"இப்போது நான் கரும்பலகையில் எழுதும் சொற்களுக்கு எதிர்க்கருத்து சொல் எழுதுங்கோ பார்க்கலாம்.. ஒரு பிழைக்கு ஒரு அடி பரிசு" என்று அறிவிப்பு செய்துகொண்டே விறுவிறுவென எழுத ஆரம்பித்தார் ஜீவன் சேர். எங்களுக்கு தூக்கி வாரிப்போட்டது. ஜீவன் சேரை எங்களில் சிலருக்கு பிடிக்கும், பலருக்கு அவர் பெயரை சொன்னாலே வியர்த்து விடும். அழகாக புது பஷனில் ஜீன்ஸ் அணிந்திருப்பார். அவர் பேசும்போது முகத்திலே துறுதுறுவென மீசை நர்த்தனமாடும். இரத்தம் பாய்ந்து சிவப்பேறிய அவரது கண்கள் அவர் ஒரு பெரிய கோபக்காரர் என்பதை பறைசாற்றும். ஏதாவது தப்பு செய்தால் முதலில் அடிப்பார் பிறகு விலாவரியாக சிறப்பு விசாரணையை தொடங்குவார். அவர் வருகிறார் என்றாலே ஒரு பயலும் இருக்கிற இடத்தினை விட்டு அசைய மாட்டான்கள். கண்டிப்புக்கு பெயர் போன அவரை, எங்கள் பாடசாலையின் மானத்தினையே காப்பாற்றப்போகும் ஐந்தாம் வகுப்பு ஸ்கொலர்ஷிப் வகுப்பின் வகுப்பாசிரியராக நியமித்திருந்தனர். நான்காம் வகுப்புவரை எந்த பரீட்சை பற்றியும் கவலையில்லாமல் வண்ணத்துபூச்சி போல பறந்து திரிந்த எனக்கு ஐந்தாம் வகுப்பு ஸ்கொலர்ஷிப் பரீட்சை பற்றிய அறிமுகம் புதுசா இருந்துச்சு. ஐந்தாம் வகுப்பில் காலடி எடுத்து வைத்த நாள் முதல் ஆளாளுக்கு எதாவது சொல்லி வயிற்றில் புளியை கரைத்தார்கள். "ஸ்கொலர்ஷிப் டெஸ்ட் முடியும் மட்டும் நீ விளையாட போக கூடாது" என்று அம்மா தற்காலிக தடைசட்டத்தினை அமுலுக்கு கொண்டுவந்தாள். "நீ பாஸ் பண்ணினா.. புது சைக்கிள் வாங்கித்தாறேன்" என்று அப்பா தனது பேரத்தினை ஆரம்பித்தார். "உங்க மகன் ஸ்கொலர்ஷிப் டெஸ்ட்டிலே பாஸ் பண்ணினா அரசாங்கம் படிப்புக்கு உதவித்தொகையா பத்தாயிரம் ரூபா கொடுப்பாங்க" என்று பக்கத்து வீட்டு அங்கிளும் தன்பங்குக்கு எனது விளையாட்டுக்கு வேட்டு வைத்தார். அவர் பயங்கர ஆளு.. நான் கிரிக்கெட் விளையாடாமல் விடுவதால், அவரது வீட்டு யன்னல் கண்ணாடிகளுக்கு ஏற்படவிருந்த சேதத்தினை முன்கூட்டியே தடுத்துவிட்டார். வீட்டுக்கு வருகிற எல்லோரும் எதாவதுசொல்லி உடுக்கை அடித்து உருவேத்திட்டிருந்தாங்க.
முதல் தவணை பரீட்சை முடியும்வரை ஜீவன் சேரிடம் அடிவாங்காமல் சாதனை படைத்தேன். ஆனால் வகுப்பில் இருந்த பல பயல்கள் அவரது பிரம்பின் ருசியை அறிந்திருந்தார்கள். எங்கள் வகுப்பில் புதிதாக சேர்ந்த "குவில்" என்ற மாணவன் ஒரு தவணைக்குள்ளேயே ஐம்பது அடிவாங்கி அரைச்சதமடித்தான். ஜீவன் சேரிடம் அடி வாங்கி யாருடைய கை நல்லா சிவக்குது என்று மாணவர்கள் தங்களுக்குள்ளே போட்டி நடத்தினர். நான் எப்போதும் வகுப்பின் முதல் வரிசையிலேயே இருப்பேன். உடனே இவன் நல்லா படிக்கிற பயல் என்று தப்புக்கணக்கு போட்டிடாதீங்கோ!.. ஏனென்றால் செந்தூரன் முதல் வரிசையில்தான் மட்டும்தான் இருப்பான். அவன் ஒருத்தன்தான் எனக்கு விளங்கிறமாதிரி அழகான பெரிய எழுத்தில் எழுதுவான். நான் அவனை காப்பியடிக்கத்தான் நான் அவன் பக்கத்தில் இருந்தேனா? அதுவும் இல்லை. எனக்கு எந்த வரிசையில் இருந்து கரும்பலகையை பார்த்தாலும் அதில் ஏதோ எழுதுகிறார்கள் என்பது மட்டும்தான் தெரியும் ஆனால் என்ன எழுதுகிறார்கள் என்பது தெரிவதில்லை. ஆகவே பக்கத்தில் இருந்த செந்தூரன் எழுதுவதை காப்பி எடுத்து விடுவேன். ஆனால் இதனை ஏதோ தடைசெய்யப்பட்ட குற்றச்செயலாகவே கருதினேன். செந்தூரன் ஜீவன் சேரிடம் போட்டுக்கொடுத்து விடுவானோ என்ற பயம் எப்போதும் இருக்கும். ஆகவே அவனுடன் பேசும்போது ஒன்றுக்கு இருதடவை யோசித்தே பேசவேண்டும். செந்தூரன் பெரிய திறமைசாலிதான்.. ஆசிரியர்கள் கரும்பலகையில் எழுதி முடிக்கும்போது அவனும் எழுதிவிடுவான். அதுவே எனது காப்பியடிக்கும் வேலையை எளிதாக்கியது. "நீ நல்லா நெத்தலி மீன் சாப்பிடுடா.. கண் நல்லா தெரியும்" என்பான். ஆனால் எனக்கோ மீனை உலக்கை வைத்து அடித்தாலும் உள்ளே இறங்காது.
ஒருநாள் பள்ளிக்கூடத்திலிருந்து வீடு வந்த என்னை வழமைக்கு மாறாக அக்காவும், அண்ணாவும் கவனமாக அவதானிப்பதை கவனித்தேன். "அந்த காலண்டரில இருக்கிறத வாசி பார்க்கலாம்" என்றாள் அக்கா. அந்த காலண்டர் பத்து மீட்டர் தள்ளி சுவரில் மாட்டப்பட்டிருந்தது. அது நேற்றுத்தான் அப்பா புதுசா ஆபிஸ்லேர்ந்து கொண்டு வந்த கலண்டர். என்ன எழுதியிருக்கு என்று யாருக்கு தெரியும். ஏதோ பொய்யை சொல்லி அவளிடம் மாட்டிகொண்டேன். அம்மாவிடம் போய் அக்கா ஏதோ சொன்னாள். இன்னும் போன தவணை பரீட்சை மார்க்ஸ் இன்னும் தரவில்லையே. என் கண் பார்வையை பற்றித்தான் ஏதோ சொல்கிறாளோ. இதையெல்லாம் கண்டுகொள்ளாது, வழமையான தொழிலான டீவி பார்ப்பதில் கவனம் செலுத்தினேன். டீவி கிட்டத்தட்ட ஒன்றரை மீட்டர் தொலைவில் இருப்பதால் பார்ப்பதில் எனக்கு சிக்கல் இருக்காது. கண்ணை கொஞ்சம் சுருக்கி உற்றுப்பார்த்தால் தெரிந்து விடப்போகிறது. அம்மா தேநீர் கோப்பையுடன் வந்து "ஏன் இப்படி உற்றுப்பார்க்கிறாய்" என்று அதட்டினாள். "எப்ப பார்த்தாலும், இப்படி கிட்ட இருந்து டீவி பார்க்காதே என்று உனக்கு எத்தனை தரம்தான் சொல்வது.. கொஞ்சம் பின்னுக்கு கதிரையை போட்டு பாருடா" என்றாள். அப்பா வந்தவுடன் எனது கண்ணை பற்றிய விசாரணைகள் ஆரம்பமாயின. ஜீவன் சேர்தான் அண்ணாவிடமும் அக்காவிடமும் எனது கண்ணின் திறமை பற்றி போட்டு கொடுத்துவிட்டார். பிறகு என்ன.. எனக்கு கண்ணாடி மாட்டுவற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்தேறின.
ஒரு வாரம் கழித்து எனது மூஞ்சியில் கண்ணாடி ஒன்று ஜம்மென்று அமர்ந்திருந்தது. நான் எங்கு போனாலும் எனக்கு முன்னாலே போனது. இப்போது கரும்பலகை தெளிவாக தெரிகிறது. ஜீவன் சேரின் மீசையிலிருக்கும் ஒரு நரைமுடி கூட தெரிகிறது. "குவிலின்" ஊத்தை பல்லுகூட தெளிவா தெரியுது. ஆனால் சுவர்கள் கொஞ்சம் வளைந்து காணப்படுவது போன்ற ஒரு மாயை இருந்தது. எல்லோரும் என்னை ஏதோ வினோத ஜந்துவை பார்ப்பதைப்போல பார்த்தார்கள். அது நியாயம்தான். அதுவரை இந்த சின்ன வயதில் கண்ணாடியோடு ஒரு பயலையும் அவர்கள் கண்டதில்லை. ஆனால் அதன்பின்பு நண்பர்களிடையே நல்ல மரியாதை கிடைத்தது. "கண்ணாடி போட்டவனேல்லாம் நல்லா படிப்பான்" என்று தப்பு கணக்கு போட்டார்கள். என்னிடமே பாடம் சம்பந்தமான சந்தேகம் கேட்க ஆரம்பித்தார்கள். "குருடர்கள் சம்பிராஜ்ஜியத்தில் ஒற்றை கண்ணன்தான் ராஜா" என்ற பழமொழியைபோல கண்ணாடி போட்டிருந்த எனக்கான கவனிப்புகள் உள்ளூர சந்தோசத்தினை கொடுத்தது..
நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக கழிந்த எனது வாழ்க்கையில் ஸ்கொலர்ஷிப் டெஸ்ட்டும் வந்தது. மறக்காமல் கண்ணாடி அணிந்து சென்று பரீட்சை எழுதினேன். பல நாட்களாக கனவில் பரீட்சை எழுதும்போது இருந்த நடுக்கம் நிஜமாக எழுதும்போது இருக்கவில்லை. பரீட்சை முடிந்து வெளியே வந்தபோது உலகமே கிரிக்கெட் விளையாடும் மைதானம் போல தோன்றியது. மாலை நேரம் வரும்வரை பொறுமை காக்க முடியவில்லை. பிரசாத் வீட்டுக்கு போய் ஸ்டம்ப் பேட்டுடன் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் முற்றத்தில் விளையாட்டினை ஆரம்பித்தோம். கிட்டத்தட்ட ஆறு மாச ஓய்வுக்கு பிறகு இன்றுதான் கிரிக்கெட். பிரசாத் பாஸ்ட் போலர், "வக்கார் யூனுசை" போல ரொம்ப தூரம் ஓடி வந்து கொஞ்சம் ஸ்லோவாத்தான் போடுவான். ஆனாலும் என்னை ஒவ்வொரு மாட்சிலும் போல்ட் ஆக்கி விடுவான். அவன் போடுகிற பந்து எப்படி என் பேட்டில் படாமல் தப்பி விடுகிறது என்ற ரகசியம்தான் தெரிவதில்லை இதோ ஓடி வருகிறான். இன்று விடக்கூடாது. ஒரு சிக்ஸராவது அடிக்கணும். இதோ ஓடி வருகிறான்.. பந்தை வீசி விட்டான்.. இதோ.. சிக்ஸர்... அடடா.. இப்ப பந்து சும்மா புட்பால் கணக்கா சூப்பரா தெரியுது.. விளையாடுவதற்கு கண்ணாடி போட்டு வந்த என் யோசனையை மெச்சிக்கொண்டேன்..
பரீட்சை முடிந்து வெளியே வந்தபோது உலகமே கிரிக்கெட் விளையாடும் மைதானம் போல தோன்றியது
ReplyDelete-- அனுபவித்திருக்கிறேன்!