Tuesday, October 11, 2011

கணக்கு வாத்தியார்

"கணக்குல 65 மார்க்ஸ்தான் எடுத்திருக்கிற! இனி நீ டியூஷன் போய்த்தான் ஆகணும்.. இப்படியே போன, ஓயலில் என்னத்தைதான் கிழிக்க போறியோ தெரியலை!" என்றான் அண்ணா. டியூஷன் என்றாலே எனக்கு அவ்வளவு ஒத்து வராது. எதாவது சொல்லி அண்ணாவிடம் இருந்து தப்ப யோசித்து ஒரு ஐடியாவும் வராமல் தடுமாறினேன். நானும் அண்ணாவும் மட்டக்களப்பு நகரத்தில் ரூம் எடுத்து தங்கி படித்துக்கொண்டிருந்தோம். 32 கிலோமீட்டர்களுக்கு அப்பால், வாழைச்சேனையில் இருக்கும் அப்பா அம்மா பார்க்க வேண்டிய வேலையை அண்ணா பார்த்துக்கொண்டிருந்தான். அதுதான், என்னுடைய ஒன்பதாம் ஆண்டு அரையாண்டு பரீட்சை ரிப்போர்ட் கார்டை பார்த்துக்கொண்டிருந்தான். "மற்ற பாடங்கள் சும்மா பரவாயில்லை.. ராஜாகிட்ட கேட்டு உருப்படியா நல்ல இடத்தில டியூசன் போற வழியை பாரு.. கொண்டுபோய் அங்கிள்கிட்ட சைனை வாங்கிக்க" என்றான். ரிப்போர்ட்டை தரம் பார்ப்பதுதான் அவனுடைய வேலை. ரிப்போர்ட் கார்டுல சைன் வாங்க வீட்டுகார அங்கிள்கிட்ட போக வேணும். "வகுப்புல ஆறாம் இடத்தில வந்திருக்க.. இன்னும் நல்ல படிச்சா முன்னேற இடமுண்டு" என்று சிரித்து கொண்டே சைன் வைத்தார் அங்கிள்.


இந்த டியூசன் என்றாலே, எனக்கு கண்முன்னே கலர் கலராக சட்டை அணிந்த மாணவர்களும் அவர்கள் போகும் கண்ணை பறிக்கும் அழகான சைக்கிள்களும்தான் ஞாபகம் வரும். கிராம பாடசாலையில் இருந்து நகரத்துக்கு படிக்க வந்த எனக்கு நகர மாணவர்களின் போக்கு ஆச்சர்யத்தினையும், பயத்தினையும் ஏற்படுத்தின. நான் படித்தது ஆண் பாடசாலை. எனவே வேற்று கிரகத்திலிருந்து வந்து இறங்கிய பெண்கள் என்ற பிறவிகளை காண்பது அரிது. ஆனால் டியூசன் போனால் பெண்களை எதிர்கொள்ளும் கால் நடுங்கவைக்கும் சந்தர்பங்கள் வேறு அதிகம். பெரிய பெண்கள் பாடசாலைகளில் படிக்கும் பணக்கார வீட்டு பெண்கள் கலர் கலரா உடுப்பு போடும் பேஷன் ஷோகளாக டியூசன் சென்டர்களை பயன்படுத்துவர். ஆம்பிளை பொடியலும் சளைக்காம புதுசு புதுசா ஜீன்ஸ் டீ-சேர்ட் என்று போட்டு அசத்துவான்கள். இதில் எல்லாம் ஆர்வமில்லாத எனக்கு, எப்படா வார இறுதி விடுமுறை வரும், வீட்டுக்கு ஓடலாம் என்று இருப்பேன். ஆனால் இன்னொரு டியூசனுக்கு போனால் வீட்டுக்கு போகும் வாய்ப்புகள் வேறு குறையும். சனி ஞாயிறு தினங்களில் ஏதாவது டியூசன் வந்து விட்டால் வீட்டுக்கு போகும் நிகழ்தகவு இன்னும் குறைந்து விடும். இதனால் டியூசன் போகும் எண்ணம் இதுவரை ஏற்படவில்லை. ஆனால் இன்று எப்படியும் ராஜாவிடம் கணக்கு டியூசன் பற்றி கதைக்க வேணும். இல்லை என்றால், ஏன்டா இன்னும் கேக்கலை என்று கேள்வி கணைகளால் துளைத்துவிடுவான் அண்ணா.

ராஜா ஏதோவொரு டியூசனுக்கு போய்விட்டு களைத்துபோய் மத்தியானம் வீடு திரும்பி இருந்தான். இவன் சங்கீதம் தவிர்த்த மற்ற எல்லா படத்துக்கும் டியூசன் போவான். அநேக நேரங்களில் வீட்டில் இருக்க மாட்டான். அவனுக்கென்று ஏதாவது ஒரு டியூசன் எப்போதும் இருக்கும், அல்லது பாடசாலைக்கு சென்றிருப்பான். இவன் நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்காரரின் மகன். என்னைவிட ஒரு வயது குறைவு. "நான் சேர் சேர்ட்டதான் கணக்கு டியூசனுக்கு போறன். மனுஷன் புளிபோட்டு விளக்கி கணக்கு சொல்லித்தருவார்" என்றான் ராஜா. இவன் என்னடா சேர்.. சேர்.. என்று ரெண்டு தடவை சொல்லுறான். அவர் சேர்களுக்கெல்லாம் சேர் என்று சொல்லுறானோ. அந்த வாத்தியார் பெரிய ஆளா இருப்பார் போல இருக்கே! என்று எண்ணினேன். "அவரை ஏன் சேர் சேர் என்று கூப்பிடுறாங்க" என்றேன். என்னை பார்த்து சிரித்த ராஜா "இல்ல.. அவருடைய பேரு சேகர்.. சேகர் சேர் என்றுதான் சொன்னேன்" என்றான். பின்பு இரண்டு மூன்று நாட்களாக அவனுடன் நடந்த சம்பாஷணைகள் மூலம் சேகர் வாத்தியாரின் அருமை பெருமைகளையும் அவருடைய விசித்திரமான நடைமுறைகள் பற்றியும் அறிந்து கொண்டேன்.

ஆண்களுக்கு வேறாக பெண்களுக்கு வேறாகத்தான் கிளாஸ் எடுப்பாராம். என்ட கஷ்டம் புரிஞ்ச நல்ல மனுஷன்! இந்த பெண்பிள்ளைகளை எதிர்கொள்ளவேண்டிய கஷ்டம் இல்லை. என்னாதான் திட்டு விழுந்தாலும் எந்த பெண்பிள்ளையும் என்னை பார்த்து சிரிக்கப்போவதில்லை. பள்ளிக்கூடத்திலே டாப்பு புத்தகத்திலே அட்டெண்டன்ஸ் பதிவது போல் அவரது டியுசனிலும் பதிவார்களாம். சொல்லாமல் கொள்ளாமல் லீவ் எடுத்து விட்டால், கிளாசில் இருந்து துரத்தி விடுவாராம். ஆனால் அடிக்கவே மாட்டாராம். அவர் இன்னும் பல விஷங்களுக்காக கிளாசில் இருந்து துரத்துவதை தண்டனையாக அறிவித்திருந்தார்.

 1. அவர் டியூசன் கிளாசை தொடங்கியபின் வரும் மாணவர்கள்
 2. கிளாஸ் நேரத்தில் கதைப்போர்
 3. சொல்லாமல் கொள்ளாமல் கிளாஸ் கட் அடிக்கும் பயல்கள்
 4. ஜெயா சேரிடம் விஞ்ஞான கிளாசுக்கு போற பயபிள்ளைகள்
ஜெயா சேருக்கும் சேகர் சேருக்கும் இடையே ஜென்ம பகை போன்று ஏதோவொரு உள்குத்து பலகாலமாக இருந்து வந்தது. தன்னிடம் கணக்கு டியூசனுக்கு வரும் மாணவன் விஞ்ஞானத்திற்கு ஜெயா சேரிடம் போக கூடாது என்பதில் கட்டாய சட்டமாக இருந்தது. யாராவது ஜெயா சேரிடம் கள்ளமாக டியூசன் போய், அதை எவனாவது சேகர் சேரிடம் போட்டு கொடுத்து விட்டால், அவ்வளவுதான் மனுஷன் கருணை பார்க்காமல் துரத்தி விடுவார். இருவருக்குமான பகைக்கான காரணத்தினை மாணவர்கள் கண்டறிய முடியாமல் தோற்றனர். ஆனால் பலவிதமான வதந்திகள் பரவியிருந்தன.


இப்படி கதை கதையாக சொல்லப்பட்ட சேகர் சேரிடம் ஒரு நல்ல நாளில் ராஜா சேர்த்து விட்டான். என்னை கிளாசில் விட்டு விட்டு போகும் போதே ராஜா நக்கலாக சிரித்து கொண்டே வெளியேறினான். ஏதோ பலியாடு பலிபீடத்துக்கு நடந்து செல்வது போல உள்ளே நடந்தேன். அவருடைய பாடம் நடத்தும் முறை என்னை மிகவும் கவர்ந்தது. ஒவ்வொரு படத்தினை ஆரம்பிக்கும்போதும் மிக அழகாக அடிப்படையிலிருந்து விளங்கப்படுத்தினார். அவரிடம் படிக்க படிக்க, எனக்கு கணித பாடத்தின் மேலிருந்த ஆர்வம் அதிகரித்தது. ஒவ்வொரு நாளும் ஏதோவொரு காரணத்திற்காக குறைந்தது ஒரு மாணவன் வெளியே துரத்தப்பட்டான். ஆனால் சில மாணவர்கள் கிளாஸ் முடியும்வரை பாவமாக முகத்தினை வைத்து கொண்டு அறை வாசலிலே நிற்பார்கள். கல்லுக்குள் எப்போதாவது ஈரம் தோன்றுவது போல, சில நேரங்களில் சில மாணவர்கள் மறுபடியும் டியூசனுக்கு வர அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் செய்த பிழையை பொறுத்து, சேகர் சேர் மன்னித்து உள்ளெடுக்கும் நாட்களின் எண்ணிக்கை மாறுபடும். ஜெயா சேரிடம் டியூசன் போய் பிடிபட்டால் மரண தண்டனைதான்.. தலை கீழாக நின்றால் கூட மறுபடியும் சேர்த்துக்கொள்ளமாட்டார்.

இப்படியாக பல தடவைகள் வெளியே துரத்தப்பட்டு மீண்டும் உள்ளே வந்த சாதனையின் சொந்தக்காரன் "சிவநேசன்". அவன் எத்தனை முறை துரத்தப்பட்டாலும் தயங்காமல் பல நாட்கள் கிளாசின் வெளியே நின்று மறுபடியும் மன்னிப்பு ஏற்கப்பட்டு உள்ளே வந்துவிடுவான். மீண்டும் உள்ளே வரும் அவன் ஏதோ அவார்ட் வாங்க போறவன் மாதிரி பெருமிதத்தோடு உள்ளே வருவதை பார்த்து மனதிற்குள் சிரித்துத்கொள்வோம். நான் அவரது நடைமுறைகளுக்கு இசைந்து நடந்ததால் ஒருபோதும் வெளியே நின்று மன்னிப்பு கோர வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படவில்லை. ஆனால் சிவநேசன் செய்த
ஒரு வேலையால் நான் வெளியே நிற்க வேண்டிய அவமான நிலை ஏற்பட்டது. வழமை போலவே ஒரு பெரிய பிழையை செய்த சிவநேசன் கிட்டத்தட்ட அழுது மன்னிப்புக்கேட்டு உள்ளே வந்திருந்தான். அவனை பார்த்து எல்லோருமே நக்கலாக சிரித்துகொண்டோம். கிளாஸ் முடிந்த பின்னரும் அது தொடர்ந்தது. அவனது மன்னிப்பு கேட்கும் திறமை பற்றி நான் மற்ற மாணவர்களுக்கு விளக்கி எல்லோரும் சத்தமாக சிரித்தோம். என்னை பார்த்து முறைத்தவண்ணம் சிவநேசன் வேகமாக வேகமாக நடந்தான்.

ஒயல் பரீட்சை தொடங்க இன்னும் இரு மாதங்கள் இருந்தன. சேகர் சேரின் கிளாஸ் தொடங்க முன்னர், டியூசனுக்கு வெளியே காத்திருந்தோம். சேகர் சேரிடம் இருந்து அழைப்பு எனக்கு வந்தது. கொஞ்சம் நடுக்கத்துடனே அவரது அறையை நோக்கி சென்றேன். முன்பு கோழி பண்ணை நடத்தப்பட்ட இடத்தினைதான் இப்போது டியூசன் சென்டராக மாற்றி இருந்தார்கள். கொஞ்சம் அந்த அறையை அழகாக மாற்ற முயற்சித்து பாதியில் கைவிடப்பட்டிருந்தது போலிருந்தது. அந்த அறையின் சூழ்நிலையால், அவரை நெருங்க நெருங்க இதய துடிப்பு அதிகரிப்பதை உணர முடிந்தது. அவருடன் அவரது அசிஸ்டென்ட் கணேஷ் நின்று கொண்டிருந்தார். அவர் "சேர்! இந்தா வராரு காதல் மன்னன்" என்று சிரித்தார். சேகர் சேரின் முகத்தில் நக்கல் கலந்த புன்னகை இருந்தது. கையில் ஒரு பேப்பரை வைத்து . "தம்பி! இந்த கடிதத்தினை நீங்க போன கிளாசுல இருந்த இடத்துக்கு பக்கத்திலே கண்டேடுத்தோம். என்ன தம்பி! இந்த வயசிலேயே காதலிக்கிரீங்களோ?" என்றார். முகம் கடுமையாக மாறியது. இது என்னடாது புது வம்பா போச்சுன்னு எண்ணினேன். கடுமையாக வியர்க்க ஆரம்பித்தது. "இல்லை சேர்.. நான் இதை எழுதவே இல்லை" என்று சொல்ல முயற்சித்தேன். ஆனால் அந்த வார்த்தைகள் வெளியே வந்தததாக தெரியவில்லை. கடுமையான அழுகை வந்ததது. "நான் பாடம் நடத்தும் போது, பின்னால் இருந்து கொண்டு காதல் ரசம் சொட்ட கடிதம் எழுதுறவன் எல்லாம் இங்கே வரவேண்டாம். இனி உன்னை நான் இங்கே காணக்கூடாது" என்றார். என் கப்பல் கவுந்து விட்டது போல் சோகமாக வெளியே வந்த என்னை, பேச்சு சுவாரசியத்தில் இருந்த மற்ற மாணவர்கள் கவனிக்க தவறிவிட்டனர். எனக்கு ஏனோ வகுப்பறையின் வெளியே நின்று மன்னிப்பு கேட்க தோன்றவில்லை. செய்யாத குற்றத்திற்காக நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? சத்தம் போடாமல் அங்கிருந்து வெளியேறினேன். சிவநேசன் மட்டும் என்னை உன்னிப்பாக பார்த்து புன்னகைத்து கொண்டிருந்தான். நரிப்பயல்! இவன்தான் என்னை மாட்டி விட்டிருப்பான். நன்றாக பழிவாங்கிவிட்டான். இவன்தான் எப்போ பார்த்தாலும் பெண்பிள்ளைகளுக்கு லெட்டர் எழுதிட்டிருப்பான். எதாவது ஒன்றை என் பெயரில் மாற்றி விட்டிருப்பான்.

வெளியே வந்த நான் சேகர் சேரின் டியூசன் கார்டையும் கிழித்து போட்டேன். நான் என் தரப்பு நியாயங்களை விளங்கப்படுத்தவோ, மன்னிப்பு கேட்கவோ முயற்சிக்காததற்கு இன்னும் ஒரு முக்கிய காரணமிருந்தது. ஒயல் பரீட்சைக்கு இன்னும் இரு மாதங்களே இருந்தன. கிட்டத்தட்ட எல்லா பாடங்களும் முடிக்கப்பட்டு விட்டன. சேகர் சேர் மீட்டல் பயிற்சிகளே தந்து கொண்டிருந்தார். இதனால் எனக்கு பெரிய இழப்பு இல்லை. ஆனால் எனக்கு சேகர் சேருக்கு கட்ட வேண்டிய இரு மாத கட்டணங்களை நான் சேமித்து விடுவேன். கிட்டத்தட்ட நூறு ரூபாய் சேமிக்கலாம். அதை வைத்து அப்போது புதிதாக கடைக்கு வந்திருந்த லயன் காமிக்ஸ், காமிக்ஸ் க்ளாசிக்ஸ்(ஸ்பைடர் கதை) என்பனவற்றை வாங்க வேண்டிய உடனடி அத்யாவசிய தேவையுமிருந்தது. பரீட்சை நெருங்கும்வேளையில் போது அப்பாவிடம் காமிக்ஸ் வாங்க காசு தாங்க என்று கேட்க பயமாக இருந்தது. அதனால் என்னுடைய முடிவினை எண்ணி மனதினில் மெச்சிகொண்டேன்.

7 comments:

 1. சாரே நன்னா இருக்கு ... கொபிக்கவேண்டாம் சும்மா யோசிச்சு பார்த்தேன் ... முடிக்கும் போது ...

  நான் வெளியேறும் போது அறையில் வெளியே காத்திருந்த பெண் என்னையே பார்த்துகொண்டிருந்தாள்.... along the lines ல முடிக்க போறீங்களோ என்று யோசிச்சன்!!!

  ReplyDelete
 2. என்ன செய்றது! அனுபவபட்டாத்தானே அப்படி எழுத முடியும் :) (பெருமூச்சு) .. இந்த விஷயத்தில் உங்களுக்குத்தானே நிறைய அனுபவம் இருக்கு.. சும்மா எழுதிதள்ளுங்க.. உங்கள் கருத்துக்கு நன்றி :)

  ReplyDelete
 3. Dai,


  Enkitta Sollaveyilla pola irukku.

  After a long time i read your blog.

  Kathai ellam ellutharapola irrukku. Mmm.. good to read. Best of luck. Sirukathai Kanavu Nanavaka Vaalththukkal.

  Anbudan,

  Anna

  ReplyDelete
 4. //கிட்டத்தட்ட நூறு ரூபாய் சேமிக்கலாம். அதை வைத்து அப்போது புதிதாக கடைக்கு வந்திருந்த லயன் காமிக்ஸ், காமிக்ஸ் க்ளாசிக்ஸ்(ஸ்பைடர் கதை) என்பனவற்றை வாங்க வேண்டிய உடனடி அத்யாவசிய தேவையுமிருந்தது. பரீட்சை நெருங்கும்வேளையில் போது அப்பாவிடம் காமிக்ஸ் வாங்க காசு தாங்க என்று கேட்க பயமாக இருந்தது. அதனால் என்னுடைய முடிவினை எண்ணி மனதினில் மெச்சிகொண்டேன். //

  ReplyDelete
 5. அண்ணா,
  கருத்துக்கு நன்றி.. இதில 70% நிஜம். மிச்சது இட்டுக்கட்டினது.

  ReplyDelete
 6. 30% poi endru solli escape ah? ok ok comics books vaanka thanae, so no problem.

  ReplyDelete
 7. Hey! you know this "XIII TV Series"
  http://www.imdb.com/title/tt1713938/

  ReplyDelete