Saturday, August 16, 2014

அது!

"நீ வந்திட்டியா.. நான் சொன்னதை வாங்கி வந்திருக்கியா" என்று அதட்டலாக கேட்டான் மறுமுனையில் பேசிய ஆசாமி.

"ம்.. ம்.." என்றேன்.

"இந்த விஷயம் ரகசியமாக இருக்கட்டும்டா" அவனது குரல் கொஞ்சம் கெஞ்சலாக மாறியது.

"சரிடா.. அந்த ஆண்டவனுக்கே தெரியாம பாத்துக்கிறேன்" அப்படியே போனை கட் பண்ணினேன். ரகசிய விசயங்களை போனில் நிறைய கதைக்கக்கூடாது.

எனக்கு போனில் வந்த ரகசிய உத்தரவின்படி பொருளை சின்னாவின் கடையில் ஒப்படைக்க வேண்டும். பொருளின் ஒரு பகுதி சின்னாவுக்கு, மற்றது எனக்கு உத்தரவு போட்டவனுக்கு. மந்திரிக்கப்பட்டவன் போல பொருளை நியூஸ் பேப்பரில் சுற்றினேன். ஏதோவொரு டீ-ஷர்ட்டை மாட்டிக்கொண்டு சைக்கிளை மிதித்தேன். அம்மா "கொழும்பிலேயிருந்து வந்ததும் வாராததுமா எங்கடா போறே. அப்பா உன்னை எங்கயோ போகசொன்னாரு... ..." என்று அம்மாவின் அதட்டல் எனது ஒரு காதில் விழுந்து, மறுகாதால் போனது. சைக்கிள் ஒழுங்கைகளின் வளைவுகளில் வேகமாக வளைந்தது. பொருளை பத்திரமாக நெஞ்சோடு அணைத்துக்கொண்டிருந்தேன்.

ஊர் சந்தியின் ஒரு புறத்தில் சின்னாவின் கடை ஜம்மென்றிருந்தது. எப்போதும் மூன்று நாலு பொடிப்பயல்கள் அவன் கடையில் மலேசிய புளியம்பழ டொபி வாங்குவார்கள். அவன் கடையில் எப்போதும் வெளிநாட்டு புளிப்பு டொபி பிரபலம். அவனுடைய அப்பாவின் கடையை அடுத்த தலைமுறையாக நடத்துகிறான். அவன் அப்பா காலத்தில் "சந்திக்கடை" என்று பிரபலம் பெற்றிருந்தது. ஆனால் சின்னாவின் காலத்தில் "டொபிக்கடை" என்று பெயர் மாற்றம் பெற்றது. ஆனாலும் அவனால் எல்லா சின்ன பிள்ளைகளுக்கும் விற்க முடியாது. அவனது கடையில் ஒரு நோட்டு புத்தகம் இருக்கும் அதில் "ப்ளக் லிஸ்ட்" செய்யப்பட்ட சின்ன பிள்ளைகளின் பெயர்கள் இருக்கும். வாங்கவரும் குழந்தைகளின் பெயரை கேட்டு சரிபார்த்த பின்னரே டொபி குடுப்பான். மீறி "ப்ளக் லிஸ்ட்" செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு டொபி விற்றால் கடைக்கு கல்லெறி விழும். அவனது கடைக்கு பக்கத்திலிருந்த "பல்லு புடுங்கிற" டாக்டர் சாமி, சின்னா மூலமாக நல்லா சம்பாதிக்கிறார் என்று ஊருக்குள் பேச்சு அடிபட்டது.

நான் சின்னா கடைக்கு போய் சேர்ந்தபோது கடையில் கொஞ்சம் கூட்டமாகத்தான் இருந்தது. சின்னா கவுன்ட்டரில் சோம்பலாக இருந்தான். என்னை கண்டவுடன் முகம் மலர்ந்து "எப்படா வந்தே? நல்லாயிருக்கியா.. மூஞ்சியில கொஞ்சம் சதை போட்ட மாதிரி இருக்கே" என்று நலம் விசாரித்தான் சின்னா. அவன் கண்கள் எனது கையில் இருந்த பொருளை எடை போட்டன. "என்னது கொழும்பிலேருந்து திராட்சை அல்வா வாங்கி வந்திருக்கிறாயா" என்றான். "ம்.. ம்.." என்றேன். பார்சலை பவ்யமாக கடையின் உள்ளே வைத்துவிட்டு வந்தான். "திருமால் இன்னும் ஐந்து நிமிஷத்தில் வருவான். ஏழு மணியாகுது கடையை பூட்டிட்டு வாரேன். கடற்கரைக்கு போவோம்". இப்போதாவது கதையின் தொடக்கத்தில் வந்த அநாமதேய குரல் ஆசாமி யாரென்று சொல்லியாகணும். திருமால் என்கிற எங்களது நண்பன்தான் எனக்கு ரகசிய உத்தரவு தந்த குரலுக்கு சொந்தக்காரன். நாலு நிமிஷத்திலேயே வந்து விட்டான். ஒல்லியான வெள்ளை ஆசாமி. ஊரின் தேசிய உடையான சாரம் அணிந்திருந்தான். சின்னா கடையை மூடினான். நான் கொண்டுவந்த பார்சல் மேலும் ஒரு ப்ரௌன் பேப்பரில் சுற்றப்பட்டது. யாருக்கும் உள்ளே இருப்பது என்னது என்று சந்தேகம் வராதாம் பிஸ்கட் டின் என்று நினைப்பார்கள் என்று சின்னா சொன்னான். கடற்கரைக்கு சைக்கிளை மிதித்தோம். மாலை மணி ஆறே முக்கால் சூரியன் மறைந்திருந்தாலும் மந்தமான வெளிச்சம் இருந்தது. கடற்கரையில் இருந்த ஒருசிலரும் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள். சுற்றி வர யாருமே இல்லாத இடமாக தேடினோம்.வழியில் சங்கரன் மாமாவை கண்டோம். "போச்சுடா இந்த மனுஷன் என்னை கண்டா வீட்ட போட்டுக்குடுத்திடுவார்டா.. நான் செத்தேன்" என்று குளற ஆரம்பித்தான் திருமால். உண்மைதான் சங்கரன் மாமா "போட்டுகுடுக்கிறதுல" பிஎச்டி செய்த ஆளு. அவரை கண்டாலே பொடியள் ஓடி ஒளிவான்கள். உதாரணத்துக்கு "உங்கட மகனை மூணாம் தெருவுல ஒரு பெண்ணோட பார்த்தேன்" என்று ஒரு கம்ப்ளைன்டை சம்பந்தப்பட்ட அப்பாவியின் அப்பாவிடம் பதிவு செய்வார். அவர் எங்களை கண்டதுமே எங்களை நோக்கி வந்தார். "என்னடா தம்பிகளா யாரடா நீங்க" என்று டோர்ச் லைட்டை முகத்தில் அடித்தார். சின்னாதான் பேசத்தொடங்கினான். "இல்ல மாமா.. எண்ணெய்க்கடை சதாசிவத்தோட பேரன் கொழும்பிலேயிருந்து வந்திருக்கான்.. அவனோட சும்மா காத்து வாங்க கடற்கரைக்கு கூட்டி வந்தோம்" என்று படபடத்தான். சங்கரன் மாமாவின் சந்தேகம் குறைந்த மாதிரி தெரியவில்லை. "டேய் என்னவோ சொல்றீங்க.. ம்.." என்று எனது முகத்தில் டோர்ச் அடித்தார். என்னுடைய தலைமுடிவெட்டு கொழும்பு ஸ்டைலில் இருந்ததால் சந்தேகம் வரலை போலும், எங்களை விட்டு விட்டார்.

ஒரு ஒதுக்குப்புறமாக இடத்தை கண்டுபிடித்தோம். கடலுக்கு வெகு அருகாமையிலிருந்த ஒரு பெரிய பாறைக்கு பின்னாலுள்ள சின்னப்பாறைதான் அந்த இடம். "இனி எந்த கொம்பனாலும் எங்களை கண்டுபிடிக்க முடியாது" என்று சின்னா வெற்றிச்சிரிப்பு சிரித்தான். திருமால் பார்சலை மணந்து மோப்பம் பிடித்தான். "வெளி வாசமே மூக்கை துளைக்குதடா" என்று பார்சலை கிழித்துபார்க்க ஆரம்பித்தான். அப்போது பார்த்து சின்னா "ஐயோ காலில் ஏதோ கடிக்குதடா.. பாம்புதாண்டா" என்று அலறினான். இருட்டில் எதுவுமே தெரியலை. "கடவுளே எங்களை தடுக்க நினைக்கிறார் போல" என்று அரற்றினான் திருமால். "இங்க நண்டுதான் இருக்கும் பாம்பாக இருக்காது" என்றேன் கொஞ்சம் தைரியமாக. சின்னாவின் காலுக்கிடையில் கைவைத்து பார்த்தபோது ஒரு சின்ன நண்டு சிக்கியது. அதை எடுத்துக்காட்டி சிரித்தேன். சின்னாவுக்கு அப்போதுதான் நிம்மதி.

சின்னா "டேய் வேணாண்டா பார்சலை அப்படியே கடலில் போட்டுவிடு கடவுள் கொடுத்த முதல் எச்சரிக்கை அது" என்றான். "டேய் இதுக்கு போய் பொம்பிளை மாதிரி பயப்படுற. கடவுள் உன்னை திருத்த சின்ன நண்டை அனுப்பினாரா" என்று சிரித்தான். அந்த வார்த்தைகள் சின்னாவுக்கு இரசாயன மாற்றத்தை விளைவித்ததால் அடுத்து கதைக்க இருந்த வசனத்தை இடைநிறுத்தினான். திருமால் இடைநிறுத்தப்பட்டிருந்த பார்சல் கிழிக்கும் வேலையை மறுபடியும் தொடர்ந்தான்.

"தாத்தா இருக்கும்வரைக்கும் இது எப்படியாவது எனக்கு கிடைக்கும்.. அவருக்கு தெரியாம கொஞ்சம் கொஞ்சமா எடுத்து பதுக்கி வச்சிடுவன்.. அவர் மேலே போனபிறகு எனக்கு ஒரே திண்டாட்டம்தான்.. இப்ப இதுக்கு தடை விதிச்சி போட்டாங்கள்.. நீ எப்படித்தான் இதை கொழும்பில வாங்கிறியோ தெரியலை.. ஆனா இப்ப யாழ்ப்பாணத்துல எங்க தேடினாலும் இதை வாங்கவே முடியாது" என்று திருமால் நன்றியுரையை தொடங்கினான். பாதுகாப்புக்காக இரண்டு மூன்று பொலித்தீன் தாள்களால் சுற்றப்பட்டிருந்த தகர டின் வெளியே வந்தது.

"இது என்னடா புது ப்ராண்டா இருக்குது.. அது சரி நமக்கு ப்ராண்டா முக்கியம் உள்ளே இருக்கிற சரக்குத்தான் முக்கியம்"

டின்னை திறந்து ஒரு சொட்டு மூக்குப்பொடியை எடுத்து மூக்கால் உறிஞ்சினார்கள். அடுத்த ஐந்து நிமிசத்துக்கு, அவர்களின் தும்மல் ஒலியை கடலின் அலைகளின் ஓசை விழுங்குவதை பார்த்துக்கொண்டிருந்தேன்.இதை வாசித்துவிட்டு கொழும்பில் மூக்குப்பொடி இருக்கும் கடையை தெரியுமா எண்டு யாரும் கேட்டிடாதீங்க.. எனக்கு சத்தியமா தெரியாது. இலங்கையில இப்ப "அது"க்கு தடையாம்.

No comments:

Post a Comment