Sunday, July 31, 2011

ரேடியோவின் கதை


ஏதோவொரு நாய் ஊளையிடும் சத்தம் மூன்று வீடு தள்ளிக்கேட்டது. காற்று பலமாக வீசுவதால் மரங்களில் இலைகள் சலசலக்கும் ஓசை காதில் விழுந்தது. பாயிலிருந்து மெதுவாக எழுந்து உட்கார்ந்தேன். பக்கத்தில் படுத்திருந்த தம்பி திடிரென்று "டேய்! அவனை பிடிங்கடா.. அவன்தான்டா எடுத்தான்.. ." என்று கத்தினான். தம்பிக்கு நித்திரையில் பேசும் பழக்கம் இருக்கிறது. அது மட்டுமல்ல.. நித்திரையில் நடப்பதை தவிர மிச்ச எல்லா வேலையும் செய்வான். திடிரென்று நித்திரையில் கத்தி மற்றவர்களின் தூக்கத்தினை கெடுப்பதை ஒவ்வொரு இரவும் தவறாமல் செய்வான்.

அன்றைய தினம் பாடசாலையில் நடந்த சண்டைகளை கனவில் மீண்டும் நடத்திப்பார்ப்பான். ஒருமுறை இப்படித்தான் ஒரு இரவில் பக்கத்தில் படுத்திருந்த எனது கழுத்தை அவன் ஏதோ நினைவில் நெரித்துவிட நான் பயந்துபோய் பேய்தான் என்னை என்னை அடிக்க வந்திருக்கிறது என்று இரவு முழுக்க அலறிய நாளை நினைத்தால் இப்போதுகூட நெஞ்சில் கிலி ஏற்படுகிறது. நான் மெதுவாக எழுந்து பூனை போல நடந்தேன். என்ன செய்ய வேண்டும் என்பதை பலமுறை தெளிவாக மனதினில் திட்டமிட்டிருந்தாலும், மீண்டும் ஒருமுறை மனதினில் சொல்லிப்பார்த்துக்கொண்டேன்.

தலையணைக்கு பின்னாலிருந்த Screw Driverரை எடுத்துக்கொண்டேன். முன்னறையில் படுந்திருந்த அப்பாவை தாண்டி அடுத்த அறைக்கு செல்வதுதான் பெரிய சவாலான காரியம். ஒரு சின்ன சத்தம் கேட்டாலே விழித்துக்கொள்ளும் இயல்புடையவர் அப்பா. அப்பாவின் மெலிதான குறட்டை சத்தம் கேட்டது. எனக்கு அது போதும்.. குறட்டை சத்தம் நிற்க முன்னர் எனது வேலையை முடிக்க வேண்டும். மெதுவாக அவரைக்கடந்து சென்று பாட்டியின் அறையின் முன்னாலுள்ள மேசையை அடைந்தேன். அங்குதான் அந்த பெரிய வானொலி இருந்தது. நல்லவேளை நாளைதான் பௌர்ணமி என்பதால் இன்று இரவு நிலவொளி எனக்கு உதவியது. ஒருவாறாக நான்காம் Screw இருக்க வேண்டிய இடத்தினை கண்டுபிடித்து கழற்ற ஆரம்பித்தேன். அது ஏற்படுத்திய சிறிய சத்தமே அந்த இரவின் அமைதியை கிழித்து எனக்கு கிலியை ஏற்படுத்தியது. சற்று துருப்பிடித்திருந்ததால், பலமான முயற்சிக்குப்பின்னரே பெயர்க்க முடிந்தது. வானோளியிலுள்ள நான்கு Screwகளையும் கழற்றியாச்சு. முன்னைய மூன்று நள்ளிரவுகளில் ஒவ்வொரு Screwவாக கழற்றி இன்றுதான் நான்காவது Screwவும் கழற்றப்பட்டிருக்கிறது. இனி வானொலியின் மேற்பாகத்தினை கழற்றி Transistorஇனை வெளியே எடுத்துவிடலாம். நடுவில் பெரிதாக தெரிந்த வஸ்துதான்

Transistor ஆக இருக்க வேண்டும். அது எளிதாக கையோடு வந்துவிடும் என்று எதிர்பார்த்த என் மடமையை என்னவென்பது எவ்வளவு முயற்சி செய்தும் வருவதாக இல்லை. அப்போதுதான் கவனித்தேன், அப்பாவின் குறட்டை சத்தம் வருவது நின்றிருந்தது. நான் போட்ட சத்தத்தில் எழுந்துவிட்டாரோ என்று பயந்து விட்டேன். வானொலியின் மேற்பாகத்தினை மட்டு மட்டாக பொருத்தி விட்டு என் அறையை நோக்கி வேகமாக நடந்தேன். கண்ணுக்கு முன்னால் யாரோ இருப்பதை அறிந்து நடையை மட்டுப்படுத்தினேன். அது அப்பா. "டேய் இந்த இரவு நேரத்தில் என்னடா செய்யறே" என்றார். உண்மையை சொன்னால் பல்லை கழற்றி கையில் தந்து விடுவார் அப்பா. "தா.. தண்ணீர்" என்றேன். "குடிச்சிட்டியா! சரி போய் படு" என்றார். இன்றைய வேலையும் தோல்வியில் முடிந்ததால் அன்று முழுக்க நித்திரை வராமல் இருந்தேன். எப்போது நித்திரை கொண்டேனோ
தெரியவில்லை. கனவில் வேறு பலதடவை Transistorஇனை கழற்ற முயற்சித்தேன். அதில் வேறு வேறு பிரச்சனைகள் வந்து தோல்வியில்தான் முடிந்ததுதான் மிச்சம்.

காலையில் எழுந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த பாதி செய்து முடிக்கப்பட்ட எனது வானொலியினை எடுத்து பார்த்தேன். இன்னுமொரு Transistorதான் தேவை. கிடைத்துவிட்டால் எனது வானொலியும் பாட ஆரம்பித்துவிடும். Transistor தேடும் படலத்தில் தம்பியை இணைத்துவிட முடிவு செய்தேன். அவன் என்னைவிட தைரியமான ஆள். அப்பாவுக்கு பயந்து சாக மாட்டான். இரண்டு பேரும் செய்யும் திருட்டு செயல்களில் அவன்தான் தைரியமாக முன்னின்று செய்வான். ஏனென்றால் அப்பாவிடம் பிடிபட்டால் முதலில் அப்பா அடிப்பது என்னைத்தான். பின்புதான் கேள்வியே கேட்க ஆரம்பிப்பார். அவன் எதாவது சொல்லி தப்பி விடுவான். அவனிடம் Transistor எடுக்கவேண்டிய அவசியத்தினை விரிவாக விளக்கினேன். பின்புதான் தன் பேரத்தினை ஆரம்பித்தான். அவனுக்கு என் நண்பனிடமிருந்து பழைய ராணி காமிக்ஸ் ஐந்தினை இரவல்
வாங்கித்தருவதாக உறுதியளித்தபின், சம்மதித்தான். பாடசாலையிலிருந்து வந்தபின்னர் இருவரும் முயற்சியை மேற்கொள்வதாக முடிவுசெய்யப்பட்டது. அம்மா சமையலறையில் ஏதாவது வேலையாக இருப்பாள். அப்பா அந்நேரத்தில் வீட்டில் இருக்கமாட்டார். ஆகவே மிச்சமாக இருந்த பாட்டியின் கவனத்தினை திசை திருப்புவது மிகவும் அவசியமான ஒன்று. இல்லாவிட்டால் அப்பாவிடம் சொல்லி நல்ல பூசை வாங்கித்தந்து விடுவாள். அவளது Radioவை தொட்டால் அவள் சும்மா இருப்பாளா!. நான் பாட்டியின் அறைக்கு சென்று, "பாட்டி! எனக்கு ஒரு ரூபா கொடு" என்றேன். பாட்டி என்னை ஒருமாதிரியாக முறைத்துப்பார்த்தாள். "எதுக்கிடா உனக்கு ரூபா" என்றாள். "தோடம்பழ முட்டாசி வாங்க வேணும், பாட்டி" என்று உருக்கமாக கேட்டேன். பாட்டி தன்னிடமுள்ள சுருக்கு பையில் தேடி ஒரு ரூபாவை எடுத்து தந்தாள். திரும்பி பார்த்தேன், தம்பியை காணவில்லை. முரட்டுப்பயல்! Transistorஇனை கழற்றி விட்டிருந்தான். பெரிதாக இருந்த அந்த வஸ்துவை ஆர்வத்துடன் பார்த்தேன். Transistorஇற்கு இருக்க வேண்டிய மூன்று இணைப்புகள் போலல்லாது, ஆறு இணைப்புகள் இருந்தது ஆச்சர்யமாக இருந்தது. அந்த வானொலியில் Transistor போன்று இருந்தது இந்த ஒரு வஸ்துதான்.

அதற்கு பின்னர் இரண்டு நாட்களாக எனது வானொலியினை பாட வைக்க செய்த பகிரத பிரயத்தனங்கள் எதுவும் பலனளிக்கவில்லை. இவ்வாறாக சோர்வுடன் ஒரு கிழமை கழிந்தது. ஒருநாள் அப்பா எங்கிருந்தோ Radioவுக்கு போட Batteryகள் வாங்கி வந்தார். அந்த போர் காலங்களில் Battery தடைசெய்யப்பட்ட காரணத்தினால் இவ்வளவு காலமும் Batteryயை வாங்குவது என்பது குதிரை கொம்பாக இருந்தது. Battery இல்லாதபடியால்தான் இதுவரை ஒருவரும் அந்த Radioவை போட முயற்சிக்கவில்லை. நாங்கள் கழற்றி எடுத்த அந்த பாகத்தினால் Radio வேலை செய்யாமல் விடும் என்று எனக்கு உறைக்கவில்லை. Radioவை போட்டு பார்த்த அப்பா அது வேலை செய்ததால் அதனை திறந்து பார்த்தார். எனக்கு நெஞ்சு தடக்.. தடக்.. என்று அடித்து கொண்டது. Screwகள் அகற்றப்பட்டிருந்ததையும் அந்த பெரிய பாகம் அகற்றப்பட்டதையும் கண்டு பிடித்து விட்டார். வழமையான விசாரணை தொடங்கியது. தம்பி என்பக்கம் கையை காட்டி அப்ரூவராக மாறி நடந்ததை ஒப்பித்தான். அப்பா
நல்ல பிரம்படிதான் தரப்போகிறார் என்று எதிர்பார்த்த எனக்கு ஒரு அதிர்ச்சி தந்தார். என்னையும் தம்பியையும் வீட்டின் முன்பக்கமுள்ள தோட்டத்திற்கு அழைத்துச்சென்று நிலத்தின் ஒரு பகுதியில் கடலை பயிரிடுமாறு பணித்தார். அதில் விளையும் கடலையை விற்று பாட்டிக்கு Radio வாங்கி கொடுத்தாக வேண்டும். இது ஒரு நீண்டகால நோ குறைவான தண்டனையாக அப்பாவினால் கருதப்பட்டது. பயிரிட்ட கடலையை விற்று பாட்டிக்கு Radio வாங்கிக்கொடுக்க மூன்று மாதங்களாயின. அதுவரையிலும் பாட்டி "என் Radioஇனை உடைத்த பயல்" என்று குத்திக்காட்டி கொண்டிருப்பாள்.

இது நடந்து மூன்று வருடங்களின் பின்னரே எனக்கு முழுமையாக ஒரு Radioஇனை செய்ய முடிந்தது. அப்போதுதான் புரிந்தது அந்நாட்களில் நான் அந்த பழைய Radioஇலிருந்து கழற்றி எடுத்தது Transistor அல்ல, அது ஒரு Capacitor என்பது.






எனக்கு தம்பி இல்லை. இந்த கதையினை நண்பர் ஒருவர் எனக்கு சொன்னார். "உங்கள் Blogஇல் இதனை பதிவிடுங்களேன். சுவாரசியமான கதையாக இருக்கிறதே!" என்றேன். அவர் சும்மா சிரித்து விட்டு இருந்துவிட்டார். எனவே அந்த கதையை கொஞ்சம் இட்டுக்கட்டி இங்கு
பதிவிட்டுள்ளேன்.

No comments:

Post a Comment