Sunday, May 5, 2019

வெறுங்கால் சுட்டிப்பையன் ஜென் - Barefoot GEN Comics


போர் என்பது வெறுப்பான விஷயம். அது துயரம் மிகுந்தது. போர் நடக்கும் நாடுகளில் வசிக்கும் மக்கள் வாழ்க்கையே இருள் மிகுந்து விடுகிறது. உயிர் மேல் இருக்கும் ஆசை, மற்றைய ஆசைகளை தின்று விடுகிறது. போரில் ஈடுபடுவர்கள் ஒருநாள் சாகிறார்கள், ஆனால் நடுவில் இருக்கும் சாதாரண மக்கள்தான் நித்தமும் செத்து பிழைக்கிறார்கள்.  எங்கள் நாட்டின் முப்பது வருட யுத்தத்தின் பெரும்பகுதி எனது சிறு பிராயத்தை ஆக்கிரமித்திருந்தது. யுத்தம் இல்லாத நாடு எப்படியிருக்கும் என்பதே எங்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.  ஒரு வருடம் தொடர்ச்சியாக பள்ளிக்கூடம் போகாமல்கூட  இருந்திருக்கிறேன். வீட்டில் நித்தமும் விளையாடிக்கொண்டிருந்தேன். சிறுவயதுகளில் எதையும் விளையாட்டாகவே பார்த்ததால் போரின் உண்மையான தார்பரியம் சரியாக விளங்கவில்லை. மிராஜ் பிளேன் வரும்போது கதிரைக்கு அடியில் ஒளித்து பாராட்டு பெற்றேன். "சண்டை தொடங்கிட்டுது" என்றாலும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. சண்டை  நடந்தால் பள்ளிக்கூடம் போகாமல் வீட்டில் இருக்கலாம் என்ற ஒரு இனம்புரியாத சந்தோசம் மட்டுமே இருக்கும். ஆனால் வளர்ந்த பிற்பாடு கொழும்பில் இருக்கும்போது ஆமி செக் பண்ண வாரான் என்றாலே காலில் நடுக்கமெடுத்தது வேறு கதை. ஐந்து வயதுகளில்  போர் விமானங்கள் தாழ்வாக பறந்தபோது பங்கர்களில் ஒளிவதையே ஒரு விளையாட்டாக  எடுத்துக்கொண்டேன். பின்னாட்களில் விமான குண்டுவீச்சில் தெரிந்தவர்கள் பலியானபோதுதான் உண்மை நிலை விளங்கியது.  சிறுவர்களுக்கு எல்லாமே விளையாட்டாகவே வாழ்க்கை நகர்கிறது. போர் அவர்களின் வாழ்க்கையை பாதித்தாலும் விளையாட்டு மனநிலையை எதுவும் செய்யாது போலும். ஆனால் அவர்களை நேரடியாக பாதிக்கப்படும்போது விஷயமே தலைகீழாகிவிடுகிறது.

1945ஆம் ஆண்டு ஜப்பானின் ஹீரோஷிமா நகரில் அணுகுண்டு வீசப்படுகிறது. உலக வரலாற்றின் துன்பம் மிகுந்த நிகழ்வு சர்வசாதாரணமாக அமெரிக்காவினால் நிகழ்த்தப்படுகிறது. அதில் கெய்ஜி எனும் ஆறு வயது நிரம்பிய சிறுவன் தனது தந்தை மற்றும் அக்கா, தம்பியை பலியாவதை கண்முன்னே காண்கிறான். சிறுவனான அவனால் அவர்களை காப்பாற்ற முடியாமல் போனாலும், 8 மாத கர்ப்பிணியான தாயுடன் தப்பி பிழைக்கிறான் கெய்ஜி. இந்த அணுகுண்டுஅந்நகரில் வாழ்ந்த மக்கள் எல்லோரின் வாழ்க்கையையும் மாற்றி போட்டுவிடுகிறது. சிறுவனான கெய்ஜியின் மனதில் ஆறாத்துயரை அது ஏற்படுத்துகிறது. கெய்ஜி வளர்ந்து பின்னாட்களில் ஜப்பானின் பிரபல மங்கா காமிக்ஸ் கார்ட்டூனிஸ்ட் ஆக உருவாகிறார். தனது மனதில் பதிந்த துயரத்தை காமிக்ஸ் என்ற மீடியத்தை வடிகாலாக பாவித்து  "Ore wa Mita" என்ற பெயரில் காமிக்ஸாக மாற்றுகிறார். அது "I SAW IT" என்று ஆங்கில மொழியில் மொழிமாற்றம் பெறுகிறது. 1972இல் வெளியான அந்த கதையில் இருந்த சோகம், மகிழ்ச்சி, துயரம் எல்லோரையும் கட்டிப்போட்டது. அவர் அதனை தன்னுடைய சுயசரிதம் போன்று நடந்த உண்மையை அப்படியே விவரித்திருந்தார். இத்தொடர் 48 பக்கங்கள் மட்டுமேயான குறுந்தொடர் மட்டுமேயாகும். இந்த தொடருக்கு கிடைத்த அற்புதமான வரவேற்பை தொடர்ந்து "Hadashi no Gen" என்ற பெயரில் இந்த 48 பக்க சிறுகதையினில் ஒருசில கற்பனைகளை கலந்து கிட்டத்தட்ட 2000 பக்கங்களுக்கு மேற்பட்ட   நெடுந்தொடராக மாற்றுகிறார். 1973ஆம் ஆண்டு தொடங்கி பன்னிரண்டு வருடங்கள் தொடர்ந்த இந்த தொடர் இன்றுவரை ஜப்பானியர்கள் மனங்களில் அழியாத இடத்தை பிடித்திருக்கின்றது. யுத்தத்தில் ஊறிப்போன ஒரு தலைமுறைக்கே ஒருவித வினோத ஆறுதலை அது கொடுத்தது.

யுத்தத்தில் இடம்பெறும் கோரங்களை தெளிவாக விளக்கும் இந்த கதைத்தொடர் இன்றுவரை சிறந்த போருக்கு எதிரான பிரச்சார கதை என்று புகழப்படுகிறது. ஒபாமாவின் ஆட்சியின் போது அணுகுண்டு தொடர்பான அவரின் சிலமுடிவுகளை பார்த்து மனம் நொந்து போன கெய்ஜி அணுகுண்டுகளின் விளைவுகளை விளக்கும் தனது புத்தகங்களின் பிரதிகளை அனுப்ப முயற்சித்தாகவும் சொல்லப்படுகிறது.


இக்கதையில் போர் என்ற மாயவலையில் சிக்கியிருந்த  ஜப்பானிய இராணுவம் பொதுமக்களுக்கு இழைத்த கொடுமையை பற்றியும் கெய்ஜி நாகசாவா தெளிவாக விவரிக்கிறார். அவரின் இவ்வாறான பாராபட்சமற்ற  கதைசொல்லல் முயற்சி மேலும் நம்பகத்தன்மையை கூட்டுகிறது. இக்கதையில் மனிதர்கள் யாரையும் நிரந்தர வில்லன்களாக சித்தரிக்கவில்லை. போரும் அதன்மூலமாக மனிதர்களுக்கு தோன்றும் சுயநலமுமே உண்மையான வில்லன்களாக சித்தரித்திருக்கிறார். ஒரு போர் எப்படி மனித மனங்களை மாற்றி விடுகிறது என்பது பல காட்சிகளில் உணர்த்தப்படுகிறது. அதுமட்டுமன்றி ஜப்பானிய மக்களின் பல நல்ல குணங்களை பற்றியும் அறியக்கிடைக்கிறது.


பாகம் 1: அணுகுண்டு வீச்சுக்கு முன்னரான வாழ்க்கை

கெய்ஜி தன்னை போன்றே உருவாக்கிய கற்பனை கதாப்பாத்திரத்தின் பெயர்தான் "ஜென்". அவனுக்கு ஒரு அக்காவும், இரண்டு அண்ணன்களும் ஒரு குட்டித்தம்பியும் இருக்கின்றனர். போர் காரணமாக ஜப்பானியர்களின் பிரதான உணவான அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் அநேக நேரங்களில் சிறுபிள்ளைகள் பசியில் வாடுகின்றனர். ஒரு காட்சியில்  ஜென் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் சமைக்கப்படாத அரிசியை திருடி அப்படியே மென்று உண்ணுகிறான். அதுவே அவனுக்கு அமிர்தம் போலிருக்கிறது. உணவின் அருமையை இந்த ஒற்றை காட்சி அருமையாக உணர்த்துகிறது. ஜென்னின் தந்தை போருக்கு எதிரான மனப்பான்மையை கொண்டவர். பொது இடங்களில் போரினால்  ஏற்படும் தீமைகளை நேரடியாக தெரிவிப்பதில் எந்தவித தயக்கமும் காட்டாதவர். இதன்மூலமாக போர் என்ற தீவிர மூளை சலவை செய்யப்பட்ட மற்றைய குடித்தனக்காரர்களுடன் எளிதாக சண்டை வளர்க்கிறார். அதனால் கோபமடையும் பக்கத்து வீட்டுக்காரர்கள், அவரது கோதுமை பயிர்களை நாசம் செய்கின்றனர். இந்த நிலையில் வேறு எந்த உணவும் இல்லாத நிலையில் நூற்றுக்கணக்கான வெட்டுக்கிளிகளை பிடித்து வறுத்து உண்கின்றனர். பசியாறிய சிறுவர்கள் மகிழ்ச்சி கொள்கிறார்கள். இப்படியான பல்வேறான காட்சிகளில் அந்த குடும்பத்தின் கஷ்ட ஜீவனம் உணர்த்தப்படுகிறது. ஆனாலும் இடையிடையே வரும் சிறுவர்களின் குறும்புத்தனங்கள் சோகத்தை குறைக்கின்றன.


ஜென்னின் இரண்டு அண்ணன்களும் இராணுவ சம்பந்தமான பயிற்சிகளுக்கு அனுப்பப்படுகின்றனர். அங்கு அவர்களுக்கு கிடைக்கும் அனுபவங்கள் எளிதில் மனதை கரைய வைக்கின்றன. அதில் மூத்த அண்ணனான கோஜி கட்டாயமாக சேர்க்கப்பட்ட போர் விமானி ஒருவரை சந்திக்கிறான். அந்த விமானி ஒரு பல்கலைக்கழக மாணவனாக இருக்கும்போதே கட்டாயமாக தற்கொலை விமானப்படையில் சேர்க்கப்படுகிறான்.  அவன் தனது அம்மா மற்றும் காதலியை நினைத்து பித்து பீடித்தவனாக அலைகிறான். இவ்வாறான மனிதர்கள் போரின் கடுமையான போக்கை வாசிப்பவர்களுக்கு தெளிவாக்குகிறார்கள்.

இது மட்டுமன்றி வேறுபல நெகிழ்வான தருணங்களும் இக்கதையில் இருக்கின்றன.
ஒரு முன்னாள் காலை இழந்த இராணுவ வீரனொருவன் ஜன்னல் கண்ணாடிக்கடை வைத்திருக்கிறான். பெரிதாக வியாபாரம் இல்லாமல் எடுத்த கடனை கட்ட வழியில்லாமல் தவிக்கிறான். இதனை சிறுவன் ஜென் தற்செயலாக அவதானிக்கிறான். அவருக்கு எப்படியாவது உதவவேண்டும் என்று எண்ணும் அவன், ஒரு வீதியில் இருக்கும் எல்லா வீட்டு யன்னல் கண்ணாடிகளை கற்களை வீசி உடைத்து விட்டு ஓடுகிறான். அடுத்த நாள் எல்லா வீட்டுகாரர்களும் ஜன்னல் கண்ணாடி கடைக்கு முற்பணம் தந்து புது ஜன்னல் வாங்குவதற்கு வரிசையில் நிற்கின்றனர். இதனை பயன்படுத்தி அந்த கண்ணாடிக்கடைக்காரன் எளிதாக தனது கடனை கட்டி விடுகிறான். ஜென் செய்த உதவியால்தான் தனது வியாபாரம் கூடியது என்பதை அறிந்த அந்த முன்னாள் சிப்பாய் அவனுக்கு ஒரு கப்பல் பொம்மையை பரிசளிக்கிறான்.

இப்படியாக செல்லும் முதல் பாகத்தின் இறுதியில் அமெரிக்கர்கள் ஹிரோஷிமா நகர்மீது அணுகுண்டை வீசுகின்றனர். அதன்போது ஏற்பட்ட கடுமையான வெம்மை பலரை எரித்து கொல்கிறது. கட்டடங்கள் நொறுங்குகின்றன. உண்மையில் நடந்ததை போன்றே, ஜென்னும் அம்மாவும் தப்பிக்க வீட்டின் இடிபாடுகளுக்குள் சிக்கிய அப்பாவும், தம்பியும், அக்காவும் அணுகுண்டு உருவாக்கிய தீயினால் எரிந்து மடிகின்றனர். ஒரு சில நிமிடங்களின் பின்னர் மக்களின் வாழ்க்கையே அடியோடு மாறிபோய்விடுகிறது.


பாகம் 2: அணுகுண்டு வீச்சுக்கு பின்னரான அகோர வாழ்க்கை

அணுகுண்டுக்கு பின்னரான நாட்களில் ஜென்னும் அம்மாவும் பல சவால்களை . கட்டட இடிபாடுகளிலேயே அவர்களில் நாட்கள் கழிகின்றன. அவர்களை சுற்றி இறந்தவர்களின் பிணங்கள் அங்கங்கே விழுந்து கிடக்கின்றன. அணுகுண்டு அதிர்ச்சி காரணமாக கர்ப்பவதியான ஜென்னின் தாய் ஒரு பெண் குழந்தையை பெற்றுக்கொள்கிறாள். 2-3 நாட்களாக பட்டினியில் இருக்கும் தாய்க்கு பால் சுரக்கவில்லை. அந்த குழந்தை பாலுக்கு அழும்போது மனது வலிக்கிறது. தான் உணவு உட்கொண்டால் மட்டுமே பச்சைக்குழந்தைக்கான பால் சுரக்கும் என்பதை அறிந்த தாய் ஜென்னிடம் அரிசி வாங்கி வருமாறு கூறுகிறாள். ஆங்காங்கே எரிந்து போன பிணங்களால் மட்டுமே சூழப்பட்ட ஹீரோஷிமா நகரில் அரிசி தேடி அலைகிறான் ஜென். அவன் காணும் இடங்களிலெல்லாம் கருகிய உடல்கள் உயிரோடோ உயிரற்றோ இருக்கின்றன. இப்படியாக தேடி களைத்துப்போன ஜென் ஒரு கட்டத்தில் வழியிலேயே உறங்கி விடுகிறான். அவனை காணும் இராணுவத்தினர் அவனை ஒரு உயிரற்ற சடலமாக கருதி ஏனைய பிணங்களுடன் எரியூட்டுகின்றனர். திடுக்கிட்டு விழித்தெழும் ஜென்னை பார்த்து இராணுவத்தினர் உதவி செய்கின்றனர்.

இப்படியாக அரிசி தேடி செல்லும் ஜென், மேற்கொள்ளும் பயணத்தினால் அணுகுண்டின் அழிவுகள் கண்முன்னே காட்டப்படுகின்றன. பல அவலங்கள் மனதை ஏதோ செய்கின்றன. கிட்டத்தட்ட 150 பக்கங்களுக்கு மேலாக சித்தரிக்கப்படும் அவலங்களை வாசிப்பதற்கு ஒரு வன்மையான இதயம் தேவைப்படுகிறது. இவையெல்லாம் உண்மையான நிகழ்வுகள் என்பதை நினைவுகூரும் போது மனம் வலிக்கிறது.


எனக்கு ஜப்பானின் மங்கா பாணியிலான சித்திரங்கள் பரிச்சயமில்லை. ஆகவே இப்புத்தகங்களை வாங்கவே பலதடவை யோசித்தேன். என்னை பொறுத்தவரை கார்ட்டூன் பாணியிலான சித்திரங்கள் கதையில் இருக்கும் கொடூரங்களை குறைக்க உதவியிருக்கிறது. நகைச்சுவைக்கான காட்சிகளில் சிறுவர்களின் முகபாவங்கள் சிறப்பாக இருக்கின்றன. எனினும் கெய்ஜியின் சித்திரங்கள் அணுகுண்டின் பின்னரான சேதங்களை  ஆவணப்படுத்தப்படுத்த போதுமானதாக இருந்ததாகவே எண்ணுகிறேன்.





பின்குறிப்பு :

இந்த நெடுந்தொடருக்கு முன்னராக வந்த 48 பக்கங்களிலான "I SAW IT" அந்த  சிறுகதை லயன் காமிக்ஸில் "நரகத்தை பார்த்தேன்" என்ற பெயரில் 1995/96 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தொடராக வெளியானது.  முதல் பாகம் மாடஸ்தியின் "திகில் நகரம் டோக்யோ" என்ற புத்தகத்தில் நான்கு பக்கங்கள் கொண்ட தொடராக தொடங்கியது. சிறுவயதுகளில் வாசித்த அந்த தொடர் அப்போதே விருப்பத்துக்குரிய தொடராக இருந்தது. உணவு பஞ்சத்தினால் அவதியுறும் கெய்ஜியின் குடும்பம்  வெட்டுக்கிளிகளை வறுத்துச்சாப்பிடும் காட்சி இப்பொழுதும் மனதில் இருக்கிறது. இத்தொடரின் அநேக பாகங்களை வாசித்திருந்தாலும், முழுமையான நெடுந்தொடரை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக பத்து பாகங்கள் கொண்ட இத்தொடரின் முதலிரு பாகங்களை வாங்கி வாசித்தேன்.









2 comments:

  1. I saw it கதை லயன் & முத்துவில் நரகத்தை பார்த்தேன் என்ற பெயரில் தொடராக வெளிவந்துள்ளது ப்ரோ! எந்த நாட்டிலும் எந்த காரணத்திற்காகவுமே போரே வரக்கூடாது! காணொளிகளும் நாளிதழ்களிலும் பார்ப்பதே கொடுரூமாக உள்ளது. போரில் பாதிக்கப்பட்டவர்களின் துயரங்கள்.அதைவிட அவர்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் கொடுமைகள் சொல்லி மாளாதது

    ReplyDelete
    Replies
    1. //
      I saw it கதை லயன் & முத்துவில் நரகத்தை பார்த்தேன் என்ற பெயரில் தொடராக வெளிவந்துள்ளது ப்ரோ!
      //

      அதைப்பற்றி பின்குறிப்பில் எழுதியுள்ளேன். அந்நாட்களில் மிகவும் பிடித்த தொடர்.


      //
      எந்த நாட்டிலும் எந்த காரணத்திற்காகவுமே போரே வரக்கூடாது! காணொளிகளும் நாளிதழ்களிலும் பார்ப்பதே கொடுரூமாக உள்ளது.
      //

      உண்மைதான்.. பலருக்கு வாழ்க்கையே தலைகீழாக மாறிப்போய்விடுகிறது.

      Delete