Tuesday, November 20, 2018

வாசிப்பு என்னும் மிருகம்

 சமீப நாட்களில் வாசிப்புக்கு ஒரு நாளில் ஒரு மணி நேரமாவது ஒதுக்குகிறேன். இவ்வாறாக நேரம் ஒதுக்குவதற்கே மிகவும் சிரமமாக இருக்கின்றது. இதனாலேயே ரயிலில் பயணம் செய்யும்போதும் தீவிரமாக வாசிக்கிறேன். ரயிலுக்குள் நுழையும் கடல் காற்றை ரசிக்காமல் புத்தகத்துக்குள்ளே விழுந்திருக்கின்றேன். ஒரு பக்க யன்னலால் நுழையும் கடற்காற்று என்னை மயக்க தீவிர முயற்சி செய்து தோற்றுவிட்டு அடுத்தப்பக்க யன்னல் மூலம் தோல்வியுடன் வெளியேறுகிறது. இதற்குமுன்னர் நான் ஒருபோதும் நேரம் ஒதுக்கி புத்தகங்களை வாசித்ததில்லை. வாசிக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் வந்தால் மட்டுமே வாசிப்பேன். இப்போதெல்லாம் வாசிப்பு ஒரு குரங்கு போல என்னுடன் தொற்றிக்கொண்டிருக்கிறது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாசிக்கும்படி என்னை அது ஏவுகிறது. என் சொல்பேச்சை அது கேட்பதில்லை. அது பேச்சை தட்டுவது கடினமாக இருக்கிறது. இரவு படுக்கைக்கு செல்ல முன்னர் வாசிக்காமல் படுத்தால் அந்த நாளில் ஏதோ குறையிருப்பதாக மனதுக்கு படுகிறது. ஆனாலும் சில நேரங்களில் எனது வாசிப்பு ரசனை எனக்கே பயத்தை ஏற்படுத்துகிறது. எனக்கு எல்லோருக்கும் பொதுவாக பிடித்த புத்தகங்களை வாசிக்கவேண்டும் என்று தோன்றாது. எப்போதோ கேள்விப்படட  பழைய கிளாசிக் புத்தகங்களை வாசிக்க வேண்டும் போல திடீரென்று தோன்றும். பழைய ஆங்கிலபடங்களின் மூலமான புத்தகங்களை கண்ணில் படும்போது வாங்குவேன். காரணமேயில்லாமல் அந்த புத்தகங்களுக்குள் மூழ்கிவிடுவேன். ஆனால் அந்த படங்களை பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் இருப்பதே இல்லை. எல்லோரும் சிலாகிக்கும் "பொன்னியின் செல்வன்" நாவலை வாசிக்க ஒருபோதும் தோன்றியதில்லை. நான் எதை வாசிக்க வேண்டும் என்பதை அந்த குரங்குதான் தீர்மானிக்கிறதோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.

அலுவலத்தில் வேலை செய்யும் நண்பன் ஒருவன் விலை கூடிய ஆங்கில காமிக்ஸ்க்களை வாங்கிக்குவிப்பான். எங்களுக்குள் புத்தகங்களை பரிமாற்றம் செய்வோம். அவன் வாங்கும் புத்தகங்களில் பாதிக்கு மேல் அவன் வாசித்ததில்லை என்பது ஆச்சர்யம் தரும் விஷயமாக இருந்தது.  அநேக தருணங்களில் டாலடிக்கும் அவனுடைய புத்தம்புதிய புத்தகங்களை நானே முதலில் வாசிப்பேன். அவனே இது ஒருவகை மனோவியாதி என்றான். அதாவது வாங்கி குவித்துவிட்டு அதனை வாசிக்காமல் அடுக்கி அழகு பார்ப்பது. நல்லவேளையாக எனக்கு இந்த வியாதி இப்போதில்லை. ஆனாலும் நான் வாசிக்கும் வீதத்தை விட வாங்கும்வீதம் அநியாயத்திற்கு அதிகம்தான். காணும் இடங்களிலெல்லாம் புத்தகங்களாக வாங்கிக்குவிக்கிறேன். ஆனால் உடனடியாக வாசிப்பதில்லை. அவற்றை வாசிக்க ஏதோ ஒரு உந்துதல் தேவைப்படுகிறது.  இப்படித்தான் ஒரு புத்தகவிழாவில் ஷெர்லாக் ஹோம்ஸ் இன் சிறுகதை தொகுப்பை ஆசைக்கு வேண்டினேன். ஆனால் அது எனது புத்தக அலுமாரியில் இரண்டு வருட ஆழ்ந்த தூக்கம் போட்டது.  ஒருநாள் ஷெர்லாக் ஹோம்ஸ் இன் கதைகளை அடிப்படையாக கொண்ட "துப்பறிவாளன்" படம் வருவதாக அறிந்தேன். அந்த தீப்பொறி எப்போதோ வாங்கிய புத்தகத்தை  வாசிக்க தூண்டியது. புத்தகத்தை வாசித்து முடித்த நான் அந்த படத்தை பார்க்கமுடியாமல் போனது இங்கு முக்கியமில்லை. இவ்வாறே "The Martian" என்ற புத்தகத்தை அதை தழுவிய படம் பார்க்க விருப்பத்தில் வாசித்து முடித்தேன். புத்தகம் வாசித்தவர்களுக்கு அந்த படம் பிடிக்காது என்று ஒரு நண்பன்  கூறினான். ஆகவே அந்த படத்தை பார்க்கவில்லை. இந்த புத்தகத்தை ஒவ்வொரு காலைப்பொழுதிலும் ரயிலில் வேலைக்கு போகும்போது வாசித்தேன். இப்புத்தகத்தின் கதை செவ்வாய் கிரகத்தில் நடப்பதாக இருந்ததால் ரயில் கூட செவ்வாய் கிரகம் போல மாயையை உண்டுபண்ணியது. இப்படித்தான் நான் வாங்கும் புத்தகங்கள் என்னுடைய வாசிப்புக்காக தவம் கிடக்கின்றன. எப்போதோ ஒரு நாள்தான் அவற்றுக்கு வரம் கிடைக்கின்றது.  அந்த நாள்தான் எப்போது என்று தெரிவதில்லை.நான் காலைப்பொழுது வாசிக்கும் புத்தகத்தை இரவில் தொடர்வதில்லை. இரவுக்கு வேறு ஏதாவது புத்தகம் வாசிக்கிறேன். இப்படித்தான் "Bram Stoker"இன் டிராகுலா புத்தகத்தை காலைப்பொழுதின் இருபது நிமிட புகையிரத சவாரியில் மட்டுமே மூன்று மாதங்களாக வாசித்து முடித்தேன். இரவில் ஏதாவது ஒரு நகைச்சுவை நிறைந்த காமிக்ஸ் ஏதாவது வாசிப்பேன். நாய்கள்  ஊளையிடும் நடு ராத்திரியில், டிராகுலா புத்தகத்தை வாசிப்பதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பது வேறு விஷயம். ஆனாலும் எனது மனவோட்டத்துக்கு ஏற்றவாறு புத்தகங்களை அந்த குரங்கு தேர்வு செய்கிறது போலும்.


இப்போதெல்லாம் புத்தக விழாக்கள் கணிசமாக நடக்கின்றன. ஏதோ பொய்யான பரபரப்புடன் எல்லா வேலையையும் தூக்கி போட்டுவிட்டு அந்த நிகழ்வுகளுக்கு போகிறேன். சித்தம் பேதலித்தவன் போல புத்தகங்களை பார்வையிடுகிறேன். புத்தகங்கள் நிறைய வாங்குகின்றேன். அவை வீட்டினுள் ஆங்கங்கே புத்தகங்கள் சிதறி கிடக்கின்றன. இயலுமானவரை தேவையற்ற புத்தகங்களை நண்பர்களுக்கு பரிசளிக்க முயற்சிக்கிறேன். ஆனால் என்னை போன்ற வியாதியஸ்தர்களை காணுவது அரிதாகவே இருக்கிறது. வீட்டில் குவிந்து கிடைக்கும் புத்தகங்களை அடுக்கி வைப்பதற்கே திண்டாடுகின்றேன்.  எது தேவை எது தேவையற்றது என்று வேறுபடுத்தவே முடிவதில்லை. அடுக்கும்போதே புத்தகங்களை நோட்டம் போடுவதற்கே பாதி நாள் போய் விடுகிறது. ஒவ்வொரு புத்தகத்தை அடுக்குவதற்காக தூக்கும்போதும் அப்புத்தகம் சம்பந்தமான நினைவுகள் வந்து அலைக்கழிக்கின்றன. இப்படியே நேரம் போய் விடுகிறது. கொட்டிக்கிடக்கும் புத்தகங்களை அடுக்குவதற்கே இன்னொரு அறையை கட்டுவோமோ என்று யோசிக்கிறேன் ஆனாலும் வீட்டு சொந்தக்காரன் என்ன சொல்லுவானோ என்ற நினைப்பு அதனை அணைத்து விடுகிறது.
2 comments:

 1. முன்பு சில வருடங்கள் பத்தரமுல்லையில் பணியாற்றியபோது பேருந்தில் பயணிக்கக்கிடைக்கும் சில மணித்துளிகளில் பல புத்தகங்களை வாசிக்கக்கிடைத்தது. இப்போது சில நிமிடங்களில் செல்லக்கூடிய இடத்தில் பணி என்பதால் அதற்கு வாய்ப்பில்லை. இதனால் வாசிப்பை பெருமளவு இழந்துவிட்டேன்.

  புத்தக விழாக்களுக்கு போவது பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது. ஏனென்றால், பல வருடங்களுக்கு முன் சென்னை புத்தக விழாவில் வாங்கிய புத்தகங்களில் பலவே தூசு தட்டாமல் கிடக்கின்றன. ஆனால், வெள்ளவத்தை யில் பழைய புத்தகக்கடையை மட்டும் தவிர்ப்பது கடினமாயிருக்கிறது. நுழைந்தால் சில புத்தகங்களையாவது வாங்கிடும் நோய் இன்னமும் மாறவில்லை. அதை தவிர்க்க, அண்மையில் இந்தப் பக்கம் வந்த டீன்ஸ் புத்தகக்கடைக்கு போக ஆரம்பித்தேன். அங்கே பழைய புத்தகங்கள் விற்கும் விலையைப் பார்த்தாவது கையைக் கட்டிக்கொண்டு வந்திடலாம் என்று. ஆனால், முன்னர் 100 - 200 க்கு 4 - 5 புத்தகங்களை வாங்கியது பரவாயில்லை. இங்கே அவ்வப்போது 1500 - 2000 என்று போகிறது.

  வீட்டில் புத்தகங்கள் வைத்திருப்பதென்பது ஒரு வித ஜென் நிலையில் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். முன்பு அம்மாவும் இப்போது துணைவியாரும் செய்யும் அர்ச்சனைகளை கடப்பதற்கு ஜென் கதைகள் நிறையவே உதவியிருக்கின்றன.

  காமிக்ஸ் வாங்கிக் குவிப்பது ஒருபக்கம் நடக்கிறது. பேசாமல் பிடிஎப் களை சேமித்து கணினியோடே வைத்திடலாம் என்று பார்த்தால் அங்கே லயன் எடிட்டர் கேஸ் போடுவேன் என்கிறார். வாசிப்பது அவ்வளவு குத்தமா நண்பா? :-P

  ReplyDelete
 2. பொடியன் அவர்களே! உங்கள் அனுபவங்களே மலையளவு இருக்கும்போல தெரிகிறது..

  //

  வீட்டில் புத்தகங்கள் வைத்திருப்பதென்பது ஒரு வித ஜென் நிலையில் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். முன்பு அம்மாவும் இப்போது துணைவியாரும் செய்யும் அர்ச்சனைகளை கடப்பதற்கு ஜென் கதைகள் நிறையவே உதவியிருக்கின்றன.

  //

  சுவாரசியமான விஷயம்.. இதைப்பற்றி பதிவிட்டீர்கள் என்றால் பலபேருக்கு உதவிபுரியும் என்று நினைக்கிறேன்.

  //
  காமிக்ஸ் வாங்கிக் குவிப்பது ஒருபக்கம் நடக்கிறது. பேசாமல் பிடிஎப் களை சேமித்து கணினியோடே வைத்திடலாம் என்று பார்த்தால் அங்கே லயன் எடிட்டர் கேஸ் போடுவேன் என்கிறார். வாசிப்பது அவ்வளவு குத்தமா நண்பா? :-P
  //
  எனக்கு என்னவோ பிடிஎப்கள் சரிப்படுவதில்லை. புத்தகமாக வாசிக்கும் இன்பம் அதில் இருப்பதில்லை

  ReplyDelete