Showing posts with label yit. Show all posts
Showing posts with label yit. Show all posts

Sunday, September 28, 2014

போர்முலா!!

"போர்முலாவை கண்டுபிடிச்சிட்டிங்களா" என்றான் சக்கரை. அவனுக்கு அப்படி ஒரு ஆர்வம்.

"இல்லை.. இன்னும் கொஞ்சம் சரிப்படுத்தணும்.. இண்டைக்கு எப்படியும் சரிவரும் எண்டு நினைக்கிறன்" என்றார் மூலவர். மூலவர் ஒரு டைப்பான விஞ்ஞானி.

வீட்டுக்கு மூத்தவர் என்பதால் மூலவர் என்ற பட்டப்பெயர் நிலைத்து விட்டது. சக்கரை அவருடைய மருமகன்.

"இது எப்படி சாத்தியம். மூணு வருசமா சோழர் காலத்துக்கு போறதுக்கு மெஷின் கண்டுபிடிக்கிறன் பேர்வழி என்று இந்த ரூமிலேயே அடைஞ்சு கிடக்கிறீங்க"

"கொஞ்சம் விஞ்ஞானம்.. கொஞ்சம் சூனியம்.. கொஞ்சம் நம்பிக்கை போதும். இரவுக்கு வா உன்னை சோழ தேசத்துக்கு கொண்டு போறேன்"

"சோழ தேசத்துக்கு போனா திரும்பி வரக்கூடாது. வந்தா A/L எக்ஸாம் எழுதவேணும். ஏதாவது குருகுலத்தில் சேர்ந்து வில்வித்தை கத்துக்கணும். இரவுக்கு வாரேன்"

இரவு பதினோரு மணிக்கு சக்கரை ஆர்வமாக ஆஜர். தனக்கு பிடித்த சேர்ட் அணிந்திருந்தான். அந்த சேர்ட்டுடன் சோழ தேசம் போகணும் என்பது அவன் அவா.

கால இயந்திரம் அறுகோண வடிவில் ஒரு ஆள் போகக்கூடிய அளவுக்கு பெரிசாக இருந்தது. மூலவரின் கால இயந்திரம் மந்திரங்கள் எழுதிய தகடுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

"இந்த முறை வேறு விதமான போர்முலா. அதற்கு உன் ஒத்துழைப்பு மிக அவசியம். சரி.. மனசுக்குள் சோழகாலத்தை பற்றி நினைத்துக்கொள். உனக்கு பிடித்த ராஜராஜ சோழன் காலம். குதிரைகள்.. அம்புகள்.. வில்லுகள்.. உன் மனதுக்கு நீதான் ராஜா. நீ மனப்பூர்வமாக நம்பினால் அடுத்த நிமிஷம் சோழர் காலம்" என்று பிரசங்கம் செய்பவர்களின் குரல் போல மூலவரின் குரல் அதிகாரமாக ஒலித்தது.

சக்கரை மறு கேள்வி கேட்காமல், கால இயந்திரத்தை நோக்கி மந்திரிக்கப்பட்டவன் போல நடந்தான்.

டொட்.. டொட்..

இந்த கதை சும்மா ஒரு உருவக கதைதான். அதை கொஞ்சம் அந்த இடத்தில் விட்டுவிட்டு சொல்ல வந்த விசயத்துக்கு வருகிறேன். "யாழ் ஐடி ஹப்" நடாத்தும் போட்டி நிகழ்வு "யாழ் கீக் சாலேஞ்" வரும் நவம்பர் மாதம் நடக்கவிருக்கிறது. இம்முறை நடக்கவிருப்பது மூன்றாம் வருடம். முதலிரு முறைகளில் நடைபெற்ற போட்டிகள் மிக சிறப்பான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தன. "யாழ் கீக் சாலேஞ்" என்பது ஐடி தொழினுட்பவியாளர்களும், மாணவர்களும் சங்கமிக்கும் ஒரு போட்டி நிகழ்வாக அமைந்திருந்தது. இதன்மூலம் மாணவர்களுக்கு மென்பொருள் தொடர்பான செயன்முறை எவ்வாறு இருக்கும் அதற்காக அவர்கள் செய்யவேண்டிய ஆயத்தங்கள் பற்றிய அறிவினை பெற்றுக்கொள்ளகூடியதாக இருந்தது. இதில் கிடைத்த அனுபவத்தை பயன்படுத்தி மாணவர்கள் வேறு சில IT போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்றிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. வெவ்வேறான பாதைகளில் பயணிக்கும் மாணவர்கள் "யாழ் கீக் சாலேஞ்" என்ற ஒரு நிகழ்வின் மூலமாக சந்தித்துக்கொண்டனர். அறிவை, அனுபவத்தை பகிர்ந்தனர். இதன்மூலமாக சிலருக்கு IT துறையில் நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ள முடிந்தது.

சென்ற முறைகளில் "யாழ் கீக் சாலேஞ்" போட்டிகள் Software Engineering lifecycleஇலை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு Software Engineering lifecycle பற்றிய அறிவுகளை அளவிடும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன. Requirements, Design, User Experience, Business Strategy போன்று Industryயில் கடைப்பிடிக்கும் அதே வரிசையில் போட்டியாளர்கள் ஒவ்வொரு roundஆக மூழ்கி எழுந்தனர். தாங்கள் மனதில் தோன்றிய ஐடியாக்களுக்கு Design diagram உருவாக்கினார்கள். Whiteboardஇல் designஐ வரைந்து காட்டி விவாதித்தார்கள். எதிர்காலத்தில் வரக்கூடிய Technical பிரச்சனைகளை ஆராய்ந்தார்கள். நடுவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சில டெக்னாலஜிகளை ஒப்பிட்டு பதிலளித்தார்கள். User experienceஐ அதிகரிக்கும் வழிகளை ஆராய்ந்து செயல்வடிவமாக present செய்தார்கள். எவ்வாறு தங்களது படைப்பின் மூலமாக பணம் சம்பாதிக்கலாம் என்பதை புதிது புதிதாக ஐடியாக்கள் சொன்னார்கள். சில அணிகள் நடுவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் மேலாக சிறப்பாக செயற்பட்டன. டெக்னாலஜி trendஇற்கு ஏற்றவாறு டெக்னாலஜிகளை தெரிவுசெய்தார்கள். தெரிவுகளை நியாயப்படுத்தினார்கள்.




இவ்வகையான போட்டி வடிவமைப்பில் Software development இருக்கவில்லை. இதனால் மாணவர்களின் சில நல்ல ஐடியாக்கள் உயிர் கொடுக்கப்படாமலே அவர்களது மனதிலே உறங்கின. இதனால் அடுத்து வரும் "யாழ் கீக் சாலேஞ்" போட்டி அமைப்பு மேம்படுத்த படவேண்டிய அவசியம் உணரப்பட்டது.

சென்ற வருடம் "யாழ் ஐடி ஹப்" நடாத்திய Hackathon போட்டிகளின்போது பலர் ஆர்வமாக கலந்துகொண்டு தங்களது ஐடியாக்களை develop செய்து உயிர் கொடுத்தார்கள். Prototypeகளை சிறப்பாக வடிவமைத்து காட்டி அசத்தினார்கள். இது "யாழ் கீக் சாலேஞ்" போட்டி அமைப்பு மேம்படுத்தும் திட்டத்துக்கு பெரிதும் உதவியது. இதன் காரணமாக போட்டிகள் prototype ஒன்றை உருவாக்குவதை போன்றதாக போட்டி அமைப்பினை முன்மொழிந்தார்கள். பழைய போர்முலா அப்படியே மாற்றம் பெற்றது. பழைய போர்முலாவின்போது இல்லாத prototypeஐ இம்முறை போட்டியாளர்கள் உருவாக்கப்போகிறார்கள். நானும் ஒரு Developer என்பதால் இம்முறையின் போட்டி அமைப்பு எனக்கு பிடித்திருக்கிறது. மூன்று நாள் தொடர்ச்சியாக Hackathan நடக்கவிருக்கிறது. போட்டியாளர்கள் Software Development செய்யப்போகிறார்கள். போனமுறை Strategy Roundஇன்போது போட்டியாளர்கள் உருவாக்கப்படாத பொருளை சந்தைப்படுத்தும் வழிவகைகளை ஆராய்ந்தார்கள். ஆனால் இம்முறை தாங்கள் develop செய்த Softwareஐ காட்டி விவாதிக்கப்போகிறார்கள். இம்முறை ஆதாரம் இன்னும் உறுதியாக இருந்து போட்டியாளர்களின் கருத்துக்கு வலுச்சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

***

போட்டியாளர்கள் தங்களது அணியை தெரிவு செய்யும்போது திறமைகளின் சரியான விகிதாசாரத்தில் தெரிவுசெய்தால் சிறப்பாக செயற்பட முடியும். சரியான ஐடியாவை உருவாக்கி அதற்கு சாப்ட்வேர் வடிவம் கொடுக்கவல்ல நபர்களை அணியில் சேருங்கள். கடைசி போட்டிகளின்போது அதனை ஸ்திரமாக present செய்ய பொருத்தமான நபரை கண்டுபிடியுங்கள். இப்போதே அணியாக செயற்ப்பட்டு ஆயத்தங்களை செய்யுங்கள். செப்டெம்பர் 30க்கு முதல் பதிவு செய்து கொள்ளுங்கள்.

இம்முறை போட்டிகளின் கடைசி நாளன்று முதலீடு செய்யும் ஆர்வமுள்ளவர்களும் கலந்து கொள்ளவிருக்கின்றனர். அவர்கள் ஒரு அணியின் productஇல் ஆர்வமாக இருந்தால், முதலீடு செய்யும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது. உங்கள் கனவு ஐடியா ஒரே நாளில் நனவாகும் வாய்ப்பு கடைசி போட்டி தினத்தில் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. ஒரே நாளில் உங்கள் சொந்த கம்பெனி உருவாகலாம். கடைசி நாளன்று கிடைக்கும் ஒரு சில நிமிடங்கள் உங்கள் வாழ்க்கையை ஒரேயடியாக மாற்றினாலும் ஆச்சர்யமில்லை.




Sunday, August 25, 2013

Yarl Geek Challenge மறுபடியும் வருகிறது... ...

"போன வருஷம் yarl geek challenge சிறப்பாக நடந்து முடிந்து விட்டது. அடுத்தமுறை புதிதாக என்ன செய்வதாக உத்தேசம்" என்று எனக்கு தோன்றிய கேள்வியை கேட்டேன். இந்த கேள்வியை நான் கேட்ட இடம் Yarl IT Hub உறுப்பினர்கள் போட்டிகளை ஏற்பாடு செய்வதற்காக சந்தித்து கொள்ளும் கூட்டம். அன்று அந்த சந்திப்பு நடந்த மேசையில் ஆறு பேர்கள் இருந்தோம். மேசையின் நடுவில் நாங்கள் ஆர்டர் செய்த "காய்ந்து போன" சாண்ட்விச், ஆறிப்போன capuchino coffee, தேசிக்காய் தண்ணி (விலை 120 ரூபா) போன்றவை எங்களுக்காக காத்திருந்தன. எங்கள் சந்திப்புகளில் வழமையாக இவ்வாறான உணவுகளை ஆர்டர் செய்துவிட்டு இரண்டு மணித்தியாலம் கதைப்போம். ஆர்டர் செய்தால் அது வருவதற்காக ஒரு மணித்தியாலம் காத்திருக்க வேண்டியிருக்கும். ஒரு Coffeeயை ஒரு மணித்தியாலமாக மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக குடிப்போம். நிறைய கதைப்போம். நாங்கள் வழமையாக போகும் அந்த உணவகத்தில் ஈயடிக்க ஆள் இருக்காது. ஆகவே நாங்கள் மூன்று மணித்தியாலமாக ஒரு coffeeயை வைத்து உறிஞ்சினாலும், "எழுந்து போங்கடா!" என்று சொல்ல மாட்டார்கள்.

அன்றைய கூட்டத்தில், அடுத்த yarl geek challenge நிகழ்வுக்கான ஆயத்தங்களை பற்றி தீவிரமாக திட்டமிட்டனர். அன்று பேச்சு குறைவாக இருந்தது. அதிக சிந்தனைதான் எல்லோர் முகத்திலும் ஆக்கிரமித்திருந்தது. இம்முறை என்ன புதிதாக செய்யப்போகிறோமோ என்று சீரியஸாக விவாதித்தோம்.

"இப்போது IT பற்றிய அறிவு பாடசாலை மாணவர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. இம்முறை அவர்களையும் இணைத்தால் நிச்சயம் அற்புத விளைவுகள் ஏற்படும். அவர்களுக்கு தொழில்சார் IT பற்றிய நல்ல அறிமுகமாக இருக்கும். பாடசாலை படிப்புகளின் பின்னர் சரியான துறையை தேர்ந்தெடுக்க இது நிச்சயம் உதவும்" என்றார் சயந்தன்.

எல்லோருக்கும் அந்த ஐடியா பிடித்திருந்தது. முதல்கட்டமாக மூன்று பாடசாலைகளை இணைப்பதாக அந்த அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பாடசாலை மாணவர்கள் கிட்டத்தட்ட ஒரு மாத கால அவகாசத்தில் ஒரு Applicationஐ செய்து பிரதான Yarl Geek Challenge போட்டிகளின் கடைசி நாளன்று present செய்யவேண்டுமென்றார்கள். அதன்பின்னர் என்ன மாதிரியான கருப்பொருளில் Applicationகள் செய்யலாம் என்பது பற்றிய விவாதம் தொடங்கியது. வழமைபோல Web Application பற்றி யாரோ பரிந்துரைத்தார்கள். Web Application என்பது IT Competitionகளில் வரும் "உப்புமா சமாச்சாரம்" என்று எதிர்வாதம் வந்ததால் அது வந்த வேகத்திலேயே அடங்கிப்போனது. அது மட்டுமல்லாது மாணவர்களுக்கு இன்னும் கூடுதலான challengingஆன ஒன்றுதான் yarl geek challengeஇற்கு பொருத்தம் என்றார்கள். இதனால் சமீபத்திய trendஆன mobile applicationஇற்கே பலரின் வாக்குகள் இருந்தன.

பாடசாலை மாணவர்களே! தயாராக இருங்கள். உங்களுக்கு புதிய அனுபவம் காத்திருக்கிறது. புதிதாக சில technologyகள் அறிந்துகொள்ளப்போகிறீர்கள். உங்களை போன்றே ITஇல் ஆர்வமான வேறு சில பாடசாலை நண்பர்களை சந்திக்கவிருக்கிறீர்கள். Computer முன்னே 24 மணித்தியாலம் வேலை செய்யும் பொறுமை படைத்த விசித்திர ஜீவன்களை நேரில் காணவிருக்கிறீர்கள். இந்த போட்டிக்கு வழமையான Reality showக்களின் பாரம்பரியபடி yarl geek challenge "junior" என்று பெயரிடப்பட்டது. இதற்காக propectus தயாரிக்கும் பணி முழுவீச்சில் தொடங்கியது. அதன் தமிழ் வடிவத்தினை சமீபத்தில்தான் முடித்திருந்தார்கள். அதில் பாவிக்கப்பட்ட தொழினுட்பவியல் சம்பந்தமான வார்த்தைகள் எனது கவனத்தை கவர்ந்தன. Presentationஐ அளிக்கை என்று தமிழ்படுத்தியிருந்தார்கள்.

போனமுறை இடம்பெற்ற yarl geek challenge போட்டிகளிலிருந்து Algorithm round அவ்வளவாக பொருத்தமாக இருக்கவில்லை என்று பெரும்பான்மையினர் கருதியதால், அதனை மாற்றுவது பற்றி ஒரு email threadஇல் விவாதித்தோம். இருபக்கமும் சாதக பாதகங்களை பற்றி emailகள் சரமாரியாக வந்திருந்தன. விவாதத்தில் முடிவில் இந்த roundக்கு பதிலீடாக User Experience Roundஐ சேர்ப்பதாக முடிவு செய்யப்பட்டது. இந்த roundஇல் பயனாளர்களுக்கு தாங்கள் செய்யப்போகும் application மூலமாக ஏற்படக்கூடிய அனுபவங்களை போட்டியாளர்கள் present செய்யவேண்டும் என்று முடிவு செய்தோம். மற்றைய roundகளிலும் இருந்த பிரச்சனைகள் பற்றி விவாதித்து சின்ன சின்ன மாற்றங்கள் செய்தோம்.

போன வருடம் இடம்பெற்ற yarl geek challenge போட்டியின் பின்னதாக சில எதிர்பார்த்த நல்ல விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது. சில மாணவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் IT industryஇல் உள்ள அனுபவஸ்தர்களுடன் உரையாடி அறிவினை பகிர்ந்துகொள்ளவும் வழிசமைத்திருந்தது. சமீபத்தில் இடம்பெற்ற Hackathon நிகழ்வின்போது மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்று கலக்கியிருந்தது இதற்கு ஒரு நல்ல உதாரணம். இம்முறை போட்டிகளின் பின்னர் இதைவிட பலமடங்கு நன்மைகள் உருவாகும் என்று உறுதியாக நம்புகிறேன். இம்முறை ஒரு மாதத்திற்கு முன்னதாகவே அறிவிப்பு செய்து விட்டோம். ஆயத்தம் செய்வதற்கு நிறைய நேரம் இருக்கிறது. புதிதாக கலந்து கொள்ளவிருக்கும் மாணவர்கள், சென்றமுறை பங்கேற்ற போட்டியாளர்களை பேட்டி காண்பதன் மூலம் சிறப்பாக ஆயத்தங்களை செய்து கொள்ளமுடியும்.


Thursday, November 15, 2012

Yarl Geek Challenge: Final போட்டிகள்


இப்போட்டிகள் சம்பந்தமான முந்தைய இடுகைகள்

Yarl Geek Challenge: 1ம் நாள் போட்டிகள்

Yarl Geek Challenge: 2ம் நாள் போட்டிகள்

Yarl Geek Challenge: 3ம் நாள் போட்டிகள்
போட்டியாளர்கள், நடுவர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள்
கருமையான மேகங்கள் சூழ்ந்திருந்ததால் ஐந்தரை மணிக்கே நன்றாக இருட்டி விட்டிருந்தது. சுவாரசியமான மூன்றாம் நாள் ஒருவாறாக முடிவுக்கு வந்திருந்தது. எனினும் மூன்றாம் நாள் முடிவுகள் கொஞ்சம் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. இரண்டு அணிகள் மட்டுமே வெளியேற்றப்படும் என்று எதிர்பார்த்திருந்த பார்வையாளர்களுக்கு மூன்று அணிகள் வெளியேற்றப்பட்டமை கொஞ்சம் எதிர்பாராத முடிவாக இருந்தது. ஆனாலும் மறுநாள் finalஉடன் oppourtunity round நடைபெற இருப்பதால் அதற்கான ஆயத்தங்களை செய்ய வேண்டியிருந்ததால் அன்றைய முடிவுகளை பற்றி வெளியேறிய அணிகள் நிதானமாக யோசித்து கவலைப்பட சந்தர்ப்பம் கிடைக்காமல் போனது நன்மைக்கே. Algorithm round மற்றைய Roundகளில் இருந்தும் பெரிதும் மாறுப்பட்டிருந்தது. போட்டிகளிலே ஒரு புதுவித வேகம் இருந்தது.. போட்டியாளர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் காரம் அதிகமாகவே இருந்தது.. போட்டியாளர்களும் சளைக்காமல் பதிலளித்தனர்.. எப்போதுமே ஒருவித பதற்றம் போட்டி இடம்பெற்ற மேடையிலிருந்தது. நாங்களும் அன்றைய நாள் ஒருவித நிம்மதியுடன் வீடுகளுக்கு போனோம். அன்று காலைதான் Yarl Geek Challenge t-shirtகள் தனுஷனின் முயற்சிகளுக்கு பின்னர் கிடைத்திருந்தன. ஆகவே சந்தோசமாக நாளை புது t-shirtஉடன் போகலாம் என்ற சந்தோசம் எல்லாருடைய முகத்திலும் இருந்தது. நல்லவேளையாக புது t-shirt கிடைத்திருந்தது. ஏனென்றால் யாழ்பாணத்தில் அந்நேரத்தில் பெய்த தொடர்மழையால் நாங்கள் தோய்த்த உடுப்புகள் வெயிலில் காய்வதும், மறுபடி நனைவதுமாக இருந்தன. ஆகவே அடுத்த நாளைக்கு போட தோய்த்த உடுப்புகள் இல்லாமல் கஷ்டப்பட்ட எங்களுக்கு நிவாரணமாக t-shirt வந்து சேர்ந்தது.
Yarl Geek challenge T-Shirt அணிந்திருக்கும் model ஒருவர் :)

கடைசி நாளன்று பதினோரு மணிக்கு Oppourtunity round தொடங்குவதாக இருந்தது. ஒன்றரை மணிக்கு Product Strategy round. இந்த roundகளில் எல்லா அணியினரும் தங்களது projectஇன் எதிர்காலத்திட்டம் பற்றியும் அதற்காக ஏற்படும் செலவுகளை சமாளித்து அடுத்த கட்டத்துக்கு எவ்வாறு கொண்டுசெல்லவிருக்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். சுருக்கமாக சொன்னால் செய்த productஐ எப்படி கூவி கூவி விற்கப்போகிறார்கள் என்பதை எல்லோரும் நம்பும்விதமாக சொல்லவேண்டும். போட்டியாளர்கள் எவ்வாறு விளம்பரங்களை நுழைப்பதன்மூலம் பணத்தினை பெற்றுக்கொள்ளலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தார்கள். Projectஇன் தொடக்கத்தில் முதலாவது clientஐ பிடிப்பதற்கு முன்னதான காலங்களில் எவ்வாறு செலவுகளை சமாளிக்கபோகிறார்கள் என்ற கேள்விதான் மில்லியன் டொலர் கேள்வியாக இருந்தது. முழுக்க முழுக்க technical விசயங்களை மட்டுமே யோசித்து மண்டையை உடைத்துக்கொண்டிருந்த மாணவர்கள் business side பற்றி முதன்முறையாக கவலைப்படத்தொடங்கினார்கள். எல்லோரும் பெரியளவில் tension இல்லாமல் இருக்கிற business ideaக்களையும் presentationக்குள் பொறுத்த முயற்சித்தார்கள்.
நடுவர்கள் குழாம்

ரமேஸ் அண்ணா நடுவர்களுக்கு இந்த roundகளில் போட்டியாளர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் விசயங்களை பற்றி விளக்கினார். பதினோரு மணிக்கு opportunity round ஆரம்பமானது. இதில் முன்னைய நாட்களில் போட்டிகளிருந்து வெளியேறிய ஐந்து அணிகள் கலந்து கொண்டன. IFish அணியினர் மீன்பிடி சாமாசத்துடன் இணைந்து இதனை develop செய்யவிருப்பதாக கூறினார்கள். productஇன் business modelஐ canvas modelஇல் போட்டுக்காட்டி அசத்தினார்கள். ஆனாலும் இந்த projectஇன் அடுத்த கட்டம் என்ன என்பதை சரியாக விளக்கவில்லை. Smart Friends அணியினர் Ceylon Electricity boardஇற்கு prototype ஒன்றை develop பண்ணிக்காட்டி funding எடுக்கப்போகிறோம் என்றார்கள். ஆனாலும் இவர்களின் திட்டங்களில் உள்ள சாத்தியத்தன்மை பற்றி judgesஇற்கு இருந்த சந்தேகங்களை களைய தவறினர். Crazy Coders அணியினர் தங்களது projectஐ தொடங்குவதற்காக ஏற்படும் செலவுகளை பட்டியலிட்டு அதன் சாத்தியத்தினை தெளிவுபடுத்தினர். இவர்களது patient management systemஇனை தொடக்கத்தில் ஒரு வைத்தியசாலையுடன் இணைப்பதாகவும் பின்னர் ஒவ்வொரு வைத்தியசாலையாக இத்திட்டத்தில் இணைக்கவிருப்பதாக கூறினார்கள். Yarl Eagles அணியினர் Tourist Guide applicationஇல் ஹோட்டல், resthouse போன்றவற்றின் விளம்பரங்களை இணைக்கமுடியும் என்றார்கள். அதிகம் பணம் தரும் companyகளின் பெயர்கள் பாவனையாளர்களுக்கு காட்டப்படும் search resultsஇல் முன்னணி வகிக்கும் என்றார்கள். ஆனாலும், பணத்தை வாங்கிக்கொண்டு பாவனையாளர்களுக்கு தவறான தகவல்கள் போகலாம் என்ற கேள்விகளை judges கேட்டு மடக்கினர். Phoenix அணியினர் ஒரு research projectஐ ஒரு commercial product ஆக எவ்வாறு மாற்றலாம் என்று தெளிவுபடுத்தினர்.

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு Final roundஆன  Product strategy round தொடங்குவதாக இருந்தது. இதில் Zeros, Arimaa, Cybers போன்ற அணிகள் போட்டிக்கான  கடைசி நேர ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தன. Oppourtunity roundஇல் மற்ற அணிகளுக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஏற்றவாறு தங்களது presentationகளை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். எல்லோருக்கும் இந்த கடைசி முயற்சியில் எப்படியாவது ஜெயிக்கவேண்டும் என்ற எண்ணம் கண்களில் தெரிந்தது. Cybers அணியினர் அவர்களது system மூலமாக response ஆக அனுப்பப்படும் SMSஇல் விளம்பரங்களை இணைப்பதன்மூலம் காசு பார்க்கலாம் என்றார்கள். அரசாங்க அதிகாரிகளுக்கு இவர்களுடைய system தொடர்பான presentationஐ செய்து அவர்களை இந்த projectக்கு தேவையான நிதியை தயார் செய்யவிருப்பதாக கூறினார்கள். Arimaa அணியினர் தங்களது project சமூக நலனுக்காக செய்யப்பட்டாலும் project sustainabilityக்காக beneficiariesகளிடமிருந்து ஒரு சிறுதொகையை அறவிடலாம் என்றார்கள். எதிர்காலத்தில் அவர்களது systemஇனை சமூக நிறுவனங்களுக்கு ஏற்றவாறு customize செய்து விற்கலாம் என்றார்கள். கேள்வி-பதில் நேரம் வழமைபோலவே அணல் பறந்தது. அவர்களது பதில்கள் தெளிவாகவும் judges எதிர்பார்த்ததை போலவே இருந்ததாகவும் பட்டது. Zeros அணியினர் ஆடுபுலி ஆட்டத்தினை download செய்வதற்காக ஒரு சிறிய தொகையை பாவனையாளர்களிடம் அறவிடலாம் என்றார்கள். அதுமட்டுமல்லாது விளம்பரங்களை காட்டுவதன் மூலம் பணத்தினை பெற்றுகொள்ளவிருப்பதாக சொன்னார்கள். ஆனால் Offline modeஇல் எவ்வாறு விளம்பரங்களை mobile phoneக்கு அனுப்பிட முடியும் போன்ற கேள்விகளால் judges துளைத்தார்கள்.

போட்டியாளர்களின் presentationகள் முடிவடைந்தபின்னர் judges வழமைபோல மேடையைவிட்டு விலகி தனியிடத்தில் தங்களது அவதானிப்புகளை விவாதிக்கச்சென்றார்கள்.  போட்டிகளின் முடிவுகளை எதிர்பார்த்துக்கொண்டு போட்டியாளர்கள் ஒருவித பதற்றத்தில் அமைதியாக இருந்தனர். அவர்களின் இதயத்துடிப்புகளின் சத்தம் அவர்களின் மெல்லிய உரையாடல்களையும் தாண்டி ஒலித்தது. ஆண்டவனே! இப்படியே ஒரு மணித்தியாலத்தை எவ்வாறு கழிக்கப்போகிறோமோ என்று பயந்தேன். அதுக்கும் சயந்தன் சூப்பரான ஐடியா வைத்திருந்தார். அப்போதுதான் இப்போட்டி ஏற்பாட்டாளர்களை பேட்டியேடுத்து கலாய்க்கும் நிகழ்வை நடத்த சர்வேஸ் அண்ணா முன்னுக்கு வந்தார். அவர் முதலில் சயந்தனை அழைத்தார். பேட்டியின்போது சயந்தன் தனது வேலையை பற்றிக்கூறும்போது "ஏதாவது ஒரு புது project எடுக்கும் விசயமாக பெயர் கூட கேள்விப்படாத புதுநாட்டுக்கு பரிசோதனை எலி கணக்கா என்னை அனுப்பிடுவாங்க" என்று பெருமையாக கூறினார். சர்வேஸ் அண்ணா சயந்தனிடம் ஏதாவது கேள்விகள் கேட்கலாம் என்று கூறியிருந்தாலும் ஒருவரும் வாயை திறக்கவில்லை. அடுத்ததாக என்னை கூப்பிட்டார்கள். "நானும் சயந்தன் வேலை செய்யும் companyயில்தான் நாலு வருசமா குப்பை கொட்டுறேன்" என்று ஆரம்பித்தேன். "குப்பை கொட்டுறது என்றால் என்ன" என்றார் சர்வேஸ் அண்ணா. "நான் பொதுவாக உருப்படாத தெளிவில்லாத Codeதான் எழுதுவேன். அதாவது குப்பை code. அதை வினைசொல்லாக மாற்றினால் குப்பை codeறது என்று வரும்" என்றேன். அப்போது கூட்டத்தில் யாரோ "குப்பையை கிளறுறது என்றால் என்ன" என்றார்கள். "அதைத்தான் code review என்று மரியாதையாக சொல்லலாம்" என்று சொன்னபோது சிலர் சிரித்தார்கள். அதன்பின்னர் விஜயராதா தனது company பற்றியும் open source பற்றியும் ரொம்பவே சீரியசாக விளக்கமளித்தார். இப்படியே போய்கொண்டிருந்த நிகழ்வில் சர்வேஸ் அண்ணா "கடந்த இரண்டு மூன்று நாளாகவே Yarl IT Hubஇன் twitterஇல் அதிரி புதிரியாக tweetகள் வருவதை அவதானித்திருப்பீர்கள். அதனை செய்து கொண்டிருப்பவர்தான் துஷி" என்று துஷிக்கு அதிரடி அறிமுகம் வழங்கினார்.
அரிமா அணியினர் முடிவுக்காக காத்திருப்பு

ஒருவாறாக judges முக்கியமான முடிவுகளுடன் மேடையை நோக்கி நடைபோட்டனர். Final roundஇற்காக போட்டியிட்ட மூன்று அணிகளும் வைத்த கண் வாங்காமல் judgesஐ பார்த்துக்கொண்டிருந்தனர். போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டவேளையில் Cybers அணி இரண்டாம் இடத்தை பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. Arimaa அணியும், Zeros அணியும் பதற்றத்துடன் பார்த்துக்கொண்டிருக்க, Arimaa அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர்கள் முதல்பரிசாக 50000ரூபாவை பெற்றுக்கொண்டனர். Cybers அணியினர் 25000ரூபாவை பெற்றனர். Oppourtunity roundஇல் Crazy Coders அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது. நான்கு நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற போட்டிகள் இனிதே நிறைவேறின. நாங்கள் கொழும்புக்கு திரும்புவதற்கு இன்னும் ஒன்றரை மணித்தியாலங்களே இருந்ததால் வேக வேகமாக போட்டி நடந்த Hallஐ பழையபடிக்கு மாற்றினோம். போட்டியாளர்களுடன் கதைத்து பிரியாவிடை பெற்றோம். பஸ்ஸில் ஏறி இருந்தபோது எல்லோருடைய முகத்திலும் மகிழ்ச்சி கலந்த புன்னகை இருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. கீழே தரப்பட்ட படமே இதற்கு சான்று பகரும்.
மீண்டும் கொழும்பு நோக்கி போரடிக்கிற வேலைக்கு திரும்புகிறோம்

இந்த போட்டிகள் நடந்த நான்கு நாட்களும் வேறோரு உலகத்தில் சஞ்சரிப்பது போன்ற  உணர்வே இருந்தது. போட்டியாளர்கள் Software Engineering தொடர்பான பல்வேறு விடயங்கள் பற்றிய அறிவினை அனுபவத்தோடு பெற்றிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. அதுமட்டுமல்லாது எங்களுக்கும் Software companyகளில் computer screenஐ வெறித்துப்பார்த்துகொண்டு வேலை செய்யும் அனுபவங்களிலிருந்து Yarl Geek Challenge புதிதான அனுபவ பாடத்தை கற்றுத்தந்தது. அடுத்து வரும் வருடங்களில் எவ்வாறு இந்த போட்டியின் அமைப்பை மேலும் மேம்படுத்தலாம் என்று இப்போதே திட்டமிட தொடங்கிவிட்டார்கள். அடுத்தமுறை இப்போட்டிகளை நடத்த மிகப்பெரிய இடத்தை தேர்வு செய்யவேண்டுமென்பது உறுதி.

முற்றும்..

Thursday, November 8, 2012

Yarl Geek Challenge : முதலாம் நாள் போட்டிகள்


அணித்தலைவர்கள்
"அரியாலை தபால் பெட்டி சந்தி வந்தா சொல்லுங்கண்ணே.. நித்திரை தூங்கினாலும் பரவாயில்லை அடிச்சு எழுப்புங்க" என்று பஸ் நடத்துனரிடம் சொல்லிவைத்தேன். யாழ்ப்பாண பஸ்களில் இதுதான் பிரச்சனை. இரவு முழுக்க நித்திரை வராது. அதிகாலையில் சரியாக இறங்குவதற்கு முன்னர் ஒரு சூப்பர் நித்திரை வரும் பாருங்க.. "இடம் வந்திட்டுது" என்று யாராவது எழுப்பும்போது எழுப்பிற ஆளை போட்டுத்தள்ளிடலாமா என்று எண்ணம் வரும். "அரியாலை தபால் பெட்டி சந்தி இறக்கம்" என்று சத்தம். நானும் ப்ரீத்திராஜ் அண்ணாவும், நிரோஜனும் இறங்கினோம். நித்திரையில் நடப்பது போல நடந்து கொண்டே இருந்தோம் ஆனால் நாங்கள் போக வேண்டிய வீடு மட்டும் வரவில்லை. அதிகாலையில் தூக்கம் கெடுக்கப்பட்டதால் நாய்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தின. ஒரு நாய் மட்டும் சத்தமில்லாமல் பின்னால் வந்து எங்களுக்கு பீதியை ஏற்படுத்தியது.

வீடு ஒருவாறாக வந்தது. சயந்தனும், பாலா அண்ணனும் நாங்கள் வருவதற்கு முதல் நாளே வந்து தொடக்க அலுவல்களை பார்த்துக்கொண்டிருந்தனர். ஆகவே நாங்கள் ஆறு மணிக்கு அந்த வீட்டை சென்றடைந்தபோது அவர்கள் இருவரும் ரெடியாகி Yarl Geek Challenge போட்டி நடக்கும் இடத்துக்கு போக தயாராக இருந்தனர். நாங்களும் குளித்து ரெடியாகி கொக்குவில் இந்து கல்லூரிக்கு ஒன்பது மணிக்கு முன்பதாக சென்றடைந்தோம். அங்கே பங்குபற்றும் அணிகளை சேர்ந்த எல்லோரும் கூடியிருந்தனர். கல்லூரியின் கணினிக்கூடம் Yarl Geek Challenge நடத்துவதற்கு ஏற்றவாறு நன்றாக மாற்றியமைக்கப்பட்டிருந்தது. ஒரு பகுதி போட்டிகளை நடத்துவதற்காகவும் அடுத்த பக்கம் போட்டியாளர்களும் Mentorsகளும் கலந்தலோசிப்பதற்கு ஏற்றவாறு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. சர்வேஸ் அண்ணா போட்டி நடத்த பொருத்தமான இடத்தை தெரிவு செய்திருப்பதாக எல்லோரும் ஆமோதித்தனர். போட்டி எவ்வாறு இருக்கபோகிறதோ என்ற எண்ணம் எனக்கு ஒரு பெரிய யோசனையாக இருந்தது. ஆனால் மாணவர்கள் தீவிர ஆர்வத்துடன் Presentationகளை தயாரித்துக்கொண்டிருந்தனர். எல்லாப்போட்டிகளும் Software Engineering Life Cycleகளை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தன. Projectகளின் அறிமுகம் ஏலவே முதலாம் சுற்றில் Project Proposal Roundஇல் முடிந்திருந்தது. ஆகவே 26ஆம் திகதி முதல் தீவிர மோதல் தொடங்கவிருந்தது. முதலாவதாக Requirements round.

Round-01 Requirements round


இந்த சுற்றில் பங்குபெறும் அணிகள் தங்களது project மூலமாக பாவனையாளருக்கு வழங்கவிருக்கும் அனுபவத்தினை present செய்யவேண்டும் என்பதாகும். கணினி தொழிர்சார் துறைகளில் "Requirements gathering" எனப்படும் சமாச்சாரம் ஒரு projectக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று கணினி வல்லுனர்கள் அறிந்த விடயம். இதனை சரியாக செய்யாவிட்டால் project வெற்றி பெறும் வாய்ப்பு ஆண்டவன் விட்டவழி என்று முடிவு செய்துவிடலாம். "Requirements gathering" என்றாலே எனக்கு சிங்கப்பூர் சைனீஸ்காரிகளிடம் சொதப்பலாக requirements interview செய்ததுதான் ஞாபகம் வரும். அப்பாவித்தனமாக எதாவது ஒரு கேள்வியை கேட்டுவிட்டு நிறைய வாங்கிகட்டிகொண்டிருக்கிறேன். நான் வேலைக்கு சேர்ந்த ஒரு வருடத்தில் கிடைத்த அந்த முதல் அனுபவம் பெரிய பாடத்தை புகட்டியது. ஆனால் இன்று போட்டியாளர்களுக்கு ஒரு நேரிடையான முன் அனுபவம் இந்த சுற்று.

Let the Game begin

போட்டிகளின் ஆயத்தப்படுத்தல் நிகழ்வாக போட்டியாளர்களுக்கு Customer Visiting என்ற கேள்விகளால் துளைத்தெடுக்கும் நிகழ்வு ஆரம்பமானது. பாலா அண்ணன், விஜயராதா, மதுரா, யாழினி அக்கா எல்லோரும் ஒவ்வொரு அணி தங்கிருந்த பாசறைக்கும் (??) சென்று Customerகள் வழமையாகக் கேட்கும் கேள்விகளை போன்ற அதிரி புதிரி கேள்விகளை ஆரம்பித்தனர். போட்டியாளர்கள் முதலில் அசந்து போனாலும் பின்னர் மெதுவாக பதிலளிக்க ஆரம்பித்தனர். கேள்விகள் மட்டுமல்லாது போட்டியாளர்கள் செய்த ஆயத்தங்களை பற்றியும் கேள்விகள் மூலமாக எடைபோட்டனர். நேரம் பன்னிரெண்டு மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. போட்டியாளர்கள் ஒருவித வெறியுடனே ஆயத்தங்களை மேற்கொள்ளுவதால் அப்பகுதியில் ஒருவித பதற்றம் இருப்பதை உணரக்கூடியதாக இருந்தது. போட்டியாளர்களைவிட அவர்களுடைய அணிகளுக்கு ஆலோசனை வழங்க வந்த Mentorகள் கடுமையான யோசனைலிருந்தனர். ஒருசில Mentorகளை அவர்களுடைய Teamஇலிருந்து பிரித்து எடுத்து மதிய உணவுக்கு அனுப்பவே பகீரத பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டியிருந்தது :).
Judges

இப்போது மணி பிற்பகல் 1:45, Dr.மகேசன், Dr.தபோதரன், ப்ரீத்திராஜ் அண்ணா எல்லோருக்கும் சயந்தன் Requirements round பற்றிய அறிமுகத்தை வழங்கினார். கிட்டத்தட்ட இரண்டு மணிக்கு போட்டிகள் ஆரம்பமாகின. பின்வருமாறு எட்டு அணிகள் தங்களது project ideaக்களை Present செய்தன.



Team: Phoenix

கண்பார்வையற்றோருக்கு பயன்படக்கூடிய இவர்களின் Project Research வகையை சார்ந்தது. ஒரு கருவியை கண்பார்வையற்றவர்களின் கண்ணாடியில் பொருத்திவிட அந்த கருவி முன்னால் வரும் நபர்களின் படங்களை பதிவு செய்து பின்னர் process செய்து அவர்களை கண்டறிந்து உரிய விபரங்களை அந்த குறிப்பிட்ட நபருக்கு தெரியப்படுத்தும். பொதுவாகவே இவ்வாறான research Projectகளில் இருக்கும் complexity காரணமாக Presentation குழப்பமாக இருந்தாலும் நன்றாகவே இருந்தது.

Team: yarl Eagles

புதிதாக வரும் Touristகளுக்கு வழிகாட்டும் Tourist Guide என்ற இந்த applicationதான் இவர்களின் project. இதன்மூலம் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு செல்லும் Touristகளுக்கு தேவையான எல்லா தகவல்களையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் வசதியை ஏற்படுத்திக்கொடுப்பதே இந்த Projectஇன் நோக்கம். Presentation சிறப்பாக இருந்தாலும் சில இடங்களை இன்னும் நன்றாக விளக்கியிருக்கலாம் என்றே தோன்றியது.


Team: Young Bloomers(IIS City campaus 4ம் ஆண்டு மாணவர்கள்)


IFish என்று புதுமையாகப்பெயரிடப்பட்ட இந்த Project மீனவர்கள் மீனை பிடிக்கும்போதே கைப்பேசி மூலமாக பிடிபட்ட அளவை Systemத்துக்கு update செய்து விடலாம். மொத்தமாக வாங்க விரும்பும் நபர்கள் ஏலத்தில் போட்டியிட்டு வாங்கலாம். இதன்மூலமாக பிடிபட்ட மீன்களுக்கு நல்லவிலை கிடைப்பதோடு உடனடியாக விற்கும் வசதியும் ஏற்படும். இவர்களது Presentation நன்றாக இருந்தாலும் நிறைய விஷயங்கள் Scopeஇல் இருந்ததால் கொஞ்சம் குழப்பமாக இருந்தது,



Team: Cybers

Social Mobic எனப்படும் இவர்களது application மூலமாக சமூக பிரச்சனைகளை பற்றிய Compliantsஐ குறிப்பிட்ட அரசாங்க ஸ்தாபனத்துக்கு தெரியப்படுத்தும் வசதியை கைப்பேசியில் பெற்றுக்கொள்ளலாம். இதன்மூலம் பொதுமக்கள் எளிதாக Compliants செய்ய முடியும். அதுமட்டுமல்லாது அதனை இலகுவாக Track பண்ணும் வசதியும் ஏற்படும். இவர்களது Presentationஇன் போது சில விஷயங்கள் தெளிவாக இல்லாவிட்டாலும் பொதுவாக நன்றாகவே இருந்தது.



Team: Zeros (Jaffna University 4ம் ஆண்டு மாணவர்கள்)


வித்தியாசமான Project idea இவர்களுடையது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான "ஆடு புலி" ஆட்டத்தை Android applicationஆக உருவாக்கபோவதாக கூறினார்கள். இவர்களது Presentationஇன் போது ஆடு புலி ஆட்டம் எவ்வாறு ஆடப்படும் என்பதை அழகாக simulate பண்ணினார்கள். இதுவரை இந்த விளையாட்டை விளையாடியிராத எனக்கும் நன்றாக புரிந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.





Team: Arimaa (மொறடுவ பல்கலைகழக 3ம் ஆண்டு மாணவர்கள்)

இவர்களது project ஒரு புதுவிதமான Social Network portal. இந்த portalஇல் உதவி தேவைப்படுகிற நபர்கள் தங்களுக்கு தேவைப்படும் உதவிகள் தொடர்பான விபரங்களுடன் பதிவு செய்யலாம். இதே போல் மற்றவர்களுக்கு உதவி செய்யவிரும்பும் நபர்களும் தாங்கள் செய்ய விரும்பும் உதவி சம்பந்தமான தகவல்களுடன் பதிவு செய்யலாம். இந்த இரு நபர்களையும் இணைக்கும் பாலமாக இவர்களுடைய AID என்கிற project செயற்படும். இவர்கள் இந்த Ideaவை இந்த Roundஇல் Present பண்ணும்போது நேரத்தினை சரியாக பயன்படுத்தாமல் விட்டதாக எனக்கு தோன்றியது. ஆனாலும் Presentation தெளிவாக இருந்தது.


Team: Smart Friends (Jaffna University 3ம் ஆண்டு மாணவர்கள்)

இவர்களது project Automated Electricity Meter reading system. இப்போது இருக்கும் Analog மீட்டருடன் இவர்கள் உருவாக்கும் கருவியை பொறுத்தி meter readingஐ automate பண்ணுவதுதான் இவர்களது குறிக்கோள். அது மட்டுமல்லாமல் பாவனையாளர்களுக்கு Web application மூலமாக பணத்தை செலுத்திடும் வசதியும் இவர்களது Projectஇல் அடக்கம். இவர்களது Presentation, Requirements Interview போன்றே வடிவமைக்கப்பட்டிருந்தமை புதுமையாக இருந்தது. சில இடங்களில் தடுமாறினாலும் இவர்களது புதுமையான Presentation வழிமுறை அந்த குறைகளை மறைத்திருந்தது.


Team: Crazy Coders (IIS City campaus 1ம் ஆண்டு மாணவர்கள்)

இவர்களது project Automated HealthCare patient storage system. இவர்களது System மூலமாக patient ஒருவரின் Medical History ஒரு Cardஇல் பதியப்படும். இதன்மூலமாக வைத்தியர் எளிதாக patient பற்றிய  Medical Historyயை எளிதாக அறிந்து கொள்ளலாம். அத்துடன் வைத்தியர் பரிந்துரைக்கும் மருந்து சம்பந்தமான விபரங்களை Cardஇலேயே பதிந்து விடலாம். இந்த முறை மூலம் வைத்தியர்களின் கிறுக்கல் எழுத்துகளால் ஏற்படக்கூடிய குழப்பங்கள் நிச்சயம் நீங்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு சில விசயங்களை விளங்கப்படுத்துவதில் சறுக்கினாலும் பொதுவாக நன்றாகவே இருந்தது.


இந்த Roundஇல் எந்த அணியும் வெளியேற்றப்படவில்லை. ஆனாலும் இரண்டு அணிகளை வெளியேற்றபோவதாக நாடகமாடி போட்டியாளர்களின் வயிற்றில் புளியை கரைத்த பெருமை Judgesஐ சாரும் :). Smart Friends அணி இந்த சுற்றில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தொடரும்... (Design Round)

Wednesday, December 7, 2011

Yarl IT Hub - இது எங்கள் Community, இணைய நீங்களும் வாரீங்களா

"இலங்கையில் தகவல் தொழில்நுட்பம் எனப்படும் இந்த IT துரிதமாக வளர்கின்றது" போன்ற செய்திகள் எல்லா பத்திரிகைகள், தொலைக்காட்சிகளிலும் இட்டுநிரப்பும் செய்தியாக வருவது வாடிக்கை. ஆனால் இந்தியா அளவுக்கு இன்னும் வளரவில்லை, தரமான தகவல் தொழில்நுட்பம் போதிக்கும் கல்வி நிறுவனங்கள் இலங்கையில் இல்லை என்றும் செய்திகள் வருகின்றன. பல Software companyகள் போதுமான Developers இங்கே இல்லை என்று வெளிப்படையாகவே புலம்பியதை பார்த்திருக்கிறேன். இதனால் அவர்களுக்கு பல Projects கைக்கு கிடைக்காமல் கடல் கடந்து இந்தியாவுக்கு போனதை பார்த்து மனம் நொந்திருக்கின்றனர். ITயின் அதிரடி வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாமல், சமீபத்தில்தான் IT ஒரு பாடமாக பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. கொழும்பினை சுற்றியே பெரும்பாலான Software Companyகள் முகாமிட்டுள்ளன. ஒரு சிலர் கண்டி போன்ற வேறு சில நகரங்களில் இப்போதுதான் ஆரம்பித்துள்ளனர். ஆனால் கொழும்பு போன்ற எல்லா வசதிகளையும் உள்ள இடத்திலிருந்துவிட்டு, வசதி குறைவான இடங்களில் அவற்றை நிர்வகிப்பது பெரிய சவாலாகவுள்ளது. ஆகவே கொழும்பைவிட்டு IT Industryயானது வெளியே போகாமல் அம்மாவின் சேலைத்தலைப்பை பிடித்துகொண்டிருக்கும் குழந்தை போல இறுகப்பற்றிகொண்டிருக்கிறது.

இது இவ்வாறிருக்க யாழ்ப்பாணம் போன்ற நகரங்களை பற்றி கேட்கவே வேண்டாம். வீடுகளில் உள்ள பல Computerகள் வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் Skype call கதைக்கவும், பாட்டு கேட்கவும் படம் பார்க்க மட்டுமே அதிகம் பயன்படுகிறது. "நேற்றுத்தான் என்ர பேராண்டி கொம்பியுட்டரில கதைச்சான். நல்ல வெள்ளை. அவன்ர கதைதான் எனக்கு விளங்க மாட்டேங்குது. அவன் சொல்லுற ஹலோ மட்டும்தான் விளங்குது" என்று வயதான பெரியவர்கள் தங்களுக்குள் பேசி பொழுது போக்க Computer போன்ற வஸ்துக்கள் பயன்படுகின்றன. அங்குள்ள பலர் இத்துறையை தேர்ந்தெடுத்து படித்தாலும் பின்பு வேலை கிடைத்தவுடன் கொழும்பிலே குடியேறிவிடுகின்றனர் அல்லது வெளிநாட்டுக்கு பறந்து விடுகின்றனர். Software Companyகளின் சிதிலங்கள் கூட இல்லாத யாழ்ப்பாணத்திலே அவர்கள் தங்குவதற்கு எந்தவித காரணங்களும் இருப்பதில்லை. இந்த நிலைமைகளை மாற்றி யாழ்ப்பாணத்தை இன்னொரு Silicon Valley ஆக உருமாற்ற வேண்டும் என்கிறார் Yarl IT Hubஇன் ஒரு மிக முக்கிய அங்கத்தவரான சயந்தன்.

போரால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் இப்போதுதான் பொருளாதாரத்தில் முன்னுக்கு வர முயற்சிக்கிறது. குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டுமானால் இப்போதைய Industrial Trendஆன IT நிச்சயம் முன்னேற வேண்டும். அதற்கான ஒரு முதற்படியை எடுத்து வைக்கும் ஒரு கழகம்தான் Yarl IT Hub. இவர்கள் யாழ்பாணத்தில் IT பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அங்கும் புதிய பல Software Companyகள் உருவாக தேவையான சூழலை ஏற்படுத்துவதை நோக்கமாக செயற்படுகின்றனர். இதில் அங்கத்தவராக உள்ளவர்கள் எல்லோரும் இளைஞர்கள், IT என்னும் மாய உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். தாங்கள் வாழ்ந்த சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்ய விருப்பம் கொண்டவர்கள். இதனை நடைமுறைப்படுத்தும் இவர்களது திட்டங்கள் புதுமையாக இருக்கிறன. அவர்களது பல திட்டங்களை நூறில் ஒரு பங்காக சுருக்கினால் இப்படித்தான் இருக்கும்.

1) Software Engineering சம்பந்தமான Quiz போன்ற Reality Showகளை ஒழுங்குசெய்தல்

இதன்மூலம் மாணவர்கள் ஒன்றுகூடி செய்யக்கூடிய Teamwork போன்ற திறமைகள் அவர்களிடையே வளர ஆரம்பிக்கிறது. இந்த தொடர் Reality Showகள் மூலமாக Software Projects சம்பந்தமான விழிப்புணர்வும் கிடைத்தற்கரிய அனுபவமும் கிடைக்கிறது. இத்தொடர்களில் நன்றாக செயற்படும் மாணவர்களுக்கு கொழும்பிலுள்ள முன்னணி Software Companyகளில் பயிற்சிபெறும் வாய்ப்பும் கிடைக்கிறது. கொழும்பில் உள்ள பெரிய நிறுவனங்களின் ஆதரவுடனேயே இப்போட்டிகள் நடத்தப்பட இருப்பது அவசியம் சொல்லியாக வேண்டிய விஷயம்.

2) மாணவர்களுக்கு Software Companyகளில் வேலை செய்யும் Engineerகளின் ஆலோசனைகளை நேரில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு
IT என்ற பெருங்கடலில் அனுபவம் என்பது முத்து போன்றது. அதனைமற்றவர்களுடன் பகிரும்போதுதான் ஒளிர்கிறது. இந்த வாய்ப்பினை Reality Showவில் பங்குபெறும் மாணவர்களுக்கு மட்டுமல்லாது பல்கலைகழக மாணவர்களுக்கும் இந்த அனுபவம் கிடைக்கவிருக்கிறது.

3) Open Source Projectsஇல் வேலை செய்யும் வாய்ப்பு

Open Source உலகம் தனியானது. Software Engineering சம்பந்தமான அறிவு பகிர்வுக்கு ஒரு வலிமையான உதாரணம்தான் இந்த Open Source community. அந்த கடின உலகத்தில் ஊக்கமுள்ள மாணவர்களுக்கு காலடி எடுத்து வைக்கத்தேவையான சூழலையும் வழிகாட்டுதலையும் பெற்று தர இருக்கிறார்கள்.


இவ்வாறு மேற்கூறப்பட்ட செயற்பாடுகள் மூலமாக மாணவர்கள் பலர் இணைந்து செயற்பட வாய்ப்பு கிடைக்கிறது. அதுமட்டுமல்லாது அனுபவமிக்க நபர்களுடன் சேர்ந்து பழகி புதிய வாய்ப்புகளை பெற்றுகொள்ளமுடியும். மாணவர்களிடையே போட்டிகளின்போது ஏற்படும் நட்பு பிற்காலத்தில் ஒன்றாக சேர்ந்து புதிய பல Software Companyகள் உருவாக வாய்ப்பாக அமையலாம். மாணவர்களுக்கு இந்த அனுபவங்கள் தங்களை இன்னொரு படிக்கு தயார் படுத்த வேண்டிய கட்டாயத்தினை மனதினில் தோற்றுவிக்கும் என்பது நிச்சயம். போட்டி என்று இருக்கும்போது முன்னேறும் ஆர்வம் நிச்சயம் அல்லவா..

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்னராக ஆரம்பிக்கப்பட்ட Yarl IT Hubஇல் இப்போது உலகத்தின் வெவ்வேறு பாகங்களில் இருந்து பல அங்கத்தினர் இணைந்தவண்ணம் இருக்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் ஆர்வம்தான் Yarl IT Hubஇன் மொத்த செயற்பாட்டுக்கும் ஒரு உந்துதலாக இருக்கிறது. ஊர் கூடி தேர் இழுக்கும் இந்த முயற்சியில் நீங்களும் இணைந்து இவர்களுக்கு உதவலாம் அல்லவா..









எனது நண்பர்களின் தளங்களில் Yarl IT Hub பற்றி வந்த இணைப்புகள்


After all, why Jaffna? - சயந்தன் இந்த அமைப்பு தொடங்கபட வேண்டிய அவசியத்தினை அழகான ஆங்கிலத்தில் விளக்கியிருக்கிறார்.

“Yarl IT HUB” : யாழ்ப்பாணத்தில் ஒரு Silicon Valley - இதில் JK எனப்படும் ஜெயக்குமரன் அண்ணா தனக்கே உரிய பணியில் அழகாக விளக்கியிருக்கிறார்.

Yarl IT Hub - Our Vision - சயந்தனின் Yarl IT Hubஇன் Vision பற்றிய விளக்கம்

முகப்பக்க இணைப்பு.. அதாங்க Facebook Link.. சும்மா போய் பாருங்க :)