Saturday, May 7, 2011

இலங்கையில் பழைய புத்தக கடையில் காமிக்ஸ் வாங்குவது எப்படி?

இலங்கையில் பழைய புத்தக கடையில் காமிக்ஸ் வாங்குவது எப்படி? இவ்வாறு தலைப்பில் ஏதாவது புத்தகம் இருந்தால் ஆயிரம் ரூபாய் கொடுத்தாவது வாங்க தயார். இலங்கையில் காமிக்ஸ் வாங்குவது என்பது குதிரை கொம்பான விஷயம். இதனால் என்னுடைய சிறு வயதில் வெளிவந்த முக்கியமான பல காமிக்ஸ் இதழ்களை சேகரிக்க முடியமால் போய் விட்டது ஒரு சோகமான நினைவுகள். சிறு வயதில் காமிக்ஸ் கிடைக்கும் இடங்களில் நான் வாழவில்லை, அப்பா வேலை விஷயமாக கொழும்பு சென்றால் மறக்காமல் கடையில் உள்ள ராணி/முத்து/லயன் எதாவது வங்கி வருவார். அவருக்கு வருடத்தில் கொழும்பு செல்ல ஓரிரு முறைகளே வாய்ப்பு கிடைத்ததால், எனக்கு வருடத்தில் ஒரு சில புத்தகங்களே கிடைத்தன. எப்போது கனவு கண்டாலும், காமிக்ஸ் புத்தகங்களை பத்து, இருபது என்று நம்ப முடியாத எண்ணிக்கைகளில் வாங்குவது போன்ற கனவுகளே வரும். இவ்வாறான நம்பமுடியாத தன்மை காரணமாக, கனவுகள் தொடங்கிய கொஞ்ச நேரங்களிலேயே எனக்கு கனவுதான் காண்கிறேன் என்ற உணர்வு வந்து விடும்.

நான் பத்து வருடங்களுக்கு முன்பு கொழும்புக்கு வசிக்க வந்தபோது ஒரு காமிக்ஸ் வசிக்கும் நண்பனை சந்தித்தேன். அவனுடைய ரசனையும் என்னுடைய ரசனையும் பெரிதும் ஒத்திருந்தது. ஆனால் அவனுக்கு சினிமா அதிகமாக பிடித்திருந்தது. மச்சான்! "Guns of Navarone" படம் பாருங்கடா! சூப்பர் படம் அப்படி இப்படி என்று அந்த பழைய படத்திற்கு free advertisement கொடுப்பான். இப்போது அவனும் ஒரு படத்துக்கு டைரக்டராகி தனது முதல் படமான STAR 67இனை கனடாவில் இயக்கி கொண்டிருக்கிறான். அவன் தனக்குதெரிந்த ஒரு பழைய புத்தக கடையினை எனக்கு காட்டினான். நானும் அவனும் பயங்கர ஆர்வத்துடன் நுழைந்து தேடுதல் வேட்டையை தொடங்கினோம். புத்தக கடைக்காரர் இருபது-முப்பது புத்தகங்கள் அடங்கிய புத்தகக்கட்டை என்னிடம் தந்தார். எனக்கோ கையில் உள்ள பணத்துக்கு தக்கவாறு புத்தங்களை தெரிவு செய்ய வேண்டிய இக்கட்டான நிலை. இருந்த நூறு ரூபாய் பணத்திற்கு ஏற்றவாறு மூன்று புத்தகங்களை தெரிவு செய்தேன். டெக்ஸ் வில்லரின் "கழுகு வேட்டை" சகிதம் மூன்று புத்தகங்களை வாங்கி கொண்டு, உலகத்தினை வென்ற மகிழ்ச்சியுடன் வீட்டை நோக்கி நடந்தோம். வாங்க முடியாமல் போன ஒரு சில புத்தகங்களின் அட்டைப்படங்கள் மனதினில் நிழலாடின. இவ்வாறுதான் அந்த புத்தக கடையுடன் எனது தொடர்பு ஆரம்பமானது.

காமிக்ஸ் வெளியீடுகள் இந்தியாவில் குறைந்துவிட, பழைய புத்தக கடையிலும் காமிக்ஸ் புத்தகங்கள் குறைய ஆரம்பித்தன. நானும் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் போன்று விடாமுயற்சியாக அந்த கடைக்கு சென்று கிடைத்த ஓரிரு புத்தகங்களையாவது வாங்கி கொண்டேன். எப்போதாவது பெரிய அளவில் அதிர்ஷ்டம் அடித்து முக்கியமான புத்தகங்களை வாங்கும் சந்தர்ப்பம் எப்போதாவது வரும். நம்ம லக்கி லுக்கின் "மேடையில் ஒரு மன்மதன்" "கோச் வண்டியின் கதை" போன்ற புத்தகங்களை கூட அங்கு வாங்க முடிந்தது. அங்கு சென்று "எதாவது காமிக்ஸ் புதிதாக இருக்கிறதா என்று விசாரித்தால், அந்த சிங்கள கடைக்காரர் வாய் மற்றும் கையினால் ஒருவிதமாக சைகையினால் காமிக்ஸ் இல்ல தம்பி என்று சலிப்புடன் சொல்லுவார். பாவம் அவரும் எத்தனை நாள்தான் ஒரே பதிலை சொல்லுவார். பழைய புத்தக கடையில் புத்தகம் வாங்க விரும்பும் பாவப்பட்ட காமிக்ஸ் ரசிகர்களுக்கான tips வாழ்க்கையில் முன்னேற பல அறிஞர்கள் காலகாலமாக சொல்லும் tipsஉடன் நூறு சதவீதம் ஒத்து போகும்.

1) விடாமுயற்சி
மாதத்திற்கு ஒரு முறையாவது புத்தக கடைக்கு விசிட் அடியுங்கள். எதாவது உங்களது கனவு புத்தகம் எங்கிருந்தாவது மூடப்பட்ட லைப்ரரி இருந்து புத்தக கடைக்கு வந்திருக்கலாம். லயன் 1987 தீபாவளி மலர் போன்ற கனவு புத்தகங்கள் கூட உங்களை ஒரு நன்னாளில் வந்தடைய வாய்ப்புள்ளது.

2) தன்னம்பிக்கை
இன்று எனக்கு எதாவது நல்ல புத்தகம் கிடைக்கும் என்ற நம்பிக்கை புத்தக கடையினுள் காலடி எடுத்து வைக்க முன் இருப்பது மிக அவசியம். இல்லாவிட்டால்
கடைக்காரர் பார்க்கும் வெறுப்பான பார்வையே உங்களை வெளியேற்றிவிடும் அபாயம் இருக்கிறது.

3) மற்றவர்கள் சொல்லும் ஏளன பேச்சினை காதில் வாங்காது காரியமே கண்ணாய் இருத்தல்
இருபது-இருபத்தைந்து வயதுகளில் அம்மா "ஐந்து கழுதை வயசாகி விட்டது இன்னும் ஏனடா காமிக்ஸை வாசிக்கிறாய்" என்று திட்ட வாய்ப்புள்ளது. முப்பது வயதுகளில் காதலியோ மனைவியோ அதை விட மோசமாக திட்ட வாய்ப்புள்ளது. பிறகு காமிக்ஸ் பிடிக்காத உங்கள் குழந்தைகளே உங்களை "என்ன அப்பா! சின்ன புள்ளைத்தனமா நடந்துக்கிற" என்று அவமானப்படுத்த வாய்ப்புள்ளது. இதனை எல்லாம் காதில் போட்டு கொள்ளாம பழைய புத்தக கடைக்கு விசிட் அடிப்பது உத்தமமான காமிக்ஸ் ரசிகனுக்கு அழகு.

4) பொறுமை
இது இல்லாவிட்டால் நீங்கள் எப்போதோ காமிக்ஸ் ரசிகன் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருப்பீர்கள். ஆகவே இதனை கடைப்பிடித்து பழைய புத்தக கடையிலிருந்து மேலும் நல்ல புத்தகங்களை வாங்குவீராகுக :).

இந்த பதிவினை இவ்வளவு பொறுமையாக எழுத என்னை ஊக்குவித்த புத்தகத்தினை பற்றி நிச்சயம் குறிப்பிட்டாக வேண்டும் :). நேற்றுத்தான் என்னுடைய சிறுவயது ஞாபகங்களை மீட்டும் "இருண்ட உலகின் இரும்பு மனிதர்கள்" இதழை வாங்கினேன். இந்த இதழ் அப்படி ஒன்றும் முக்கியமான இதழாக இல்லாவிட்டலும் எனக்கு அப்பா வாங்கி தந்த முதலாவது ராணி காமிக்ஸ் இதழாக இருக்கிறது.

இதன் கதை என்னை சிறுவயதில் இருந்த விண்வெளி fantasyக்கு நினைவுகளை எடுத்து செல்ல உதவியது. இதன் நாயகன் வெலிங்டன் ஒரு பார்வையற்ற விண்வெளி வீரன். அவன் தன நண்பர்களை கொன்ற மற்றும் அவனையே வேட்டையாடத்துடிக்கும் டிராவன் என்ற மகாசக்தி பொருந்தியவனிடம் போராடும் ஒரு வித்தியாசமான விண்வெளி சாகசம். இதன் கதை பெரும்பாலும் வேற்று கிரகங்களிலே இடம்பெறும். லேசர் துப்பாக்கி, மாறுபட்ட வடிவுள்ள விண்கலங்கள், கதை முழுவதும் வரும் அஷ்டகோணலான ஜந்துகள் மனதை கவரும். இதன்கதையில் இறுதியில் வேலிங்டனும், டிராவனும் வித்தியாசமான காந்த சக்திகளை பயன்படுத்தி சண்டைபோடுவது ஹைலைட்டான விஷயம்.

இதுதான் இலங்கையில் வசிக்கும் என்னுடைய நிலைமை :). இந்தியாவில் சற்று மேம்பட்ட நிலைமை இருக்கலாம். நான் இந்தியாவுக்கு வந்த ஒரு முறையிலேயே திருச்சியில் ஒரு சில பழைய புத்தக கடையினுள் ஏறி இரு பழைய புத்தகங்கள் வாங்க கூடியதாக இருந்து. இனி வரும் நாட்களில் எல்லோருக்கும் நல்ல காமிக்ஸ்கள் பழைய புத்தக கடையில் கிடைக்க வாழ்த்துகிறேன்.பின்குறிப்பு : என்னுடைய இந்த பதிவு, படங்கள் எதுவும் இல்லாது வறண்டு போய் இருந்தது. நான் இந்த பதிவினை இட்டு பத்து நிமிடங்களுக்குள், கிங் விஷ்வா அவர்கள் இந்த அற்புதமான ஸ்கேன்களை எனக்கு அனுப்பி வைத்தார். எனவே வழமை போலவே அந்த ஸ்கேன்களை சுட்டு உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் :). இந்த முதலிரண்டு பக்கங்களும் உங்களை நிச்சயமாக படிக்க தூண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. கிங் விஸ்வாவுக்கு என் இனிய நன்றிகள் உரித்தாகுக.

8 comments:

 1. உங்களுக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பியுள்ளேன். பார்க்கவும்.

  ReplyDelete
 2. உங்கள் ஸ்கேன்களுக்கு நன்றி விஷ்வா. அவற்றை பதிவில் இணைத்துள்ளேன்.

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. அந்த இனிமையான நாட்களை நினைக்கும் போது இப்பொழுதும் மனதிற்கு இனிமையாகவுள்ளது. விமல்! அப்பாவிற்கு காமிக்ஸ் படிக்கும் பழக்கம் இல்லை, ஏன் புத்தகம் படிக்கும் ஆர்வம் மிக மிகக் குறைவு. எவ்வாறு எங்களுக்கு காமிக்ஸை அறிமுகம் செய்தீர்கள் என்று கேட்க வேண்டும். அந் நாட்களில் எமக்கு காமிக்ஸ் கிடைத்திராவிடின் எமக்கு ஆர்வம் ஏற்பட்டிருக்குமா என்பது சந்தேகம் தான். நன்றி அப்பா. இனிமையான நினைவுகளை மீட்ட உதவிய விமலின் பதிவிற்கும் நன்றி! படங்கள் தந்துதவிய கிங் விஸ்வாவிற்கும் நன்றி! உங்கள் பதிவுகளையும் மிகவும் ரசிப்பேன். எப்படி விஸ்வா உங்களுக்கு இவற்றிற்கெல்லாம் நேரம் கிடைக்கின்றது? Congrats to you.

  ReplyDelete
 5. இந்த பதிவு எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. அதுவும் அந்த கனவு மேட்டர் அப்படியே உண்மை. கிடைக்க வழி இல்லாத காதலி கிடைப்பது போன்ற கனவு அது

  ReplyDelete
 6. உண்மை உண்மை உண்மையை தவிர வேறில்லை

  ReplyDelete
 7. இந்தியாவில் பழைய புத்தக கடைகளில் காமிக்ஸ் வாங்குவது எப்படி என்று ஒரு பதிவுயிடுங்களேன்!

  ReplyDelete