Sunday, December 23, 2012

தீட்டப்பட்ட புன்னகைக்கு பின்னால்... V for Vendetta


V for Vendetta படத்தை நண்பர் ஒருவரின் கடுமையான சிபாரிசு காரணமாக பார்த்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன். இரும்புக்கரம் கொண்டு மக்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயலும் அரசாங்கத்துக்கு எதிராக முகமூடி அணிந்த ஒருவன் புரட்சி செய்கிறான் என்பதை காட்டியிருப்பார்கள். என்னதான் வழமையான உப்புமா கதை மாதிரியாக இருந்தாலும் வழமையாக பயணிக்கும் பாதைகளில் அல்லாமல் வெவ்வேறான பாதைகளில் கதை பயணிக்கும். குறிப்பாக படத்தின் கதாநாயகன் V, அதில் வரும் பெண்ணை ஒரு முழுமையான போராளியாக மாற்ற எடுக்கும் நடவடிக்கைகள்தான் படத்தின் உயிர்நாடி. படத்தின் திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் மூலமாக எதிர்கால இங்கிலாந்து இப்படித்தான் இருக்கப்போகிறது என்று காட்டுகிறார்கள்.

படத்தில் வரும் கதாநாயகன் V ஒருமுறையும்தானும் படத்தில் தனது முகமூடியை விலக்கவில்லை. V என்கிற ஒற்றை எழுத்துத்தான் அவனுடைய பெயர். அரசாங்க சித்ரவதை முகாமில் இவன் தங்கியிருந்த அறையின் ரோமன் இலக்கம் ஐந்து (V). சித்ரவதைகூடம் தீக்கு இரையாகும்போது அங்கிருந்து தப்பிய ஒரே கைதி V மட்டும்தான். அப்போதுதான் தான் மீண்டும் ஒருமுறை பிறந்து விட்டதாக எண்ணி பழைய பெயரை விடுத்து புதுபெயரான V என்ற பெயரை சூடி கொள்கிறான். 17 ஆம் நூற்றாண்டு காலப்பகுதிகளில் இங்கிலாந்து அரசனுக்கு எதிராக போராடி மறைந்த போராளியை போன்றதொரு முகமூடியை அணிந்து கொள்வதன்மூலமாக தனது நிலைப்பாட்டை இங்கிலாந்து அரசாங்கத்துக்கு வெளிப்படுத்துகிறான். அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை கொல்வதன்மூலம் அவர்களுக்கு பெரிய தாக்கத்தினை உண்டு பண்ணி மக்களின் கண்களை திறக்கிறான். இதில் ஈவி என்றதொரு கதியற்ற பெண்ணை காப்பாற்றுகிறான் V. அவளையும் ஒரு போராளியாக மாற்றுகிறான். இப்படி போகும் கதையில் சின்ன சின்ன சுவாரசியமான சம்பவங்களை கோர்த்து படமாக்கியிருக்கிறார்கள். குறிப்பாக ஈவிக்கு "Egg in the Basket"ஐ  சிரத்தையுடன் தயாரிக்கும் காட்சி அற்புதம். என்னைவிட அண்ணாவுக்கு அது மிகவும் பிடித்திருந்தது. அதில் காட்டுவதுபோல அவனும் செய்து சாப்பிடுடா என்று
வற்புறுத்தியது வேறுகதை.
V Egg in the Basket தயாரிக்கிறான்

இந்த படத்தின் மேலதிக விவரங்களை  Wikipediaஇல் தட்டிப்பார்க்கும்போது இதன் மூலம் ஒரு காமிக்ஸ் என்பது தெரியவந்தது. Alan Moore என்பவரின் கதைக்கு David Lloyd என்பவர் தனது சித்திரம்மூலமாக கொடுத்த உயிர்தான் இந்த V for Vendetta காமிக்ஸ். Alan Mooreஇன் masterpiece. ஒரு தலை சிறந்த காமிக்ஸ் காவியம் என்றெல்லாம் புகழ்ந்து தள்ளினார்கள். என்னதான் இது ஒரு ஐரோப்பிய காமிக்சாக அடையாளம் காணப்பட்டாலும் இதனை வாசிக்கவேண்டும் என்று தோன்றவில்லை. போதாக்குறைக்கு அமெரிக்கர்களும் இதனை புகழ்ந்தது ஒருவித கிலியை ஏற்படுத்தியது.

இது நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஓடிவிட்டது. ஏதாவது ஐரோப்பிய காமிக்ஸ்கள் கிடைக்குமா என்று ஒரு ஆங்கில புத்தகங்கள் விற்கும் கடைக்கு சென்று நோட்டமிட்டேன். எப்போதாவது உருப்படியான Lucky Luke புத்தங்கள் கிடைக்கும். ஆனால் Goscinny கதை எழுதிய அநேக புத்தகங்கள் வாங்கி முடித்தாகி விட்டது. ஆனாலும் Lucky Luke வாங்கவேண்டும் என்றே போதை உணர்வுடன் கடைக்கு சென்றிருந்தேன். ஐரோப்பிய காமிக்ஸ்கள் ஒன்று கூட இல்லை. ஆனாலும் அமெரிக்க காமிக்ஸ்கள் நிறைய அடுக்கப்பட்டிருந்தன. அந்த காமிக்ஸ்கள் 2000, 3000, 4000 ரூபா என்று போடப்பட்டிருந்தன. அதில் எல்லாமே Super Hero கதைகள். அதில் இருக்கக்கூடிய கதைகளை பற்றி கேட்கவே வேணாம். ஒரு வரி கதைக்கு பெரிது பெரிதாக படங்கள் வரைந்து நூறு பக்கங்களை தேற்றி விடுவார்கள். Batman கதைகளை தேடிப்பார்த்து சலித்தேன். அப்போதுதான் V for Vendetta காமிக்சை பார்த்தேன். விலை 2300ரூபா என்று போட்டிருந்தது. பொலித்தீன் உரையிடப்பட்டிருந்ததால், உள்ளே திறந்து பார்க்கமுடியவில்லை. வழமை போல ஒரேயொரு பிரதி மட்டுமே இருந்தது. வாங்குவோமா இல்லையா என்று கடுமையாக யோசித்துவிட்டு பொருளாதார நிலைகளை மனக்கண்ணில் வந்து போக வாங்காமலே வீட்டை நோக்கி நடந்தேன். நீயெல்லாம் ஒரு காமிக்ஸ் ரசிகனா என்று ஒருபக்க மனசாட்சி காறி துப்பியது. ஆனால் மற்ற மனசாட்சி "குடும்பக்கஷ்டம் தெரிஞ்ச நல்ல பிள்ளை" என்று அம்மா சொல்வதைப்போலவே சொல்லி பாராட்டியது

இது நடந்து இரு வாரமாக Internetஇல் நான் google செய்த வார்த்தைகளில் "V for Vendetta" முன்னிடம் வகித்தது. கொடுக்கப்பட்ட sample படங்கள் போதுமான நம்பிக்கையை ஏற்படுத்தியது. சரி ஒருமுறை வாங்கி பார்த்து விடுவோமே! என்று தீர்மானத்துடன் ஒரு நல்ல நாளில் அலுவலக வேலையை முடித்துக்கொண்டு கடையை நோக்கி நடந்தேன். நல்லவேளையாக இருந்த ஒரு புத்தகத்தையும் ஒருவரும் வாங்கவில்லை. அதனை வாங்கிக்கொண்டு ஒருவித மனநிம்மதியுடன் Busஇல் பின்சீட்டில் ஏறி ஒரு ஆர்வத்தில் பொலீத்தீன் உறையை விலக்கி படங்களை பார்த்தேன். கொஞ்சம் மொத்தமான Newspaper தாள் போன்றொதொரு தாளில் அச்சிட்டிருந்தார்கள். பல வண்ணங்களில் படங்கள் இருந்தாலும் ஒருவித dullஆன வர்ணங்களை பயன்படுத்தியிருந்தார்கள். நமது தமிழ் காமிக்ஸ்களே தரமான தாளில் கண்ணை பறிக்கும் வர்ணத்தில் வரத்தொடங்கியிருக்கும்போது இப்படி ஒரு காமிக்ஸை 2300ரூபா கொடுத்து வாங்கினேனே என்று மனம் வருந்தினேன். ஆனால் இந்த ஏமாற்றம் தொடர்ந்ததா?

2300ரூபா கொடுத்துவிட்டோமே என்பதற்காகவே புத்தகத்தை வாசிக்கத்தொடங்கினேன். படத்தில் வந்த அதே கதைதான் ஆனால் வாசிக்க வாசிக்க காமிக்சிலிருந்து என்ன என்ன விசயங்களை அவர்களால் படங்களுக்கு எடுத்துச்செல்ல முடியாமல் போனது என்பதை உணரக்கூடியதாக இருந்தது. இக்கதைகள் தொடக்ககாலங்களில் கருப்பு வெள்ளையில் மட்டுமே வெளிவந்ததால் புதிதாக வர்ணங்களை தீட்டி மறுபதிப்பித்திருக்கிறார்கள். முதலில் பார்க்க ஒரு dullஆக இருந்தாலும் Originalஆக வந்த கறுப்பு வெள்ளை சித்திரங்களை கொஞ்சமேனும் கெடுக்காதவாறு அருமையாக வர்ணப்படுத்தியிருந்தது தெரிந்தது. V எப்போதுமே அணிந்திருக்கும் முகமூடி, ஒரு புன்னகைக்கும் போர்வீரனுடையது. இதனால் கோபமானாலும் V புன்னகைப்பான். துப்பாக்கியால் சுடப்பட்டு இரத்தம் வழியும் நேரத்திலும் அந்த புன்னகை மாறப்போவதில்லை. இது வாசிப்பவர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கிறது. கதையில் வரும் நிகழ்வுகளுக்கு ஏற்றவாறு முகமூடியில் இருக்கும் புன்னகையை ஓவியர் சரிவரப்பயன்படுத்தியிருப்பார். David Lloydஇன்
ஓவியங்கள் இங்கிலாந்தின் இருள் நிறைந்த தெருக்களை கண்முன்னே கொண்டுவருகிறது.

ஓவியங்கள் ஒருபுறமிருக்க Alan Mooreஇன் வசனங்கள் Britishதனமான ஆங்கிலத்தில் காட்சிகளுக்கு பொருந்துகின்றன. V ஒருவிதமான நாடக பாணியிலான வசனத்தில் பேசுவது சுவாரசியம். குறிப்பாக அவன் நீதிதேவதை சிலை முன்னர் பேசும் காட்சிகள் அருமை. நீதிதேவதைக்கும் சேர்த்து தானே பேசி அவளுடன் உரையாடுவது போன்ற அவன் பேசும் வசனங்கள் அருமை. வசனங்களுக்காகவே இன்னொருமுறை வாசிக்கலாம். ஆனாலும் பின்னணி இசையில் இளையராஜா, காட்சிகளின் தேவைக்கேற்றவாறு மௌனிப்பது
போல, பொருத்தமான இடங்களில் வசனங்களற்ற படங்களே கதையை கொண்டு செல்கின்றன. ஈவியை இன்னொரு போராளியாக உருவாகும் காட்சிகள் அருமை. காமிக்ஸ்இல் இந்த காட்சியில் இருக்கும் அழுத்தம் படத்தில் இல்லை என்றே எனக்குப்பட்டது.


இதனை லயன்-முத்துவில் வெளியிட்டால் அருமையாக இருக்கும் என்று நினைக்கிறேன். தமிழில் இவற்றுக்கான வசனங்கள் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இப்படித்தான் சமீபத்தில் Frank Millerஇன் Dark Knight returns புத்தகத்தை வாங்கியிருக்கிறேன். ஓவியங்கள் கொஞ்சம் கிலியை ஏற்படுத்துகின்றன. ஆனாலும் நல்ல review கொடுத்திருக்கிறார்கள். இனித்தான் வாசிக்க வேண்டும்.

5 comments:

  1. சமீபத்தில் தான் இந்த புத்தகத்தினை படித்து முடித்தேன். பிரிட்டிஷ் காமிக்ஸ்,வசனங்கள் நமக்கு ஏற்கனவே ஃப்ளீட்வே நிறுவன வெளியீடுகளால் பரிச்சயம் என்பதாலும், நீய்ல் காமன் வாசகன் என்பதாலும் இந்த புத்தகத்தினை ரசித்து படிக்க முடிந்தது.

    வசனங்களுக்காகவே மறுபையும் ஒரு முறை படிக்க வைத்த இதழ் இது.

    //இப்படித்தான் சமீபத்தில் Frank Millerஇன் Dark Knight returns புத்தகத்தை வாங்கியிருக்கிறேன். ஓவியங்கள் கொஞ்சம் கிலியை ஏற்படுத்துகின்றன. ஆனாலும் நல்ல review கொடுத்திருக்கிறார்கள். இனித்தான் வாசிக்க வேண்டும்.//

    சமீபத்தில் தான் அதனை இயக்குனர் ஒருவரிடமிருந்து "லவட்டிக் கொண்டு" வந்து படித்து முடித்தேன். படத்தை பற்றிய பிம்பம் மனதில் இல்லாமல் படிக்கும் பட்சத்தில் அது ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்தினை தரும்.

    //இதனை லயன்-முத்துவில் வெளியிட்டால் அருமையாக இருக்கும் என்று நினைக்கிறேன். தமிழில் இவற்றுக்கான வசனங்கள் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.//

    நன்றாக இருக்கும்தான். ஆனால் வெகு சில பிரதிகளே அச்சிடப்படும் தமிழ் காமிக்ஸ் உலகில் இதற்கான ராயல்டி செலவு கட்டுபடியாகுமா என்பதனை எடிட்டரே கணிக்க இயலும்.

    //ஈவியை இன்னொரு போராளியாக உருவாகும் காட்சிகள் அருமை. காமிக்ஸ்இல் இந்த காட்சியில் இருக்கும் அழுத்தம் படத்தில் இல்லை என்றே எனக்குப்பட்டது.//

    அதே அதே, சபாபதே.

    ReplyDelete
  2. ஹாய் விஷ்வா
    உங்கள் கருத்துகளுக்கு நன்றி

    //
    நன்றாக இருக்கும்தான். ஆனால் வெகு சில பிரதிகளே அச்சிடப்படும் தமிழ் காமிக்ஸ் உலகில் இதற்கான ராயல்டி செலவு கட்டுபடியாகுமா என்பதனை எடிட்டரே கணிக்க இயலும்.
    //

    உண்மைதான்.. உலகபுகழ் பெற்ற கதை என்பதால் கன்னா பின்னா என்று ராயல்டி இருக்கபோவது நிஜம்தான்.. கலரில் என்றால் அதுக்கு வேறு கூட இருக்கலாம்..

    Dark Knight returns பற்றி நீங்கள் பதிவிடுங்களேன்..

    ReplyDelete
  3. //Dark Knight returns பற்றி நீங்கள் பதிவிடுங்களேன்.//

    Immediate ஆக முடியாது,இருந்தாலும் அடுத்த இரண்டு வாரங்களில் முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  4. வீ உங்களுக்கு பிடித்தால் நீங்கள் ஆலண் மூரின் வாட்ச்மென் கண்டிப்பாக படிக்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. Yes.. I read the Watchmen as well. It gave me different experience. Great drawing as well

      Delete