Saturday, July 9, 2016

ஐஸ்பெர்க் காமிக்ஸ் இலங்கையில் ஒரு தமிழ் காமிக்ஸ் -- பாகம் 2


சில வருடங்களுக்கு முன்னராக ஐஸ்பெர்க் காமிக்ஸ் பற்றிய முதலாவது பதிவினை எழுதினேன். ஏனோ தெரியவில்லை, அதன் தொடர்ச்சியை எழுதுவதற்கு மனம் வரவில்லை. எழுத யோசித்தாலும் எதை எழுதுவது என்று தெரியவில்லை. சமீபத்தில் நண்பர் பிரதீப் ஞாபகப்படுத்தினார். சரி பழைய ஞாபகத்தை திரட்டி எழுதுவோம் என்று முடிவெடுத்தேன். என்னுடைய ஞாபக சக்திக்கு ஏற்றவாறு கீழ்கண்ட பதிவை அமைத்துள்ளேன்.ஐஸ்பெர்க் காமிக்ஸின் முதலாவது பிரதி பெரிய சைசில் 85ரூபாவில் வந்தது. அண்ணாவே இலங்கையிலுள்ள புத்தக கடைகளுக்கு போன் செய்து புத்தகங்களை அனுப்பி வைத்தான். நான் எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லாத ஆள் மாதிரி "தேமே" என்றிருந்தேன். இரண்டு மூன்று வாரங்கள் கழித்து புத்தக விற்பனை குறித்து விசாரித்தால் வந்த சேதி நல்லதாக இருக்கவில்லை. ஒரு சில புத்தகங்களே விற்றதாக சொன்னார்கள். ஓரிண்டு இடங்களில் விற்பனை பரவாயில்லை ரகம். அதுவும் காமிக்ஸ் பற்றிய ஆர்வமிருந்த விற்பனையாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எடுத்து சொல்லி விற்றிருந்தார்கள். நான்கைந்து கடிதங்கள் வந்தன. ஒவ்வொன்றும் இரண்டு மூன்று பக்கத்துக்கு இருந்தன. தீவிர காமிக்ஸ் ரசிகர்கள் ஐஸ்பெர்க் காமிக்சை வரவேற்றனர். அவர்களது கடிதங்களே அடுத்த புத்தகத்துக்கான முயற்சிக்கான டோனிக்காக அமைந்தது. ஆனாலும் எப்படி புத்தகங்களை மார்கெட் செய்வதோ என்று தெரியாமல் தடுமாறினோம். காமிக்ஸ் வாசிக்கும் குறிப்பிட்ட வட்ட வாசகர்களுக்கு எவ்வாறு விளம்பரப்படுத்தலாம் என்றும் தெரியவில்லை.


அப்போதுதான் இன்டர்நெட் என்கிற சமாச்சாரம் ப்ரௌசிங் சென்டர்கள் மூலமாக எங்கள் பிரதேசங்களை ஆக்கிரமித்திருந்த சமயம். அண்ணாவும் ஒரு IT ஆசாமி என்பதால் ஐஸ்பெர்க் காமிக்ஸுக்காக ஒரு வெப்சைட் உருவாக்கிடுவதாக முடிவெடுத்தான். நானும் அப்போதுதான் வெப் ப்ரோக்ராம்மிங் பற்றி படித்திருந்தேன். ஆகவே ஒரு நல்ல நாளில் ஐஸ்பெர்க் காமிக்ஸ் வெப்சைட் உதயமானது. வெப்சைட்டை உருவாக்கி ஒரு "டிஸ்கஸன் போரம்" வைத்தோம். அதில் ஐஸ்பெர்க் காமிக்ஸ் சம்பந்தமான அறிவிப்புகளை செய்தோம். இந்த வெப்சைட் மூலமாகத்தான் கடல் கடந்த இந்திய காமிக்ஸ் நண்பர்களின் தொடர்பு ஏற்பட்டது. எங்களது "டிஸ்கஸன் போரம்" காமிக்ஸ் நண்பர்கள் கூடி பழைய அனுபவங்களை விவாதிக்கும் திண்ணையாக தொழிற்பட்டது. இலங்கை நண்பர்களின் வருகையை விட இந்திய காமிக்ஸ் ஆர்வலர்களின் வருகை அதிகம் என்பதுதான் உண்மை. அக்காலத்தில் இன்டர்நெட் என்பது இலங்கையின் எல்லா பகுதிக்கும் சரியாக பரவவில்லை என்பது காரணமாக இருந்திருக்கலாம்.


ஐஸ்பெர்க் காமிக்ஸ் வெப்சைட் மூலமாக இந்திய காமிக்ஸ் ரசிகர்களான ரகு மற்றும் விஸ்வா ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சில காமிக்ஸ் பிரதிகளை இந்தியாவுக்கு அனுப்பினோம். 2007ஆம் ஆண்டளவில் ரகு என்கிற ராகுலன் என்ற அந்த நண்பர் தாங்களும் புதிதாக காமிக்ஸ் வெளியிட இருப்பதாக சந்தோஷ செய்தியை அறிவித்தார். அவரும் சில காமிக்ஸ் நண்பர்களும் இணைந்து "ஸ்டார் காமிக்சை" தொடங்கியிருந்தார்கள்.


முதல் இதழை எங்களுக்கு அனுப்பினார்கள். அதன் தரம் ஆங்கில பதிப்புகளின் தரத்தில் அட்டகாசமாக இருந்ததை கண்டு வியந்தேன். "பனி மலைக்கோட்டை" என்ற கேப்டன் பிரின்ஸ் தோன்றும் சாகசத்தை முதன்முறையாக வாசித்து ரசித்தேன். முதன்முறையாக ஹார்ட் பைண்டிங்கில் ஒரு தமிழ் காமிக்ஸை கண்டேன். ஏதோ ஒரு காரணத்தினால் "ஸ்டார் காமிக்ஸ்" பின்னர் வெளிவரவில்லை. ஆனாலும் என்னை பொறுத்தவரை அந்த இதழ் தமிழ் காமிக்ஸ் உலகில் ஏற்படுத்திய தாக்கம் முக்கியமானது என்றே தோன்றுகின்றது.

விஸ்வா அப்போதே எங்கள் காமிக்ஸ் பற்றிய விமர்சனங்களை வழங்கி அதீத ஆதரவு தந்தார். அவரது ப்ளாக்போஸ்டுகள்தான் ஐஸ்பெர்க் காமிக்ஸ் இருந்ததற்காக ஆதாரங்களாக உள்ளன. இப்போது இந்த போஸ்டுக்கான படங்களை அங்கிருந்தே உருவியுள்ளேன். இவ்வாறான ப்ளாக்போஸ்ட்கள் மற்றும் நீளமான கடிதங்கள் அடுத்தடுத்த புத்தகங்களை வெளியிட உந்துதல் அளித்தன என்பது நிச்சயம்.

முதலாவது இதழின் பின்னராக இரண்டாம் இதழுக்கான வேலைகளை அண்ணா தொடங்கினான். முதலிரண்டு புத்தகங்களுக்காக ஏற்கனவே ரோயல்டி கட்டணங்கள் கட்டி விட்டதால் இரண்டாம் புத்தகத்தை உடனடியாக வெளியிட வேண்டிய கட்டாயம். முதல் இதழைப்போலவே இரண்டாம் இதழுக்கும் ஆங்கில பதிப்பு எங்களிடம் இருந்ததால் மொழிபெயர்ப்பு எளிதாக இருந்தது. ஆனால் இம்முறை நானும் மொழிபெயர்ப்பில் உதவினேன். இப்போது அந்த புத்தகத்தை பார்க்கும்போது பல இடங்களில் சொதப்பியிருப்பதை உணரமுடிகின்றது. முதல் புத்தகம் பெரிய சைசில் ஜரூராக 85ரூபா விலையில் வந்தது. விற்பனை மந்தத்திற்கு விலையின் உச்சம் காரணமாக இருக்கலாம் என்று அண்ணா கருதினான். அதனால் இரண்டாம் புத்தகம் 50ரூபா விலையில் வழமையான சின்ன சைஸுக்கு மாற்றப்பட்டது. இம்முறையும் அண்ணாவே விற்பனையாளர்களுக்கு அனுப்பிவைத்தான்.

இலங்கை முழுவதுக்குமாக XIIIஇன் உரிமை வாங்கப்பட்டிருந்தாலும் அதனை ஐஸ்பெர்க் காமிக்ஸ் அதனை சரியாக பயன்படுத்தியிருக்கவில்லை. குறிப்பாக சிங்களம் இலங்கையில் எழுபது சதவீத மக்களின் மொழி, ஆகவே அதில் வெளியிடும் யோசனையை அண்ணா சொன்னான். எங்களுக்கு சிங்களம் சுத்தமாக தெரியாது. ஆகவே ஒரு சிங்களம் படிப்பிக்கிற ஒரு மாஸ்டரின் உதவிகொண்டு மொழிபெயர்ப்பதாக ஏற்பாடு. சில நாட்களில் ஆர்வமாக தமிழை சிங்களத்தில் மொழிபெயர்த்து தந்துவிட்டார். ஆனால் அவர் என்னத்தை எழுதியிறுக்கிறாரோ... அது சிங்கள காமிக்ஸ் ரசிகர்களிடம் எடுபடுமா என்று தலையை பிய்த்துக்கொண்டோம். எனது சிங்கள நண்பர்களிலே காமிக்ஸ் வாசிக்கும் நண்பனிடம் சிங்கள மொழிபெயர்ப்பு ப்ரூப் காமிக்ஸை கொடுத்து வாசிக்குமாறு சொன்னேன். இரண்டு நாளைக்கு பிறகு வந்த அவன் இந்த மொழிபெயர்ப்பு சரிவராது. சிங்கள காமிக்ஸ் பேச்சுவழக்கில் எழுதுவார்கள். ஆனால் இது எழுத்து வழக்கில் போர்மலா இருக்கு. இது எடுபடும் என்று தோணலை என்று கை விரித்தான். சரியான மொழிபெயர்ப்பாளர் இல்லாததால் சிங்கள காமிக்ஸ் ஐடியா கைவிடப்பட்டது.

இன்சைடர்ஸ் விளம்பரம்
அது அவ்வாறு போய்கொண்டிருக்க தமிழ் காமிக்ஸின் அடுத்த இதழுக்கு என்ன செய்வது என்ற யோசனை தலையிலேறியது. XIIIக்கு பிறகு யார் என்ற கேள்வி எனக்கு எப்பவுமே இருந்தது. அண்ணாவோ தோர்கல், அல்டேப்ரன் என்ற வேற்றுகிரகக்கதை, இன்சைடர்ஸ் என்ற பெண் உளவாளியின் சாகசம் என்ற பெரிய லிஸ்ட் ஒன்று வைத்திருந்தான். ஆனால் அந்நியமான கதைகளை தொடுவதில் பல சிக்கல்கள் இருந்தன. அவர்கள் அனுப்பிய சாம்பிள்கள் பிரெஞ்சு மொழியிலிருந்தன. படம் பார்த்து கதையின் தரத்தை மதிப்பிடுவது சிரமம் என்றே புரிந்தது. உதாரணமாக பவுண்சரின் முதலாம் பாகமும் அவர்கள் அனுப்பிய சாம்பிள்களில் இருந்தன. ஆனால் அக்கதையின் படங்கள் கவர்ந்தாலும் சிக்கலான கதையின் போக்கு பிடிபடவில்லை. ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான "கேப்டன் டைகர்" என்று அறியப்படும் ப்ளுபெரியை அறிமுகப்படுத்துவது என்று தீர்மானித்தோம். ஆனால் இதுவரை தமிழில் வராத கதைகளை கதைகளை தேடினோம். அப்போது இளமைக்கால டைகர் கதைகளை முத்து  காமிக்ஸ் வெளியிட்டிருக்கவில்லை. ஆகவே அக்கதைகளை தெரிவுசெய்தோம்.
வாஸ்கோ கதையின் விளம்பரம்

ஒரு நல்ல நாளில் Dargaud நிறுவனத்திலிருந்து சாம்பிள் புத்தகம் வந்திறங்கியது. அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பு சாம்பிள்கள் இல்லையென கையை விரித்துவிட்டனர். அப்போதுதான் தொடங்கியது சங்கடம். விசாரித்து பார்த்தபோது பிரெஞ்சு மொழிபெயர்ப்பு கொழும்பில் செலவு கூடின விஷயம் என்ற உண்மை தெரிந்தது. வழமையாக ஓரிரண்டு பக்கங்கள் மட்டுமே மொழிபெயர்க்கும் அவர்கள் இருபத்தைந்து முப்பது பக்கங்கள் மொழிபெயர்ப்பதற்கு யானை விலை குதிரை விலை சொன்னார்கள். அப்போதுதான் அண்ணாவின் சாப்ட்வேர் மூளை வேலைசெய்தது. "கூகிள் டிரான்ஸ்லேடர்" மூலமாக மொழிபெயர்க்கலாம் என்றான். கதையில் பக்கபக்கமாக வரும் வசனங்களில் முதலில் ஒரு நண்பரின் உதவிகொண்டு டைப் செய்து எடுத்தோம். பின்னர் அதனை "கூகிள் டிரான்ஸ்லேடர்"ல் மொழிபெயர்த்தேடுத்தோம். "கூகிள் டிரான்ஸ்லேடர்" தனது ஆரம்ப காலங்களில் ஓரளவுக்குத்தான் மொழிபெயர்க்கும். ஆகவே ஆங்கிலத்தில் டிரான்ஸ்லேட் ஆன சமாச்சாரம் கொஞ்சம் விளங்கியது. குறிப்பாக ப்ளுபெரி லோங் சாம் என்ற தப்பியோடிய அடிமையுடன் கதைக்கும் வசனங்கள் பிரெஞ்சு கிராமீய வட்டார வழக்கு மொழியில் இருந்ததால் "கூகிள் டிரான்ஸ்லேடர்" அநியாயத்துக்கு திணறியது. அந்த பக்கோடா வசனங்களுடன், படங்களையும் பார்த்து, கதையோட்டத்திற்கு ஏற்றவாறு வசனங்களை தீர்மானித்தோம். அதனை மொழிபெயர்ப்பது வினோதமான சவாலாகவிருந்தது.

இது இப்படி போய்கொண்டிருக்க அண்ணா செய்த ஒரு காரியம் எனக்கே வியப்பளித்தது. இனிமேல் இப்படி பிரெஞ்சு மொழிபெயர்ப்புக்கு திணறுவதை காட்டிலும் பிரெஞ்சு படித்துவிடலாம் என்று அண்ணா முடிவு செய்தான். ஆனால் இரண்டு மூன்று கிளாஸ் போய்விட்டு முழிபிதுக்கியவாறு வீடு திரும்பினான். "என்னடா சோதனை இது. பிரெஞ்சில் கதிரை மேசைக்கெல்லாம் ஆண்பால் பெண்பால் பாக்கிறாணுக" என்று அலுத்துக்கொண்டான். காமிக்ஸ் மேல் அவனுக்கிருந்த பற்று அவனை பிரெஞ்சு க்ளாஸுக்கு கொண்டு போய் விட்டது. அவனும் சலிக்காமல் சில க்ளாஸுக்கு போனான். அவனை மாதிரி ஒரு காமிக்ஸ் வெறியனை கண்டதில்லை.
ப்ளுபெரியின் பெயர் வந்த காரணம்

இரண்டாம் இதழைபோலவே ப்ளுபெரியின் சாகசமும் அம்பது ரூபாயில் விற்பனைக்கு அனுப்பப்பட்டது. விற்பனையின் பின்னராக சில கடிதங்கள் வந்தன. ஆனால் விற்பனை அவ்வளவு முன்னேற்றமில்லை. வெறும் இருபது லட்சம் தமிழர்கள் வாழும் நாட்டில் காமிக்ஸ் என்ற ஊடகம் சென்றடைய வேறு லெவலில் முயற்சி செய்ய வேண்டும் என்பது புரிந்தது. 2007ஆம் ஆண்டு காலப்பகுதியில்தான், நிழல் உள்நாட்டுப்போர் நிஜமாக உருமாற தொடங்கியிருந்தது. போரின் தாக்கம் காரணமாக நாட்டின் ஏனைய பகுதிகளுக்கான தொடர்பு பாதிக்கப்பட்டது. கிளிநொச்சிக்கும் 50 புத்தகங்கள் அனுப்பினோம். அதன்பிறகு அதைப்பற்றி கேட்கத்தோன்றவில்லை. பணம் வராததற்கு வெவ்வேறு நியாயமான காரணங்கள் இருந்தன. அப்போதுதான் நாட்டில் சமாதான பேச்சுகள் முடிந்து போர் உத்தியாகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு வளைக்குள் பதுங்கிய எலிகளாணோம். கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. எங்கள் வாழ்க்கைமுறையே மாறிப்போனது. காமிக்ஸ் வெளியிடும் யோசனையே வரவில்லை. ஏதோ சின்ன வயசு ஆசைக்கு மூன்று புத்தகமே அதிகமோ என்று தோன்றியது. இப்போதுகூட ஏதாவது ஒரு ஆங்கில காமிக்ஸை வாசிக்கும்போது தமிழில் வெளியிடுவோமா என்று ஆசை வருவது உண்மைதான். அதற்கு காலம் பதில் சொல்லலாம்.படங்கள் பின்வரும் நண்பர்களின் தளங்களிருந்து சுடப்பட்டன. நன்றி...
http://tamilcomicsulagam.blogspot.com/
http://www.comicology.in/http://www.comicology.in/2007/08/star-1-captain-prince-april.html
http://tamilcomicsulagam.blogspot.com/2008/09/iceberg-comics-srilankan-tamil-1st.html
http://tamilcomicsulagam.blogspot.com/2008/09/iceberg-comics-2nd-issue-xiii.html
http://tamilcomicsulagam.blogspot.in/2008/09/icerberg-comics-3rd-issue-blueberry.html?m=1

24 comments:

 1. பழைய நினைவுகளைக் கிளறி விட்டு விட்டீர்கள். ஹூம், என் வாழ்க்கையில் மீண்டுமொருமுறை ஏதாவது ஒரு விஷயத்தை மறுபடியும் முதலில் இருந்து செய்ய வாய்ப்பிருந்தால், ஐஸ்பெர்க் காமிக்ஸ் மற்றும் ஸ்டார் காமிக்சை சரியாக, நிதானமாக, தெளிவாக வெளியிட உதவுவதாகவே இருக்கும்.

  நினைவுகளை தூசு தட்டியதற்கு நன்றி. முடிந்தால் ஐஸ்பெர்க்கின் அடுத்த கட்ட முயற்சிகளைப் பற்றியும் எழுதவும். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான்.. பழைய நினைவுகள் மீட்டி பார்ப்பதில் இனிமை இருக்கிறது. முதன்முறையாக ஒரு வாசகர் கடிதத்தை பார்த்தபோது வந்த சந்தோசம் அருமையானது.. அதற்கு பின்னர்தான் அண்ணாவுக்கு உதவி செய்ய ஆரம்பித்ததாக ஞாபகம் :)

   Delete
 2. //அவனை மாதிரி ஒரு காமிக்ஸ் வெறியனை கண்டதில்லை.//

  மறுக்கவே இயலாத உண்மை. அண்ணனுடன் பேசி ஓரிரு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. விசாரித்ததாகச் சொல்லவும். உண்மையிலேயே அற்புதமான காமிக்ஸ் காதலர் அவர்.

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் சொல்கிறேன்

   Delete
 3. ஏக்கங்கள் நிறைந்த பதிவு. எங்களையும் ஏங்க வைத்துள்ளது. நன்றி விமலாகரன்.

  ReplyDelete
 4. //குறிப்பாக சிங்களம் இலங்கையில் எழுபது சதவீத மக்களின் மொழி, ஆகவே அதில் வெளியிடும் யோசனையை அண்ணா சொன்னான். //

  அவர்களது சில காமிக்ஸ் வெளியீடுகளைப் பார்த்திருக்கிறேன். முழுமையான கதைகளாக வெளிவருவதைவிட அங்கம் அங்கமாக பத்திரிகை வடிவில் பல தொடர்களை இணைத்து வெளியிடுகிறார்கள். அது மாத்திரமல்லாது, ஆங்கில கதைகளின் ஐடியாவை எடுத்துக்கொண்டு இவர்கள் தங்கள் பாணியில் வரைந்து, இலங்கையில் நடப்பதுபோல கதைகளை உருவாக்குகிறார்கள். அவைதான் பெரிய அளவில் வாசகர்களிடம் போய்ச்சேருகின்றன. மற்றப்படி கதைகளை வாங்கி மொழிமாற்றம் செய்வது நடப்பதில்லை - ஏன் என்று தெரியவில்லை! ஆனால், டின்டின், ஸ்கூபி டு, ஷெர்லாக் ஹோம்ஸ் போன்ற கதைகளை சிங்களத்தில் மொழிபெயர்த்து சித்திரக் கதைகளாக அல்லாமல் நாவல் வடிவில் வெளியிடுகிறார்கள். அவற்றின் விற்பனை அபாரமாம். இப்படி உல்ட்டா பண்ணும்போது ரைஸ்ட் பிரச்சனை எழாது என்று நினைக்கிறார்களோ, என்னவோ.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. தமிழ் திரைப்பட பாடல்களை சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியிடுகின்றனர் அதே போலத்தான் இதுவும் அதுமட்டுமின்றி பல சிங்களமொழி மூலகாமிக்ஸ்கள்இன்றும் தமிழ் சிறுவர் சஞ்சிகைகளில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடபடுகின்றன

   Delete
  3. சிங்களத்தில் காமிக்ஸுக்கு வரவேற்பு இருப்பது நல்ல விஷயம்.. யாராவது ரைட்ஸ் எடுத்து வெளியிட்டால் நன்றாக இருக்கும். அப்படியே தமிழில் ஏதாவது காமிக்ஸ் வர வாய்ப்பிருக்கும்

   Delete
 5. //இப்போதுகூட ஏதாவது ஒரு ஆங்கில காமிக்ஸை வாசிக்கும்போது தமிழில் வெளியிடுவோமா என்று ஆசை வருவது உண்மைதான். அதற்கு காலம் பதில் சொல்லலாம்.//

  இப்போதுள்ள நிலைமையில் அதிகபட்சம் 50 புத்தகங்கள் விற்கப்படலாம் இலங்கையில் என்பதுதான் நிலைமை. இந்த எண்ணிக்கை குறைந்தது 500 ஆகவாவது மாறுமென்றால் நீங்கள் முயற்சிப்பதில் அர்த்தமிருக்கும். அண்மையில், லயன் காமிக்ஸ் ஆசிரியர் சென்னையின் தற்போதைய காமிக்ஸ் விற்பனை நிலவரத்தை வெட்கத்தைவிட்டு சொல்லியிருந்ததை நீங்கள் கவனித்திருக்கலாம். காமிக்ஸ் வாசித்த தலைமுறைகள், தங்கள் அடுத்த தலைமுறைக்கு அவற்றை கொண்டு செல்லாமல் - தொலைக்காட்சியிலும், இணையத்திலும் மூழ்கிவிட்டார்கள். இளைய தலைமுறையோ - நமக்கு வாசிக்க என்ன இருக்கிறது என்று தேடி, பிறகு அவர்களும் இணைய வெளிக்குள்ளும், கேம்ஸ்களிலும் சங்கமித்துப்போகிறார்கள். காலம் மாறுமா? என்பது கோடி ரூபாவுக்கான கேள்விதான்...ஹ்...ம்....!

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான்.. இளைய தலைமுறைக்கு காமிக்ஸ் சரியாக அறிமுகப்படுத்தப்படவில்லை என்று நினைக்கிறேன். எனக்கு அப்பா காமிக்ஸ் வாங்கி தந்தார். நானும் சிறியோருக்கு காமிக்ஸ் பரிசளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன்.. முத்து மினி காமிக்ஸ் சிறியோருக்கு பிடிக்கும் என்று எண்ணுகின்றேன்

   Delete
 6. I also read 02 books of your comics..... hope you can publish books like insiders..... but you need to have a partnership of any big guy to increase the numbers.....

  ReplyDelete
  Replies
  1. Iceberg comics has stopped after those 3 issues. I hope Lion Comics will publish Insiders in future.

   Delete
 7. ஒரு நிமிடம் கூட அயர்ச்சி ஏற்படுத்தாத எழுத்து நடையில் உங்கள் அனுபவத்தை கூறியதே ஒரு சுவையான சிறு கதையை படித்தது போல இருந்தது. வருத்தமாக இருக்கிறது இப்படிபட்ட காமிக்ஸ் காதலர்களது நிலையை நினைக்கும் போது. எதிர்காலத்தில் விரைவில் உங்கள் கனவு முயற்சிகள் நிஜமாக வாழ்த்துகள். கண்டிப்பாக தமிழ்நாட்டு வாசகர்களின் ஆதரவு உங்களுக்கு கிட்டும்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வரவுக்கும், பாராட்டுக்கும் நன்றி. காலம் கனிந்தால் நிஜமாகலாம். இப்போதைக்கு எந்த சாத்தியகூறுகளும் இல்லை என்பதே நிஜம்

   Delete
 8. நல்ல முயற்சி...தமிழ் காமிக்ஸை பொருத்தவரை மார்கடிங் பணிகள் மிகவும் கடினமாகும்..!

  ReplyDelete
 9. வாழ்க்கையில் சிறு வயது லட்சியங்களும் ஆசைகளும் மிகச்சிறந்த உந்து சக்தியாக இருந்து நம்மை செயல்படவைக்கிறது என்பதற்கு மிக அருமையான உதாரணம் உங்களின் முயற்சி ஆனால் அதை தாெடர இயலாமல் பாேனது துரதிருஷ்டவசமானது ஆனாலும் நீங்கள் ஒரு வெற்றியாளரே

  ReplyDelete
  Replies
  1. நன்றி செந்தில்குமார்.

   Delete
 10. அருமையான பதிவு உங்கள் காமிக்ஸ் நேசம் அற்புதமானது

  ReplyDelete
 11. காமிக்ஸ் படிக்கும் உணர்வுக்கும் படைக்கும் உணர்வுக்கும் தான் எத்தனை வேறுபாடு..! படைக்க பட்ட சிரமங்களும் அதை வாசகர்களுக்கு கொண்டு சேர்க்க முயன்று சோர்ந்தவையும் படிக்கவே சங்கடமானது.! மாறாத காமிக்ஸ் படைப்பின் மீது உள்ள காதல் மனதில் மறைந்திருந்து மூன்று வருடங்கள் கழித்து எட்டிபார்த்தது உணர்வுபூர்வமானது விமலாஹரன்..!

  உங்கள் அண்ணன் நிஷாஹரன் தான் என்ன ஆனார் என்பது தெரியவில்லையே...நான் சொன்ன அவர் பெயர் சரிதானே..?அவரரிடம் இன்றும்கூட அதே தாகம் உள்ளதா..??

  ReplyDelete
 12. அருமையான பழைய நினைவுகளை தந்த பதிவு.தங்கள் காமிக்ஸ்க்கு வெள்ளவத்தை பூபாலசிங்கத்தில் வாரமொருமுறையாவது ஏறி இறங்கிய காலம் மறக்கமுடியாதது.மூன்றே இதழுடன் நின்று போனது வருத்தமான விடயமாக இருந்தது.

  ReplyDelete