Sunday, August 25, 2013

Yarl Geek Challenge மறுபடியும் வருகிறது... ...

"போன வருஷம் yarl geek challenge சிறப்பாக நடந்து முடிந்து விட்டது. அடுத்தமுறை புதிதாக என்ன செய்வதாக உத்தேசம்" என்று எனக்கு தோன்றிய கேள்வியை கேட்டேன். இந்த கேள்வியை நான் கேட்ட இடம் Yarl IT Hub உறுப்பினர்கள் போட்டிகளை ஏற்பாடு செய்வதற்காக சந்தித்து கொள்ளும் கூட்டம். அன்று அந்த சந்திப்பு நடந்த மேசையில் ஆறு பேர்கள் இருந்தோம். மேசையின் நடுவில் நாங்கள் ஆர்டர் செய்த "காய்ந்து போன" சாண்ட்விச், ஆறிப்போன capuchino coffee, தேசிக்காய் தண்ணி (விலை 120 ரூபா) போன்றவை எங்களுக்காக காத்திருந்தன. எங்கள் சந்திப்புகளில் வழமையாக இவ்வாறான உணவுகளை ஆர்டர் செய்துவிட்டு இரண்டு மணித்தியாலம் கதைப்போம். ஆர்டர் செய்தால் அது வருவதற்காக ஒரு மணித்தியாலம் காத்திருக்க வேண்டியிருக்கும். ஒரு Coffeeயை ஒரு மணித்தியாலமாக மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக குடிப்போம். நிறைய கதைப்போம். நாங்கள் வழமையாக போகும் அந்த உணவகத்தில் ஈயடிக்க ஆள் இருக்காது. ஆகவே நாங்கள் மூன்று மணித்தியாலமாக ஒரு coffeeயை வைத்து உறிஞ்சினாலும், "எழுந்து போங்கடா!" என்று சொல்ல மாட்டார்கள்.

அன்றைய கூட்டத்தில், அடுத்த yarl geek challenge நிகழ்வுக்கான ஆயத்தங்களை பற்றி தீவிரமாக திட்டமிட்டனர். அன்று பேச்சு குறைவாக இருந்தது. அதிக சிந்தனைதான் எல்லோர் முகத்திலும் ஆக்கிரமித்திருந்தது. இம்முறை என்ன புதிதாக செய்யப்போகிறோமோ என்று சீரியஸாக விவாதித்தோம்.

"இப்போது IT பற்றிய அறிவு பாடசாலை மாணவர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. இம்முறை அவர்களையும் இணைத்தால் நிச்சயம் அற்புத விளைவுகள் ஏற்படும். அவர்களுக்கு தொழில்சார் IT பற்றிய நல்ல அறிமுகமாக இருக்கும். பாடசாலை படிப்புகளின் பின்னர் சரியான துறையை தேர்ந்தெடுக்க இது நிச்சயம் உதவும்" என்றார் சயந்தன்.

எல்லோருக்கும் அந்த ஐடியா பிடித்திருந்தது. முதல்கட்டமாக மூன்று பாடசாலைகளை இணைப்பதாக அந்த அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பாடசாலை மாணவர்கள் கிட்டத்தட்ட ஒரு மாத கால அவகாசத்தில் ஒரு Applicationஐ செய்து பிரதான Yarl Geek Challenge போட்டிகளின் கடைசி நாளன்று present செய்யவேண்டுமென்றார்கள். அதன்பின்னர் என்ன மாதிரியான கருப்பொருளில் Applicationகள் செய்யலாம் என்பது பற்றிய விவாதம் தொடங்கியது. வழமைபோல Web Application பற்றி யாரோ பரிந்துரைத்தார்கள். Web Application என்பது IT Competitionகளில் வரும் "உப்புமா சமாச்சாரம்" என்று எதிர்வாதம் வந்ததால் அது வந்த வேகத்திலேயே அடங்கிப்போனது. அது மட்டுமல்லாது மாணவர்களுக்கு இன்னும் கூடுதலான challengingஆன ஒன்றுதான் yarl geek challengeஇற்கு பொருத்தம் என்றார்கள். இதனால் சமீபத்திய trendஆன mobile applicationஇற்கே பலரின் வாக்குகள் இருந்தன.

பாடசாலை மாணவர்களே! தயாராக இருங்கள். உங்களுக்கு புதிய அனுபவம் காத்திருக்கிறது. புதிதாக சில technologyகள் அறிந்துகொள்ளப்போகிறீர்கள். உங்களை போன்றே ITஇல் ஆர்வமான வேறு சில பாடசாலை நண்பர்களை சந்திக்கவிருக்கிறீர்கள். Computer முன்னே 24 மணித்தியாலம் வேலை செய்யும் பொறுமை படைத்த விசித்திர ஜீவன்களை நேரில் காணவிருக்கிறீர்கள். இந்த போட்டிக்கு வழமையான Reality showக்களின் பாரம்பரியபடி yarl geek challenge "junior" என்று பெயரிடப்பட்டது. இதற்காக propectus தயாரிக்கும் பணி முழுவீச்சில் தொடங்கியது. அதன் தமிழ் வடிவத்தினை சமீபத்தில்தான் முடித்திருந்தார்கள். அதில் பாவிக்கப்பட்ட தொழினுட்பவியல் சம்பந்தமான வார்த்தைகள் எனது கவனத்தை கவர்ந்தன. Presentationஐ அளிக்கை என்று தமிழ்படுத்தியிருந்தார்கள்.

போனமுறை இடம்பெற்ற yarl geek challenge போட்டிகளிலிருந்து Algorithm round அவ்வளவாக பொருத்தமாக இருக்கவில்லை என்று பெரும்பான்மையினர் கருதியதால், அதனை மாற்றுவது பற்றி ஒரு email threadஇல் விவாதித்தோம். இருபக்கமும் சாதக பாதகங்களை பற்றி emailகள் சரமாரியாக வந்திருந்தன. விவாதத்தில் முடிவில் இந்த roundக்கு பதிலீடாக User Experience Roundஐ சேர்ப்பதாக முடிவு செய்யப்பட்டது. இந்த roundஇல் பயனாளர்களுக்கு தாங்கள் செய்யப்போகும் application மூலமாக ஏற்படக்கூடிய அனுபவங்களை போட்டியாளர்கள் present செய்யவேண்டும் என்று முடிவு செய்தோம். மற்றைய roundகளிலும் இருந்த பிரச்சனைகள் பற்றி விவாதித்து சின்ன சின்ன மாற்றங்கள் செய்தோம்.

போன வருடம் இடம்பெற்ற yarl geek challenge போட்டியின் பின்னதாக சில எதிர்பார்த்த நல்ல விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது. சில மாணவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் IT industryஇல் உள்ள அனுபவஸ்தர்களுடன் உரையாடி அறிவினை பகிர்ந்துகொள்ளவும் வழிசமைத்திருந்தது. சமீபத்தில் இடம்பெற்ற Hackathon நிகழ்வின்போது மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்று கலக்கியிருந்தது இதற்கு ஒரு நல்ல உதாரணம். இம்முறை போட்டிகளின் பின்னர் இதைவிட பலமடங்கு நன்மைகள் உருவாகும் என்று உறுதியாக நம்புகிறேன். இம்முறை ஒரு மாதத்திற்கு முன்னதாகவே அறிவிப்பு செய்து விட்டோம். ஆயத்தம் செய்வதற்கு நிறைய நேரம் இருக்கிறது. புதிதாக கலந்து கொள்ளவிருக்கும் மாணவர்கள், சென்றமுறை பங்கேற்ற போட்டியாளர்களை பேட்டி காண்பதன் மூலம் சிறப்பாக ஆயத்தங்களை செய்து கொள்ளமுடியும்.


1 comment: