Saturday, May 18, 2013

வடக்கு வீதி ஒபரேசன்


நான் எனது சொந்த ஊரில் இருந்த காலங்கள் கொஞ்சமே. படிப்பு மற்றும் இடைவிடாத வேலை என்று கொழும்பிலேயே பலகாலம் வாழ்ந்து வருவதால் ஊருக்கு போவது எப்போதாவது நடக்கும் நல்ல காரியம். வருஷம் தவறாமல் அம்மன் கோவில் திருவிழாவுக்கு நான் எப்படியாவது ஊருக்கு போவது வழக்கம். "டேய் நண்பா! நீ இந்த திருவிழாவுக்கும் ஊருக்கு வராம இருந்தால் உன்ர ஊர் citizenship cancelஆயிடும்.. ஊருக்குள்ள ஒருத்தனும் உனக்கு பொண்ணு குடுக்கமாட்டான்" என்று வருஷம் ஒரு முறை திருவிழாவுக்கு பத்து நாளைக்கு முன்னதாக போன் போட்டு மிரட்டுவான் நட்டூ. நட்டூ ஊரில் இளம் சமுதாயத்தில் பிரதிநிதி. எங்கள் நண்பர் குழாத்தின் தலைமை பொறுப்பு அவனுக்கு அப்படி ஒரு பொருத்தம். ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால் முதல் ஆளா அடிஉதை என்று நிற்பான். அம்மா அப்பா அவனுக்கு வைத்த பெயர் நடராஜ். சிறுவயதில் இருந்தே கார் பைக் போன்றவற்றை கழற்றி பூட்டி விளையாடுவது அவனுக்கு ஒரு பொழுதுபோக்கு. ஆகவே நடராஜ் என்ற பெயர் மருவி நட்டூ என்றானது.

திருவிழா என்று வந்துவிட்டால் ஏற்பாடுகளில் முழுமூச்சாக வேலை செய்வான். என்னை சும்மா கூட்டி செல்வார்கள். எனக்கு இந்த வேலைகள் அவ்வளவாக தெரியாவிட்டாலும் அவர்களின் வேலையின்போது நடக்கும் சுவாரசியங்களை வேடிக்கை பார்ப்பதற்காகவே அங்கு செல்வேன். திருவிழா கடைசி கட்டத்தை நெருங்கும்போது, இரண்டு மூன்று நாள் நித்திரையில்லாமல் வேலை செய்யவேண்டியிருக்கும். இப்படித்தான் ஒருநாள் கடுமையாக வேலை நடந்துகொண்டிருந்தது, எனக்கு தூங்கி வழிந்தது. ஒரு மணிக்கு எழுப்பி விடுங்கடா என்று சொல்லிவிட்டு பன்னிரெண்டு மணிக்கு ஓரமாக நித்திரைக்கு போன நான் முழிக்கும்போது சூரிய வெளிச்சம் கண்ணில் அடித்தது. இரவு முழுக்க முழிச்சிருந்த எல்லோரும் என்னை முறைத்து பார்த்து கொண்டிருக்க அப்பாவியாக "ஏண்டா என்னை ஒரு மணிக்கு எழுப்பி விட்டிருக்கலாமே" என்றேன். "எத்தனை தரம்டா உன்னை எழுப்பிறது சும்மா கும்பகர்ணனாட்டம் தூங்கிறியே.. பத்து மணிக்கு வந்தே ரெண்டு துண்டு வெட்டினே.. நித்திரைக்கு போனே.. காலையிலே எழும்பிறே" என்று சத்தம் போட்டான் நட்டூ. அவன் கண்கள் சிவப்பாக இருந்தது. அதற்கு காரணம் தூக்கமின்மையா அல்லது கோபமா என்று ஆராயும் நிலையில் நான் அன்று இல்லை. இப்படி அவன் மூன்று நாளா முழிச்சிருந்து ஒட்டித்தான் போனமுறை திருவிழாவில் இருபது அடி புகைக்குண்டு வேலை முடிந்தது. எல்லோரையும் அன்பாகவோ கோபமாகவோ திட்டி வேலை வாங்கிவிடுவான். ஒருமுறை திருவிழாவுக்கு போகாவிட்டால் அடுத்தமுறை பெரிதாக ஒட்டி உறவாட மாட்டான். "எப்படி இருக்கே.. கொழும்பில இப்ப வெயில் அதிகம் எண்டு ரூபன் சொன்னான்" போன்ற உப்புமா கேள்விகளுடன் நிறுத்திக்கொள்வான். வேலைக்கு கூப்பிட மாட்டான். அவனுடைய நண்பர்களும் அவனையே பின்பற்றி நடப்பார்கள். அவன் இல்லாவிட்டால் எனக்கு வேறு நண்பர்கள் இல்லை என்பது அவனுக்கு நன்றாக தெரிந்திருந்தது.

புகைக்குண்டு
எங்கள் ஊர் திருவிழாவில் புகைக்குண்டு முக்கிய இடம் வகிக்கும். இதனை திருவிழாக்களின் கடைசி நாட்களில் வானில் பறக்க விட்டு மகிழ்ச்சியடைவோம். சிறுவர்கள் இதனை பார்ப்பதற்காகவே இரவு திருவிழாக்களிலும் விழித்திருப்பார்கள். "சூடான காற்று பாரம் குறைந்தது" என்ற எளிதான Physics கோட்பாட்டை பாவித்து hot air baloon போன்ற உருவில் மெல்லிய கடதாசி மூலம் சாதாரணமாக பத்து அடி புகைக்குண்டை செய்வார்கள். கீழ்ப்பக்கத்தில் எரியும் தீப்பந்தம் மூலம் உ.ள்ளிருக்கும் காற்று சூடாக்கபட்டு புகைக்குண்டு மேலெழும். இப்படி பல புகைக்குண்டுகளை வெவ்வேறு வண்ணங்களில் செய்வார்கள். சிறுவயதுகளில் மேலே பறக்கும் புகைக்குண்டுகளை பார்ப்பதற்காகவே கோயிலுக்கு போவேன். அப்போது வானில் பறக்க விடப்படும் புகைக்குண்டை வானில் மேகங்களிடையே மறையும்வரை பார்த்துக்கொண்டிருப்பேன். வடிவம் சரியாக இல்லாவிட்டால் மேலே பறக்காது என்று நட்டூ சொல்லுவான். அவனுக்கு இருக்கும் அனுபவ அறிவு, மெத்த படிச்ச engineer பயல்களுக்கும் இருக்காது. பார்த்த மாத்திரத்திலே இது சரியாக பறக்குமா இல்லையா என்று சொல்லிவிடுவான். இந்த புகைகுண்டுகள் பந்தத்தில் இருக்கும் எண்ணெய் முடியும்வரை எரிந்தபின்னர் கடலிலோ காட்டிலோ விழும். சிறுவயதில் எங்கள் வீட்டில் எப்போதாவது விழுதா என்று எத்தனையோ நாள் கனவு கண்டிருக்கிறேன். ஒருமுறை இந்தியன் ஆமி டைமில, திருவிழாவுக்கு மேலே பறக்க விட்ட புகைகுண்டை பார்த்து "இது ஏதோ உளவு பார்க்கும் நவீன சாதனம்" என்றெண்ணிய ஆமிக்காரன் ஹெலிக்கோப்டர் மூலம் வானில் துரத்தி சுட்ட கதை மூலம் புகைக்குண்டு மற்ற ஊர்களிலும் பிரபலமானது..

இந்த புகைக்குண்டுகள் நெடியகாட்டு பிள்ளையார் கோவில் மடத்தில் மட்டும்தான் ரகசியமாக ஒட்டுவார்கள். வெளி இடத்து ஆட்களை உயிர் நண்பர்கள் ஆனாலும் உள்ளே விட மாட்டார்கள். அங்கு வேலை செய்யும் எல்லோரும் நெடியகாட்டை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டுமென்பது எழுதப்படாத விதியாக எல்லோர் மனதிலும் பதிந்த விஷயம். பரம்பரை ரகசியம் என்பார்கள். ஆனால் திருமால் "இப்ப அதெல்லாம் உலகம் தெரிஞ்ச ரகசியமாயிட்டது. சங்கரானந்தம் மாமா வீட்ட போன முறை திருவிழாவுக்கு விட்ட புகைக்குண்டு தரைஇறங்கிட்டது. பிரிஞ்சு மேஞ்ச மாமா. தெருக்கடை ஒழுங்கை சின்னப்பயலுகளை  வச்சே பரீட்சார்த்த முயற்சியில் புகைக்குண்டு செஞ்சதா ராசு மாமா சொன்னருடா." என்றான். திருமால்தான் எங்கள் ஊரின் உள்ளூர் BBC தமிழோசை. அவனுக்கு தெரியாமல் ஊரில ஒரு விஷயம் பண்ண முடியாது. எவன் எவளை சைட் அடிக்கிறான் போன்ற பொழுது போக்கு செய்திகள் தொடக்கம் எந்த பொண்ணு கல்யாணம் முடிச்சு வெளிநாடுக்கு ஏற்றுமதியாகபோகுது போன்ற துக்கசெய்திவரை cover பண்ணுவான். அவனால் செய்தி பரவியே பல லவ்கள் பிரிந்தன. துளிர்க்க இருந்த லவ்கள் முளையிலே கருகின. "இவனுக்கு பயத்திலேயே சீதாகிட்ட கடைசிவரை என்ர காதலை சொல்லவே இல்லடா" என்று ராசா புலம்புவான். அவனுக்கு இப்ப கல்யாணம் கட்டி ஒரு மகள். பேருகூட சீதா என்று கேள்விப்பட்டேன்.
அம்மன் கோவில்

இம்முறை தீர்த்த திருவிழா அன்று பறக்கவிட 50 அடி புகைக்குண்டு செய்யப்போவதாக நிரஞ்சன் சொன்னான். அதற்காக பத்து நாட்களுக்கு முன்னதாகவே வேலை தொடங்கியது. "நீ வந்தா நல்லா பொழுதுபோகும்டா. அடிக்கடி கோவில் மடத்துப்பக்கம் வந்திட்டு போ. வந்து நாலு துண்டு பேப்பரை ஒட்டினாலே போதும். நீ நாலு கதை பேசினா பொடியள் சந்தோஷப்படுவாங்க" என்று வேண்டுகோள் விடுத்தான். எனது திறமையில் அப்படி ஒரு நம்பிக்கை பயலுக்கு. முதல் நாளே இரவு ஏழு மணிபோல வேலை தொடங்கியது. நட்டூதான் முன்னுக்கு நின்று ஆள் ஆளுக்கு உத்தரவு பிறப்பித்தான். அம்பது அடி என்பதால் கடதாசி தாள்களின் தடிப்பு சற்றே அதிகம். மொத்தமான தாள்களை அளவு பார்த்து வெட்டினோம். கொஞ்சம் பிழைத்தாலும் நட்டூ ரிஜெக்ட் செய்தான். புதுசா வந்த சின்னப்பொடியங்களை தட்டிகொடுத்து ஊக்குவித்தான். இம்மாதிரியான திருவிழா ஏற்பாட்டு வேலைக்கு போனால் திருவிழாவுக்கு போவதை பற்றி நினைத்து பார்க்க முடியாது. ஆனால் நட்டூ தினமும் திருவிழாவுக்கு சாமி வெளிவீதி சுற்றும் நேரத்தில் தவறாமல் திருநீற்று பூச்சுடன் போய் விடுவான். ஆனால் அவன் கோயிலுக்கு போவதை மற்றவர்களுக்கு தெரியாமல் பார்த்துக்கொண்டான். அந்த ஒரு மணி நேரம் தவிர மிச்ச நேரமெல்லாம் மடத்தடியில் புகைக்குண்டு ஒட்டினான். எனக்கு திருவிழா போவதைவிட புகைக்குண்டு ஒட்டுவதை பார்ப்பதிலும் அங்கு நடக்கும் சம்பாஷணைகளை கவனிப்பதில் அதிக ஆர்வமிருப்பதால் நெடியகாட்டு பிள்ளையார் கோவில் மடத்தடியிலே அதிக நேரத்தை செலவழித்தேன். "கொழும்பிலேருந்து திருவிழா பார்க்க வந்திட்டு மடத்தடியிலே நித்தமும் கிடக்கிறியேடா.. வந்து சாமியை நல்லா கும்பிட்டத்தானே கம்பெனிக்காரன் சம்பளத்தை கூட்டுவான்.. இன்னிக்காவது வந்து தொலைடா" என்றாள் அம்மா. சரியென்று நானும் வேட்டியை கஷ்டப்பட்டு கட்டிக்கொண்டு கோயிலுக்கு கிளம்பினேன்.

சூடான காற்று நிரப்பபடுகிறது
அம்மன் கோயில் திருவிழாவில் உற்சவ அம்மன் நகைகள் அலங்கார விளக்குகள் சகிதம் அலங்கரிப்பட்டிருப்பாள். சுற்றி முழங்கும் மேள நாதஸ்வர ஓசை காதை பிளக்கும். மேள சத்தத்தில் இதயமே அதிரும். சில பெண்களுக்கு உரு வந்து ஆடுவார்கள். அங்கு சென்றால் பக்தி இல்லாதோருக்கும் பக்தி வந்து விடும். அப்படி ஒரு உன்னதமான சூழல். எல்லோரும் அம்மனை பார்த்து சேவிப்பார்கள். திருவிழா காலங்களில் உற்சவ அம்மன் கோவில் ஒவ்வொரு நாளும் உள்வீதி மற்றும் வெளிவீதியை சுற்றும். ஒவ்வொரு திருவிழாவும் இரண்டு மூன்று மணித்தியாலம் எடுக்கும். ஆண்கள் மேற்சட்டையின்றி வேட்டி அணியவேண்டும். இரண்டு வயது பாலகர்கள்கூட பட்டுக்கரை வேட்டியுடன் தமது அப்பாமாரின் கழுத்தில் தொங்கிகொண்டிருப்பார்கள். பிள்ளையார் கோவில் மடத்துக்கு போகாத மிச்ச ஆண்களை அம்மன் கோவில் வீதியில் காணலாம். நான் கோவிலுக்கு போகும்போது அம்மன் உள்வீதி சுற்றிக்கொண்டிருந்தது. சாமி வெளிவீதி சுற்றும்போதுதான் நட்டூ வந்தான். என்னை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்தாலும் மறைக்க முயன்றான். செயற்கையாக புன்னகைத்தான். "என்னடா இஞ்சால பக்கம்" என்று இழுத்தான். "இன்னிக்காவது சாமி கும்பிடலாம் என்று வந்தேன். நீ என்னடா சாமி வெளிவீதி சுற்றும்போது மட்டும் தவறாமல் கோவில் பக்கம் வர்ற. ஏதாவது நல்ல சேதியா" என்றேன். இப்போது அவனுக்கு முகத்தில் கவலை படர்ந்தது.  "உன்கிட்ட மறைக்க என்னடா இருக்குது.. மாலாவை பார்க்க இஞ்சதானே வாய்ப்பு கிடைக்குது. அவள் அப்பர் இல்லாத ஒரே இடம் இதுதானே" என்றான். "டேய் திருமால்கிட்ட இதை சொல்லாதே.. அவள் அப்பர்கிட்ட இந்த விஷயம் போனா அவளை கோவிலுக்கும் அனுப்ப மாட்டாரு" என்றான் கெஞ்சலாக.
வடக்கு வீதி

என்னதான் நட்டூ கோவிலுக்கு வந்தாலும் மாலாவை பார்த்து கதைக்க முடியாது. ஆண்கள் ஒருபக்கமாகவும் பெண்கள் மறுபக்கமாகவும் இருப்பார்கள். கிட்ட நெருங்கவே முடியாது. ஆனாலும் சாமி வெளிவீதி சுற்றும்போது இரவு திருவிழாக்களின்போது வடக்கு வீதியின் ஒரு மணித்தியாலம் நிற்கும். இந்த ஒரு இடத்தில்தான் மேள + நாதஸ்வர வித்துவான்கள் சளைக்காமல் தமது திறமையை நிரூபிப்பார்கள். ஆளுக்கு ஒரு நாளைக்கு முப்பதாயிரம் கொடுப்பார்கள் கொடுத்த காசுக்கு வஞ்சகம் செய்யாமல் இஷ்டத்துக்கு வாசித்து தள்ளுவார்கள். அந்த ஒரு மணித்தியாலத்தின் எல்லோரும் வடக்கு வீதியில் அமர்ந்து விடுவார்கள். வீதியின் ஒரு கரையில் ஆண்கள் மற்ற கரையில் பெண்கள். நடுவில் சாமி நிற்கும். சாமிக்கு முன்னால் மேளங்கள் நாதஸ்வரங்கள். எல்லா பயலுகளும் தங்களுக்கு பிடித்த பெண்ணுக்கு நேராக இடம் பிடிப்பார்கள். பேசிக்கொள்வது கண்களால் மட்டுமே. "அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள்" ரக காதல்கள்தான். திருமால் இதை "வடக்கு வீதி ஒபரேஷன்" என்பான். 90களில் போரால் அதிகம் பாதிக்கப்பட்ட எங்கள் ஊரில் ஒபரேசன் என்ற வார்த்தை பயன்பாட்டுக்கு தாக்குதல் என்று அர்த்தம் என்று சின்ன குழந்தைக்கு கூட தெரிந்திருந்தது. நட்டூவுக்கு வடக்கு வீதி ஒபரேசன்தான் இருக்கிற ஒரே வாய்ப்பு.. நட்டூ மாலா இருந்த இடத்துக்கு நேராக இருந்தான். "அவ ஹாப் சாரியில தேவதை மாதிரி இருக்கா.. இல்லையாடா" என்றான் நட்டூ. நான் இதுவரை தேவதையை நேரில் பார்க்காததால் மறுத்துபேசவில்லை. "அவளை சட்டையில எத்தனையோ தடவை பார்த்திருக்கேன்.. அப்ப வராத காதல் ஹாப் சாரியில பார்க்கும்போது வருதுடா" என்று புலம்ப ஆரம்பித்தான். அவனும் அவளும் சின்ன சின்ன சைகைகள் மூலம் ஏதோ பேச்சு வார்த்தை நடத்தினார்கள். நானும் ஏதாவது ஒரு பெண்ணை பார்க்கலாம் என்று கொஞ்சம் கொஞ்சமாக பார்வையை திருப்பினேன். என்னோட கஸின் தங்கச்சி நிலா என்னை கவனமாக பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் ஒரு லேடி ஜேம்ஸ் பொன்ட். வடக்கு வீதியில் நான் யாரை சைட் அடிக்கிறேன் என்று உளவு பார்க்க அம்மாவால் பணிக்கப்பட்ட பெண் உளவாளி. அவளை மீறி சைட் அடிப்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. ஓரிரண்டு பெண்களை ஓரக்கண்ணால் பார்த்தேன். முறைத்தார்கள். கண்வலி வந்ததுதான் மிச்சம். சைட் அடிக்கிறது கஷ்டம் என்று அன்றுதான் உறைத்தது.

வடக்கு வீதி ஒபரேசன் ஒருவாறாக முடிந்தது. நட்டூ பரவச நிலையில் மிதப்பது போல நடந்து வந்தான். சால்வை அவிழ்ந்துகூட தெரியாமல் ஏதோ கனவுலகில் சஞ்சரித்து கொண்டிருந்தான். "டேய் நீ ஏதாவது பெண்ணை பார்த்தியா.. பிடிச்சிருக்கா" என்றான். "அப்படி எதுவும் இல்லடா நான் சாமி கும்பிடத்தான் வந்தேன்.. உன்னை மாதிரி இல்ல" என்றேன். முறைத்தான். "வந்த வேலை முடிஞ்சுது வா புகைக்குண்டு ஒட்ட போவம்" என்றான் உற்சாகமா. "இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படியே பார்த்திட்டிக்கபோறே.. உன்ட அப்பா அம்மாட்ட சொல்லி பொண்ணு கேட்க வேண்டியதுதானே" என்றேன். "நீ சொல்லிட்டு கொழும்புக்கு போயிடுவே.. ஏதாவது பிரச்சனை வந்தா அவளை பார்க்கவே முடியாம போயிடும்னு பயமா இருக்கு.. இப்படி ஒவ்வொரு திருவிழாவிலும் அவள் முகத்தை பார்த்தாலே போதும்டா.. காலம் வந்தா எல்லாம் நல்லா நடக்கும்" என்றான். அவன் முகத்தை பார்த்தேன்.  அவனது முகத்தில் பரவசம் இன்னும் குறையவில்லை. அவன் அடுத்த திருவிழாவுக்காக காத்திருக்கிறான்.


நிறைய உண்மை.. கொஞ்சம் பொய்..

8 comments:

 1. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதிவு.

  அதிலும் பலவிதமான உணர்சிகளை கிளப்பும் வகையில் அற்புதமான நடை

  எங்கள் ஊர் திருவிழா நினைவுக்கு வந்துவிட்டது. திருவிழாவை பார்த்து கிட்டத்தட்ட இருவது வருடங்கள் ஆகிசிட்டது. உண்மையிலேயே அவற்றை எல்லாம் மிஸ் செய்கிறேன்.

  உங்கள் பதிவை படித்ததால் இந்த பழைய நினைவுகள் எல்லாம் வந்து என்னை கலங்க வைத்து விட்டது

  நண்பர் நட்டுவுக்கு வணக்கம் சொல்லவும்

  ReplyDelete
 2. தயவு செய்து மாதம் ஒரு பதிவாவது எழுதவும்.

  அன்புக்கட்டளை.

  ReplyDelete
 3. விஷ்வா, உங்கள் ஊக்கத்துக்கு நன்றி.. அடுத்தமுறை உங்கள் ஊர் திருவிழாவுக்கு போய் வாருங்கள். நிச்சயம் மனதில் புது உற்சாகம் வரும்.

  உண்மைதான் இப்பதிவு அரை வருசத்துக்கு பிறகு எழுதுகிறேன். தொடர்ந்து எழுதாமல் விட்டு விட்டதால் இப்பதிவை முடிக்க நிறையவே சிரமப்பட்டேன்.. இனி கட்டாயம் ஒரு பதிவாவது எழுதி விடுகிறேன்.
  நன்றி

  ReplyDelete
 4. //அடுத்தமுறை உங்கள் ஊர் திருவிழாவுக்கு போய் வாருங்கள். நிச்சயம் மனதில் புது உற்சாகம் வரும். //

  ஊருடனான தொடர்பு இல்லாததாலே தான் திருவிழக்களுடனான இந்த நீடித்த பிரிவு.

  பார்ப்போம்

  //இப்பதிவை முடிக்க நிறையவே சிரமப்பட்டேன்//

  ஆனால் நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். ஒரு நண்பன் நம் தோள்மீது கைபோட்டு பழைய,பிடித்த விஷயங்களை சொல்வதுபோன்ற உங்கள் நடை, தொடர்ந்து எழுதினாலே நீடிக்கும்.

  ஆகவேதான் இந்த வேண்டுகோள்.

  ReplyDelete
 5. அருமையான பதிவு. ஒரு நண்பனின் கடிதத்தை வாசிப்பது போலிருந்தது. தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் ஊக்கத்துக்கு நன்றி பொடியன்..

   Delete
 6. அழகான எளிய நடையில் அருமையான பதிவு நண்பரே ..அடிக்கடி வாருங்கள் ..

  ReplyDelete
 7. Hi Vimal, I am really really... missed Thiruvizha. Next time have to visit. You wrote what really happened. Very very interesting and who is Nattu? Mmm.. call you tomorrow and let know.

  ReplyDelete