Showing posts with label chinaman. Show all posts
Showing posts with label chinaman. Show all posts

Tuesday, April 21, 2020

Chinaman - ஒரு கிரிக்கெட் படலம்

ஷெஹான் கருணாதிலகவின் Chinaman புத்தகத்தை சமீபத்தில் வாசித்தேன். அநேக நேரங்களில் தடித்த புத்தகங்களை வாசிக்கமாட்டேன். சோம்பேறித்தனம்தான் அதற்கான முக்கிய காரணம். எனது சோம்பேறித்தனத்தையும் தாண்டி இப்புத்தகத்தை தெரிவு செய்வதற்கு சில காரணங்கள் இருந்தன.



* இது முழுமையான கிரிக்கெட் சம்பந்தமான கதை. 
* ஒரு இலங்கை எழுத்தாளரால் எழுதப்பட்டது. இதுநாள்வரை சிங்கள எழுத்தாளர்களின் புத்தகங்கள் எதையுமே வாசிக்க வேண்டும் போல இருந்ததில்லை. இது இலங்கை அரசியல் பற்றி இல்லாமல் இருப்பதால் வாசிக்க வேண்டும் என்று யோசித்தேன்   
* இந்திய வாசகர்கள் பலர் சிலாகித்த கதை என்பதே ஆச்சர்யமாக இருந்தது 
* ஆனாலும் இலங்கையில் பெரும்பான்மையினரால் அவ்வளவாக கண்டுகொள்ளப்படாத நாவல். அது இன்னும் பெரிய ஆவலை உண்டாக்கியது.
* ஒரு இலங்கை எழுத்தாளரினால் எழுதப்பட்ட இந்த புத்தகத்துக்கு GoodReads இல் 4.2 ரேட்டிங் இருந்தது 
* போதாக்குறைக்கு இக்கதையின் நாயகன் "பிரதீப் மத்தியூ" தமிழ் தந்தைக்கும், சிங்கள தாய்க்கும் பிறந்தவன் 



இக்கதை குடித்து குடித்தே தன்னை அழித்துத்கொள்ளும் "கருணாசேன" என்கிற 64 வயதான விளையாட்டுத்துறை பத்திரிகையாளர் ஒருவரின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. இவரும் "ஆரி" எனப்படும் இவரது நண்பரும் சேர்ந்து "பிரதீப் மத்தியூ" என்கிற ஒரு முன்னாள் தேசிய கிரிக்கெட் விளையாட்டு வீரனை ஒரு முக்கிய காரணத்துக்காக தேடி அலைகிறார்கள். இந்த "பிரதீப் மத்தியூ" என்பவன் வினோதப்பிறவி. இவன் ஒரு அதிரிபுதிரியான variationகளை காட்டக்கூடிய ஒரு ஸ்பின்னர். Chinaman வகை பந்துவீச்சு முறைதான் இவனது பிரம்மாஸ்திரம். ஆனாலும் இவன் விளையாடிய 1980களில் இலங்கையில் அவன் அவ்வளவாக பிரபலமாகவில்லை. அவனைப்பற்றிய தகவல்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. இதனாலேயே அவனை தேடி அலையும் இந்த இரு  நண்பர்களுக்கும்  பல சிக்கல்கள் வருகின்றன. ஆனாலும் பிடிவாதக்காரரான "கருணாசேன" விடாப்பிடியாக பிரதீப்பை தேடி அலைகிறார். இந்த கதை நடக்கும் இடம் நான் தற்போது வசிக்கும் இடத்துக்கு அண்மையிலான "கல்கிசை", "சொய்சாபுர", "மொரட்டுவ" பகுதியிலே பெரும்பாலும் நடக்கிறது. பல வருடங்களாக "கருணாசேன" சந்திக்கும் வெவ்வேறான மனிதர்கள் மூலம் பிரதீப்பின் குணாதிசயங்கள் மற்றும் அவனது பாடசாலை கிரிக்கெட் சாகசங்கள் பற்றி அறிந்துகொள்கிறார். என்னதான் தேசிய அணியில் "பிரதீப் மத்தியூ" விளையாடினாலும், எப்போதும் யாருக்கும் அடங்கி போகாமல் பிரச்சனை செய்யும் அவனை பலருக்கு பிடிக்கவில்லை. இதன் காரணமாகவே அவன் தேசிய அணியிலிருந்து நிறுத்தப்படுகிறான். ஆனாலும் "கருணாசேன" பிரதீப்பை ஒரு திறமையான சுழல் பந்து வீச்சாளனாக கருதுகிறார். முரளிதரனை விடவும் பிரதீப்பை அவருக்கு பிடித்துப்போய் விடுகிறது. அவன் வீசிய சில முக்கிய பந்துகளை கதை நெடுக  நினைவுகூருகிறார். ஒரு கட்டத்தில் நண்பன் ஆரியுடன் நடக்கும் விவாதத்தில் முரளிதரனே பந்தை எறிகிறார் என்று தான் நம்புவதாக சொல்கிறார்.இப்படியாக "பிரதீப் மத்தியூ" என்னும் விளையாட்டு வீரன் மீதான மோகத்தில் திளைக்கிறார்.

இங்கு நான் சொல்லாமல் விட்ட முக்கியமான விஷயம் கதையில் வரும் சில கதாப்பாத்திரங்கள். இங்கு கதையில் வரும் முக்கிய சில பாத்திரங்கள் மட்டுமே கற்பனையானவர்கள். இலங்கை கிரிக்கெட்டின் முக்கிய பல வீரர்களும் கதையில் மூன்றாம் மனிதர்களாக ஆங்காங்கே தலை காட்டுகிறார்கள். எண்பதுகளில் தொண்ணூறுகளில் கொழும்பில் இடம்பெற்ற இனப்பிரச்சனை, குண்டுவெடிப்புகள், அந்நேரத்தில் இலங்கைக்கு கிடைத்த உலகக்கிண்ணம் போன்றவை கதையோடு ஒட்டி போகின்றது. இலங்கையின் அரசியல் போக்கு, கிரிக்கெட் ஊழல்கள் கதையில் சரியாக செருகப்பட்டுள்ளது. குறிப்பாக "பிரதீப் சிவநாதன்  மத்தியூ" என்கிற பெயரில் "சிவநாதன்" என்ற நடுப்பெயர் கரைந்து போய்   "பிரதீப் மத்தியூ" சுருக்கப்படுவதற்கு சரியாக அரசியல் காரணம் கற்பிக்கப்படுகிறது. சிறுபான்மையின வீரன் ஒருவன் ஏன் தேசிய அணியில் இடம்பெறுவது குதிரைக்கொம்பான  விஷயம் என்பதை ஒளிவுமறைவின்றி எழுத்தாளர் தெளிவுபடுத்துகிறார். ஒரு பெரும்பான்மை இன எழுத்தாளரிடமிருந்து இதனை நான் எதிர்பார்க்கவில்லை. இப்படியாக அவரின் பல நடுவுநிலையான கருத்துக்கள் கதை நெடுக இருக்கின்றன. இவ்வளவு காலமும் அப்படி ஒரு விசயம் இல்லை என்றுஇவ்வளவு காலமும் நம்பிக்கொண்டிருந்தவர்களுக்கு இந்த கதை வினோதமாக தெரியலாம்.

எழுத்துநடை மிகவும் சீராக சுவாரசியமாக செல்கிறது. ஒரு குடிகாரன் கதை சொல்லும்போது ஒன்றிலிருந்து ஒன்றுக்கு தாவுவான். ஆனால் கதை சுவாரஸ்யமாக இருக்கும். அதுபோலவே காலக்கிரமத்துக்கு ஏற்றவாறு பயணிக்காமல் "கருணாசேனவின்" குடிகார மனநிலைக்கு ஏற்றவாறு கதை பயணிக்கிறது.  திடீரென்று "கல்கிசை" தெருவில் ஊர்ந்து போகும் கதை தாஜ் கொட்டலில் நடந்த சம்பவத்துக்கு தாவுகிறது. இந்த non-linear பாணி அநேக நேரங்களில் சுவாரசியம் தருகிறது.



இக்கதையில் வரும் அரசியல் பாண்டஸித்தனமாக இருப்பதாக பட்டது. கருணாசேன ஒரு தமிழ் தாதாவை இலகுவாக சந்திக்கிறார். தமிழ் இயக்கங்களுக்கு வெளிப்படையாக உதவும் அந்த தாதாவின் பாத்திரம் நம்பமுடியாததாகவே இருக்கிறது. ஆனாலும் கிரிக்கெட் விளையாட்டு சம்பந்தமான புனைவுகளில் நம்பகத்தன்மை ஸ்திரமாக உள்ளது. குறிப்பாக 1987 ல் நியூஸிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் வந்தபோது  முதல் டெஸ்ட் போட்டி முடிந்த பின்னர் தலைநகரில் குண்டு வெடிக்கிறது. இதனால் நியூஸிலாந்து அணியினர் நாடு திரும்பினார்கள். இது உண்மை சம்பவம். ஆனாலும் ஷெஹானின் புனைவு இந்த இடத்தில்தான் தொடங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி பார்வையாளர்கள் இன்றி ஒருசிலருக்கு மட்டுமேயான அனுமதியுடன் நடக்கிறது. குண்டு வெடிப்பினால் பயந்து போயிருந்த நியூஸிலாந்து வீரர்கள் அரைமனத்துடன்  விளையாட சம்மதிக்கின்றனர். முதல் போட்டியில் சந்தர்ப்பம் கிடைக்காத "பிரதீப் மத்தியூ" இப்போட்டியில் விளையாடி எட்டு விக்கெட்டுகளை பறிக்கிறான். தனது மாஜாஜால Chinaman பந்து மூலமாக விக்கெட்டுகளை சாய்ப்பதை நேரில் கண்ணுற்ற "கருணாசேன" அதன் பின்னர்  "பிரதீப் மத்தியூ"வின் தீவிர விசிறியாகிறார். ஆனாலும் முதல் இன்னிங்சின் குறைவான ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த நியூஸிலாந்து போட்டியை நிறுத்திவிட்டு நாட்டின் அரசியல் நிலையை காரணம் காட்டி விட்டு வெளியேறுகிறது. இதன் காரணமாக இப்போட்டிக்கு சர்வதேச அந்தஸ்து கிடைக்கவில்லை என்று சொல்லி என்னையே நம்பவைத்து விட்டார். நானும் கூகிள் செய்து சலித்தேன். அப்படி ஒரு போட்டியே நடக்கவில்லையாம்.


"கருணாசேன"வின்  நீண்ட காலத்தேடல் அவரின் மரணத்துடன் தோல்வியில் முடிகிறது. ஆனால் அதன் பின்னரும் கதை நகருகிறது. அதுதான் மிகப்பெரிய காதில பூ சமாச்சாரம். ஆனாலும் தொடர்ச்சியாக வாசிக்கும் போது அது பெரிய விஷயமாக தோற்றவில்லை. 


உண்மைக்கதை போன்றதான இக்கதை சுவாரசியமாக நகர்த்தப்படுகிறது. உண்மையிலேயே இப்படி ஒரு கிரிக்கெட் வீரன் இருக்கிறானோ அல்லது வேறு ஒருவரது உண்மை பெயரை மாற்றி கதை சொல்கிறாரோ என்று எண்ண தோன்றுகிறது. ஆனாலும் தொடர்ச்சியான நாட்களில் trainல் வேலைக்கு போகும்போது வாசித்தேன். சுவாரசியமான நாட்கள். உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்குதோ இல்லையோ வாசித்து விடுங்கள். கதைசொல்லும் பாணி சுவாரசியமாக இருக்கும்.

இப்புத்தகம் Wisden சஞ்சிகையின் கணிப்பின்படி கிரிக்கெட் சம்பந்தமான புத்தகங்களில் இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இதை ஹிந்தியில் படமாக்கப்போகிறார்களாம். அங்கு கொலை நடக்கமுன்னராக Chinaman ஐ தரிசித்து விடுங்கள்.