Monday, May 28, 2018

ராபீயின் பூனை ஒரு வாயாடி பூனை -- காமிக்ஸ்


எங்கள் வீட்டில், சில வருடங்களுக்கு முன்னர் செல்லப்பிராணியாக ஒரு பூனை பதவிவகித்தது. சும்மா தெருவில் சுற்றி திரிந்த அந்த பூனை அக்காவின் மகள் போட்ட சிக்கன் துண்டுகளினால் கவரப்பட்டு எங்கள் வீட்டின் முற்றத்தில் குடிபுகுந்தது. பசி வந்தால் நிமிசத்துக்கு நூறு முறை மியாவ்.. மியாவ்.. கத்தும். அதற்கு பெயர் வைக்கப்படாமலே இரண்டு மாதங்கள் கடந்தன . எப்போதுமே அம்மாவின் காலை சுற்றி வரும். அம்மாதான் எப்போதுமே சாப்பாடு வைப்பா. நாங்கள் சும்மா அதோடு விளையாடுவதோடு சரி. ஆனாலும் எப்போதுமே கத்தி கூப்பாடு போடும் அந்த பூனையை பார்த்தாலே அம்மாவுக்கு எரிச்சல் வரும். சரியான "சொடுகு"  பூனை என்று எப்போதுமே சொல்லுவா. "சொடுகு"  என்பது கொஞ்சம் அமங்கலமாக தோன்றியதால் "சுடோகு" என்று மாற்றி விட்டேன். இதுக்கு ஜப்பான் காரனுக மாதிரி சின்ன கண்ணிருக்கு அதான் இப்படி பேரு என்று ஒரு போலி காரணத்தை உருவாக்கினேன். "சுடோகு" எங்களது பின் கதவு வாசலில் இரண்டு மணித்தியாலங்களுக்கு ஒருமுறை வந்து "மியாவ்" கச்சேரி வைக்கும். சாப்பாடு கொடுக்கும்வரை அந்த இம்சை இசை தொடரும். அதுக்கு மீன் வைக்கவேண்டும். ஆனால் எங்கள் வீட்டில் மாதத்திற்கு சில நாட்களுக்கே மச்சம் சமைப்போம். மரக்கறி நாட்களில் பாலும் சோறும் சாப்பிடும். கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு மீர்.. ரர்.. வ்.. என்று அதிருப்தியுடன் என்னை பார்த்து முறைத்துவிட்டு மதில் மேல் சோகமாக படுத்திருக்கும். அதற்கு பேச தெரிந்திருந்தால் இன்றைக்கு ஏன் மச்சம் சமைக்கவில்லை என்று அதட்டி கேட்டிருக்கலாம். ஏன் வெள்ளிகிழமைகளில் மட்டும் கட்டாயம் மரக்கறி சாப்பிட்டுகிறீர்களோ என்று அலுத்துகொண்டிருக்கலாம். சுடோகு ஒருமுறை மூன்று குட்டிகளை ஈன்றது. அம்மா நிறைய பால்விட்டு சோறு வைத்தா.  அப்பா மச்சம் சமைக்காத நாட்களிலும் கொஞ்சமாக நெத்தலி மீனை சுடோகுவுக்காக வாங்கி வந்தார். குட்டிகளை சில நாட்களுக்கு சுடோகு கண்ணில் காட்டவில்லை. அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு ஓடி விடும். சில நாட்கள் கழித்து தனது குட்டிகளுடன் எங்கள் வீட்டுக்கு விசிட் அடித்தது. எங்கள் வீட்டுக்கு யாராவது விருந்தினர்கள் வந்தால், சுடோகுவும் தனது குட்டிகளுடன் வந்து வாசலில் படுத்திருக்கும். நானும் எனது குடும்பத்துடன் வந்து விட்டேன் பார் என்பது போல பெருமையாக பார்க்கும். சுடோகு சில வேளைகளில் குரல் மாற்றி அதே மியாவ்வை வித்தியாசமாக ராகம் பாடும்போது எனக்கு ஏதோ சொல்ல வருகிறது என்பதை புரிந்துகொள்வேன். ஆனால் ஒன்றுமே புரியாது. ஒரு கடுமையான மழை நாளில் சுடோகு காணாமல் போனது. அதற்கு முதல் நாளில்கூட எனது காலை சுரண்டி ஏதோ சொல்ல முயன்றது. ஹீம்.. அதற்கு பேசும் சக்தி இருந்தால் நல்லா இருந்திருக்கும்.

இப்படி எனக்கு தோன்றியதை போல கடல் கடந்து பல மைல்களுக்கு அப்பால் உள்ள பிரான்ஸ் தேசத்தின் காமிக்ஸ் ஓவியரான "ஜோன் ஸ்பார்"(joann sfar)க்கும் தோன்றியிருக்கும் போல. அவர் உருவாக்கிய "ராப்பீஸ் கற்" கதையில் ஒரு பூனைக்கு பேச்சு வருவது போல கதையை அமைத்திருப்பார்.
Joann Sfar இக்கதையை உருவாக்க காரணமான தனது பூனையுடன்
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் ஒரு கட்டுரை ஒன்றிலே இந்த காமிக்ஸை பற்றி சிலாகித்து எழுதியிருந்தார். வழமை போலவே மாசக்கணக்கில் இந்த கதையை பற்றி கூகிள் செய்தேன். எல்லோரும் கோரசாக நல்லாருக்கு என்றார்கள். படங்கள் நான் அஞ்சாம் வகுப்பில் வரைந்த கார்ட்டூன் ஓவியங்கள் போல சொதப்பலாக இருந்தன. இரண்டு, மூன்று வாரங்களாக ஒவ்வொரு நாளும் விடாது கூகிள் செய்ததில் பைத்தியம் பிடித்தது போலாகியது. இதை நிறுத்துவதற்கு ஒரே ஒரு வழி மட்டுமே அந்நேரத்தில் புலப்பட்டது. ஒன்லைனில் ஆர்டர் செய்தேன். புத்தகம் வந்திறங்கிய பின்னர் பெரிய ஏமாற்றம் ஏதும் இருக்கவில்லை. தரமான அச்சு. கலர் நிறைந்த பக்கங்களாக இருந்தன.


இந்த கதை "ராபீ" எனப்படும் யூத மத தத்துவங்களை போதிக்கும் ஆசிரியரின் வீட்டில் வாழும் பூனையை பற்றியது. கதை 1930ம் ஆண்டுப்பகுதியில் அல்ஜீரியா நாட்டில் நடப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு ராபீ எனப்படுபவர்கள் "Torah" என்கிற மத நூல்களை கற்று பாண்டித்தியம் பெற்றிருப்பர். இப்படிப்பட்ட ஒரு பழமைவாதியான ராபீயின் வீட்டில் வாழும் பூனை ஒரு பேசும் கிளியை விழுங்கி ஏப்பமிடுகிறது. அதன் மூலமாக அதற்கு பேசும் திறனை பெற்றுக்கொள்கிறது
ஆனால் அது வாயை திறந்தாலே பொய்தான் பேசுகிறது. முதலாவது பொய்யாக தான் அந்த கிளியை விழுங்கவில்லை என்று சாதிக்கிறது.
"ராபீ"யுடன் வீண்தர்க்கங்களில் ஈடுபடுகிறது. ராபீயின் பழமைவாத கருத்துக்களை கிண்டல் செய்கிறது. ராபீ "ஒரு தூய யூதனாகிய அந்த பூனையை பொய் பேசக்கூடாது" என்று வாதிடுகிறார். தான் ஒரு யூதன் இல்லை எனவே அந்த கட்டாயம் தனக்கில்லை என வாதிடுகிறது.
தொடர்ச்சியான விவாதங்ககளின் மூலம் தானும் யூத மத நூல்களை கற்று தானும் யூதனாகலாமா என்று கேட்கிறது. அதனுடன் விவாதம் செய்வதில் "ராபீ" தடுமாறுகிறார். இந்த பூனையுடன் தனது மகள் பேசினால் அவளும் பொய் பேசுதல் போன்ற கெட்ட பழக்கங்களை பழகுவாளோ என்று கவலைகொள்ளும் ராபீ பூனையை மகளுடன் பேச தடைவிதிக்கிறார். இங்கு அந்த பூனை ராபீயின் மகளாகிய ஸ்லுபியாவை தனது ரகசிய காதலியாகவே கருதுகிறது. அவளை தன்னுடைய மனதின் இளவரசியாகவே எண்ணி வருகிறது. தானும் ஒரு யூதனாகி அவளை திருமணம் செய்வது பற்றியெல்லாம் விவாதிக்கிறது. இதனை ஸ்லுபியா எளிதாகவே எடுத்துக்கொள்கிறாள். இப்படி போகும் கதை பேசும் சக்தி கொண்ட கிழச்சிங்கம் வேறு வருகிறது. அதுவும் பூனையும் பேசிக்கொள்ளும் காட்சிகளில் நகைச்சுவை இழையோடுகிறது. இதற்கிடையில் ஸ்லுபியாவுக்கு இன்னொரு இளைய ராபீயுடன் காதல் வருகிறது. அவளும் மண முடித்து பட்டணத்துக்கு சென்றுவிட ராபீயும் பூனையும் கவலையடைகிறார்கள் (எஸ்ரா). இருவரும் ஸ்லுபியாவை காண பட்டணம் செல்லுகிறார்கள். அங்கு அவர்களுக்கு ஏற்படும் வினோத அனுபவங்கள் அவர்களுக்கு வாழ்க்கையை புரிய வைக்கிறது


இங்கு நகைச்சுவை தெறிக்கும் வினோத கதையே புதுமையாக இருக்கிறது. கதாசிரியர் பூனைகளில் இயல்பை கதையில் அழகாக கொண்டு வந்திருக்கிறார். பூனைகள் எப்போதும் வளர்ப்பவர்களை தங்களது அடிமைகள் என்று எண்ணும் இயல்புள்ளன. இதனை கதை முழுவதும் காணலாம். பூனையின் இயல்பிலேயே கதை பயணிக்கிறது என்பதை கதையை படித்துமுடித்தபின்னர் உணரமுடிகிறது. இப்புத்தகத்தில் ஓவியங்கள் கன்னா பின்னாவென்று இருப்பது போல தோன்றினாலும். இப்படியான வினோதமான கதையமைப்புக்கு வேறு எதுவும் பொருந்தியிராது என்றே தோன்றுகிறது. மின்சாரமில்லா 1930களில் நடக்கும் கதை அநேக நேரங்களில் விளக்கு வெளிச்சத்திலேயே நடக்கிறது. அதனை அடர்த்தியான வண்ணக்கலவைகள் மூலம் அழகாக காட்டியிருக்கிறார்கள்.
வசனங்கள் 30% கதையை சொன்னால் 70% கதையை ஓவியங்களும் அதன் அடர் வண்ணங்களுமே பொறுப்பெற்கின்றன. ஆனாலும் சில இடங்களில் வசனங்களில் நீளம் அதிகம். கதையின் தன்மை அதற்கு காரணமாக இருக்கலாம்.

வித்தியாசமான காமிக்ஸ்களை வாசிக்க விரும்புவோருக்கு ஏற்றது. வாசிப்பவர்களின் மனநிலைக்கேட்ப வினோதமான அனுபவங்களை தரவல்லது என்றே எண்ணுகின்றேன். இப்புத்தகத்தை வாங்கிய நாட்களில் நேரமின்மை காரணமாக நள்ளிரவு நேரங்களிலேயே இப்புத்தகத்தை வாசித்தேன். அதனாலோ என்னவோ கதையின் இருளோடு என்னை ஒன்றி கொள்ள முடிந்திருந்தது.

2 comments:

  1. பொதுவாக பூனைகள் சுயநலமிகள் என்று சொல்வார்கள். நானும் யாழ்ப்பாண வாழ்நாளில் பூனைகள் வளர்த்திருக்கிறேன். வாடகை வீடொன்றில் வீட்டு ஓனர் பெண்மணிக்கு தெரியாமல் பூனை வளர்த்ததும், அதற்காக மேல் மாடியிலேயே கழிவறைப் பெட்டி தயார் செய்ததும், பின்னாளில் அவருக்கே எங்கள் பூனையின் 'சுத்த பத்தமான' எலிபிடிக்கா நற்குணங்கள் பிடித்துப் போனதும் பெருஞ்சரித்திரம். என்னோடு கொழுவல் என்றால் அம்மாவிடமோ அப்பாவிடமோ செல்லங்கொஞ்சிக் கடுப்பேத்துவது அதன் வழக்கம். ஒரு குறித்த வயது வந்ததும் ஊர்சுற்றலில் எங்களை மறந்து போனது. இப்போதும் எங்கள் நினைவுகளில் உள்ளது. அந்த நினைவுகளைக் கிளறி விட்ட பதிவு. அருமை ஐயா!

    ReplyDelete
    Replies
    1. நன்றி பொடியன்.. உங்கள் அனுபவம் இன்னமும் சுவாரஸ்யமாக இருக்கும் போல.. நீங்களும் ஒரு பதிவு போடுங்கோ :)

      Delete