Saturday, November 2, 2013

ஐஸ்பெர்க் காமிக்ஸ்
இலங்கையில் ஒரு தமிழ் காமிக்ஸ்

வருடம் 2005. மணி இரவு 2030. யன்னலை திறந்தாலும் காற்று வரமறுக்கின்ற, வழமைக்கு சற்றும் மாறாத வெக்கையான கொழும்பு இரவு. வெளியே பிரதான வீதியில் செல்லும் வாகனங்களின் ஒலிக்கு எனது மூளை இசைவாக்கமடைந்திருந்ததால் எதையுமே கண்டுகொள்ளாது java notesஐ பார்த்துக்கொண்டிருந்தேன். நான் அப்போது ஆங்கிலத்தில் இருக்கும் notesஐ தமிழ்ப்படுத்தி மூளையில் ஏற்றும் போராட்டத்தின் நடுவிலிருந்தேன். அப்போது வீட்டு calling bell அடித்தது. அது அண்ணாதான். அவன் calling bellஐ அடிக்கும்முறையை வைத்தே கண்டுபிடித்துவிடலாம். வழமையாக பதினோரு மணிக்கு வேலை முடிந்து வரும் அவனுக்கு எட்டரை மணி என்பது too early. வந்து சேர்ந்த முதல் வேலையா, computerஇல் Flash driveஐ போட்டான்.

"வெளியிலிருந்து வந்த முதல் வேலையா முகத்தை கழுவு. போய் computerஇல் முன்னால் பழிகிடக்கபோறியே" என்று சமையலறையிலிருந்து வந்த அம்மாவின் குரலை காதில் போட்டுக்கொள்ளவில்லை. "நான் சில french காமிக்ஸ் website pages download பண்ணிக்கொண்டு வந்திருக்கேன். அதில நம்மட இரத்த படலமும் இருக்குதுடா" என்றான். அந்த காலத்தில் "இரத்தப்படலம்" என்றாலே கைக்கெட்டாத மந்திர வார்த்தை. அதுவரை காலமும்  4, 5, 6 ஆம் பாகங்களை மாத்திரமே வாசித்திருந்ததால் முதல் பாகங்களில் என்ன நடந்திருக்குமோ இனி கதை எப்படி போகுமோ என்ற ஆர்வம் எங்கள் நினைவுகளில் ஊறி கனவுகளில் உலாவிடும். புரியாத french மொழியில் இருந்த websiteஇல் கண்கவர் படங்கள் எங்களை கனவுலகத்துக்கே இட்டுச்சென்றன. நாங்கள் இதுவரை வாசித்து சிலாகித்த comicsகளை உருவாக்கியவர்கள் இங்க்லீஷ்காரர்கள் இல்லை பிரஞ்சு-பெல்ஜியம் காரர்கள் என்ற உண்மை அப்போதுதான் புரிந்தது. Internet என்ற ஒரு விஷயம் எங்களின் காமிக்ஸ் கனவுலகங்களை மேலும் விஸ்தரிக்க உதவியது. அந்த காலங்களில் Internet access ஒரு சில இடங்களில் மட்டுமே அரிதாக கிடைக்கும். அதனால் ஒவ்வொரு நாளும் அண்ணா சந்தர்ப்பம் கிடைக்கும்போது புதிது புதிதாக comics pages கொண்டு வருவதை ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருப்பேன். அப்போதைய காலங்களில் லயன்/முத்து காமிக்ஸ்கள் அருமையாகவே வெளிவந்தன. வந்தாலும் இலங்கையில் கிடைக்காது. கடைக்காரர்களிடம் கிழமைக்கு ஒரு தடவை லயன் காமிக்ஸ் வந்து விட்டதா என்று விசாரித்து கடைக்காரர்களின் முறைப்புக்கு ஆளானோம்.

முதல் இதழின் பின்னட்டையில் இருந்த trailer


இப்படி download செய்து அவனுக்கே அலுத்து விட்டதோ என்னவோ.. ஒரு நாள் இரவு ஏதோ முடிவுடன் வீட்டுக்கு வந்தான். "டேய் நாமும் பிரஞ்சு காரனுட்ட rights எடுத்து இலங்கையில comics வெளியிடலாம்." என்றான். "ஏதோ ஜோக்கடிக்கிறான்" என்றுதான் முதல்ல யோசிச்சேன். ஆனால் அவன் சீரியஸாக Dargaud comics பதிப்பகத்தினரின் foreign rights பற்றிய தகவல்களை கொண்டுவந்திருந்தான். அவன் கண்களில் பத்து வயது பொடியனுக்குரிய ஆர்வம் இருந்ததை அவதானித்தேன். அண்ணா "காமிக்ஸ் வெளியிடுவோம் வா" என்று என்னை கேட்பது இதுதான் முதல் முறையல்ல. அவன் பதினான்கு வயதாகும்போதே Indian Ink மூலம் Cowboy comicsகளை பார்த்து வரைந்து Dictionary பார்த்து தமிழ்ப்படுத்தி கையெழுத்து காமிக்ஸ் உருவாக்குவான். அவனுக்கு கறுப்பு வெள்ளை நிழட்படுத்தி வரையும் சித்திரம் நல்லா வரும். Blazing Colts (துடிக்கும் துப்பாக்கிகள் ?? )என்றதொரு western கதையை அப்படியே பார்த்து வரைவான். யுத்த காலங்களில் பாடசாலை மூடியிருந்ததால் அவனுக்கு நிறைய நேரம் கிடைத்தது. ஆனாலும் முழுக்கதையையும் முடிக்க முன்னரே பாடசாலை மீள ஆரம்பிக்கப்பட்டதால் அந்த "கையெழுத்து" காமிக்ஸ் இடை நிறுத்தப்பட்டது. நானும் எனது பங்குக்கு எனது வயதுக்கும் தகுந்தவாறு நானே வரைந்து நிறைய படம் நாலு வார்த்தை என்று காமிக்ஸ் செய்வேன். அப்போது கற்பனைக்கு எந்த கட்டுப்பாடும் இருக்காது. ஒரு நரி சிங்கத்திடம் கடன் வாங்கி விண்கலம் அமைத்து பூமியிலிருந்து சந்திரனுக்கு போகும். அங்கிருக்கும் சில விண்வெளி மனிதர்களை சந்தித்து நட்பு வளர்க்கும். அதற்கு பிறகு ஏற்பட்ட கற்பனை வறட்சி காரணமாக அந்த கதை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இப்படியே எங்களுக்குள் பாதியில் நின்றுபோன கனவுகளை மீண்டும் மீட்டிப்பார்க்க, அண்ணா பத்து வருடங்களுக்கு பின்னர் முடிவெடுத்திருந்தான். வெளிநாட்டு நிறுவனங்கள் அவர்களது படைப்புகளை இலங்கையில் வெளியிட அதிரி புதிரி தொகைப்பணத்தை கோரியிருந்தார்கள். அண்ணா அப்போதுதான் தொழிலை தொடங்கியிருந்தான். அவ்வளவு பணத்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கொடுத்து புத்தகங்களை இலங்கையின் குறைந்த வாசகர் வட்டத்தில் விற்க முடியுமா என்ற கேள்வி இரண்டு பேருக்குமே இருந்தது. நான் ஒரேயடியாக "முடியாது" என்று மறுத்தேன். நான் ஒரு அவநம்பிக்கை பேர்வழி. ஆனாலும் இரத்தப்படலத்தின் முதல் பாகத்தை நாங்களே வெளியிட்டால் அதுவரை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்திராத முன்வரிசை பாகங்களை வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற "பேராசை" வியாபார தந்திரங்களையும், திட்டமிடல்களையும் தாண்டி முன்னிலை வகித்தது. ஆகவே அண்ணா முதல் வேலையாக Dargaud காமிக்ஸ் நிறுவனத்துடன் email தொடர்பை ஏற்படுத்தினான். வாரத்துக்கு ஒரு தடவை பக்கத்தில் இருக்கும் communicationக்கு சென்று இருநூறு ரூபாய்க்கு IDD call பிரான்சுக்கு கதைப்பான். "Dargaudஇலிருந்து யாரோ ஒரு பிரெஞ்சுக்காரன் ஜரூரா இங்கிலீஷில கதைக்கிறான். Royalty காசை கட்டினா போதும். காமிக்ஸின் மூலம் கிடைத்துவிடும்." என்றான் உற்சாகமாக. இது எவ்வளவு தூரம் போகும் என்று அவநம்பிக்கையாக "மதில் மேல் பூனை" போன்று அவதானித்து கொண்டிருப்பேன். அண்ணா சில மாதங்களுக்கு முன்பாக புதிதாக தொடங்கிய companyக்கு பெயர் ஐஸ்பெர்க். ஆகவே எங்கள் காமிக்ஸ்க்கு "ஐஸ்பெர்க் காமிக்ஸ்" என்ற நாமத்தினை சூட்டினான்.

ஒரு மாதத்திற்கு பின்னர் ஒரு நல்ல நாளில் அண்ணா கோரியிருந்த XIII, மற்றும் ப்ளுபெர்ரி கதைகளுடன் சில வேற்று கிரகங்கள் தொடர்பான Aldebran போன்ற கதைகளுக்கான sampleகள் வந்திறங்கின. எல்லாமே பிரெஞ்சு மொழியிலிருந்ததால் படம் பார்த்து கதையை புரிந்து கொள்ள முயற்சித்தேன். இரத்தப்படலத்துக்கு மட்டும் அவர்களிடம் இருந்த சில ஆங்கில பதிப்புகளை எங்கள் வசதிக்காக அனுப்பியிருந்தார்கள். அவர்களது websiteஇல் ஐஸ்பெர்க் காமிக்ஸ் இலங்கையிலிருக்கும் partners என்று list பண்ணியிருந்தது எங்களுக்கு பெரிய சந்தோசமாகவிருந்தது. ஒரு கிழமைக்குள்ளாக அண்ணா XIIIஇன் முதல் பாகத்தை என்னிடம் மொழிபெயர்க்க சொல்லியிருந்தான். ஆனால் எனது சோம்பேறித்தனத்தினாலும் படிப்பின் இடையில் நேரம் ஒதுக்க முடியாமையாலும் என்னால் அதனை செய்து முடிக்க முடியவில்லை. அதனால் அண்ணா மொழிபெயர்க்கும் வேலையையும் ஏனைய வேலைகளுடன் எடுத்துக்கொண்டான். எப்படி மொழிபெயர்ப்பது என்பதில் சில சிக்கல்கள் இருந்தன. நாங்கள் அதுவரை இந்திய காமிக்ஸ்களை மட்டுமே படித்திருந்ததால் இலங்கை தமிழில் எப்படி மொழிபெயர்ப்பது, எந்த அளவுக்கு பேச்சுத்ததமிழை நுழைப்பது என்பதில் எனக்கு ஆயிரம் குழப்பங்கள் இருந்தன. ஆனால் அண்ணா அதைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் கிறிஸ்மஸ் விடுமுறையில் புத்தகத்தை வெளியிடுவதற்கான முயற்சியாக இரண்டு நாள் கண்விழித்து கொஞ்சமாக இலங்கை தமிழ் வாசனையுடன் வழமையான காமிக்ஸ் பாணியில் எழுதி முடித்தான். வழமையாக இந்திய தமிழில் வரும் "டாக்டர்" என்பது "டொக்டர்" ஆனது. "பேசுதல்" என்பது "கதைத்தல்" ஆனது. எனக்கு தமிழில் மிகவும் பிடித்த வார்த்தையான "முடியாது" என்பது "ஏலாது" ஆனது. சில வசனங்கள் நீளமாக இருந்தால் Font sizeஐ கொஞ்சம் adjust செய்து வசன balloonக்குள் அடைத்தான்.

முதல் பக்கத்தின் சில பகுதிகள்


இந்த கதைக்கு என்ன தலைப்பு வைப்பது என்பது பற்றி ஒரு மணி நேரம் விவாதித்தோம். கதை முழுக்க கதாநாயகன் தனது தொலைந்த அடையாளத்தை தேடிக்கொண்டிருப்பான். அதை குறிக்கும்விதமாக "ஆளடையாளம் XIII, ஒரு தேடல்" என்று பெயரிட்டோம். லயன் காமிக்ஸ் ஆசிரியர் விஜயன் அவர்கள் எழுதும் ஹாட்லைன் போல அண்ணா "ஹாய் ரீடர்ஸ்" என்ற எடிட்டோரியல் பகுதியை எழுதினான். அதில் காமிக்ஸ் என்பது சிறுபிள்ளை சமாச்சாரமில்லை பெரியவர்களும் ரசிக்கலாம் என்பதை வலியுறுத்தியிருந்தான்.

ஹாய் ரீடர்ஸ் பகுதிஇப்படியாக 2005 மார்கழி மாதத்தின் ஒரு நல்ல மழை நாளில் ஐஸ்பெர்க் காமிக்ஸின் முதல் பிரதி எனது மேசையில் ஜம்மென்று தயாராக இருந்தது. அண்ணாவின் சின்ன வயசு கனவு நிறைவேறியது. கிட்டத்தட்ட A4 சைசில் தரமான வெள்ளை தாள்களில் அச்சிடப்பட்ட கதையின் அட்டைப்படத்தில் கதாநாயகன் XIII கோட் அணிந்து சிவனே என்றிருந்தார். ஆனாலும் தமிழ் காமிக்ஸின் பாரம்பரியமான வழுவழுப்பான அட்டைப்படம் இருக்கவில்லை. அதையும் போட்டால் விலை 100 ரூபா ஆகிவிடும் என்ற அதிர்ச்சி தகவலை கேட்டவுடன் அது வேண்டாம் என்று முடிவு செய்தோம். ஆனாலும் விலை 85 ரூபா என்று நிர்ணயிப்பதை தவிர்க்க முடியவில்லை. ஆனாலும் அந்த காலங்களில் லயன் காமிக்ஸ்கள் இலங்கையில் வெறும் நாற்பது ரூபாவுக்கே விற்றன. ஆகவே எங்கள் வெளியீடுகள் எந்தளவுக்கு வரவேற்ப்பு பெறும் என்பதில் பெரிய சந்தேகம் இருந்தது.

முதல் இதழில் வந்த coming attraction  - [Aldebran]


அண்ணாவே கொழும்பில் வழமையாக காமிக்ஸ் விற்கும் எல்லா கடைகளுக்கும் அண்ணா காமிக்சை விநியோகித்தான். குறிப்பாக பம்பலபிட்டி பிள்ளையார் கோவிலுக்கு பக்கத்தில் இருக்கும் புத்தகம் விற்கும் கடையில் 30 பிரதிகள் கொடுத்தான். ஒருவழியாக அச்சிடப்பட்ட 1000 இதழ்களில் 500க்கு அதிகமான இதழ்களை முதல்கட்டமாக விநியோகித்து முடித்தான். ஆனாலும் அவை எவ்வளவு தூரம் விற்பனையாகும் என்பது மில்லியன் டொலர் கேள்வியாக இருந்தது. கொழும்பு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் விநியோகிப்பதிலும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதிலும் நிறைய சிரமங்கள் இருந்தன. ஆனாலும் அண்ணா சளைக்காமல் போனில் கதைத்து இயலுமான வரைக்கும் விநியோகித்து முடித்தான். அப்போது யுத்தமா.. சமாதானமா.. என்று கணிக்கமுடியாத ஒரு இடைப்பருவம் ஆகவே யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களுக்கு சிரமத்துடனே புத்தகங்களை அனுப்பினான். எங்கட ஊர் வாசிகசாலைக்கு மறக்காமல் 2 பிரதிகள் அனுப்பினான்.

புத்தகங்களை அனுப்பி ஒரு வாரத்துக்கு பின்னர் பம்பலபிட்டி பிள்ளையார் கோவில் கடையிலிருந்து 20 புத்தகங்கள் விற்று விட்டதாக ஒரு நற்செய்தி வந்தது. ஆனாலும் சில இடங்களிருந்து விற்பனை மந்தம் என்று வயிற்றில் புளியை சில தகவல்களும் வந்து சேர்ந்தன. கொஞ்ச காலங்களில் வாசகர் கடிதங்கள் ஒவ்வொன்றாக வரத்தொடங்கின. ஒவ்வொரு கெட்ட சேதியினை தொடர்ந்தும் தெம்பூட்டும் வாசகர் கடிதம் வந்து மனதை ஆற்றியது. A4 கடதாசியில் இரண்டு பக்கம் வந்த வாசகர் கடிதம் கூட இருந்தது.

அவ்வாறான கடிதங்கள்தான் எங்களது இரண்டாம் இதழுக்கான அத்திவாரம். இரண்டாம் இதழுக்காக என்ன செய்தோம் என்பதை அடுத்த பதிவில் காண்க :) (??)அட்டைப்படம்

2008ம் ஆண்டிலேயே நண்பர் கிங் விஸ்வா அவர்கள் ஐஸ்பெர்க் காமிக்ஸ் பற்றி எழுதிய தொடர் பதிவுகள் எங்களுக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தந்தன. அவர் அந்த பதிவிகளில் பயன்படுத்திய scan படங்களையே இப்பதிவில் பயன்படுத்தியுள்ளேன். நன்றி விஸ்வா.

கிங் விஸ்வாவின் முதலாவது இதழின் விமர்சனம்முற்றும்..

ஆனால் தேடல் தொடரும் 

15 comments:

 1. Interesting................


  Please write more about the complete series Sir.

  ReplyDelete
 2. அருமை நண்பரே! உங்கள் பதிவுகள் பல சங்கதிகளை, சங்கடங்களைச் சொல்கின்றன. ஆர்வம் மட்டுமே உறுதுணையாய் காமிக்ஸ் களத்தில் நுழைந்த உங்களுக்கும் உங்கள் அண்ணாவுக்கும் எனது நன்றிகள், வாழ்த்துக்கள். இந்தப் பணி தொடராமல் போனதுதான் வருத்தம்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி பொடியன்.. எனக்கும் தொடர முடியாமல் போனதில் நிறைய வருத்தம் இருக்கிறது. அந்த காலகட்டம் அப்படி.. இனி ஒரு சந்தர்ப்பம் வர கடவுள் வழிவகுத்தால் நன்றாக இருக்கும்

   Delete
 3. //அதுவரை காலமும் 4, 5, 6 ஆம் பாகங்களை மாத்திரமே வாசித்திருந்ததால் //

  ஆமா பாஸ்! நாங்கள் தொடங்கியது 4 ஆம் பாகத்தில இருந்துதான்! முதல் மூன்றுக்கும் அலைஞ்சு திரிஞ்சிருக்கிறோம் யாழ்ப்பாணத்தில .

  ஐஸ்பெர்க் காமிக்ஸ் காமிக்ஸ் பேர் கேள்விப்பட்ட மாதிரியே இருக்கு... ஒரு வேளை கிங் விஸ்வா பதிவில்தான் பார்த்தேனோ என்னவோ!

  ReplyDelete
 4. அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி.. இன்னும் கொஞ்சம் உருப்படியாக அடுத்தமுறை எழுத நிறைய யோசிக்க வேணும் :)

   Delete
 5. Nice effort அண்ணா. 2,3 மூண்டு வருசத்துக்கு முன்னாடி ஒண்டு வாசிச்சிருக்கேன், Iceberg one. நல்ல குவாலிட்டியோட வந்தது அது. இப்ப கடுமையா ஆங்கில சீரியல் பாக்குறதால, இப்பல்லாம் கொமிக்ஸ் மோகம் குறைஞ்சிட்டுது. Anyway, கொமிக்ஸ் help to be creative and to be dramatically different! :)

  ReplyDelete
  Replies
  1. நன்றி கனரூபன்.. comics வாசிக்கிறதை நிறுத்தாதீங்க.. வயசாயிட்ட மாதிரி பீல் பண்ணுவீங்க :P

   Delete
 6. வாவ் ....உங்கள் காமிக்ஸ் ஆர்வம் .....
  உண்மையில் எனக்கு என்ன வார்த்தையில் பாராட்டுவது என்று புரிய வில்லை .
  மனதார சொல்கிறேன் ..மீண்டு(ம் ) உங்கள் காமிக்ஸ் வெற்றி நடை போட மனதார வேண்டுகிறேன் .

  ReplyDelete
 7. இப்படி தமிழில் காமிக்ஸ் வெளியிடும் வேலை இலங்கையில் நடந்தது என்று இன்று வரை (இதை வாசிக்கும் வரை) எனக்குத் தெரியாமல் போயிற்றே! 1995 இடப் பெயர்வுக்கு முன் எமக்கெல்லாம் ராணி காமிக்ஸ் பைத்தியம். லயன் அவ்வளவாக அந்தக் காலத்தில் யாழில் (St. John's இல்) பிரபலம் இல்லை. பெரும்பாலும் ராணி காமிக்ஸை புத்தகத்துக்கு நடுவில் வைத்துப் படித்துத் தான் நல்ல பேச்சு வாங்கியிருக்கிறோம் :) அந்தக் காலம் மிக இனிமையானவை (கூடவே வாண்டுமாமா புத்தகங்களுக்கும் நாம் பைத்தியம்). இப்படி ஒரு இதழ் நடத்தி இலங்கை காமிக்ஸ் வரலாற்றில் புரட்சி செய்திருக்கிறீர்கள். இப்போது இந்த இன்டர்நெட் யுகத்தில் காமிக்ஸ்களுக்கெல்லாம் எத்தனை வரவேற்பு இருக்கும் யாழில் என்று புரியவில்லை :( "சிங்கத்தின் சிறுவயதில்" போல உங்கள் அனுபவங்களும் சிறப்பாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
 8. ஐஸ்பெர்க் காமிக்ஸ் என்ற ஒரு கன்னி முயற்சிக்கு பின் நடந்தது இரு காமிக்ஸ் ரசிகர்களின் தனிபட்ட உழைப்பு என்பதை இன்று தான் கண்டு கொண்டேன்.

  மேலும் உங்கள் அனுபவங்களை பகிருங்கள்... அப்படியே உங்கள் அண்ணாவையும் ஒரு பதிவு அவர் பார்வையில் இட சொன்னால், நிறைவாக இருக்கும்.

  ReplyDelete
 9. இப்போது அங்கே காமிக்ஸ் நிலவரம் குறித்து கூறுங்கள் தோழரே..

  ReplyDelete
 10. ஐஸ்பெர்க் காமிக்ஸ் இன்னமும் வந்து கொண்டிருக்கிறதா? யாராவது தகவல் சொல்ல இயலுமா?

  ReplyDelete