2011 ஒருவாறாக முடிவுக்கு வரப்போகிறது. உலகம் அழியப்போகிற 2012 ஆம் ஆண்டும் மலரப்போகிறது. உலக சரித்திரத்தின் கடைசிக்கு முந்தைய ஆண்டில் எனக்கு பிடித்த படங்கள் பற்றி இப்போதே எழுதாவிட்டால் அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ. இப்போதே எழுதி விடுகிறேன். யார் கண்டது? மாயன்களின் கலண்டர் உருவாக்கும் நிபுணர் 2012 டிசம்பர் 21 வரை எழுதிக்கொண்டிருந்தவேளை, யாரோ ஒருவன் "வெள்ளை காக்கா பறக்குது" என்று சொல்ல வெளியே ஓடி வரும்போது தடுக்கி விழுந்து உயிர் பிரிந்திருக்கலாம். இந்த கலண்டரை பார்த்த வெள்ளைகாரன் பயந்து போய் உலகம் 2012 டிசம்பர் 21இல் அழிந்து போய் விடும் என்று சொல்லிட்டிருக்கான். அது மட்டுமல்லாது உலகத்தினை அழிப்பதற்கு அவனும் தன்னால் முடிந்தளவு உதவியை செஞ்சுட்டிருக்கான். என்னோவோ ஏதோ நான் எனக்கு பிடிச்ச 2011இல் வெளிவந்த படங்களை பட்டியலிட போறேன்.
பார்த்து பிடிச்சு போன 7 படங்கள்.. சில படங்கள் இலங்கையில் ரிலீசாகலை. இதிலே திருட்டு DVD இலே ரிஸ்க் எடுத்துபார்த்த ஒரே படம் ஆரண்ய காண்டம் மட்டும்தான்.
1. வானம்
ஐந்து வெவ்வேறு கோணங்களில் நகரும் படம். சிக்கலான திரைக்கதை. Climax புதுசா இல்லாவிட்டாலும் விறுவிறுவென Climax க்கு போகிற வித்தியாசமான படம். இப்படியான படம் தமிழில் வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இடையில் சில தொய்வுகள் இருந்தாலும் நல்ல திரைக்கதை. இதனாலேயே எனக்கு மிகவும் பிடித்தது. சிம்பு என்கிற STR மற்றும் பரத் ஆகியோர் நடித்திருக்கின்றனர். சிம்பு நடிச்ச படம் என்றாலே "இந்த பழம் புளிக்கும்" என்றிருந்த காலம் இப்ப கொஞ்சம் மாறிட்டுது. மனுஷன் இப்பத்தான் கொஞ்சம் உருப்படியான படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
2. ஆரண்ய காண்டம்
எனக்கு Gangster படங்கள் எப்போதுமே பிடிக்கும். இது கொஞ்சம் புத்திசாலித்தனமான நம்பக்கூடிய Gangster படம். திரைக்கதையில் உள்ள ஓட்டைகளை பூதகண்ணாடி வைத்துதான் கண்டுபிடிக்கவேண்டும். அவ்வளவு cleanஆன ரசிக்க வைக்கக்கூடிய படம். என்னதான் இருட்டாக இருந்தாலும், நல்ல சூப்பரான ஒளிப்பதிவு. இதில் நடித்த எல்லோரும் நல்ல realistic ஆன நடிப்பினை வழங்கியிருக்கிறார்கள். இந்த இயக்குனரின் அடுத்த படத்தினை மிகவும் எதிர்பார்க்கிறேன்.
3. மங்காத்தா
நம்ம தமிழ் சினிமா ஹீரோக்கள் ஒரு அறிமுகபாடலுடன் வந்து சும்மா வில்லனுகளை வெளுத்து வாங்குவாங்க. ஹீரோயினை துரத்தி மரத்தினை சுற்றி பாட்டு பாடுவாங்க. வயசை கேட்டா இப்பத்தான் இருபத்திமூன்று முடிஞ்சு இருபத்துநாளாகுது என்பார்கள். இப்படி இருந்த தமிழ் சினிமாவிலே வில்லனாக வந்து அசத்தியிருப்பார் அஜித். நாலைஞ்சு இங்கிலீஷ் படத்தை போட்டு ஒரு மிக்சியிலே அடிச்ச மாதிரி இங்க சுட்டு அங்க சுட்டு ஒரு விறுவிறுப்பான திரைக்கதை அமைத்திருப்பார் வெங்கட்பிரபு. வழமையான போலித்தனம் இல்லாத திரைக்கதையும் அஜித்தின் நடிப்பும்தான் எனக்கு பிடித்திருந்தது.
4. தெய்வதிருமகள்
இந்த படம் வந்த போது எத்தனை பேர் பாராட்டினார்களோ.. அதே அளவு விமர்சகர்கள் படத்தினை தூற்றவும் செய்தார்கள். நல்ல வேளை இதன் ஆங்கில பதிப்பினை நான் பார்க்கவில்லை. இதனாலோ என்னோவோ இந்த படம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. இம்மாதிரியான படங்களை தமிழில் எடுக்க நல்ல தைரியம் வேண்டும். என்னதான் கதையை இங்கிலீஷ் படத்திலிருந்து சுட்டாலும் நன்றாக தமிழ்படுத்தியிருக்கிறார் இயக்குனர். இதில் நடித்த சிறுமி நிலா நல்ல நடிப்பினை வழங்கியிருக்கிறார். என்னதான் சீரியஸ் படமாக இருந்தாலும் நகைச்சுவையை கலந்து நன்றாக தந்திருகிறார்கள்.
5. முரண்
சேரன் பிரசன்னா நடித்த நல்ல த்ரில்லர் கதை. இந்த படம் அண்மையாக, Roxy தியேட்டரில் மட்டுமே ஓடியது. வேறு வழியில்லாமல் நல்ல படம் miss பண்ணக்கூடாது என்று நண்பரிடம் சொல்லி தியேட்டருக்கு போனோம். உருப்படாத பழைய இருக்கைகள், முன்னுக்கு இருந்த கனவானின் சிகரெட் வாசம், சொதப்பலான Projection என்று பல இடர்களுக்கு மத்தியிலும் படத்தினை முழுக்க பார்க்க வைத்தது. தொடக்கம் முதல் முடிவுவரை நல்ல சஸ்பென்ஸ். சேரன் பிரசன்னாவின் வெவ்வேறுவிதமான நடிப்பு, நல்ல climax என்பன கவர்ந்தன. இந்த படம் நன்றாக ஓடவில்லை என்ற செய்தி கவலைப்படவைத்தது.
6. கோ
விறுவிறுப்பான திரைக்கதை பாடல்கள் கவர்ந்தன. ஆனால் படத்தில் இடைவேளைக்கு முன்னரே ஒரு இளைஞர் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வருவது நம்ப முடியாத அளவுக்கு இருந்தது. ஆனால் நல்ல technicalஆக cleanஆன படம்.
7. 7ஆம் அறிவு
நல்ல ஒரு ideaவை திரைக்கதையாக்கி இருக்கிறார்கள். ஆனால் திரைக்கதையில் வரக்கூடிய சின்ன சின்ன நல்ல விஷயங்கள் அவ்வளவாக இல்லாமல் வறட்சியாக இருக்கிறது. இடையில் வரக்கூடிய கார்கள் பறக்கும் சண்டைகாட்சி சூப்பர். சீனாவில் நடக்கும் ஆறாம் நூற்றாண்டு காட்சிகள் நடிப்பு நன்றாக இருந்தது. நானும் என் நண்பறும் இந்த படத்தினை பார்க்கபோனபோது சூர்யாவின் தீவிர ரசிகைகள் எங்களது இருக்கைக்கு பின்னால் இருந்தனர். சூர்யா தோன்றும்போதெல்லாம் "சூர்யா i luv you" என்று கத்தினார்கள். விசிலடித்தார்கள். பாட்டுகளின் போது நடனமாடினர். ஒவ்வொரு காட்சிக்கும் எதாவது ஒரு comment அடித்து உயிரை வாங்கினார்கள். இதனாலோ.. என்னவோ.. எங்களால் படத்துடன் ஒன்ற முடியவில்லை. ஆனால் ஆண்கள் கத்துவதை மட்டுமே பார்த்த எனக்கு அது ஒரு புது அனுபவமாக இருந்தது. மூன்று வரிசைகள் தள்ளி முன்னுக்கு இருந்த ஒருவர் அவர்களை திட்டி தீர்த்தார். ஆனால் அந்த பெண்களிடமிருந்து வந்த கடுமையான எதிப்பில் கப்சிப்பானார். இனிமே சத்தியமா சூர்யா படத்தை ரிலீசாகி 25நாளுக்கு பிறகுதான் பார்ப்பேன்.
இதிலே பட்டியலிடபடாத உங்களுக்கு மிகவும் பிடித்த படம் இருந்தால், அது இலங்கையில் ரிலீசாகாமல் இருந்திருக்கலாம். டிக்கெட் வாங்க காசில்லாமல் நான் பார்க்காமல் விட்டிருக்கலாம் :).
ரிஸ்க் எடுக்குறதுல நமக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி, விமல். 7 பட செலக்ஷன் டாப்... தனிபட்ட கருத்துகள் அந்த வரிசையில் இருந்தாலும், ஒவ்வொரு வித்தியாசமான முயற்சி கொண்ட படம் என்பதில் எந்த ஐயமுமில்லை :)
ReplyDeleteஹாய் Rafiq Raja,
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :).
சார், உங்க லிஸ்ட்ல கோ வும் மன்காத்தாவும் தான் நான் பார்த்தது.. எங்கேயும் எப்போதும் பிடிக்கலையா?
ReplyDeleteஹாய் JK,
ReplyDeleteஎங்கேயும் எப்போதும் தியேட்டேர்ல பார்க்கிறதா இருந்திச்சு.. நானும் நிரோஜனும் போறதா பிளான் போட்ட நாளுக்கு முதல் நாள் படத்தை தூக்கிட்டாங்க. நல்ல படத்தை மிஸ் பண்ணிட்டேன்.