Thursday, November 3, 2011

Inception - இதுதான் உண்மையான கனவுப்படம் சாரே!

inception திரைப்படம் 2010ம் ஆண்டு வெளியாகி பலரின் மனதை கவர்ந்த கனவு சம்பந்தமான கற்பனைகள் நிறைந்த ஒரு திரைப்படம். இந்த திரைப்படத்தினை Christopher Nolan இயக்க Leonardo Dicaprio நடித்திருப்பார், சும்மாவே நோலன் பார்வையாளரை குழப்பும் வகையில் முன்னுக்கு பின்னாக சம்பவங்களை கோர்த்து திரைக்கதை அமைப்பதில் சூரர். அவருடைய ஒரு படத்தினை இரண்டு தடவை பார்த்தால்தான் கொஞ்சம் புரிவது போலிருக்கும். இவ்வாறு ரசிகர்கள் ஒன்றுக்கு இரண்டுமுறை பார்ப்பதன் மூலம் அவருடைய படங்களும் அதிக வசூலை அள்ளுகின்றனவோ?. ஆனால் Inception திரைக்கதையில் அவ்வாறு சம்பவங்களை மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை.. சாதாரண திரைக்கதையே பெரிய இடியாப்ப சிக்கலாக இருந்தது. முதலாம் தடவை இந்த படத்தினை பார்த்த எனக்கு முப்பது சதவீதம்தான் புரிந்தது. ஆனால் "புரியவில்லை" என்று நண்பர்களிடம் சொன்னால் எனக்கு English சரியா தெரியாது என்பார்கள். இல்லை இவனுக்கு புளி போட்டுத்தான் விளக்கணும் என்பார்கள். இதனால் அந்த படம் நன்றாக புரிந்தது என்றுதான் நண்பர்களிடம் சொல்லியிருந்தேன். நோலன் கனவுகளுக்கே என்றே இன்னொரு தியரியை உருவாக்கி அதனை அழகாக கதையுடன் சேர்த்திருப்பார். அதிலுள்ள தியரிகளை பற்றி இணையத்தில் பலர் ஆராய்ந்திருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. அவற்றில் சிலவற்றை கீழே மொழிபெயர்க்க முயன்றுள்ளேன்.

கதையை பற்றி விளக்கும்முன்னர் கீழே தரப்பட்டுள்ள புதிய சொற்பதங்களை பற்றி அறிவது அவசியமாகும்.

Limbo (லிம்போ) : ஒரு கனவிலே ஏற்படும் நிகழ்வுகளால் இறந்து போகும் ஒருவர் சென்றடையும் ஒரு கற்பனையான கனவு இடம். இங்கு நேரம் வேகமாக நகருவது போன்ற எண்ணப்பாடு மனதில் தோற்றுவிக்கப்படும். இதனை சென்றடைபவர்கள் நிஜ உலகம் என்று ஒன்று உள்ளது என்பது பற்றி அறியாதிருப்பர்கள். இதனால் விழித்தெழுந்து நிஜ உலகத்திற்கு சென்றடைவது பற்றி எப்போதுமே எண்ணமாட்டார்கள்.

Inception: வேறோவரின் கனவுக்குள் நுழைந்து, அவர்களின் மனதில் எங்கள் எண்ணங்களை அவர்களின் மனதில் விதைக்கும் கலை. இதன்மூலம் அவர்களை ஒரு குறிப்பிட்ட எண்ணத்தினை நோக்கி சிந்திக்கவைக்க முடியும். இப்படத்தில் வரும் Dicaprio அதை செய்ய முயலும் குழுவுக்கு தலைமை தாங்குவார்.

The Architect (ஆர்கிடேக்ட்) : கனவு உலகத்தின் கட்டமைப்பினை உருவாக்கும் திறமை படைத்த கட்டமைப்பாளர். இவர்கள் கட்டட ஆர்கிடேக்ட் பேப்பரில் செய்யும் டிசைன் போல மனதில் டிசைன் செய்வார்கள். இதனை எளிதாக செய்துவிட முடியாது. இதனை செய்ய சில விதிமுறைக்கு உட்பட்டு சிந்திக்கும் அதீத கற்பனாசக்தியும் அவசியம்.

The Dreamer(கனவினை காண்பவன்) : ஒரு கட்டத்தில் கனவினை காணும் நபர். இவருடைய கனவில் Inceptionஇல் ஈடுபடும் மற்றவர்கள் நுழைய முடியும். பின்னர் அந்த கனவிலிருந்து இன்னொரு நபர் கனவினை தொடக்கி வைப்பார். பின்பு அதில் மற்றவர்கள் நுழைவார்கள். ஒருவர் ஒரே நேரத்தில் ஒரு கனவினை மட்டுமே காண முடியும். ஆனால் அவரது கனவினை காணும்பொழுதே மற்றவர்களின் கனவினுள் நுழைய முடியும். இதன்மூலமே "கனவினுள் கனவு" எனப்படும் ஐடியா சாத்தியப்படும்.

A Kick(அதீத அதிர்ச்சி): நாம் கனவு காணும்போது கீழே விழுவது போன்றோ அல்லது காருடன் மோதுவது போன்றோ மனதில் அதீத அதிர்ச்சி ஏற்படும்போது உடனடியாக விழித்தெழுவோம் அல்லவா? அவ்வாறான ஒரு நிகழ்வைதான் Kick என்று குறிப்பிடுவார்கள். முதலாம் கட்டத்தில் கனவு கண்டால் அதிலுள்ள ஒரு kick மூலமாக நிஜ உலகத்திற்கு திரும்ப முடியும். இரண்டாம் கட்டத்தில் உள்ள கனவில் இருந்தால் ஒரு kick ஒவ்வொரு கனவுகட்டங்களில் கட்டாயம் இருக்கவேண்டும். இதன்மூலமாகவே நிஜ உலகத்திற்கு மறுபடியும் திரும்ப முடியும். இவ்வாறான விழித்தெழும் பொறிமுறை இல்லாவிட்டால் கனவினுள் கனவு என்று ஒன்றுக்கு மேற்பட்ட கனவு உலகத்தினுள் நுழைந்து தொலைந்து நிஜ உலகத்தில் மறுபடியும் விழித்தெழ முடியாத நிலை உருவாகும்.

The Subject(பலியாடு?): Inceptionஇல் ஈடுபடுபவர்கள் ஆழ்உறக்கத்திலுள்ள இந்த நபரிடமிருந்துதான் தகவல்களை திருட முற்படுவர். ஆனால் இவருக்கு இந்த செய்கைகள் புரியாமல் சாதாரண கனவு காண்பதாகவே உணருவார். இவர்களுடைய Inception செய்கையில் இவரை மையமாக வைத்துதான் கனவுகளை கட்டமைப்பார்கள்.

Totem: Inception செய்கை மூலம் மற்றவர்களின் கனவில் நுழைவோர் குழம்பிபோகும் சாத்தியங்கள் அதிகம். ஆகவே இப்போது கனவில்தான் இருக்கிறோமா? இல்லை நிஜ வாழ்க்கையில் இருக்கிறோமா? என்று தீர்மானித்து கொள்வதற்காக ஒரு பொருளை பயன்படுத்துவார்கள். அதன் செயற்பாடுகள் கனவில் வேறுமாதிரியாகவும் நிஜத்தில் வேறுமாதிரியாகவும் இருக்கும். ஆகவே இந்த Totemஇனை செயற்படுத்துவதன் மூலமாக அதனை பற்றி அறிந்து கொள்வர். உதாரணமாக Dicaprio பம்பரத்தினை பயன்படுத்துவார். அவர் கனவில் அந்த பம்பரத்தினை சுழற்றினால் அது தொடர்ச்சியாக நிற்காமல் சுழரும், ஆனால் நிஜ உலகத்தில் வழமைபோல ஒரு குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் நின்றுவிடும்.

Projection (கற்பனை ரூபம்): Subject ஆக உள்ள நபரின் ஆழ்மனதில் எதிர்மையான எண்ணங்கள் சேர்ந்து உருவாக்கும் கற்பனை ரூபமே இந்த Projection ஆகும். கனவினை காணும் Subject தான் வேறொருவரின் கனவில் இருப்பதை உணர்ந்தவுடன் இவ்வாறான கற்பனை ரூபங்கள் தோன்றி அந்த மூலகனவினை காண்பவரை அழிக்கும் முயற்சியில் ஈடுபடும்.


கதை :
Dom Cobbஉம், Arthurஉம் வியாபார சம்பந்தமான ரகசியங்களை மற்றவர்களின் கனவுகளில் நுழைந்து கொள்ளையடிக்கும் தொழிலை செய்பவர்கள். அவர்கள் இதனை "கனவினுள் கனவு" என்ற இருவர் மட்டுமே போதுமான எளிய concept மூலமாக செய்து வருகிறனர். Cobbஇன் மனைவி ஏற்கனவே இவ்வாறான ஒரு கனவு செயற்பாட்டின்போது ஏற்படும் குழப்பநிலையினால் தற்கொலை செய்துவிடுகிறாள். ஆனால் Cobb செய்யும் கனவு கொள்ளைகளின்போது அவளது நினைவுகள் நுழைந்து அவன் கனவு கொள்ளையை தடுக்க முயற்சிக்கின்றன. இது போதாது என்று Cobb அவனது மனைவியின் இறப்புக்காக அவனது சொந்த நாடான அமெரிக்காவிலேயே தேடப்படுகிறான். இதனால் அவன் அமெரிக்கா செல்ல முடியாத நிலை உருவாகிறது. இதனால் அவனது தந்தையுடன் அமெரிக்காவில் வளரும் அவனது குழந்தைளுடன் சேர்ந்து வாழ முடியாது திணறுகிறான்.

இவ்வாறு வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கும் Cobbஇடம் Saito என்கின்ற ஜப்பானிய பணக்கார தொழிலதிபர், தனது போட்டி நிறுவனத்தின் ஒரு வியாபார ஒப்பந்தத்தினை நிறுத்திக்கொள்ளும் விதமான எண்ணத்தினை Robert Fisher எனப்படும் அந்த கம்பனியின் எதிர்கால உரிமையாளரின் எண்ணத்தில் விதைக்குமாறு கூறுகிறார். இதனை தனக்காக செய்தால், Cobbஇன் கொலைக்கான குற்ற பதிவினை தனது செல்வாக்கு மூலமாக அழித்து அவனை சுதந்திரமாக அமெரிக்காவிற்குள் நுழைய வைக்கமுடியும் என்று பேரம் பேசுகிறார். குழந்தைகளுடன் வாழ ஏங்கும் Cobb இந்த கடுமையான முயற்சியில் ஈடுபட சம்மதிக்கிறான். ஆனால் எண்ணத்தினை விதைக்கும் Inception செயன்முறையானது, மற்றவர்களின் கனவுக்குள் நுழைந்து எண்ணங்களை திருடுவதைவிட கஷ்டமானதாகவும் அபாயகரமானதாகவும் இருக்கும். சரியாக திட்டமிட்டு செயலாற்ற தவறினால் கனவுலகத்திலேயே காலம் முழுக்க சிறைப்பட்டிருக்க வேண்டிவரும் அபாயம் இருப்பது Cobbக்கு நன்றாக தெரியும். அதுமட்டுமல்ல இந்த செயன்முறையே நடைமுறையில் சாத்தியமா இல்லையா என்று கூட அவனுக்கு தெரிந்திருக்கவில்லை. இதனை செயற்படுத்த வேறு பல திறமைசாலிகளை தனது அணியில் சேர்க்கிறான்.

Cobb மற்றும் Arthur உடன் இணையும் ஏனைய நபர்களின் விபரம் பின்வருமாறு...

Eames: நிஜ உலகத்தில் அடையாள பத்திரங்களை மாற்றி திருட்டுத்தனம் பண்ணுவதில் கில்லாடி. கனவிலோ, இன்னொருவர் போன்று உருமாறி தோற்றமளிக்கும் ஆற்றல் படைத்தவன்

Yusuf: மருந்துகளை கையாளும் நிபுணர். மூன்று கட்டங்களாலான கனவுகளை காண்பதற்கு தேவையான மருந்துகளை சரியான சமவிகிதத்தில் வழங்க இவன் ஒத்துழைப்பு மிக அவசியம்.

Ariadne: குழுவில் இருக்கும் ஒரு பெண். இவள் ஒரு Architecture படிக்கும் மாணவி. கனவில் தோன்றப்போகும் கட்டடங்களையும் அதற்கான சுற்றாடலையும் டிசைன் செய்து கனவு காண்பவருக்கு விளக்குவதுதான் இவளுடைய வேலை

Saito: வேலையை கொடுத்த பணக்கார நபரே இவர்தான். ஆனால் இவர்கள் அதனை சரியாக செய்கின்றனரா? என்பதை அவதானிக்க இவர்களுடன் இணைகின்றார்.

Robert Fisher: இவனிடம்தான் அந்த "எண்ணத்தினை" விதைக்க வேண்டும். ஆகவே இவனுக்கே தெரியாமலேயே அவனை நெருங்கி Inception கனவில் இணைக்கவேண்டும்.


ஏகப்பட்ட திட்டமிடல்கள் ஆயத்தபடுத்தல்களுடன் Robert Fisher செல்லும் விமானத்தில் Inception அணியினர் ஏறிச்செல்கின்றனர். தூக்கமருந்தினை கலந்து கொடுத்து Inceptionஇனை செயற்படுத்தும் கருவியில் எல்லோரும் சேர்ந்து இணைந்து ஒரே கனவிற்குள் நுழைகின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கனவினை வடிவமைக்கிறனர். அவர்களே அந்த கனவில் நிகழும் சம்பவங்களை கட்டுப்படுத்த முடியும். இதன்மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட கனவினுள் கனவு என்ற நான்கு கட்டத்தினையுடைய கனவுகள் சாத்தியப்படுகிறது. கனவுகளை உருவாக்குவோர் அந்தந்த கனவு கட்டத்தில் தங்கியிருந்து அந்த கனவு levelக்குரிய Kickஇனை உருவாக்கும் பொறுப்பினை ஏற்றுகொள்கின்றனர். மற்றவர்கள் அடுத்த கட்ட கனவினுள் நுழைகின்றனர். கனவில், நேரம் நிஜ உலகத்தினைவிட வேகமாக நகரும். அதாவது கனவில் நிறைய வேலைகளை குறைவான நேரத்தில் செய்து முடிக்கலாம். கனவினுள் கனவு எனும்போது நேரம் இன்னும் விரைவாக நகரும். Robert Fisherஇன் மனதில் அந்த எண்ணத்தினை ஒரு கனவு கட்டத்தில் சரியாக விதைக்கமுடியாவிடின் அடுத்த கட்ட கனவுக்கு செல்வதன்மூலம் கிடைக்கும் நேரத்தினை அதிகரித்து கொள்கின்றனர்.

ஆனால் இந்த கனவுகளில் நடைபெறும் சம்பவங்களை அந்த கனவினை உருவாக்குவோரே தீர்மானிப்பதாக இருந்தாலும், அவர்களுக்கான பெரிய சவால் Robert Fisherஇன் எதிர்மையான எண்ணங்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கும் மாயத்தோற்றங்கள் கனவுகளிடையே திடீரென்று தோன்றி கனவில் உள்ளவர்களை வேட்டையாட ஆரம்பிக்கின்றன. இதனால் அவற்றுடன் போராட வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகின்றனர். இவ்வாறான ஒரு கடுமையான தாக்குதலின் போது Saito காயமடைந்து இறந்து போகிறார். இதன்மூலம் அவர் லிம்போ எனப்படும் நிஜ உலகத்தினை மறந்த கனவுலகத்தினை சென்றடைகிறார்.

இதற்கிடையே Inception குழுவினர் Robert Fisherஇன் மனதில் Saito குறிப்பிட்டவாறு எண்ணத்தினை விதைக்கும் முயற்சியினை ஆரம்பிக்கின்றனர். Robert Fisher தன்னுடைய கோட்பாதரான Peter Browning என்பவரின் சொல்லுக்கு செவிமடுப்பான் என்பதை முன்பே தெரிந்திருந்த குழுவினர், அடையாளங்களை மாற்றுவதில் கில்லாடியான Eamesஇனை, Robert Fisherஇன் கோட்பாதர் வடிவிலே உருமாறி Robert Fisherஉடன் பேசி அந்த எண்ணத்தினை விதைக்க முயற்சிக்கிறான். இவையெல்லாம் திட்டமிட்டபடி சென்றாலும் லிம்போவில் சிறைப்பட்டுள்ள Saitoவை மீட்க Cobbஉம் லிம்போவினை சென்றடைகிறான். அங்கே அவனது இறந்த மனைவி வேறு வந்து அவனை நிரந்தரமாக லிம்போவில் தங்கவைக்க முயற்சிக்கிறாள். அவளிடமிருந்து தப்பி Saitoவினை Cobb கண்டுபிடிக்கிறான். இதேவேளையில் Cobb தவிர்ந்த ஏனைய நபர்கள் ஒவ்வொரு கனவிலும் ஏற்படுத்தப்படும் Kick மூலமாக நிஜ உலகத்தினை வந்தடைகின்றனர். Saitoஉம் Cobbஉம் லிம்போவிலிருந்து ஒருவழியாக தப்பித்து. நிஜ உலகமான விமானத்தில் எழுந்திருக்கின்றனர். பின்னர் Cobb விமான நிலையத்தின் சோதனைகள் முடிந்து அமெரிக்காவினுள் நுழைகிறான்.

தனது வீட்டினை அடையும் அவனுக்கு தான் இருப்பது நிஜ உலகத்திலா என்பதை உறுதி செய்வதற்காக தனது பம்பரத்தினை சுழற்றுகிறான். அதன் சுழற்சி தொடர்கிறதா இல்லை நின்று விடுகிறதா என்பதை கூர்ந்து கவனிக்கிறான். ஆனால் வீட்டுக்கு பின்னால் விளையாடிக்கொண்டிருக்கும் அவனது குழந்தைகளின் குரல்கள் அவனின் கவனத்தினை கலைக்க, அவர்களை அணைப்பதற்காக விரைகிறான். ஆனால் பம்பரம் தொடர்ச்சியாக சுழன்று கொண்டிருக்க படத்தின் முடிவு திரையில் ஓடுகிறது.

நோலன் இந்த படத்திலேயே எவ்வளவு தூரம் கனவு பற்றி யோசித்திருக்கிறார் என்பதை நினைக்கும்போதே கண்ணை கட்டுகிறது. 2001ம் ஆண்டு அவர் எழுதிய இந்த script அப்போது சாத்தியமில்லாத போது மூடிவைத்து விட்டு பின்னர் Batman திரைப்படங்களின் பாரிய வெற்றிக்கு பின்னரே இவரால் படமாக்கமுடிந்தது. கனவு என்றாலே இயற்கை விதிமுறைகளுக்கு மாறான கற்பனைகள் இருக்க வேண்டும்தானே ஆகவே அவ்வாறான காட்சிகள் கிராபிக்ஸ் மூலம் திறமையாக கையாளப்பட்டுள்ளன. அவற்றில் வரும் சின்ன சின்ன கற்பனைகளும் நிஜ கனவிலே எங்களுக்கு ஏற்படும் சில மனகுழப்பங்களையும் திரைக்கதையில் நுழைத்து பார்வையாளருக்கு சுவாரசியத்தினை ஏற்படுத்தியிருப்பார்கள்.

ஒருவர் கனவில் இன்னொருவர் நுழையும் இதே போன்றதொரு ஐடியா "கனவே கொல்லாதே" என்ற பெயரில் 1999ம் வெளியிடப்பட்ட லயன் காமிக்சில் இடம்பெற்றிருந்தது. அந்த கதையில் வரும் ஒரு வில்லன் விஞ்ஞானி மற்றவர்களின் மூளை அதிர்வுகளை பதிவு செய்து அந்த தகவல்கள் மூலம் அவர்களது கனவில் நுழைவது பற்றி ஆராய்ச்சி செய்து வருவார். இதற்காக ஒரு நிறுவனம் நிதியுதவி செய்துவரும் கம்பெனி திடீரென்று அவருக்கான நிதியிதவியை நிறுத்த முடிவு செய்யும். இதனால் ஏமாற்றமடையும் விஞ்ஞானி, முடிவு எடுத்தவர்களின் கனவில் தனது உதவியாளரை அனுப்பி கொலை செய்வது போன்றதொரு கனவினை ஏற்படுத்துவார். இதனால் ஏற்படும் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு கனவு காண்பவர் தூக்கத்திலேயே இறந்து போவார். இதே ஐடியாவினை எடுத்து நானும் அதே தலைப்பில் ஒரு சிறுகதை எழுதினேன். அந்த மூலக்கதையை எழுதிய எழுத்தாளருக்கு எப்போதுமே நல்ல கனவு மட்டுமே காண வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன் :).

6 comments:

  1. Nice post!
    I like this movie a lot ,

    Some of the Inception facts are true in my dreams, I have Projection kind of events most of the time. :( . Some time I use Totem like technique to beat the bad guys :)

    -Nirojan

    ReplyDelete
  2. ஹாய் Jeston de Niro,
    நீங்க நேர்ல சொன்ன அந்த, "நேரம் கனவில இன்னும் வேகமா நகரும்" என்ற விசயத்தையும் சேர்த்து விட்டேன். கருத்துக்கு நன்றி :)

    ReplyDelete
  3. Appo Muthal Paarkekka Padam Puriyalaiyaa?

    ReplyDelete
  4. @சண்முகன்
    நாங்க பீட்டரில வீக்.. அதான் படத்தை ஒரு வருஷமா கிழமைக்கொருமுறை பார்த்துத்தான் புரிஞ்சுது :P.. சரியா ?

    ReplyDelete
  5. பக்காவா எழுதியிருக்கிறீங்கள். படம் பார்த்தவர்கள் மட்டும் வாசியுங்கள் எனறு போடத் தேவையில்லை. ஏனெனில் இதை வாசித்துவிட்டு படம் பார்த்தாலும் புதுசாத்தான் இருக்கும். திருப்பி ஒருக்கா பாக்கவேணும்.

    ReplyDelete
  6. ஹாய் மது,
    நன்றி.. நோலனுடைய படங்களை எத்தனை தடவை பார்த்தாலும் புதுசாத்தான் இருக்கும்.. Dark knight rises எப்ப வரும்னு பார்த்திட்டிருக்கேன்..

    ReplyDelete