Monday, March 2, 2015

மறுமலர்ச்சியின் பின்னரான டாப் டென் காமிக்ஸ் இதழ்கள் !!

2000ம் ஆண்டுகளின் பின்னர் காமிக்ஸ் வறட்சி உருவானது. அது அமெரிக்காவில் ஏற்பட்ட Great Depressionஐ போன்றதொரு தாக்கத்தை தமிழ் காமிக்ஸ் உலகில் உருவாக்கியது. ஆனாலும் 2012 ஜனவரி comeback ஸ்பெஷலின் பின்னரான காலப்பகுதியில் லயன் காமிக்ஸ் மீண்டும் வலிமையாக உயிர்த்தெழுந்திருக்கிறது. மாதத்துக்கு 2-3 என்று இதழ்கள் தவறாமல் கிடைக்கின்றன. கனவிலும் எதிர்பார்த்திராத தரத்தில் கலரில் வந்தது எல்லோரையும் கவர்ந்தது. ஆனாலும் இதனை இலங்கையில் பெற்றுகொள்வது குதிரைகொம்பாக இருந்தது. இலங்கையில் பல முன்னணி புத்தக இறக்குமதியாளர்களும் காமிக்சை கைவிட்ட நிலையில், "கோகுலம் வாசகர் வட்டம்" என்ற காமிக்ஸ் நண்பர்களில் முயற்சியால் எங்களுக்கும் காமிக்ஸ் கிடைக்கிறது. கடந்த இரு வருடங்களில் வந்த காமிக்ஸ்களிலேயே top ten வரிசைப்படுத்தும் அளவுக்கு ஏகப்பட்ட இதழ்கள் வந்து விட்டன. ஆகவே ஒரு top ten பதிவை போடுகிறேன்.

** இன்னும் இவ்வருட இதழ்கள் எதனையும் வாசிக்கவில்லை. ஆகவே 2012 ஜனவரி முதல் 2014 டிசம்பர் வரையான இதழ்களை மட்டுமே போட்டியிட்டன.

** மறுபதிப்பு இதழ்கள் எதனையும் சேர்க்கவில்லை. ஆகவே "கார்சனின் கடந்தகாலம்", "புரட்சி தீ" போன்ற evergreen இதழ்கள் ஒதுக்க வேண்டியதாயிற்று.

** இங்குள்ள ஒவ்வொரு கதையும் ஏதோவொரு காரணத்துக்காக பிடிக்கும். விருப்பு அடிப்படையில் வரிசை படுத்தவில்லை.

** இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள படங்கள் ஏனைய காமிக்ஸ் நண்பர்களின் தளங்களில் இருந்து எடுக்கப்பட்டவை. அவர்களுக்கு எனது நன்றிகள் :)

ஒரு சிப்பாயின் சுவடுகளில் 

எங்களுக்கு நெருக்கமானவர்கள் காணாமல் போய்விடுவது என்றுமே தீராத வலியை ஏற்படுத்தும். சாவு ஒருநாள் வலி என்றால். "காணாமல் போய்விடுவது" என்பது பலநாள் வலி. அந்த வலியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த கதை இருவேறு காலங்களில் பின்னப்பட்டிருக்கிறது. அசுவாரசியமாக மிதவேகத்தில் தொடங்கும் கதை கொஞ்சமாக வேகமெடுக்கிறது. போக்கில் நாயகனை ரசிக்கத்தொடங்கி விடுகிறோம். ஒரு கட்டத்தில் அவனுக்கு என்ன நேர்ந்திருக்குமோ என்ற பதைபதைப்பு வாசிப்பவர்களுக்குள் தொற்றிக்கொள்கிறது. வர்ண சேர்க்கைகளும் வித்தியாசமான சித்திர முறையும் எங்களை வியட்னாம் காடுகளுக்கு அழைத்துச்செல்கின்றன. எங்கள் நாட்டில் முப்பது வருட காலமாக இருக்கும் சூழ்நிலைக்கு நெருக்கமான கதையின் கரு கதையுடன் எளிதாக ஒன்றுபடச்செய்கிறது. கதையின் முடிவில் எங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது காணாமல் போய்விட்டவர்களா என்று நினைக்கதொடங்கி விடுகிறோம்.





வல்லவர்கள் வீழ்வதில்லை (டெக்ஸ் வில்லர்)

வழமையான டெக்ஸ் வில்லர் கதைகளில் டெக்ஸ் குழுவினரை வீழ்த்த முடியாத வல்லவர்களாக சித்தரிப்பார்கள். ஆனால் இந்த முறை இந்த கதையின் தலைப்பில் இருக்கும் வல்லவர்களோ வேறு. பல்வேறான வரலாற்று சம்பவங்களை கோர்த்து உருவாக்கப்பட்டிருப்பது சிறப்பு. இந்த கதையை வாசிக்கும்போது ஒருவகையில் எல்லா புரட்சி போராட்டங்களுக்கும் பொதுவான இயல்புகள் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது!!. வில்லருக்கும் "ஹட்ச்" என்பவனுக்கும் இருக்கும் நட்பு. பின்னிக்கும் ஷானுக்கும் இருக்கும் நட்பு. டோலோரஸ் - "ஹட்ச்" காதல் போன்ற மனித உணர்வுகள் கதையின் போக்கை சுவாரசியமாக்குகிறது. வசனங்களுக்காக மட்டுமே மீண்டும் ஒருமுறை வாசித்தேன். சித்திரங்களுக்காக இன்னொரு முறை வாசிக்க வேண்டும். நெருப்பினை சுற்றி அமர்ந்து ஷான் குழுவினர் உரையாடும்போது நெருப்பு வெளிச்சத்தின் உக்கிரம் கண்களில் தாண்டவமாடுவது போன்ற உயிரோட்டமான சித்திரங்கள் அற்புதம். "கார்சனின் கடந்த காலத்தின்" உயரத்தை எட்ட இனியொரு டெக்ஸ் கதை இருக்குமா என்ற என்ற சந்தேகம் எனக்கிருந்தது. அந்த உயரத்தை எட்ட முயற்சித்திருக்கிறது இந்த கதை.




என் பெயர் லார்கோ (லார்கோ வின்ச்)

லார்கோ கதைகள் வழமையான டிடெக்டிவ் பாணி கதைகளை வேறு பரிமாணத்தில் சொல்கிறது. கதாசிரியர் கதையின் போக்கிலேயே உலக பொருளாதாரம், கம்பனி நிர்வாகம், எண்ணெய் வர்த்தகம், பங்குகள், போதைவஸ்து போன்ற விடயங்களில் பாடமெடுக்கிறார். பின்னாட்களில் வந்த கதைகளை காட்டிலும் முதலாவதாக வந்த இந்த கதை ஆக்சன், த்ரில் போன்றவற்றில் தூள்பரத்தியது. ஒன்றையும் சீரியஸாக தலையில் ஏற்றிக்கொள்ளாத அலட்சிய இளைஞன்தான் இப்போதைய சூப்பர் ஸ்டார்.










லார்கோ ஆக்ஸன் ஸ்பெஷல் (லார்கோ வின்ச்)

இந்த டாப் டென்னில் இருக்கும் இரண்டாவது லார்கோவின் கதை. இந்த கதை ஒரு போதை வஸ்து நெட்வொர்க் பற்றிய த்ரில்லர். போதை வஸ்து தயாரிப்புமுறை, உலகம் முழுக்க விரவி கிடக்கும் வர்த்தக நெட்வொர்க் பற்றிய தகவல்கள் சுவாரசியம். எளிமையாக அமைந்த கிளைமாக்ஸ் சினிமாத்தனமில்லாமல் இருந்தது அருமை. என்னை பொருத்தவரை இதுவரை வந்த லார்கோ கதைகளில் மிகவும் பிடித்த கதை.







எமனின் திசை மேற்கு (Wild West Special)

சோகம் இழையோடும் எளிமையான யதார்த்தமான கௌபாய் கதை. பொருத்தமான டல்லான வர்ணங்கள் புழுதி நிறைந்த மேற்கு பகுதிக்கு வாசகர்களை அழைத்து செல்கின்றன. கிராபிக் நாவல் வரிசையில் முதலாவதாக வந்த போதே கிராபிக் நாவல் என்றாலே இப்படித்தான் இருக்கும் என்ற standards ஏற்படுத்திய இதழ்.













ஆகாயத்தில் அட்டகாசம் (ப்ளூகோட் பட்டாளம்)

ப்ளூகோட் பட்டாளத்தின் அறிமுக கதை. அமெரிக்கா உள்நாட்டு போரை பின்னணியாக கொண்ட கதையை போரடிக்காமல் நகர்த்தி செல்கிறார்கள். சீரான நகைச்சுவை வசனங்கள் முழுமையான கதைக்கரு போன்றவை சுவாரசியம். பலூன் மூலமாக வேவு பார்க்கும் முறை மூலமாக வரும் நகைச்சுவை சம்பவங்கள் அருமை.












விரியனின் விரோதி (XIII மர்மம்)

இரத்த படலத்தின் இடியாப்ப சிக்கல் கதைக்குரிய prequelஆன இந்தக்கதை ஒரு தொழில்முறை கொலைகாரனின் பார்வையில் சொல்லப்பட்டுள்ளது. இதுவரை காலமும் கொடூரமான கொலைகாரன் என்று அறியப்பட்ட "மங்கூஸின்" சிறுவயது பிராயத்திலேயே அவனுக்குள்ளே விரோதம் வளர்க்கப்படுகிறது. தொழில்முறை கொலையாளியான ஹான்சை பார்த்து அவனுக்கும் தொழில்முறை கொலையாளியாக வரவேண்டுமென்ற ஆசை வருவது யதார்த்தம். ஹான்ஸ் ஷ்ரைனரை கொலையாளியாக உருவாக்கும் காட்சிகள் சுவாரசியம். ஷ்ரைனரின் முதலாவது கொலையின் பின்னரான பதட்டம் காரணமாக தலைமுடிகள் உதிர்ந்து போகும் காட்சிகள் வாசிப்பவருக்கும் அதேவகையான பதட்டத்தை ஏற்படுத்தும்.








மேற்கே ஒரு சுட்டிப்புயல் (சுட்டி லக்கி)

நான் ஆங்கிலத்தில் Kid Luckyயின் ஒரு சாகசத்தை வாசித்திருந்தேன். அதில் இல்லாத நகைச்சுவையை தேடி ஏமாற்றமடைந்தேன். கோஸ்சின்னி எழுதாத Lucky Luke கதைகள் அவ்வளவாக எடுபடாது. போதாக்குறைக்கு ஆங்கிலம் வேறு அறுவையாக இருக்கும். இதனால் தமிழில் சுட்டி லக்கி எப்படி இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தது. ஆனாலும் வசனங்களில் இருந்த நகைச்சுவை கதையை தூக்கி நிறுத்தியது. எடிட்டர் விஜயன் இந்த கதைக்காக நிறைய மினக்கெட்டு நகைச்சுவை வசனங்களை உருவாக்கியதாக கூறியிருந்தார். சிறுவர்களுக்கும் உகந்ததான இந்த இதழ் சிறந்த மொழிபெயர்ப்புக்காக வெற்றி பெற்றிருப்பது சிறப்பு.




கொலை செய்வீர் கனவான்களே! (Green Manor லயன் All New Special)

புராதன காலம் தொட்டு மனிதன் மனதில் இருக்கும் தீய எண்ணங்களான குரோதம், வன்மம், பழிக்கு பழி போன்ற இயல்புகளை அடிப்படையாக கொண்ட சிறுகதைகளின் தொகுப்புத்தான் Green Manor. வினோதமான கார்ட்டூன் பாணியிலான சித்திரம் மூலம் 100% சீரியசான விஷயத்தை சொல்ல முயற்சித்திருப்பது புதுமை. சில கதைகள் எழுத்தாளரின் புத்திசாலித்தனத்தை பிரதிபலிக்கிறது. புராதன நெடி வீசும் தமிழ் மொழிபெயர்ப்பு பத்தொன்பதாம் நூற்றாண்டு கதைக்களனுக்கு எங்களை இட்டுச்செல்வதில் வெற்றிபெறுகிறது. கோயில்கடை குமரன் அண்ணாவுடன் ஒரு நாள் கதைக்கும்போது Green Manor கதைகளில் ரசித்தவற்றை பற்றி கூறி மகிழ்ந்தார். அவருடன் கதைத்தபின்னர் மீண்டும் ஒருமுறை "ஜான் ஸ்மித்" கதையை வாசித்தேன். அந்த கதையில் "ஜான் ஸ்மித்" என்பவன் பல கொலைகளுக்காக தேடப்படுகிறான். கொலையை துப்பு துலக்கும் இன்ஸ்பெக்டரே சரணடைய வெவ்வேறான காரணங்களுக்காக வெவ்வேறான நபர்களால் நிகழ்த்தப்படும் கொலைகள் நிறுத்தப்படுகின்றன. கடைசியாக கொலைசெய்ய திட்டமிட்டிருந்த ஆசாமி "ஜான் ஸ்மித்" என்று எழுதப்பட்டிருந்த பேப்பர் துண்டை எறியும் கட்டம் கதைக்கு சரியான முடிவை தருகிறது.





வானமே எங்கள் வீதி

இரண்டாம் உலகப்போரை மையமாக வைத்து பல கதைகள் வந்திருக்கின்றன. இந்த கதை விமானங்கள் மூலமாக இடம்பெற்ற தாக்குதல்களை பின்புலமாக கொண்டு அமைக்கபட்ட இந்த non-linear கதை ஏனைய உலகப்போர் கதைகளில் தனித்திருக்கிறது. இரு வேறான காலங்களில் நகர்கின்ற யூகிக்க முடியாத இந்த கதையின் கதையின் போக்கு ஒருவித ஆர்வத்தை மனதில் தோற்றுவிக்கிறது. அடுத்து கதை எப்படி போகுமோ என்ற சுவாரசியம் இங்குள்ள வேறு எந்த கதையும் எனக்கு ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.









11th Man: நம்முடைய டைலன் டாக் - அந்திமண்டலம்

டைலன் டாக் முதல் பத்து இடங்களை சின்ன வித்தியாசத்தில் பிடிக்க தவறுகிறார். ஆனாலும் அவரது அறிமுக கதை வித்தியாசமான கதைகளனால் சுவாரசியம் தருகிறது. ஆனாலும் கதையின் தொடக்கத்தில் இருந்த சுவாரஸ்யம் பின்னர் கொஞ்சம் குறைந்து போவதுதான் ஒரே குறை. நேர்த்தியான சித்திரங்களுக்காக இன்னொருமுறை வாசிக்க வேண்டும்.










** உங்களுடைய டாப் டென் இதழ்கள் வேறுவிதமாக இருந்தாலோ உங்களுடைய favorites புறக்கணிக்கப்பட்டாலோ பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.

21 comments:

  1. அட்டகாஷ்!!!

    செம!!!

    ஒரே ஒரு கதை மட்டும் மிஸ் ஆனது போல ஒரு ஃபீலிங்.

    டெக்ஸ் வில்லரின் நில் கவனி சுடு.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஊக்குவிப்புக்கு நன்றி

      //
      டெக்ஸ் வில்லரின் நில் கவனி சுடு.
      //

      உண்மைதான். இந்த கதையை மிகவும் ரசித்தேன். ஆனாலும் அதே போன்று வேறு சில டெக்ஸ் கதைகள் வாசித்ததாக ஞாபகம் இருந்தமையாலோ என்னவோ, இதனை சேர்க்க தோன்றவில்லை. ஆனாலும் இந்த கதையில் யாதர்த்தம் சுவாரசியமான திருப்பங்கள் நிறைய இருந்தன. உண்மை சம்பங்களை கொண்டு உருவாக்கப்பட்டதாக நீங்கள் facebookஇல் பகிர்ந்த பின்னர் வாசித்தபோது இன்னமும் சுவையாக இருந்தது

      Delete
  2. உங்கள் டாப் டென்னில்

    பளூகோட்

    சுட்டி லக்கி

    வானமே எங்கள் வீதி

    இது மூன்றுமே நல்ல கதைகளாக இருந்தாலும் டாப் டென்னில் வரும் அளவுக்கு இல்லை (அதாவது என் டாப் டென்னில்).

    ஆக நமது ரசனை 70% ஒத்து இருக்கிறது.

    சூப்பர் பதிவு.

    ReplyDelete
    Replies
    1. இந்த கதைகளில் சில குறைகள் இருப்பது உண்மைதான். சில புது அம்சங்கள், வசனங்கள் போன்றவற்றுக்காக இவை மனதில் பதிந்திருக்கலாம்

      // வானமே எங்கள் வீதி //

      இந்த கதை மேல் எதிர்பார்ப்பு துளி கூட இல்லை அதனாலோ என்னவோ வாசித்தவுடன் பிடித்து விட்டது

      Delete
    2. சமீப கால ஐரோப்பிய காமிக்ஸ் கதைகளில் ஒரு குறிப்பிட்ட டெம்ப்ளேட்டை உபயோகப்படுத்துகிறார்கள். அந்த டெம்ப்ளேட் என்ன என்பதை டீகோட் செய்துவிட்டால், அதன் பின்னர் கதைகள் படிப்பதில் சுவாரஸ்யம் ஏற்படுவதில்லை.

      இந்த வானமே எங்கள் வீதியும் அதைப்போலவே இருப்பதாக எனக்கு பட்டது. இது எனக்கு தோன்றிய கருத்து, எனவே சரியாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

      நீங்கள் சொன்னதுபோல எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்திருந்தால், ஒருவேளை கதையை ரசித்திருக்க முடியுமோ?

      Delete
    3. உண்மைதான் அதீத எதிர்பார்ப்பு எங்கள் ரசிக்கும்தன்மையை குறைத்துவிடும். எனக்கு படம் பார்க்க போவதற்கு முன்னர் விமர்சனம் எதனையும் வாசிக்கமாட்டேன். இரண்டு மூன்று விமர்சனம் வாசித்து படம் பார்த்து ரசிக்க தவறியிருக்கிறேன்

      Delete
  3. டைலன் டாக் (மற்றும் கேப்டன் ப்ரின்ஸ்) கதைகளில் இந்த டெம்ப்ளேட் பிரச்சினை உண்டு.

    கதையின் ஆரம்பம் எவ்வளவு அட்டகாசமாக இருக்குமோ, அதற்கு நேர்மாறாக முடிவு (பொசுக்கென்று) இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. இங்கே நான் சொல்லி இருக்கும் டெம்ப்ளேட் //டைலன் டாக் (மற்றும் கேப்டன் ப்ரின்ஸ்) கதைகளில் இந்த டெம்ப்ளேட் பிரச்சினை உண்டு.// வேறு.

      இது கதைகளின் நடையை பொருத்து சொன்ன கமெண்ட்.

      Delete
  4. அருமையான பதிவு தோழரே ...

    வாழ்த்துக்கள் ....

    உங்கள் டாப் 10 பதிவை படித்தவுடன் இந்த இதழ்களை மீண்டும் படிக்க தோன்றுகிறது .அதற்காக க்ரீன் மேனர் கதையை எடுப்பது கடினமான ஒன்று :)

    தொடர்ந்து பதிவிடுங்கள் ...

    ReplyDelete
    Replies
    1. நன்றி பரணிதரன். உண்மைதான் க்ரீன் மேனர் கதைகள் எல்லோருக்கும் பிடிக்கும் வகையான கதையில்லை. ஆனால் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது :)

      Delete
  5. சாவு ஒருநாள் வலி என்றால். "காணாமல் போய்விடுவது" என்பது பலநாள் வலி.


    அருமையான சொற்கள் .. கதையை படித்த போது இருந்த உணர்வை மீண்டும் உணர்ந்தேன்... நல்ல பதிவு . தொடந்து எழுதுங்கள் .

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஊக்கமளிப்புக்கு நன்றி நண்பரே..

      Delete
  6. உங்கள் வரிசையிடலில் முழுமையான உடன்பாடு இல்லாவிட்டாலும் உங்கள் ரசனையை மதிக்கிறேன். தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பொடியன்.. உண்மையில் இங்கு எனக்கு பிடித்த பத்து கதைகளை பற்றி சொல்லியிருக்கிறேனே அன்றி வரிசைப்படுத்தவில்லை..

      Delete
  7. 'ஒரு சிப்பாயின் சுவடுகளுக்கு' நீங்கள் கொடுத்திருக்கும் முதலிடத்துக்கு 1000000000.....++++ லைக்ஸ்!

    ReplyDelete
    Replies
    1. நான் கதைகளை வரிசை படுத்தவில்லை எனினும், உண்மைதான் எனக்கு மிகவும் பிடித்த கதை.. சில ஞாபங்களை கொண்டு வருது

      Delete
  8. தொடர்ந்து பதிவிடுங்கள்.எனக்கு கிரீன்மானர் கதைகள் மிகவும் பிடிக்கும்,சுட்டி லுக்கி,புளுகோட் பட்டாளம் அப்படியே.ஆனால் வானமே எங்கள் வீதி சுத்தமாக கவரவில்லை.வல்லவர்கள் வீழ்வதில்லை பற்றி உங்கள் கருத்தே எனக்கும்.நன்றி

    ReplyDelete
  9. "ஒரு சிப்பாயின் சுவடுகளில்"
    நிச்சயமாக இப்புத்தகம் முன்னுரிமை தரப்படவேண்டிய ஒன்றே.உங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் ஏனைய புத்தகங்களை வகைப்படுத்தியுள்ளீர்கள்.அதில் தவறொன்றுமில்லை..!

    ReplyDelete
    Replies
    1. சென்ற பதிவில் உங்களிடம் பழைய புத்தகங்கள் பற்றி கேட்டிருந்தேன் அல்லவா..!புதிய பழைய ஆங்கில காமிக்ஸ்கள்(DC,Marvel)பழைய தமிழ் நாவல்கள் என்பன குறைந்த விலையில் கிடைக்கும் இடங்கள் தெரிந்தால் பகிரவும்..!

      Delete