Friday, December 23, 2022

வெற்றியை தேடி + காமிக்ஸ் கோட்பாடுகள்

காமிக்ஸ் ஒன்றை தயாரிப்பது எனது நீண்டநாள் ஆசையாக இருக்கிறது . சிறுவயதுகளில் நரி ஒன்று விண்வெளிக்கு போனதாக கதை எழுதி படங்கள் வரைந்தேன். படங்கள் வரைவதற்கு நிறைய பொறுமை + திறமை தேவையிருப்பதாலும் சோம்பேறித்தனத்தினாலும்  காமிக்ஸ் தயாரிப்பதை நிரந்தரமாக நிறுத்திவிட்டேன். மேலும் வெகு சுமாராகவே படங்கள் வரைவேன். சமீபத்தில் கன்னா பின்னாவென்று வரைந்த கிராபிக் நாவல்கள் பார்த்தபோது மறுபடியும் பேராசை இந்த வந்தது. ஆனால் அழுத்தமான நல்ல கதை எழுதும் திறமை தேவைப்பட்டதால் மறுபடியும் ஆசையை அணைத்து விட்டேன். இயக்குனர் சிம்புதேவன்  ஆனந்த விகடனில் வேலை செய்தபோது தொடர் காமிக்ஸ் உருவாக்கினார். அப்போதே மிகவும் பிடித்த தொடர். இப்படி இவர் ஏன் தொடர்ந்து காமிக்ஸ் உருவாக்கவில்லை என்று எப்போதுமே யோசிப்பேன். அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஒரு வாரத்துக்குரிய 3-4 பக்கங்களை உருவாக்க பட்ட கஷ்டங்களை கேட்டபோது அவர் ஏன் காமிக்ஸ் உருவாக்கத்தை தொடரவில்லை என்பது தெளிவானது. வெளிநாடுகளில் ஒருவர் ஸ்கிரிப்ட் எழுத ஒருவர் பென்சில் ஸ்கெட்ச்சஸ் வரைய இன்னொருவர் background ஸ்கெட்ச்சஸ் வரைய வேறொருவர் வண்ணம் தீட்ட 10-15 பேர்கள் டீமாக உருவாக்கும் ஒன்றை தனியொருவர் செய்வதிலிருக்கும் பிரச்சனையை சிம்புதேவன் தெளிவாக விளக்கினார். 

உண்மையிலேயே காமிக்ஸ் வினோதமான மீடியம். அதற்கும்  கோட்பாடுகள் இருக்கிறது. "பொன்னியின் செல்வன்" படமாக வந்தபோது நாவலில் இருந்த சில சுவாரஸ்ய காட்சிகளை வெட்டினார்கள். ஒரு கதாபாத்திரத்தை இல்லாமல் செய்து விட்டு இன்னொரு கதாபாத்திரம் மூலம் short-circuit செய்தார்கள். வசனங்களை சுருக்கினார்கள். சினிமா கோட்பாட்டுக்குள் அடக்கவே இத்தனை மினக்கெடல்கள். அதுபோன்றே "பொன்னியின் செல்வன்"  காமிக்ஸ் ஆக மாற்றினாலும் சில வெட்டல்களும் நீட்டல்களுள் அவசியம். அதைப்பற்றி யோசித்தாலே நல்ல தலைவலிக்கு உத்தரவாதம்.  "பொன்னியின் செல்வனை" விட்டு விட்டு ஒரு சாதாரண காமிக்ஸ் எழுதுவதை எடுத்தாலே ஒரு பகீரத பிரயத்தனமான காரியம். படங்கள் வரைய திறமையும் பொறுமையும் வேண்டும். போதாக்குறைக்கு காமிக்ஸ் கோட்பாட்டுக்குள் கொண்டுவருவதே இமாலயம் ஏறும் காரியம்.
இப்படியான பகீரத பிரயத்தனமான காரியத்தை நண்பர் வினோபா இவ்வருடத்திலே மூன்று முறை  சாதித்திருக்கிறார். "வெற்றியை தேடி" கதை ஒரு வெஸ்டர்ன் cowboy கதை. இந்த கதையில்  வசனங்கள் குறைவு, ஆனால் உயிரோட்டமான படங்களே கதையை நகர்த்தி செல்கின்றன. கதாபாத்திரங்கள் உணர்வுகளை படங்கள் மூலமாக விளங்குகிறது. வழமையாக வரும் சூழ்நிலை விளக்க வசனங்கள் மிகவும் குறைவு. இதுவே காமிக்ஸ் வாசகர்களின் புத்திசாலித்தனத்துக்கான மரியாதை என்று நான் நினைக்கிறேன். 

சித்திரத்தரம் பற்றி நான் அவதானித்ததை கீழே பதிகிறேன். 

1. படங்கள் வரையப்பட்ட கோணங்கள் மிகவும் ஆச்சர்யம். ஒரு காட்சியில் தொடரும் ஒவ்வொரு  படங்களும் ஒவ்வொரு கோணத்தில் இருக்கிறது. சில angle எல்லாம் ஆச்சர்யத்தின் எல்லையை கடக்கிறது 

2. படங்கள் அழகாக நிழல்ப்படுத்தப்பட்டிருக்கின்றன. எனக்கு எப்போதுமே Black & White காமிக்ஸ் தான் மிகவும் பிடிக்கும். அதிலும் கதையில் வரும் ஒரு போட்டியின் போது குதிரைகள் மரநிழல்கள் ஊடாக போகும் காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

3. சித்திரத்தரத்தில் இருக்கும் உயிரோட்டம் அழகியலின் உச்சத்தை தொட்டு நிற்கிறது. இவ்வளவு சித்திரங்களையும் வரைய கணக்கிலடங்கா நேரம் எடுத்துக்கொண்டதாக சொன்னார். அதனாலேயே நிதானமாக ரசித்து வாசித்தேன்
 கதை மிகவும் எளிமையான புதுமையான கதை. தேவையில்லாத விஷயங்கள் பற்றியோ கதையோட்டத்துக்கு வெளியேயான காட்சி அமைப்புக்களோ இல்லை. 

காமிக்ஸ் கோட்பாடுகளை மிக அழகாக கடைபிடித்திருக்கிறது இந்த சித்திர நாவல். இதுவே வினோபாவின் கதைசொல்லலுக்கு கிடைத்த வெற்றி. சித்திர தரம் கதை சொல்லலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கிறது. 

இந்த புத்தகத்தை Rooney காமிக்ஸ் நிறுவனத்தினர் (Lonewolf publishers) அழகாக வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள்.


பின்குறிப்பு : வெற்றியை தேடி புத்தகம் வெளிவந்த போது 6 மாதங்களுக்கு முன்னர் வினோபாவை நேரில் சந்தித்தேன். அடுத்ததாக வகம் காமிக்ஸில் வெளிவர இருக்கும் AK 67 கதையின் ஓவியங்களை காட்டினார். மிகவும் அழகு. அந்த புத்தகம் வெளிவந்து விட்டதாம். அதனுடன் இன்னொரு cowboy கதையும் (செவ்விந்திய பூமி) வருகிறது. அதனை பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன்.  

Friday, May 22, 2020

ஒரு பட்டப்பெயர் படலம் !!

அரைநித்திரையில் ஆபீஸ் போய் சேர்ந்தேன். மணி அதிகாலை பத்தரை மணியிருக்கும். லிப்ட்டில் ஒருவரும் இருக்கவில்லை. ஒரு ஓரத்தில் சாய்ந்து கிடைத்த முப்பது செகண்டில் கண் அயர்ந்தேன். கன நேரமாக கதவு லிப்ட்டிலேயே போவது போன்றதொரு வினோத உணர்வாகவே இருந்தது. அந்த சில வினாடிகளுக்குள் கனவு ஓடியது. லிப்ட் திறந்தபோது வெளியே செல்வதற்காக பரபரத்தேன். ஷைலா உள்ளே வந்தாள். "நிக்கிற லிப்ட் ல என்ன செய்யிற" என்று ஆங்கிலத்தில் புன்முறுவலுடன் கேட்டாள். லிப்ட்டில் அவசர அவசரமாக ஏறிவிட்டு 30 செகண்ட் நித்திரைக்காக, போகவேண்டிய "ப்லோர்" எண்னை அழுத்தாமல் போய்விட்ட மடமையை எண்ணி வருந்தினேன். லிப்ட் அப்படியே நின்று கொண்டிந்திருக்கிறது. "என்ன உங்கட ப்ரொஜெக்ட்டில வேலை அதிகமோ. இப்படி தூங்கி வழியுறீங்க" என்று கேட்டபோது ஐந்தாம் மாடி வந்திருந்தது.

ஆபீஸ்சுக்கு நுழையும்போதே இதய துடிப்பு அதிகரித்தது. ப்ராஜெக்ட் மேனேஜர் "சமிந்த" புன்னகையுடன் அப்பாவியான நாலு Developer களுடன்  கதைத்து கொண்டிருந்தான். அவனை "சிரிக்கும் கொலைகாரன்" என்று சொல்வோம். மற்ற நேரங்களில் "உர்ர்" என்ற முகத்துடன் சீரியஸாக சுற்றி திரியும் அவன்  எங்களுக்கு வரும் ப்ராஜெக்ட் பிளானில் இல்லாத "திடீர்" வேலைகள் வந்தால் புன்னகையுடன் வந்து கதைத்து வேலையை தலையில் கட்டி விடுவான். அவன் தரும் வேலைகள் சில ஆபீஸ் முடியும் நேரத்தை கடந்து அடுத்த நாள் கதவை தட்டி விடும். அவனது இந்த புன்னகை திறமையால் சிலபல ப்ராஜெக்ட்கள் deadline க்கு முன்னராக முடிக்கப்பட்டன.

சோர்வாக உட்கார்ந்து ஈமெயில்களை நோட்டம் போட்டேன். தலையிடியான மூன்று ஈமெயில்கள் தவிர, உருப்படியாக ஒன்றுமே இருக்கவில்லை.  வேலைகளை உடனயாக முடித்து விடுமாறு அந்த  ஈமெயில்கள் எச்சரிக்கை செய்தன. அந்த ஈமெயில்களை பார்த்ததும் நித்திரை முழுவதுமாக கலைந்து தலைக்குள் இரைச்சல் ஏற்பட்டது. முந்தா நாள் யாழ்ப்பாண பஸ்ஸில் கேட்ட இரைச்சலான அனிருத்தின் பாட்டு வேறு மண்டைக்குள் ஓடியது. கலவரப்படும் மனதை சாந்தி செய்ய தாகசாந்தி செய்து கொள்ள முடிவெடுத்து லஞ்ச் ரூமுக்கு நடையை காட்டினேன். எங்கள் ஆபீஸில் எங்களுக்கான டீயை நாங்களே போட்டுக்கொள்ளவேண்டும். நாங்களும் டீ போடுகிறோம் பேர்வழி என்று தத்துபித்தென்று ஏதோ கலந்து குடிப்போம். அங்கே "செழியன்" டீ போன்ற ஒரு திரவத்தை உருவாக்கும் முக்கிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தான். பாதி கப் நிறைய பால்மா போட்டு கொஞ்சமாக சாயத்தை ஊற்றி அவன் உருவாக்கும் வெளிர்மஞ்சள் நிற திரவத்தை "ஸ்பெஷல் டீ" என்று செல்லமாக பெயர் வைப்பான். "டேய் மச்சான்! என்னடா வேலைக்கு வந்திட்டியா? மணி பத்தை தாண்டியிருக்குமே" என்று சத்தமாக கத்தினான்.

எங்கள் செக்சனில் நானும் செழியனும் மட்டுமே தமிழ், மற்றைய எல்லோரும் சிங்களவர்கள். ஆகவே நானும் அவனும் மட்டுமே தமிழில் கதைப்போம். எனக்கு சிங்களம் பஸ் கண்டக்டரிடம் காசு கொடுத்து மிச்ச காசு வேண்டுமளவுக்கு மட்டுமே தெரியும். ஆகவே மற்றவர்களுடன் இங்கிலீஷில் வெட்டி வெட்டி கதைப்பேன். நானும் செழியனும் வேலை இடத்திலேயே தமிழில் இஷ்டத்துக்கு கதைப்போம்.  எங்களை கொடுமைப்படுத்தும் ப்ராஜெக்ட் மேனேஜர்களை கேவலமாக கதைப்பதில் இன்பம் கண்டோம். அதில் முக்கால்வாசி கற்பனைதான். இப்படித்தான் ஒருமுறை சமிந்த பற்றி கேவலமாக கதைத்து எங்கள் மன வெறியை தீர்த்துக்கொண்டோம். செழியனுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த கவுசல்யா லியனகேவுக்கு கொஞ்சம் தமிழ் புரியும் என்பது எங்களுக்கு தெரிந்திருக்கவில்லை. சிறுவயதுகளில் யாழ்ப்பாணத்தில் அவள் சிலகாலம் வசித்தது எங்களுக்கு வினையாக வந்துதொலைத்தது. ஆனால் அவள் மருந்துக்கு கூட தமிழ் தெரியும் என்று சொல்லியிருக்கவில்லை. அவள் போய் சமிந்தவிடம் ஏதோ சொல்லிவைக்க எங்கள் தலைகள் உருட்டப்பட்டன. அவளுக்கு தெரிந்த சில  தமிழ் சொற்கள் மற்றும் பூதக்கண்ணாடி உதவியுடன் நாங்கள் பொழுதுபோக்காக பேசிய விஷயத்தை பெரியதாக சமிந்தவிடம் சொல்லியிருந்தாள். அவனிடம் ஏதோ சொல்லித்தப்பித்ததில் இதயம் தொண்டை வரை வந்திருந்தது. ஆனாலும் பலபேருக்கு எங்களை பற்றி தெரிந்து விட்டிருந்தது பெரிய அவமானமாக இருந்தது. யார் சிரித்தாலும் எங்களை பார்த்து சிரிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.

இந்த விஷயம் நடந்து 2-3 வாரமாக நாங்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. எங்கள் உரையாடல்களை மற்றவர்கள் உளவு பார்க்காமல் இருக்க நவீன பொறிமுறைகள் தேவைப்பட்டன. அதனை நடைமுறைப்படுத்த நிறைய சிந்திக்க வேண்டியிருந்தது. செழியன் "modern problems need modern solutions" என்ற சித்தாந்தத்தை தீவிரமாக follow செய்யும் ஆசாமி. இந்த பிரச்னைக்கு புது code-word சிஸ்டம் கண்டுபிடிக்கவேணும் என்றான். அவன் யோசனைப்படி, மற்றவர்களின் பெயர்களை நேரடியாக உபயோகிப்பதை தவிர்த்தோம். ஆகவே ஆபீஸில் இருக்கும் எல்லோருக்கும் பட்டப்பெயர்கள் வைத்தோம். தொடக்கமாக எங்களை சிரித்துக்கொண்டே வேலை வாங்கும் சமிந்தவுக்கு "சிரிக்கும் கொலைகாரன்" என்ற காரணப்பெயரை சூட்டினேன். ஆபீஸ்ஸுக்காக உயிரை கொடுத்து வேலை செய்யும்  எங்கள் மேலதிகாரியான நிவாஸ்ஸுக்கு "சாமியார்" என்று பட்டம் சூட்டினோம். நிவாஸ் தனது வாழ்க்கையே கம்பெனிக்காக அர்ப்பணித்திருந்தார். நிவாஸ் செய்யும் ஒவ்வொரு செயலுக்குமான code-wordம் ஒரு சாமியாரின் வழமையான செயற்பாடுகளை போன்றதாக இருக்கும். உதாரணமாக நிவாஸ் ஏற்பாடு செய்யும் மீட்டிங்குகளை "பிரசங்கம்" என்றழைத்தோம். நிவாஸ் எங்களுக்கு அடிக்கடி வாங்கித்தரும் treatகளை "பிரசாதம்" என்போம். அவர் கணக்கில்லாமல் செய்யும் அட்வைஸ்களை "உபதேசங்கள்" என்போம். சில பேர்களுக்கு பெயர் வைக்க நிறைய creativity தேவைப்பட்டது. creativity செழியனின் இரத்தத்திலே ஊறி இருந்தது. உதாரணமாக  எப்போதும் எங்களுக்கு வேலையை தந்து விட்டு ஆபிஸை சுற்றி ரவுண்ட் வரும் அதிரிபுதிரி ப்ராஜெக்ட் மேனேஜர் அனுராதாவுக்கு "சில்லு கட்டி சுத்தற பொண்ணு" என்று பெயர் சூட்டினான்.

இப்படியாக ஜாலியாக எங்கள் அரட்டையை எங்கள் காரணப்பெயர்கள் மூலம் தொடர்ந்தோம். ஆனாலும் இதனை முழுமையாக நடைமுறைப்படுத்தும்போது சில சிக்கல்கள் உருவாகின. ஒருமுறை செழியன் "அந்த ராக்கோழிப்பய resignation letter கொடுத்திட்டான்" என்றான்.  அப்போது கவுசல்யாவின் புருவங்கள் உயர்ந்ததை அவதானித்தேன். ஆஃபிஸில் உள்ள யாரோ ஒருவர் resign செய்யப்போவதை பற்றி கதைக்கிறோம் என்பது அவளுக்கு தெளிவாக தெரிந்திருக்கும். இது நடந்து மூன்று நாட்களுக்கு பின்னர் எனது மேனேஜர் சம்பந்தமில்லாத ஏதோ ஒரு விஷயத்தில் கண்டித்தார்.

இந்த விஷயம் நடந்த பின்னர் செழியன் முழுமையான code-word மூலமாக மட்டுமே கதைப்பான். resignation letter கொடுப்பதை "காதல் கடிதம் கொடுப்பது" என்று மாற்றியிருந்தோம். எனக்கே அவன் சிலசமயங்களில் என்ன கதைக்கிறான் என்பதை மனதில் decode செய்வதற்கே சில வினாடிகள் செலவாகின. இப்படியாக எங்களின் அலப்பறைகள் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக சென்றன.

திடீரென்று ஒருநாள் கௌசல்யாவின் இடம் மாற்றப்பட்டிருந்தது. ஆகவே செழியனுக்கு பக்கத்தில் உள்ள cubicle இல் புதிதாக ஒரு பெண் வந்திருந்தாள். பொட்டு போட்டிருக்கவில்லை.  வழமையான தமிழ் பெண்கள் போலல்லாது Modern dress இல் வந்திருந்தாள். "இவா சிங்கள பொண்ணுதாண்டா மச்சான். "  என்றான். நாங்களும் இஷ்டத்துக்கு code-wordஇல் கச்சேரி செய்தோம். இது நடந்து சில நாட்கள் கழிந்தபின்னர் நாள் காலை ஒரு அதிர்ச்சி செய்தியோடு செழியன் LunchRoom க்கு ஓடி வந்தான். "டேய் எனக்கு பக்கத்தில இருக்கிற பொண்ணு தமிழ் பொண்ணு போலிருக்கு. அநேக ஆக்கள் இவளோட இங்கிலிஷ்ல தான் கதைக்கினம். நீ சும்மா அவளோட பேச்சு குடுத்துப்பாரு" என்றான். செழியனுக்கு பெண்கள் என்றாலே வியர்த்து ஊத்தும், கை நடுக்கமெடுக்கும். ஆனால் எனக்கு கால் நடுக்கமெடுக்கும் அவ்வளவுதான். இதனால் அடுத்த செக்சனில் வேலை செய்யும் பச்சை தமிழனான "நிலூஷனை" கேட்பதாக முடிவெடுத்தோம்.

நிலூஷன் பெண்களோடு சர்வசாதாரணமாக கதைப்பான். பொக்கட் நாய் மாதிரி புஸ்புஸ் என்று தலைமுடி வளர்த்திருப்பான். மாதம் இருமுறை சலூன் ஏறி இறங்குவான். சலூன் போகும் முன்னர் இருக்கும் முடிகளின் அளவுக்கும் பின்னரான அளவுக்கும் பெரிய மாற்றமிருக்காது. அவனுக்கு சடையனார் சுவாமிகள் என்று பட்டப்பெயர் வைத்திருந்தோம். அவனை அணுகி இந்த பெண்ணை பற்றி கேட்டோம். "டேய் அது தமிழ் பொண்ணுடா நான் நேற்றே கதைச்சேன். உங்க ரெண்டு பேரை பத்தியும் கேவலமா சொன்னா. மத்தவங்களை பத்தி code-word ல எப்ப பார்த்தாலும் கதைக்கிறீர்களாம். அவா பெரிய Hacker ஆம். இன்னும் ரெண்டு நாள் கழிச்சு உங்கட code-word எல்லாத்தையும் decode பண்ணிடுவாளாம்" என்று பயங்கரமாக சிரித்தான். எங்களுக்கு தலை சுற்றுவது போலிருந்தது.

எங்கட மேனேஜர் சமிந்ததான் நாங்கள் இருவரும் பேசுவதை ஒட்டுக்கேட்பதற்காக எங்களுக்கு பக்கத்தில் ஒரு பெண் உளவாளியான தமிழ் பெண்ணை வருமாறு செய்திருப்பதாக செழியன் தீர்க்கமாக நம்பினான். எனக்கும் அது உண்மையாக இருக்குமோ என்று சந்தேகமாக இருந்தது. அந்த பொண்ணு தமிழ்தானா என்பதில் பெரிய சந்தேகமிருந்தது. நிறைய மேக்கப் போட்டு சுத்தும் தமிழ் பொண்ணுகளுக்கு மத்தியில் மூணு நாளா முகம் கழுவாத மாதிரி இருந்த இந்த பெண்ணை தமிழ் பெண் என்று என்னால் ஒத்துக்கொள்ளமுடியவில்லை. ஆனாலும் சரியாக தெரியவில்லை. அதன்பிறகு நானும் செழியனும் அவதானமாக இருப்போம். அந்த பொண்ணு lunch break க்கு போனபிறகு மாத்திரமே எங்கள் சம்பாஷணையை வைத்துக்கொண்டோம். இப்படியாக ஒரு மாதம் போனது.

சில மாதங்கள் கழித்து அந்த பெண்ணே நீண்டகாலமாக இழுத்துக்கொண்டிருந்த எங்கள் project க்கு வந்தாள். ஒருநாள் project விஷயமா ஏதோ கேட்க வந்தாள். முடிஞ்சு போகும் முன்னர் "அண்ணா! நீங்களும் செழியன் அண்ணாவும் ஜாலியா கதைக்கிறதை கேட்க நல்லாருக்கும். இப்பவெல்லாம் அவரோட கதைக்கிறது குறைவா இருக்கே. அதுசரி நீங்க எனக்கு என்ன பட்டப்பெயர் வச்சிருக்கிறீங்க" என்று கேட்டாள்.


செழியன் சொன்னது சரிதான் அவள் நிச்சயம் லேடி ஜேம்ஸ் பாண்ட் தான்.

பின்குறிப்பு : இம்மாதிரியான சம்பவம் உங்களுக்கே நடந்த மாதிரி இருந்தாலோ நீங்கள் பார்த்தமாதிரியாக இருந்தாலோ குழம்ப வேண்டாம். quarantine சமயத்தில் இவ்வாறான எண்ண கோளாறுகள் ஏற்படுவது சகஜம்தான் :). இது 100% கற்பனை என்று கூறிக்கொண்டு விடைபெறுகிறேன்.

Tuesday, April 21, 2020

Chinaman - ஒரு கிரிக்கெட் படலம்

ஷெஹான் கருணாதிலகவின் Chinaman புத்தகத்தை சமீபத்தில் வாசித்தேன். அநேக நேரங்களில் தடித்த புத்தகங்களை வாசிக்கமாட்டேன். சோம்பேறித்தனம்தான் அதற்கான முக்கிய காரணம். எனது சோம்பேறித்தனத்தையும் தாண்டி இப்புத்தகத்தை தெரிவு செய்வதற்கு சில காரணங்கள் இருந்தன.* இது முழுமையான கிரிக்கெட் சம்பந்தமான கதை. 
* ஒரு இலங்கை எழுத்தாளரால் எழுதப்பட்டது. இதுநாள்வரை சிங்கள எழுத்தாளர்களின் புத்தகங்கள் எதையுமே வாசிக்க வேண்டும் போல இருந்ததில்லை. இது இலங்கை அரசியல் பற்றி இல்லாமல் இருப்பதால் வாசிக்க வேண்டும் என்று யோசித்தேன்   
* இந்திய வாசகர்கள் பலர் சிலாகித்த கதை என்பதே ஆச்சர்யமாக இருந்தது 
* ஆனாலும் இலங்கையில் பெரும்பான்மையினரால் அவ்வளவாக கண்டுகொள்ளப்படாத நாவல். அது இன்னும் பெரிய ஆவலை உண்டாக்கியது.
* ஒரு இலங்கை எழுத்தாளரினால் எழுதப்பட்ட இந்த புத்தகத்துக்கு GoodReads இல் 4.2 ரேட்டிங் இருந்தது 
* போதாக்குறைக்கு இக்கதையின் நாயகன் "பிரதீப் மத்தியூ" தமிழ் தந்தைக்கும், சிங்கள தாய்க்கும் பிறந்தவன் இக்கதை குடித்து குடித்தே தன்னை அழித்துத்கொள்ளும் "கருணாசேன" என்கிற 64 வயதான விளையாட்டுத்துறை பத்திரிகையாளர் ஒருவரின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. இவரும் "ஆரி" எனப்படும் இவரது நண்பரும் சேர்ந்து "பிரதீப் மத்தியூ" என்கிற ஒரு முன்னாள் தேசிய கிரிக்கெட் விளையாட்டு வீரனை ஒரு முக்கிய காரணத்துக்காக தேடி அலைகிறார்கள். இந்த "பிரதீப் மத்தியூ" என்பவன் வினோதப்பிறவி. இவன் ஒரு அதிரிபுதிரியான variationகளை காட்டக்கூடிய ஒரு ஸ்பின்னர். Chinaman வகை பந்துவீச்சு முறைதான் இவனது பிரம்மாஸ்திரம். ஆனாலும் இவன் விளையாடிய 1980களில் இலங்கையில் அவன் அவ்வளவாக பிரபலமாகவில்லை. அவனைப்பற்றிய தகவல்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. இதனாலேயே அவனை தேடி அலையும் இந்த இரு  நண்பர்களுக்கும்  பல சிக்கல்கள் வருகின்றன. ஆனாலும் பிடிவாதக்காரரான "கருணாசேன" விடாப்பிடியாக பிரதீப்பை தேடி அலைகிறார். இந்த கதை நடக்கும் இடம் நான் தற்போது வசிக்கும் இடத்துக்கு அண்மையிலான "கல்கிசை", "சொய்சாபுர", "மொரட்டுவ" பகுதியிலே பெரும்பாலும் நடக்கிறது. பல வருடங்களாக "கருணாசேன" சந்திக்கும் வெவ்வேறான மனிதர்கள் மூலம் பிரதீப்பின் குணாதிசயங்கள் மற்றும் அவனது பாடசாலை கிரிக்கெட் சாகசங்கள் பற்றி அறிந்துகொள்கிறார். என்னதான் தேசிய அணியில் "பிரதீப் மத்தியூ" விளையாடினாலும், எப்போதும் யாருக்கும் அடங்கி போகாமல் பிரச்சனை செய்யும் அவனை பலருக்கு பிடிக்கவில்லை. இதன் காரணமாகவே அவன் தேசிய அணியிலிருந்து நிறுத்தப்படுகிறான். ஆனாலும் "கருணாசேன" பிரதீப்பை ஒரு திறமையான சுழல் பந்து வீச்சாளனாக கருதுகிறார். முரளிதரனை விடவும் பிரதீப்பை அவருக்கு பிடித்துப்போய் விடுகிறது. அவன் வீசிய சில முக்கிய பந்துகளை கதை நெடுக  நினைவுகூருகிறார். ஒரு கட்டத்தில் நண்பன் ஆரியுடன் நடக்கும் விவாதத்தில் முரளிதரனே பந்தை எறிகிறார் என்று தான் நம்புவதாக சொல்கிறார்.இப்படியாக "பிரதீப் மத்தியூ" என்னும் விளையாட்டு வீரன் மீதான மோகத்தில் திளைக்கிறார்.

இங்கு நான் சொல்லாமல் விட்ட முக்கியமான விஷயம் கதையில் வரும் சில கதாப்பாத்திரங்கள். இங்கு கதையில் வரும் முக்கிய சில பாத்திரங்கள் மட்டுமே கற்பனையானவர்கள். இலங்கை கிரிக்கெட்டின் முக்கிய பல வீரர்களும் கதையில் மூன்றாம் மனிதர்களாக ஆங்காங்கே தலை காட்டுகிறார்கள். எண்பதுகளில் தொண்ணூறுகளில் கொழும்பில் இடம்பெற்ற இனப்பிரச்சனை, குண்டுவெடிப்புகள், அந்நேரத்தில் இலங்கைக்கு கிடைத்த உலகக்கிண்ணம் போன்றவை கதையோடு ஒட்டி போகின்றது. இலங்கையின் அரசியல் போக்கு, கிரிக்கெட் ஊழல்கள் கதையில் சரியாக செருகப்பட்டுள்ளது. குறிப்பாக "பிரதீப் சிவநாதன்  மத்தியூ" என்கிற பெயரில் "சிவநாதன்" என்ற நடுப்பெயர் கரைந்து போய்   "பிரதீப் மத்தியூ" சுருக்கப்படுவதற்கு சரியாக அரசியல் காரணம் கற்பிக்கப்படுகிறது. சிறுபான்மையின வீரன் ஒருவன் ஏன் தேசிய அணியில் இடம்பெறுவது குதிரைக்கொம்பான  விஷயம் என்பதை ஒளிவுமறைவின்றி எழுத்தாளர் தெளிவுபடுத்துகிறார். ஒரு பெரும்பான்மை இன எழுத்தாளரிடமிருந்து இதனை நான் எதிர்பார்க்கவில்லை. இப்படியாக அவரின் பல நடுவுநிலையான கருத்துக்கள் கதை நெடுக இருக்கின்றன. இவ்வளவு காலமும் அப்படி ஒரு விசயம் இல்லை என்றுஇவ்வளவு காலமும் நம்பிக்கொண்டிருந்தவர்களுக்கு இந்த கதை வினோதமாக தெரியலாம்.

எழுத்துநடை மிகவும் சீராக சுவாரசியமாக செல்கிறது. ஒரு குடிகாரன் கதை சொல்லும்போது ஒன்றிலிருந்து ஒன்றுக்கு தாவுவான். ஆனால் கதை சுவாரஸ்யமாக இருக்கும். அதுபோலவே காலக்கிரமத்துக்கு ஏற்றவாறு பயணிக்காமல் "கருணாசேனவின்" குடிகார மனநிலைக்கு ஏற்றவாறு கதை பயணிக்கிறது.  திடீரென்று "கல்கிசை" தெருவில் ஊர்ந்து போகும் கதை தாஜ் கொட்டலில் நடந்த சம்பவத்துக்கு தாவுகிறது. இந்த non-linear பாணி அநேக நேரங்களில் சுவாரசியம் தருகிறது.இக்கதையில் வரும் அரசியல் பாண்டஸித்தனமாக இருப்பதாக பட்டது. கருணாசேன ஒரு தமிழ் தாதாவை இலகுவாக சந்திக்கிறார். தமிழ் இயக்கங்களுக்கு வெளிப்படையாக உதவும் அந்த தாதாவின் பாத்திரம் நம்பமுடியாததாகவே இருக்கிறது. ஆனாலும் கிரிக்கெட் விளையாட்டு சம்பந்தமான புனைவுகளில் நம்பகத்தன்மை ஸ்திரமாக உள்ளது. குறிப்பாக 1987 ல் நியூஸிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் வந்தபோது  முதல் டெஸ்ட் போட்டி முடிந்த பின்னர் தலைநகரில் குண்டு வெடிக்கிறது. இதனால் நியூஸிலாந்து அணியினர் நாடு திரும்பினார்கள். இது உண்மை சம்பவம். ஆனாலும் ஷெஹானின் புனைவு இந்த இடத்தில்தான் தொடங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி பார்வையாளர்கள் இன்றி ஒருசிலருக்கு மட்டுமேயான அனுமதியுடன் நடக்கிறது. குண்டு வெடிப்பினால் பயந்து போயிருந்த நியூஸிலாந்து வீரர்கள் அரைமனத்துடன்  விளையாட சம்மதிக்கின்றனர். முதல் போட்டியில் சந்தர்ப்பம் கிடைக்காத "பிரதீப் மத்தியூ" இப்போட்டியில் விளையாடி எட்டு விக்கெட்டுகளை பறிக்கிறான். தனது மாஜாஜால Chinaman பந்து மூலமாக விக்கெட்டுகளை சாய்ப்பதை நேரில் கண்ணுற்ற "கருணாசேன" அதன் பின்னர்  "பிரதீப் மத்தியூ"வின் தீவிர விசிறியாகிறார். ஆனாலும் முதல் இன்னிங்சின் குறைவான ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த நியூஸிலாந்து போட்டியை நிறுத்திவிட்டு நாட்டின் அரசியல் நிலையை காரணம் காட்டி விட்டு வெளியேறுகிறது. இதன் காரணமாக இப்போட்டிக்கு சர்வதேச அந்தஸ்து கிடைக்கவில்லை என்று சொல்லி என்னையே நம்பவைத்து விட்டார். நானும் கூகிள் செய்து சலித்தேன். அப்படி ஒரு போட்டியே நடக்கவில்லையாம்.


"கருணாசேன"வின்  நீண்ட காலத்தேடல் அவரின் மரணத்துடன் தோல்வியில் முடிகிறது. ஆனால் அதன் பின்னரும் கதை நகருகிறது. அதுதான் மிகப்பெரிய காதில பூ சமாச்சாரம். ஆனாலும் தொடர்ச்சியாக வாசிக்கும் போது அது பெரிய விஷயமாக தோற்றவில்லை. 


உண்மைக்கதை போன்றதான இக்கதை சுவாரசியமாக நகர்த்தப்படுகிறது. உண்மையிலேயே இப்படி ஒரு கிரிக்கெட் வீரன் இருக்கிறானோ அல்லது வேறு ஒருவரது உண்மை பெயரை மாற்றி கதை சொல்கிறாரோ என்று எண்ண தோன்றுகிறது. ஆனாலும் தொடர்ச்சியான நாட்களில் trainல் வேலைக்கு போகும்போது வாசித்தேன். சுவாரசியமான நாட்கள். உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்குதோ இல்லையோ வாசித்து விடுங்கள். கதைசொல்லும் பாணி சுவாரசியமாக இருக்கும்.

இப்புத்தகம் Wisden சஞ்சிகையின் கணிப்பின்படி கிரிக்கெட் சம்பந்தமான புத்தகங்களில் இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இதை ஹிந்தியில் படமாக்கப்போகிறார்களாம். அங்கு கொலை நடக்கமுன்னராக Chinaman ஐ தரிசித்து விடுங்கள்.
Sunday, May 5, 2019

வெறுங்கால் சுட்டிப்பையன் ஜென் - Barefoot GEN Comics


போர் என்பது வெறுப்பான விஷயம். அது துயரம் மிகுந்தது. போர் நடக்கும் நாடுகளில் வசிக்கும் மக்கள் வாழ்க்கையே இருள் மிகுந்து விடுகிறது. உயிர் மேல் இருக்கும் ஆசை, மற்றைய ஆசைகளை தின்று விடுகிறது. போரில் ஈடுபடுவர்கள் ஒருநாள் சாகிறார்கள், ஆனால் நடுவில் இருக்கும் சாதாரண மக்கள்தான் நித்தமும் செத்து பிழைக்கிறார்கள்.  எங்கள் நாட்டின் முப்பது வருட யுத்தத்தின் பெரும்பகுதி எனது சிறு பிராயத்தை ஆக்கிரமித்திருந்தது. யுத்தம் இல்லாத நாடு எப்படியிருக்கும் என்பதே எங்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.  ஒரு வருடம் தொடர்ச்சியாக பள்ளிக்கூடம் போகாமல்கூட  இருந்திருக்கிறேன். வீட்டில் நித்தமும் விளையாடிக்கொண்டிருந்தேன். சிறுவயதுகளில் எதையும் விளையாட்டாகவே பார்த்ததால் போரின் உண்மையான தார்பரியம் சரியாக விளங்கவில்லை. மிராஜ் பிளேன் வரும்போது கதிரைக்கு அடியில் ஒளித்து பாராட்டு பெற்றேன். "சண்டை தொடங்கிட்டுது" என்றாலும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. சண்டை  நடந்தால் பள்ளிக்கூடம் போகாமல் வீட்டில் இருக்கலாம் என்ற ஒரு இனம்புரியாத சந்தோசம் மட்டுமே இருக்கும். ஆனால் வளர்ந்த பிற்பாடு கொழும்பில் இருக்கும்போது ஆமி செக் பண்ண வாரான் என்றாலே காலில் நடுக்கமெடுத்தது வேறு கதை. ஐந்து வயதுகளில்  போர் விமானங்கள் தாழ்வாக பறந்தபோது பங்கர்களில் ஒளிவதையே ஒரு விளையாட்டாக  எடுத்துக்கொண்டேன். பின்னாட்களில் விமான குண்டுவீச்சில் தெரிந்தவர்கள் பலியானபோதுதான் உண்மை நிலை விளங்கியது.  சிறுவர்களுக்கு எல்லாமே விளையாட்டாகவே வாழ்க்கை நகர்கிறது. போர் அவர்களின் வாழ்க்கையை பாதித்தாலும் விளையாட்டு மனநிலையை எதுவும் செய்யாது போலும். ஆனால் அவர்களை நேரடியாக பாதிக்கப்படும்போது விஷயமே தலைகீழாகிவிடுகிறது.

1945ஆம் ஆண்டு ஜப்பானின் ஹீரோஷிமா நகரில் அணுகுண்டு வீசப்படுகிறது. உலக வரலாற்றின் துன்பம் மிகுந்த நிகழ்வு சர்வசாதாரணமாக அமெரிக்காவினால் நிகழ்த்தப்படுகிறது. அதில் கெய்ஜி எனும் ஆறு வயது நிரம்பிய சிறுவன் தனது தந்தை மற்றும் அக்கா, தம்பியை பலியாவதை கண்முன்னே காண்கிறான். சிறுவனான அவனால் அவர்களை காப்பாற்ற முடியாமல் போனாலும், 8 மாத கர்ப்பிணியான தாயுடன் தப்பி பிழைக்கிறான் கெய்ஜி. இந்த அணுகுண்டுஅந்நகரில் வாழ்ந்த மக்கள் எல்லோரின் வாழ்க்கையையும் மாற்றி போட்டுவிடுகிறது. சிறுவனான கெய்ஜியின் மனதில் ஆறாத்துயரை அது ஏற்படுத்துகிறது. கெய்ஜி வளர்ந்து பின்னாட்களில் ஜப்பானின் பிரபல மங்கா காமிக்ஸ் கார்ட்டூனிஸ்ட் ஆக உருவாகிறார். தனது மனதில் பதிந்த துயரத்தை காமிக்ஸ் என்ற மீடியத்தை வடிகாலாக பாவித்து  "Ore wa Mita" என்ற பெயரில் காமிக்ஸாக மாற்றுகிறார். அது "I SAW IT" என்று ஆங்கில மொழியில் மொழிமாற்றம் பெறுகிறது. 1972இல் வெளியான அந்த கதையில் இருந்த சோகம், மகிழ்ச்சி, துயரம் எல்லோரையும் கட்டிப்போட்டது. அவர் அதனை தன்னுடைய சுயசரிதம் போன்று நடந்த உண்மையை அப்படியே விவரித்திருந்தார். இத்தொடர் 48 பக்கங்கள் மட்டுமேயான குறுந்தொடர் மட்டுமேயாகும். இந்த தொடருக்கு கிடைத்த அற்புதமான வரவேற்பை தொடர்ந்து "Hadashi no Gen" என்ற பெயரில் இந்த 48 பக்க சிறுகதையினில் ஒருசில கற்பனைகளை கலந்து கிட்டத்தட்ட 2000 பக்கங்களுக்கு மேற்பட்ட   நெடுந்தொடராக மாற்றுகிறார். 1973ஆம் ஆண்டு தொடங்கி பன்னிரண்டு வருடங்கள் தொடர்ந்த இந்த தொடர் இன்றுவரை ஜப்பானியர்கள் மனங்களில் அழியாத இடத்தை பிடித்திருக்கின்றது. யுத்தத்தில் ஊறிப்போன ஒரு தலைமுறைக்கே ஒருவித வினோத ஆறுதலை அது கொடுத்தது.

யுத்தத்தில் இடம்பெறும் கோரங்களை தெளிவாக விளக்கும் இந்த கதைத்தொடர் இன்றுவரை சிறந்த போருக்கு எதிரான பிரச்சார கதை என்று புகழப்படுகிறது. ஒபாமாவின் ஆட்சியின் போது அணுகுண்டு தொடர்பான அவரின் சிலமுடிவுகளை பார்த்து மனம் நொந்து போன கெய்ஜி அணுகுண்டுகளின் விளைவுகளை விளக்கும் தனது புத்தகங்களின் பிரதிகளை அனுப்ப முயற்சித்தாகவும் சொல்லப்படுகிறது.


இக்கதையில் போர் என்ற மாயவலையில் சிக்கியிருந்த  ஜப்பானிய இராணுவம் பொதுமக்களுக்கு இழைத்த கொடுமையை பற்றியும் கெய்ஜி நாகசாவா தெளிவாக விவரிக்கிறார். அவரின் இவ்வாறான பாராபட்சமற்ற  கதைசொல்லல் முயற்சி மேலும் நம்பகத்தன்மையை கூட்டுகிறது. இக்கதையில் மனிதர்கள் யாரையும் நிரந்தர வில்லன்களாக சித்தரிக்கவில்லை. போரும் அதன்மூலமாக மனிதர்களுக்கு தோன்றும் சுயநலமுமே உண்மையான வில்லன்களாக சித்தரித்திருக்கிறார். ஒரு போர் எப்படி மனித மனங்களை மாற்றி விடுகிறது என்பது பல காட்சிகளில் உணர்த்தப்படுகிறது. அதுமட்டுமன்றி ஜப்பானிய மக்களின் பல நல்ல குணங்களை பற்றியும் அறியக்கிடைக்கிறது.


பாகம் 1: அணுகுண்டு வீச்சுக்கு முன்னரான வாழ்க்கை

கெய்ஜி தன்னை போன்றே உருவாக்கிய கற்பனை கதாப்பாத்திரத்தின் பெயர்தான் "ஜென்". அவனுக்கு ஒரு அக்காவும், இரண்டு அண்ணன்களும் ஒரு குட்டித்தம்பியும் இருக்கின்றனர். போர் காரணமாக ஜப்பானியர்களின் பிரதான உணவான அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் அநேக நேரங்களில் சிறுபிள்ளைகள் பசியில் வாடுகின்றனர். ஒரு காட்சியில்  ஜென் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் சமைக்கப்படாத அரிசியை திருடி அப்படியே மென்று உண்ணுகிறான். அதுவே அவனுக்கு அமிர்தம் போலிருக்கிறது. உணவின் அருமையை இந்த ஒற்றை காட்சி அருமையாக உணர்த்துகிறது. ஜென்னின் தந்தை போருக்கு எதிரான மனப்பான்மையை கொண்டவர். பொது இடங்களில் போரினால்  ஏற்படும் தீமைகளை நேரடியாக தெரிவிப்பதில் எந்தவித தயக்கமும் காட்டாதவர். இதன்மூலமாக போர் என்ற தீவிர மூளை சலவை செய்யப்பட்ட மற்றைய குடித்தனக்காரர்களுடன் எளிதாக சண்டை வளர்க்கிறார். அதனால் கோபமடையும் பக்கத்து வீட்டுக்காரர்கள், அவரது கோதுமை பயிர்களை நாசம் செய்கின்றனர். இந்த நிலையில் வேறு எந்த உணவும் இல்லாத நிலையில் நூற்றுக்கணக்கான வெட்டுக்கிளிகளை பிடித்து வறுத்து உண்கின்றனர். பசியாறிய சிறுவர்கள் மகிழ்ச்சி கொள்கிறார்கள். இப்படியான பல்வேறான காட்சிகளில் அந்த குடும்பத்தின் கஷ்ட ஜீவனம் உணர்த்தப்படுகிறது. ஆனாலும் இடையிடையே வரும் சிறுவர்களின் குறும்புத்தனங்கள் சோகத்தை குறைக்கின்றன.


ஜென்னின் இரண்டு அண்ணன்களும் இராணுவ சம்பந்தமான பயிற்சிகளுக்கு அனுப்பப்படுகின்றனர். அங்கு அவர்களுக்கு கிடைக்கும் அனுபவங்கள் எளிதில் மனதை கரைய வைக்கின்றன. அதில் மூத்த அண்ணனான கோஜி கட்டாயமாக சேர்க்கப்பட்ட போர் விமானி ஒருவரை சந்திக்கிறான். அந்த விமானி ஒரு பல்கலைக்கழக மாணவனாக இருக்கும்போதே கட்டாயமாக தற்கொலை விமானப்படையில் சேர்க்கப்படுகிறான்.  அவன் தனது அம்மா மற்றும் காதலியை நினைத்து பித்து பீடித்தவனாக அலைகிறான். இவ்வாறான மனிதர்கள் போரின் கடுமையான போக்கை வாசிப்பவர்களுக்கு தெளிவாக்குகிறார்கள்.

இது மட்டுமன்றி வேறுபல நெகிழ்வான தருணங்களும் இக்கதையில் இருக்கின்றன.
ஒரு முன்னாள் காலை இழந்த இராணுவ வீரனொருவன் ஜன்னல் கண்ணாடிக்கடை வைத்திருக்கிறான். பெரிதாக வியாபாரம் இல்லாமல் எடுத்த கடனை கட்ட வழியில்லாமல் தவிக்கிறான். இதனை சிறுவன் ஜென் தற்செயலாக அவதானிக்கிறான். அவருக்கு எப்படியாவது உதவவேண்டும் என்று எண்ணும் அவன், ஒரு வீதியில் இருக்கும் எல்லா வீட்டு யன்னல் கண்ணாடிகளை கற்களை வீசி உடைத்து விட்டு ஓடுகிறான். அடுத்த நாள் எல்லா வீட்டுகாரர்களும் ஜன்னல் கண்ணாடி கடைக்கு முற்பணம் தந்து புது ஜன்னல் வாங்குவதற்கு வரிசையில் நிற்கின்றனர். இதனை பயன்படுத்தி அந்த கண்ணாடிக்கடைக்காரன் எளிதாக தனது கடனை கட்டி விடுகிறான். ஜென் செய்த உதவியால்தான் தனது வியாபாரம் கூடியது என்பதை அறிந்த அந்த முன்னாள் சிப்பாய் அவனுக்கு ஒரு கப்பல் பொம்மையை பரிசளிக்கிறான்.

இப்படியாக செல்லும் முதல் பாகத்தின் இறுதியில் அமெரிக்கர்கள் ஹிரோஷிமா நகர்மீது அணுகுண்டை வீசுகின்றனர். அதன்போது ஏற்பட்ட கடுமையான வெம்மை பலரை எரித்து கொல்கிறது. கட்டடங்கள் நொறுங்குகின்றன. உண்மையில் நடந்ததை போன்றே, ஜென்னும் அம்மாவும் தப்பிக்க வீட்டின் இடிபாடுகளுக்குள் சிக்கிய அப்பாவும், தம்பியும், அக்காவும் அணுகுண்டு உருவாக்கிய தீயினால் எரிந்து மடிகின்றனர். ஒரு சில நிமிடங்களின் பின்னர் மக்களின் வாழ்க்கையே அடியோடு மாறிபோய்விடுகிறது.


பாகம் 2: அணுகுண்டு வீச்சுக்கு பின்னரான அகோர வாழ்க்கை

அணுகுண்டுக்கு பின்னரான நாட்களில் ஜென்னும் அம்மாவும் பல சவால்களை . கட்டட இடிபாடுகளிலேயே அவர்களில் நாட்கள் கழிகின்றன. அவர்களை சுற்றி இறந்தவர்களின் பிணங்கள் அங்கங்கே விழுந்து கிடக்கின்றன. அணுகுண்டு அதிர்ச்சி காரணமாக கர்ப்பவதியான ஜென்னின் தாய் ஒரு பெண் குழந்தையை பெற்றுக்கொள்கிறாள். 2-3 நாட்களாக பட்டினியில் இருக்கும் தாய்க்கு பால் சுரக்கவில்லை. அந்த குழந்தை பாலுக்கு அழும்போது மனது வலிக்கிறது. தான் உணவு உட்கொண்டால் மட்டுமே பச்சைக்குழந்தைக்கான பால் சுரக்கும் என்பதை அறிந்த தாய் ஜென்னிடம் அரிசி வாங்கி வருமாறு கூறுகிறாள். ஆங்காங்கே எரிந்து போன பிணங்களால் மட்டுமே சூழப்பட்ட ஹீரோஷிமா நகரில் அரிசி தேடி அலைகிறான் ஜென். அவன் காணும் இடங்களிலெல்லாம் கருகிய உடல்கள் உயிரோடோ உயிரற்றோ இருக்கின்றன. இப்படியாக தேடி களைத்துப்போன ஜென் ஒரு கட்டத்தில் வழியிலேயே உறங்கி விடுகிறான். அவனை காணும் இராணுவத்தினர் அவனை ஒரு உயிரற்ற சடலமாக கருதி ஏனைய பிணங்களுடன் எரியூட்டுகின்றனர். திடுக்கிட்டு விழித்தெழும் ஜென்னை பார்த்து இராணுவத்தினர் உதவி செய்கின்றனர்.

இப்படியாக அரிசி தேடி செல்லும் ஜென், மேற்கொள்ளும் பயணத்தினால் அணுகுண்டின் அழிவுகள் கண்முன்னே காட்டப்படுகின்றன. பல அவலங்கள் மனதை ஏதோ செய்கின்றன. கிட்டத்தட்ட 150 பக்கங்களுக்கு மேலாக சித்தரிக்கப்படும் அவலங்களை வாசிப்பதற்கு ஒரு வன்மையான இதயம் தேவைப்படுகிறது. இவையெல்லாம் உண்மையான நிகழ்வுகள் என்பதை நினைவுகூரும் போது மனம் வலிக்கிறது.


எனக்கு ஜப்பானின் மங்கா பாணியிலான சித்திரங்கள் பரிச்சயமில்லை. ஆகவே இப்புத்தகங்களை வாங்கவே பலதடவை யோசித்தேன். என்னை பொறுத்தவரை கார்ட்டூன் பாணியிலான சித்திரங்கள் கதையில் இருக்கும் கொடூரங்களை குறைக்க உதவியிருக்கிறது. நகைச்சுவைக்கான காட்சிகளில் சிறுவர்களின் முகபாவங்கள் சிறப்பாக இருக்கின்றன. எனினும் கெய்ஜியின் சித்திரங்கள் அணுகுண்டின் பின்னரான சேதங்களை  ஆவணப்படுத்தப்படுத்த போதுமானதாக இருந்ததாகவே எண்ணுகிறேன்.

பின்குறிப்பு :

இந்த நெடுந்தொடருக்கு முன்னராக வந்த 48 பக்கங்களிலான "I SAW IT" அந்த  சிறுகதை லயன் காமிக்ஸில் "நரகத்தை பார்த்தேன்" என்ற பெயரில் 1995/96 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தொடராக வெளியானது.  முதல் பாகம் மாடஸ்தியின் "திகில் நகரம் டோக்யோ" என்ற புத்தகத்தில் நான்கு பக்கங்கள் கொண்ட தொடராக தொடங்கியது. சிறுவயதுகளில் வாசித்த அந்த தொடர் அப்போதே விருப்பத்துக்குரிய தொடராக இருந்தது. உணவு பஞ்சத்தினால் அவதியுறும் கெய்ஜியின் குடும்பம்  வெட்டுக்கிளிகளை வறுத்துச்சாப்பிடும் காட்சி இப்பொழுதும் மனதில் இருக்கிறது. இத்தொடரின் அநேக பாகங்களை வாசித்திருந்தாலும், முழுமையான நெடுந்தொடரை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக பத்து பாகங்கள் கொண்ட இத்தொடரின் முதலிரு பாகங்களை வாங்கி வாசித்தேன்.

Tuesday, November 20, 2018

வாசிப்பு என்னும் மிருகம்

 சமீப நாட்களில் வாசிப்புக்கு ஒரு நாளில் ஒரு மணி நேரமாவது ஒதுக்குகிறேன். இவ்வாறாக நேரம் ஒதுக்குவதற்கே மிகவும் சிரமமாக இருக்கின்றது. இதனாலேயே ரயிலில் பயணம் செய்யும்போதும் தீவிரமாக வாசிக்கிறேன். ரயிலுக்குள் நுழையும் கடல் காற்றை ரசிக்காமல் புத்தகத்துக்குள்ளே விழுந்திருக்கின்றேன். ஒரு பக்க யன்னலால் நுழையும் கடற்காற்று என்னை மயக்க தீவிர முயற்சி செய்து தோற்றுவிட்டு அடுத்தப்பக்க யன்னல் மூலம் தோல்வியுடன் வெளியேறுகிறது. இதற்குமுன்னர் நான் ஒருபோதும் நேரம் ஒதுக்கி புத்தகங்களை வாசித்ததில்லை. வாசிக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் வந்தால் மட்டுமே வாசிப்பேன். இப்போதெல்லாம் வாசிப்பு ஒரு குரங்கு போல என்னுடன் தொற்றிக்கொண்டிருக்கிறது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாசிக்கும்படி என்னை அது ஏவுகிறது. என் சொல்பேச்சை அது கேட்பதில்லை. அது பேச்சை தட்டுவது கடினமாக இருக்கிறது. இரவு படுக்கைக்கு செல்ல முன்னர் வாசிக்காமல் படுத்தால் அந்த நாளில் ஏதோ குறையிருப்பதாக மனதுக்கு படுகிறது. ஆனாலும் சில நேரங்களில் எனது வாசிப்பு ரசனை எனக்கே பயத்தை ஏற்படுத்துகிறது. எனக்கு எல்லோருக்கும் பொதுவாக பிடித்த புத்தகங்களை வாசிக்கவேண்டும் என்று தோன்றாது. எப்போதோ கேள்விப்படட  பழைய கிளாசிக் புத்தகங்களை வாசிக்க வேண்டும் போல திடீரென்று தோன்றும். பழைய ஆங்கிலபடங்களின் மூலமான புத்தகங்களை கண்ணில் படும்போது வாங்குவேன். காரணமேயில்லாமல் அந்த புத்தகங்களுக்குள் மூழ்கிவிடுவேன். ஆனால் அந்த படங்களை பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் இருப்பதே இல்லை. எல்லோரும் சிலாகிக்கும் "பொன்னியின் செல்வன்" நாவலை வாசிக்க ஒருபோதும் தோன்றியதில்லை. நான் எதை வாசிக்க வேண்டும் என்பதை அந்த குரங்குதான் தீர்மானிக்கிறதோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.

அலுவலத்தில் வேலை செய்யும் நண்பன் ஒருவன் விலை கூடிய ஆங்கில காமிக்ஸ்க்களை வாங்கிக்குவிப்பான். எங்களுக்குள் புத்தகங்களை பரிமாற்றம் செய்வோம். அவன் வாங்கும் புத்தகங்களில் பாதிக்கு மேல் அவன் வாசித்ததில்லை என்பது ஆச்சர்யம் தரும் விஷயமாக இருந்தது.  அநேக தருணங்களில் டாலடிக்கும் அவனுடைய புத்தம்புதிய புத்தகங்களை நானே முதலில் வாசிப்பேன். அவனே இது ஒருவகை மனோவியாதி என்றான். அதாவது வாங்கி குவித்துவிட்டு அதனை வாசிக்காமல் அடுக்கி அழகு பார்ப்பது. நல்லவேளையாக எனக்கு இந்த வியாதி இப்போதில்லை. ஆனாலும் நான் வாசிக்கும் வீதத்தை விட வாங்கும்வீதம் அநியாயத்திற்கு அதிகம்தான். காணும் இடங்களிலெல்லாம் புத்தகங்களாக வாங்கிக்குவிக்கிறேன். ஆனால் உடனடியாக வாசிப்பதில்லை. அவற்றை வாசிக்க ஏதோ ஒரு உந்துதல் தேவைப்படுகிறது.  இப்படித்தான் ஒரு புத்தகவிழாவில் ஷெர்லாக் ஹோம்ஸ் இன் சிறுகதை தொகுப்பை ஆசைக்கு வேண்டினேன். ஆனால் அது எனது புத்தக அலுமாரியில் இரண்டு வருட ஆழ்ந்த தூக்கம் போட்டது.  ஒருநாள் ஷெர்லாக் ஹோம்ஸ் இன் கதைகளை அடிப்படையாக கொண்ட "துப்பறிவாளன்" படம் வருவதாக அறிந்தேன். அந்த தீப்பொறி எப்போதோ வாங்கிய புத்தகத்தை  வாசிக்க தூண்டியது. புத்தகத்தை வாசித்து முடித்த நான் அந்த படத்தை பார்க்கமுடியாமல் போனது இங்கு முக்கியமில்லை. இவ்வாறே "The Martian" என்ற புத்தகத்தை அதை தழுவிய படம் பார்க்க விருப்பத்தில் வாசித்து முடித்தேன். புத்தகம் வாசித்தவர்களுக்கு அந்த படம் பிடிக்காது என்று ஒரு நண்பன்  கூறினான். ஆகவே அந்த படத்தை பார்க்கவில்லை. இந்த புத்தகத்தை ஒவ்வொரு காலைப்பொழுதிலும் ரயிலில் வேலைக்கு போகும்போது வாசித்தேன். இப்புத்தகத்தின் கதை செவ்வாய் கிரகத்தில் நடப்பதாக இருந்ததால் ரயில் கூட செவ்வாய் கிரகம் போல மாயையை உண்டுபண்ணியது. இப்படித்தான் நான் வாங்கும் புத்தகங்கள் என்னுடைய வாசிப்புக்காக தவம் கிடக்கின்றன. எப்போதோ ஒரு நாள்தான் அவற்றுக்கு வரம் கிடைக்கின்றது.  அந்த நாள்தான் எப்போது என்று தெரிவதில்லை.நான் காலைப்பொழுது வாசிக்கும் புத்தகத்தை இரவில் தொடர்வதில்லை. இரவுக்கு வேறு ஏதாவது புத்தகம் வாசிக்கிறேன். இப்படித்தான் "Bram Stoker"இன் டிராகுலா புத்தகத்தை காலைப்பொழுதின் இருபது நிமிட புகையிரத சவாரியில் மட்டுமே மூன்று மாதங்களாக வாசித்து முடித்தேன். இரவில் ஏதாவது ஒரு நகைச்சுவை நிறைந்த காமிக்ஸ் ஏதாவது வாசிப்பேன். நாய்கள்  ஊளையிடும் நடு ராத்திரியில், டிராகுலா புத்தகத்தை வாசிப்பதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பது வேறு விஷயம். ஆனாலும் எனது மனவோட்டத்துக்கு ஏற்றவாறு புத்தகங்களை அந்த குரங்கு தேர்வு செய்கிறது போலும்.


இப்போதெல்லாம் புத்தக விழாக்கள் கணிசமாக நடக்கின்றன. ஏதோ பொய்யான பரபரப்புடன் எல்லா வேலையையும் தூக்கி போட்டுவிட்டு அந்த நிகழ்வுகளுக்கு போகிறேன். சித்தம் பேதலித்தவன் போல புத்தகங்களை பார்வையிடுகிறேன். புத்தகங்கள் நிறைய வாங்குகின்றேன். அவை வீட்டினுள் ஆங்கங்கே புத்தகங்கள் சிதறி கிடக்கின்றன. இயலுமானவரை தேவையற்ற புத்தகங்களை நண்பர்களுக்கு பரிசளிக்க முயற்சிக்கிறேன். ஆனால் என்னை போன்ற வியாதியஸ்தர்களை காணுவது அரிதாகவே இருக்கிறது. வீட்டில் குவிந்து கிடைக்கும் புத்தகங்களை அடுக்கி வைப்பதற்கே திண்டாடுகின்றேன்.  எது தேவை எது தேவையற்றது என்று வேறுபடுத்தவே முடிவதில்லை. அடுக்கும்போதே புத்தகங்களை நோட்டம் போடுவதற்கே பாதி நாள் போய் விடுகிறது. ஒவ்வொரு புத்தகத்தை அடுக்குவதற்காக தூக்கும்போதும் அப்புத்தகம் சம்பந்தமான நினைவுகள் வந்து அலைக்கழிக்கின்றன. இப்படியே நேரம் போய் விடுகிறது. கொட்டிக்கிடக்கும் புத்தகங்களை அடுக்குவதற்கே இன்னொரு அறையை கட்டுவோமோ என்று யோசிக்கிறேன் ஆனாலும் வீட்டு சொந்தக்காரன் என்ன சொல்லுவானோ என்ற நினைப்பு அதனை அணைத்து விடுகிறது.
Monday, May 28, 2018

ராபீயின் பூனை ஒரு வாயாடி பூனை -- காமிக்ஸ்


எங்கள் வீட்டில், சில வருடங்களுக்கு முன்னர் செல்லப்பிராணியாக ஒரு பூனை பதவிவகித்தது. சும்மா தெருவில் சுற்றி திரிந்த அந்த பூனை அக்காவின் மகள் போட்ட சிக்கன் துண்டுகளினால் கவரப்பட்டு எங்கள் வீட்டின் முற்றத்தில் குடிபுகுந்தது. பசி வந்தால் நிமிசத்துக்கு நூறு முறை மியாவ்.. மியாவ்.. கத்தும். அதற்கு பெயர் வைக்கப்படாமலே இரண்டு மாதங்கள் கடந்தன . எப்போதுமே அம்மாவின் காலை சுற்றி வரும். அம்மாதான் எப்போதுமே சாப்பாடு வைப்பா. நாங்கள் சும்மா அதோடு விளையாடுவதோடு சரி. ஆனாலும் எப்போதுமே கத்தி கூப்பாடு போடும் அந்த பூனையை பார்த்தாலே அம்மாவுக்கு எரிச்சல் வரும். சரியான "சொடுகு"  பூனை என்று எப்போதுமே சொல்லுவா. "சொடுகு"  என்பது கொஞ்சம் அமங்கலமாக தோன்றியதால் "சுடோகு" என்று மாற்றி விட்டேன். இதுக்கு ஜப்பான் காரனுக மாதிரி சின்ன கண்ணிருக்கு அதான் இப்படி பேரு என்று ஒரு போலி காரணத்தை உருவாக்கினேன். "சுடோகு" எங்களது பின் கதவு வாசலில் இரண்டு மணித்தியாலங்களுக்கு ஒருமுறை வந்து "மியாவ்" கச்சேரி வைக்கும். சாப்பாடு கொடுக்கும்வரை அந்த இம்சை இசை தொடரும். அதுக்கு மீன் வைக்கவேண்டும். ஆனால் எங்கள் வீட்டில் மாதத்திற்கு சில நாட்களுக்கே மச்சம் சமைப்போம். மரக்கறி நாட்களில் பாலும் சோறும் சாப்பிடும். கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு மீர்.. ரர்.. வ்.. என்று அதிருப்தியுடன் என்னை பார்த்து முறைத்துவிட்டு மதில் மேல் சோகமாக படுத்திருக்கும். அதற்கு பேச தெரிந்திருந்தால் இன்றைக்கு ஏன் மச்சம் சமைக்கவில்லை என்று அதட்டி கேட்டிருக்கலாம். ஏன் வெள்ளிகிழமைகளில் மட்டும் கட்டாயம் மரக்கறி சாப்பிட்டுகிறீர்களோ என்று அலுத்துகொண்டிருக்கலாம். சுடோகு ஒருமுறை மூன்று குட்டிகளை ஈன்றது. அம்மா நிறைய பால்விட்டு சோறு வைத்தா.  அப்பா மச்சம் சமைக்காத நாட்களிலும் கொஞ்சமாக நெத்தலி மீனை சுடோகுவுக்காக வாங்கி வந்தார். குட்டிகளை சில நாட்களுக்கு சுடோகு கண்ணில் காட்டவில்லை. அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு ஓடி விடும். சில நாட்கள் கழித்து தனது குட்டிகளுடன் எங்கள் வீட்டுக்கு விசிட் அடித்தது. எங்கள் வீட்டுக்கு யாராவது விருந்தினர்கள் வந்தால், சுடோகுவும் தனது குட்டிகளுடன் வந்து வாசலில் படுத்திருக்கும். நானும் எனது குடும்பத்துடன் வந்து விட்டேன் பார் என்பது போல பெருமையாக பார்க்கும். சுடோகு சில வேளைகளில் குரல் மாற்றி அதே மியாவ்வை வித்தியாசமாக ராகம் பாடும்போது எனக்கு ஏதோ சொல்ல வருகிறது என்பதை புரிந்துகொள்வேன். ஆனால் ஒன்றுமே புரியாது. ஒரு கடுமையான மழை நாளில் சுடோகு காணாமல் போனது. அதற்கு முதல் நாளில்கூட எனது காலை சுரண்டி ஏதோ சொல்ல முயன்றது. ஹீம்.. அதற்கு பேசும் சக்தி இருந்தால் நல்லா இருந்திருக்கும்.

இப்படி எனக்கு தோன்றியதை போல கடல் கடந்து பல மைல்களுக்கு அப்பால் உள்ள பிரான்ஸ் தேசத்தின் காமிக்ஸ் ஓவியரான "ஜோன் ஸ்பார்"(joann sfar)க்கும் தோன்றியிருக்கும் போல. அவர் உருவாக்கிய "ராப்பீஸ் கற்" கதையில் ஒரு பூனைக்கு பேச்சு வருவது போல கதையை அமைத்திருப்பார்.
Joann Sfar இக்கதையை உருவாக்க காரணமான தனது பூனையுடன்
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் ஒரு கட்டுரை ஒன்றிலே இந்த காமிக்ஸை பற்றி சிலாகித்து எழுதியிருந்தார். வழமை போலவே மாசக்கணக்கில் இந்த கதையை பற்றி கூகிள் செய்தேன். எல்லோரும் கோரசாக நல்லாருக்கு என்றார்கள். படங்கள் நான் அஞ்சாம் வகுப்பில் வரைந்த கார்ட்டூன் ஓவியங்கள் போல சொதப்பலாக இருந்தன. இரண்டு, மூன்று வாரங்களாக ஒவ்வொரு நாளும் விடாது கூகிள் செய்ததில் பைத்தியம் பிடித்தது போலாகியது. இதை நிறுத்துவதற்கு ஒரே ஒரு வழி மட்டுமே அந்நேரத்தில் புலப்பட்டது. ஒன்லைனில் ஆர்டர் செய்தேன். புத்தகம் வந்திறங்கிய பின்னர் பெரிய ஏமாற்றம் ஏதும் இருக்கவில்லை. தரமான அச்சு. கலர் நிறைந்த பக்கங்களாக இருந்தன.


இந்த கதை "ராபீ" எனப்படும் யூத மத தத்துவங்களை போதிக்கும் ஆசிரியரின் வீட்டில் வாழும் பூனையை பற்றியது. கதை 1930ம் ஆண்டுப்பகுதியில் அல்ஜீரியா நாட்டில் நடப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு ராபீ எனப்படுபவர்கள் "Torah" என்கிற மத நூல்களை கற்று பாண்டித்தியம் பெற்றிருப்பர். இப்படிப்பட்ட ஒரு பழமைவாதியான ராபீயின் வீட்டில் வாழும் பூனை ஒரு பேசும் கிளியை விழுங்கி ஏப்பமிடுகிறது. அதன் மூலமாக அதற்கு பேசும் திறனை பெற்றுக்கொள்கிறது
ஆனால் அது வாயை திறந்தாலே பொய்தான் பேசுகிறது. முதலாவது பொய்யாக தான் அந்த கிளியை விழுங்கவில்லை என்று சாதிக்கிறது.
"ராபீ"யுடன் வீண்தர்க்கங்களில் ஈடுபடுகிறது. ராபீயின் பழமைவாத கருத்துக்களை கிண்டல் செய்கிறது. ராபீ "ஒரு தூய யூதனாகிய அந்த பூனையை பொய் பேசக்கூடாது" என்று வாதிடுகிறார். தான் ஒரு யூதன் இல்லை எனவே அந்த கட்டாயம் தனக்கில்லை என வாதிடுகிறது.
தொடர்ச்சியான விவாதங்ககளின் மூலம் தானும் யூத மத நூல்களை கற்று தானும் யூதனாகலாமா என்று கேட்கிறது. அதனுடன் விவாதம் செய்வதில் "ராபீ" தடுமாறுகிறார். இந்த பூனையுடன் தனது மகள் பேசினால் அவளும் பொய் பேசுதல் போன்ற கெட்ட பழக்கங்களை பழகுவாளோ என்று கவலைகொள்ளும் ராபீ பூனையை மகளுடன் பேச தடைவிதிக்கிறார். இங்கு அந்த பூனை ராபீயின் மகளாகிய ஸ்லுபியாவை தனது ரகசிய காதலியாகவே கருதுகிறது. அவளை தன்னுடைய மனதின் இளவரசியாகவே எண்ணி வருகிறது. தானும் ஒரு யூதனாகி அவளை திருமணம் செய்வது பற்றியெல்லாம் விவாதிக்கிறது. இதனை ஸ்லுபியா எளிதாகவே எடுத்துக்கொள்கிறாள். இப்படி போகும் கதை பேசும் சக்தி கொண்ட கிழச்சிங்கம் வேறு வருகிறது. அதுவும் பூனையும் பேசிக்கொள்ளும் காட்சிகளில் நகைச்சுவை இழையோடுகிறது. இதற்கிடையில் ஸ்லுபியாவுக்கு இன்னொரு இளைய ராபீயுடன் காதல் வருகிறது. அவளும் மண முடித்து பட்டணத்துக்கு சென்றுவிட ராபீயும் பூனையும் கவலையடைகிறார்கள் (எஸ்ரா). இருவரும் ஸ்லுபியாவை காண பட்டணம் செல்லுகிறார்கள். அங்கு அவர்களுக்கு ஏற்படும் வினோத அனுபவங்கள் அவர்களுக்கு வாழ்க்கையை புரிய வைக்கிறது


இங்கு நகைச்சுவை தெறிக்கும் வினோத கதையே புதுமையாக இருக்கிறது. கதாசிரியர் பூனைகளில் இயல்பை கதையில் அழகாக கொண்டு வந்திருக்கிறார். பூனைகள் எப்போதும் வளர்ப்பவர்களை தங்களது அடிமைகள் என்று எண்ணும் இயல்புள்ளன. இதனை கதை முழுவதும் காணலாம். பூனையின் இயல்பிலேயே கதை பயணிக்கிறது என்பதை கதையை படித்துமுடித்தபின்னர் உணரமுடிகிறது. இப்புத்தகத்தில் ஓவியங்கள் கன்னா பின்னாவென்று இருப்பது போல தோன்றினாலும். இப்படியான வினோதமான கதையமைப்புக்கு வேறு எதுவும் பொருந்தியிராது என்றே தோன்றுகிறது. மின்சாரமில்லா 1930களில் நடக்கும் கதை அநேக நேரங்களில் விளக்கு வெளிச்சத்திலேயே நடக்கிறது. அதனை அடர்த்தியான வண்ணக்கலவைகள் மூலம் அழகாக காட்டியிருக்கிறார்கள்.
வசனங்கள் 30% கதையை சொன்னால் 70% கதையை ஓவியங்களும் அதன் அடர் வண்ணங்களுமே பொறுப்பெற்கின்றன. ஆனாலும் சில இடங்களில் வசனங்களில் நீளம் அதிகம். கதையின் தன்மை அதற்கு காரணமாக இருக்கலாம்.

வித்தியாசமான காமிக்ஸ்களை வாசிக்க விரும்புவோருக்கு ஏற்றது. வாசிப்பவர்களின் மனநிலைக்கேட்ப வினோதமான அனுபவங்களை தரவல்லது என்றே எண்ணுகின்றேன். இப்புத்தகத்தை வாங்கிய நாட்களில் நேரமின்மை காரணமாக நள்ளிரவு நேரங்களிலேயே இப்புத்தகத்தை வாசித்தேன். அதனாலோ என்னவோ கதையின் இருளோடு என்னை ஒன்றி கொள்ள முடிந்திருந்தது.

Saturday, September 24, 2016

Maus காமிக்ஸ்- வரலாற்றின் மேல் காய்ந்துபோன இரத்தத்துளிகள்

 சில மாதங்களுக்கு முன்னராக நண்பர் விஸ்வா பேஸ்புக்கில், உலகத்தில் தலைசிறந்த காமிக்ஸ் ஒன்றை வாசித்துக்கொண்டிருப்பதாக பதிவிட்டார். அதன்பெயரை குறிப்பிடாது, அதனை எங்களை ஊகிக்குமாறு கூறினார். நான் எனக்கு தெரிந்த சில காமிக்ஸ்களை வரிசைப்படுத்தினேன். இன்னும் சிலரும் ஊகிக்க முயன்று தோற்றனர். விஸ்வா எனக்கு அந்த புத்தகத்தின்
அட்டைப்படத்தை எனக்கு chatஇல் அனுப்பினார். அது "Maus" என்னும் ஒரு காமிக்ஸ். Maus என்பது ஜேர்மன் மொழியில் "எலி" என்று பொருள்படும்.  இது ஒரு தலைசிறந்த காமிக்சாக கருதப்படுவது என்பது ஆச்சர்யம் தந்தது. கூகிள் செய்தபோது வந்த படங்களும் ஏமாற்றம் தந்தன. செய்திதாள்களில் வரும் அரசியல் கார்ட்டூன்  போன்ற படங்களே இருந்தன. நுணுக்கமான படங்கள் வரையப்பட்டிருக்கும் ஐரோப்பிய காமிக்ஸ் வாசித்து வளர்ந்த எனக்கு தலைசுற்றலை தந்தன. விஸ்வாவுக்கும் எனக்கும் ரசனை விசயத்தில் கொஞ்சமாக ஒத்துப்போகும். மேலும் விக்கிபீடியாவில் "Maus" உருவான கதை சுவாரஸ்யம் தந்தது. ஆகவே அந்த காமிக்சை ஆன்லைனில் வாங்கினேன். புத்தகம் கைக்கு கிடைத்த போது, பெரிய ஏமாற்றம் எதுவுமில்லை. தரமான பதிப்பு. ஆனாலும் இந்த புத்தகத்தை வாசித்து முடிப்பேன் என்ற நம்பிக்கை அப்போது இருக்கவில்லை.

இரண்டாம் உலக யுத்தத்தின்போது போலந்திலுள்ள யூதர்களும் கிட்லரின் இன அழிப்பிலிருந்து தப்பவில்லை. யூதர்கள் வசித்த இடங்களிருந்து விரட்டப்பட்டு அகதி முகாம்களில் தங்கவைக்கப்படுகின்றனர். பலர் "காஸ் சேம்பர்ஸ்" எனப்படும் மனித அழிப்பு சாதனத்துக்குள் கொண்டுசெல்லப்பட்டு ஒரே நேரத்தில் கொல்லப்பட்டனர். அதன்போது சில யூதர்கள் போர் முடியும் தருவாயில் உயிர் பிழைக்கிறார்கள். அதில் தப்பிய ஒரு யூதர்தான் இக்கதையை எழுதிய ஆர்ட் ஸ்பிகேல்மனின் தந்தையாகிய "விலாடேக் ஸ்பிகேல்மன்". தனது தந்தையின் சொந்த கதையை கேட்டு அதனை ஒரு காமிக்சாக மாற்றியுள்ளார். ஆனால் வழமையான கிராபிக் நாவல்களில் வரும் சோகம் வழிந்தோடும் உண்மைக்கதை கிடையாது. வெறும் உண்மைக்கதை அவ்வளவுதான். படங்களில் மனிதர்கள் இல்லை. மனிதர்களுக்கு பதிலாக மிருகங்களே வரையப்பட்டிருக்கும். யூதர்கள் எலிகளாக வரையப்பட்டிருப்பர். அதுபோலவே ஜேர்மானியர்கள் பூனைகளாகவும் அமெரிக்கர்கள் நாய்களாகவும் வரையப்பட்டிருப்பர். படங்கள் கார்ட்டூன் பாணியிலிருக்கும். இரண்டாம் உலக யுத்தக்கதைகளில் தானும் ஒரு பாத்திரமாக ஜரூராக நுழையும் கிட்லரும் இதில் இல்லை. ஆர்ட் ஸ்பிகேல்மனின் தந்தையாகிய விலாடேக் ஸ்பிகேல்மன் சந்தித்த பாத்திரங்கள் மட்டுமே கதையிலிருக்கும். இரத்தம் சொட்ட சொட்ட வரும் வன்முறை சண்டைகாட்சிகளே இல்லை. ஆனால் விலாடேக் ஸ்பிகேல்மன் எதை எவ்வாறு சொன்னாரோ அதை அப்படியே பதிந்திருக்கிறார் கதாசிரியர் ஆர்ட்.


இந்த கதை இருவேறு காலங்களில் நகரும். ஒன்று 1970களில் தந்தையின் கதையை கேட்டறிய "ஆர்ட் ஸ்பிகேல்மன்" தந்தையின் வீட்டுக்கு பலமுறை விசிட் அடிக்கும்போது நடைபெறும் சம்பவங்கள். மற்றையது இரண்டாம் உலக யுத்தத்தின்போது நடைபெறும் வேதனை மிகுந்த காலப்பகுதி. இருவேறு காலப்பகுதிகளிலும் வெவ்வேறான சுவாரஸ்யங்களுடன் கதை பின்னப்பட்டுள்ளது. "ஆர்ட் ஸ்பிகேல்மனுக்கும்" அவரது தந்தைக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் நேர்மையாகவும் சுவாரஸ்யமாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அந்த உரையாடல்களில் போரினால் மனஉளைச்சலுக்கு உள்ளான ஒரு நபரின் மன உணர்வுகளும் முதுமையின் இயலாமையும் பளிச்சிடும். ஒரு காட்சியின்போது "விலாடேக்" ஒரு கறுப்பினத்தவரை இனத்துவேஷ வார்த்தைகளால் வர்ணிப்பார். அப்போது ஆர்ட் "நீங்கள் இவர்கள் மீது காட்டும் இனத்துவேஷம் எங்களுக்கும் ஜேர்மானியருக்கும் வித்தியாசம் இல்லாமல் செய்கிறது" என்று சாடுவார். அப்போதும் அவரது தந்தை சளைக்காமல் "நீ எப்படி யூதர்களையும் கறுப்பர்களையும் ஒப்பிடுவாய்" என்று சொல்லி கோபிக்கிறார். இதிலும் தனது தந்தை ஒரு இனத்துவேஷம் மிக்கவர் என்பதை மறைக்காமல் கதை சொல்லலில் நேர்மையை கடைப்பிடிக்கிறார் ஆர்ட். விலாடேக் முதுமையின்போது காட்டும் பிடிவாதம் காரணமாக ஆர்ட்டுக்கு வரும் தர்மசங்கடங்கள் வசிப்போருக்கு புன்னகையை வரவைக்கின்றன. விலாடேக்கின் மாத்திரைகளை எண்ணும் பழக்கம், உணவுப்பொருட்களை வீணாக்காது தனது மகனுக்காக எடுத்துவைக்கும் பழக்கம் போன்றவற்றை நானே பல வயதானவர்கள் செய்வதை கண்டிருக்கிறேன்.
அதனை காமிக்ஸ்வடிவில் காணும்போது அதில் வருகின்ற உரையாடல்கள் நெகிழ்ச்சியை தருகின்றன.

இக்கதையை தந்தையிடமிருந்து கேட்டறிந்து எழுத ஆரம்பித்தபோது ஆர்ட்டின் அம்மாவாகிய "அஞ்சா" உயிரோடில்லை. அதற்கு முன்னராக சில வருடங்களுக்கு முன்னாலேயே தற்கொலை செய்துவிட்டிருப்பார். ஆகவே "ஆர்ட் ஸ்பிகேல்மனுக்கு" ஜேர்மானிய கொலைமுகாம்களில் நடந்த இனஅழிப்பை பற்றி தனது தாயிடம் கேட்டறிய வாய்ப்பில்லாமல் போனது.
ஆனால் "அஞ்சா" டயரி எழுதும் பழக்கமுள்ளவர். ஆனாலும்  "அஞ்சாவின்" தற்கொலையின் பின்னரான காலப்பகுதியில் இருந்த மனஉளைச்சலில் தானே அவற்றை எரித்துவிட்டதாக தந்தை கூறும்போது  ஆர்ட் மனவருத்தம் கொள்கிறார். தனது தாயின் அனுபவங்களை பெற்றுக்கொள்ள ஏதுவாக இருந்த கடைசி சந்தர்ப்பமான டயரி எரிந்து போனதை எண்ணி மனம் வருந்துகின்றார். மீண்டும் மீண்டும் தந்தையின் வீட்டில் டயரியை தேடும்போது ஒரு படைப்பாளனின் வருத்தம் வாசிப்போரையும் தொற்றிக்கொள்கின்றது.

வதைமுகாமில் இருக்கும்போது விலாடேக் உணவுபொருட்களை பண்டமாற்று செய்து உயிர்பிழைக்கும் காட்சிகள் அவரின் புத்திசாலித்தனத்தை பறைசாற்றுகின்றன. கடைசி வரையிலும் உயிரை தக்கவைக்க விரும்பும் அவரின் மனதைரியம் நிறைய பாடங்களை எங்களுக்கு சொல்கின்றது. இப்படி உயிர்பிழைப்பதற்காக வித்தியாசமான தொழில்களை செய்து தப்பிக்கும் காட்சிகள் அபாரம்.

இத்தனைக்கும் இந்த சீரியசான கதையை நகர்த்துவது பொம்மை வடிவிலுள்ள எலிகளும், பூனைகளும், பன்றிகளும்தான். இந்த கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள் எப்படி உணர்ச்சி மிகுந்த காட்சிகளில் முகத்தை வைத்திருக்கும் என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். கதையை வாசிக்கத்தொடங்கி ஐந்தாறு பக்கங்கள் முடிந்த பின்னர். எலிகள், பூனைகளாவும் உங்கள் கண்களுக்கு யூதர்களாகவும், ஜேர்மானியர்களாகவும் தெரிவார்கள். என்னதான் ஒரு எலியை வரைந்திருந்தாலும் அதன் முகபாவம், வயது வேறுபாடு, பால் வேறுபாடு என்பனவற்றை சரியாக வேறுபடுத்தி விளங்குமாறு வரைந்திருப்பார் ஆர்ட்.

இந்த புத்தகம் ஒரு த்ரில்லர் இல்லை. ஆக்சன் இல்லை. ஹீரோ வில்லன் இல்லை. கடைசியில் வில்லனை எப்படி ஹீரோ அழிக்கபோகிறாரோ என்ற பதைபதைப்பு இல்லை. ஆகவே நான் இந்த புத்தகத்தை வாசிப்பதில் அவசரம் காட்டவில்லை. ஒவ்வொரு நாளும் நான்கைந்து பக்கங்களாக இரண்டு மாதங்கள் வாசித்தேன். ஒரு கிழமை வாசிக்கவிடின் கதை மறந்து போகுமோ என்று ஒருபோதும் வருந்தியதில்லை. ஆனால் இந்த புத்தகம் வாசித்து முடித்தபின்னர் ஒரு நல்ல மனஅமைதி கிட்டியது. சில புத்தகங்களை வாசிக்கும்போது  முடிந்துவிட்டதே என்று வருந்துவோம். அந்த கவலையும் எனக்கு வரவில்லை. ஊடகத்துறையில் முதன்மையான புலிட்சர் விருது வென்ற ஒரே காமிக்ஸும் இதுதான்.