Wednesday, January 15, 2014

155 ஏறுங்கய்யா! ஏறுங்கம்மா!

155இன் மானசீக தோற்றம்
நீங்கள் எப்போதாவது 155 பஸ்ஸில் சாவகாசமாக பயணித்திருக்கிறீர்களா? நீங்கள் கொழும்புக்கு ஒருமுறை வந்திருந்தாலே போதும், 155 என்பது ஒரு பஸ்சின் இலக்கம் என்பது தெரிந்திருக்கும். ஆனாலும் ஏனைய பஸ் எண்களைகாட்டிலும், கூடிய பிரசித்தமானது. பலர் அந்த பஸ்ஸில் போவதையே தவிர்க்க எண்ணுவார்கள். ஆனாலும் அந்த பஸ் கொழும்பில் பிரபலம். ஏனென்றால் அது அவ்வளவு ஸ்லோவா போகும். ஒவ்வொரு பஸ் நிறுத்தத்திலும் ஐந்து நிமிஷம் நிக்கும். கண்டக்டர் பயல் "பம்பலபிடிய, கம்பஸ், அஸ்வாட்டுவா, மட்டக்குளிய" என்று காது கிழிய கத்துவான். சில பேர் பஸ்ஸை எடுக்கமுன், இறங்கி டீ குடிச்சிட்டும் வந்திடுவான்கள். நான் கொழும்புக்கு வந்த தொடக்க காலங்களில் அப்பா "ஐடேன்ட்டி கார்டை மறக்காம எடுத்திட்டு போ" என்ற அட்வைசுடன் "டேய் நீ நடந்து போனாலும் போ.. தப்பித்தவறிக்கூட 155 பஸ்ஸில் ஏறிடாத.. ஸ்கூல் முடிஞ்ச பிறகுதான் போய் சேருவே" என்று எச்சரிக்கை விடுப்பார். ஆனாலும் சில நாட்களில் தவறுதலாக ஏறி நத்தை மேல் பயணம் செய்ததை போன்ற சுகானுபவத்தை பெற்றேன். A/L படிக்கும்போது, வர்ணம் சேர் physics வகுப்பின்போது பாடம் தவிர்ந்த கதைகள் அவ்வளவா கதைக்கமாட்டார். அந்த மனுசனே ஒருமுறை "155தான் குடுக்கிற காசுக்கு worthஆன பஸ். கொஞ்ச காசுக்கே கனநேரம் உங்களை வைத்துக்கொண்டு கொழும்பை சுற்றி காட்டுவார்கள்" என்றார்.

எனது கொழும்பு பாடசாலை காலங்களில், யாழ்பாணத்தில இருந்து ஒரு நண்பன் எங்களது கொழும்பு பாடசாலையில் சேர்ந்தான். அவன் எல்லா வேலையையும் கொஞ்சம் ஸ்லோவாக செய்வான். அவனுடைய யாழ்ப்பாண பாடசாலையில் அவனுடைய பட்டப்பெயர் "ஆமை". ஆனால் அந்த பெயர் கொழும்பு சூழலுக்கு அவ்வளவு ஏற்றதாக இருக்கவில்லை. எல்லோரும் கூடிப்பேசி அவனுக்கு வைத்த பெயர் "நூற்றிஅம்பதைந்து". சில பரீட்சைகளில், அவன் நேரம் முடிந்தபின்னரும் எழுதிக்கொண்டிருப்பான். "ஏய் நூற்றிஅம்பதைந்து! நேரம் முடிஞ்சிட்டுது. பேப்பரை தா!" என்று வகுப்பாசிரியரே கேலி செய்யும் அளவுக்கு பிரபலமான பட்டப்பெயராக விளங்கியது. கொழும்பில் இருக்கும் ஒவ்வொரு நண்பர் கூட்டத்திலும் ஒரு "நூற்றிஅம்பதைந்து" நிச்சயம் இருப்பான். அவரவர் கதைக்கும் மொழிகேற்றவாறு 155 "வண் டபுள் பைவ்" ஆகவோ "எக்க சீய பணஸ் பகாய்" ஆகவோ இருக்கலாம்.

இஸ்ஷரா யண்ண மள்ளி!
ஆனாலும் 155 போகக்கூடிய பாதையில் வேலைக்கு போகிறவர்கள், சற்றும் மனம் தளராமல் ஒவ்வொரு நாளும் நூற்றுஅம்பதைந்தில் பயணிப்பதை கண்டிருக்கிறேன். பஸ் நிறுத்தத்தில் எனது பஸ்ஸுக்காக காத்திருக்கும்போது நூற்றுஅம்பதைத்தில் பயணம் செய்பவர்களை கூர்ந்து அவதானிப்பேன். அவர்கள் முகத்தில் துறவிகளின் முகத்தில் காணப்படுவது போன்ற ஒருவித சாந்தமும் அமைதியும் இருக்கும். ஏனைய பஸ்களில் பயணிகள் எப்போது தங்களது இடம் வரும் என்று பொறுமையிழந்து நகத்தை கடித்துக்கொண்டிருக்கும்போது, நூற்றிஅம்பதைந்தில் போகும் பயணிகளால் மட்டும் எப்படி இப்படி முடிகிறது என்று எண்ணிவியப்பேன். எங்களது நண்பர் கூட்டத்தில் யாராவது ஒருவர் தப்பிதவறி அதில் ஏறினால் அவனை கலாய்த்து தள்ளுவோம். நூற்றிஅம்பதைந்தில் போவதை ஒரு அவமானமாகவே கருதினேன். கொழும்புக்கு வந்த பத்து வருடங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் பயணித்திருந்தேன். அவ்வாறு பஸ்ஸில் போகும்போது வேறு நண்பர்கள் பார்த்துவிடுவார்களோ என்ற பயம் மனம் முழுக்க வியாபித்திருக்கும்.

ஆனாலும் நூற்றிஅம்பதைந்தினை தங்களுக்கு ஆதாயமாக பாவித்தவர்களும் உண்டு. A/L நேரத்தில சிவா வெள்ளவத்தையில் டியுஷன் கிளாஸ் முடிந்ததும், நூற்றிஅம்பத்தைந்தில ஸ்டைலா ஓடிப்போய் ஏறுவான். "ஏண்டா நீ வெள்ளவத்தையில் இருந்து கொண்டு ஏண்டா மட்டகுளிக்கு ஒவ்வோரு நாளும் போறே?" என்று கேட்டுவைத்தேன். "நான் சுவேதாவை லவ் பண்றன்டா. மட்டக்குளி பஸ்ஸில ஏறினா அவளை பார்க்கலாம்" என்றான்.
"என்னடா அதுக்கு போய் அந்த மானங்கெட்ட பஸ்ல ஏறத்தான் வேணுமா" என்றேன். "இவன் யாருடா புரியாத ஆளா இருக்கான். அவள் மட்டக்குளியவில் இருந்து வாறது எனக்கு எவ்வளவு அதிஷ்டம் தெரியுமா.. இந்த ஒரு பஸ்ஸில் ஏறினால் குறைஞ்சது 2 மணித்தியாலமாவது சைட் அடிக்கலாம். வேற எந்த பஸ்ல இப்படி ஒரு சௌகரியம் கிடைக்குமா. நீயும் மட்டக்குளி ஷ்யாமாவை சைட் அடி.. நூற்றிஅம்பதைந்து ஒரு சொர்க்கம் என்றது தெரியும்" என்றான். இப்படி ஒரு பட்டாளம் 155இலே காதல் வளர்த்து இன்பம் கண்டது.

நூற்றுஅம்பதைந்து எனது வாழ்க்கை என்னும் பயணத்தில் மறுபடியும் குறுக்கிடும் என்று நான் கனவில்கூட நினைத்துப்பார்க்கவில்லை. நானும் கடந்த நான்கைந்து வருடங்களாக மத்தியானச்சாப்பாடு கட்டிக்கொண்டு "அம்மா! நான் போயிட்டு வாரேன்" என்று சொல்லிக்கொண்டு என்னுடைய ஆபீஸுக்கு போய் வந்தேன். எனது ஆபீஸ் 100 பஸ் ரூட்டில் இருந்ததால் நூற்றிஅம்பதைந்தினை பற்றி எண்ணிப்பார்க்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஒருநாள், பக்கத்தில் இருக்கிற பயல் ஆபீஸ் புது இடத்துக்கு மாறப்போகுது என்றான். மனதில் கொஞ்சம் ஆர்வம் மேலிட்டது. ஐந்து பேர் சேர்ந்து Google Mapஇல் புது இடத்தை ஆராய்ந்தோம். அந்த இடத்துக்கு போவதற்கு தேவையான பஸ் ரூட் பற்றிய ஆலோசனை தொடங்கியது. ஒருத்தன் "ட்ரெய்னில் பெட்டாவுக்கு போய் 120 பஸ் எடு" என்றான். இன்னொருத்தன் "ட்ரெய்னில் மருதானைக்கு போய் பதினைஞ்சு நிமிஷம் நடந்தா இடம் வரும்" என்றான். ஒருத்தனுக்கும் நேரடியாக போகவல்ல சரியான பஸ் ரூட் தெரியவில்லை. அப்போது உள்ளே எங்கட Technical Lead (Tech. Lead) பற்றி ஞாபகம் வந்தது. மனுஷனுக்கு கொழும்பு பத்தி அக்குவேறு ஆணிவேறா தெரியும். அவரிடம் ஒரு கேள்வி கேட்டு அவருக்கு பதில் தெரியாவிட்டால் அந்த கேள்வியை அடுத்ததா ஆண்டவனிடம்தான் கேக்கணும் என்பான் நீலன். ஆகவே அவரிடம் பஸ் ரூட் பற்றி விசாரித்தேன். "நீ தெஹிவளையிலிருந்து இருக்கிற.. ஆகவே நீ நூற்றிஅம்பதைந்துதான் எடுத்து புது இடத்துக்கு போகணும்" என்றார். கொஞ்சம் தலையை சுற்றியது. யாரோ என்னை பார்த்து தொடர்ந்து சிரிப்பது போன்றதொரு வினோத உணர்வு ஏற்பட்டது.

இது ஏதோ ஆண்டவனின் புது சோதனை என்று நினைத்துக்கொண்டேன். நூற்றிஅம்பதைந்தில் ஏறவே கூடாது என்று மனதில் சபதம் மேற்கொண்டேன். புதிய இடத்தில் ஆபீஸ் ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளில் ட்ரெய்னில் நாற்பது நிமிட பயணத்தின் பின்னர் ஒரு மேம்பாலம் ஏறி கடந்து Google Mapஇன் உதவியுடன் காலை வெயிலில் வியர்வை வழிய பதினைந்து நிமிட நடையில் ஆபீஸ் போய் சேர்ந்தேன். இப்படியே பத்து நாள் போய்வந்தேன்.  காலையில் ஒவ்வொரு நாளும் முட்டை சாப்பிட வேண்டியிருந்தது. அந்த பத்து நாட்களிலேயே எனது எடை 5 கிலோவால் குறைந்தது. போதாக்குறைக்கு ஆபீஸ்ஸுக்கு லேட்டா போய் yellow card வாங்கினேன்.
இது சாம்பிள்தான் 155 கிடையாது :)

இப்படியே நாட்கள் எனது வைராக்கியத்துடன் கழிந்தன. ஒருநாள் வெளியே சென்றிருந்த சமயம். எனக்கு தெரிஞ்ச அங்கிள் ஒருவர் என்னை பார்த்து அடையாளம் கண்டுபிடிக்க கொஞ்சம் சிரமப்பட்டார். "என்ன அங்கிள்! நீங்களும் மறதி பேராசிரியர் வேலைக்கு சேர்ந்திட்டீங்களா" என்றேன். "இல்லைடா, நீ கொஞ்சம் கறுத்து ஒல்லியா போயிருக்கியா.. அதான் கண்டுபிடிக்க கொஞ்சம் நேரமாச்சுது.. என்ன ஆபீஸ்ல வேலை கூடவா" என்றார். "நான் கறுத்து போயிருக்கேன்" என்ற செய்தி என்னவோ செய்தது. இதற்கு மேலும் கறுக்க முடியாது என்று இதுநாள்வரை நினைத்திருந்த எனக்கு பெரிய அடிதான். எல்லாம் வெயிலில் தினமும் நடக்கும் 15 நிமிஷ நடைதான் காரணம் என்று மனதில் கருவிக்கொண்டேன். "என்ன செய்றது.. ஆபீஸ்சை வேற இடத்துக்கு மாத்திட்டாங்க. அந்த ஸ்லோ பஸ் நூற்றி அம்பதைந்தில மட்டும்தான் போகமுடியும். ஆனா ட்ரெய்னில போய் 15 நிமிஷம் வெயிலில நடக்கணும்" என்று எனது சோகக்கதையை சொன்னேன். "அந்த இடத்திலயா புது ஆபீஸ் இருக்குது. உனக்கு 155 மட்டும்தான் சரிவரும். என்ன செய்றது அந்த பஸ்காரன் பின்னுக்கு பார்த்துத்தானே ஓட்டுறான்.. ஆனா வேற வழியில்லையே" என்றார். இப்படி பலபேர் எனது மாறிவருகிற நிறத்தை பற்றி வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சொன்னார்கள். "மச்சான்! இப்படியே போனால் நீ புதுசா ஐடென்டி கார்ட் எடுக்கணும். வர வர உன்ட முகம் மாறி வருதுடா" என்று வயிற்றில் புளியை கரைத்தான் நீலன். ஆபீஸ்ஸில் பெண்கள் யாராவது சிரித்தாலும் என்னை பார்த்து சிரிப்பது போன்ற பிரமை ஏற்பட்டது. இதைப்பற்றி இரண்டு நாள் நித்திரையில்லாமல் யோசித்ததில் எனது மானத்தை விடவும் எனது தோலின் நிறத்தை பேணுவது அவசியம் என்று தோன்றியது.

இப்பொழுதெல்லாம் சரியாக காலை எட்டரை மணிக்கு நூற்றி அம்பதைந்தில் ஏறுகிறேன். எனது நடையில் இருக்கும் பரபரப்பு இப்போது இல்லை. முகத்தில் ஒரு மகானுக்குரிய அமைதி இருக்கிறது. பஸ்ஸில் ஏறி ஒரு மூலையில் இடம் தேடுகிறேன். இடம் கிடைக்காவிட்டாலும் எந்தவித ஏமாற்றமும் இல்லை. கண்டக்டர் இரண்டு ரூபா மிச்சம் தராவிட்டாலும் திருப்பி கேட்கமாட்டேன். கிடைக்கும் சீட்டில் அமைதியாக இருந்து பெரிய பெரிய புத்தகங்களாக கொண்டு போய் படிக்கிறேன். என்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனிப்பதில்லை. பஸ் எப்போது போய் சேருமோ என்ற படபடப்பு இல்லை. எப்போது கொண்டு விடுகிறானோ. அப்போது இறங்கிக்கொள்கிறேன். எவ்வளவு லேட்டானாலும் என் முகத்தில் அதே புன்முறுவல்தான். நீங்கள் ஏதாவது ஒரு நூற்றிஅம்பதைந்து பஸ்ஸில் என்னை காணமுடியும். அப்போது ஒரு மூலையில் ஒரு புத்தகத்தை திறந்து வைத்துக்கொண்டு இருப்பேன். வந்தீர்கள் என்றால் ஒரு மணித்தியாலத்துக்கு குறையாமல் ஆறுதலாக கதைக்க வாய்ப்பு கிடைக்கும் என்பது உறுதி.




155 பஸ்ஸில் ஏறி அவஸ்தை படும் ஆன்மாக்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்


**நான் இந்த பதிவை எழுதுவதற்கான ஐடியாவை 155ல் பயணிக்கும்போதே யோசித்தேன். உங்களுக்கும் சிந்தனை வறட்சி ஏற்பட்டால் 155க்கு வாங்கோ, சேர்ந்து யோசிக்கலாம்.

9 comments:

  1. Superb Write Up.

    I felt as if i was there in 155.

    ReplyDelete
    Replies
    1. நன்றி விஸ்வா! உங்கட பக்கமும் இப்படி ஏதாவது பஸ் இருக்கா

      Delete
  2. 155 இல் ஒரு தடவையாவது பயணிக்கவேண்டும். ஞானோதயம் தரும் 'வாகனம்' அல்லவா, அது? ஆரம்ப நாட்களில் ஊர் வீதிகளில் 'தட்டி வான்' ஓடியபோது, ''அண்ணை குளிக்கிறார்.. நிக்கட்டாம்.!'' என்று சொன்னால், நின்று ஏற்றிக்கொண்டு போவார்களாம். கிட்டத்தட்ட அந்தப் பாரம்பரிய நடைமுறையை காப்பாற்றும் எண் பேருந்து இதுதான்!! அருமையான எழுத்து நடை. சுவாரஸ்யமான பதிவு! (ஆனால், 155 பஸ் ஐப் பற்றி எழுதிவிட்டு கோட்டை பேருந்து தரிப்பிடத்தை காட்டியிருப்பது மட்டும் ஏனோ?)

    ReplyDelete
    Replies
    1. நன்றி பொடியன்.. உங்களது 'தட்டி வான்' கதை சுவாரஸ்யம்..

      //
      (ஆனால், 155 பஸ் ஐப் பற்றி எழுதிவிட்டு கோட்டை பேருந்து தரிப்பிடத்தை காட்டியிருப்பது மட்டும் ஏனோ?
      //

      இலங்கை பஸ்களுக்கான மொடலை தேடும்போது அம்பிட்ட படத்தை போட்டுட்டேன்.. உண்மைதான்.. அது கோட்டை தரிப்பிடம்தான் போலிருக்கு :)

      Delete
  3. நன்றாக எழுதியுள்ளிர்கள் விமலாகரன், வாழ்த்துக்கள் உங்கள் எழுத்துப் பயணம் தொடர ...

    ReplyDelete
  4. எனக்கும் நீண்டநாள் 155 பஸ் பிரயாண அனுபவம் உண்டு. அதென்னமோ தெரியல பஸ்ல போறமாதிரி Office வேலை அமைந்தாலே 155 ல போறமாதிரித்தான் இருக்கும். இதுபற்றி எப்பவோ ஒரு பதிவு எழுத ஆரம்பிச்சு அப்பிடியே இருக்கு.. எழுத நினச்சாலெ டயர்ட் ஆகுது.

    //என்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனிப்பதில்லை. பஸ் எப்போது போய் சேருமோ என்ற படபடப்பு இல்லை. எப்போது கொண்டு விடுகிறானோ. அப்போது இறங்கிக்கொள்கிறேன். எவ்வளவு லேட்டானாலும் என் முகத்தில் அதே புன்முறுவல்தான். நீங்கள் ஏதாவது ஒரு நூற்றிஅம்பதைந்து பஸ்ஸில் என்னை காணமுடியும்.//

    அதே! அதே! :-)

    ReplyDelete
  5. I am so proud of u that u have published a write up an interesting story like when u were commting in a'155'route bus.I suggest u to send ur writeup to one or more week end journals for publication, so as to catch the eyes of higher authorities concerned,especially public transport authorities.I hope they might take initiate action to resolve the unnecessary stop overs at bus haults thereby quicken the time of travel .Authorities are well aware that '155' bus is commuted by office staff in corporate companies,hospitals,patients,students in universities,who have to report to the workplaces on time .I can refresh my memories during my college days.I togetherwith my collegemates used to take the socalled '155'bus from Wellawatte to Colombo campus to attend our lectures.there had been no such unnecessary delays at bus haults & we could reach the lecure halls on time !.

    ReplyDelete