Saturday, July 26, 2014

ஈமெயில் கொலைகள்!!


அத்தியாயம் 1: வேலையில்லா சாப்ட்வேர் கம்பெனி

அஞ்சு நாள் லீவுக்கு பிறகு அலுவலகத்துக்கு போய் சேர்ந்தேன். கடந்த ரெண்டு மாசமா ஒரு ப்ரோஜெக்டும் இருக்கவில்லை. ப்ரோஜெக்ட் இல்லாத சாப்ட்வேர் கம்பெனி கிட்டத்தட்ட மீன் மார்க்கெட் மாதிரி பரபரப்பாக இருக்கும். இரண்டு பேர் facebookஇல் ஒரு பெண்ணின் profile pictureக்கு கமெண்ட் அடித்தார்கள். மூன்று பயல்களும் ஒரு பொண்ணும் சேர்ந்துகொண்டு காணாமல் போன MH370க்கு என்ன நடந்திருக்கும் என்பது பற்றி விவாதித்தார்கள். வழமைபோலவே எந்த முடிவுக்கும் வராமல் கப்பில் இருந்த டீயை ஜாலியாக காலி செய்தார்கள். ஆறு மாதங்களுக்கு முன்னர், ஆணியடித்து வைத்ததை போல ஒரு இடத்திலே இருந்து கடுமையாக ராத்திரி பகல் வேலை செய்துவிட்டு இரண்டு மாசமா வேலை இல்லாமல் இருந்தது ஒரு மாதிரியா இருந்திச்சு. மத்தியான சாப்பாட்டுக்கு இரண்டு மணித்தியாலம் எடுத்தோம். பிற்பகல் வேளைகளில் கண்களில் அரைத்தூக்கத்துடன் வேலை செய்தோம் அல்லது வேலை செய்வதுபோல நடித்தோம். வேலையில்லாத சாப்ட்வேர் கம்பனிகளில் நிலைமை கொஞ்சம் இடக்குமுடக்காத்தான் இருக்கும். ஆனால் இவ்வாறான நிலைமை கொஞ்ச நாளுக்குத்தான் நீடிக்கும் என்ற உண்மை தெரியாமல் சந்தோசத்தில் மிதந்தோம்.

எதுக்கும் ஒரு எல்லை வேண்டுமல்லவா. சந்தோசமும் திகட்ட ஆரம்பித்தது. வேலைக்கு போவதே போரடிக்கும் அனுபவமாக மாற ஆரம்பித்தது. சாப்ட்வேர் கம்பெனியில் A/C இல்லாமலும் இருக்கலாம். ஆனா வேலை இல்லாமல் இருக்கமுடியாது. வேலையே இல்லாமல் ஒரு இடத்தில் இருந்து கம்ப்யூட்டரை வெறித்துபார்ப்பது என்பது கொஞ்சம் நவீனத்துவமான தண்டனையாகவே எங்களுக்கு தெரிய ஆரம்பித்தது. எங்கள் செக்சன்களில் இப்படி வேலையே இல்லாமல் போரடித்துகொண்டிருந்தபோது, மார்க்கெட்டிங் செக்சன் மட்டும் வேலைகளில் மூழ்கியிருந்தது. எங்களுக்கு ப்ராஜெக்ட் இல்லாத சமயங்களில் மார்க்கெட்டிங் ஆசாமிகளுக்கு வேலை தொண்டை வரை இருக்கும். ஆனால் ஒரு ப்ராஜெக்ட் சிக்கினால் மூன்று நாலு மாசங்களுக்கு மார்க்கெட்டிங் ஆசாமிகள் காலாட்டிகொண்டு ரெஸ்ட் எடுக்கலாம்.

நேரம் இப்படி போய் கொண்டிருந்தபோது, ஒரு நாள் மார்க்கெட்டிங் எக்ஸகியூடிவ் சில்வெஸ்டர் சில்வா கதவை திறந்துக்கொண்டு அரக்கப்பறக்க உள்ளே வந்தபோது எங்களின் "வேலையில்லா திண்டாட்டம்" முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. சில்வெஸ்டர் புதுசா ஒரு ப்ராஜெக்ட் கொண்டு வந்திருக்கிறான் என்ற செய்தியை துமிலன் எங்களுக்கு சொன்னான். போதாக்குறைக்கு என்னையும் துமிலனையும் project requirements பற்றி விவாதிக்க அடுத்த நாளே எங்களுக்கு கஸ்டமர் கம்பெனியுடன் மீட்டிங் schedule செய்திருப்பதாக சொன்னார்கள். போரடிக்கும் காலம் முடிவடைய போகிறது என்று சந்தோசப்படுவதா? இல்லை நாளை முதல் வேலை வரப்போகிறது என்று கவலைப்படுவதா என்று தெரியாமல் முழித்தோம்.


அத்தியாயம் 2: புதிரான கஸ்டமர்

அடுத்த நாள் முழுக்கை சேர்ட் அணிந்து சென்ட் அடித்துக்கொண்டு ஆபீஸ் போனோம். சில்வெஸ்டர் எங்களுக்கு ஒரு காரை ஏற்பாடு செய்திருந்தான். எங்கே மீட்டிங் நடக்கும் என்ற விபரம் எங்களுக்கு வழங்கப்படவில்லை. அதை சொல்ல சந்தர்ப்பம் வரவில்லை போலும். கார் கொள்ளுபிட்டி சந்தியில் நிறுத்தப்பட்டது. டிரைவர் "இந்த இடத்தில இறங்குங்க. ஒரு வான் வரும். அதில் ஏறுங்க. என்னை ஒண்ணும் கேக்காதிங்க" என்று இயந்திரத்தனமாக சொல்லிவிட்டு நிதானமாக காரை கிளப்பிக்கொண்டு சென்றான். நாங்கள் அதிர்ந்துபோய் ஆளை ஆள் பார்த்துக்கொண்டோம். துமிலன் வியர்வையை கைக்குட்டையால் ஒற்றிக்கொண்டான்.

"என்னடா இது கஸ்டமர் பற்றின விஷயம் மர்மமா இருக்குதே" என்றான். பதினைந்து நிமிசத்தில் ஒரு வெள்ளை வான் எங்கள் அருகில் வந்து நின்றது. கதவு திறந்தது, அதிலிருந்த ஒருவன், வானின் கறுப்பு கண்ணாடிக்கு வெளியே அரைவாசி மூஞ்சியை வெளியே காட்டியவாறு, "ரெண்டு பேரும் ஐடென்டிட்டி கார்டை எடுங்க" என்றான். சரிபார்த்த பின்னர் "ஏறுங்க சார்" என்றான். அவன் முகத்தில் இருந்த கடுமை கொஞ்சமும் குறைந்ததாக தெரியவில்லை. மந்திரிக்கப்பட்ட ஆடுகள் போல வானுக்குள் ஏறிக்கொண்டோம். நாங்கள் முன்பு எப்போதோ நாங்கள் செய்த ப்ராஜெக்ட்டில் இருந்த "பக்ஸ்" (bugs) மூலமாக பாதிக்கப்பட்ட கஸ்டமர்கள் யாராவது எங்களை கடத்தி சித்ரவதை செய்ய போகிறார்களோ? போன்ற எண்ணங்கள் மனதில் வந்தன. அந்த வான் பஞ்சிகாவத்தை பகுதியில் ஒரு ஒடுக்கமான வீதியில் நிறுத்தப்பட்டது. இன்னொரு வானுக்குள் மாற்றப்பட்டோம். இதிலும் ட்ரைவருக்கு பக்கத்தில் ஒருத்தன் இருந்தான். இல்லை ஒருவர் இருந்தார்.

முகத்தில் சிநேகமான புன்னகை தவழ்ந்தது. "ஏறுங்க தம்பி. இன்னும் கொஞ்ச தூரம்தான்" என்றார். அவர் சொல்லாமலே ஏறியிருப்போம். அப்படியொரு அழகான  சாந்தமான புன்னகை. ஏறி இருந்துமே "சார் நாங்க எங்கதான் போறோம்" என்று தொடங்கினான் துமிலன். அந்த கணத்திலே எங்கள் பின்னால் இருந்த ஒருவன் கறுப்புத்துணியால் எங்கள் கண்களை கட்டினான்.

எனக்கு உடல் முழுக்க கடுமையான வியர்வை. நெஞ்சுக்குள் யாரோ சம்மட்டியால் அடிப்பது போன்று ஏதேதோ செய்தது. "எங்களை விட்டிடுங்க. நாங்கள் எதுவுமே செய்யவில்லை" என்று பதறினோம். "கொஞ்சம் சத்தம் போடாம இருங்க. பத்து நிமிஷம்தான் இடம் வந்திடும். பயப்படாதீங்க. ஒண்ணுமே நடக்காது" என்றார் சாந்தமான புன்னகைக்கு சொந்தக்கார ஆசாமி. இன்றுதான் வாழ்க்கையின் கடைசி நாள் என்று மனசு சொல்லிக்கொண்டே இருந்தது. எத்தனை மணித்தியாலங்கள் கழிந்தனவோ தெரியவில்லை. ஒரு இடத்தில் இறக்கப்பட்டோம். துணி விலக்கப்பட்டபின்னர், கண்களை சூரிய வெளிச்சம் வேட்டையாடியது. துமிலனின் கண்கள் அழுது அழுது சிவந்திருந்தன. "டேய் எங்களை கொல்லப்போறாங்கடா.." என்று ஏங்கி ஏங்கி அழுதான். நாங்கள் வித்தியாசமான முறையில் கட்டப்பட்ட வீட்டினுள் கொண்டுசெல்லப்பட்டோம். அந்த பகலிலும் இருட்டு அந்த வீட்டீனுள் ஒளிந்து கொண்டிருந்தது.

அந்த இடத்தின் அமைப்பு மனதில் புதிய இரசாயனத்தை கசியச்செய்தது. மனதில் வினோதமான அமைதி வந்தது போலிருந்தது. பழைமையான ஓவியங்கள் சுவர்களை மறைத்திருந்தன. மந்தமான வெளிச்சம் அந்த ஓவியங்களிலுள்ள சோக உருவங்களுக்கு உயிர் கொடுத்தது. அந்த விசாலமான அறையின் ஒரு ஓரத்தில் உள்ள சோபாவில் ஒரு உருவம் முதுகை காட்டியவாறு சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. "சாந்தமான புன்னகை" ஆசாமி எங்களை உள்ளே வழிநடத்தினார். அந்த சோபாவை நோக்கி நடந்தோம். நடத்தப்பட்டோம்!!. சோபாவில் உள்ள உருவத்தின் காதில் ஏதோ சொன்னார். அந்த உருவம் எழுந்தது. கை கொடுத்தது. நாற்பது வயது மதிக்கத்தக்க ஆள். வெள்ளை முடி நாற்பது சதவீத முடியை ஆக்ரமித்திருந்தது. அயர்ன் செய்யப்பட்ட வெள்ளை சேர்ட், கறுப்பு ட்ரௌசர் அணிந்திருந்தார். வாயில் உயர்தர சுருட்டு புகைந்தது. எங்களுடன் கை குலுக்கினார். "நான்தான் சண்முகநாதன்.. பிசினஸ்மான்" அறிமுகப்படுத்தினார். அவர் செயல்களில் கண்ணியம் இருந்தாலும் கண்களில் சந்தேகம் ஓடி கொண்டிருந்தது.

"என்னைப்பற்றி தெரியுமா" என்று மர்ம புன்னகை பூத்தார் சண்முகநாதன். துமிலன் "உங்களை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கு.. உங்களை பார்த்தா அந்த சண்டா மாதிரி  இருக்கு" என்று சொல்லிக்கொண்டே நாக்கை கடித்துகொண்டான்.

"ம்.. ம்.. நீ சொல்றது சரிதான்.. ஆனா என்னைப்பற்றி அவ்வளவா தெரியலை போலிருக்கு.. தெரிஞ்சிருந்தா அப்படி என்முன்னால பேசமாட்டே.. நான்தான் கொழும்பு ஏரியாவை பத்து வருசத்துக்கு முன்னால கண்ட்ரோலில் வச்சிருந்த நிழலுலக தாதா "சண்டா". உங்களை மாதிரி பொடிப்பயல்களுக்கு என்னைப்பற்றி தெரிய வாய்ப்பில்லை.. அது ஒரு காலம்.. கொழும்பில் இருந்த சின்ன சின்ன தாதாக்கள் என்னை கேட்காமல் ஒரு முடிவு எடுக்கமாட்டார்கள்.. என்னுடைய நண்பர்கள்தான் ஆட்சிக்கு வரமுடியும். கொழும்பு முழுக்க நான் வச்சதுதான் சட்டம்" என்றார்.

அவர் குரல் கம்மியது. "ம்.. ம்.. நான் செய்த ஒரு பிழையால் எங்கட தலையெழுத்தே மாறிடிச்சு. என்னுடைய ஆட்களில் பலரை பொலிஸ் கொன்றுவிட்டது.. போலீஸ் என்னை வேட்டையாடியது.. ஆனா அவர்களால் என்னை பிடிக்க முடியவில்லை" அவரது முகம் சிவப்பாகியது. அதன்பின்னர் முப்பது செக்கன் மௌனம் நிலவியது. முகத்தில் இருந்த கடுமை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.

"இவன் எதற்காக எங்களை வரவழைத்திருக்கிறானோ" என்று எங்களுக்குள் ஆயிரம் சிந்தனைகள் மனதில் ஓடியது. சண்டா கொஞ்சம் தண்ணீர் குடித்து ஆசுவாசப்படுத்திக்கொண்டார். எங்களை அழைத்துவந்த தாதாவின் "வலதுகரம்" பேசத்தொடங்கினார். "நாங்கள் நாலைஞ்சு வருசமா தொழிலில் இருந்து விலகிட்டோம். கடைசியா போலீஸ் எங்கட ஆட்கள் முப்பது பேரை கொன்றாங்க.. அத்தோடு ஆறு வருஷம் தலைமறைவுக்கு பிறகு இப்போதுதான் தொழிலை திரும்ப தொடங்கினோம். இப்ப முன்னைய மாதிரி தொழிலை நடத்த முடியலை. கூலிக்கு கொலை செய்தல், கட்டபஞ்சாயத்து எல்லாமே ரகசியமா நடத்த வேண்டியிருக்கு.

போதாக்குறைக்கு இந்த கூலிப்படையை மெயின்டைன் பண்ண நிறைய செலவாகுது. யானையை கட்டி தீனி போடற கதையா இருக்குது. முன்னைய மாதிரி இல்லை, எங்கேயாவது ஏதாவது நடந்தா, போலீஸ் நேரா இங்கதான் வருகுது. இப்போதெல்லாம் யாழ்பாணத்திலிருந்து நிறைய ஆர்டர் வருது. அந்த மாதிரி தூர இடத்தில வேலை வந்தா இவனுகளை அங்கே அனுப்பிறதுக்குள்ளேயே போதும் போதும் என்றாகிடுது. இதுக்கெல்லாம் நீங்கதான் எங்களுக்கு உங்கட சாப்ட்வேர் மூலம் தீர்வு தரப்போறீங்க" என்று புதிர் போட்டார் வலது கரம்.

நாங்கள் எக்குத்தப்பாக முழித்துகொண்டிருக்கும்போது, சண்டா பேசத்தொடங்கினார். "கூலிக்கு கொலை செய்வதற்கான ஆர்டர் நவீன முறையில் ஈமெயில், எஸ்எம்எஸ் இல் வரணும். இங்க்லீஷ் படத்தில வாற மாதிரி என்னோட அடியாட்கள் அமெரிக்காவிலிருந்தாலும் கொலை செய்யப்படுபவனின் படத்தை ஈமெயிலில் அனுப்பி கொலை செய்ய வைக்கவேண்டும். என்னோட அடியாட்களை பிடிபட்டாலும் என்னை பற்றி தகவல் குடுக்க அவனுகளுக்கு ஒண்ணுமே தெரியப்போவதில்லை. செஞ்ச கொலைக்கு காசு குடுக்க என்ட கஸ்டமர் யாராவது எங்கிட்ட வந்தாதானே போலிஸ் என்னை தேடிவரும். கஸ்டமர்களை கிரெடிட் கார்டுல காசு குடுக்க சொன்னா சரி. பாங்க்குல காசு குவியும்" என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தார். நிறைய நாள் தீவிரமாக நூற்றுக்கணக்கான சிகரெட் பாக்கெட்டுகளை காலி செய்து நிதானமாக யோசித்து திட்டமிட்டிருப்பது போல இருந்தது. எங்களுக்கோ மண்டை காய்ந்தது. அவர் சொன்னதை ஜீரணிக்க மூளை கொஞ்ச நேரம் எடுத்துக்கொண்டது. துமிலன் முதலில் சுதாரித்துகொண்டான். சற்று செருமிக்கொண்டு பேசத்தொடங்கினான். "இது சூப்பர் ஐடியா.. உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் கொலைக்கான ஆர்டரை யாரும் எங்கள் சிஸ்டம் மூலம் கொடுக்கலாம். அது போலவே தொழில்முறை கொலைகாரர்கள் எங்கள் சிஸ்டத்தில் பார்ட்-டைம் அடியாட்களாக ரெஜிஸ்டர் செய்யலாம். கொலை ஆர்டர் வரும் இடத்துக்கு அருகாமையிலுள்ள கொலைகாரனை தேர்ந்தெடுத்து சிஸ்டம் தகவல் அனுப்பும். சுவிஸ் பாங்க்குடன் "இண்டிகிரேட்" பண்ணிவிட்டால் உங்களை பிடிக்க எந்த போலீசாலும் முடியாது" என்று அளந்தான்.

இப்போது தாதாவுடனான உரையாடல் சுமுகமாக மாறியது. அடுத்த மீட்டிங்கில் சிஸ்டம் பற்றிய டிசைனை நாங்கள் விளக்குவோம் என்றவாறு விடைபெற்றோம். அதே வான், கண்களில் கறுப்புத்துணி ஆனால் இம்முறை இறுக்கம் குறைவாக கட்டப்பட்டிருந்தது. கொள்ளுபிட்டி சந்தியில் இறக்கப்பட்டோம். ஆபீஸுக்குள் நுழைந்தவுடனேயே சில்வெஸ்டர் ஓடி வந்து வரவேற்றான். அவன் முகத்தில் குரூரமான புன்னகை தவழ்ந்தது. பிறகு வேறு சில மேனேஜர்கள் சகிதம் புதிய ப்ரோஜெக்ட் பற்றிய தீவிர மீட்டிங் நடந்தது. இந்த ப்ரொஜெக்ட் செய்வதில் இருக்கும் தாதாக்களுடனான தொடர்பு மூலம் வரக்கூடிய ரிஸ்க்குகளை பற்றி எனது கருத்தை வலியுறுத்தினேன். ஆனாலும் கம்பெனி இருந்த கேவலமான நிலையை கருத்தில் கொண்டு ப்ரோஜெக்ட்டை செய்யுமாறு சில்வெஸ்டர் முதலான மேனேஜர்கள் வற்புறுத்த மீட்டிங் ரூமில் வெக்கை கூடியது. வார்த்தைகளால் சண்டையிட்டோம். ஆனாலும் அடுத்த மாத சம்பளம் வருவதே இந்த ப்ரொஜெக்ட்டில்தான் தங்கியிருக்கிறது என்ற விஷயம் எங்களை இறுதியாக சம்மதிக்க வைத்தது.


அத்தியாயம் 3: கொலைகார சிஸ்டம்

ராத்திரி பகலாக வேலை தொடங்கியது. சண்டா சொன்ன சாப்ட்வேர் சிஸ்டத்தின் வடிவம் விநோதமாக டெர்ரராக இருந்தது. சிஸ்டத்தின் பயனாளர்களுக்கு விதவிதமான சேவைகள் வழங்கப்பட்டன. பயனாளர்கள் தாங்கள் பழிவாங்க விரும்பும் நபரின் பெயர், முகவரி, போட்டோவை சிஸ்டத்தில் அப்லோட் பண்ண வேண்டும். பின்பு எவ்வாறு பழிவாங்க வேண்டும் என்பதை விளக்க வேண்டும். கொலை அல்லது கை, கால் எடுத்தல், வெள்ளைவான் கடத்தல் போன்று வெவ்வேறான தண்டனை விபரணைகளை "கம்போபொக்சில்" தெரிவுசெய்யவேண்டும். ஒவ்வொரு தண்டனைக்கும் தண்டனையின் தீவிரத்துக்கு ஏற்றவாறு கிரெடிட் கார்டில் காசு அறவிடப்படும். இப்படியாக இலங்கையின் ஒரு மூலையில் இருக்கும் மிஸ்டர் சின்னதம்பி என்பவர்  ஏதோவொரு மூலையிலிருக்கும் பெரியதம்பி என்பவரை பழிவாங்க விரும்பினால் சிஸ்டத்துக்கு  பெரியதம்பியின் "கையை" எடுத்துவிடுமாறு சிஸ்டத்துக்கு உத்தரவு போடலாம். கிரெடிட் கார்ட் இந்த சேவைக்காக பத்தாயிரம் ரூபா வசூலிக்கும். பெரியதம்பியின் இருப்பிடத்துக்கு அருகாமையிலுள்ள சண்டாவின் ஆள் "கத்தி" கண்ணாயிரத்துக்கு போட்டோ சகிதம் உத்தரவு ஈமெயிலில் பறக்கும்.

இவ்வாறான கொலைகார சிஸ்டத்தை வடிவமைக்கும்போது எங்களுக்கு ஒவ்வொரு நாளும் தீக்கனவுகள் வந்து தொல்லை கொடுத்தன. கொடுத்த Deadlineஇல் முடிக்க முடியாமல் போனதால் சண்டா எங்கள் கைகளை வெட்டபோவதாக சொல்வது போன்ற கனவு மூன்று நாளைக்கு ஒருமுறை வந்தது.

இப்படியே நாலு மாதங்கள் கடந்தன. ஒருவழியாக எங்கள் சிஸ்டம் ரெடியாகி விட்டது. ஆனாலும் இப்படி ஒரு சிஸ்டம் செய்ததில் பெரிய மகிழ்ச்சி எங்களுக்கு இருக்கவில்லை. துமிலன் "நான் நல்லா தூங்கி நாலு மாசமாகுது. இந்த இழவு சிஸ்டத்தை பார்க்கும்போதே தலையிடி வருது. நாங்கள் இதன் மூலம் காசு சம்பாதிக்கிறமோ இல்லை நிறைய பாவத்தைத்தான் சம்பாதிக்க போகிறோம்" என்று புலம்புவான். சில்வெஸ்டர் உடனே முடிக்குமாறு சத்தம் போடுவான். அவன் மேனேஜர்களின் செல்லப்பிள்ளை. அதனாலேயே இஷ்டத்துக்கு உத்தரவு பிறப்பிப்பான். எங்களை விரட்டுவான். எல்லோருக்கும் அவன் மேல் கொஞ்சம் பயம் இருக்கும். அவன் என்னையும் துமிலனையும் சண்டாவுடனான UAT மீட்டிங்க்குக்கு போகுமாறு உத்தரவு பிறப்பித்தான். சில்வெஸ்டர் போன் மூலமாக சண்டாவுடன் தொடர்பு வைத்திருந்தாலும், அவரை நேரடியாக சந்திக்க தயங்கினான். பலிக்கடாக்களான எங்களை அனுப்பினான். நாங்கள் போவது UAT எனப்படும் User Acceptance Test. UAT என்பது ஒருவகையான அதிரி புதிரி சிஸ்டம் டெஸ்டிங். சாப்ட்வேருக்குரிய கஸ்டமர்கள் சிஸ்டம் எவ்வாறு தொழிற்படுகிறது என்பதை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு டெஸ்ட் பண்ணுவார்கள். ஏதாவது சரியாக வேலை செய்யாவிட்டால் "தாம் தூம்" என்று குதிப்பார்கள். சிஸ்டத்தை திருத்திகொடுக்கும்வரை கொடுக்குப்பிடி பிடிப்பார்கள். சும்மா கஸ்டமர்கள் இப்படி என்றால், துப்பாக்கி, அரிவாள் தூக்கும் சண்டா எப்படி எங்கள் அரைகுறை சிஸ்டத்தின் செயல்பாடுகளில் சகித்து கொள்ளபோகிறார் என்பதே நெஞ்சை பதைக்கும் ஒரு கேள்வியாக இருந்தது. "டேய், அவரின்ட கால்ல கையில விழுந்தாவது சிஸ்டத்தை ஓகே பண்ணனும். நான் வர்ற வழியில பிள்ளையாருக்கு தேங்காய் உடைச்சேன்." என்று பதற வைத்தான் துமிலன். அவன் நெற்றியில் திருநீறு பட்டை தெரிந்தது. நான் வரும்போது பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்து கொண்டு வந்திருக்கணும். குறைஞ்சது அம்மாவோட அறிவுரைப்படி வீட்டை விட்டு வெளியே வரும்போது திருநீறு சாத்திட்டு வந்திருக்கலாம்.

வழமையான கண்கட்டு வித்தையில் சண்டாவின் வீட்டுக்கு போய் சேர்ந்தோம். கண்களில் கட்டு அவிழ்க்கப்பட்டபோது, சண்டா எங்கள் முன்னால் கம்பீரமாக அமர்ந்திருந்தார். அவரது வாயின் ஓரத்தில் தோன்றிய சிக்கனமான புன்னகைக்கு அவரது இரத்தச்சிவப்பான கண்கள் ஒத்துழைக்கவில்லை. "உங்கட வேலையை தொடங்குங்க தம்பி. கவனமா நடந்துக்குங்க. சிஸ்டம் செய்யிற ஒவ்வொரு பிழையும் அநியாயமா உயிரை பறிக்க வாய்ப்பிருக்கு" என்றார் "வலதுகை". நாங்கள் ஒவ்வொரு சிஸ்டம் செயற்பாடுகளை பற்றி தெளிவாக விளங்கப்படுத்தினோம். பிறகு டெஸ்டிங் தொடங்கியது. மட்டக்களப்பில் உள்ள சாம்சன் என்பவரை "வெள்ளைவானில் கடத்தி சித்ரவதை" செய்வதற்காக சிஸ்டம் மூலம் ஆர்டர் கொடுத்தோம். அதன் விளைவை பற்றி அறிவதற்காக, "வலதுகை" ஒரு டிவியை ஓன் செய்து, "சக்தி டிவி" சானலுக்கு மாற்றினார். ஒரு மணித்தியாலத்துக்கு பின்னர், சக்தி டிவி Breaking Newsஇல் "யாழ்ப்பாணத்தில் சபேசன் என்பவர் வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத நபர்களால் சற்று முன்னர் கடத்தப்பட்டார்" என்று செய்தி பறந்தது. எங்கள் முகங்களில் வந்த பீதியை சமாளித்துக்கொண்டு "இன்னும் வேறு சில ஆர்டர்களை செய்து பார்ப்போம்" என்றேன். இந்த முறை புத்தளம் சிவசாமிக்கு செமத்தியாக அடி கொடுத்து பல்லை உடைக்கவேண்டும் என்று  ஆர்டர் கொடுத்துவிட்டு சக்தி டிவியை அரைமணித்தியாலமாக முறைத்துபார்த்துக்கொண்டிருந்தோம். ஒருவாறாக சக்தி டிவி Breaking News வந்தது. எங்கள் இதயம் 150 கிலோமீட்டர் வேகத்தில் ஓடியது. "புத்தளத்தில் சிவசாமி என்பவரின் கைகள் இனந்தெரியாத நபர்களால் வெட்டப்பட்டது" என்று Breaking News அலறியது. சண்டா மேலே பார்த்து தலையில் கை வைத்தார். "வெறும் பல்லை உடைக்கிறதுக்கு பத்தாயிரம்தான் வாங்கறோம். நீங்க குடுத்த காசுக்கு மேலே போய் கையை வெட்ட உத்தரவு கொடுக்கிறீங்க. கையை வெட்ட நாலு லட்சம் வாங்கிறம் தெரியுமா.. எவ்வளவு நட்டம் பாருங்க" என்று முறைத்தார் "வலது கை". எங்களின் இதயம் வெளியே வந்தால் போதும் என்றிருந்தது.

சண்டா நிதானமாக தளர்வான குரலில் "இந்த பிரச்சனைகளை திருத்தி போட்டு வாங்கோ. நாலு நாள் தாரேன். அதுதான் Deadline. உண்மையான Dead.. line" என்றார். முகத்தில் ஒரு சலனமும் இல்லை. கையில் இருந்த தேநீர் கோப்பையை சத்தமாக மேசையில் வைத்தார். அதில்தான் அவரின் கோபம் வெளிப்பட்டது.

ஆபீஸ் வந்து சேர்ந்தபோது இரவு ஏழு மணி. உடனடியாக கண்டு பிடிக்கப்பட்ட bugகளை திருத்த ஆரம்பித்தோம். இரவு பகலாக சிஸ்டத்தை சரி செய்தோம். சில்வெஸ்டர் தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை போல நடந்து கொண்டான். அவன் மூலமாக சண்டாவுடன் பேசி கூடுதலாக நேரம் கேட்க முயற்சித்தேன். ஆனாலும் சில்வெஸ்டர் சண்டாவுடன் பேச மறுத்துவிட்டான். இதனால் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக சிவராத்திரி அனுஷ்டித்தோம். எல்லார் முகத்திலும் வெறுமை இருந்தது. சிரிக்க முடியவில்லை. அழுவதற்கு நேரமிருக்கவில்லை. ஒருவாறு பூசி மெழுகி சிஸ்டத்தை சரி செய்தோம். நான்காம் நாள் காலை, மறுபடியும் கண்ணை கட்டிக்கொண்டே சண்டாவின் வீட்டே விடப்பட்டோம். இந்த முறை சூழல் அவ்வளவு சுமுகமாக இருக்கவில்லை. வழமையாக கொஞ்சமேனும் புன்னகைக்கும் "வலது கை" அன்று கடுமையாக நடந்துகொண்டார். ஆனால் இந்த முறை எங்கள் சிஸ்டம் ஏமாற்றவில்லை. யாழ்ப்பாணத்தில் கொடுத்த கொலை ஆர்டர் யாழ்ப்பாணத்திலேயே நிறைவேற்றப்பட்டது. தர்மராஜூவுக்கு கொடுக்கப்பட்ட வெள்ளை வான் ஆர்டர் மூலம், தர்மராஜ் வெள்ளை வானில் கடத்தப்பட்டு முப்பது லட்சம் பணம் கொடுத்தபின்னர் விடுவிக்கப்பட்டார்.

சண்டாவின் முகத்தில் ஒரு திருப்தி தெரிந்தது. "தாதாயிசம் goes to IT" என்று கூவினார். நான்கு வைன் கிளாசை தானே எடுத்துக்கொண்டு வந்தார். "இது உயர்தர வைன். இது வெற்றிகரமாக முடிந்ததை கொண்டாடுவோம்." என்றார் ஒரு சிறுவனுக்குரிய உற்சாகத்துடன்.

அதற்கு பின்னர் சண்டாவுடன் சகஜமாக கதைத்தோம். எங்கள் குடும்பங்களை பற்றி அக்கறையாக விசாரித்தார். எப்போது கல்யாணம் என்று கண் சிமிட்டினார். கடைசியாக "மனுஷன் பிறந்த நாள்முதல் வன்மம் என்பது அவனை நிழல் போல் தொடர்கிறது. நீங்களும் அதற்கு விதிவிலக்கல்ல. தம்பி! நீங்க யாரையாவது பழி வாங்க விரும்பிறீங்களா. நீங்க எங்களுக்கு செய்த உதவிக்காக ஒரு பழிக்கு பழியை ப்ரீயா செஞ்சு தாறோம். அப்படி யாராவது இருக்கா" என்றார். "நான் எப்போதுமே அன்பை நாடுவேன். பழிக்கு பழி வேணாம் சேர்" என்றான் துமிலன். எனக்கு வேணாம் என்று சொல்ல தோன்றவில்லை. "சும்மா யோசிச்சு பாருங்க.. உங்களுக்கு யார் மேலாவது வன்மம் இருக்கலாம். உங்கள் user accountகளுக்கு ஒருமுறை மட்டும் ப்ரீ. இரண்டு நாளைக்குள் இதை பாவிச்சுடுங்க. பிறகு வருத்தப்படக்கூடாது. யாராகவும் இருக்கலாம். நான் கண்டுகொள்ள மாட்டேன். உங்களுக்கு பிடிக்காதவர்களை கொலைகூட செய்யலாம்" என்று கண் சிமிட்டினார்.

அத்தியாயம் 4: இதுதான் முடிவா

வீட்டுக்கு வந்த சேர்ந்தபோது மணி பத்து. கால் முகம் கழுவிக்கொண்டேன். மனதில் ஒருவித வெறுமை உணர்ச்சி. உடல் சோர்வாக இருந்தது. ஆனால் நித்திரை வரவில்லை. கம்ப்யூட்டரை ஓன் செய்தேன். சண்டாவின் கொலைகார சிஸ்டத்துள் நுழைந்தேன். புதிய ஆர்டரை பதிவு செய்ய கோரினேன். சிஸ்டம் என்ன தண்டனை என்று கேட்டது. நாக்கை அறுக்க வேண்டும் என்றேன். தண்டனை கொடுக்கப்படவேண்டிய ஆளின் பெயரை கேட்டது.

பொறுமையாக ஒவ்வொரு எழுத்தாக என்று டைப் செய்தேன். அது "சில்வெஸ்டர்" என்றிருந்தது.

2 comments: