Sunday, September 11, 2011

மர்ம மனிதன்

"அவனுக்கு நகங்கள் கூர்மையாக இருக்குமாம். கூர்மையான கத்தியால் கிழித்து விட்டு ஓடி விடுவானாம். சப்பாத்துகளில் உள்ள ஸ்ப்ரிங் மூலமாக மரங்களில் தாவி தப்பித்து விடுவானாம். மாயாவி போல ஒருவர் கையிலும் அகப்படாமல் தப்பித்துவிடுவானாம்" என்றாள் ராஜி சித்தி. "இப்போது எல்லா கதவையும் ஆறு மணிக்கே சாத்தி விடுகிறோம்." என்று சொல்லிக்கொண்டே இருக்கும்போதே மிச்சம் இருந்த ஒரு யன்னலையும் அறிவு சித்தி மூடி விட்டாள். அப்போது நிலா உள்ளே "அண்ணா!" என்று கத்திக்கொண்டே உள்ளே ஓடி வந்தாள். "எனக்கும் கிரீஸ் பூதத்தினை பற்றி நிறைய கதை தெரியும்" என்றாள். நான்காம் வகுப்பில் படிக்கும் அவள் தனது வயதிற்கு ஏற்றவாறு "பூதம்" என்ற பதத்தினை சேர்த்திருந்தாள். "அக்சயா வீட்டுக்கு முன்னாலுள்ள மரத்தில் பதுங்கி இருந்தானாம். அவள் அப்பா டோர்ச்சை மரத்தில் அடிக்க பாய்ந்து ஓடி விட்டானாம்.. அவள் எனக்கு சித்திர கொப்பியில் அவனது முகத்தினை வரைந்து காட்டினாள். பயங்கரமாக இருந்தது" என்று அவளும் தன்னால் இயன்ற அளவு கிலியை எனக்கு ஏற்படுத்தினாள். "சித்தி! மணி எழரையாகிறது நான் வீட்டுக்கு போய் வருகிறேன். நாளை ஐந்து மணிக்கு எழும்பி கல்யாணத்துக்கு ரெடியாகணும்" என்று வீட்டுக்கு தப்பி விட எத்தனித்தேன். "தம்பி நீ ஏனடா பயப்படுகிறாய்! அவனுக்கு பெண்பிள்ளைகள் மட்டும்தான் இலக்கு. இரு! தண்ணி சூடாகியிருக்கும். தேத்தண்ணீ குடித்து விட்டு போ" என்று அறிவு சித்தி சிரித்தாள். அவர்கள் தந்த டீயை ஒரே மூச்சில் குடித்துவிட்டு சைக்கிளை தயார்படுத்தினேன். "பயந்தான்குளி அண்ணா.. பயந்தான்குளி அண்ணா.." என்று நிலா கைகொட்டி சிரித்தாள். அவளுக்கு விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தால், கிரிஸ் மனிதனை சந்திக்க வேண்டிவருமோ என்று பயந்து திரும்பி பார்க்காமல் வீட்டினை நோக்கி சைக்கிளை செலுத்தினேன்.

கொழும்பில் வசிக்கும் நான் 3-4 மாதங்களுக்கு ஒருமுறை சொந்த ஊருக்கு சென்று வருவது வழக்கம். ஒவ்வொரு முறையும் ஊரில் பெரிய மாற்றங்கள் இருக்காது, சாதாரணமாக அமைதியாக இருக்கும். ஆனால் இந்த முறை பலரது வாய்களில் "கிரீஸ் மனிதன்' என்ற வார்த்தை பரவலாக அடிபட்டது. சிலர் இதெல்லாம் சும்மா வதந்திதான் என்றார்கள். சிலர் நேரில் பார்த்ததாக கூட சத்தியம் செய்தார்கள். எங்கள் ஊரில் கடை வைத்து இருக்கும் ஒரு நண்பர் இப்போதெல்லாம் ஏழு மணிக்கே கடையை பூட்டி விடுவதாக சொன்னார். "ஏழு மணிக்குப்பிறகு வீதியில் ஒருவரும் இல்லாதபோது நான் கடை திறந்து வைத்து எதைத்தான் செய்வது. கிரீஸ் மனிதன்தான் புது கத்தி வாங்க வருவானோ" என்று சிரித்தார். உண்மைதான்! ஊர் இப்போதெல்லாம் ஏழு மணிக்கே அடங்கி விடுகிறது. இரவில் காற்றுக்காக கதவை திறந்து வைக்கும் வழக்கம் இல்லை. கதவு யன்னலை மூடிக்கொண்டு வீட்டுக்குள் பதுங்கி இருந்தனர். இரண்டு மாதங்களுக்கு முன்னர் இருந்த நிலையிலிருந்து இப்போதைய நிலை வெகுவாக
மாறியிருந்தது. எந்த வீட்டுக்கு போனாலும் புதிது புதிதாக மர்மமனிதனின் கதைகளாக சொல்லி எனக்கு கிலியை ஏற்படுத்தினர்.

இப்படித்தான் ஒருநாள் சித்தி வீட்டில் இரவு சாப்பிட்டு விட்டு வீடு திரும்பும்போது மணி பத்தரையாகி விட்டது. நெஞ்சு திக்.. திக்.. என்று அடித்து கொண்டிருந்தது. வழமையாக அந்த தெருவில் நடந்து செல்லும்போது நாய்களின் குரைப்புச்சத்தம் கடுமையாக இருக்கும். ஆனால் அன்று மிகவும் அமைதியாக இருந்தது மனதை என்னவோ செய்தது. வழமையாக பக்கத்து வீடுகளில் எரியும் பல்புகள் கூட அன்று எரியவில்லை. ஒருவித நடுக்கத்துடன் வீட்டினை நோக்கி நடந்தேன். வீட்டுக்கு அருகாமையில் உள்ள ஒரு நாயின் குரைப்பு சத்தம் மட்டும்தான் கேட்டபோதுதான் எனக்கு உயிரே வந்தது. வழமையாக நாயின் குரைப்பு சத்தம் ஏற்படுத்தும் பயம் இன்று இல்லை, மாறாக அந்த குரைப்பு சத்தம் காதில் தேனாக பாய்ந்தது. கையில் இருந்த சில கல்யாண பலகாரங்களை அந்த நாய்க்கு சமர்ப்பித்தேன். வாலை ஆட்டிக்கொண்டு அது சாப்பிட தொடங்க நிம்மதியாக
வீட்டினுள் சென்றேன்.

மறுநாள் பகல் பொழுதில் சித்தி வீட்டுக்கு சென்றிருந்தேன். "இன்று உதயசூரியன் கழகத்தின் வருடாந்த விளையாட்டு போட்டி. இப்போது புருஷன் பெண்சாதி சைக்கிலோட்டம் நடக்கப்போகுது.. வா வேடிக்கை பார்ப்போம்" என்று தங்கச்சி அழைத்தாள். புருஷனும் பெண்சாதியும் மாறி மாறி சைக்கிளில் ஏறி ஓடி வரும் அந்த அழகான போட்டியை காண வீதியில் நின்றோம். ஒரு பெண் மிக வேகமாக புருஷனையும் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தார். அவர்கள் போய் ஐந்து நிமிடங்களுக்கு பின்னரே இரண்டாம் தம்பதியினர் மூச்சு வாங்கியவண்ணம் பின்னால் வந்தனர். "முன்னுக்கு போற தம்பதியினர்தான் போன முறையும் முதலாவதாக வந்தாங்க. புருஷன் ரொம்ப ஒல்லி அவரை வைத்து சைக்கிள் ஓடுவது அந்த பொண்ணுக்கு சிம்பிளான வேலை" என்று சிரித்தாள் தங்கச்சி. "வினோத உடைபோட்டியாளர்கள் இவ்வழியாக செல்வார்கள் பார்த்துவிட்டு செல்வோம்" என்றாள். கொஞ்ச நேரம் பொறுத்ததுதான் மிச்சம், வினோத உடை போட்டி அவ்வழியாக வருவதாக இல்லை. "நான் கடைக்கு போக வேணும். நீ பார்த்துவிட்டு பிறகு சொல்லு" என்று சொல்லி விட்டு மற்ற வேலைகளை பார்க்க சென்றேன்.

ஒரு மணித்தியாலத்துக்கு பிறகு சித்தி வீட்டுக்கு வந்தேன். ஓடி வந்த தங்கச்சி "அண்ணா! இருபது நிமிஷத்துக்கு முன்னர்தான் வினோத உடைபோட்டி இவ்வழியாக சென்றது" என்றாள். நானும் ஆர்வமாக "என்ன.. என்னவெல்லாம் போச்சு" என்றேன். "நெட்டை மனிதர்கள் இருவர், ஒரு குடும்பத்தினை போரில் தொலைத்த அகதிப்பெண், ஒரு குரளி வித்தைக்காரன், ம்.. ம்.. மற்றும் உனக்கு ரொம்ப பிடித்த க்ரிஸ் மனிதன்" என்று வேகமாக சொல்லி முடித்தாள். "ம்.. ம்.. க்ரிஸ் மனிதன்.. காலத்திற்கு ஏற்ற வேஷம்தான்.. இப்ப முடிஞ்சிருக்குமோ?" என்று கவலையாக விசாரித்தேன். "சைக்கிளில் வேகமாக போனால், அம்மன் கோயில் வெளி வீதியில் வைத்து பார்க்கலாம்" என்றாள். சைக்கிளை வேகமாக மிதித்து அம்மன் கோயில் வீதியை சென்றடைந்தேன். இன்னும் முடிந்து விடவில்லை. பல மக்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு அந்நிகழ்வை கண்டு
களித்தனர். அதில் பெரும்பாலானோர் சிறுவர்கள்தான். ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் தங்களது வேஷத்துக்கான நடிப்பினை வழங்க ஐந்து
நிமிடங்கள் ஒதுக்கினார்கள். நெட்டை மனிதர்கள் இருவர் காலில் உயரமான கம்புகள் மூலம் லாவகமாக நடந்து வந்தனர். அவர்கள் நகரும் இடங்களில் இருந்து மக்கள் விலகி தங்களது கால்கள் மிதிபடுவதை தவிர்த்தனர். போட்டி அறிவிப்பாளராக இருந்த எனது நண்பன் செல்வன் அந்த நெட்டை மனிதர்களின் கையில் மைக்கினை கொடுக்க கடும் பிரயத்தன பட வேண்டியிருந்தது. அவர்கள் மைக்கில் கடுமையாக வித்தியாசமாக சிரித்து மக்களை கவர முயன்றனர். அகதிப்பெண் இறுதி யுத்த காலங்களில் தனது குடும்பம் ஷெல் வீச்சில் பழியாகி விட்டதாகவும் தனது கைக்குழந்தையை தொலைத்து விட்டதாகவும் சொல்லி அழுது அந்த துயர சம்பவங்களை ஞாபகபடுத்தியது மனதை என்னவோ செய்தது. குறளி வித்தைக்காரன் தனது வயிற்றினை முன் பின்னுக்கு தள்ளி ஏதோ செய்து பார்வையாளர்களை கவர முயன்றான். ஒரு சின்ன குழந்தை அவனை
பார்த்து அழுது குளற அதன் தாய் வேகமாக குழந்தையுடன் வெளியேறினாள். எனது கவனம் முழுக்க க்ரிஸ் மனிதன் மேலாகவே இருந்தது. அவனது உடல் முழுக்க க்ரிஸ் பூசப்பட்டு ரொம்ப கருமையாக இருந்தான். அவனும் ஒரு சிறுவனாக இருந்ததினால், அவன் பார்க்க வந்த சிறுவர்களுக்கு பக்கமாக சென்று பயமுறுத்தினான். பெரியவர்கள் கூட அவனை தவிர்த்து விலகினர். இல்லாவிட்டால் க்ரிஸ் அவர்களின் உடைகளில் பட்டுவிடுமே என்று பயந்தனர். அந்த வேஷமிட்டவன் அங்குள்ள இன்னொருவனுடன் இரும்பு கம்பி மூலம் சண்டையிட்டு காட்டினான். அவன் இவனை மாறி மாறி திரத்துவதும் அவன் ஒளித்து ஓடுவதுமாக ஆட்டம் களைகட்டியது.


இது நடந்து இரு கிழமைகளின் பின்னர், நண்பன் செல்வனை கொழும்பில் சந்திதேன். "நேற்று இரவுதான் நான் ஊரில் இருந்து வெளிக்கிட்டேன்.
நேற்று இரவு கூட க்ரிஸ் மனிதன் ஊரில் வேம்படிப்பக்கம் வந்ததாக நண்பர்கள் எனக்கு போன் பண்ணியிருந்தார்கள். மூன்று பேராக வேம்படி சின்னசாமி ஐயா வீட்டுக்கு வந்திருந்தார்கள்" என்றான். "பிறகு என்னதான் செய்தார்கள்" என்றேன். "பிறகு அந்த வேம்படி வீட்டுக்காரர்கள் போன் செய்து பக்கத்து வீட்டு பொடியனுகள் எல்லோரையும் கூப்பிட்டு கத்தி, கம்போடு வந்து அந்த மூன்று பயல்களையும் விரட்டினார்கள். அவர்கள் அங்கிருந்து தப்பி ரெயின்போஸ் கிரவுண்டு வழியாக பாய்ந்து தப்பி விட்டார்களாம்" என்றான்.

க்ரிஸ் மனிதன் இந்த கிராம மக்களின் வாழ்க்கையில ஒரு முடிவூராத பயத்தினை விதைத்திருப்பதை மறுக்க முடியாது.

4 comments:

 1. நல்லாத்தான் எழுதியிருக்கீங்க!

  அப்புறம், நேற்று இரத்தப்படலம் வாங்கிவிட்டேன்...வெள்ளவத்தை பூபாலசிங்கத்தில்! தகவல் தந்தமைக்கு நன்றி நண்பா! :-)

  ReplyDelete
 2. ஊக்கத்திற்கு நன்றி ஜீ.. இனி என்ன.. இரத்த படலம் வாசித்த பின்னர், அதை பற்றியும் பதிவிடுங்கள் :-)..

  ReplyDelete
 3. 9677142992 i have lion comics whoever want pls call me anytime

  ReplyDelete