர் கம்பளி உடையால் நன்கு மூடி கையில் பெரிய பையுடன் புறப்பட ஆயத்தமானார். தியோவும் சிரில்லாவும் இன்னும் எழுந்திருக்கவில்லை, ரொபின்சனும் மனைவியும் வாசலிலே அவரை விடைகொடுத்தனர். "தியோவிடமும், சிரில்லாவிடமும் சொல்லி விடுங்கோ. நான் மறுபடியும் வருவேன். எல்லாத்துக்கும் நன்றி. கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக" என்று விட்டு திரும்பிப்பாராமல் நடந்தார். அவர் புறப்பட்டபின் தனது வேட்டைக்கு ஆயத்தமானார் ரொபின்சன். அவரின் வீட்டுக்கு பக்கத்திலுள்ள காட்டில், மரைகள் நிறைய இருந்தன. மீண்டும் பனிப்பொழிவு தொடங்கமுன் இரண்டு மரைகளையாவது வேட்டையாடவேண்டும். கிறிஸ்மஸ் நெருங்க நெருங்க பனிப்பொழிவு உச்சத்திலிருக்கும். வெளியே கால் வைத்தால் உயிருடன் திரும்ப உத்தரவாதமில்லை. தியோவும் அவருடன் வேட்டையாட ஆயத்தமானான். "அப்பா! பிளாட்ரோ எங்கே போய் விட்டார். மரத்தில் கிறிஸ்மஸ் தத்தா பொம்மை செய்து தரதா சொன்னருப்பா" என்று கேட்டான். "பனி கொஞ்சம் குறைஞ்சுடுச்சு அதான் அவசரமா போய் விட்டார். உனக்கு சொல்ல சொன்னார். திரும்பி ஒருநாள் வருவாராம்" என்றார் ரொபின்சன்.

ரொபின்சனும் தியோவும் காட்டின் எல்லைப்பகுதியில் மரைகளை தேட ஆரம்பித்தனர். ஆனால் இன்று அதிஷ்டம் அவர்களின் பக்கமிருக்கவில்லை. காட்டுக்கு உள்ளே போய் ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒரு விலங்குகளையும் காணவில்லை. வழமையாக சூரிய வெளிச்சம் வரும்போது விலங்குகள் வெளிவர ஆரம்பிக்கும். ஆனால் இன்று எவற்றையும் காணவில்லை. ரொபின்சன் கொஞ்சம் அதிர்ந்து போனார். எதோ பனிப்புயல் வருவதற்கு முன்னர் வரும் அமைதி போல காடே அமைதியாக இருந்தது. "அப்பா! ஒன்றையுமே காணவில்லை. இன்னும் உள்ளே போனால் செவ்விந்தியர்களின் குடியிருப்பு வந்து விடும். வாங்கோ வீட்டுக்கு போய் விடுவோம்". என்று தியோ கத்தினான். திடீரென்று வெளிச்சம் குறைய ஆரம்பித்தது. காற்று குளிர ஆரம்பித்தது. இருவரும் பேசிகொள்ளாமல் வீட்டினை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

வீட்டினை அடைய நான்கு மணித்தியாலங்கள் ஆகலாம். காட்டின் எல்லைக்கு சென்றடைய முன்னரே பனிப்புயல் கடுமையானது. தியோ நடக்க முடியாமல் பனியில் சறுக்கி விழுந்தான். ரொபின்சன் அவனை தூக்கியவாறு ஒரு மரத்தின் பின்னால் பதுங்கினார். அப்போதுதான் அவருக்கு "பிளாட்ரோ"வின் ஞாபகம் வந்தது. கடவுளே அந்த கிழவர் இந்த புயலில் சிக்கிவிட்டாரே. இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருந்தால் இந்த இடத்தினை விட்டு பத்திரமாக வெளியேறி இருப்பார். கடவுளே அவரை காப்பாற்று என்று வேண்டிகொண்டார். பனிப்புயல் கடுமையாக வீசியது. இருள் சூழ்ந்து பயங்கரமாக இருந்தது. பசியால் பிராணன் போனது. இப்படியே இரண்டு நாட்கள் தொடர்ந்து வீசினாலே அந்த இடத்தினை விட்டு நகர முடியாமல் மடிய வேண்டியதுதான். உடல் கடுமையான குளிரால் விரைத்து போனது. காலநிலை பற்றி பிழையாக கணித்ததை எண்ணி வருந்தினார். ரொபின்சனின் தியோ பசியால் நித்திரையானான். ரொபின்சனுக்கு கட்டுபடுத்த முடியாத மயக்கம் ஆட்கொள்வதை உணர்ந்தார். "கடவுளே எப்படியாவது எங்களை காப்பாற்று".

சூடாக வாயில் ஏதோ பருக்கப்படுவதை உணர்ந்தார். ஒருவிதமான மூலிகை வாசனையடித்தது. இப்போது ஒருவித வெம்மை இருந்தது. இது ஏதோ ஒரு செவ்விந்திய கூடாரம். ஒரு வயதான செவ்விந்திய கிழவர் அவனை கருணையாக பார்த்து அவனுக்கு ஏதோ ஒரு சூடான மூலிகை நீரை பருகத்தந்தார். பக்கத்திலே தியோ அமர்ந்திருந்தான். "அப்பா! நாங்க தப்பித்தோம். இப்ப புயல் குறைஞ்சிடுச்சு. இவங்கதான் எங்களை காப்பாற்றிஇருக்கிறார்கள்" என்று கூவினான். அப்போது ஒரு செவ்விந்திய இளைஞன் உள்ளே நுழைந்தான். அவன் "ஒரு கிழவர்தான் காட்டின் மயங்கிகிடந்த உங்கள் இருவரையும் காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் என்னவோ தெரியலை நீங்கள் மயங்கிகிடந்த இடத்தினை காட்டிவிட்டு மறைந்து போய் விட்டார்" என்று காப்பாற்றிய கதையை விளக்கினார். அதிர்ந்து போன ரொபின்சன் "அவர் எப்படி இருந்தார்" என்றார். "கறுப்பான கம்பளி உடை உடுத்தியிருந்தார். மேரி மாதா படம் போட்ட சங்கிலி அணிந்திருந்தார்". ரொபின்சனுக்கு இப்போது எல்லாம்
புரிந்தது.

"மீண்டும் வருவேன் என்று கூறினீர்களே பிளாட்ரோ. எங்களுக்காக இறப்பிலிருந்து மீண்டு வந்திருக்கிறீர்களே"

Saturday, October 15, 2011

கனவே கொல்லாதே!

அந்த புத்தக கடைக்குள் ஒருவித ஆர்வத்துடன் நுழைந்தேன். மங்கலான வெளிச்சம் அந்த கடை முழுவதும் பரவியிருந்தது. பரப்பி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களின் மேல் பார்வையை ஓட விட்டேன். இதுவரை கண்டிராத புது புது பெயர்களுடன் கண்ணை கவரும் அட்டைபடங்களுடன் வந்திருந்தன. நான் தேடிவந்த "விண்வெளியில் குள்ளநரி " என்ற புத்தகத்தினை மட்டும் காணவில்லை. எதற்கும் கடைக்காரிடம் கேட்போமா என்று யோசித்தேன். இல்லை வேண்டாம், பக்கத்தில் இரண்டு அழகான பெண்கள் நிற்கிறார்கள். கடைக்காரர் எதாவது சொல்லி அந்த அழகிகள் முன்னிலையில் என் மானத்தினை வாங்கி விடுவார்.

 நான் புத்தக குவியலில் தேடுதல் வேட்டையில் இருந்தபோது, கடைக்காரர் சடாரென்று ஒரு புத்தகத்தினை நீட்டி. "இதை படித்து விட்டீர்களா! புதுசா வந்திருக்கு.. எல்லோரும் கேட்டு வாங்கிறாங்க" என்றார். "இணைய விளம்பல்கள்" என்று தலைப்பிடப்பட்டிருந்தது, மூளையில் ஏதோ பொறி தட்டியது போலிருந்தது. "அடப்பாவி! இந்த தலைப்பில்தான் நான் ப்ளாக் எழுதுவேன்". வெளியே எழுத்தாளரின் பெயரை காணோம். வேகவேகமாக உள்ளே புரட்டிய எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அந்த எழுத்தாளரின் பெயர் "துயில்பவன்" என்றிருந்தது. அட அதுதான் என்னுடைய புனைப்பெயர். கடவுளே! கிழக்குப்பதிப்பகத்தினர் என்னுடைய ப்ளாக்கில் இருந்த சிறுகதைகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளனர். என்னுடைய எழுத்துகளை மக்கள் இவ்வளவு ரசிக்கின்றனரா? நம்பவே முடியாமல் அந்த புத்தகத்தினை திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டேன்.

"மிஸ்டர் துயில்பவன்.. இப்ப சந்தோசம்தானே! நீங்க பெரிய எழுத்தாளராக உருவேடுத்திட்டீங்க. இனிமே ஆள பிடிக்கமுடியாது. இனிமே நான் எழுதுற ப்ளாக்கெல்லாம் பார்க்கவே நேரம் இருக்காது" என்று ஒரு பரிச்சயமான ஒரு குரல் கேட்டது. அட இவன்தான் செல்வன். என்னுடைய இணைய இலக்கிய உலகத்திலேயே முதலாவது எதிரி. என்ன ஆச்சர்யம்! அவன் கடைக்காரர் நின்று கொண்டிருந்த இடத்திலே நின்று கொண்டிருந்தான். படுபாவி! என்னை அதிர்ந்து போக வைத்துவிட்டான். அவன் முகத்தில் இருந்த ஏளன சிரிப்பு எனது நெஞ்சுக்குள் ஏதோ செய்தது. அவன் கையில் துப்பாக்கி வேறு இருந்தது. "ஏய் இந்த புத்தகம் வித்து வாற பணத்தினை அனுபவிக்க நீ உயிரோடு இருக்கப்போவதில்லை. திரும்பி பார்! சொர்க்கம் தெரியும்" புன்னகை மாறாமல் கூறினான். திரும்பி பார்த்தபோதுதான் தெரிந்தது நான் இவ்வளவு நேரமும் ஒரு பலமாடி கட்டடத்தின் மொட்டை மாடியில் இருந்திருக்கிறேன் என்று. திரும்பிய எனது முதுகில் கத்தியை வைத்து அழுத்தினான். முள்ளந்தண்டில் ஏற்பட்ட கடுமையான வலியை தாங்க முடியாமல் கால் தடுமாறி கீழே விழத்தொடங்கினேன். நெஞ்சுக்குள் பயங்கர வலியெடுக்க விழுந்து கொண்டே இருந்தேன்.

அம்மாடி.. கடவுளே உனக்கு நன்றி.. இது ஒரு கனவுதான். இதயம் கடுமையாக துடித்து கொண்டிருந்தது. கனவிலிருந்து திடுக்கிட்டு விழித்திருக்கிறேன். சே! என்னுடைய உப்புசப்பில்லாத கதையை எவன்தான் பதிப்பிக்கபோறான். ஆனால் செல்வன் வேற கனவில வந்தானே.. அவனை பற்றி இரண்டு மூணு நாளா கடுமையா யோசிச்சிட்டிருந்தேன். அதான் வந்திருக்கான். ஆனா அவனை நேரில் பார்த்ததில்லை.. இன்டர்நெட்டில் அவனது ஒரு போட்டோ கூட கிடைக்காது. கனவில் வந்த செல்வனின் முகத்தினை ஞாபகப்படுத்த முயன்று தோற்றேன். என்னுடைய மனம் அவனுக்கு ஒரு உடல், துப்பாக்கி கொடுத்து கனவிலே உலாவவிட்டிருக்கு. ஆனால் ஞாபகத்துக்கு மட்டும் வரமாட்டேங்குது. நெஞ்சில் சின்ன வலி இன்னும் இருந்தது. அதிகாலைவேளையில்தான் மாரடைப்பு வரும் என்பார்கள். கொஞ்ச நேரத்திலேயே எல்லாவற்றையும் மறந்து ஆழ்ந்த நித்திரைக்கு திரும்பினேன்.

என்னுடைய செல்போனின் கடுமையான ரிங்டோன் சத்தம் காரணமாக எழுப்பப்பட்டேன். முகிலன்தான் எடுக்கிறான்.. பரதேசிப்பயல்! சனிக்கிழமை காலை நித்திரை கொள்ள விடாமல் தொந்தரவு தாறான்.

"என்னடா சொல்லு மச்சான்"..

"டேய் குட் மோர்னிங்டா" அவன் குரல் சோர்ந்து போயிருந்தது.

"ஆமா குட் மார்னிங்.. சொல்லி தொலைடா"

"வந்து.. " என்று இழுத்தான்.

"அப்படி என்னடா முக்கிய விஷயம். மத்தியானம் சந்திக்கலாம் இப்ப போனை வச்சு தொலைடா"

"செல்வனை நேற்று இரவில பார்த்தேண்டா.. கனவுல வந்தான்.. உன்னை பத்திக்கூட ஏதோ சொன்னான்.. இனிமே வாலாட்டின கொன்னுடுவேன்னு விரட்டினான்டா மச்சான்"

எனக்கு இப்போது நித்திரை முழுவதுமாக தெளிந்து விட்டது. இரவு எனக்கு வந்த கனவு கிட்டத்தட்ட அவனுக்கும் வந்திருக்கு.

"மச்சான்! அவன் உன்னிடம் என்னதான் சொன்னான்." ஆர்வமாக கேட்டேன்.

"சரியா ஞாபகம் இல்லை. கத்தியால் குத்தின மாதிரி நெஞ்செல்லாம் வலிச்சுது. நாலு மணிக்கு எழும்பின நான் பிறகு படுக்கவே முடியாம எழும்பிட்டேன். கொஞ்சம் பயமாயிருக்குடா. நெஞ்சு நோ இன்னும் சரியாகல. நாங்க கொஞ்ச காலம் சும்மா இருக்கிறது நல்லம்டா"

"மச்சான் கிரவுண்டுக்கு போய் இரண்டு ரவுண்டு ஓடிட்டு வா! நெஞ்சு வலி காணாம போயிடும்" அவனுக்கு ஆறுதல் சொல்லிட்டு போனை வச்சேன்.

கெட்ட கனவை மறந்து தூங்கி கொண்டிருந்த எனக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்துவிட்டான். நாங்கள் இருவரும் செல்வனுக்கு எதிராக செய்த சில காரியங்கள்தான் எங்களை கனவுகளில் இவ்வாறு அவஸ்தைப்படவைத்துள்ளது. ஆழ்மனதில் உள்ள குற்றஉணர்ச்சியின் வடிகாலாக இந்த கனவுகள் வந்திருக்குமோ? முகிலனுக்கும் இதே கனவு வந்துதே. ஒரே விதமான நெஞ்சு வலி வேறு. ஒல்லியாக இருக்கிற எனக்கு மாரடைப்பு வராது என்றாலும் வேறு எதாவது பிரச்சனை வருமோ தெரியலை.

திருச்செல்வன் ஒரு பிரபலமான தமிழ் ப்ளாக்கர். "திருவின் பக்கங்கள்" என்று ப்ளாக் வைத்திருக்கிறான். நல்லா கதை, செய்திகள், அரசியல் எல்லாம் எழுதுவான். அவன் ஒரு போஸ்ட் பண்ணினால் முப்பது நிமிடங்களுக்குள் இருபது பேர் பின்னூட்டமிட ரெடியா இருப்பான்கள். அவனை பார்த்தாலே பொறாமையாக இருக்கும். நான் "யோகா" பற்றி ஒரு பதிவு போட்டால் இரண்டு நாட்களுக்கு ஒரு ஈ கூட மொய்க்காது. இப்படியே இரண்டு நாள். .. .. .. அட.. அதையும் மீறி ஒருத்தன் பின்னூட்டமிட்டிருக்கிறான் என்று பார்த்தால், வேறு யார் முகிலன்தான், "சூப்பரான பயனுள்ள பதிவு மச்சி" என்று ஆளில்லாத கடையில் டீ ஆத்துவான். இது போதாது என்று "மச்சி ஒரு சூப்பர் பதிவு போட்டிருக்கேன் போய் பாருடா" என்பான். போய் பார்த்தால் Transformers போன்ற சப்பை படங்களின் விமர்சனம் எழுதி கொல்லுவான். அந்த படத்தினை பார்ப்பதைவிட இவன் விமர்சனத்தினை வாசிப்பது பெரிய கொடுமையாக இருந்தது. போதாகுறைக்கு எதாவது பின்னூட்டமிட்டு அவன் வளர்ச்சிக்கு வேறு உதவ வேண்டும்.

"மச்சான்! பிரபலமா இருக்கிற ப்ளாக்குகளில் ஏடாகூடமாக எதாவது பின்னூட்டமிட்டு எங்கள் புதிய போஸ்டின் லிங்கை கொடுத்து விட்டா.. ஈசல்கள் போல எங்கட ப்ளாக்குக்கு பலரை வரவழைக்கலாம்" என்று முகிலன்தான் சொன்னான். குறிப்பிட்ட ஒரு சில பிரபலமான ப்ளாக்குகளில் வேலையை தொடங்கினோம். அதில் செல்வனின் ப்ளாக்கும் ஒன்று. அவனுக்கு எங்களது கடுமையான எதிர்மறையான கருத்து கோபத்தினை வரவைத்தது. தொடக்கத்தில் எங்களுடைய சில பின்னூட்டங்களை அகற்றினான். எங்கள் ப்ளாக்கினை மேம்படுத்துவதைவிட அவனை எதிர்ப்பதிலேயே எங்கள் நாளாந்த கடமையானது.

இப்படித்தான் போன கிழமை பெரிய தாக்குதல் முயற்சியாக அவனது blogger அக்கௌன்டின் பாஸ்வோர்டினை கண்டுபிடிக்க முயன்றேன். ஒருநாள் முழுக்க எங்கெல்லாமோ கூகிள் செய்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. மறுநாள் காலை ஈமெயிலை பார்த்தபோதுதான் ஒரு புதிரான ஒரு ஈமெயில் இருந்தது. "நேற்று நீங்கள் ஒரு பாஸ்வோர்டினை தேடினீர்களே! எங்களுக்கு உதவினால் நாங்கள் உங்களுக்கு அதனை கண்டு பிடித்து தருவோம்" என்ற ரீதியில் ஒரு ஈமெயில் வந்திருந்தது. அவர்களது லிங்கை கிளிக் செய்த போது சில கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. பொதுவாக என்னை பற்றிய கேள்விகள்தான். எனக்கு பிடித்த நிறம்.. உணவு.. அப்படி பத்து பதினைந்து கேள்விகள் இருந்தன. பிறகு சில சம்பவங்கள் விவரிக்கப்பட்டு அச்சம்பவங்களில் நான் இருந்தால் எடுக்கபோகும் முடிவுகள் பற்றி கேட்கப்பட்டிருந்தன. எல்லாமே நான் இதுவரை கேள்விப்பட்டிராத மனம் சார்ந்த, வித்தியாசமான, உயிரை பாதுகாத்துகொள்வது சம்பந்தமான சம்பவங்கள். ஒருவாறாக கேள்விகள் முடிந்த பின்னர். செல்வனின் பாஸ்வோர்ட் என்று சொல்லி ஏதோ இருபத்தைந்து எழுத்துகளாலான பாஸ்வோர்ட் கிடைத்தது. மிக நீளமான பாஸ்வோர்ட் அதுதான் என்னால் எவ்வோளவோ முயன்றும் முன்பு முடியவில்லை போலும்.

நானும் முகிலனும் அந்த பாஸ்வோர்டின் மூலம் அவனது ப்ளாக்கில் நுழைந்து சேட்டைகள் புரிய ஆரம்பித்தோம். சில பழைய ப்ளாக்கின் சில முக்கியமான பகுதிகளை அகற்றினோம். படங்களை அழித்தோம். ஒரு சில முக்கிய போஸ்டுகளின் பின்னூட்டங்களை அழித்தோம். செல்வன் ஒரு சில சக பதிவர்களை எதிர்த்து பின்னூட்டங்கள் இடுவது போன்று மாயையை உருவாக்கினோம். சில முக்கிய பின்னூட்டமிடும் நபர்களை block செய்து செல்வன் மேலே கோபத்தினை ஏற்படச்செய்தோம். ஆனால் கடந்த ஒரு சில நாட்களாக அவனிடமிருந்து ஒரு புதிய பதிவுமில்லை. அப்படி இருக்கும்போதுதான் இன்று அதிகாலை அந்த பயங்கர கனவு.

இது நடந்து ஒரு சில நாட்கள் சும்மா இருந்தோம்.. எங்கள் கனவுகளும் சுமாராகவே இருந்தன. ஆகக்கூடுதல் அதிர்ச்சியான கனவாக என்னை அலுவலகத்தில் இருந்து கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார்கள். அது நிஜத்தில் நடந்தாலும் எந்த அதிர்ச்சியும் இருக்கப்போவதில்லை. நானும் முகிலனும் சினிமா போனோம். கிரிக்கெட் விளையாடினோம். செல்வன் பற்றி ஒரு வார்த்தை பேசிக்கொள்ளவில்லை. முகிலன்தான் மறுபடியும் தொடங்கினான்

"மச்சான்! அவன் எப்படிடா எங்க ரெண்டு பேர் கனவிலையும் ஒரே இரவில் வந்தான்".

"தெரியலைடா மச்சான்.. ஆனா எங்களை எதோ ஒரு விஷயத்துக்கு பலிகடாவாக பயன்படுத்துவதாக எனக்கு தோன்றுகிறது. நான் அந்த பாஸ்வோர்டினை எடுப்பதற்காக அளித்த பதில்கள் என்னுடைய மனநிலையை பற்றி அறிய பயன்படுத்தபட்டிருக்கலாம். அதன்மூலமாக எங்கள் கனவுகளை கட்டுபடுத்தியிருக்கலாம்"

"அதை வைச்சு உன்னை பற்றி தெரிந்திருக்கலாம்.. என்னை பற்றி தெரிய அவனுகளுக்கு வாய்ப்பில்லையே. என் கனவிலும் வந்தானே" என்றான்.

"அது வந்து மச்சான். நீதான் என் பெஸ்ட் பிரன்ட் என்று குறிப்பிட்டேன். உன் குணவியல்புகள் பற்றிய இரண்டு மூன்று கேள்விகள் இருந்ததாக ஞாபகம் வருது மச்சி"

"டேய் மச்சான்.. என்னடா ரொம்ப சீரியஸ் ஆகிற.. இதை போய் வேற எவன்ட்டயும் சொல்லாதே.. பைத்தியகார ஆஸ்பத்திரியை சேர்த்து விட்டிடுவான்கள். இன்னிக்கு இரவு நான் அவன் அக்கௌன்ட்டுக்கு நுழைந்து அவன் போஸ்ட் மொத்தத்தையும் நாசம் பண்றேன். நான் கொடுக்கிற பின்னூட்டத்திலே ஒரு பயல் இவனுடைய ப்ளாக்கினை பார்க்க வர மாட்டான்"

"முகிலன் என்னடா! இந்த சின்ன விஷயத்துக்கு இப்படி டென்ஷன் ஆகிற.. இந்த விஷயத்தினை அப்படியே மறந்துடு. அந்த திருச்செல்வனின் ப்ளாக் பக்கமே போக வேண்டாம்.."

அவரவர் வீட்டுக்கு திரும்பினோம். போகும்போது முகிலன் சாதாரணமாகத்தான் இருந்தான். ஆனால் எனக்கு இப்போதே நெஞ்சு வலி சிறிதாக ஆரம்பித்தது. உண்மையிலேயே வலிக்குதா? இல்லை நான்தான் கற்பனை செய்கிறேனா? என்றுகூட கண்டுபிடிக்கமுடியவில்லை.

இரவு பத்து மணியானது.. இதயத்துடிப்பு அதிகரித்தது. உடல் குளிர்ந்தது. பாவிப்பயல் முகிலன். எதாவது செய்து விடுவானோ என்ற பதைபதைப்பு மனதை என்னவோ செய்தது. இரவில் அவன் போன் செய்து எதாவது சொல்வானோ என்ற பயத்திலேயே, என் போனை switch off செய்தேன். இப்படியே போனால் சும்மாவே மாரடைப்பு வந்து விடும் போலிருந்தது. தயாராக இருந்த தூக்க மாத்திரைகள் இரண்டை உள்ளே தள்ளினேன். எப்போது நித்திரையிலாழ்ந்தேன் என்று தெரியாது. திடீரென்று எழுந்தேன். அறை கொஞ்சம் மாறியிருந்தது. சே! அம்மா நேற்றுத்தான் மாற்றி அடுக்கி இருக்கிறாள். கனவுதானோ என்று பயந்து விட்டேன். இதென்ன அறை வழமைக்கு மாறாக ஒளிர்கிறது. ம்.. ம்.. கனவுதான் காண்கிறேன்.. ஆனால் கனவு இல்லை என்று என்னை நம்ப வைக்க ஏதோ ஒரு சக்தி முயற்சிக்கிறது. போன் ரிங்டோன் ஒலித்தது. நான் switch off செய்த போன் இப்போது ஒலிக்கிறது. நிச்சயம் கனவுதான்.. மனதிற்குள் தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டேன். முகிலன்தான் call பண்ணுறான். எடுப்பதா வேண்டாமா என்று தெரியவில்லை. எடுத்து விட்டேன் "மச்சான் உன்ட ரூமுக்கு வெளியே இருக்கிறேன். திறடா கதவை.". எங்கள் வீட்டின் முன் கதவை யார் திறந்திருப்பார்களோ என்று யோசிக்காமல் திறந்தேன். இது கனவுதானே. யாரும் திறந்திருக்க மாட்டார்கள். அவனை என்னுடைய ரூமுக்கு எனது மனதே கூட்டி வந்திருக்கும்.

"ஹாய் மச்சான்!" என்று குறும்பான புன்னகையுடன் வாசலில் நின்றான். கறுப்பு கண்ணாடி அணிந்திருந்தான். வழமையை விட ஒல்லியாக இருப்பதாகப்பட்டது. நாய் சங்கிலி மாதிரி கழுத்தில் ஏதோ தொங்கியது.

"டேய் இதென்னடா கோலம்" என்று கத்தினேன். "இல்லடா மச்சான்! செல்வன் உன்னை பார்க்கணும் என்றான். அதான் கூட்டிவந்தேன். மச்சான் ஒண்ணு தெரியுமாடா! இவனும் எங்கட ப்ளாக் வாசிப்பனாம்.". அதிர்ந்து போனேன்.

செல்வன் உள்ளே வந்தான். போன முறை கனவில் பார்த்த மாதிரிதான் இருக்கிறான். கையில் கத்தி இருந்தது. கொஞ்ச ரத்ததுளிகளும் காய்ந்திருந்தன. "வணக்கம் துயில்பவன் சார்! பார்த்து நாளாச்சு. எப்படி சுகமா?" என்றான். பேச்சில் இருந்த புன்னகை முகத்தில் இல்லை. எவ்வாறு அந்த இரத்ததுளிகள் வந்தன என்று யோசித்தேன். அடக்கடவுளே! முகிலனின் கையிலிருந்து கொஞ்ச ரத்தம் வந்தது. அவன் அதை பொருட்படுத்தியதாக தெரியவில்லை. "டேய் உன்ட கையில ரத்தம்டா"

"என்ன துயில்பவன்! இதுக்கு போய் பயந்தா எப்படி.. முகிலன் நீ சேட்டை கழற்றி காட்டுடா மச்சான்" என்றான் செல்வன்.

உத்தரவு பெற்ற ரோபோ போல் அவன் மேல் சேட்டையை கழற்ற, உடல் முழுவதும் ஏதோ எழுதப்படிருந்தது. அதுவும் கத்தியால் கீறி எழுதி இருக்கிறான். "அடப்பாவி அவன் உடம்பு முழுக்க ரத்தம்டா" என்று கத்தினேன்.

"என்னோட ப்ளாக்கை நீங்கள் கைப்பற்றியதால், வேறு வழியில்லாமல் இவன் உடம்பில் எழுத வேண்டியதாயிற்று" செல்வன் குரூரமாக புன்னகைத்தான்.

முகிலன் அசைவற்று நின்று கொண்டிருந்தான். செல்வன் அவன் நெஞ்சில் அழுத்தமாக கீறி உள்ளிருக்கும் ஏதோ ஒரு உறுப்பை வெளியே எடுத்தான். "இதயம் துடிக்கிறத்தை நேர்ல பாரு" என்று என் மேல் அதனை வீசினான். என் இதயத்திலே கடுமையான வலி. அசைய முடியவில்லை.

நான் என்னுடைய போனை தேடினேன். போலீசுக்கு என்ன நம்பரோ! ஆம்புலன்சுக்கு போன் பண்ண வேண்டும். உடலேல்லாம் வியர்க்கிறது. கை நோவேடுக்கிறது. நிச்சயம் மாரடைப்புத்தான்.

"என்ன துயில்பவன்! உங்களுக்கு ஒரு சாய்ஸ் தாரேன். துப்பாக்கியா! கத்தியா! இல்லை பதிமூன்றாம் மாடியிலுள்ள உங்கள் வீட்டிலிருந்து குதிக்க போறீங்களா" நாராசமாக சிரித்துக்கொண்டு என்னை நெருங்கினான்.

"இல்லை.. இல்லை.. என்னை கொல்லாதே" என்று கத்தினேன். என்னுடைய வீடு இருப்பது நாலாம் மாடியில், இவன் பதிமூன்றாம் மாடி என்கிறான். என்னை பயமுறுத்த சொல்கிறானோ! நான் வெளியே குதித்தாலும் கால்தான் உடையும் தப்பி விடலாம். இல்லை.. இல்லை.. இது கனவு. அதனால்தான் நானே வீடு இருக்கும் மாடி பற்றிய குழப்பம் வருது. கனவில் என்னை சாகடிக்க இவனால் முடியாது.

"செல்வன்! நீ என்ன வேணும்னாலும் செய்.. இது கனவு.. கனவில் என்னை கொல்ல உன்னால் முடியாது"

அதைகேட்டு அவன் அதிர்ந்து போனான். இம்முறை அவன் பின்வாங்கினான். இம்முறை அவன் முகத்தில் வியப்பு இருந்தது. இது நிச்சயம் கனவுதான். எனது நம்பிக்கை என்னை காப்பாற்றி விட்டது. அவன் துப்பாக்கி இப்போது என் கையில் வந்து விட்டது. என் கனவை நான் விரும்பியவாறு மாற்றியமைக்க முடிகிறது.

"என்னை சுட்டு விடாதே! இது ஒரு கனவுதான்.. முகிலனை நான் கொல்லவில்லை. அவனுக்கு பலவீனமான இதயம்" காலில் விழுந்தான். இது கனவுதானே, உன்னை சுட்டாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை. டிட்.. டிட்.. சைலேன்சர் துப்பாக்கி போலும்.. அவன் தலையிலிருந்து இரத்தம் வழிந்தது. கீழே விழுந்தான்.

இப்போது எழுந்து விட்டேன். இது நிஜம்தான் என்னுடைய அறை. அதே இடத்தில் எல்லா பொருட்களும் இருக்குது. ஆனால்.. ஆனால்.. கடவுளே கனவில் யாரையோ கொன்று விட்டேன். உடலெல்லாம் வியர்த்திருந்தது. நெஞ்சு வலி குறைந்திருந்தது. மணி காலை ஏழு மணியாகியிருந்தது. அவசர.. அவசரமாக போனை ஓன் செய்து முகிலனுக்கு போன் செய்தேன். முகிலன் நீ உயிருடன் இருக்கிறாயா? கடவுளே இது நிஜமாகவே கனவாக இருக்க வேண்டும். அவன் செத்திருக்கக்கூடாது.. "மச்சான் டேய்.. போனை எடுடா.. என்னால் தாங்க முடியாது".. கத்திகொண்டே தொடர்ச்சியாக முயற்சித்தேன். எத்தனை முறை போன் செய்தேனோ தெரியாது. போனை யாருமே எடுக்கவில்லை. அவனது வீட்டு போனுக்கு போன் செய்தால் உண்மை தெரியும். இல்லை வேண்டாம்.. எந்தவித பிரயோசனமும் இல்லை.. அவனுக்கு பலவீனமான இதயம்.

1999ம் வருடம் லயன் காமிக்ஸில் "கனவே கொல்லாதே" என்ற தலைப்பில் Dick Tracyயின் கதை வந்தது. அதிலுள்ள ஐடியாவை சுட்டு இந்த கதையை எழுதியுள்ளேன்.