Wednesday, July 13, 2011
நானும் Batmanஉம்
வழமை போலவே எல்லாம் இருட்டாக இருந்தது. சில் வண்டுகளின் சத்தம் தூரத்திலே கேட்டுக்கொண்டிருந்தது. பக்கத்தில் உள்ள கடையின் வாசலின் மேலுள்ள மின்சார பலகையிலுள்ள சில விளக்குகள் மட்டும் விட்டு விட்டு எரிந்தன. கீழே உள்ள தெருவிலே செல்லும் ஒருசிலர் பேசிக்கொள்ளும் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. Batman எல்லாவற்றையும் மௌனமாக அவதானித்துக்கொண்டிருந்தான். "இவர்கள் யாரோ சாதாரண வழிப்போக்கர்கள்தான், இவர்களது பேச்சிலே எந்தவிதமான மாசும் கிடையாது" என்றான். "இன்று உனக்கு பராக்கு பார்க்க எந்த பிரச்சனையும் ஏற்படாது, மக்கள் எல்லோரும் திருந்திவிட்டனர்" என்று விஷமமாக புன்னகைத்தான் Batman. இன்னும் சிறிது நேரத்தில் விடிந்து விடப்போகிறது, இன்று Batmanக்கு எந்த வேலையும் இதுவரை இருக்கவில்லை. கட்டடம் கட்டடமாக மாறி மாறி இருள் நிறைந்த சந்துகளை பார்வையிட்டதுதான் மிச்சம். எந்த சமூகவிரோதிகளையோ, பொறுக்கிகளையோ Batman இனம்காணவில்லை. "Gotham city திருந்திவிட்டது. இனி எனக்கு ஓய்வுதான். ஒரு பரதேசியும் இனி வாலாட்ட துணிய மாட்டார்கள்". அவன் பேச்சில் ஒரு சிறுபிள்ளைத்தனம் இருந்தது. ஒருவிதமான பெருமையுடன் இருள்நிறைநத தெருவினை நோக்கி பார்த்தவண்ணமிருந்தான்.
"Batman! இன்று நீ எவ்வாறு சட்டபரிபாலனம் செய்கிறாய் என்று பார்க்க ஆவலாக இருக்கிறேன். ஆறு மணித்தியாலமாக உன்னுடன் கட்டடம்
கட்டடமாக தாவித்திரிகிறேன். ஆனால் இன்று பார்த்து ஒரு பரதேசிகூட உன் கையில் மாட்டவில்லையே" என்று அலுத்துக்கொண்டேன். "உனக்குத்தெரியாதா எங்கே எல்லா திருட்டு பயலுகளும் ஒன்று கூடுவார்கள், என்று...?" கொஞ்சம் மெதுவாகத்தான் கேட்டேன். அவன் அதை காதில் போட்டுகொண்டதாக தெரியவில்லை. ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவாறு இருந்த அவன், திடீரென்று "Bat flierஇல் உடனடியாக ஏறு, நாம் உடனடியாக செல்லவேண்டும்" என்று பரபரத்தான். உயரம் என்றாலே மனம் பதறும் நான் ஒருவாறாக Bat flierஇல் ஏறி நடுக்கத்துடன் பயணித்தேன். காற்று வீசாத அந்தவேளையிலும் லாவகமாக Bat flierஇனை செலுத்தி இரு கட்டங்களை தள்ளி நிறுத்தினான்.
வழமைபோலவே தெருவினை உற்று பார்த்துக்கொண்டிருந்தோம். இல்லை.. பார்த்துகொண்டிருந்தான் Batman. "என்ன இழவுக்கு இங்கு வந்து தொலைத்தோம்" என்றேன் சத்தமாக. "சத்தம் போடாதே பையா" சற்று கோபத்துடன் மெதுவாகச்சொன்னான். சட்டென்று ஏதோ கண்டதுபோல கீழே
நோக்கி பறந்து இருளில் மறைந்தான். இரண்டு மாடிகளே உள்ள அந்த கட்டடத்தில் உச்சியில் நான் இருந்தேன். குளிர்க்காற்று வீசியது. எதனையும்
பார்க்க முடியாதவாறு இருளாக இருந்தது. எங்கு போய் தொலைந்தானோ தெரியவில்லை. திடிரென்று கீழே வெளிச்சம் தெரிந்தது. ஒருவன்
Batmanஇன் முன்னால் சிகரட் பற்ற வைத்துக்கொண்டிருந்தான். அவன் தொப்பி அணிந்திருந்தான், முகத்தில் பெரிதாக சலனமிருக்கவில்லை. Batman அவனிடம் ஏதோ கேள்விகள் கேட்டான். அவனும் ஏதோ சொன்னான். விவாதம் வலுக்க, Batman அவனது சட்டையை பற்றி இழுத்தான். அவன் மெதுவாக சிகரேட்டினை எடுத்து Batmanஇன் கண்ணுக்குள் சுட முயற்சித்தான். அவன் ஏறத்தாழ முயற்சியில் வெற்றி பெறுவதற்குள் வேகமாக அவன் கையை பிடித்து தடுத்தான். எனினும் அவனால் தனது இமைப்பகுதியில் ஏற்படவிருந்த காயத்தினை தடுக்கமுடியவில்லை. Batman அசந்த அந்த வேளையில் அந்த கருங்காலி ஒட்டமெடுத்தான். வேறு பலர் அந்த இடத்தினை நோக்கி ஓடிவரும்
சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. Batman தள்ளாடியவாறு, நான் இருந்த கட்டடத்தினை பிடித்து ஏற ஆரம்பித்தான். உறைந்து போய் நின்ற நான்,
ஏறி வருவதை பார்த்துக்கொண்டிருந்தேன்.
"ஏய் பையா! உன் கையை கொடு" என்றான். ஏறத்தாழ அவன் கூரையை வந்தடைந்திருந்தான். இவ்வளவு தூரம் ஏறியவனுக்கு, கடைசியில் ஏற
முடியாமல் உடல் நடுங்கினான். ஒரு கையினால் போரணையை இறுகப்பற்றிக்கொண்டு, மற்ற கையினை கொடுத்தேன். யம்மாடி! என்ன ஒருகனம். ஒருவாறாக மேலே ஏறி வந்துவிட்டான். நல்லவேளை அவனுடன் சேர்ந்து கீழே விழாமல் தப்பித்து விட்டேன். "சை! என் கண்ணை காயப்படுத்தி
விட்டான்". அவனது இமைப்பகுதி கொஞ்சம் சேதமாகியிருந்தது. "நான் உடனடியாக எனது மறைவிடத்திற்கு செல்ல வேண்டும்" என்று
சொல்லிக்கொண்டே Bat flierஇல் ஏறினான். நானும் அதன் மேல் தொற்றிக்கொண்டேன். எனது வீட்டிற்கு அண்மையாக Bat flierஇல்
பறந்து சென்று ஒரு வட்டமிட்டான். மூன்றாம் மாடியிலுள்ள எனது பால்கனியில் பாய்ந்தேன். "நாளை இரவு நேரத்திற்கு வந்துவிடு" என்றேன். அவன் திரும்பிப்பாராமல் பறந்து போனான். மெதுவாக யன்னலை திறந்து உள்ளே நுழைந்தேன். Kitty என்னை பார்த்து "மியாவ்" என்று சோம்பலாக சத்தமிட்டு காலை சுற்றி வந்தது. நேரத்தினை பார்த்தேன். ஐந்து மணியாகி விட்டது. உடல் முழுக்க பயங்கரமாக வலித்தது. படுக்கையில் விழுந்தாலும் தூக்கம் வரவில்லை. எப்போது தூங்கினேன் என்று எனக்கே தெரியவில்லை.
டக்.. டக்.. யாரோ தட்டும் சத்தம் என்னை உறக்கத்திலிருந்து எழுப்பியது. கதவினை பார்த்தேன். டக்.. டக்.. சத்தம் யன்னல் பக்கமாக கேட்டது. Batman பொறுமையில்லாமல் யன்னலை தட்டிக்கொண்டிருந்தான். வெளியே இருள் கவிந்திருந்தது. யன்னலை திறந்த அவன் கையை அசைத்து வேகமாக வருமாறு சைகை காட்டினான். நரிப்பயல்.. எனக்கு எதாவது உணவை உள்ளே தள்ள அவகாசம் தரப்போவதில்லை. Kitty திறந்த யன்னலால் பாய்ந்து Batmanஇடம் ஆதரவாக தனது உடலால் வருடியது. Batman அதனை அதிசயமாக பார்த்துக்கொண்டே இருந்தான். கனிவாக அதனை வருடிகொடுத்தான். எங்கோ சிந்தனையை பறிகொடுத்தவனாக சிறிது நேரம் செயலற்றிருந்தான். ஒருவேளை Catwomanஇன் ஞாபகத்தினை Kitty தூண்டியிருக்கலாம் என்று சிரித்துக்கொண்டேன். நான் Bat flierஇல் பாய்ந்து தொற்றிக்கொள்ள வேகமாக பறந்தான். வீதி விளக்குகள் குறைவாக உள்ள கட்டடங்கள் வழியே Bat flierஇனை செலுத்தினான். தொடர்ச்சியாக முப்பது நிமிடங்களுக்கு மேலாக
பறந்து கொண்டிருந்தான். எனக்கு கையெல்லாம் வலித்தது. "எப்போதுதான் நிறுத்தபோகிறானோ, தெரியவில்லை". அந்த இருள் நிறைந்த ஆளரவமற்ற சிறு தெருவிலே மூலையிலே நான்கைந்து நபர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். நேற்று Batmanனை தாக்கிய அதே மனிதன்தான் மற்றவர்களுக்கு கட்டளை பிறப்பித்தவாறு சிகரட் புகைத்துக்கொண்டிருந்தான். அந்த வீதியில் இருந்த ஒரு பெரிய கட்டடத்தில் பின்னால் Bat flierஇனை தரையிறக்கி நோட்டமிட்டான். அவர்கள் ஒரு பெட்டி முழுக்க ஆயுதங்களை வைத்துக்கொண்டு ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். Batman மெதுவாக அவர்களை சத்தமில்லாமல் நெருங்கினான். எனினும் சத்தம் கேட்டு திரும்பிய போக்கிரிகள் வெலவெலத்துப்போனார்கள். சற்றும் தாமதிக்காமல் அவர்கள் முகத்தில் குத்தினான். அவர்களும் சளைக்காமல் தோட்டா போடப்படாத வேற்றுத்துப்பாக்கியால், Batmanனை தாக்கினர். Batmanனும் அவர்களுடன் கடுமையாக போராடி அவர்களின் எண்ணிக்கையை இரண்டாக குறைத்தான். அவர்கள் போட்ட சத்தத்தினால் ரோந்து சென்று கொண்டிருந்த போலீஸ் கவரப்பட்டது. ஒரு போலீஸ் கார் அந்த இடத்தினை நோக்கி வரும் சத்தம் கேட்டது. இதை கேட்டு திரும்பிய Batmanனை ஒருவன் பலமாக பிறடியில் தாக்கினான். அந்த அடியில் சாய்ந்த அவனை மேலும் பலமாக தாக்கினார்கள். நான் வேகமாக அந்த இடத்தினை நெருங்கி கையில் கிடைத்த இரும்பு கம்பியினால் அவனை தாக்கினேன். அவன் Batmanனை விட்டுவிட்டு என்னை நோக்கி வந்தான். மீண்டும் அவனை ஒருமுறை தாக்கவும், அவன் என்னை
பலமாக காலில் தாக்கினான். அந்த பயங்கர வலி மூளையைத்தாக்க கீழே விழுந்தேன். போலீஸ் கார் அருகாமையில் நிறுத்தப்படும் சத்தம் காதில் விழுந்தது. நல்லவேளையாக அந்த போக்கிரி தட்டுத்தடுமாறி ஒட்டமேடுத்தான். ஒரு சில போலீசார் அவன் பின்னால் ஓடினர். மற்றவர்கள் கீழே விழுந்திருந்தர்களை கைது செய்தனர். Batman எங்கே போய்விட்டான்? சுற்றும் முற்றும் பார்த்தேன் அவனை காணவில்லை. நல்லவேளை போலீசாரிடமிருந்து தப்பிவிட்டான். ஆனால் அதோ மேலே இருக்கிறான். கையினால் சைகை காட்டி பிறகு சந்திப்போம் என்கிறான். ஒரு போலீஸ் வீரர் என்னிடம் வந்து இரத்தம் வரும் காலில் கட்டுப்போட்டார்.
"தம்பி, உன் பெயரென்ன?" என்றார்.
நான் மெதுவாக "Bruce Wayne" என்றேன்.
Labels:
batman,
bruce wayne,
catwoman,
shortstory,
சிறுகதை
Subscribe to:
Post Comments (Atom)
//Batman எங்கே போய்விட்டான்? சுற்றும் முற்றும் பார்த்தேன் அவனை காணவில்லை. நல்லவேளை போலீசாரிடமிருந்து தப்பிவிட்டான். ஆனால் அதோ மேலே இருக்கிறான். கையினால் சைகை காட்டி பிறகு சந்திப்போம் என்கிறான். ஒரு போலீஸ் வீரர் என்னிடம் வந்து இரத்தம் வரும் காலில் கட்டுப்போட்டார்.
ReplyDelete"தம்பி, உன் பெயரென்ன?" என்றார்.
நான் மெதுவாக "Bruce Wayne" என்றேன்.//
மிகவும் ரசித்தேன். தொடர்ந்து இதைப்போலவே புனையவும்.
செம
ReplyDelete