Saturday, May 28, 2016

ஊழிகாலத்தில் ஒரு காமிக்ஸ் வேட்டை


1997ஆம் ஆண்டளவில் நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். காமிக்ஸ் படிப்பற்காகவே பள்ளிக்கூடம் போன காலம். பள்ளிக்கூடத்தில் காமிக்ஸ்களை கைமாற்றிக்கொள்வோம். சமூகக்கல்வி பாடம் நடக்கும்போது மாயாவியின் "தலையில்லா கொலையாளி" பாக்கெட் சைஸ் புத்தகம் எனது சமூககல்வி புத்தகத்துக்கு நடுவே இருக்கும். எங்களிடம் இருக்கும் காமிக்ஸ் புத்தகங்களை கைமாற்றிகொள்வோம். பாடசாலை நேரத்திலேயே வாசித்துவிட்டு கொடுத்துவிட வேண்டும். வீட்டுக்கு கொண்டு செல்ல அனுமதியில்லை. இதற்காகவே நான், சிவா, கிச்சா என்கிற கிருஸ்ணா, அச்சா என்ற அச்சுதன் ஆகியோர் கடைசி வரிசையில் இருப்போம். கணித டீச்சர் முக்கால்வாசி நேரம் ப்ளாக் போர்டை பார்த்தே பாடம் படிப்பிப்பா. நாங்களும் சீரியஸாக கணித புத்தகத்தை பார்ப்பது போல ஒரு பீரியட்டில் 25 பக்கம் காமிக்ஸ் வாசித்துவிடுவோம். இதற்காகவே தவறாமல் ஒவ்வொரு நாளும் பாடசாலைக்கு போவேன். பள்ளிக்கூடம் போக அடம்பிடிக்கிற பயல் திடீரென்று ஒழுங்கா போறானே என்று அம்மாவுக்கு ஒரே ஆச்சர்யம்.

அப்போது சண்டை கடுமையாக நடந்த நேரம். இந்தியாவிலிருந்து அநேக நேரங்களில் படகினில் வரும் ஏனைய பொருட்களுடன் சில புத்தகங்களும் வந்திறங்கும். ஆனால் சில மாதங்களாக கடலில் அடிக்கடி சண்டை நடந்தது. இந்தியாவிலிருந்து ஒரு சாமானும் வரவில்லை. இதனாலேயே எங்கள் பகுதிக்கு காமிக்ஸ் வறட்சி. பருத்திதுறையிலிருக்கும் புத்தககடைக்கு வாரத்துக்கு ஒருமுறை சைக்கிள் மிதித்து தோல்வி கண்டோம். இதற்கு மேல் என்ன செய்வது கடுமையான சிந்தனையிலிருந்தோம். சிவா பள்ளிகூடத்துக்கு அடிக்கடி "கட்" அடிக்க ஆரம்பித்தான். கேட்டால் "பள்ளிகூடத்துக்கு வந்து என்னதான் செய்யிறது" என்பான். ஆண்கள் பாடசாலை வேறு. பள்ளிக்கூடம் போரடிக்க ஆரம்பித்தது.

இப்படியாக போன காலப்பகுதியில், கிச்சா ஒரு நல்ல மழைநாளில் வினோத தகவலுடன் வந்தான். யாழ்ப்பாண டவுணுக்கு அருகிலுள்ள ஒரு பழைய லைப்ரரியை மூடபோகிறார்களாம். அதிலுள்ள புத்தகங்களை எல்லாம் விற்பதாக இருக்கிறார்களாம். என்பதுதான் அந்த தகவல். அதில் பழைய காமிக்ஸ்கள் இருக்குமோ? என்பதுதான் எங்களுக்கான மில்லியன் டொலர் கேள்வி. இந்த தகவலை கிச்சாவுக்கு சொன்னது அவன்ட மாமா. அவருக்கே யாரோ ஒரு கூட்டாளி சொன்னாராம். சும்மா காதுவழியா வந்த செய்திதான். புத்தகங்கள் முடிந்து விட்டனவா என்று தெரியாது. மேலதிக தகவலை கேட்டு உறுதிபடுத்த ஒருவழியும் இல்லை. போதாக்குறைக்கு யாழ்ப்பாண டவுண் எங்கள் ஊரிலிருந்து பதினாறு மைல் தூரம். போறவழி முழுக்க ஆமிகாரன்ட செக்பொயிண்டுகள். இறக்கி ஏத்தி குசலம் விசாரிப்பானுக. டவுணுக்கு போய் வர ஒரு நாள் முழுக்க போகும். போதாக்குறைக்கு அந்த காலத்துல யாரும் அவ்வளவு தூரம் போக மாட்டார்கள். வழியில் எதுவும் நடக்கலாம். ஆகவே எங்கள் காமிக்ஸ் கனவுகளை பெரிய பூட்டுபோட்டு பூட்டி விட்டு வேற வேலையை பார்த்தோம்.

இப்படியாக ரெண்டு நாட்கள் கழிந்தன. அன்று மத்தியானம் ஒருமணி இருக்கும். கடைசிப்பாடம் நடந்துகொண்டிருந்தது. இங்க்லீஷ் வாத்தியார் அரைமயக்க நிலையில் சலிப்புடன் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். நாங்களும் தேமே என்று கேட்டுகொண்டிருந்தோம். அச்சா நல்ல நித்திரையில் தூங்கி வழிந்தான். நானும் கிச்சாவும் அவன் எப்போது கீழே விழுவான் என்று ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று அச்சா விழித்துக்கொண்டான். என் காதில் "டேய் நாளைக்கே டவுணுக்கு போவோம். அந்த லைப்ரரியில் நமக்கு காமிக்ஸ் புத்தகம் கிடைக்கிறதா கனாகண்டேன்" என்றான். அரைநித்திரையில் ஏதோ உளறுகிறான் என்று நினைத்துக்கொண்டேன். "டேய்! நான் வகுப்பறையில் கண்ட கனவெல்லாம் பலிச்சிருக்கு. நிச்சயமா இதுவும் பலிக்கும்" என்றான் உறுதியாக.

பள்ளிக்கூடம் முடிந்தபின்னர் ஆலமரத்துக்கு கீழே திட்டமிடலை ஆரம்பித்தோம். அடுத்த நாளே யாழ்ப்பாணம் போவதாக ஏகமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அச்சா முன்னின்று திட்டங்கள் வகுத்தான். அடுத்த நாள் காலை பள்ளிக்கூடத்துக்கு போவது போல் வெளிக்கிட்டுகொண்டு வந்து அப்படியே  "தட்டி வானில்" டவுணுக்கு போவோம் என்று நான் யோசனை சொன்னேன். பதினாறு மைல் சைக்கிள் மிதிக்க எனக்கு விருப்பமேயில்லை. அச்சா "டேய்.. பள்ளிகூட உடுப்போட வானில ஏறினா யாராவது பார்த்து என்ட அப்பாவிடம் சொல்லிட்டா என்னை பெல்டாலை வெளுத்து போடுவார். சைக்கிள்ள போனா அவ்வளவு சந்தேகம் வராது. பள்ளிக்கூடம் முடியுற நேரத்துக்குள்ளே திரும்பி வந்திட்டா போதும், ஒருத்தருக்கும் சந்தேகம் வராது". உண்மைதான் எங்கள் ஊர் ஒரு வினோதமான ஊர். ஊர் முழுக்க அம்மா, அப்பாவின் சொந்தக்க்காரர்களோ நண்பர்களோ பரவியிருப்பார்கள். இப்படித்தான் இரண்டு மாதத்திற்கு முன்னால, ஒன்றுவிட்ட பெரியப்பா ஒருவர் வீட்டுக்கு வந்திருந்தபோது, "உங்க மகன் பள்ளிக்கூடம் முடிச்ச பிறகு கேள்ஸ் ஸ்கூலுக்கு முன்னால நிற்கிறதை கண்டேன். கொஞ்சம் கண்டிச்சு வையுங்க" என்று அப்பாவிடம் தகவல் சொன்னார். அப்பாவிடம் அடி வாங்காத குறைதான். விசாரணை என்ற பெயரில் துளைத்தெடுத்துவிட்டார். எங்கள் ஊர் முழுக்க உளவாளிகள் பரவிக்கிடந்தனர். ஊரின் வடக்குப்பக்கம் அப்பாவின் சைட் சொந்தக்காரர்கள். தெற்குப்பக்கம் அம்மாவின் சைட் சொந்தக்காரர்கள். அவர்களின் கழுகு கண்களிலிருந்து தப்புவது கஷ்டம்தான். காமிக்ஸ் வாங்க யாழ்ப்பாண டவுணுக்கு போனேன் என்று தெரிந்தால் அம்மா தோலை உரித்துவிடுவாள். நான் தவணை டெஸ்ட்டுகளில் எடுக்கும் மார்க்குகளுக்கும் நான் வாசிக்கும் புத்தகங்களின் எண்ணிக்கைக்கும் ஏதோ தொடர்ப்பிருப்பதாக ஒரு தியரி சொல்லுவாள். அதனால் விஷயம் ரகசியமாக இருக்கவேண்டும்.

அடுத்த நாள், காலை நேரத்துக்கே விழித்துக்கொண்டேன். வழமையாக ஏழரை மணிக்கு பள்ளிக்கூடத்துக்கு போகும் நான் அன்று ஏழே காலுக்கே வெளிக்கிட்டேன். "அண்ணா! என்ன இன்றைக்கு மட்டும் நேரத்துக்கு போறே" என்றாள் தங்கச்சி. உண்மைதான், பதட்டத்தில் நேரத்துக்கே வெளியே வந்துவிட்டேன். தங்கச்சி அம்மாவோட கையாள். நான் படிக்கும் நேரத்தில், காமிக்ஸ் வாசித்தால் அம்மாவிடம் போட்டு கொடுக்கும் உள்நாட்டு உளவாளி. நான் சுதாரித்தவாறே "இன்றைக்கு நான் வகுப்பறை க்ளீன் பண்ற டேர்ன்" என்று சொல்லிவிட்டு சைக்கிளை மிதித்தேன். சிவா, அச்சா, கிச்சா எல்லோரும் சரியாக ஏழரைக்கு பள்ளிக்கூடம் முன்னால் ஆஜர். பெரிய போத்தல்களில் தண்ணீர் அள்ளிக்கொண்டோம். முகத்தில் பெரிய பரபரப்பு காட்டாமல் ஒருவர் போய் இரண்டு நிமிடம் கழித்து மற்றவர் என்று மெதுவாக ஊருக்கு வெளியே சென்றோம். சன்னதி கோவிலுக்கு கிட்டே வைத்து எல்லோரும் இணைந்து கொண்டோம். சன்னதி கோவில் போகும் வரையிலும் ஊர் உளவாளிகள் நிறைந்திருந்தார்கள். ஆகவேதான் இப்படி ஒரு ஏற்பாடு. எனக்கு அப்போதே இளைக்க ஆரம்பித்து விட்டது. கிச்சா போன ஸ்போர்ட்ஸ்மீட்டுக்கு வாங்கி மிஞ்சிய குளுகோஸ் பக்கட்டுகளை பள்ளிகூடத்திலிருந்து லவட்டி கொண்டு வந்திருந்தான். அதை வாயில் கொட்டி தண்ணீரை குடித்தேன்.

அச்சுவேலிக்கருகில் இரண்டாம் நிறுத்தம். கடையில் மாம்பழ டொபி வேண்டினோம். கையில் இருந்த காசுகளை எண்ணிப்பார்த்தோம். மொத்தமாக இருநூற்றி பன்னிரெண்டு ரூபா. சிவா மட்டுமே எண்பத்தைந்து ரூபா போட்டிருந்தான். என்னுடைய பங்கு நாப்பத்திரண்டு ரூபா மட்டும்தான். குறைந்தது இருபது புத்தகமாவது வாங்கிவிடலாம் என்று கணக்கு போட்டோம். மீண்டும் சைக்கிளோட்டத்தை ஆரம்பித்தோம். ஆமி செக்பொய்ண்டுகளில் சைக்கிளை உருட்டினோம். "எங்க போறே" என்று விசாரித்தான் ஒரு ஆமிக்காரன். "டவுண் ஸ்கூலில் எக்சிபிஷன்" என்றேன். ஒருமாதிரியா பார்த்தான். என்ன நினைத்தானோ தெரியவில்லை. "சரி போ" என்றான். என்னுடைய பள்ளிகூட அடையாள அட்டையை பார்த்தால் என்னை போக விட்டிருப்பானோ.. என்னவோ..! அவ்வளவு தூரத்திலிருந்து எக்சிபிஷன் பார்க்கவாறது பல சந்தேகங்களை தோற்றுவிக்கலாம்.. பள்ளிகூட சீருடைக்கு ஒரு மரியாதை இருக்கத்தான் செய்கிறது.அந்த லைப்ரரி கள்ளியங்காட்டுக்கு பக்கத்தில் இருப்பதாக மட்டுமே தகவல். பத்து மணியளவில் டவுணுக்கு போய் சேர்ந்தோம். கள்ளியங்காட்டு சந்தியில் உள்ள தேத்தண்ணி கடைகளில் லைப்ரரியை பற்றி விசாரித்தோம். ஒருவருக்கும் அதைப்பற்றி தெரிந்திருக்கவில்லை. சரியான தகவலில்லாமல் கிளம்பி வந்த முட்டாள்தனத்தை எண்ணி மனம் நொந்தோம். சிவா "என்னால் இனிமே சைக்கிள் ஓட முடியாதுடா. கால் எல்லாம் நோவுது" என்றான். வெயிலின் கொடுமை தாங்கவில்லை. சந்தியில் இருந்த மரத்தின் கீழ் ஓய்வெடுத்தோம். எங்கள் எல்லோரின் தலையும் கவிழ்ந்திருந்தது. கிச்சா மட்டும் கொஞ்சம் யோசனையிலிருந்தான். அரை மணித்தியாலமாக அதிலேயே காத்திருந்தோம். அப்போது கிட்டத்தட்ட எங்கள் வயதில் ஸ்கூல் சீருடையுடன் ஒரு பொடியன் சைக்கிளில் போய் கொண்டிருந்தான். கிச்சா அவன் அவனை சைக்கிள் முன்னால் பாய்ந்து மறித்தான். அவனிடம் விசாரித்ததில் ஏதோ ஒரு சின்ன வீதியின் பெயரை சொன்னான். புதிய உத்வேகத்துடன் சைக்கிள் ஓடினோம். "அங்கே 'பழி வாங்கும் புயல்' புத்தகம் இருந்தா அது எனக்குத்தான்" என்று முன்பதிவு செய்தான் சிவா. அச்சா "முதல்ல அந்த லைப்ரரியில காமிக்ஸ் இருக்கோணும் என்று கடவுளை வேண்டிக்கொள்" என்று முறைத்தான். நான் கொடுத்த நாற்பது சொச்சம் ரூபாவுக்கு என்ன புத்தகம் கிடைக்குமோ தெரியவில்லை என்று யோசித்துக்கொண்டேன்.

ஒருவாறாக லைப்ரரியை வந்தடைந்தோம். சின்ன லைப்ரரிதான். ஒரு வயதான நபர் எங்களை முறைத்துபார்த்தார். பள்ளிக்கூட நேரத்தில் பள்ளிக்கூட சீருடையுடன் வந்ததை அவர் ரசிக்கவில்லை. "என்ன தம்பிகளா. இந்த நேரத்தில நீங்க வரக்கூடாது" என்றார். அவர் பேச்சிலேயே அவர் மென்றுகொண்டிருந்த வெற்றிலையின் காரமிருந்தது. அச்சா கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு "ஐயா! நாங்க பருத்துறை பக்கமிருந்து வாரோம். இந்த லைப்ரரியில புத்தகங்கள் விக்கிறீங்களா. இந்த லைப்ரரியை மூடப்போறதா யாரோ சொன்னாங்க" என்று இழுத்தார். அவர் எங்களை மேலும் கீழுமா பார்த்தார். "என்ன புத்தகங்கள் வேணும். நிறைய புத்தகங்கள் முடிஞ்சு போச்சு. அந்த செல்புல இருக்கிற புத்தங்கள்தான் மிச்சம்" என்று சலிப்புடன் கூறினார். எங்கள் எல்லோரது இதயமும் "தடக்.. தடக்.." என்று அடித்துக்கொண்டது. இரத்தம் சூடாக உடல் முழுக்க பரவியது. கிச்சா கண்ணை மூடி கடவுளை வேண்டிக்கொண்டான். அச்சா மெதுவாக முன்னோக்கி நடை போட்டான். புத்தகங்கள் வரிசையில் அடுக்கப்பட்டிருக்கவில்லை. ஒவ்வொரு புத்தகமாக எடுத்துப்பார்த்து சலித்தோம். "டேய் ஒரு காமிக்ஸ்கூட இல்லடா" என்று அழாக்குறையாக அச்சா கூறினான். எல்லா தெய்வங்களும் ஒன்றுசேர்ந்து எங்களுக்கு எதிராக சதி செய்ததை போல உணர்ந்தோம்.

"என்ன தம்பி ஒரு புத்தகமும் எடுக்கலையா" என்றவாறு அந்த பெரியவர் வந்தார். "எங்களுக்கு காமிக்ஸ் வேணும் ஐயா" என்று தீனமான குரலில் கூறினேன். "அதுவா! அதுவும் கொஞ்சம் இருக்கு. அதை அந்த மூலையில் தனியா போட்டு வச்சிருக்கு" என்றார். அவர் காட்டிய திசையில் மூன்று நான்கு கட்டுகளாக காமிக்ஸ்கள் இருந்தன. ஒரே நேரத்தில் எங்கள் கண்களில் ஒளி வந்தது. ஒரு சிலிர்ப்புடன் புத்தகங்களை பார்வையிட்டோம். கடைசி பத்து வருஷங்களில் வந்த ஒருசில புத்தகங்கள் அழகாக பைண்டிங் செய்யப்பட்டு எங்களை பார்த்து கண்ணை சிமிட்டின. "பழி வாங்கும் புயல்" இருந்தது. நார்மனின் "மரணத்தின் நிழலில்"  புத்தகத்தை நான் எடுத்துக்கொண்டேன். ஆளுக்கு ஏழெட்டு புத்தகங்களுடன் ஐயாவின் முன்னுக்கு நின்றோம். எல்லா புத்தகங்களுக்கும் அதன் தடிப்பை வைத்து ஒரு விலையை நிர்ணயித்தார். மொத்தமாக முன்னூற்றி எழுபது ரூபா வந்தது. எங்களிடம் இருந்த காசுக்கு இதை வாங்க முடியாது. அச்சா தயங்காமல் தனது வாட்ச்சை தூக்கி பெரியவரிடம் கொடுத்தான். பெரியவர் "என்ன தம்பி இதுக்கு போய் நல்ல கசினோ வாட்ச்சை தாறீங்க. இவ்வளவு தூரம் மினக்கெட்டு வந்திருக்கிறீங்க, இவ்வளவு காசு போதும்" என்று சிரித்தார். வாட்ச்சை திரும்பி தந்துவிட்டு கொடுத்த இருநூறு சொச்சம் ரூபாவுக்கே எல்லா புத்தகங்களையும் தந்துவிட்டார். வெளியே வந்தோம். கால்கள் தரையில் படாதது போன்றதொரு சிலிர்ப்பான அனுபவம்.

மணி பன்னிரெண்டரை. பள்ளிக்கூடம் முடிவதற்கு இன்னமும் ஒரு மணித்தியாலமே இருந்தது. வேகமாக சைக்கிள் மிதித்தாலும் போய் சேர்வது கஷ்டம் என்பதை அப்போதுதான் உணர்ந்தோம். சைக்கிளில் சிட்டாக பறந்தோம். "லேட்டாக போனதற்கு காரணமாக பள்ளிக்கூடத்தில் கிரிக்கெட் விளையாடியதாக சொல்லி சமாளிக்கலாம்" என்றான் சிவா. வல்லைவெளி பிரதேசத்தில் நுழையும்போது காற்று சோதனை தந்தது. அதைவிட பெரிய சோதனை காத்திருக்கும்போது அது பெரிதாக தோற்றவில்லை. சன்னதி கோவிலடியில் எல்லோரும் தனித்தனியாக பிரிந்தோம். ஒருவாறாக இரண்டரைக்கு வீட்டுக்கு போய் சேர்ந்தேன். வீட்டுக்குள்ளே நுழையும்போதே அம்மா வாசலில் நின்றாள். "ஐயா எங்க போய்ட்டு வாரீங்க. பள்ளிகூடம்தான் போனீங்களா" என்று முறைத்தாள்.

சன்னதி கோவிலுக்கு போன அம்மாவின் யாரோவொரு சிநேகிதி எங்களை பார்த்து வீட்டில் சொல்லிவைக்க விஷயம் வீட்டுக்கு தெரிந்து விட்டது. அப்பா வீட்டுக்கு வந்தபிறகு பூசை ஆரம்பித்தது. அப்பா அடித்து களைத்த பின்னர்தான் கேட்டார். "அப்படி நாள் முழுக்க எங்கடா போனே" என்றார். உண்மையை சொன்னேன். அதிர்ந்து போனார். "முதல்லேயே சொல்ல வேண்டியதுதானே. சொல்லியிருந்தா நானே வேண்டி தந்திருப்பேனே" என்று சொன்னது இந்த கதைக்கு ஒவ்வாத அன்டி-கிளைமாக்ஸ். அவரும் ஒரு காமிக்ஸ் ரசிகர்தான்.


********************


இது வெறும் கற்பனை கதைதான். காமிக்ஸ் வேட்டையாடி சலிக்கும் நண்பர்களுக்கு சமர்ப்பணம்.

7 comments:

 1. ஹா
  அருமைங்க
  சின்ன வயதில் காமிக்ஸ் காக எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கீங்கன்னு பீல் பண்ணிட்டே படித்தேன்

  நானும் என் நண்பர்கள் மூவரும் சிறுவயதில் காமிக்ஸ்காக எங்கள் ஊரிலிருந்து 60கி.மீ தொலைவிலுள்ள கோயமுத்தூர் மணிக்கூண்டு பகுதியில் காமிக்ஸ் வேட்டைக்கு சைக்கிளில் சென்ற நினைவுகளை மீட்டெடுத்தீங்க


  (அந்த கடைசி லைன் செம்மைங்க தோழா)

  ReplyDelete
  Replies
  1. நன்றி டெக்ஸ் சம்பத்.. 60கி.மீ சைக்கிளிலா போனீங்க.. காமிக்ஸ் ரசிகனா அந்த தீவிரத்தை புரிஞ்சு கொள்ளமுடியுது

   Delete
 2. ஹி..ஹி... அப்படியே என் கதைகளை நானே வாசிப்பதுபோல இருந்தது. அடுத்தடுத்து பதிவுகளால் அசரடிக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.

  யாழ்ப்பாணம் கே.கே.எஸ். வீதிக்கு அருகில் நாச்சிமார் கோயிலடியில் ஒரு லைப்ரரி கேணிக்கரையில் இருக்கிறது. அதில் ஜூனியர் பிரிவில் சேருவதற்கு வயதெல்லை உண்டு. எனக்கு அது தெரியவந்தபோது மனம் உடைந்துபோனது(!!!) காரணம், நான் சில மாதங்களால் வயதெல்லையை கடந்திருந்தேன். பிறகு என்னை விட சில மாதங்கள் குறைந்தவனும் அந்த வயதெல்லைக்குள் வருபவனுமாக இருந்த நண்பன் பிரசாந்தவை கெஞ்சிக் கூட்டிப்போய், ஜூனியர் பிரிவில் சேர்த்தோம். அப்போது லைப்ரரியன், 'தம்பி, சில மாதம்தான் இவர் மெம்பரா இருக்கலாம். பிறகு சீனியர் பிரிவுக்கு மாறிவிடவேண்டியிருக்கும்!' என்று அறிவுறுத்தினார். பரவாயில்லை அதை பிறகு பார்க்கலாம் என்று சேர்ந்தாயிற்று. அடிக்கடி போய் அவனது அட்டையை பயன்படுத்தி காமிக்ஸ்களை (குறிப்பாக ஆங்கில இந்திரஜால்களே அங்கே அதிகமிருந்தன) வீட்டுக்கு கொண்டுவந்து வாசித்து மகிழ்ந்தோம். ஆனால், அந்த அரிய வாழ்வு சில மாதங்களே நீடித்தது. 95 இல் இடப்பெயர்வு வந்து எல்லா கனவுகளையும் கலைத்துப்போட்டுவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி பொடியன்.. உங்கள் அனுபவம் டக்கராக இருக்கு.. அதை பற்றி ஒரு பதிவிடுங்களேன்..

   Delete
 3. //இது வெறும் கற்பனை கதைதான். காமிக்ஸ் வேட்டையாடி சலிக்கும் நண்பர்களுக்கு சமர்ப்பணம்.//
  முழுக்க கற்பனையாக இருக்கமுடியாது உன்பது என் யூகம். சரிதானா? :-)

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான்..சில நண்பர்களின் உண்மை அனுபவங்கள், கொஞ்சமாக என் அனுபவம் என்பவற்றை சேர்த்து எழுதினேன்.. என்னுடைய அப்பா ஒருநாளும் என்னை அடித்ததில்லை. கற்பனை கதை என்று போடாவிட்டால் "நான் எப்படா உன்னை அடிச்சேன்" என்பார். "பழி வாங்கும் புயல்" புத்தகத்தை அவரே கொழும்பில் வேலை விசயமாக போய் விட்டு வரும்போது வாங்கி வந்தார்

   Delete
 4. இளமையும் நண்பர் குழாம் செய்த விஷயங்களும் என்றும் இனியவை
  உங்களின் எழுத்து நடை மயங்கவைக்கிறது

  ReplyDelete