Monday, May 23, 2016

அமெரிக்க காமிக்ஸ்கள் : சில Batman கதைகள்

சமீபகாலமாக அமெரிக்கத்தனமான Batman கதைகளை ஆங்கிலத்தில் வாசிக்க முயற்சிக்கிறேன். இன்டர்நெட்டில் Batman கதைகளை பற்றி பலர் சிலாகிக்கிறார்கள். Batman மீதான அவர்களின் அபிமானம் அளப்பெரியது. அவ்வாறான விமர்சனங்கள் என்னை Batman காமிக்ஸ்களை வாசிக்கத்தூண்டின. எனக்கு "டிம் பேர்டன்" மற்றும் "கிறிஸ்டோபர் நோலன்" உருவாக்கிய Batman படங்கள் மிகவும் பிடிக்கும். எந்தவித அதிசய சக்திகளும் இல்லாத Batman உடல்பலம் மற்றும் தொழில்நுட்ப ஆற்றல் மூலமாக நீதிக்காக போராடுவது சுவாரஸ்யமானது. குறிப்பாக Dark knight திரைப்படத்தில் ஜோக்கருடன் நடைபெறும் சண்டையில் Batman அடிபட்டு மயங்கிவிழும் காட்சி புதுவிதமாக இருந்தது. அதுவே Batman படங்களை எனக்கு தேடிபார்க்க தூண்டியது. ஆனால் காமிக்ஸ் என்பது வினோதமான வஸ்து. அதிலும் அமெரிக்க காமிக்ஸ்கள் வெவ்வேறான காரணங்களுக்காக ரசிக்கப்படுகின்றன. சில நேரங்களில் கன்னாபின்னாவென்று படங்களை கொண்டுள்ள காமிக்ஸ்களும் உலகின் தலைசிறந்த காமிக்ஸ் பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன. கதைசொல்லப்படும் உத்திகள், வித்தியாசமான காட்சியமைப்புகள், படங்கள் மூலம் கதையை கொண்டுசெல்லும் நவீன உத்திகளை கொண்ட காமிக்ஸ்கள் கொண்டாடப்படுகின்றன. இங்கு படங்கள் கதைகள் அநேக நேரத்தில் இரண்டாம் பட்சம்தான். எனக்கு இவற்றை புரிந்து கொள்ள நீண்ட காலமெடுத்தது. நான் இதுவரை காலமும் வாசித்தது ஐரோப்பிய காமிக்ஸ்கள்தான். அவை ஆழமான கதையம்சமும் நேர்த்தியான சித்திர தரமும் கொண்டவை. அமெரிக்க காமிக்ஸ்களை ரசிப்பதற்கு வித்தியாசமான ரசனை நிச்சயம் தேவை. சமீபத்தில் சில அமெரிக்க காமிக்ஸ்களை வாங்கினேன். ஆனால் அவற்றை வாசிக்கும் முன்பதாக மனதை தயார்படுத்தினேன். அப்படி நான் வாசித்த மூன்று Batman காமிக்ஸ்களில் நான் ரசித்த விஷயங்களை பட்டியலிடுகிறேன்.




1. Dark knight returns


55 வயது Batman சில வருட ஓய்வுக்கு பின்னராக மறுபடியும் கொதம் நகரத்தில் உள்ள சமூக விரோதிகளுடன் மீண்டும் போராடுகிறான். அதன்போது இடம்பெறும் நிகழ்வுகள் காரணமாக அவனுக்கு சமூகவிரோதி என்ற பட்டம் கிடைக்கிறது. Batman மீதான மக்களின் செல்வாக்கினால் பொறாமையில் இருக்கும் அமெரிக்க அரசாங்கம் Supermanனிடம் Batmanஐ அழிக்க உதவுமாறு கோரிக்கை விடுக்கிறது. கடைசியாக இருவருக்கும் இடையே தூள் பறக்கும் ஒற்றைக்கு ஒற்றை சண்டை. கடைசியாக எதிர்பாராத சுவாரஸ்யமான ஒரு முடிவு.

வழமைக்கு மாறான வித்தியாசமான கதை. கதாசிரியர் பிராங் மில்லர் கதை சொல்லும் விதத்தில் பல புதுமைகளை முயற்சித்திருப்பார். ஒரு நியூஸ் சனலில் போகும் செய்திகள், பேட்டிகள் மூலமாக கதை சம்பவத்துக்கு சம்பவம் நகரும். நியூஸ் சனல் அந்நேரத்தில் உள்ள மக்களின் மனநிலையை தெளிவாக படம்பிடித்துக்காட்டும். வலிமையான வசனங்கள் இக்கதையின் உயிர்நாடி. வித்தியாசமான காட்சி அமைப்புக்கு உதாரணமாக கதையில் ஒரு கட்டத்தில் காட்சி இருளில் ஆரம்பிக்கும். நான்கு கட்டங்களில் தொடர்ச்சியாக இருள். யாரோ இருவர் கதைத்துக்கொண்டிருப்பார்கள்.
இருள் விலகும்போது வில்லனின் கையாள் ஒருவனை Batman பலமாடி கட்டடத்துக்கு மேலாக பிடித்து தொங்கபோட்டவாறு இருப்பான். வில்லனின் கண்களை Batman பொத்திவைத்திருந்ததால்தான் காட்சியின் தொடக்கத்தில் இருள் வந்தது என்பதை அறியும்போது காட்சி வடிவமைப்பை பாராட்டத்தோன்றுகிறது. இப்படியாக வெவ்வேறான புத்திசாலித்தனமான காட்சி அமைப்புகள் இருக்கின்றன. கதையை வாசிக்கும்போது Batmanஇன் மனநிலையில் வாசிப்பவர்களையும் கொண்டுசெல்கிறார் கதாசிரியர். Batman மனதில் யோசிப்பதை வசனங்கள் வெளிப்படுத்தும்போது நாங்களும் அதே மனநிலையில் பயணிக்கிறோம்.

கடைசியாக Batman உம் Supermanனும் மோதிக்கொள்ளும் காட்சிகளில் வரும் லாஜிக்குகள் சிறப்பாக இருக்கும். பலம் என்ற விசயத்தில் Batman, Supermanக்கு ஈடாகவிட்டாலும் தனது தொழில்நுட்பதிறனால் சாதிப்பதுவும் ஓரளவு யதார்த்தமான சுவாரசியம். ஆனால் இக்கதையின் படங்களை கன்னாபின்னாவென்று பிராங் மில்லர் வரைந்திருப்பார். சில நேரங்களில் நேர்த்தியில்லாத விகாரமான சித்திரங்கள் வாசிப்பை தடைசெய்கின்றன. சில படங்கள் பரவாயில்லை ரகம். இவ்வளவு காலமும் நேர்த்தியான சித்திரத்தரம்கொண்ட ஐரோப்பிய காமிக்ஸ்களை  வாசித்துவிட்டு இப்படியொரு சித்திரதரம் கொண்ட காமிக்ஸை வாசிப்பது வினோதமான அனுபவம்தான். இந்த புத்தகத்தை மூன்று வருடங்களுக்கு முன்னர் வாங்கியிருந்தாலும், சமீபத்தில்தான் வாசிக்க மனம் வந்தது. அதற்கு காரணம் அந்த சித்திரதரம்தான். ஆனால் வாசித்துமுடித்தபின்னர் அந்த புத்தகத்தில் ரசிப்பதற்கு வேறு நிறைய விஷயங்கள் இருப்பதை மறுக்கமுடியாது. ஆனால் நல்ல மனஅமைதி உள்ள மழைநாளில் வாசிப்பதற்கு மட்டுமே இவ்வாறான கதைகளை recommend செய்வேன் :).

சமீபத்தில் Coursera வழங்கும் காமிக்ஸ் தொடர்பான ஒரு Courseஇல் இந்த புத்தகம் ஒரு reference ஆக உள்ளது. காமிக்ஸில் உள்ள புதுமை உத்திகளை
விளங்கப்படுத்த இந்த காமிக்ஸ் உதாரணமாக உள்ளது.
https://www.coursera.org/course/comics


2. Batman: Year one

1980 காலப்பகுதியில் Batman மீதான மோகம் குறைந்து போவதை DC Comics நிறுவனத்தினர் உணர்ந்தனர். அதனை மேம்படுத்தும் முயற்சியாக Batmanக்கு புதிய அவதாரம் கொடுக்க முடிவுசெய்தனர். அதற்கான பணியை Frank Millerரிடம் ஏற்றுக்கொண்டார். "ப்ரூஸ் வேய்ன்" எவ்வாறு Batman ஆக மாறினான் என்பதையும், இளமையான ஜேம்ஸ் கோர்டன் கொதம் போலிஸில் இணைந்த ஆரம்ப நாட்களில் இடம்பெறும் சம்பவங்கள் என்று களைகட்டும் கதை. இது Batman எவ்வாறு உருவானான் என்பது பற்றிய கதை அல்ல. Batmanஇன் ஆரம்ப நாட்களில் அவன் எதிர்கொள்ளும் சவால்கள் செய்யும் தவறுகளை நூதனமாக ஆராயும் கதை. Batman தோன்றும் கட்டங்கள் கதையின் பாதிதான். மற்றைய அரைவாசிக்கதை ஜேம்ஸ் கோர்டனுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும். ஜேம்ஸ் கோர்டன் கொதம் நகரின் போலிஸ் பொறுப்பினை ஏற்றுக்கொண்டவுடன் எதிர்கொள்ளும் சவால்கள், போலிஸ்காரனாக மணவாழ்க்கையில் சந்திக்கும் நெருக்கடிகள், என்று கொஞ்சம் வித்தியாசமான தளத்தில் செல்லும்கதை. இது கூடுதலாக பெரியோர்களை மட்டுமே கவரக்கூடிய கதை. இந்த இரு கதைகளும் ஒரே நேரத்தில் நகர்த்திச்செல்லப்பட்டு ஒரு புள்ளியில் இணைக்கப்படுகின்றன.

இரு கதைகளுக்கும் வெவ்வேறான வர்ண சேர்க்கை வித்தியாசமான எழுத்துருக்களை பாவித்து வித்தியாசம் காட்டியிருப்பார்கள். ஓவியங்கள் David Mazzucchelli. நான் இதுவரை பார்த்திராத ஓவியங்கள். இவரது கோடுகள் மொத்தமானவை. ஆனால் வர்ணங்கள் மூலம் நிழல்ப்படுத்துகின்றார். கதை அநேக நேரங்களில் கொதம் நகரின் இருள் படிந்த மூலைகளிலேயே நகர்கின்றது. மொத்தமான கோடுகள் இருள் படிந்த காட்சிகளை இட்டுநிரப்ப அழகாக பொருந்துகின்றன. வர்ணசேர்க்கையின் போது பயன்படுத்தப்பட்ட நிறங்கள் புதுமையானவை. கதாசிரியர் Frank Miller தனது சகல கதைசொல்லும் திறமைகளை புத்திசாலித்தனமாக கையாண்ட இதழ். ஜேம்ஸ் கோர்டன் வரும் காட்சிகள் என்னை மிகவும் கவர்ந்தன. ஏனென்றால் அவ்வளவு யதார்த்தம். Batman சந்திக்கும் சவால்கள் அழகாக பின்னப்பட்டிருக்கும். இக்கதையில் Catwomanக்கு அறிமுகம் கிடைக்கிறது. வாசகனாக என்னால் குறை கண்டுபிடிக்கவே முடியாத இதழ். குறைந்தளவு வசனங்கள்தான் என்றாலும் வலிமைமிக்க வசனங்கள். இந்த புத்தகத்தில் 96 பக்கங்களே இருந்தன. ஆனால் இதனை வாசித்துமுடிக்க வேண்டுமென்றே நிறைய நாட்களை எடுத்துக்கொண்டேன். இந்த புத்தகம் வாசித்துமுடிந்து விட்டதை எண்ணி பிறகு வருத்தப்பட்டது வேறு கதை.






3. Long Halloween


இளவயது Batmanஇன் தொடக்ககாலத்தில் நடக்கும் கதை. முகம் தெரியாத ஒரு வில்லன் ஒவ்வொரு விடுமுறை நாளிலும் ஒரு கொலை செய்கிறான். அமெரிக்காவின் ஒவ்வொரு விடுமுறை நாளிலும் ஒவ்வொரு கொலை அரங்கேறுகின்றது. கொதம் நகரிலுள்ள பெரிய தாதாவின் எதிரிகள் மற்றும் அவனது நண்பர்கள் தொடர்ச்சியாக கொலை செய்யப்படுகின்றனர். முகம் தெரியாத யாரோ ஒருவன்தான் கொலையாளி. அவனுக்கு Holiday என்று பத்திரிகைகள் பெயர் சூட்டுகின்றன. இக்கொலைகளுக்கான காரணத்தை Batman மற்றும் கமிஷனர் ஜேம்ஸ் கோர்டன் ஆகியோர் துப்பறிகின்றனர். இதே நேரத்தில் Batman கதைகளில் வரும் வழமையான வில்லன்கள் வெவ்வேறான தருணங்களில் Batmanஉடன் மோதுகிறார்கள். இது வழமையான Batman பாணி கதையில்லை. வழமையான கதைகளில் Batman பைத்தியகார வில்லன்களுடன் கண்டமேனிக்கு மோதுவார். ஆனால் இதுவோ வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர்.  இக்கதை வெளியானபோது இந்த வித்தியாசமான பாணி Batman கதை ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. இக்கதையின் கதாசிரியர் "ஜெப் லோப்" Batman கதைகளில் வழமையாக வலம்வரும் வில்லன் கதாப்பாத்திரங்களை புத்திசாலித்தனமாக இக்கதையில் உள்நுழைத்திருப்பார். அந்த வில்லன் கதாப்பத்திரங்களின் வித்தியாசமான குணாதிசயங்களை அழகாக பயன்படுத்தியிருப்பார். குறிப்பாக டூ-பேஸ், பொய்சன் ஐவி போன்ற பாத்திரங்கள் கதையின் போக்கை திசைதிருப்ப உதவுகின்றன. இக்கதையில் Batman தோன்றும் காட்சியமைப்புகள் கொஞ்சம் குறைவுதான். ஆனாலும் ஒரு நல்ல சூப்பர் ஹீரோ த்ரில்லரை வாசித்த திருப்தியை தருகின்றது. கதை முழுக்க தாதாக்கள் வலம்வருகின்றனர். இந்த தாதாக்களின் உலகத்தை Dark knight திரைப்படத்திலும் பயன்படுத்தியிருப்பார்கள்.

என்னை பொறுத்தவரை கதை ஓகே ரகம்தான். ஆனால் சித்திரங்கள் ஆச்சர்யப்படுத்தும் ரகம். சித்திரங்கள் நேர்த்தியானவையோ உயிரோட்டமானவையோ அல்ல. சில நேரங்களில் ஓவியர் தனது பத்து வயது மகனிடம் தூரிகையை கொடுத்து வரையச்சொன்னாரா என்று சந்தேகம் வருகின்றது. ஆனால் அவை வரையப்பட்ட கோணங்கள் அருமையாக இருக்கும். வினோதமான கோணங்களில் ஓவியர் "டிம் சேல்" வரைந்து தள்ளியிருப்பார். ஒவ்வொரு காட்சிக்குமான வண்ணகலவை கதையின் போக்குக்கு ஏற்ப மாறுபடுகிறது. ஒரு கட்டத்தின்பின்னர் ஓவியங்களில் உள்ள நெளிவுகோடுகளை ரசிக்க பழகிகொண்டேன். வாசகர்களின் மனநிலையை கதையின் போக்குடன் ஒன்றச்செய்வதில் வண்ணக்கலவை முக்கிய பங்கு வகிக்கிறது. சித்திரங்களுக்காகவே மீண்டும் ஒருமுறை வாசிக்கவேண்டும்.



10 comments:

  1. செம. செம. மிகவும் அருமையாக விவரித்து உள்ளீர்கள். இதுவரையில் இக்கதைகளை படிக்காதவர்களுக்கு ஆர்வமூட்டி, படிக்கத்தூண்டும் வகையிலும், கதையைப் பற்றி சொல்லி, அதே நேரத்தில் எவ்விதமான ஸ்பாய்லர்களும் இல்லாமல் நீங்கள் எழுதியிருக்கும் பாங்கு, ஒரு பதிவை எப்படி செம்மையாக, நேர்த்தியாக வடிவமைக்க வேண்டும் என்பதற்கு ஒரு முன்மாதிரி.

    வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  2. அருமையான விமர்சனம் Dark knight returns& Batman: Year one ம் animation movie ஆக வந்துள்ளது

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி.. அந்த animation படங்களை பார்க்க வேண்டும். Dark knight return படத்தை எப்படி எடுத்திருப்பார்கள் என்று பார்க்க ஆவல்

      Delete
  3. அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பொடியன்.. உங்களுக்கு எந்த Batman காமிக்ஸ் பிடிக்கும்?

      Delete
    2. நான் 'நீல் அடம்ஸ்' இன் பற்-மான் ஒவியங்களின் வெறித்தனமான ரசிகன். அவர் வரைந்த கதைகள் என்றால் அது என்ன மொக்கையாக (பெரும்பாலும் அப்படி இருப்பதில்லை என நம்புகிறேன்!) இருந்தாலும் கட்டம் கட்டமாக பார்த்துப் பரவசப்பட்டு படிப்பதுண்டு. அந்த ஓவிய வெறியையும் தாண்டி இரசிக்கவைத்தது - Long Halloween!! நீங்கள் குறிப்பிட்டதுபோல கதை என்னவோ ஓகே ரகம்தான். ஆனால், வழமையான பற்-மான் கதைகளிலிருந்து கொஞ்சம் வேறுபட்டுத் தோன்றியது. சித்திரங்களோ - யப்ப்ப்பா... ஒவ்வொரு ஃபிரேமும் திரைப்படத்துக்காக வரையப்பட்ட ஸ்டோரி போர்டாகத்தான் இருக்கவேண்டும். நீண்ட நாட்களுக்கு முன் படித்த கதையை ஞாபகப்படுத்தியமைக்கு விசேடமாக நன்றி.

      Delete
    3. பல தடவை கேட்க நினைத்து மறந்துபோன ஒரு விடயம். இந்த இடத்தில் மறந்துபோகாதிருக்க உடனடியானவே கேட்டுவிடுகிறேன்.

      "அவ்வாறான கடிதங்கள்தான் எங்களது இரண்டாம் இதழுக்கான அத்திவாரம். இரண்டாம் இதழுக்காக என்ன செய்தோம் என்பதை அடுத்த பதிவில் காண்க :) (??)"
      என்று சொல்லி முடித்த "ஐஸ்பெர்க் காமிக்ஸ்
      இலங்கையில் ஒரு தமிழ் காமிக்ஸ்" பதிவை விரைந்து பதிந்து என்போன்று காத்திருப்போருக்கு விமோசனம் தாருங்களேன்?

      Delete
    4. நினைவுபடுத்தியதற்கும் ஊக்கப்படுத்துவதற்கும் நன்றி.. இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் எழுத முயற்சிக்கிறேன்.. அண்ணாவின் வீட்டுக்கு போய் கொஞ்சம் பழங்கதை பேசினால், அடுத்த பதிவுக்கான சுவாரஸ்ய சம்பவங்கள் அகப்படலாம் :).. அதன்பின்னர் எழுதிவிடுகிறேன்

      Delete