Thursday, October 27, 2011

லயன் காமிக்ஸ்! ஒரு எளிய அறிமுகம்

அப்போது எனக்கு ஏழு வயது. அக்காலங்களில் அப்பா வாழைச்சேனை கடதாசி ஆலையிலே பணிபுரிந்து வந்தார். நாங்களும் ஆலைக்கு பக்கத்திலுள்ள குடிமனையிலே வசித்து வந்தோம். வாழைச்சேனை ஒரு கிராமம். கடதாசி ஆலைக்கு பக்கத்தில் காடுபோல மரங்களால் சூழப்பட்டிருக்கும். அப்பா பணி நிமித்தமாக எப்போதாவது முந்நூறு கிலோமீட்டர்களுக்கு அப்பாலுள்ள கொழும்பு நகரத்துக்கு சென்று வருவார். அப்போது தேவையான முக்கிய பொருட்களை வாங்கி வருவார். சிறுவயதுகளில் நான் அப்பாவிடம் எனக்காக வாங்க சொல்லும் பொருள் "விளையாட்டு கார்". விதவிதமாக கார் பொம்மைகளை வாங்கி குவித்து அழகு பார்ப்பதே வாழ்க்கையின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. பின்னர் வயது ஏற ஏற, ஒருவழியாக கார்களின் மேல் உள்ள மோகம் குறைந்து, காமிக்ஸ் மேல் எனது மோகம் தாவியது. பிறகு என்ன! அப்பாவிடம் "ராணி காமிக்ஸ்" வாங்கி வரச்சொல்லிவிட்டு, கொழும்பிலிருந்து மதியம் வரவேண்டிய அப்பாவிற்காக காலை முதலே வாசலில் காத்திருப்பேன். அப்பா கொண்டு வரும் பெரிய பயண பொதியில் "தோடம்பழ" வாசனையடிக்கும். அந்த பொதியை திறந்தாலே வீடு முழுக்க ஒரே தோடம்பழ வாசனைதான். முன்பெல்லாம் ஆப்பிள், ஆரஞ்சு பழங்கள் கொழும்பில் மட்டுமே கிடைக்கும். அக்காலங்களில் நீங்கள் ஆப்பிள், ஆரஞ்சு பழங்கள் வாங்காமல் போனால், "கொழும்புக்கு போய் வந்திருக்கேன்" என்று நீங்கள் கற்பூரம் அடித்து சத்தியம் செய்தாலும் நம்ப மாட்டார்கள். அப்பாவும் தவறாமல் அந்த பணக்கார பழங்களை வாங்கிவருவார். காமிக்ஸ் தேவையென்றால் பயண பொதியின் அடிவரை தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறான தேடுதலின் விளைவாக பொதியின் அடியிலே ஒரு காமிக்ஸ் சிக்கியது. அது எனக்கு மிகவும் பிடித்த மாயாவி கதை இல்லை. அதுமட்டுமல்ல அது ராணி காமிக்ஸ் கூட இல்லை. சற்று மாறுபட்ட ஒரு அட்டைப்படம். ராணி காமிக்ஸ் போலல்லாது முன்பக்கம் மட்டுமே பளபளப்பான பொலித்தீன் அட்டை இடப்பட்டிருந்தது. ஆனால் ராணி காமிக்ஸுக்கு இருபக்கமும் பளபளக்கும். பெரிய ஏமாற்றமாக இருந்தது. "லயன் காமிக்ஸ்" என்று அந்நியமான பெயரில் ஒரு காமிக்ஸ்.

"மரணத்தின் நிழலில்" என்ற அந்த இதழினை ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தேன். வசனங்கள் புரியவில்லை. படங்கள் சிறியதாக இருந்தன ஏகப்பட்ட வசனங்களுடன் கதை புரியாமல் இருந்தது. எந்த ஆர்டரில் எந்த கட்டத்தினை வாசிப்பது என்று புரியாமல், சில சமயம் திக்குமுக்காடிப்போனேன். எளிமையான ராணி காமிக்ஸுக்கு பழகிவிட்டிருந்த எனது மூளை லயன் காமிக்ஸுக்கு இசைவாக்கமடைய திணறியது. ஏனோ தானோவென்று கதையை வாசித்து முடித்தேன். ஆனால் அண்ணாவுக்கு அந்த கதை ரொம்ப பிடித்திருக்க வேண்டும். கதையை இஷ்டத்துக்கு புகழ்ந்து தள்ளினான்.

"முன்பே இந்த லயன் காமிக்ஸை ஊரில் உள்ள வாசிகசாலையில் வைத்து வாசித்திருக்கிறேன். எல்லா கதையும் சூப்பராக இருக்கும். இதில Batman கதைகூட வருமடா. படத்தினை பார்ரா. நல்லா இருக்கு இல்லே" என்பான். ஆனால் எனக்கு மட்டும் அது அவ்வளவாக பிடிபடவில்லை. அக்கதையின் ஹீரோ நார்மன் வேறு வெறி கொண்ட மூஞ்சியை வைத்துக்கொண்டு சின்னப்பயலான என்னை பயம்காட்டுவார்.

இவ்வாறே எனது ரசனையில் மாற்றமின்றி காலங்கள் கடந்து சென்றன. ஒரு சில லயன் காமிக்ஸ்கள் இக்காலங்களில் என்னை வந்தடைந்தன தொலைந்தன. டெக்ஸ் வில்லரின் யதார்த்தமான சாகசமான "பழி வாங்கும் புயல்" கூட கிடைத்தது. அது கிட்டத்தட்ட 120 பக்கங்கள் கொண்ட ஒரு மெகா சைஸ் புத்தகம். இதுவரை காலமும் காமிக்ஸ் என்றால் 66 பக்கங்கள்தான் standard என்று எண்ணியிருந்தேன். முதன்முறையாகவே வாசித்து முடிக்கமுடியாமல் திணறி அப்புத்தகத்தினை வாசிப்பதையே நிறுத்தி விட்டேன். இவ்வாறான வறட்சியாக போய் கொண்டிருந்த எனது காமிக்ஸ் இலக்கிய வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்கும்முகமாக என் பள்ளி தோழன் செந்தூரன் ஸ்பைடரின் "சிறுபிள்ளை விளையாட்டு" என்ற சூப்பர் ஹீரோ கதையை இரவல் தந்தான். அதற்காக என்னுடைய "மாய முரசு" என்ற மாயாவியின் கதையை அவனுக்கு கொடுத்திருந்தேன். ஸ்பைடரின் வில்லத்தனமான ஆக்சனும் அவனது கடுப்பான வசனங்களும் என்னை மிகவும் கவர்ந்தன. பாக்கெட் சைஸில் வேறு இருந்த அந்த புத்தகத்தினை வாசித்த அண்ணா ஒருவித பரவசநிலையில் இருந்தான். இருவரும் அக்காலங்களில் அந்த கதையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து விமர்சித்தோம். அதன்பின்னர் ரணி காமிக்ஸ் மேலுள்ள மோகம் மெதுவாக லயன் காமிக்ஸ்/முத்து காமிக்ஸ் மேல் தாவியது. எல்லா புத்தகங்களையும் தேடித்தேடி வாசிக்க ஆரம்பித்தேன். பாதுக்காத்து வைக்காமல் விட்ட இதழ்களை எண்ணி வருந்தினேன்.. என்னை நானே திட்டித்தீர்த்தேன்..

நான் சீரியஸாக லயன் காமிக்ஸ் வாசிக்க தொடங்கி நான்கைந்து வருடங்களில் பழைய முக்கிய ஹீரோக்களின் கதைகள் குறைய ஆரம்பித்தன. நான் வாசிக்க தொடங்கிய உடனேயே லயன் காமிக்ஸ் நிறுவனத்தினருக்கு அட்டமத்து சனி தொடங்கியிருக்குமோ! என்னவோ!. லயன் காமிக்ஸின் முதன்மையான ஹீரோவான ஸ்பைடரின் கதைகளையே "காமிக்ஸ் கிளாசிக்ஸ்" reprint புண்ணியத்திலேதான் தரிசிக்க முடிந்தது. டெக்ஸ் வில்லர் அடிக்கடி வந்து உற்சாகத்தினை தக்க வைத்து கொண்டிருந்தார். "கழுகு வேட்டை" போன்ற ஒரு கதையில் வரும் அகோரமான வில்லன் என் மனதை விட்டு இன்னும் அகலவில்லை. அந்த கதையில் வரும் climaxஇல் ஒற்றைக்கு ஒற்றை துப்பாக்கி சவால் சண்டை அழகாக அமைத்திருப்பார்கள். வாசித்து முடிக்கும்போது டெக்ஸ் வில்லருக்கு மட்டுமல்ல எங்களுக்கே வியர்த்துவிடும் அளவுக்கு சூப்பர் climax. "மரண முள்" கதையில் வரும் மயிர்கூச்செறியும் "மரணமுள்கள்" ஒரு வித்தியாசமான கதை. அதன் வித்தியாச கதைகளனுக்காக பெயர் போன விஞ்ஞான கட்டுக்கதை.


90களின் இறுதியில் புதிய புதிய ஹீரோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். சிலரை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர் சில ஹீரோக்களை பற்றி கண்டனம் தெரிவித்து விஜயன் அவர்கட்கு கடிதங்கள் பல எழுதினர். ஆனால் எனக்கும் எல்லா கதைகளும் பிடித்துபோகுமளவு ஒருவித வெறி வந்துவிட்டது. இப்போது எப்போதாவது ஆடிக்கொருமுறை ஒருசில புத்தகங்கள் வெளிவருகின்றன. ஆனாலும் பழைய காமிக்ஸ் புத்தகத்தினையும் சேர்த்து வைத்து விட்டு மீண்டும் மீண்டும் படிப்பதே ஒருவித மகிழ்ச்சியை தருகிறது. நேரம் கிடைக்கும்போது பழைய புத்தகக்கடையில் தேடுதல் வேட்டை நடத்துகிறேன்.. கிடைத்தற்கரிய காமிக்ஸ் எதாவது கிடைத்தால் சின்ன புள்ள தனமா துள்ளி குதிக்கிறேன்..


வழமை போல இப்பதிவிலுள்ள அழகான scanகளை கிங் விஷ்வாவின் tamilcomicsulagam தளத்திலிருந்தும், ஒலக காமிக்ஸ் ரசிகரின் mokkaicomics தளத்தில் இருந்தும் அனுமதியில்லாமல் சுட்டு போட்டிருக்கிறேன். என்ன செய்வது சிறுவயதில் இருந்தே பிட் அடிப்பது வழக்கமாகி விட்டது :)

9 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. Tex Viller in diehard fan naan ... Oru theebavali release kku 300+ pages la oru book. 94m aandu irukkalaam. 7 or 8 stories ... summaa super ah irukkum ..


  Pinaadikku, Spiderman thirunthinaa piraku vantha stories elaam dappa stories ... may be engalukku vayasu aachcho ennavo?

  ReplyDelete
 4. தோழர்,
  //வழமை போல இப்பதிவிலுள்ள அழகான scanகளை கிங் விஷ்வாவின்tamilcomicsulagam தளத்திலிருந்தும், ஒலக காமிக்ஸ் ரசிகரின் mokkaicomics தளத்தில் இருந்தும் அனுமதியில்லாமல் சுட்டு போட்டிருக்கிறேன். என்ன செய்வது சிறுவயதில் இருந்தே பிட் அடிப்பது வழக்கமாகி விட்டது :)//

  இதற்கெல்லாம் எதற்கு அனுமதி? அடிச்சு தூள் கிளப்புங்கள்.

  ReplyDelete
 5. wonderful post buddy . It is always nice to have a brother who loves a comics ,so that we can discuss about it .This particular issue of Lion Comics , I remember well my brother bought it from Madurai when we were in Tirnlveli.It is amazing that a story that looks like dumb one @ certain part of our age will look like great at particular part of our age .

  ReplyDelete
 6. தோழரே! என் பள்ளி நாட்களை நினைவுக்கு கொண்டுவந்தன உமது பதிவு! நன்றிகள் பல! கேப்டன் டைகரை பற்றி எதுவும் கூறவில்லையே?! ஏன், டெக்ஸ் அளவிற்கு அவர் கதைகள் உங்களை ஈர்க்கவில்லையா? :)

  ReplyDelete
 7. நண்பர்களே உங்கள் மேலான கருத்துக்கு நன்றி..


  ஹாய் Cap Tiger,

  காப்டன் டைகரை மறந்தமைக்காக பத்து தோப்புக்கரணம் போட்டுகொள்கிறேன் :).
  காப்டன் டைகர் பற்றி சீக்கிரமே தனியாக ஒரு பதிவிட்டு பரிகாரம் தேடிகொள்கிறேன்..

  ReplyDelete
 8. Mm... athu oru kanakalam. You know those days were very very really interesting days. I just wonder where Appa supposed to buy comics books. I think whenever Appa came from Colombo sure there would be a comics book(s) too. mmm.. Oru puthakatha eththana murai vaasippom. Can you remember Indian Ink and our comics book?

  ReplyDelete
 9. ஹாய் அண்ணா,
  அந்த இந்தியன் இங்க் காலங்களில் நீங்க மொழிபெயர்க்க முயன்ற "Blazing Colts" காமிக்ஸ் பற்றி நல்லா ஞாபகம் இருக்குது. அதைப்பற்றியும் ஒருக்க எழுதணும்.

  ReplyDelete