Saturday, October 4, 2014

பிரம்மாஸ்திரம்!!

 பின்னேரம் நாலு மணி இருக்கும். முன் கேட்டில் மூன்று தரம் டிங்.. டிங்.. என்று சத்தம் கேட்டது. அதுதான் பின்னேர கிரிக்கெட் விளையாட்டுக்கான ரகசிய சமிக்ஞை. முந்தாநாள்தான் ஏழாம் ஆண்டு கடைசி தவணை பரீட்சைகள் முடிந்து ரிப்போர்ட் கார்ட் வந்திருந்தது. ரிப்போர்ட்டில் வந்த மார்க்ஸ் அம்மாவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியம அளவுகளில் இல்லாததால் லீவு நாட்களிலும் அம்மாவின் கெடுபிடிகள் அதிகமாக இருந்தன. அதனால் "பின்னேர விளையாட்டு" கிழமையில் மூன்று நாட்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. அதனால் ஏனைய நாட்களில் "டியூஷன் போகிறேன்" என்று சொல்லிவிட்டுத்தான் விளையாட்டுக்கு போகணும். எல்லாமே தீவிரமாக திட்டமிடப்பட்டிருந்தது. பிரசாத் கேட்டில் மூன்று தரம் மெதுவாக தட்டுவான். நான் அந்த சிக்னலை கேட்டு பாடபுத்தகத்தோடு வெளியே வரவேண்டும். என்னை தவிர வேறு யாராவது சத்தம் கேட்டு போய் பார்த்தால் யாரையும் காணமுடியாது. மூணு வீடு தள்ளி இருக்கிற "டியூசன்" அங்கிள் வீட்டுக்கு போக சைக்கிள் தேவைப்படாது. ஆகவே எனது சைக்கிளை தொட்டால் அம்மாவுக்கு சந்தேகம் வந்துவிடும். இரண்டு கிலோமீட்டர் தள்ளி இருக்கிற உப்பு கராஜ்ஜுக்கு போக பிரசாத்தின் சைக்கிளில்தான் தொற்றிக்கொள்ள போகவேண்டும். பிரசாத்துக்கு என்னைவிட ஒரு வயசு குறைவு. ஆனாலும் அவன் வயது பயல்களுடன் சுற்றுவதைவிட என்னுடன்தான் கூடுதலாக சுற்றுவான். அவன் ஒரு கிரிக்கெட் பைத்தியம். அவனுடன் கிரிக்கெட் விளையாட சம்மதிக்கும் யாரும் அவனுக்கு நண்பராகலாம். அந்தவழியில்தான் நான் அவனுக்கு நண்பன்.

நான் பாடபுத்தகத்தோடு வெளியே வந்தேன். பிரசாத்தின் சைக்கிளில் ஏற சைக்கிள் வேகம் பிடித்தது. வேகமாக சைக்கிள் ஓடினால் இன்னும் கூடுதலான நேரம் கிரிக்கெட் விளையாடலாம் என்பதற்காகவே மூச்சிரைக்க பிரசாத் வெறியுடன் ஓடினான். "நத்தை" நந்துவும், முத்துவும் நேரடியாக உப்பு கராஜ்ஜுக்கே வருவார்கள். நாலே நாலு பேர்தான். ஆனாலும் நாங்க விளையாடுற கிரவுண்டின் அளவுக்கு நாலு பேர் அதிகம்தான். எங்கள் ஊரில் "புட் போல்"தான் பேமஸ். கிரிக்கெட் என்றால் சோம்பேறிகளின் விளையாட்டு என்று ஒரு பொதுவான அபிப்பிராயம் இருந்தது. "அது என்னடா விளையாட்டு.. ஒருத்தன் போல் போட.. அதை ஒருத்தன் அடிக்க.. கிரவுண்டுல இருக்கிற மற்ற பத்து பேரும் கொட்டாவி விடுகிறான்கள்" என்று தாத்தா கடுமையாக விமர்சிப்பார். ஆகவே கிரிக்கெட் விளையாட காசு குடுத்ததுதான் ஆள் பிடிக்கவேணும். யன்னல் கண்ணாடிகளை காப்பாற்றிகொள்வதற்காக உள்ளூர் பெருசுகள் செய்யும் சதி என்று பிரசாத் சொல்லுவான். இதுவரை நாலு வீட்டு யன்னலை உடைத்திருக்கிறான். அடுத்த நாள் காசை தந்து விடுவேன் என்று சொல்லி நழுவி விடுவான். அடுத்த நாள் வேறு இடத்துக்கு விளையாட்டை மாற்றிவிடுவோம். இவ்வளவு எதிர்ப்புக்கும் மத்தியிலும் நாங்கள் நாலு பேரும் கிரிக்கெட் விளையாடுவதற்கு ஒரு காரணம் இருந்தது. நாங்கள் நாலு பேருக்கும் "புட் போல்" ஒத்துவராது. "புட் போலில்" தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். "கோல்" அடிக்க போகும்போது காலை "டாக்கில்" செய்து விழுத்தி விடுவான்கள். பிரசாத் இப்படியான ஒரு சம்பவத்தில் முன் பல்லை இழந்திருந்தான். அந்த பயத்திலேயே கிரிக்கெட்டுக்கு எங்களை இசைவாக்கப்படுத்திக்கொண்டோம்.

உப்பு கராஜ்ஜூக்கு போய் சேர்ந்தபோது முத்துவும், நந்துவும் விக்கெட்டுகளை நாட்டிக்கொண்டிருந்தார்கள். நந்துவின் பட்டப்பெயர் "நத்தை". நாங்கள் அவன் பீல்டிங் செய்யும் பக்கமாக பந்தை அடிப்போம். பௌண்டரி நிச்சயமாக கிடைக்கும். முத்து நல்ல "பாட்ஸ்மன்". பலசாலி. ஆனாலும் உப்பு கராஜ் போன்ற சின்ன மைதானங்களில் அவன் திறமை வீணானது. உப்பு கராஜ் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு பெரிய காலி நிலமாக கனவு மைதானமாக இருந்தது. ஆனால் இப்போது சில வீடுகள் முளைத்து விட்டன. அதனால் மைதானம் சுருங்கி நீள் சதுரமாக மாறியது. இதனால் "ஓப்" சைட்டில் அடித்தால், லல்லு மாமா வீட்டு யன்னல்களுக்கு ஆபத்து வரும். "ஓன்" சைட்டில் அடித்தால் உப்புக்குளத்தில் பந்து விழுந்து விடும். ஆகவே ஸ்ட்ரைட்டாக அடித்தால் மட்டுமே சிக்ஸர் அடிக்க முடியும். இப்படியோரு இண்டர்நஷனல் க்ரௌன்ட். ஆனாலும் கிரிக்கெட் மேலிருந்த வெறி எங்களை அங்கே அழைத்துச்செல்லும்.

முத்து முதலாவதாக "பேட்"டை  தூக்கினான். பிரசாத் ஒருவன்தான் அவனுக்கு தைரியமாக பந்துவீச வருவான். பிரசாத் "பாஸ்ட் போலர்" பௌன்டரி லைனுக்கு  அருகாமையிலிருந்து ஓடி வருவான். "வக்கார் யூனுஸ்"தான் அவனது மானசீக குரு. முதல் பந்தை முன்னுக்கு ஒரு ஸ்டெப் வைத்து "ப்லோக்" செய்தான். "சிவமயம்" போட்டு எழுத ஆரம்பிப்பது போல இப்படித்தான் தொடங்குவான். அடுத்த பந்து தூக்கி அடிக்க சிக்ஸருக்கு பறந்தது. அடுத்தது பௌன்டரி. அடுத்த பந்தை பிரசாத் கொஞ்ச ஸ்லோவாக போட பேட்டை மிஸ் பண்ணி முத்துவின் முழங்காலில் பட்டது. "முத்து.. நீ அவுட்டு.. LBW போடா வெளியே" என்று பிரசாத் கத்தினான். ஆனால் முத்து "இல்லடா பாட்டுல(pad) பந்து பட்டாத்தான் LBW.. நீ டீவியில மேட்ச் பார்த்ததில்லையா" என்று சண்டை பிடித்தான். அவனை அவுட் ஆக்குவது கஷ்டம். அவுட் ஆக்கினாலும் வெளியே போக வைப்பது அதைவிட கஷ்டம்.

அடுத்த ஓவர் என்னிடம் வந்தது. நான் "லெக்" ஸ்பின்னர். எனக்கு ஓடுவது என்றாலே அலர்ஜி. பள்ளி விளையாட்டு போட்டிகளில் ஓடி ஒளிவேன். ஓடினால் கால் உளையும். "ஸ்பின்னராக மாறும்" சரித்திரத்தையே மாற்றும் முடிவை எடுத்தேன். முதல் பந்து அரைபிட்ச்சில் விழுந்து சுழன்று அடிப்பதற்கு வாகாக விழுந்தது.. வெளுத்தான்.. சிக்ஸர்.. "இருடா.. ஆறு போலுக்குமே சிக்ஸர் அடிக்கிறேன்" என்று சூளுரைத்தான். அடுத்த பந்து கொஞ்சம் பரவாயில்லை. கஷ்டப்பட்டுத்தான் அடித்தான்.. நந்து விட்டுவிட பௌண்டரி.. 


எனக்கு அடுத்து என்ன செய்வது தெரியவில்லை. அப்போதுதான் எனது
பிரம்மாஸ்திரம் ஞாபகத்துக்கு வந்தது. அந்த நேரம் "சக்லைன் முஸ்தாக்" பிரபலமாக இருந்தார். ஓப் ஸ்பின்னர் என்று சொன்னாலும் பந்தை அடுத்த பக்கமாகவும் திருப்புவார். அவரைப்போலவே நானும் எனது வழமையான லெக் ஸ்பின்னை கொஞ்சம் மாற்றி ஓப் ஸ்பின் போட்டேன். முத்து எதிர்பார்க்கவில்லை. ஓப் ஸ்டம்ப் பறந்தது. "நீ அலாப்புகிறாயடா.. பந்து கல்லில பட்டு அடுத்த பக்கம் திரும்பிட்டுது." என்று பிட்சில் விழுந்திருந்த சின்ன கல்லுகளை சாவகாசமாக தட்டிவிட்டான். அவனது சேர்ட்டை பிடித்து இழுத்து "நீ அவுட்டு.. போடா வெளியே" என்றேன். அவன் என்னை தள்ளிவிட பிட்சில் போய் விழுந்தேன். காலில் தேய்த்து காயம் ஏற்பட்டது. "இப்ப பாருடா உனக்கு குடுக்கிறேன் பாரு" என்று கர்ஜித்துக்கொண்டே எழுந்தேன். எல்லோரும் சிலை போல அதிர்ந்து போய் எனது பக்கமாக பார்த்துக்கொண்டேயிருந்தார்கள். அவர்கள் என்னை பார்க்காமல் எனக்கு பின்னாலிருந்த யாரையோ பார்த்துகொண்டேயிருந்தார்கள். திரும்பி பார்த்தபோது அவர்களைவிட நான் அதிர்ச்சியானேன். அன்பு மாமா முகம் சிவந்தவாறு முறைத்துகொண்டிருந்தார். "டேய் உனக்கு இப்போது டியூஷன் இருக்கு.. ஆனா நீ இங்க என்ன செய்யுற" என்று கர்ஜித்தார். "அம்மாட்ட பொய் சொல்லிட்டாய்.. என்ன பார்க்கிற.. வீட்டுக்கு வா.. தாரேன் பூசை" என்றார்..

அவருடைய "சூப்பர் கப்" மோட்டார் சைக்கிளில் ஏறினேன். மற்றவர்கள் அசையாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். வீட்டில் அன்பு மாமாவின் பிரம்மாஸ்திரமான பெல்டினால் நல்ல பூசை கிடைத்தது. அதற்கான காரணம் கிரிக்கெட் மட்டுமல்ல. அதைவிட அபாயகரமான காரணம் ஒன்று இருப்பது பிறகுதான் உறைத்தது. "அக்கா.. இவன் ரிப்போர்ட் கார்டுல கணித பாட மார்க்ஸ் மாத்திப்போட்டான்.. இவன் உண்மையா எடுத்தது நாற்பத்தைந்து மார்க்ஸ்.. ஆனா கள்ளப்பயல் அதை அழிச்சு எழுபத்தைந்து என்று மாற்றிப்போட்டான்" என்று போட்டுடைத்தார். அவ்வளவுதான் பூசையில் அம்மா வேறு சேர்ந்து கொண்டாள். அன்றுதான் கிரிக்கெட் விளையாடிய கடைசி நாள். நல்லதொரு ஸ்பின்னரை இந்த நாடு இழந்து விட்டது..

அவர் ஏன் உப்பு கராஜ் போன்ற ஒதுக்குபுறமான இடத்துக்கு திடீரென்று வந்தார்.. ரிப்போர்ட் கார்டில் நான் செய்த திருகுதாளம் எப்படி அவருக்கு தெரிந்தது என்பது போன்ற கேள்விகளுக்கான விடைகள் இரண்டு வருடங்களுக்கு பின்னர்தான் தெளிவானது. உப்பு கராஜுக்கு பக்கத்தில் இருந்த லல்லு மாமாவின் மகளை சைட் அடிக்க அன்பு மாமா வருவாராம். லல்லுவின் மகள்தான் எங்கள் கணித ஆசிரியையான மாலா டீச்சர். இரண்டு வருஷம் கழிச்சு இப்போது மாலா டீச்சர் அன்பு மாமியாகி விட்டா. "உனக்கு இவன் ரிப்போர்ட்டில் மாற்றினது எப்படி தெரியும்" என்று ஒரு வார்த்தையை அம்மா மாமாவை பார்த்து கேட்டிருந்தால் அன்றையதினம் நிலைமை மாறியிருந்திருக்கலாம்..

ஆனால் கேட்கவில்லை..

7 comments:

 1. Replies
  1. Vimal innum Saqulin Mustaq ai marakala pola

   Delete
  2. Oam Amalan.. innum nalla gnapakam irukkuthu :)

   Delete
 2. அருமையான படைப்பு.. இறுதித் திருப்பம் அற்புதம்.

  ReplyDelete